யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.

UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC காரணமாக இருந்தால், அதே அளவு பழி மத்தியபிரதேச அரசுக்கும் மாநில அரசுக்கும் போய் சேரவேண்டும் என்று UCC கணக்கிட்டது. பழியை பிரித்துக்கொள்வது புத்திசாலித்தனம். இழப்பீட்டுத் தொகையையும் கணிசமாக குறைக்கலாமே!

உதாரணத்துக்கு:

 1. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய சட்டதிட்டங்கள் ஏன் அவற்றை கட்டுப்படுத்தவில்லை?
 2. மிக நுணுக்கமான தொழில் நுட்ப திட்டங்கள் கொடுக்கப்படாமல் இருந்த பொழுதும் ஏன் MIC தொழிற்சாலையை நிறுவ அரசு சம்மதித்தது?
 3. லைசன்ஸ் ஏன் வழங்கப்பட்டது?
 4. Design Transfer Agreement என்ற ஒன்று இருக்கிறதே, அது எப்படி செயற்திட்டத்திற்கு மட்டும் UCCஐ பொறுப்பாக்கிவிட்டு, அதன் பின்விளைவுகளுக்கு பொறுப்பாக்காமல் விட்டது?
 5. மருத்துவ உதவி, பொது அறிவிப்பு முறை மற்றும் மக்களை வெளியேற்றும் திட்டங்கள் ஏன் முதன்மை செயற்திட்டத்தோடு இணைக்கப்படவில்லை?
 6. தொழிற்சாலையை பரிசோதிக்க வந்த அதிகாரிகள், UCCயின் பிரதிநிதிகள் சொன்ன தகவல்களை, ஏன் அப்படியே முழுவதுமாக நம்பினார்கள்?
 7. ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு பாதுகாப்பு அம்சங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்று தானே? அதை ஏன் இந்திய அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை?

முக்கியமாக, அக்டோபர் 1984இல், தொழிற்சாலைக்கு மிக அருகில், அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு, சட்டபூர்வமாக பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது. தொழிற்சாலை வந்தபிறகு, மிகுந்த ஆபத்தான பகுதியாக மாறிவிட்ட இந்த குடியிருப்புகளை காலிசெய்ய முயலாமல், அதற்கு எதிர்மறையாக, அரசு அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கியது ஏன்?

போப்பால் ஆக்ட் இழப்பீட்டை பெறுவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த போதும், அரசாங்கத்தின் அசட்டையான செயல்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களை பாதித்தது. இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள், மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் அவர்களது காயங்களின் முழு தன்மை போன்றவற்றை சேகரிக்கும் வேலையை அரசாங்கம் சரிவரச்செய்யவில்லை.ஆம், அரசாங்கம் தன் வேலையை, பாதிப்பு ஏற்படும் முன்னரும் சரியாக செய்யவில்லை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் சரியாக செய்யவில்லை.

இந்தியாவின் பெட்டிசன், போப்பாலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்பின் மிகச்சரியான அளவை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது, என்பதை UCC உடனடியாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது. விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிக்கையின் வெளியிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இறந்தவர்களின் எண்ணிக்கை : 1,760. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 30,000 – 40,000. வழக்கின் அனைத்து விசாரிப்புகளின் போதும் இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. சுப்ரீம் கோர்ட் 1989இல் இறுதி தீர்ப்பு வழங்கியவரை இந்த எண்ணிக்கை மாறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறய -மிகமிகச்சிறிய- விழுக்காட்டினரே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். எனவே, விடுபட்ட எஞ்சிய மற்ற மக்களுக்கு எந்த ஒரு தீர்ப்பையும் நீதிமன்றம் கொடுக்க இயலவில்லை. சொல்லுங்கள். ஒழுங்காக கணக்கெடுப்பது அவ்வளவு கடினமான வேலையா? அதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கு?

இந்திய பெட்டிசனின் மிகப்பெரிய பலவீனம் இது. சுப்ரீம் கோர்ட் ஒரு மிகக்குறைவான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு வழிவகை செய்ததோடு மட்டுமில்லாது,இழப்பீட்டுத் தொகை மட்டுமே போதும் வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்கிற மனப்போக்கு உருவாக காரணமாகவும் இருந்தது.UCC தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் சரமாரியாக மறுத்தது. அது சொன்ன காரணங்கள் : குற்றங்கள் தெளிவாக இல்லை. புள்ளிவிபரங்கள் தவறு.

“தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொள்ளக்கூடாது” என்பதில் UCC கவனமாக இருந்தது. நடந்த பேரிடருக்கு தண்டனையாக இழப்பீட்டுத்தொகையைக் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தது. ஆம். அது குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை – மிக குறைந்த இழப்பீட்டுத்தொகை – வழங்கத்தயாராக இருந்தது, ஆனால் ஏற்பட்ட இழப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்க தயாராக இல்லை.

இந்தியாவும் தன்னால் இந்த வழக்கில் ஜெயிக்க இயலாது என்பதையே உலகுக்கு காட்ட விரும்பியது.

ஒன்று: பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தில் உலன்று கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறிது சிறிதாக செத்துக்கொண்டிருக்கும் போது, இந்த வழக்கை முடிக்காமல் UCCயுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருப்பது.

இரண்டு: UCC கொடுக்க இருக்கும் இழப்பீட்டுத் தொகையையும், நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஏப்ரல் 4 1987

நியூயார்க்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முழுதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட பொழுதும் UCC இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஏப்ரல் 4 1987 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.W. Deo, UCCஐ இடைக்கால இணக்க நிவாரணமாக 270 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது.நீதிபதியின் இந்த யோசனை, ஒரு தனிநபர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக, தொடர்ந்த வழக்கின் எதிரொலியே ஆகும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், இறுதி இழப்பீட்டுத் தொகை வரும் வரையில், உதவியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் தான்.

துரதிர்ஷ்டவசமாக சில சட்ட சிக்கல்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனையை உண்டுபண்ணின. நாடகத்தின் அடுத்த காட்சி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜபல்பூர் நீதிமன்றத்துக்கு இடம்மாறியது. அங்கே மீண்டும் சட்ட பிரச்சனைகள் அலசப்பட்டன, எப்பொழுதும் இருக்கும் நீதிமன்றத்தின் காலதாமதங்களும் உடன் சேர்ந்துகொண்டன. கடைசியாக UCC எந்தவொரு இடைக்கால நிவாரணத்தொகையையும் வழங்க மறுத்தது.

ஒரு பேரிடர் இயற்கையால் (அல்லது கடவுளால்!!) ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் நிவாரணத்தொகை பல திசைகளிலிருந்தும் இருந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அதே பேரிடர் மனிதானால் ஏற்பட்டது என்றால், அனைத்து திசைகளையும் கதவுகளையும் அரசியல் அடைத்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக சட்டம் மற்றும் அரசியல் என்னும் கடினமான வலையில் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது தொலைதூரத்தில் தெரியும் காணல் நீராகவே இருந்தது.

பிப்ரவரி 14 1989

குரூரமான இந்த சட்டத்தின் யுத்தம், நான்கு வருடங்கள் நான்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்தன. கடைசியாக பிப்ரவரி 14 1989 அன்று இந்த நாடக அரங்கின் திரை கடைசியாக இறக்கப்பட்டது, நாடகம் முடிந்தது. இரு தரப்பினரும் நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத்தொகையை ஒத்துக்கொண்டன. அதற்குள்ளாக அரங்கு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டகோயிலாக கருதப்படும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாறியிருந்தது. UCC 470 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. போப்பால் மாவட்ட நீதிமன்றத்தில் முதன்முதலில் 1986இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டபொழுது இழப்பீட்டுத் தொகையாக கோரப்பட்டது எவ்வளவு தெரியுமா? 3 பில்லியன் டாலர். சுப்ரிம் கோர்ட் இழப்பீட்டுத் தொகையை கனிசமாக குறைத்திருந்தது.

அதிர்ச்சி அலைகள் ஏமாற்றத்துடன் நாட்டை சுற்றி சுற்றி வந்தன. கூச்சலும் சத்தமும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சத்தமாக கேட்டது. கண்டனப் பேரணிகள் போப்பாலிலும் டெல்லியிலும் நடந்தன. இழப்பீட்டுத் தொகை ஒரு துரோகம். இரண்டாவது விபத்து என்று வர்ணிக்கப்பட்டது. இந்த மாதிரியான தேவையில்லாத சமரச உடன்படிக்கைக்கு என்ன காரணம்?

