5
மணி 4:30. பள்ளி முடிய போகிறது. நசீர் மறு நாள் லீவு என்ற சந்தோசத்தில் வீட்டிற்கு போவதற்கு தயாராக இருந்தான். ஆசிரியர் பாடத்தை முடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். ‘பசங்களா. நாளைக்கு விநாயகர் சதுர்த்தி! நாளைக்கு மறுநாள் பிள்ளையார் ஊர்வலம் வர இருக்கிறது! கலவரம் ஏதும் வராமல் இருப்பது நல்லது!” நசீர் பிள்ளையாரின் வரலாற்றை முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய வாய்ப்புண்டு. ஜின்னா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அன்றைய நாள் முடிவுக்கு வந்தது.
‘நசீர்! நாளைக்கு லீவு தானே. வாப்பா கடையில் செத்த ஒத்தாசையா இருக்கவேண்டியது தானே. இந்தா டீ வெச்சிருக்கேன், குடிச்சிட்டு வாப்பாவுக்கும் கொண்டுபோய் கொடு”
கடையில் ஏறிக்கொண்டே நசீர் கேட்டான் “வாப்பா எங்கே?” “தொலுகைக்குப் போயிருக்கிறாரப்பா. உட்கார்’ ‘இந்தாங்க சிச்சா, டீ குடிங்க’ டீயை அங்கிருந்த ஒரு காலி டம்பளரில் வாங்கிக்கொண்டே, ‘நாளைக்கு லீவாப்பா’ என்று கேட்டுவைத்தார்.
வாப்பா சிறிது நேரம் கழித்து வந்தார். பெயிண்ட் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவர்களது கடை இரும்பு வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. பெயிண்ட் விற்பனையும் உண்டு.
‘பெயிண்டெல்லாம் எங்க போகுது தெரியுமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார், சிச்சா. தெரியும் என்பது போல தலையை ஆட்டினார் வாப்பா. ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. நசீர் எங்கே போகிறது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
‘நாளைக்கு ஊர்வலம் வருது, கடையை அடைச்சிரலாம்ன்னு சொல்றேன்” சிச்சா விடுவதாக தெரியவில்லை.
‘எதுக்கு அடைக்கனும்கிறேன்! அவுக ஒரு துலுக்கன் கடையின்னு பாத்தா பெயிண்ட் வாங்கிட்டு போறாக? நாம் வியாபார். ஊர்வலம் நடந்தா நடக்கட்டுங்கிறேன். நாம நோன்பு இருக்கிறோமில்ல. சப்பரம் கட்டரோமில்ல. ஊர்வலம் வருகிறோமில்ல. அது போலத்தான்ங்கிறேன்! நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறேன்!”
‘சலீம் பாய்!’ குரல் கேட்டுத் திரும்பினார் வாப்பா. ‘வாங்க பாலு நாயக்கரே! வாங்க! என்ன விசயம்! என்னை தேடிட்டு கடை வரைக்கும் வந்திருக்கீங்க! என்ன சேதி! நல்ல சேதிங்கறேன். டேய் நசீர். சித்தப்பாக்கு டீ, பன்னு வாங்கியாடா. உக்காரு பாலு!”
பாலு உட்கார்ந்தார். ‘என்ன சலீம் வீட்டுக்கும் கடைக்கும் எத்தன வாட்டி அலையுறது! உன்னப்பாக்கவே முடியல! என் பொண்ணுக்கு கல்யாணம்..அதான்…”
“கூப்பிட வந்தீராக்கும். நான் வரமாட்டேனா! கல்யாணத்தன்னைக்கு நான் தான் முதல் ஆள். வனஜா என் பொண்ணு பாலு! இன்னிக்கு கடையில கூட்டம் அதிகம். இல்லைன்னா இப்பவே வந்திருப்பேன்! பாத்திமாவ போகச்சொல்லியிருந்தேனே”
சீனி டீ குடித்து முடித்திருந்தார். “இன்னும் நிறைய இடம் போகணும். கொஞ்சப்பேருக்கு பத்திரிக்கை வைக்க விட்டுப்போயிடுச்சு. கால் தான் வலிக்குது”
“டேய் நசீர். சித்தப்பாகூட போய்ட்டு வா. சைக்கிள் எடுத்துக்கோடா.” சலீம் நசீரை உடன் அனுப்பிவைத்தார்.
படியிறங்கிய பாலு நின்று, “அண்ணி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். இரவு வர தாமதம் ஆகும் என்று உங்களிடம் சொல்லச்சொன்னார்கள். அப்ப வரேன் சலீம்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். நசீர் அங்கிருந்த சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு, பெடலை மிதிக்க ஆரம்பித்தான். சக்கரம் சுற்றத்தொடங்கியது.
