2008இல் என்னென்ன நடக்கலாம்?

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனோ எனக்கு Avril Lavigneயின் “Chill out whatcha yelling’ for?” வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

***
சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி தெரியாமல் இருந்து விட்டிருக்கிறேன். நேற்றைக்கு தான் தெரியும். ஏதோ நான் எழுதியிருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும், என்பதற்காக நான் சொல்லலீங்க, அப்படியாச்சும் ஒரு சிறுகதை எழுதியிருப்பன்ல? சில சமயம் இப்படித்தான், என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பூனை போல கண்களை மூடிக்கொண்டிருப்பேன். விழித்துக்கொள்ளும் போது, நன்றாக விடிந்திருக்கும். And obviously, I would have missed all the fun! எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு சிறுகதை எழுதி போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். (ஐயோ! என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கவில்லை!)

***

சர்வேசன், உங்கள் சர்வேக்களுக்கு, நீங்கள் zohoவை பயன்படுத்தலாமே? zoho creator try பண்ணியிருக்கீங்களா? இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaint பக்கத்திற்கு நான் zoho creatorஐ பயன்படுத்தி இருக்கிறேன். (இன்னும் வெளியிடவில்லை! உங்களுக்கு exclusive preview!) அந்த பக்கத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். zoho creatorஐ பயன்படுத்தி நீங்கள் நிமிடத்தில் ஒரு web page create செய்து விடலாம். we can create validation scripts and lot of other things also. And you can also design the view for the datas entered by the users, as you wish! Really nice! And it can be embedded with in blogger! Try it. If you know it previously, then sorry, for my late point out!

***
இரண்டு நாட்கள் விடுமுறையில் நான் நிறைய டீவி பார்த்தேன். (ஒரு டீவி தான் நிறைய program பார்த்தேன். உஷாரா இருக்க வேண்டியிருக்கு.) அதில கஜேந்திரான்னு ஒரு படம் காட்டப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். நம்ப விஜயகாந்த் சார் நடிச்சது. ஐயோ காமெடி தாங்கல. ஏற்கனவே நரசிம்மாவின் டிரான்ஸ்பார்முக்கே ஷாக் அடிக்கும் சீனப் பாத்து, பழங்காநத்தம் தியேட்டரில இருந்து, பின்னங்கால் பிடறில படற அளவுக்கு ஓடிவந்தது எனக்கு இன்னும் பசுமையா நினைப்புல இருந்தும், எந்த தைரியத்தில, டீவி சேனல மாத்தாம இருந்தேன்னு, எனக்கு இன்னும் புரியவேமாட்டேங்குது. ஆனாலும் எனக்கு தைரியம் ஜாஸ்திபா.
விஜயகாந்த் intro scene. வில்லன்களுடன் சண்டை போடவேண்டும். ரமணா படத்தில “டேய் அடங்குடா. உங்க அண்ணனோட ரெட்டைக்கைய ஒத்தக்கையா ஆக்குனவரே அவர்தாண்டா” டயலாக் சொல்லுவார்ல, அவர்தான் அடியாட்களின் தலைவன். (ரமணா நல்ல படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது!). அவர் கத்திய எடுத்து விஜயகாந்த கிழிச்சிடுவார். ரத்தம் வந்திடும். கத்தில ரத்தம் ஒட்டிட்டு இருக்கும். யாரோட ரத்தம்? விஜயகாந்தோட ரத்தம். கூலா, விஜயகாந்த் சிகரெட் எடுத்து வாய்ல வைப்பார். சிகரெட்டை பத்தவெக்க தீப்பெட்டி இருக்காது. அதையும் அடியாட்களின் தலைவனே சொல்வான்: சிகரெட்டை பத்த வைக்க வத்திப்பட்டி வேணும்ல என்கிட்ட இல்லீல்ல என்ன செய்வ?! (சண்டை போட வந்தீங்களா? சிகரெட் பத்தவைக்க வந்தீங்களா?!) உடனே நம்ப தலை ஒரு சிரிப்பு சிரிப்பார். பிறகு இவருடைய ரத்தம் பட்ட கத்தி இருக்குல்ல, அத எடுத்து ரத்தம் சிகரெட்ல படற மாதிரி சும்மா வெப்பார், சிகரெட் பத்திக்கும்!
அப்புறம் மீசை மேல கைய வெப்பார். “என் மீசை மேல கைய வெச்சா என்ன ஆகும்னு தெரியுமா?” ன்னு கேட்டுட்டே, மீசைய சும்மா சுண்டி விடுவார், அடியாட்களில் ஒருத்தன், சும்மா பல்டி அடிச்சு தூரமா போய் விழுவான்.

***

உங்க safetyக்காத்தான் சொல்றேன், அவர் அரசியல் கூட்டத்தில பேச வந்தா, பக்கத்தில கிக்கத்தில போய்டாதீங்க. மீசைய சுண்டி கிண்டி விட்டுறப்போறாரு. தூரமாவே நின்னுக்குங்க.

***

கடந்த சில வாரங்களில் Orhan Pamuk எழுதிய Snow, Douglas Adams எழுதிய Hitchhikers Guide To Galaxy, சா.கந்தசாமி எழுதிய தொலைந்துபோனவர்கள் படித்து முடித்தேன். Aldous Huxley எழுதிய Brave New World படிக்க எடுத்தேன். பிடிபடவில்லை. பிறகு Haruki Murakami எழுதிய Hard-boiled wonderland and the End of the world இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே Haruki Murakami எழுதிய Norwegian Wood படித்திருக்கிறேன். எனக்கு அவரது எழுத்து நடை, அலட்டல் மற்றும் அலங்காரம் இல்லாத வாக்கியங்கள், மிகவும் பிடித்திருந்தன. Norwegian Wood படித்து முடித்ததும், The windup birds chronicle வாங்கினேன். இந்தியா சென்றிருந்த பொழுது, நேரம் கிடைத்தால், படிப்பதற்காக எடுத்துச்சென்றிருந்தேன். ஒரு பக்கம் கூட படிக்கவில்லை. புத்தகமும் எங்கே போனதென்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்டது.

