முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது மொத்தமாக கொடுக்கிறேன்.
1
மூனு நாள் லீவு
‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.
இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.
2
வேண்டுதலும் பயமும்
மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’
ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.
இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.
3
தீயும் பிள்ளையாரும்
எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.
பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!
பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!
சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
எழுந்து உட்கார்ந்தேன்.
4
அழும் பையன்
டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.
பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.
சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!
‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.
‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’
நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
‘என் பெயர் நசீர்’ என்றான்.
5
சலீமும் பாலுவும்
மணி 4:30. பள்ளி முடிய போகிறது. நசீர் மறு நாள் லீவு என்ற சந்தோசத்தில் வீட்டிற்கு போவதற்கு தயாராக இருந்தான். ஆசிரியர் பாடத்தை முடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். ‘பசங்களா. நாளைக்கு விநாயகர் சதுர்த்தி! நாளைக்கு மறுநாள் பிள்ளையார் ஊர்வலம் வர இருக்கிறது! கலவரம் ஏதும் வராமல் இருப்பது நல்லது!” நசீர் பிள்ளையாரின் வரலாற்றை முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய வாய்ப்புண்டு. ஜின்னா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அன்றைய நாள் முடிவுக்கு வந்தது.
‘நசீர்! நாளைக்கு லீவு தானே. வாப்பா கடையில் செத்த ஒத்தாசையா இருக்கவேண்டியது தானே. இந்தா டீ வெச்சிருக்கேன், குடிச்சிட்டு வாப்பாவுக்கும் கொண்டுபோய் கொடு”
கடையில் ஏறிக்கொண்டே நசீர் கேட்டான் “வாப்பா எங்கே?” “தொலுகைக்குப் போயிருக்கிறாரப்பா. உட்கார்’ ‘இந்தாங்க சிச்சா, டீ குடிங்க’ டீயை அங்கிருந்த ஒரு காலி டம்பளரில் வாங்கிக்கொண்டே, ‘நாளைக்கு லீவாப்பா’ என்று கேட்டுவைத்தார்.
வாப்பா சிறிது நேரம் கழித்து வந்தார். பெயிண்ட் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவர்களது கடை இரும்பு வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. பெயிண்ட் விற்பனையும் உண்டு.
‘பெயிண்டெல்லாம் எங்க போகுது தெரியுமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார், சிச்சா. தெரியும் என்பது போல தலையை ஆட்டினார் வாப்பா. ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. நசீர் எங்கே போகிறது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
‘நாளைக்கு ஊர்வலம் வருது, கடையை அடைச்சிரலாம்ன்னு சொல்றேன்” சிச்சா விடுவதாக தெரியவில்லை.
‘எதுக்கு அடைக்கனும்கிறேன்! அவுக ஒரு துலுக்கன் கடையின்னு பாத்தா பெயிண்ட் வாங்கிட்டு போறாக? நாம் வியாபார். ஊர்வலம் நடந்தா நடக்கட்டுங்கிறேன். நாம நோன்பு இருக்கிறோமில்ல. சப்பரம் கட்டரோமில்ல. ஊர்வலம் வருகிறோமில்ல. அது போலத்தான்ங்கிறேன்! நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறேன்!”
‘சலீம் பாய்!’ குரல் கேட்டுத் திரும்பினார் வாப்பா. ‘வாங்க பாலு நாயக்கரே! வாங்க! என்ன விசயம்! என்னை தேடிட்டு கடை வரைக்கும் வந்திருக்கீங்க! என்ன சேதி! நல்ல சேதிங்கறேன். டேய் நசீர். சித்தப்பாக்கு டீ, பன்னு வாங்கியாடா. உக்காரு பாலு!”
பாலு உட்கார்ந்தார். ‘என்ன சலீம் வீட்டுக்கும் கடைக்கும் எத்தன வாட்டி அலையுறது! உன்னப்பாக்கவே முடியல! என் பொண்ணுக்கு கல்யாணம்..அதான்…”
“கூப்பிட வந்தீராக்கும். நான் வரமாட்டேனா! கல்யாணத்தன்னைக்கு நான் தான் முதல் ஆள். வனஜா என் பொண்ணு பாலு! இன்னிக்கு கடையில கூட்டம் அதிகம். இல்லைன்னா இப்பவே வந்திருப்பேன்! பாத்திமாவ போகச்சொல்லியிருந்தேனே”
சீனி டீ குடித்து முடித்திருந்தார். “இன்னும் நிறைய இடம் போகணும். கொஞ்சப்பேருக்கு பத்திரிக்கை வைக்க விட்டுப்போயிடுச்சு. கால் தான் வலிக்குது”
“டேய் நசீர். சித்தப்பாகூட போய்ட்டு வா. சைக்கிள் எடுத்துக்கோடா.” சலீம் நசீரை உடன் அனுப்பிவைத்தார்.
