படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

ரிக்கி பாண்டிங்,ரஜினிகாந்த், IBN-CNN, ஜல்லிக்கட்டு, மும்பை மானபங்கம்

There’s a breathless hush in
the class tonight
Ten to make and the match to win
A bumping pitch and a
blinding light.
An hour to play, and
the last man in.
And it’s not for the sake of a
ribboned coat.
Or the selfish hope of a
season’s fame,
But his captain’s hand on
his shoulder smoke
Play up! Play up! And play
the game!

Henry Newbolt எழுதிய இந்த கவிதையை Ricky Ponting மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது, இதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். விளையாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் திடலில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

Chak de India திரைப்படத்தை BCCI சாருக்கானுக்கு ப்ரத்தியேகமாக போட்டுக்காட்டலாம். மேலும் சாருக்கானுடன் ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யலாம். நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தெருச்சண்டை மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் மீது தீராத காண்டிலிருக்கும் மற்ற அணிகளுக்கு, மகிழ்ச்சியைத் தருவதாக இருந்திருக்கும்.

Peter English என்கிற ஆஸ்திரிலேய எடிட்டர், crickinfoவில் எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்:

“Somebody probably a preschool teacher, needs to explain simply to Ricky Ponting
about the damages that has been caused by his team during the Sydney Test”

ஆனால், விளையாட்டு விளையாட்டு தான், போர் இல்லை, என்கிற விசயத்தை இந்தியர்களாகிய நாம் சொல்வதற்கு தகுதி உடையவர்களா என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். டோனி வீடு தாக்கப்பட்டதை இந்த நேரத்தில் நாமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்ட Henry Boltஇன் கவிதையை, ரிக்கி பாண்டிங் படிக்க வேண்டும். படித்து விட்டு, அவர் இந்தியர்களுக்கும் தாரளமாக forward செய்யலாம்.

ஆனாலும் கங்கூலி அவுட் ஆனது, கொஞ்சம் ஓவர்தான். அவுட் இல்லை என்று தீர்மானமாக நின்ற கங்கூலியைப் பார்த்து ரிக்கி பாண்டிங் கோஷ்டி சிரித்தது மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அம்பையர்களே நீங்கள் தூங்குங்கள் தவறில்லை. Afterall, then and there, every one takes a nap, during his work. ஆனால் தூங்கி எழுந்தபின், third umpire, என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

BCCI, கடைசி மேட்சை கேன்சல் செய்யப்போகிறது, என்கிற அறிவிப்பு வெளியானதும், அவர்கள் எவ்வளவு பணம் ஸ்பான்ஸர்ஸ¤க்கு கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிற எண்ணம் எல்லார் மனதிலும் உதித்தது. எல்லாரும் ஒவ்வொரு கணக்கு போட்டனர். ஆனால் அந்த கணக்கில் என்னுடைய 25$ சேர்க்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. நானும் தானயா subscribe பண்ணிருக்கேன்? எனக்கு யார் பணத்தை திருப்பி தருவா? என்கிற குழப்பம் என்னுள் இருந்தது. என் நண்பர்கள் யாவரும் அப்படி திருப்பித் தருவதற்கு வாய்ப்புகள் ரொம்பவும் கம்மி என்றே சொன்னார்கள். எனக்கு புரியவில்லை, ஏன் என்னுடைய பணமும் தானே முக்கியம். இந்த முறை பார்த்துவிடலாம் என்கிற ஆவலோடு இருந்தேன், ஆனால் BCCI மேட்ச் நடக்கும் என்கிற முடிவுக்கு சென்று விட்டது, கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஆஸ்திரிலேயாவின் ரெக்கார்ட்டை இந்தியா முறியடிக்கப்போகிறது (மறுபடியும்!) என்கிற நினைப்பு வரும் பொழுது அந்த ஏமாற்றம் மறைந்து விடுவது என்னவோ உண்மைதான்.

Over Confidence! நமக்கு சூடு சொரணை இருக்கா இல்லியாப்பா?

