புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் : அ முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார்ந்த ஒரு செய்தியும்

சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். கதையின் பெயரும் அது வெளிவந்த இதழும் சரியாக நினைவில் இல்லை. தீராநதி / காலச்சுவடு / உயிர்மை இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.அதைப் பற்றி பதிவிட வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். இன்று அந்த கதையில் வருவதைப் போன்ற ஒரு செய்தியை நாளிதழில் பார்த்தபொழுது சட்டென மீண்டும் நினைவுக்கு வந்தது அந்த கதை. என் வீட்டில் தேடியபொழுது அந்த கதை எங்கோ சென்று பதுங்கிக்கொண்டு விட்டது. நன்றாயிருக்கிற நம்மை (கதயை) பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கடித்து குதறி துப்பிவிடுவான் என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம்.

கதை நமது வாழ்க்கையையும் நம்மை வழி நடத்துகிற அரசையும் நையாண்டி செய்கிறது. இந்த மாதிரியான சிந்தனை சிலருக்கு தான் வாய்க்கும். அ.முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு இலங்கை அளித்திருக்கிற கொடை என்று யாரோ சொல்லியிருந்தார்கள். நான் அதை வழிமொழிகிறேன்.

கதையின் நாயகனுக்கு பில் கட்ட சொல்லி அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. பில்லை பிரித்து பார்த்த நாயகன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். கிரடிட் கார்டு பில்லா என்று நீங்கள் கேட்டால், இல்லை. அதெல்லாம் நமக்குத்தான் வரும். என்ன பில்? புவியீர்ப்பு விசைக்கான பில். என்னது?! புவியீர்ப்பு விசையை பயன்படுத்துவதற்கு அரசுக்கு பணம் கட்டவேண்டுமா? ஆமாம். கதையில் அரசு மக்கள் பயன்படுத்தும் புவியீர்ப்பு விசையை கணக்கில் கொண்டு மாதமாதம் ஒரு பில் அனுப்புகிறது. நாயகன் பணம் கட்ட மறுக்கிறார். அரசு நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின் கட்டணம் கட்டுகிறீர்கள். காற்றுக்கு கூட (சுத்தீகரிப்பு) கட்டணம் கட்டுகிறீகள். ஏன் தரைக்கு கூட கட்டணம் கட்டுகிறீர்கள். பிறகு புவிஈர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டுவதற்கு மட்டும் என்ன யோசனை என்று கேட்கிறது. அதற்கு நாயகன் : காற்றை சுத்தம் செய்கிறீர்கள். தண்ணீரை சுத்தம் செய்கிறீர்கள். அதனால் கட்டணம் கட்டுகிறோம். புவியீர்ப்பு விசைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அரசு: புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் தெரியுமா? அது இல்லாவிட்டால் பூமியே சுழலாது. அதனால் நீங்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று வாதிடுகிறது. நமது நாயகன் விடாமல்: தண்ணீருக்கு பில் கட்டவில்லையென்றால் தண்ணீரை நிறுத்திவிடுகிறீர்கள். மின் கட்டணம் கட்டவில்லையென்றால் மின்சாரத்தை தடைசெய்து விடுகிறீர்கள். புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டவில்லையென்றால் நீங்கள் என்ன செய்யமுடியும்? என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார். (என்னை மாதிரியே யோசிக்கிறாரு!) அதற்கு அந்த அரசு அதிகாரி, சிரித்து கொண்டே சொல்கிறார். இப்படித்தான் ஒரு அதிமேதாவி (நான் இல்லப்பா!) சொன்னான், அவனை என்ன செய்தோம் தெரியுமா? அவனை ஒரு சாட்டிலைட்டில் அமர்த்தி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டுவிட்டோம். அப்படியே அவன் பூமியை சுற்றி வந்து கொண்டிருந்தான். பிறகு அவன் புவியீர்ப்பு விசையின் இன்றியமையாமையை உணர்ந்த பிறகு அவனை கொண்டுவந்து பூமியில் விட்டோம் என்கிறார். ஐயா ஓசியில் பூமியை சுற்றி பார்க்கலாம் என்று நம் நாயகன் நப்பாசையில் இருக்க, அந்த அரசு அதிகாரி மேலும் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார்.

அவ்வாறு பூமியை சுற்றி வருவதற்கு அவருக்கான செலவு 1000000000 மில்லியன் டாலர் (எனக்கு தொகை ஞாபகமில்லை. இது போன்ற ஒரு பெரிய தொகை தான்) அவரால் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் கட்ட முடியாது. எனவே அவரது மகன்களிடம் (பேரன்கள் காலத்திலும்) இந்த தொகையை அவர்கள் எப்படியும் கட்டி முடிக்கவேண்டும் என்று எழுதி வாங்கியிருக்கிறது அரசு. இதை கேட்டு மிரண்டு போன நம் நாயகன் கண்டிப்பாக நாளைக்கே பணத்தை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே கட்டியும் விடுகிறார்.

அடுத்த மாதமும் புவியீர்ப்பு விசை பில் வருகிறது. எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. போன மாசத்தை விட இந்த மாசம் அதிகமாக இருக்கிறது பில். கடுப்பான நம் நாயகன் புவியீர்ப்பு மேற்பார்வை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்கிறார். தொலைபேசியில் வந்த அலுவலர், புகாரை விசாரித்து விட்டு, ஏன் கட்டணம் கூடியிருக்கிறதென்று சொல்லுகிறார்: உங்கள் மனைவி போன மாசத்தை விட இந்த மாசம் நிறைய வெயிட் (வெயிட் கூடினால், புவியீர்ப்பு விசை அதிகம் தேவைப்படும்!) போட்டிருக்கிறார். மேலும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் அதனால் தான் இந்த மாதம் உங்களுக்கு புவியீர்ப்பு கட்டணம் கூடியிருக்கிறது என்கிறார்.

