கங்கணம், பின் கதைச் சுருக்கம்

(ஜெயமோகன், அழகிய பெரியவன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், ரஜினி, பார்த்திபன், ஆனந்த விகடன், ஞாநி)

பா.ராகவன் எழுதிய பின் கதைச் சுருக்கம் என்கிற புத்தகத்தை எனக்கு என் நண்பர் ஒருவர் படிக்க கொடுத்தார். கொஞ்ச காலமாக நானும் அவரும் கிடைக்கும் நேரங்களில் நாவல் விவாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஏதோ நாங்கள் படித்த அளவு. அவர் ஏதேதோ எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லுவார். நிறைய பெயர்களை நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. அப்பொழுதுதான் பா.ராகவனின் பெயரைச் சொல்லி அவர் எழுதிய நாவல் படித்ததுண்டா என்று கேட்டார். எனக்கு பா.ராகவனை டாலர் தேசத்தின் மூலமே தெரியும். அதனால் அவர் அவ்வாறான (எவ்வாறான? அவை என்ன ரகம்?) புத்தகங்கள் மட்டுமே எழுதுகிறவர் என்று தவறாக நினைத்திருந்தேன். இந்த பின் கதைச் சுருக்கம் புத்தகம் அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றியது. அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றி அழகாக கூறியிருந்தார்.
அவர் லிஸ்டில் இருந்த நாவல்களின் பட்டியல் கீழே:

நாவல்: எழுத்தாளர்
அலை உறங்கும் கடல் : பா ராகவன்
ஒற்றன் : அசோகமித்திரன்
ஏசுவின் தோழர்கள் : இந்திரா பார்த்தசாரதி
குட்டியாப்பா : நாகூர் ரூமி
வேள்வித்தீ, காதுகள் : எம் வி வெங்கட்ராம்
நுண்வெளி கிரணங்கள் : சு வேணுகொபால்
மகாநதி : பிரபஞ்சன்
இருவர்: ஆர்.வெங்கடேஷ்
அனுராகத்தின் தினங்கள் : வைக்கம் முகம்மது பஷீர்
ஜனகணமன : மாலன்
வாடாமல்லி : சு சமுத்திரம்

அவர் சொன்ன மூன்று பிற மொழி நாவல்களை நான் இதில் சேர்க்க இல்லை. மேலே குறிப்பிட்ட நாவல் பட்டியளில் நான் ஒற்றன் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு. அதைப் பற்றி பதிவு ஒன்று எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பிறகு எப்பொழுதும் போல மறந்துவிட்டது. பா.ராகவன் குறிப்பிட்ட பிறகு தான் நினைவு வந்தது. ஒற்றன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக யதார்த்தமாக ஒரு பயணக்கட்டுரை போல ஒரு டயரி போல அசோகமித்திரன் எழுதியிருந்தார்.

அவர் அயோவா பல்கலைக்கழகத்திற்கு எழுத்தாளர் பட்டறையின் நிமித்தமாக மேற்கொண்டிருந்த பயணத்தையும் அதில் அவர் சந்தித்த பிற நாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும் நிறைய சொல்லியிருப்பார். அதில் ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு வைத்துக்கொண்டு அறையில் அடைந்து கொண்டு நாவல் எழுதிக்கொண்டிருப்பார். சார்ட் போட்டுக்கொண்டு எழுத நாவல் என்ன சாப்ட்வேரா? சொல்லப்போனால் சாப்ட்வேரே கூட சார்ட் போட்டுக்கொண்டு செய்யும் பொழுது ஒழுங்காக வருவதில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் உருக்கமாக இருக்கும். அவரது ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொன்ன எழுத்தாளரைப் தேடிப் படிக்க தூண்டும். ஆனால் பா.ராகவனின் இந்த தொகுப்பு ஒட்டாமல் இருக்கிறது. நான் சொல்றத சொல்லிட்டேன் படிக்கனும்னா படிச்சுக்கோ ரகம். என்னைப் பொருத்தவரையில் ஒற்றன், one hundred years of solitude, விஷ்ணுபுரம், Midnights Children போன்ற புத்தகங்களைப் பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என்றே தோன்றியது.

***

இந்தவாரம் என்னவோ கல்யாண சம்பந்தமான விசயங்களையே படித்துக்கொண்டிருக்கவும் கேட்டுக்கொண்டிருக்கவும் பார்த்துக்கொண்டிருக்கவும் வேண்டியதாகிற்று.