இன்னிக்கு பட்டிமன்றத்துல கூட ராஜா சொன்னார்: இந்தியா ஜெயிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுது, அப்படி ஜெயிக்கறமாதிரி போனாக்கூட பக்னர் வந்து பக்குன்னு அமுக்கிடறார்

***

ரஜினிகாந்த் ஷங்கர் படத்தில் மீண்டும் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி. அவர் முதல்வனிலே நடித்திருக்க வேண்டியது. ஷங்கரின் தாக்கம் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது இப்பொழுது. He is aiming big, bigger than ever before. முதல்வனில் ரஜினி நடித்திருந்தால், பத்து வருஷத்தில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் நடத்திருக்கும். இந்நேரத்துக்கு ஒரு international ஹீரோவாக வளர்ந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனோடு அதிகமா ஆசைபடற ஆம்பள ஆப்பாயில் போடத்தெரியாத பொம்பளன்னு தத்துவம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

இப்பொழுதுதான், ரஜினிகாந்தை வடக்குப்பக்கத்து மக்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். (அவங்க திரும்பிப் பார்த்தா என்ன, பாக்காட்டி நமக்கென்ன?) CNN-IBNல வந்த ஒரு செய்தி:

The third contender is ultimate style king Rajnikanth. It will be a travesty to
call him the ageing style king, because he showed in Sivaji-The Boss that age
just has nothing to do with it. For one, you cannot make out he is ageing. And
two, does it matter?

The film turned out to be a big blockbuster,
packing cinema halls even in the north. He can fight, sing and dance just as
well as the youngest Kapoor on the block — Ranbir ‘Saawariya’ Kapoor — if not
better: the kid can learn a few things from Rajnikanth.

அடெங்கப்பா “learn a few things from Rajnikanth” இதற்கு முன்னர் ரஜினிகாந்துக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது, தளபதி படத்தின் போது என்று தான் நான் நினைக்கிறேன். Filmfare அட்டையில் வெளிவந்த ரஜினிகாந்தின் அந்த புகைப்படம் தான், என்னுடைய, இதுநாள் வரையிலான favourite. அந்த படம் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு வைட் பைஜமா குர்தாவில் அழகாக கைகளை மடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

***

CNN-IBN Indian of the year Listஇல் ரஜினிகாந்த் மற்றும் கங்கூலி ஆகிய இருவரும் வந்தது இனிய அதிர்ச்சி. இவர்கள் இருவரின் மீதும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்கள் இருவரின் போராட்ட குணம் அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், மீண்டும் எழுந்து வர முடியும் என்று நிரூபித்தவர்கள் இவர்கள் இருவரும். நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஆனால் ரஜினிகாந்தை CNN-IBN லிஸ்டில் சேர்த்தது, தெற்கு பக்கத்து மக்களையும் கவர வேண்டும் என்கிற வியாபார தந்திரமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பொழுது எழுத ஆரம்பித்த பதிவு இது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எதுக்கு இந்த வீண் பந்தா? ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை? இந்தியாவிலே ஒரே ஒரு இடத்தில் தான் இது நடக்கிறது அதையும் காலி செய்து விடலாம் என்கிற நோக்கமா? இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் வீர விளையாட்டு. இதில் வீரம் எங்கிருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். என்னது? வீரம் இல்லியா? இந்த விளையாட்டை டீவியில் பார்ப்பதற்கு கூட வீரம் வேண்டுமப்பா. உயிர் போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அடா அடா என்னே உங்களது மக்களின் மீது இருக்கும் பாசம்? உங்கள் பாசம் என்னை வியப்படைய வைக்கிறது. மற்ற எல்லவற்றையும் சரிசெய்தாகிவிட்டது. இது தான் பாக்கி. இந்த ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டால், இந்தியாவில் உயிர் சேதமே இருக்காதா? இது வீர விளையாட்டு. தமிழர் குணங்களில் எஞ்சி நிற்கும் ஒரு சில குணங்களில் இதுவும் ஒன்று. நம்மாளு இலவசத்துக்கும் க்யூவில நிப்பான், மாட்ட அடக்கறதுக்கும் க்யூவில நிப்பான். எங்களை பாதுகாத்துக்க எங்களுக்கு தெரியும். நாட்ல காயர்லாஞ்சிக்கு தீர்ப்பு கிடைச்சாச்சான்னு பாருங்கப்பு.