***

நான் நாளிதழில் பார்த்த செய்தி: சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட செய்தி. சிங்கப்பூரில் ஒரு புது கார் வாங்கினீர்கள் என்றால் அதை பத்து வருடங்களுக்கு தான் உபயோகப்படுத்த முடியும். பத்து வருடங்களுக்கு மேல் என்றால் scrap தான். சிங்கப்பூர் அரசு, மக்களை கார் உபயோகப்படுத்த விடாமல், public transportஐ support செய்கிறது. அதற்காக இந்தமாதிரியான சட்டதிட்டங்கள். கொஞ்ச நாளைக்கு முன்ன, சிங்கப்பூரில ஒரு சர்வே நடந்தது. சிங்கப்பூர் மக்களின் தேசப்பற்று எப்படி இருக்கிறது என்று சும்மா ஒரு சர்வே நடத்தியது Strait Times. மக்களுக்கு தேசிய கீதத்தை விட நகரில் எங்கெங்கு ERP உள்ளது என்பது மனப்பாடமாக தெரிந்திருந்தது.

நேற்று (March 31 2008) The Straits Times (HOME) இல் வெளிவந்த செய்தி இது:
மக்களை கார் ஓட்டுவதிலிருந்து விடுவித்து எப்படி Public Transportஇல் போக வைக்கலாம் என்கிற Master Plan.

>> Planning a satellite-based system that charges drivers for the distance they travel.

புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
***

PS: blogger ஏன் இப்படி படுத்துது?! Help பண்றேன் பேர்வழி என்று என்னை கடுப்பேத்துகிறது. Blog post text boxல யார் தமிழ் டைப்பிங் கேட்டா?! சும்மா ஏதாவது ஒரு வார்த்தையை கலர் மாத்தலாம் என்று select செய்தாலே it hangs.

4 thoughts on “புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் : அ முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார்ந்த ஒரு செய்தியும்

  1. அன்பு நண்பருக்குதற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒன்றிரண்டு பதிவுகளை வாசிக்கத் துவங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் பதிவுகளாகவே வாசித்து கொண்டிருந்தேன். பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும், நுட்பமாக எடுத்துச் சொல்லும் விதமும். புனைகதைகளும் நன்றாக உள்ளன. உங்கள் எழுத்தின் சிறப்பு அதில் வெளிப்படும் இயல்பான நகைச்சுவை. இணையத்தில் மிக அபூர்வமாகவே இது போன்ற எழுத்தை வாசிக்க நேர்ந்திருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள்.எஸ். ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை

    Like

  2. எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு விதமான உந்துசக்தி. எழுதுவதற்கு நீங்கள் எனக்கு குரு. உங்கள் கதாவிலாசத்தை படித்த பிறகே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நிறைய கதைகளும் அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதையும், அதை மிகச்சரியாக அந்த நினைவுகளை தட்டியெழுப்பி ரசிக்கும் படியாக எழுதலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழ் எழுத்துலகையும் தமிழ் வாசகர்களையும் ஒரு படி மேலே எடுத்துச்சென்றவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. உங்களது நெடுங்குருதி எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. என் நினைவில் மட்டுமல்ல தமிழ் எழுத்துலகில் அந்த நாவலுக்கு என்றென்றும் மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர், தாவரங்களின் உரையாடல் என்கிற மிக நுட்பமான ஒரு சிறுகதையை படைத்த ஒரு இலக்கியவாதி, நான் மிகுந்த உயரத்தில் வைத்து மதிக்கும் ஒரு நபர், என் எழுத்துக்களை ரசித்து பாராட்டுவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் எழுதவேண்டும் (பிற பதிவர்கள்: இனி ரொம்ப மொக்க போடுவான் போலிருக்கே!) என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. நாங்கள் (பதிவுலக நண்பர்கள்) தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தபிறகு, சில வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு, கிடைக்கிற சில மணித்துளிகளில் டீவி பார்த்து, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும், தீராநதி போன்ற இலக்கிய பத்திரிக்கைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தினப்பத்திரிக்கைகளையும் பார்த்துவிட்டு, பிற பதிவுகளையும் பார்த்து, சினிமாவும் பார்த்து, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைவில் இருந்தும், இரவு மூன்று மணி வரை கண் முழித்து எழுதும் பதிவுகளை, உங்களைப் போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் தான், அர்த்தமுள்ளவைகளாக மாற்றுகின்றன. உங்கள் பாராட்டு எனக்கு மனநிறைவை அளிக்கிறது. நான் ரசிக்கும் படியாகத்தான் எழுதுகிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டியது. நான் எழுதிய பல பதிவுகளை நான் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு எடுத்து வாசித்து சீர் தூக்கி பார்த்தேன். Its like self-evaluation. Self Analysis. நன்றி. மிக்க நன்றி. மீண்டும் வருக. நிறைகளை மட்டுமில்லாது, குறைகளையும், முடிந்தால் உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரம் இருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.நெகிழ்ச்சியுடன்,MSV Muthu

    Like

Leave a comment