பெருமாள் முருகன் எழுதிய கங்கணம் நாவல் படித்தேன். முப்பத்தைந்து வயதைக் கடந்து விட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் மனக்கஷ்டத்தில் இருக்கும் ஒரு கவுண்டரைப் பற்றிய கதை அது. எனக்கு தெரிந்த ஒருவர் நாற்பது வயது வரை திருமணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருந்துவிட்டு, தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது கஷ்டம் வேறு மாதிரி. அவர் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டுத்தான் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானமாக இருந்து விட்டவர். வேறு சிலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருக்கிறது என்கிற காரணத்தால் திருமணம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதையின் நாயகானான மாரிமுத்துக் கவுண்டருக்கு இது போல காரணங்கள் ஏதும் இல்லை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் தான். தங்கை ஒருவர் இருக்கிறார். ஆனால் அவருக்கு எப்பொழுதோ திருமணம் ஆகியிருக்கிறது. தனது இருபதாவது வயதில் முதல் பெண் பார்க்கச் சென்றவர் கவுண்டர். ஆனாலும் முப்பத்தைந்து வயது வரை திருமணமாகாமல் இருக்கிறார்.பதினைந்து வருடமாக பெண் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

பெருமாள் முருகன் எனக்கு புதிய அறிமுகம். நூலகத்தில் எதேச்சையாக எடுத்தேன். இதற்கு முன்னர் அழகிய பெரியவன் எழுதிய தகப்பன் கொடி என்கிற நாவலை நான் படித்திருந்தேன். கங்கணம் நாவலின் முதல் இரண்டு அத்தியாயம் எனக்கு தகப்பன் கொடியை மீண்டும் படிப்பது போன்றே இருந்தது. ஆனால் அது வேறு, இது வேறு. கங்கணம் நாவலின் தளம் வேறு. தகப்பன் கொடி முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்களது குரல் நாவல் தோறும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். கங்கணத்திலும் அவ்வப்போது அது போன்ற குரல்கள் ஒலித்தாலும், அவை இப்பொழுது என்ன நிலைமை என்பதையும் எடுத்துக்காட்ட தவறவில்லை.

உதாரணத்திற்கு, மாரிமுத்து கவுண்டரின் பண்ணயத்தில் வேலை செய்த அவனது சிறு வயது நண்பன் ராமனை மாரிமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது பேச்சுவாக்கில் மாரிமுத்து, ராமனை மீண்டும் பண்ணயத்து வேலைக்கு அழைக்க, ராமன் திட்டவட்டமாக
“பண்ணயத்து வேலையெல்லாம் இப்ப எந்த சக்கிலி பாப்பான்? அந்தக்காலம் மசக்காலம். பண்ணயமே கதின்னு கெடந்தம். இப்ப வேலையா இல்ல, அத உடுய்யா” என்று திட்டவட்டாமாக மறுத்து விடுகிறார். ராமனும் மாரிமுத்துவும் நண்பர்களாகவே இருக்கின்றனர்.கடைசியில் ராமன் தான் மாரிமுத்துவுக்கு பெண் தேடிக்கொடுக்கிறான். மாரிமுத்துவின் பண்ணயத்தில் இருக்கும் குப்பனுக்கும் நாவலில் மிக முக்கியமான இடமுண்டு. இவ்வாறன விசயங்கள் காலம் மாறிவிட்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

நாவல் முழுவதுமே நான் ரசித்தேன். என் அலுவலகத்திற்கும் என் வீட்டிற்கும் 40 நிமிட ரயில் பயணம். போக வர ஒரு மணி இருபது நிமிடம். கண்டிப்பாக படித்துத்தான் ஆக வேண்டும். இப்பொழுதெல்லாம் கையில் புத்தகம் இல்லாமல் வீட்டை விட்டு இறங்குவதில்லை. கங்கணம் மிகவும் சுவாரஸ்யம். சிங்கப்பூரின் பாதாள ரயிலில் நான் சென்று கொண்டிருந்தாலும், அந்த நாவலின் கிராமங்களை கடந்தே எனது ரயில் சென்று கொண்டிருந்தது. மாரிமுத்து என்னுடனே பயணித்துக்கொண்டிருந்தார். அந்த நாற்பது நிமிடமும் நான் நாவலிலே மூழ்கிக்கிடப்பேன். உண்மையில் அழகாக எழுதியிருந்தார் பெருமாள் முருகன். மாரிமுத்து எத்தனை கஷ்டங்கள் அடைந்திருந்தான் என்பதை இதற்கு மேலாக யாராலும் சொல்லமுடியுமா என்பதும் சந்தேகமே. மேலும் உறவுகள் குறித்தும் ஒரு அசலான அலசலை முன் வைத்திருக்கிறார் பெருமாள் முருகன். ஏதேதோ செல்லாத காரணங்களை முன் வைத்து திருமணத்திற்கு தடையாக இருக்கும் தன் அம்மாவையே வார்த்தைகளால் மாரிமுத்து கடித்து குதறும் பொழுது நமக்கு அவன் மீது கோபம் ஏற்படுவதற்கு மாறாக இரக்கமே மேலிடுகிறது.