***

ஜல்லிக்கட்டுக்கு தடைன்னு மட்டும் வேகவேகமா தீர்ப்பு எழுதத் தெரியுதுல? அதே தீர்ப்ப அதே வேகத்தோட, பம்பாயில் பெண்களை ஒரு கும்பலே மானபங்கம் செஞ்சதே, அத ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும்னு, இல்லீன்னா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்னு தீர்ப்பு எழுதச்சொல்லுங்க பார்ப்போம்? முடியாது. ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. கைது செய்யப்பட்டவங்களுக்கு பெயில் கிடைக்குது. காயர்லாஞ்சி என்ன ஆச்சு? கேஸ் நடத்துக்கிட்டே இருக்கு. ஏன், இந்த மாதிரி கேஸ்ஸ¤க்கு கூட வேகமா தீர்ப்பு எழுத முடியாதா? ஒன்னுமே புரியல.

இன்னிக்கு, இன்னவரைக்கும் மும்பை கேஸ்ல கண்டுபிடிச்சத, ரேணுகா சவுத்ரி விசாரிக்க போகிறார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

***

பத்திரிக்கைகளின் வேலை ஒரு செய்தியை எழுதுவதோடு மட்டுமே முடிவடைவதில்லை. அதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்பொழுது ப்ளாகர்களே செய்திகளை பதிவு செய்கிறன்றனர். பத்திரிக்கைகளின் வேலை, செய்திகளை follow-up செய்வது. பின்ன என்ன இதுக்கு நம்பர் ஒன் புலனாய்வு இதழ்ன்னு அட்டையில போடனும்?

எத்தன மறக்கப்பட்ட கேஸ்கள்? அவையெல்லாம் என்ன ஆயிற்று?

***

யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.

UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC காரணமாக இருந்தால், அதே அளவு பழி மத்தியபிரதேச அரசுக்கும் மாநில அரசுக்கும் போய் சேரவேண்டும் என்று UCC கணக்கிட்டது. பழியை பிரித்துக்கொள்வது புத்திசாலித்தனம். இழப்பீட்டுத் தொகையையும் கணிசமாக குறைக்கலாமே!

உதாரணத்துக்கு:

  1. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சட்டதிட்டங்கள் ஏன் அவற்றை கட்டுப்படுத்தவில்லை?
  2. மிக நுணுக்கமான தொழில் நுட்ப திட்டங்கள் கொடுக்கப்படாமல் இருந்த பொழுதும் ஏன் MIC தொழிற்சாலையை நிறுவ அரசு சம்மதித்தது?
  3. லைசன்ஸ் ஏன் வழங்கப்பட்டது?
  4. Design Transfer Agreement என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படி செயற்திட்டத்திற்கு மட்டும் UCCஐ பொறுப்பாக்கிவிட்டு, அதன் பின்விளைவுகளுக்கு பொறுப்பாக்காமல் விட்டது?
  5. மருத்துவ உதவி, பொது அறிவிப்பு முறை மற்றும் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் ஏன் முதன்மை செயற்திட்டத்தோடு இணைக்கப்படவில்லை?
  6. தொழிற்சாலையை பரிசோதிக்க வந்த அதிகாரிகள், UCCயின் பிரதிநிதிகள் சொன்ன தகவல்களை, ஏன் அப்படியே முழுவதுமாக நம்பினார்கள்?
  7. ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று தானே? அதை ஏன் இந்திய அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை?