படியிறங்கிய பாலு நின்று, “அண்ணி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். இரவு வர தாமதம் ஆகும் என்று உங்களிடம் சொல்லச்சொன்னார்கள். அப்ப வரேன் சலீம்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். நசீர் அங்கிருந்த சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு, பெடலை மிதிக்க ஆரம்பித்தான். சக்கரம் சுற்றத்தொடங்கியது.
வாப்பா சிச்சாவிடம் திரும்பினார். ‘பாரு! தாயா பிள்ளையா சகோதரனா பழகுறோம்! வேறு படுத்திப் பார்க்கக் கூடாதுங்கறேன்!’ என்று சிரித்தார்.
சிச்சாவும் சிரித்து வைத்தார்.
6
விநாயகர் சிலை
35 அடி கணபதி சிலை கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்து பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. விநாயகர் கையில் நிறைய லட்டுகளுடன் அமர்ந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. நேரம் செல்ல செல்ல வருவார்கள் போல. ‘கணபதி என்றிட கவலை தீர்ந்திடும்…’ சீர்காழி கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அருகில் வயிறு ஒட்டிய நிலையில் பரிதாபமாக கையில் வெறும் தட்டுடன் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை விநாயகரின் கையில் இருந்த லட்டுகளின் மீதே இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து விநாயகர் தான் சாப்பிட்டது போக, தனக்கும் சில லட்டுகள் கொடுப்பார் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
சிறுவர்கள் சிலர் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பக்தர்கள் சிலர் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். சில தொப்பித் தலைகளும் தெரிந்தன. பிள்ளையாருக்கு பாதுகாப்பு. வழிப்போக்கர்கள் சிலர் நின்று, நிமிர்ந்து பார்த்து, அதிசயித்து சென்றனர். அவர்களின் முகங்கள் இதை எப்படி தூக்கிக்கொண்டு போய் கரைப்பார்கள் என்கிற தீவிர சிந்தனையை உடையதாக இருந்தன.
கூட்டம் திடீரென்று சலசலத்தது. அவர்களுக்கெல்லாம் தலைவர் போல இருந்தவர் வேகவேகமாக வந்து கொண்டிருந்தார். கையில் சில மாலைகளும், பிரசாத தட்டுகளும் இருந்தன. உடன் புரோகிதர்கள் சிலரும் வந்தனர். பூஜை ஆரம்பம் ஆனது.
பூஜை நடப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் பிரசாதம் வழங்கப்படும் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது. சிறுமி ஆர்வமானாள். இப்பொழுது அவளைப் போலவே நிறைய சிறுவர்களும் சிறுமிகளும் கைகளில் தட்டுகளுடன் அங்கே குழிமியிருந்தனர்.
பக்தர்களிடத்திலிருந்து கணபதி கோஷம் வலுவாக எழுந்துகொண்டிருந்தது.
பூஜை முடிவுற்றது. பிரசாதம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சிறுமி முண்டியடித்துக்கொண்டு சென்றாள்.
அங்கே ஒரு அவசரக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கணபதியை கரைப்பது பற்றியும் அவர் ஊர்வலம் செல்லவிருக்கும் பாதை பற்றியும் தலைவர் மற்றவர்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருந்தார்.
“இங்கிருந்து கிளம்பி அக்ரஹாரத் தெரு தாண்டி, குறுக்குத் தெரு வழியாக செல்கிறோம்’
‘அப்புறம்’
“கீழத்தெரு வழியாக மெயின் ரோட்டை அடைந்து, பெரிய ரத வீதி வருகிறோம்’
‘இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடுமே..அப்புறம்’
‘சுண்ணாம்பு காலவாசல் வழியாக மசூதி தெருவுக்குள் நுழைகிறோம்’
‘மசூதி தெருவா? வேண்டாம் படப்படித் தெருவழியாக போய்விடுவோம்’
‘படப்படி தெரு வழியே போக முடியாது தலைவரே. இந்த வருடம் சிலை கொஞ்சம் பெரியது. கரெண்டு கம்பிகளையெல்லாம் கழற்ற வேண்டும். படப்படித் தெருவை விட்டு வெளியேறும் போது இருக்கும் அந்த குறுகலான பாதையில் லாரி போகமுடியாது.’