வாப்பா சிச்சாவிடம் திரும்பினார். ‘பாரு! தாயா பிள்ளையா சகோதரனா பழகுறோம்! வேறு படுத்திப் பார்க்கக் கூடாதுங்கறேன்!’ என்று சிரித்தார்.
சிச்சாவும் சிரித்து வைத்தார்.
6
35 அடி கணபதி சிலை கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்து பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. விநாயகர் கையில் நிறைய லட்டுகளுடன் அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. நேரம் செல்ல செல்ல வருவார்கள் போல. ‘கணபதி என்றிட கவலை தீர்ந்திடும்…’ சீர்காழி கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அருகில் வயிறு ஒட்டிய நிலையில் பரிதாபமாக கையில் வெறும் தட்டுடன் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை விநாயகரின் கையில் இருந்த லட்டுகளின் மீதே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து விநாயகர் தான் சாப்பிட்டது போக, தனக்கும் சில லட்டுகள் கொடுப்பார் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
சிறுவர்கள் சிலர் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பக்தர்கள் சிலர் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். சில தொப்பித் தலைகளும் தெரிந்தன. பிள்ளையாருக்கு பாதுகாப்பு. வழிப்போக்கர்கள் சிலர் நின்று, நிமிர்ந்து பார்த்து, அதிசயித்து சென்றனர். அவர்களின் முகங்கள் இதை எப்படி தூக்கிக்கொண்டு போய் கரைப்பார்கள் என்கிற தீவிர சிந்தனையை உடையதாக இருந்தன.
கூட்டம் திடீரென்று சலசலத்தது. அவர்களுக்கெல்லாம் தலைவர் போல இருந்தவர் வேகவேகமாக வந்து கொண்டிருந்தார். கையில் சில மாலைகளும், பிரசாத தட்டுகளும் இருந்தன. உடன் புரோகிதர்கள் சிலரும் வந்தனர். பூஜை ஆரம்பம் ஆனது.
பூஜை நடப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் பிரசாதம் வழங்கப்படும் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது. சிறுமி ஆர்வமானாள். இப்பொழுது அவளைப் போலவே நிறைய சிறுவர்களும் சிறுமிகளும் கைகளில் தட்டுகளுடன் அங்கே குழிமியிருந்தனர்.
பக்தர்களிடத்திலிருந்து கணபதி கோஷம் வலுவாக எழுந்துகொண்டிருந்தது.
பூஜை முடிவுற்றது. பிரசாதம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சிறுமி முண்டியடித்துக்கொண்டு சென்றாள்.
அங்கே ஒரு அவசரக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கணபதியை கரைப்பது பற்றியும் அவர் ஊர்வலம் செல்லவிருக்கும் பாதை பற்றியும் தலைவர் மற்றவர்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்.
“இங்கிருந்து கிளம்பி அக்ரஹாரத் தெரு தாண்டி, குறுக்குத் தெரு வழியாக செல்கிறோம்’
‘அப்புறம்’
“கீழத்தெரு வழியாக மெயின் ரோட்டை அடைந்து, பெரிய ரத வீதி வருகிறோம்’
‘இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடுமே..அப்புறம்’
‘சுண்ணாம்பு காலவாசல் வழியாக மசூதி தெருவுக்குள் நுழைகிறோம்’
‘மசூதி தெருவா? வேண்டாம் படப்படித் தெருவழியாக போய்விடுவோம்’
‘படப்படி தெரு வழியே போக முடியாது தலைவரே. இந்த வருடம் சிலை கொஞ்சம் பெரியது. கரெண்டு கம்பிகளையெல்லாம் கழற்ற வேண்டும். படப்படித் தெருவை விட்டு வெளியேறும் போது இருக்கும் அந்த குறுகலான பாதையில் லாரி போகமுடியாது.’
அங்கே சலசலப்பு அதிகமானது. இளவட்டங்கள் கத்தத் தொடங்கியிருந்தனர். அதெப்படி? ஏன் பயப்படவேண்டும்? என்கிற கேள்விகள் எழுந்தன.
‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அங்கி சுற்றி இங்கு சுற்றி மசூதி தெருவுக்குள் நுழையும் நேரம் அவர்கள் தொலுகை முடிந்து திரும்பும் நேரம். ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாதே!’
‘அதெல்லாம் ஒன்றும் நடக்காது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றனர் இளவட்டங்கள்.
இளவட்டங்களின் ஆர்வத்தைப் பார்த்து தலைவர் மகிழ்ந்தாலும், கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. பிள்ளையார் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். “ஆமா பாலு எங்க? வருவாரா நாளைக்கு?” “வருவார் தலைவா. அவர் பொண்ணுக்கு கல்யாணம் நாளை மறுநாள். ஆனா கண்டிப்பா அன்னைக்கு சாயங்காலம் வந்திடுவேன்னு சொல்லியிருக்கார்”
(தொடரும்)