முக்கியமாக, அக்டோபர் 1984இல், தொழிற்சாலைக்கு மிக அருகில், அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு, சட்டபூர்வமாக பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது. தொழிற்சாலை வந்தபிறகு, மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறிவிட்ட இந்த குடியிருப்புகளை காலிசெய்ய முயலாமல், அதற்கு எதிர்மறையாக, அரசு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கியது ஏன்?

போப்பால் ஆக்ட் இழப்பீட்டை பெறுவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த போதும், அரசாங்கத்தின் அசட்டையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களை பாதித்தது. இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள், மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் அவர்களது காயங்களின் முழு தன்மை போன்றவற்றை சேகரிக்கும் வேலையை அரசாங்கம் சரிவரச்செய்யவில்லை.ஆம், அரசாங்கம் தன் வேலையை, பாதிப்பு ஏற்படும் முன்னரும் சரியாக செய்யவில்லை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் சரியாக செய்யவில்லை.

இந்தியாவின் பெட்டிசன், போப்பாலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்பின் மிகச்சரியான அளவை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது, என்பதை UCC உடனடியாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது. விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிக்கையின் வெளியிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இறந்தவர்களின் எண்ணிக்கை : 1,760. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 30,000 – 40,000. வழக்கின் அனைத்து விசாரிப்புகளின் போதும் இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. சுப்ரீம் கோர்ட் 1989இல் இறுதி தீர்ப்பு வழங்கியவரை இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறய -மிகமிகச்சிறிய- விழுக்காட்டினரே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். எனவே, விடுபட்ட எஞ்சிய மற்ற மக்களுக்கு எந்த ஒரு தீர்ப்பையும் நீதிமன்றம் கொடுக்க இயலவில்லை. சொல்லுங்கள். ஒழுங்காக கணக்கெடுப்பது அவ்வளவு கடினமான வேலையா? அதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கு?

இந்திய பெட்டிசனின் மிகப்பெரிய பலவீனம் இது. சுப்ரீம் கோர்ட் ஒரு மிகக்குறைவான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு வழிவகை செய்ததோடு மட்டுமில்லாது,இழப்பீட்டுத் தொகை மட்டுமே போதும் வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்கிற மனப்போக்கு உருவாக காரணமாகவும் இருந்தது.UCC தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் சரமாரியாக மறுத்தது. அது சொன்ன காரணங்கள் : குற்றங்கள் தெளிவாக இல்லை. புள்ளிவிபரங்கள் தவறு.

“தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொள்ளக்கூடாது” என்பதில் UCC கவனமாக இருந்தது. நடந்த பேரிடருக்கு தண்டனையாக இழப்பீட்டுத்தொகையைக் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது. ஆம். அது குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை – மிக குறைந்த இழப்பீட்டுத்தொகை – வழங்கத்தயாராக இருந்தது, ஆனால் ஏற்பட்ட இழப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.

இந்தியாவும் தன்னால் இந்த வழக்கில் ஜெயிக்க இயலாது என்பதையே உலகுக்கு காட்ட விரும்பியது.

ஒன்று: பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தில் உலன்று கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறிது சிறிதாக செத்துக்கொண்டிருக்கும் போது, இந்த வழக்கை முடிக்காமல் UCCயுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருப்பது.

இரண்டு: UCC கொடுக்க இருக்கும் இழப்பீட்டுத் தொகையையும், நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏப்ரல் 4 1987

நியூயார்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பொழுதும் UCC இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஏப்ரல் 4 1987 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.W. Deo, UCCஐ இடைக்கால இணக்க நிவாரணமாக 270 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.நீதிபதியின் இந்த யோசனை, ஒரு தனிநபர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, தொடர்ந்த வழக்கின் எதிரொலியே ஆகும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், இறுதி இழப்பீட்டுத் தொகை வரும் வரையில், உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்.