அங்கே சலசலப்பு அதிகமானது. இளவட்டங்கள் கத்தத் தொடங்கியிருந்தனர். அதெப்படி? ஏன் பயப்படவேண்டும்? என்கிற கேள்விகள் எழுந்தன.
‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அங்கி சுற்றி இங்கு சுற்றி மசூதி தெருவுக்குள் நுழையும் நேரம் அவர்கள் தொலுகை முடிந்து திரும்பும் நேரம். ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாதே!’
‘அதெல்லாம் ஒன்றும் நடக்காது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றனர் இளவட்டங்கள்.
இளவட்டங்களின் ஆர்வத்தைப் பார்த்து தலைவர் மகிழ்ந்தாலும், கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. பிள்ளையார் அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார். “ஆமா பாலு எங்க? வருவாரா நாளைக்கு?” “வருவார் தலைவா. அவர் பொண்ணுக்கு கல்யாணம் நாளை மறுநாள். ஆனா கண்டிப்பா அன்னைக்கு சாயங்காலம் வந்திடுவேன்னு சொல்லியிருக்கார்”
7
தூது செல்வதராடி?
“உருகிடும் போது தூது செல்வதாரடி” ஜானகி இனிய குரலில் உருகிக்கொண்டிருந்தார். சலீம் கல்யாண மண்டபத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அனைத்து வேலைகளையும் அவரே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது போல இருந்தது.
நசீர் வரவேற்பிடத்தில் நின்று கொண்டிருந்தான். பாத்திமா வனஜாவை மேலும் அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்.
சந்தோசத்தையெல்லாம் மீறி பாலு குடும்பத்தினரின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருப்பதை சலீம் கண்டு கொண்டார்.
எங்கே தேடினாலும்ன் பாலுவைக் காணவில்லை.
‘அண்ணி. பாலு எங்கே? இந்நேரத்தில் எங்கே போனார்?” என்று பாலுவின் மனைவியிடம் விசாரித்தார். ‘இங்கதான் இருந்தார் கொஞ்சம் நல்லா பாருங்களேன்’ ‘இல்லை. நாம் ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவரைக் காணவில்லை.மேலும் உங்கள் அனைவரது முகத்திலும் சந்தாசத்திற்கு பதில் கவலை தெரிகிறதே. என்ன விசயம் என்னிடம் சொல்லக்கூடாதா?’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா. அவர் விரைவில் வந்துவிடுவார்.’ அவரது தலை கவிழ்ந்தது. சலீமை பார்க்க அவரது விழிகள் மறுத்தன. சலீம் விடவில்லை.
‘இல்லை ஏதோ இருக்கிறது. சொல்லுங்கள். பாலு எங்கே?’ பாலுவின் மனைவி மெதுவாக பேச துடங்கினார். அவரது குரல் உடைந்திருந்தது. ‘கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள். நாங்கள் இரண்டையுமே செய்தோம். வனஜாவின் திருமணம் எதிர்பாராத ஒன்று. உங்களுக்கே அது தெரியும்’ தலை கவிழ்ந்தேயிருந்தது. அழுதுவிடுவார் போலிருந்தது.
‘அங்கே இங்கே புரட்டி ஒருவழியாக சமாளித்து விட்டோம். இன்னும் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இன்று மதியத்திற்குள் கொடுக்கவேண்டும். அவர் உங்களை மேலும் தொந்தரவு செய்ய கூடாது என்று கூறிவிட்டார்’ சலீம் அமைதியாக இருந்தார். ‘நேற்று இரவு ஒருவர் தருவதாக சொல்லியிருந்தார். ஆனால் கடைசியில் கையை விரித்துவிட்டார். என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை’ தலை நிமிர்ந்து சலீமை பார்த்தார். கண்கள் பளபளத்தது.
‘நான் ஒரு ரெண்டு மணி நேரத்தில் வருகிறேன். பாலு வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள்’ சலீம் விரைந்தார். சலீமும் பெரிய மிராசுதாரர் அல்ல. நேரே தனது மனைவியிடம் சென்றார். விவரத்தை சொன்னார். ‘உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்’ பாத்திமா மறுப்பேதும் சொல்லவில்லை. நசீர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.