இந்த வருடம் மட்டும் மூன்று புத்தகங்களை தொலைத்திருக்கிறேன்: Orhan Pamuk எழுதிய Istanbul:memories of a city எங்கே போனது என்றே தெரியவில்லை. Geroge Orwell எழுதிய 1984 cabஇல் தொலைத்துவிட்டேன். அப்புறம் இந்த windup bird.
***

தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பும், புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில், எனக்கு தாவரங்களின் உரையாடல் என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு கதைக் களம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கு பிடித்திருந்த மற்றொரு கதை “ஒரு தலைகீழ் கதை“. ஆயிரம் கால் இலக்கியத்தின் அடுத்த பகுதியில் இந்த கதைகளைப் பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

தாவரங்களின் உரையாடல் என்கிற கதையின் போக்கில் இருந்த மற்றொரு சிறுகதையை காலச்சுவடில் படிக்க நேர்ந்தது. அது யுவன் சந்திரசேகரின் “உள்ளோசை கேட்பவர்கள்” என்கிற சிறுகதை. சிறுகதை அல்ல நெடுங்கதை தான்.

***

இந்த வருடம் தான் நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். என்னென்ன புத்தகங்கள் என்று என் நினைவில் இருக்கிற அளவிற்கு யோசித்து ஒரு பதிவு போடுகிறேன். நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். (இந்த list முடியாது!) கொஞ்சம் technology கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டிருக்கிறேன். செய்யாமல் விட்ட அனைத்தையும் இந்த புது வருடத்தில் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். உங்களுக்கும், நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடிய மன வலுவையும் உடல் வலுவையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

***
2008 இல் என்ன என்ன நடக்கும்? நடக்கலாம்?

1. ஸ்ருதியில் லக்ஷ்மண், தசாவதாரம் தோல்வியைத் தழுவியிருக்கலாம் என்று எழுதியிருந்தார். அது நடக்காது என்றே நினைக்கிறேன். நடக்கவும் கூடாது. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், தன் முயற்சியை சற்றும் கைவிடாத கமல், ரசிகர்களாகிய நம்மீது கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கையை, நாம் இந்த முறையாவது சிதைத்து விடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

2. ரஜினி முருகதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில் அடுத்த பட அறிவிப்பு வரலாம்.

3. ஸ்டாலின் முதலமைச்சராகவும், அழகிரி திமுக கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்கலாம்.

4. த்ரிஷா இன்னும் க்யூட்டாகியிருக்கலாம்

5. இந்தியாவில் CostToCompany மேலும் அதிகரித்து மாஸ்கோவிற்கோ அல்லது வியட்நாமிற்கோ MNC Companies படையெடுக்கலாம்.

6. பாடும் office programmeஐ suntv விஜய் டீவியிடமிருந்து காப்பிஅடித்து “Corporateகீதம்” என்கிற பெயரில் புதிய புரோகிராம் ஆரம்பிக்கலாம்.

7. விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் season 2 போட்டியாள்ர்களை வைத்து மேலும் என்னென்ன வகையில் business செய்யலாம் என்று யோசித்து, ஜோடி நம்பருடன் ஒரு நாள் என்று ரசிகர்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று மொக்க போடலாம்.

8.சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க ஒரு அருமையான திட்டம்: electric scooter என்று சொல்லிக்கொண்டு நச்சுத்தண்மையுள்ள பேட்டரிகளை பயன்படுத்தி மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தலாம். வேற என்ன? குதிரை வண்டியிலா போக முடியும்?!

9. Microsoft .Net4.0, 4.5, 5.0, 5.5, 6.0, 6.5 என்று மாசத்துக்கு ஒன்னாக release செய்து புரோகிராமர்களை குழப்பி, இதுல புரோகிராம் பண்றதுக்கு, நாலு பன்னிக்குட்டி வாங்கித்தாங்கப்பா, அத மேச்சாவது பொழச்சுக்கறேன் என்று பிதாமகன் சூர்யா போல கடுப்படைய வைக்கலாம்.

10. Web2.0 மற்றும் Virtual PCs விஸ்வரூபம் எடுக்கலாம். Zohoவை கூகிள் நசுக்க பார்க்கலாம். zoho ·பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கலாம்.Microsoftஇன் Live பெரும் தோல்வியைத் தழுவலாம். கூகிள் இன்ன பிற சின்ன சின்ன utilities sitesஐ aquire செய்யலாம். Microsoft இறுதியில் web தன் கையை விட்டு சென்றுவிட்டதை உணர்ந்து கொள்ளலாம். கூகிளுடன் partnership போடலாம்.

11. சன் மைக்ரோ சிஸ்டம் தனது 2009 பட்ஜெட்டை கணக்கிட்டு அந்த தொகையை Microsoftஐ sue செய்து வசூலிக்கலாம்.

12. சிங்கப்பூரில் வீட்டு வாடகை டப்பென்று குறையலாம். (கடவுளே இது மட்டும் கண்டிப்பா நடக்கனும்! முடியல!)

13. ராகுல் காந்தி டீவியில் அதிகம் தென்பட ஆரம்பிப்பார்.