மேலும் மாரிமுத்துவின் சித்தப்பா பையன் வேறு ஒரு சாதி பெண்ணை காதலிப்பது தெரிந்து, மாரிமுத்து சந்தோஷப்படுவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மறைந்திருக்கும் குரோதத்தை அப்பட்டமாய் எடுத்துக்காட்டுகிறது. “எனக்கு பொறக்கறதும் பசவதான். எம்மாடு போடறதும் காளதான்” என்று பெருமை பொங்க அடித்த தம்பட்டங்களின் கதி என்னவாகும்? ‘பையனுக்கு எத்தன பன்னிக்குட்டி சீராக் குடுத்திருக்கறாங்க’ என்று யாராவது விசாரிக்காமலா போய் விடுவார்கள்? சித்தப்பன் சித்தியை பார்த்து ‘காட்டுல வெள்ளாம இல்லீன்னா சம்பந்தி ஊட்டுக்குப் பன்னி மேக்கப் போயிர்லாம்’ என்று ஜாடையாக வேனும் ஓரிருவர் பேசுவார்கள். மாரிமுத்துவின் யோசனையில் குதூகலம் கூடியது

மாரிமுத்துவும் சாதரண மனிதன் தானே. பதினைந்து வருடங்கள் கழித்து திருமணம் கைகூடி வரும்பொழுது எப்படியும் திருமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடந்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அவனுள் இதயத்துடிப்பை விட அதிகமாக இருக்கிறது. அவன் கொஞ்சமேனும் பாசத்தோடு இருந்த பாட்டி கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த மாரிமுத்து, யாவரும் இருக்கிறார்கள் என்பதை மறந்து, “கிழவி கல்யாணம் வரைக்கும் தாங்குமா?” என்று கேட்கிறான். இது குரூரமாக பலருக்கு தோன்றலாம். ஆனால் அவன் நிலையில் இருந்து பார்த்தோமேயானால், நாம் அந்த வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

இந்த கல்யாணம் என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்தவன் யாராக இருக்கும்? அவனுக்கு இதற்குள் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று தெரிந்திருக்குமா? மனித வம்சத்தின் மீது கொலைவெறி கொண்ட ஒருவன், பழிவாங்கும் வகையில் கல்யாண முறையை உருவாக்கியிருப்பான்” என்று மாரிமுத்து யோசிக்கும் பொழுது, அது உண்மையென்றே படுகிறது.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பார்க்கவேண்டும். அவன் சொல்வது, கல்யாணத்தைப் பற்றியல்ல. கல்யாண முறையைப் பற்றி. ஆனால் கல்யாணமுறையை நாம் அப்படியேவா பின்பற்றிகொண்டு வருகிறோம். கண்டுபிடித்தவனுக்கு பிறகு அது எவ்வளவோ பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது. நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய சுயநலங்களையும் குரோதங்களையும் அதன் மேல் ஏற்றிவிட்டிருக்கிறோம். கல்யாணமுறை என்பது நாம் உருவாக்கியதுதானே?

விகடனில் இருந்து குமுதத்திற்கு மாறிவிட்டிருக்கும் ஞாநியின் ஓ பக்கங்களில் அவர் இந்த வாரம் சொன்னதே இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது:

முதலில் நம் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்னவென்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்லூரி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்கவேண்டும்

ஆனால் இது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ரஜினி தன் படத்தில் உபயோகிக்கும் (அவரே பின் பற்றாத) பஞ்ச் டயலாக்கைப் போல. ஆனால் இதை நடைமுறைப்படுத்தினால், நடைமுறைப்படுத்தும் அந்த கட்சிக்கு (அது எவ்வளவு பெரிய வெங்காய கட்சியாக இருக்கும் பட்சத்திலும்) டெபாசிட் கூட தேராது என்பது மட்டும் உண்மை. ஞாநியின் இந்த கட்டுரையை படித்த தலைவர்கள் கண்டிப்பாக ஒரு சிரிப்பு சிரித்திருப்பார்கள். விகடன்ல இருந்து தூக்கினதுக்கு இப்பல்ல காரணம் தெரியுது என்று கூட அவர்கள் யோசித்திருக்க கூடும்! இவ்வாறன புரட்சிகர கருத்துக்களை எவ்வளவு காலம் குமுதம் வெளியிடுவார்கள் என்பதும் தெரியவில்லை.