8
இரவு நேரத்து டீ
பஸ் திருச்சியை தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் காற்று மெல்ல வருடிக்கொண்டிருந்தது. பஸ் மித வேகத்தில் மிதந்து கொண்டிருந்தது. டிரைவர் இசை பிரியர் போலத் தெரியுது. இளையராஜா கரைந்து உருகி பெட்ரோலுக்கு பதில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தார்.’கண்ணே பட்டுக்கவா’ என்று கமலஹாசன் அம்பிகாவை கொஞ்சி கொண்டிருந்தார்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. சூழ்நிலை இறுக்கம் காரணமாக என்னால் ரசிக்க முடியவில்லை.
‘திருச்சி இறங்குகிறவர்கள் இறங்கவும். வண்டி பத்து நிமிஷம் இங்கே நிற்கும்’
‘நசீர் உனக்கு ஏதும் வேண்டுமா. நான் டீ குடிக்க போறேன். வர்றியா?’
என்னை ஒரு முறை நிதானமாக பார்த்தவன். ‘சரி’ என்றான்.
‘ரெண்டு டீ போடுப்பா’ ‘ஏலக்கா இருக்கா’ பதிலில்லை. நசீரிடம் திரும்பினேன்.
‘உங்க வாப்பா முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன செய்தார்’
நசீர் மீண்டும் ஆரம்பித்தான்.
‘பாலு சிச்சா ரொம்ப நல்லவர். நான் லீவு நாட்களில் அவர் வீட்டில் தான் இருப்பேன். வனஜா அக்கா எனக்கு பாடம் சொல்லித்தருவார்கள். வாப்பாவுக்கும் பாலு சிச்சாவுக்கும் இருக்கும் நட்பு சாதாரண நட்பு அல்ல. அது இரத்த சம்பந்த பட்டது’
நான் புரியாமல் பார்த்தேன்.
‘இந்தா சார் டீ. ஏலக்கா இல்ல சார்’
தலையை ஆட்டிக்கொண்டே டீ யை வாங்கி நசீரிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு. நான் ஒன்றை நுகர்ந்து பார்த்தேன். டீயின் இளஞ்சூடு விரல்களில் பரவுவதை ரசித்துக்கொண்டே ஒரு சிப் பருகினேன். சுகர் கொஞ்சம் தூக்கல் தான். நசீர் தொடர்ந்தான்.
‘வாப்பாவுக்கும் சிச்சாவுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு’
‘வாப்பாவும் சிச்சாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். அப்பலேருந்தே அவர்களது நட்பும் பலப்பட்டு வந்திருக்கிறது’
‘வாப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் அல்லாஹ் எங்களை சோதித்தார்’
‘அவ்வப்போது வாப்பா வயிற்று வலி என்று கத்திக்கொண்டு கதறுவார். அம்மா மாத்திரை எடுத்துக்கொடுக்கும் அந்த கொஞ்ச நேரத்துக்குள் வலி சரியாகப் போய்விடும். ஒரு நாள் வலி அதிகமாகிவிட்டது. வாப்பா தரையில் புரண்டு புரண்டு கத்தினார். வாப்பா அழுது நான் பார்த்ததேயில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.’
‘வாப்பாவை சோதித்த டாக்டர் அம்மாவை திட்டியே விட்டார். இவ்வளவு நாள் ஏன் சிகிச்சை எடுக்கவில்லை. இப்பொழுது நிலமை ரொம்ப மோசமாகிவிட்டது என்றார்’
நான் டீ கிளாசை வைத்தேன். அவன் டீ அப்படியே இருந்தது. ‘நசீர் டீ குடிப்பா, ஆறிடப்போகுது’
நசீர் டீ குடித்துக்கொண்டே தொடர்ந்தான்.
‘கிட்னியில் கற்கள் இருக்கிறது என்றும். நிலமை ரொம்பவும் முற்றிவிட்டது என்றும் இப்பொழுது வேறு வழியில்லை. கிட்னி யாரேனும் டொனேட் செய்யவேண்டும் என்றார் டாக்டர்’ ‘தொடர்ந்து அவர் அதற்கு லட்சக்கணக்கில் செலவும் செய்யவேண்டும் என்றார் அவர்’
‘எங்கள் உறவுக்காரர்களை கேட்டோம். அவர்கள் வழக்கம் போல கைவிரித்துவிட்டார்கள்.’ என் சொந்த சிச்சாவுக்கும் வாப்பாவுக்கும் ஒரே ரத்த குரூப் தான் என்றாலும், சிச்சா மறுத்துவிட்டார். யார் தான் தன் ஒரு கிட்னியை கொடுக்க உடனே மனபூர்வமாக சம்மதிப்பார்கள்?’