14. விஜயகாந்த் புது சேனல் (ஆண்டாள் அழகர் சேனல்) ஆரம்பித்து கன்னாபின்னான்னு கவர்மெண்ட் ரூல்ஸ் பேச ஆரம்பிக்கலாம். தனது மண்டபம் இடிக்கப்பட்டது ரெக்கார்ட் செய்ததை மீண்டும் மீண்டும் தனது டீவியில் காட்டலாம். தனது ஆண்டாள் அழகர் கல்லூரி எப்படியெல்லாம் நன்றாக இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திப்படம் நாளொன்றுக்கு நான்கு முறை ஒளிபரப்பலாம். விஜயகாந்த் நடித்த அதிரடி திரைப்படங்கள் அதிரடியாக காட்டப்படலாம். (?!)

15. சரவணா ஸ்டோர்ஸில் மேலும் விலை குறைப்பு நடக்கலாம். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம். யாராவது ஒரு NRI செமத்தியாக அடிவாங்கலாம். அங்கு வாங்கின அழகான ஸ்லிப்பர்ஸ் இன்னும் குறைவான நாட்களே உயிர்வாழலாம்.

16. விப்ரோ இன்போஸிஸ் டாட்டா போன்ற நிறுவனங்கள் மீடியா தொழிலில் இறங்கி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ராமராஜனை புது படத்திற்காக அனுகலாம். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனை ரீமேக் செய்யலாம். நிஷாந்தி நடித்த ரோலில் சினேகா நடிக்கலாம்.
17. மோகன் உதயகீதத்தை ரீமேக் செய்து கையில் மைக் இல்லாமல் காலரில் சின்ன மைக் வைத்துக்கொண்டு மேலும் வேக வேகமாக இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து “சங்கீத மேகம்” பாடல் பாடலாம்.

18. ரேடியோ மிர்ச்சி சென்னை அலைவரிசை இன்டர் நெட்டில் வரலாம் (ஏற்கனவே இருந்தா link கொடுங்க நண்பர்களே). சூரியன் FM மொக்க தாங்க முடியலப்பா.

19. ஒலிம்பிக்ஸில் இந்தியா medal tableலிலே வராமல் போகலாம். (இது கண்டிப்பாக நடக்க கூடாது என்பது தான் என் விருப்பம். நடந்தால் சொல்வதற்கில்லை!)

20. ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்டில் வீழ்த்தலாம். கங்கூலி மேலும் இரண்டு சதம் அடிக்கலாம். (நான் subscribe பண்ணியிருக்கேன்ப்பா!)

21. தமிழ்நாட்டில் கலர்டீவி நடமாட்டம் அதிகரிக்கலாம். தெருவில் மனிதர்கள் நடமாட்டம் குறையலாம்.

22. ஜெயமோகன் இன்னும் பெரிய புத்தகம் எழுதலாம். vikram sethக்கும் அவருக்கும் யார் அதிக பக்கங்கள் எழுதியது, எழுதப்போவது என்கிற போட்டி உருவாகலாம். (விக்ரம் செத்தை அடிச்சுக்க முடியாது என்பது என் கருத்து. ஆனாலும் ஜெயமோகனைப் பற்றியும் ஒன்னும் சொல்வதற்கில்லை)

23. சேக்குவேரா படம் போட்ட தொப்பிகள் மற்றும் ஜட்டிகள் இந்தியாவில் பிரபலமடையலாம். அதை அணிந்து கொண்டிருக்கும் ஒரு யூத்திடம் இவர் யார் என்று கேட்டால் சட்டென்று அவர் “you dont know him. pity you. He is a great Rock Star!” என்று சொல்லலாம்.

24. ப்ளாஸ்மா டீவிக்களையும் ஐபாட்களையும் காமெராக்களையும் லேப்டாப்களையும் செல்போன்களையும் இந்தியர்கள் வாங்கி குவிக்கலாம். (Electronic wastesஐ என்ன செயவது என்பதை பற்றி கவர்மெண்ட் வழக்கம் போல யோசிக்காமல் இருக்கலாம்)

25. வழக்கம்போல ஏரிகளை தூர்வாராமல் விடலாம். புதிய நீர் தேக்கங்கள் கட்டப்படாமல் போகலாம். இன்னும் நிறைய சிமென்ட் ரோடுகளை போட்டு தண்ணீரை நிலத்தில் சேர விடாமல் தடுக்கலாம். பருவமழை அடித்து ஊத்தலாம். தண்ணீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் சென்று கலக்கலாம். T.கள்ளுப்பட்டி விவசாயிகள் மழை விட்ட மூன்றாம் நாள் தண்ணீருக்கு என்ன செய்வது என்று வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்.

26. அரசு ஏழை எளியோர் பயன்படும் வகையில் டீவிடி ப்ளேயர்க்ளை அன்பளிப்பாக தரலாம். மாசம் இரண்டு டீவிடிகளை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள செய்யலாம். வீட்டில் நிறைய பெண்கள் இருந்தால் நாடக டீவிடிகளும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம்.

27. மலிவு விலை சாராயம் ரேஷனிலே வழங்கப்படலாம். குடும்பத்தலைவர்களின் நலன் கருதி, அந்த சாராயத்தை பெண்களே வந்து வாங்கிப்போக வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்.

28. பெசன்ட் நகர் பீச்சில் மேலும் சில வெளிநாட்டு காபி கம்பெணிகள் கடை திறக்கலாம். ஒரு காப்பி 400ரூபாய் விற்கலாம். அதையும் வாங்குவதற்கு நான் க்யூவில் காத்துகிடந்து நின்று “one more sugar packet please” என்று எரிச்சலாக சிரிக்கலாம்.