பேசாமல் ஜெயமோகன் போல ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தன் இஷ்ட்டத்துக்கு எதை வேணுமென்றாலும் ஞாநி எழுதிக்கொள்ளலாம். அப்படி எழுதும் பொழுது, அதை கண்டித்து தன் புத்தகத்தில் வெளியிட்டு விகடனோ குமுதமோ இலவச விளம்பரம் தேடித்தருவார்கள். ஜெயமோகனுக்கு அடிச்சது லக், அவரது வலைப்பூக்கு இலவசமாக விகடன் போஸ்டர் அடித்து விளம்பரம் தேடித்தந்திருக்கிறது. இதுநாள் வரை ஜெயமோகனை எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இப்பொழுது அவரது ப்ளாக்கும் கண்டிப்பாக எல்லாருக்கும் (விகடன் வாசகர்களுக்கு) தெரிந்திருக்கும். விகடனின் இலவச போஸ்டர் விளம்பரம், மேலும் சும்மா வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதை forward செய்ததன் மூலம் மேலும் விளம்பரம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த எம்ஜியார் காமெடி நான் சிறு பையனாக இருந்த பொழுது பாபு-கோபு என்கிற மிமிக்கிரி கோஷ்டியின் கேசட்டிலே கேட்டிருக்கிறேன். இது தமிழ்நாட்டிலிருக்கும் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஜெயமோகன் சொல்வதினால் என்ன கேடு வந்துவிட போகிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. விகடனுக்கும் விளம்பரம், நாங்கள் காலத்தோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் பாருங்கள், ஜெயமோகனின் வலைப்பூவை கூட நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது போன்று. இருவருக்கும் win-win.

எங்கேயோ அரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். கங்கணம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்த உலகத்தில் எதுவும் கண்டிப்பு இல்லை. இந்த புத்தகத்தை படிப்பதனால் ஏதும் கிடைக்கப்பெறும் என்றோ, படிக்காவிட்டால் ஏதும் கிடைக்காது என்றோ சொல்லமுடியாது. நாவல்கள் படிக்காதவர்கள் நிறைய பேர் நம்மை விட எல்லாம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பன் ஒருவன், எப்பொழுதும் டீவி பார்த்துக்கொண்டேயிருப்பான். நான் ஒருமுறை அவனிடம், ஏன்டா எப்பபார்த்தாலும் டீவி பார்த்துக்கிட்டே இருக்க, ஏதாவது படியேன் என்று சொல்வேன். அதற்கு அவன் சொல்வான், நீ படிக்கறதுனால சந்தோஷமா இருக்க, நான் டீவி பார்க்கறதுனால சந்தோஷமா இருக்கேன், மொத்ததில நாம் ரெண்டு பேறும் சந்தோஷமாத்தான் இருக்கோம்?

எனக்கு இந்த நாவல் முழுதுமே பிடித்திருந்தாலும், நான் படித்து முடித்தபின்னும் அசை போட்டுக்கொண்டிருக்கும் வரி: கனவுகள் முடிகளைப் போலே உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. நல்ல நாவல். படிப்பதினால் தவறில்லை. படியுங்கள். நான் இந்த நாவலை வெள்ளிக்கிழமை படித்து முடித்தேன், சனிக்கிழமை காலை எழுந்து சாப்பிட்டு விட்டு, டீவியை போட்டால், நீ வருவாய் என படம் ஓடியது. பார்த்திபன் நெடு நாட்களாக பெண் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பார். ஆச்சரியமாக, அந்தப் படத்தில் பார்த்திபன் கவுண்டர்.

***

3 thoughts on “கங்கணம், பின் கதைச் சுருக்கம்

  1. //விகடன்ல இருந்து தூக்கினதுக்கு இப்பல்ல காரணம் தெரியுது என்று கூட அவர்கள் யோசித்திருக்க கூடும்! 🙂

    Like

  2. குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s