‘எப்படியோ விசயம் தெரிந்து பாலு சிச்சா ஆஸ்பத்திரிக்கு வந்தார். வாப்பாவின் நிலமையை பார்த்ததும் அவருக்கு அழுகையே வந்துவிட்டது. என்னால் முடிந்த வரைக்கும் பணம் திரட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பாலு சிச்சா ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல..’
யாரோ என்னை தொட்டு கூப்பிடுவது போலத்தோன்றவே..திரும்பினேன். எங்கள் பஸ் கண்டக்டர்.
‘யோவ்..உங்க தாத்தா விட்டு பஸ்ஸா?எவ்வளவு நேரம்யா ஆகுறது? ஒத்த டீய வாங்கி ஒம்பது மணி நேரமா குடிக்கிற? உனக்காக எவ்வளவு நேரமய்யா வெயிட் பண்றது?’
‘ம்ம்..நீங்க வர்ற வரைக்கு நாங்க வெயிட் பண்றோமில்ல?’ என்றேன்
‘உன்னையெல்லாம் அப்படியே விட்டுட்டு போயிருக்கனும்யா.வா..வந்து சேரு’
கண்டக்டர் நகர்ந்தார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.
டிசம்பர் குளிரிலும் பஸ் சூடாக இருந்தது. உட்கார்ந்திருந்த பயணிகள் எங்களை எரித்து விடுவதைப் போல பார்த்தனர். ‘வந்துட்டாருய்யா முதலமைச்சரு’ கமெண்ட் வேறு. நாங்கள் அமைதியாக போய் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். பயணம் தொடர்ந்தது. லைட்கள் ஆப் செய்யப்பட்டு இருள் எங்களை சூழ்ந்து கொண்டது.
9
உயிர்காப்பான் தோழன்
பாலு சிச்சா மிகவும் சோர்வாய் வந்து அமர்ந்தார். அவரது இயலாமை அவரது சோர்வில் தெரிந்தது. தன்னால் தன் நண்பனை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்திற்கு இறுக்கத்தை கொடுத்திருந்தது. வாப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர் கிளம்பும் வரையிலும் ஏதும் பேசவில்லை. நானும் பாலு சிச்சாவும் டாக்டரை பார்க்கப்போனோம். டாக்டர் ‘இன்னும் ஓரிரு நாட்களில் ஆபரேஷன் செய்யவில்லை என்றால்..’ நசீர் அழுக ஆரம்பித்திருந்தான். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தான். டாக்டர் திடீரென்று உங்கள் ரத்த குரூப் என்ன என்றார். பாலு சிச்சா A+ என்றார். ‘நீங்கள் கிட்னி கொடுக்க தயாரா’ என்றார் டாக்டர். பாலு சிச்சாவின் முகம் மலர்ந்தது. ‘தயார்’ என்றார் பாலு சிச்சா. அம்மா டப்பென்று பாலுசிச்சாவின் காலில் விழுந்து விட்டார்.
எங்கள் உறவினர்களும் மறுத்த விசயத்தை எங்கள் பாலு சிச்சா செய்து காட்டினார். வாப்பா பிழைத்துக்கொண்டார். எங்கெங்கொ பிரட்டி வைத்திருந்த கொஞ்ச காசையும் டாக்டரிடம் கொடுப்பதற்கு சென்ற பொழுது, அவர் மறுத்துவிட்டார். ‘நீங்கள் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். நண்பனை காப்பாற்ற கிட்னியும் ரத்தமும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் தியாகத்தில் நானும் பங்கு பெற்றுக்கொள்கிறேன். எனக்கு பீஸ் ஏதுவும் வேண்டாம்’ என்றார். பாலு சிச்சா மிகவும் வற்புறுத்தியதால் மிகக் குறைந்த அளவு பணத்தை மட்டும் அவர் பெற்றுக்கொண்டார்.
‘தன் உயிரைக் காப்பாற்றிய நண்பனுக்கு தன் கடையை அடகு வைத்து முப்பதாயிரம் ரூபாய் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை எங்கள் வாப்பாவுக்கு.’