29. மதுரையில் மேலும் பாலங்கள் கட்டப்படலாம். ஏதும் உபயோகிக்கப்படாமல் பேருந்துகள் மீண்டும் மதுரைக்குள்ளே வரலாம். எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், திருப்பரங்குன்றம் மட்டும் ரயில்வே கிராஸிங்க்குள் அடைந்து கிடக்கலாம். அவசரமாக ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை வரும் போது, கடவுளே லெவல் க்ராஸிங் திறந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒவ்வொரு திருப்பரங்குன்றத்துக்காரனும் வேண்டிக் கொள்ளலாம். அப்படி வேண்டிக்கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறபாடு இதை பற்றி கவலையே படாமல், அரசி சீரியலில் மூழ்கிப்போகலாம்.

30. திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம். வெள்ளைக்கல் மக்களைப் போல திருப்பரங்குன்றத்து மக்களும் ஈக்களுக்கு பயந்து திருமணங்களைக்கூட இரவில் நடத்தலாம். திருப்பரங்குன்றத்தில் ஈக்கள் மேலும் அதிகரிக்கலாம். சாப்பிடும் போது வந்தமரும் ஈக்களை விரட்டிவிட ஒவ்வொரு வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு கை விசிறிகள் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒன்பத்திரண்டு தடவை மின்சாரம் தடைப்படும் பொழுதாவது உபயோகித்துக்கொள்ளலம் இல்லியா?
***
Muthu, Chill out whatcha yelling’ for?!

என் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள்.

இன்று மதிய சாப்பாட்டிற்கு அப்புறம், உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது என் நண்பன் என்னிடம் பத்து கேள்விகளை கேட்டான். அதற்கு பதில் சொல்ல சொன்னான். விளக்கம் தேவையில்லை என்றும், just as short as possible, முடிந்தவரை yes/no மட்டுமே சொல்லவேண்டும் என்றான்.

அவன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.

1. Tamil Cinema’s best introduction song?
புதிய வானம் புதிய பூமி (அன்பே வா)
பொதுவாக என் மனது தங்கம் (முரட்டுக்காளை)


2. Best PrimeMinister for India? Best President?
திரு. ராஜீவ் காந்தி. President?! எனக்கு அந்த பதவியே பிடிக்காது. அந்த பதவியே தேவையில்லை என்று நினைப்பவன் நான்.

3. India’s best (usefull) nobel prize winner?
Sir CV Raman

4. India’s economy is dependent on US economy. Do you think India’s economy can be independent?
Since every thing is Globalized now, there cannot be really an independent economy. But India have to come out of “IT sevice” sector. We have to innovate something. We need to spend a lot in research.

5. Does Indian NRI’s have patriotisim still left in them?
Yes. (But I dont think that is important)

6. India/Pakisan problem will be solved in future?
No. தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.

7. இது நாள் வரை தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார்? இனி யார் சிறந்த முதலமைச்சராக இருப்பார்?
இதுநாள் வரை: பெருந்தலைவர் காமராஜர்.
இனி: ரஜினிகாந்த் (இனி வரும் முதல்வர்களில்)

8. எம்ஜிஆர்/சிவாஜி அப்புறம் ரஜினி/கமல் அப்புறம் விஜய்/அஜித், இனி யார்?
தனுஷ் / (யாரும் இல்லை)

9. புத்தகம் படிக்காமல் இருப்பது, கெட்ட பழக்கமா என்ன ?
கண்டிப்பாக கிடையாது.

10. Are we really destroying the world by polluting and cosuming the nature in excess?
Yes. Of Course.
A cartoon from Sunday Times/Strait Times

இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில் சென்ற இந்த பயணம், மிகுந்த வித்தியாசமாகவே இருந்தது. பயணச்சவுகரியங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. மூன்றரை மணி நேர பயணத்தில் சவுகரியங்கள் பெரிதாக தேவைப்படாது. சரியான நேரத்துக்கு, பாதுகாப்பாக, செல்லவேண்டிய இடத்துக்கு, சென்றால் மட்டுமே போதுமானது. சரியான நேரம் என்பது, இப்ப 9:10 க்கு விமானம் சென்னையில் தரையிறங்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், 9:10 க்கு exactly தரையிறங்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஒரு கால்மணி நேரம் அரைமனி நேரம் தாமதத்தை அனுமதிக்கலாம். காரணங்கள்: ஏதாவது எதிர்பாறாத விசயங்களால் – தட்பவெட்ப நிலை சரியில்லை, மிகுந்த மழையாக இருக்கிறது போன்ற காரணங்களால் – கூட தாமதமாகலாம். இந்த காரணங்கள் எல்லாம் தினமும் நடக்காது. என்றோ ஒரு நாள் அல்லது சில மாதங்களில் மட்டும் (மழைக்காலம், பனிக்காலம்) நடக்கும். மேலும் தொழில்நுட்ப பிரச்சனைகளும் விமானம் தாமதமாக செல்வதற்கு காரணியாக அமைந்து விடுவதுண்டு. தொழில்நுட்ப பிரச்சனை தினமும் ஏற்படுமா?

நான் முதன்முதலில் இந்தியன் ஏர்லைன்சில் பயணம் செய்த அன்று விமானம் ஒன்றரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதம். காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கப்புறம் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் போகவில்லை. சிங்கப்பூர் வந்ததற்கு அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு நாளும் தாமதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்றதில்லை, ஒரு முறை தவிர. ஆனால் அந்த முறை தாமதமானதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, பேக்கேஜ் செக் இன் செய்து விட்ட ஒரு நபர் கடைசி நேரத்தில், பயணம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். அவருடைய பெட்டிபடுக்கைகளை மீண்டும் எடுத்து வைப்பதற்கு தாமதமாகிவிட்டது. இது போன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், இல்லியா?

