(குறுநாவல்)
முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.
1
‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.
இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.
2
மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’
ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.
இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.
(தொடரும்)