‘சரிதான் என்றேன்’
நசீர் தொடர்ந்தான். ‘ஒரு வழியாக வனஜா அக்காவின் திருமணம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியர். சென்னையில் தான் வேலை செய்கிறார்’
‘பெயர் தெரியுமா’ என்றேன்.
ரொம்ப நேரம் யோசித்தவன், கடைசியில் தெரியாது என்று சொல்லிவிட்டான்.
பஸ் நின்றது. லைட்கள் போடப்பட்டன. நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இப்பொழுது முன்பிருந்ததைப் போல பயமில்லை என்றாலும் ஆர்வத்தோடு பார்த்தேன்.
நசீரை விலக்கி விட்டு ஜன்னலை எட்டி யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹ¥ம் யாருமில்லை. ஒருவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வேகமாக ஓடி புதருக்கு அருகில் நின்றான். கண்டக்டர் கத்த தொடங்கியிருந்தார்.
‘திருச்சியில் பஸ் நின்ன போது என்னய்யா பண்ண? சும்மா தூங்கறது அப்புறம் சின்ன பையன் மாதிரி பஸ்ஸ நிப்பாட்ட சொல்லிட்டு போறது.’
‘அவசரமாக இருந்தால் என்ன செய்வது? பஸ்ஸ நிப்பாட்டிட்டு வெளில போறானெ அத நினைச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க கண்டக்டர் சார்’ ஒருவர் கமெண்ட் அடிக்க கண்டக்டர் கப்சிப் ஆனார். எனக்கு சிரிப்பு வந்தது. போனவர் திரும்பிவந்தார். முகத்தில் அரைக்கிலோ அசடு வழிந்து கொண்டிருந்தது.
லைட்கள் அணைக்கப்பட்டன. பஸ் நகர்ந்த்து.
10
ஊர்வலம் கிளம்பியது
‘வானம் விடியவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி’ பாட்டு சூழ்நிலையை மேலும் அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தது. இளசுகள் செமர்த்தியாக ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் ‘இந்தபடை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா!’ கமெண்ட் வேறு. தலைவர் குஷியாக இருந்தார். பிள்ளையாரை ஊர்வலம் எடுத்துச்செல்லும் லாரி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது ஒரு லாரி என்பதே அருகில் சென்று பூக்களை விலக்கினால் தான் தெரியும். சூடம் கொளுத்தப்பட்டது. பூசனி உடைக்கப்பட்டது. சிதறு காய்கள் நாலா பக்கமும் சிதறின. சிறுவர்களும் சிறுமிகளும் உடைந்த தேங்காய் சில் களை எடுக்க இங்குமங்கும் ஓடினர்.
‘கிளம்பலாமாப்பா…’ தலைவர் கேட்டார்.
குலவைச் சத்தமும் பாட்டு சத்தமும் பட்டாசு வெடிகளும் காதை பிளக்க கணபதியை தூக்க வந்தனர் இளவட்டங்கள். பாலுவும் கூட்டத்தோடு இணைந்து கொண்டார். இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க பாலுவும் மற்றவர்களும் சேர்ந்து வேல் வேல் வெற்றிவேல் என்று கத்தத் தொடங்கினர். தலைவர் பாலுவைப் பார்த்து சிரித்தார். பிள்ளையாரின் அடிப்பாகத்தில் இரும்புக் கம்பிகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. அந்த கம்பிகளை பிடித்துதான் பிள்ளையாரை தூக்கவேண்டும். பிள்ளையார் ஆனந்தமாக சிரித்துக்கொண்டிருந்தார். உற்சாக வெள்ளத்தில் மக்கள் தூக்கினர். மிகுந்த சிரமத்துக்கு பின்னும் தூக்கமுடியவில்லை. பாலு இன்னும் சிலரை தூக்குவதற்கு அழைத்துக்கொண்டிருந்தார். தலைவரின் முகம் கவலைக்குள்ளானது. மேலும் சிலர் இணைந்து கொண்டனர். கூட்டம் முழுவதும் தனது ஒட்டு மொத்த பலத்தையும் சேர்த்து தூக்க பிள்ளையார் வளைந்து கொடுத்தார். சிலை நகர்ந்தது. மிகுந்த சிரமத்துக்கு பிறகு, சிலை வண்டியை சென்றடைந்தது. பாலுவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இளைஞர்கள் சோர்ந்து விட்டனர். இருந்தாலும் உற்சாகத்துடன் ஊர்வலம் தொடங்கியது. தொப்பி தலைகள் தென்பட்டன.