என் நண்பர்கள் யாவரும் இந்தியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்கள். அவர்களை வழியனுப்பி விட பெரும்பாலும் நான் செல்வதுண்டு. அத்தனை முறையும் இந்தியன் ஏர்லைன்ஸ் தாமதமாகவே புறப்பட்டது. ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ. நாங்கள் நண்பரை வழியனுப்பிவிட்டு MRT ஏறியிருப்போம், அவரிடமிருந்து கால் வந்துவிடும்: விமானம் ஒரு மணி நேரம் தாமதாம்! என்று. சிரித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

***

இந்த முறை இந்தியா சென்றிருந்த பொழுது நான் இந்தியன் ஏர்லைன்ஸில் புக் செய்தேன். எல்லோரும் இந்தியன் ஏர்லைன்ஸில் சென்று மிச்சம்பிடிக்கிறார்களே, நாமும் மிச்சம்பிடித்தால் என்ன என்று தோன்றவே, இந்த முடிவை எடுத்தேன். ஒரு மணி நேரம் தானே தாமதம். so what? இந்தியா சென்று மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையா கை எழுத்திடப்போகிறாய்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இல்லைதான்.

அந்த நாளும் வந்தது. நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் ஏர்போர்ட்டில் குழுமியிருந்தோம். என்னுடன் என்னுடைய கலீக் ஒருவரும் பயணம் செய்தார். நான், எனது கலீக் அவரது மனைவி, மற்றும் எங்களது நண்பர்கள் என அன்று மாலை அரட்டைக்கச்சேரி ஏர்போர்ட்டில் ஆரம்பமானது. நண்பர்கள் இருந்ததால் கொஞ்ச நேரம் கழித்து பேக்கேஜ் செக்கின் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டோம். இன்பாக்ட் இதை நான் எதிர்ப்பார்த்திருந்தேன். அரட்டைக்கச்சேரி தொடர்ந்தது. மீண்டும் தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை எத்தனை மணி நேரம் என்று அறிவிப்பு செய்யப்படவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் போல, காலவரையற்ற தாமதம். அப்படீன்னா, டிக்கட் மூனு மாசத்துக்கு முன்னவே எடுத்து, பர்சேஸ் செய்து, பெட்டி படுக்கைகளை எல்லாம் பேக் செய்து, நாளைக்கு இந்தியா போகக் போகிறோம் என்ற நினைப்போடு தூக்கம் வராமல் தவித்து, காலை ஆபீஸ் சென்று, இரண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து, நண்பனையும் அழைத்துக்கொண்டு, டாக்சி பிடித்து, ஏர்போர்ட்டில் வந்து அமர்ந்து, காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் என்ன கேனையனா?

***

எந்த ஸ்டுபிட் காரணங்களுக்காகவும் நீங்கள் உங்கள் விமானத்தை தாமதமாக கிளப்பலாம். எத்தனை மணி நேரம் என்று எங்களுக்கு சொல்லவேண்டுமா வேண்டாமா? எங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்களா மாட்டார்களா? அவர்களுக்கு நாங்கள் தோராயமாக ஒரு நேரம் சொல்லவேண்டுமா வேண்டாமா? உங்களைப் போல irresponsible fellows என்று எங்களை நினைத்தீர்களா? என் நேரம் மட்டுமல்ல, என் நணபர்களின் நேரமும் வீணாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் பெண்களும் அடக்கம். என்னை வழியனுப்பிவிட வந்தவர்கள் என்னை வழியனுப்பாமல் எப்படி போவார்கள்? முதல்லையே மூணுமணி நேரம் ஆவும் என்று சொல்லித் தொலைத்தால் அவர்கள் வீட்டுக்கு போவார்கள் அல்லவா?

எத்தனை மணி நேரம் தாமதம் என்றே சொல்லாதவர்கள், ஏன் தாமதம் என்றா சொல்லப்போகிறார்கள்?

***

நேரம் பறந்தோடியது. இன்னும் ப்ளைட் எப்பொழுது கிளம்பும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே மூன்று மணி நேரம் தாமதம். நானும் என் நண்பரும் மட்டும் கிளம்பி என்ன ஆச்சு என்று பார்க்கப்போனோம். அங்கே ஏற்கனவே பெரும் கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரித்ததில்: ப்ளைட் கேன்சல் செய்யப்பட்டது தெரியவந்தது.

அங்கிருந்த ஒரு நபர், எல்லோருக்கும் அடுத்தநாள் இதே நேரம் சிங்கப்பூரிலிருந்து கிளம்பவிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் லேட். சிலர் அதையும் கேட்டுக்கொண்டு சரி என்று உள்ளே தாங்கள் ஏற்கனவே செக் இன் செய்து விட்ட பேக்கேஜ் என்னவாகும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனக்கும் என் நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன இது இவ்ளோ அசால்டா ப்ளைட்ட கேன்சல் செய்துட்டு கூலா அடுத்தநாள் ப்ளைட்டுக்கு போ என்று சொல்கிறார்களே என்று நினைத்தோம். கேன்சல் செய்யப்பட்டதற்கு காரணம் மழையாம். ஏதோ சில தட்பவெட்ப காரணங்களால் ப்ளைட் தாமதம் அல்லது கேன்சல் செய்யப்படும். அது OK. அப்படி என்றால் அந்த விமான நிலையத்தில் இருந்து எந்த ப்ளைட்டும் கிளம்பாது. எல்லாமே கேன்சல் செய்யப்படும். atleast ஒரே இடத்திற்கு செல்லும் விமானங்கள் யாவும் கேன்சல் செய்யப்படும். இங்கே, சென்னைக்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது, மலேசியன் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு மட்டும் ஜலதோஷம் பிடித்து கடும் காய்ச்சல் கண்டு விட்டது, எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மற்ற விமாங்கள் எல்லாம் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டா போகிறது? அல்லது யாராவது குடை பிடிக்கிறார்களா?