துரதிர்ஷ்டவசமாக சில சட்ட சிக்கல்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனையை உண்டுபண்ணின. நாடகத்தின் அடுத்த காட்சி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜபல்பூர் நீதிமன்றத்துக்கு இடம்மாறியது. அங்கே மீண்டும் சட்ட பிரச்சனைகள் அலசப்பட்டன, எப்பொழுதும் இருக்கும் நீதிமன்றத்தின் காலதாமதங்களும் உடன் சேர்ந்துகொண்டன. கடைசியாக UCC எந்தவொரு இடைக்கால நிவாரணத்தொகையையும் வழங்க மறுத்தது.

ஒரு பேரிடர் இயற்கையால் (அல்லது கடவுளால்!!) ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை பல திசைகளிலிருந்தும் இருந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அதே பேரிடர் மனிதானால் ஏற்பட்டது என்றால், அனைத்து திசைகளையும் கதவுகளையும் அரசியல் அடைத்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக சட்டம் மற்றும் அரசியல் என்னும் கடினமான வலையில் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது தொலைதூரத்தில் தெரியும் காணல் நீராகவே இருந்தது.

பிப்ரவரி 14 1989

குரூரமான இந்த சட்டத்தின் யுத்தம், நான்கு வருடங்கள் நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்தன. கடைசியாக பிப்ரவரி 14 1989 அன்று இந்த நாடக அரங்கின் திரை கடைசியாக இறக்கப்பட்டது, நாடகம் முடிந்தது. இரு தரப்பினரும் நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத்தொகையை ஒத்துக்கொண்டன. அதற்குள்ளாக அரங்கு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டகோயிலாக கருதப்படும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாறியிருந்தது. UCC 470 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போப்பால் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலில் 1986இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டபொழுது இழப்பீட்டுத் தொகையாக கோரப்பட்டது எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். சுப்ரிம் கோர்ட் இழப்பீட்டுத் தொகையை கனிசமாக குறைத்திருந்தது.

அதிர்ச்சி அலைகள் ஏமாற்றத்துடன் நாட்டை சுற்றி சுற்றி வந்தன. கூச்சலும் சத்தமும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சத்தமாக கேட்டது. கண்டனப் பேரணிகள் போப்பாலிலும் டெல்லியிலும் நடந்தன. இழப்பீட்டுத் தொகை ஒரு துரோகம். இரண்டாவது விபத்து என்று வர்ணிக்கப்பட்டது. இந்த மாதிரியான தேவையில்லாத சமரச உடன்படிக்கைக்கு என்ன காரணம்?

போப்பால் வழக்கு இரண்டும் காரணிகளைச் சார்ந்திருந்தது – நஷ்டயீடு மற்றும் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால், எவ்வளவு பணம் இந்த பேரிடரை ஈடு செய்யும்? நடந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நஷடயீடும், பொறுப்பும் இரண்டு வெவ்வேறு காரணிகள் அல்ல. ஒன்றை ஒன்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த விதிக்கு எதிர்மாறாக இழப்பீட்டு தொகை மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வேறு வேறு என்பதைத் தான் தீர்ப்பு நிரூபித்தது. UCC ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கத்தயார், ஆனால் ஒரு நிபந்தனை, UCCக்கு எதிரான அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தள்ளூபடி செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அப்படி தள்ளுபடி செய்யவில்லை என்றால் UCC நஷ்டயீடு வழங்காது. நஷ்ட ஈடு வழங்கினால், குற்றம் உறுதிப்பட்டது என்பது தானே அர்த்தம்? அதென்ன நஷ்ட ஈடு வழங்குவேன், பொறுப்பு ஏற்க மாட்டேன் என்பது?