சிலை அக்ரஹாரத்தெருவை அடைந்தது. ஆங்காங்கே தேங்காய் “கண்கள்” வைக்கப்பட்டிருந்தன. பிள்ளையார் அங்கெல்லாம் நிறுத்தப்பட்டார். தேங்காய் உடைக்கப்பட்டது. மாலைகள் போடப்பட்டன.
ஊர்வலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பாலு வட்டாரம் மிகுந்த உற்சாகமாய இருந்தது. பாலு இப்பொழுது வண்டியின் மேல் இருந்தார். தலைவரும் பாலு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒருவன் வேகமாய் ஓடிவந்து லாரியில் தாவி ஏறினான். தலைவரின் காதருகில் சென்று கிசுகிசுத்தான்.
‘நம்ம மாரியப்பன் இருக்கான்ல…’ என்றான்.
‘மாரியப்பன்..எந்த மாரியப்பன்..’
‘அதான் தலைவரே..உங்க எதிரி..நம்ம கடைக்கு..’
‘ஆமா அதுக்கு என்ன..’
‘அவன் பெரியரத வீதியில் தானே ஒரு ‘கண்’ வைத்துக்கொண்டு அங்கே பிள்ளையார் நிற்க வேண்டும் என்கிறானாம்’
‘அதெப்படி. அவன் அவன் இஷ்டப்படி சிலை நிற்குமா?’
‘இல்ல தலைவரே. நிக்கலைன்னா அவன் பிரச்சனையைக் கிளப்ப தயாராக ஆட்களை வைத்துக்கொண்டிருக்கிறானாம்’
‘அப்படியா. அதனால் என்ன..சிலை எப்பொழுதும் நிற்கும் இடங்களில் தான் நிற்கும். புதிதாக வைக்கப்படப்போகும் ‘கண்கள்’ நேற்றே நமக்கு தெரிவிக்கப்பட்டு விட்டன. சிலை சரியான நேரத்தில் கரைக்கப்படவேண்டும். புரியுதா’
அவன் சென்று விட்டான்.
தலைவரின் முகம் இனம்புரியாத ஒரு உணர்வில் இருந்தது.
பாலு எவ்வளவு முயன்றும் அவருக்கு பெரியரத வீதி என்பதை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை பாலு குழப்பத்தில் இருந்தாலும் ஏதோ நடக்கப்போவதை அவர் உள்ளம் சொன்னது.
11
மாரியப்பன் என்ன செய்தான்?
வாப்பாவும் நசீரும் தொலுகைக்கு தயாரானார்கள். வீட்டை விட்டு இறங்கி மசூதி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினர். வாப்பாவுக்கு என்னவோ போல் தோன்றவே, ‘நசீர் இருடா! நான் போய் வீட்டில் தண்ணீர் குடித்து வருகிறேன்’ என்று சொல்லி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ‘வாப்பா இரு நானும் வரேன்’
வீட்டை அடைந்தார்கள். ‘பாத்திமா..பாத்திமா’ ‘என்னங்க என்ன ஆச்சு’ ‘கொஞ்சம் தண்ணீர் கொடுமா. நெஞ்சை என்னவோ போல் செய்கிறது. தண்ணீர் குடித்துவிட்டு எழுந்திருத்தார். ‘செத்த உக்காந்திட்டு போங்க. நசீர் ·பேனைப் போடு’ என்றார் பாத்திமா.
கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு மசூதிக்கு கிளம்பினர்.
*
சிலை குறுக்குத்தெருவைத் தாண்டி பெரியரத வீதியில், மாரியப்பன் கண்ணுக்கு முந்தைய கண்ணில் சிலை நின்று கொண்டிருந்தது. கிளம்பிய பொழுது இருந்த கூட்டத்தை விட இப்பொழுது கூட்டம் குறைந்திருந்தது போல இருந்தது. தொண்டர்களும் உற்சாகம் குறைந்து காணப்பட்டனர். தலைவர் குழப்பத்தில் இருந்தார். தூரத்தில் மாரியப்பன் தெரிந்தான். தலைவரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. பாலு உற்சாகம் குறையாமல் இருந்தார். தேங்காய் உடைப்பு முடிந்து வண்டி கிளம்பியது.