பிறகு தான் தெரிந்தது: விமானம் பழுதடைந்து விட்டதாம். Technical Problem.

***

இதில் எங்களுடம் பயணம் செய்த ஒரு குழு (முதலமைச்சருடன் கோயம்புத்தூரில் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டது) ஏன் விமானம் பழுதடைந்தது உங்களுக்கு முன்னமே தெரியாதா? என்று அங்கிருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் representativeஐ கேட்ட பொழுது, அது எப்படி தெரியும்? விமானத்தை ஸ்டார்ட் செய்யும் போது தானே தெரியும் என்று அவர் அப்பாவியாய் பதிலளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தயாரானோம். அந்த முதலமைச்சருடன் மீட்டிங் குழுவும், நானும்,என் நண்பரும், அமேரிக்காவில் இருந்து தனது திருமணத்திற்கு செல்லும் மற்றொருவரும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டோம்.

எங்களது கோரிக்கை: நாளை இரவு வரை காத்திருக்க முடியாது. எங்களை இன்றே வேறு ஏதாவது ப்ளைட்டில் இந்தியாவுக்கு அனுப்பிவிடு. பயணிகள் நாங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அல்லது extend செய்தால் fine வசூலிக்கிறீர்களா இல்லியா?

நாங்கள் எவ்வளவு போராடினாலும் அந்த representative தான் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
***

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அந்த அமேரிக்க நபரின் திருமணம் நாளை மறுநாள். அதாவது நாளைக்கு அவருக்கு நிச்சயதார்த்தம். முதலில் இப்படி ஒரு சூழ்நிலையை அவரே உருவாக்கிக்கொள்ளலாமா? இவ்வளவு அசால்டா வரலாமா? வந்தாலும், இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கெட் போடலாமா? அவர் மிகுந்த டென்சன் ஆகிவிட்டார். மீட்டிங் குழு, தங்களுக்கு நாளை காலை மீட்டிங் இருக்கிறது என்றும் கண்டிப்பாக காலையில் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

இதில் காமெடி என்னவென்றால்: மீட்டிங் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த குழுவைப் பார்த்து கடுப்பான அந்த representative, உங்க மீட்டிங் பேப்பரை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சொல்ல, தடுமாறிய அவர்கள், தேடித் துலாவி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினர்.

***
எங்களுக்கு மீட்டிங் இருக்கு சேட்டிங் இருக்கும் அதப்பத்தி உங்களுக்கு என்ன? நீங்க சீட்டிங் பண்ணாம எங்களை ஏதாவது ஒரு ப்ளைட்டில ஏத்திவிடுங்கப்பா என்றே தோன்றியது. கடைசியில் சண்டை போட்டு, மறு நாள் அதி காலை சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் கிளம்பும், இந்தியன் ஏர்லைன்ஸில் இடம் கிடைத்தது.

அந்த அமெரிக்க நபர், மறு நாள் காலை பதினோறு மணிக்கு பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில், தனது மாமாவின் மூலம் டிக்கெட் ஏற்பாடு செய்தார்.

நான், என் நண்பர்களின் மூலம், பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல டிக்கெட் எடுக்க முற்பட்டேன். முடியவில்லை. சரி பெங்களூர் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

***

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் மறு நாளும் லேட். ஒன்பதுரைக்கு பெங்களூர் செல்லவேண்டிய விமானம், சரியாக பத்தே முக்காலுக்கு பெங்களூர் சென்டடைந்தது. நானும் என் நண்பரும் அந்த அமேரிக்க நபரும்அடித்து பிடித்துக்கொண்டு வெளியேறினோம். அந்த அமேரிக்க நபருக்கு இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் ப்ளைட். அவர் முகம் வெளுத்துவிட்டது. ஒர் வகையில் அவர் லக்கி: அவரது லக்கேஜ் தான் முதலில் வந்தது. அடித்து பிடித்து ட்ராலியில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். தூரமாக சென்று கைகாட்டி விட்டு சென்றார். அதற்கப்புறம் ப்ளைட்டை பிடித்தாரா இல்லியா என்பது தெரியவில்லை. பிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அதுவும் தாமதமாகத்தான் கிளம்பியிருக்கும். கண்டிப்பாக.

***

அடுத்தது லக்கேஜ் பிரச்சனை. என் கலீக்கினுடைய லக்கேஜ் வரவேயில்லை. அதில் தான் அவர் நகைகளை வைத்திருந்தார். பயந்து போன அவர், மானேஜரிடம் புகார் செய்ய, அவர் கண்டிப்பாக லக்கேஜ் உங்கள் வீடு தேடி வரும் என்று உறுதியளித்தார். விசயம் என்னவென்றால்: அவருக்கு போன இரண்டு முறையும் லக்கேஜ் ஒழுங்காக வந்து சேரவில்லை. இதை என்னிடம் பிரயாணம் முழுதும் புலம்பிக்கொண்டே வந்தார். சில சமயம் பயந்தால் அப்படியே ஆகி விடும் என்று சொல்வார்கள். உண்மையோ என்னவோ?!

அவருடைய மனைவிக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் அன்று இருந்தது. இந்தியன் ஏர்லைன்ஸின் irresponsible தனத்தால் அவருடைய மனைவிக்கு அன்றைய அப்பாய்ன்ட்மென்ட் கேன்சல் செய்யப்பட்டது. அவர் மலேசிய தமிழர், மனைவியின் சிகிச்சைக்காகவே சென்னைக்கு புறப்பட்டார். மீண்டும் அந்த பிஸியான டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவதற்கு இரண்டு நாள் பிடித்தது. அதுவரை சென்னையில் இவர் எங்கு தங்குவார்? முதலில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு போக பணம் இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவா கொடுக்கும்? சென்னையில் இரண்டு நாள் தங்குவதற்கு இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவோட தாத்தாவா பணம் கொடுப்பார்?