UCC ஆரம்பத்திலிருந்தே ஒரு நஷ்டயீட்டுத் தொகை வழங்குவதில் ஆர்வமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் அது அவர்களின் தந்திரங்களில் ஒன்று. இந்தியா நியூயார்க்கில் முதன் முதலில் வழக்கு பதிவு செய்ததற்கு முன்பே, UCC ரூபாய். 300 கோடி – அறுபது கோடியை உடனடியாக வழங்குவது என்றும், அடுத்த முப்பது வருடத்திற்கு 8 கோடி வருடா வருடம் வழங்குவது என்றும்- தருவதற்கு தயாராக இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே நஷ்டயீடு கொடுத்து வழக்கை முடித்துவிடுவதற்கான முயற்சி எப்பொழுதும் நடந்துவந்தேயிருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்தபொழுது, UCC தான் ஜெயித்தது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் விபத்துக்கு அது எந்தவகையிலும் பொறுப்பேற்கவில்லையே!

இந்த வழக்கை அமெரிக்காவின் புகழ் பெற்ற மற்றொரு வழக்குடன் ஒப்பிடலாம். எக்ஸானுக்கு (Exxon) சொந்தமான எண்ணெய்க் கப்பல், கடலில் 10 மில்லியன் கேலன் எண்ணெய் சிந்திய வழக்கு அது. இது நடந்தது 1989, இடம் அலாஸ்கா. இந்த விபத்தில் யாரும் உயிரிலக்கவில்லை, ஆனால் எக்ஸான் 5 பில்லியன் டால்ர்களை இழப்பீடாக வழங்கியது. கணக்கிட்டால் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் 940$ வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷ வாயுவால் வாழ்க்கை முழுவதற்கும் ஊணமாக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் 500$.

அமெரிக்க நீர்நாயிலும் கேவலமானவனா இந்தியன்?

(தொடரும்)

இந்தியன் ஏர்லைன்ஸ் : புகார் பக்கம்

இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaints blog ஒன்று create செய்திருக்கிறேன். இந்தியன் ஏர்லைன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சென்று தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நிறைய புகார்கள் இருக்கும் பட்சத்தில் யாரேனும் முக்கிய புள்ளி அல்லது ரிப்போர்டருக்கு அனுப்பலாம். இது ஒரு முயற்சியே.

புகார்களை மேலதிகாரிகளுக்கும் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதே இந்த புகார் பக்கத்தின் நோக்கம். இந்தியன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து இந்த மாதிரி தவறுகளை செய்துகொண்டிருக்க முடியாது.

(நான் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட அன்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த நான், அன்று அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலரிடம், கையழுத்து வாங்கி வைத்திருக்கிறேன். மேலும் பெரும்பாலன நபர்களின் பாஸ்போர்ட் நம்பர்களும் இருக்கின்றன. புகார்கள் அதிகம் வரும் பட்சத்தில், இதையும் சேர்த்து வைத்து அனுப்பலாம்.)

இதை விட்டு விட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது டைகர் ஏர்லைன்ஸில் செல்வது தானே என்று கேட்பவர்களுக்கு, முடிந்த வரை இந்தியன் ஏர்லைன்ஸை மாற்ற முயற்சிப்போம். முடியாவிடில் பரவாயில்லை. நமக்கு ஏதும் நட்டமில்லை. நான் இந்த பதிவை டைப் செய்த நேரமும், zohoவை உபயோகித்து புகார் பக்கம் தயாரித்த நேரமும் மட்டுமே வீணடையும். பரவாயில்லை. இல்லையென்றால் மட்டும் என்ன செய்திருக்கப்போகிறேன்.

அடித்தால் மாங்காய் இல்லையேல் கல். நமக்கு பெரிதாக நட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் நமது புகார்கள் செவிமெடுக்கப்பட்டால் இந்தியன் ஏர்லைன்ஸ் திருந்த வாய்ப்பிருக்கிறது.

உங்களது ஈமெயில் ஐடியை மற்ற யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன். இறுதியாக மொத்த புகார்களும் சமர்பிக்கப்படும் போது மட்டுமே, உங்கள் ஈமெயில் சேர்த்து அனுப்பப்படும்.

புகார் பதிவு பக்கத்திற்கு இங்கே செல்லவும்:

பதியப்பட்ட புகார்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகார் பக்கத்தின் லிங்க் கொடுக்கவும்.