போப்பால் வழக்கு இரண்டும் காரணிகளைச் சார்ந்திருந்தது – நஷ்டயீடு மற்றும் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால், எவ்வளவு பணம் இந்த பேரிடரை ஈடு செய்யும்? நடந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

நஷடயீடும், பொறுப்பும் இரண்டு வெவ்வேறு காரணிகள் அல்ல. ஒன்றை ஒன்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த விதிக்கு எதிர்மாறாக இழப்பீட்டு தொகை மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வேறு வேறு என்பதைத் தான் தீர்ப்பு நிரூபித்தது. UCC ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கத்தயார், ஆனால் ஒரு நிபந்தனை, UCCக்கு எதிரான அனைத்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தள்ளூபடி செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அப்படி தள்ளுபடி செய்யவில்லை என்றால் UCC நஷ்டயீடு வழங்காது. நஷ்ட ஈடு வழங்கினால், குற்றம் உறுதிப்பட்டது என்பது தானே அர்த்தம்? அதென்ன நஷ்ட ஈடு வழங்குவேன், பொறுப்பு ஏற்க மாட்டேன் என்பது?

UCC ஆரம்பத்திலிருந்தே ஒரு நஷ்டயீட்டுத் தொகை வழங்குவதில் ஆர்வமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் அது அவர்களின் தந்திரங்களில் ஒன்று. இந்தியா நியூயார்க்கில் முதன் முதலில் வழக்கு பதிவு செய்ததற்கு முன்பே, UCC ரூபாய். 300 கோடி – அறுபது கோடியை உடனடியாக வழங்குவது என்றும், அடுத்த முப்பது வருடத்திற்கு 8 கோடி வருடா வருடம் வழங்குவது என்றும்- தருவதற்கு தயாராக இருந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே நஷ்டயீடு கொடுத்து வழக்கை முடித்துவிடுவதற்கான முயற்சி எப்பொழுதும் நடந்துவந்தேயிருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் வழக்கு முடிவுக்கு வந்தபொழுது, UCC தான் ஜெயித்தது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் விபத்துக்கு அது எந்தவகையிலும் பொறுப்பேற்கவில்லையே!

இந்த வழக்கை அமெரிக்காவின் புகழ் பெற்ற மற்றொரு வழக்குடன் ஒப்பிடலாம். எக்ஸானுக்கு (Exxon) சொந்தமான எண்ணெய்க் கப்பல், கடலில் 10 மில்லியன் கேலன் எண்ணெய் சிந்திய வழக்கு அது. இது நடந்தது 1989, இடம் அலாஸ்கா. இந்த விபத்தில் யாரும் உயிரிலக்கவில்லை, ஆனால் எக்ஸான் 5 பில்லியன் டால்ர்களை இழப்பீடாக வழங்கியது. கணக்கிட்டால் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் 940$ வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஷ வாயுவால் வாழ்க்கை முழுவதற்கும் ஊணமாக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் 500$.

அமெரிக்க நீர்நாயிலும் கேவலமானவனா இந்தியன்?

(தொடரும்)

2 thoughts on “யார் முழித்திருக்க போகிறார்கள் – 7

 1. எந்த அமெரிக்கனுக்கு மனிதாபிமானம் என்கிற உணர்வு இருந்திருக்கின்றது? உலகிற்கு தான்மிக நல்லவன் என காட்ட நீர்நாய்களுக்கு இழப்பீடு போன்ற நாடகங்களை நடத்தும். அந்த காசு நீர்நாய்களின் நலன்களுக்குதான் சென்று சேரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. சேரவில்லையென்றாலும் அவை என்ன மீண்டும் புகாரா சொல்லப்போகின்றன?

  Like

 2. அக்னி சிறகு: அமெரிக்கர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா இல்லியா என்பது ரெண்டாம் பட்சம், இங்க நம்ப ஆளுங்களுக்கே இல்லியே?! அது தான கஷ்டமா இருக்கு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s