***

எனக்கும் முக்கியமான ஒரு வேலை இருந்தது. அது என் வருங்கால மனைவியைப் பார்ப்பது. மற்றும் சென்னையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைப்பது. இவர்கள் அன்றைய காலை என்னை பெங்களூரில் இறக்கிவிட்ட பொழுது, சென்னைக்கு செல்லும் எல்லா விமானங்களும் சென்று விட்டன. அடுத்த விமானம் சாய்ங்காலம் ஐந்து மணிக்கு தான். அன்றைய மதியம் முழுவதும், 200 ரூபாய்க்கு ஒரு வெளங்காத பிரியாணியை ஏர்போர்ட்டிலே சாப்பிட்டு விட்டு, நேரடியாக மதுரைக்கு டிக்கெட் எடுத்து, அன்று சாயங்காலமே மதுரைக்கு வந்து சேர்ந்தேன். என் வருங்கால மனைவியையும் பார்க்கவில்ல, நண்பர்களுக்கு கல்யாணப்பத்திரிக்கையும் வைக்கவில்லை.

***

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. ஹதம் கதம்.

***

என்னுடைய மனைவியின் ப்ளைட் டிக்கெட்டை extend செய்ய இந்தியன் ஏர்லைன்ஸில் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். முதலில் எப்படியேனும் என்னை திருப்பி அனுப்பிவிடவே அந்த லேடி முயற்சி செய்தார். லைக், உன் மனைவியின் பாஸ்பொர்ட் வேணும் என்றார். எதற்கு என்று கேட்டதற்கு, அவர் சிங்கப்பூருக்கு வந்த தேதி வேண்டும் என்றார். எனக்கு தெரியும் என்றபொழுது, அது தவறாக இருக்கும் முடியாது என்றார். பிறகு ஒரு வழியாக பேசி ஒத்துக்கொள்ளவைத்த பிறகு, only cash என்றார்.

சிங்கப்பூரில் மூலைமுடுக்கெல்லாம் eNets (eNets என்பது debit card system போல) accept பண்ணும் பொழுது, இவர்கள் மட்டும் only cash என்பார்கள். சரி cash எடுத்துவிட்டு வருகிறேன், என்று மீண்டும் வந்த வழியே நடந்து சென்று cash எடுத்துவிட்டு வந்தேன்.

இந்த முறை வேறு பெண்மணி. எனக்கு முதல் லேடிக்கு நடந்த பேச்சுவார்த்தையை இவர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

நான் சென்று உட்கார்ந்த உடன், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு, கூலாக சொன்னார்: 73 dollars. cash. only cash. only exact change. என் கிட்ட சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டு, சரியான சில்லரை இருந்தால் உட்கார், இல்லீன்னா, அப்படியே எழுந்து ஓடிப்போய்டு, என்பது போல ஒரு பார்வை பார்த்தார். (அவருடைய தோரணை இருந்ததே, அப்பப்பா!) Lucky me, என்கிட்ட சில்லரை இருந்தது.

***
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது அந்தப்பெண்ணின் மனப்போக்கு. I am master, you are servant என்பது போல. உண்மையில் யார் master, யார் servant? காந்தியடிகள் என்ன சொன்னார்? காந்தியடிகள் இருக்கட்டும்.

நான் 73 டாலர் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து டிக்கெட் extend பண்ண வருவதால் தான் அவருக்கு அந்த வேலை இருக்கிறது என்பதை அவர் மறந்து விட்டார். மறந்தே விட்டார்.

உண்மையிலே, சரியான சில்லரை கொடுக்கவேண்டும் என்பதை நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு – டவுன் பஸ்ஸில் கண்டக்டர் சொல்லிக் கேட்டது – அன்று தான் கேட்டேன்.

நான் அந்த பெண்மணியிடம் கேட்டது ஒன்று தான்: இந்த சில்லரை (கேட்க்கும்) பழக்கத்தை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து விட்டீர்கள் போல!

***

செத்தாலும் and Veronika decides to die

சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய “செத்தாலும்” என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின போராட்டத்தற்குப் பிறகு காப்பாற்றப்படுவாள். அந்த சிறுகதையில் சிவஸ்ரீ, அந்தப் பெண் உயிர் பிழைப்பதற்குள் என்னென்ன வகையில் கஷ்டப்படுகிறாள் என்பதை நிதானமாக அழகாக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். கதையைப் படிப்பவர்களுக்கு தற்கொலை ஆசை, அதுவும் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் ஆசை கண்டிப்பாக வராது, என்றே எனக்கு தோன்றியது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவஸ்ரீ அவர்களுக்கு ஒரு ஈமெயில் அன்றே அனுப்பினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. சில நாட்கள் கழித்து அவர், ஜனாதிபதி கையால் விருது வாங்கிய செய்தியும் பேப்பரில் வந்திருந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன் ஏதும் படிக்க கிடைக்காமல், Paulo Coelho எழுதிய, veronika decides to die என்கிற புத்தகத்தை எடுத்தேன். இந்த புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்னால் வாங்கியது, படிக்காமல் வைத்திருந்தேன். Paulo coelho ஒரு brazilian எழுத்தாளர். அவரது The Alchemist என்கிற நாவல் மிகவும் பிரபலமானது. எனக்கு மிகவும் பிடித்தமான நாவலும் கூட. இன்று வரை, புத்தகம் வாசிக்காத எனது நண்பர்கள் யாவருக்கும் பிறந்தநாள் பரிசாக நான் முதலில், இந்த நாவலைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படியும் ஒரு ஐந்து காப்பியாவது இந்த நாவலை நான் வாங்கியிருப்பேன். இந்த நாவலே ஒரு தழுவல் தான். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து, Paulo coelho இதனை அருமையாக எழுதியிருப்பார். Laurence Fishburne (The Matrix) இந்த நாவலை படமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. அந்த எழுத்தாளர் எழுதிய Veronika decides to die, என்கிற நாவலை நான் வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அந்த நாவல், சிவஸ்ரீ அவர்களின் கதையின் சாயலைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். சாயல் என்று சொல்லிவிட முடியாது, ஆரம்பம் கிட்டத்தட்ட 80% அதே போலத்தான். மூன்று அத்தியாயங்களுக்கு மேலே, படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டேன்.

ஒரு ஐடியாவின் ஒரிஜினாலிட்டி எங்கே இருக்கிறது என்பதை அதன் ஒரிஜினலைப் பார்க்கும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை. கமலஹாசனின் குருதிப்புனல் படத்தில் வரும் “every one has a breaking point” வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ச்சே கமலஹாசன் எப்படி யோசிக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே வசனத்தை The Shawshank Redemption திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போ நாம எங்கெங்கோ படித்ததை பகிர்ந்து கொள்கிறோம் இல்லியா? அது போல அவர் எங்கெங்கோ பார்த்ததை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஆனால் நாம் courtesy இன்னார் என்று சொல்லிவிடுகிறோம், அவர் சொல்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

***

கற்றது தமிழ் திரைப்படத்தை முன்வைத்து சாருநிவேதிதா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். Georges Bataille வின் சில வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் பிரபாகரனின் கஷ்டங்களை மட்டும் எடுத்திருந்தால் ஒரு விதமான குரூர அழகியல் கிடைத்திருக்கும் இப்பொழுது அது மிஸ்ஸிங் என்று எழுதியிருந்தார். குரூர அழகியல் சார்ந்த திரைப்படங்கள் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது இரண்டு படங்கள். ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. மற்றொன்று பொற்காலம். ஆனால் இந்த கற்றது தமிழ் திரைப்படம் குரூரமானது என்ற வகையில் ஒத்துக்கொள்ளலாமே தவிர, குரூர அழகியல் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அழகாய் இருப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கிறதல்லவா? வன்முறையை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடும் இந்த திரைப்படம், நானும் எனது படமும் தமிழை முன்வைத்து வரலாற்றில் இடம் பெறுகிறோமா இல்லையா பார், என்பது போன்ற சவாலுக்காக எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. Like அம்முவாகிய நான் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல, “you stand in history!”. அம்முவாகிய நான் திரைப்படத்தைப் பற்றி பிரிதொரு முறை பேசலாம்.

கற்றது தமிழ் ஒரு வகையில் தடை செய்யப்படவேண்டிய திரைப்படம். Boys என்ற திரைப்படத்தை தடைசெய்தவர்கள் இதை தடை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அன்றைக்கு மதன், தனது திரைப்பார்வையில், இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது, அவர் மென்துறை சார்ந்த மக்களின் மீது தீராத பாசம் வைத்திருப்பது போலவும் அவர்களுக்காக தான் பரிதாப்படுவதாகவும் சிலாகித்து மிகவும் வருத்தத்தோடு (கவனிக்க, சிலாகித்து பின் வருத்தத்தோடு!) சொல்லியிருந்தார். அவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, இப்படியொரு படத்தை எடுத்தபிறகு.

அந்த அன்னை அன்னை பாடலும், அந்த call center பையனும், பிராபாகர் அவனை படுத்தி வைத்த பாடும் (நம்மையும் சேர்த்துதான்!) இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது. “அன்னை அன்னை” பாடலை நீ பாடிக்காட்டு பார்ப்போம் என்பான் பிரபாகர் இதெல்லாம் ஒரு சவாலாய்யா? நாங்க என்ன இங்கிலாந்தில் இருந்தா இறங்கி வந்திருக்கோம்? இன்றைக்கு இருக்கும் blog மக்களில் பெரும்பாலானோர் மென்துறையை சார்ந்தவர்களே!

அவர்கள் தமிழை வளர்க்கிறார்களோ
(தமிழை யாரும் வளர்க்க முடியாது, தமிழ் தான் எங்களை வளர்க்கிறது!) இல்லியோ, எப்படியேனும், ஜெயமோகனையோ, ராமகிருஷ்ணனையோ, கிராவையோ, சுராவையோ, கல்கியையோ, பாரதியையோ ஆதவனையோ சிவஸ்ரீ யையோ பற்றி எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில blogger, பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

“அன்னை அன்னை” பாடலை என்னால் பத்து நிமிடங்களில் மனப்பாடம் செய்யமுடியும், என்னைப் போல..no i think its enough!

படத்தில் வரும் ஒரு முட்டாள் தனமான டயலாக் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது: “ஏன்டா இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வந்த தமிழைப் படித்த எனக்கே இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். இப்ப வந்த கம்ப்யூட்டர் படிச்ச உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?” (correcta ஞாபகம் இல்லை!)

இவ்வாறான பொறுப்பற்ற வசனங்கள் ஒரு சாரர் மீது கோபத்தையும் வன்மத்தையும் கட்டவிழ்த்து விடுவதால் தான் இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும் என்கிறேன்.

அது சரி, Georges Bataille வை சாருநிவேதிதா ழார் பத்தாய் என்கிறாரே, என்ன விதமான உச்சரிப்பு இது? இப்படித்தானா உச்சரிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***