ஏனோ டிரைவர் புதிய வேகத்துடன் வண்டியை ஓட்டினர். தலைவரின் ஆட்கள் புது உற்சாகம் அடைந்திருந்தனர். கூட்டம் சலசலத்தது. மாரியப்பன் கண்ணுக்கு அருகில் வந்ததும் தலைவர் என்ன நினைத்தாரோ..
‘நிறுத்துங்கள் நிறுத்துங்கள்’ என்று கத்தினார். அவரின் சத்தம் மற்ற சந்தங்களில் அடிபட்டு போனது. வண்டி நிற்கவில்லை. தலைவர் மறுபடியும் கத்தினார். பாலுவும் சேர்ந்து கத்தவே, டிரைவரின் காதுகளுக்கு கொஞ்சம் நேரம் கழித்துத்தான் சென்றடைந்தது. வண்டி மாரியப்பன் ‘கண்’னைத் தாண்டி நின்றது.
மாரியப்பனின் கோஷ்டி கோபம் கொண்டது. ‘பாத்தீங்களா தலைவா. வேணும்னே எங்க கொண்டு போய் நிப்பாட்டி இருக்காங்கன்னு. இவிங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது’ என்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்தனர்.
பிள்ளையார் சிரித்தவாறு இருந்தார். கூட்டம் சலசலத்தது. பாலு பதற்றமானார். தலைவரின் முகம் வெளிரிப்போனது.
மாரியப்பன், ‘அதான் நிப்பாட்டிட்டாங்கல்ல, கடவுளைத் தேடி நாமதான் போகணும். தேங்காய் மாலையெல்லாம் எடுங்க..நாம் அங்க போவோம். மற்றதெல்லாம் உள்ள வையுங்க’
மாரியப்பன் தேங்காய் உடைத்து நன்றாக வேண்டிக்கொண்டார். தலைவர் மாரியப்பனை பார்த்து சிரித்தார். மாரியப்பனும் பதிலுக்கு சிரித்து வைத்தார். பாலு உற்சாகமானார்.
12
தீயும் உதவியும்
தலைவரின் கவனம் முழுவது பிள்ளையாரை தடையின்றி கரைக்கவேண்டும் என்பதிலே இருந்தது. பெரிய ரத வீதியை கடந்து கொண்டிருந்தது சிலை. சுண்ணாம்பு காளவாசல் தொடங்கி மசூதி தெரு முடியும் வரை முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி.
மசூதி தெரு முடிந்து விட்டால் ஆற்றை அடைந்து விடலாம். மசூதி தெரு கொஞ்சம் பெரிய தெரு. ஊரை விட்டு வெளியே இருக்கும் தெரு. ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. ஆற்றுக்கு அருகில் என்பதால் வீடுகள் அதிகமாக இருக்காது.
தலைவர் கூட்டத்தை திரும்பிப் பார்த்தார். கூட்டம் முன்பை விட கனிசமாக குறைந்திருந்தது. தலைவர் அதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்துக்கொண்டார். கூட்டம் சோர்வாக இருந்தது. ஆற்றை தொட்டுவிட்டால் பிள்ளையாரை கரைப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதுவரை சண்டை சச்சரவு இன்றி கடந்து வந்துவிட்டோம் பிள்ளையாரப்பா மிச்ச பயணத்தையும் நன்றாக முடித்து வையப்பா’ தலைவர் வேண்டிக்கொண்டார்.
பாலு எதையும் கண்டுகொள்ளவில்லை. பெண்ணின் திருமணம் நன்றாக நடந்து முடிந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம்.
ஏதோ தீய்ந்த நெடி காற்றில் படர்ந்திருந்ததை அனைவரும் கண்டுகொண்டனர். பாலுவுக்கும் அந்த நெடி அடிக்கவே பாலு தலைவரைப் பார்த்தார்.
வண்டி சுண்ணாம்பு காளவாசலுக்குள் நுழைந்தது. மக்களின் கூக்குரல்கள் ஓங்காரமாய் கேட்டது. தூரத்தில் புகை மண்டலம் தெரிந்தது. பாலுவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது.
காளவாசலில் குடிசை வீடுகள் அதிகம். எப்படியோ தீ பற்றிக்கொண்டது. மக்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ‘அல்லாஹ் நம்மை சோதிக்கிறாரப்பா’ என்று கதறிக்கொண்டே ஒரு முதியவர் ஒரு பெரிய வாளி நிறைய தண்ணீரை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்.
தொலுகை நேரம் என்பதால் ஆண்கள் அங்கே அதிகமாக இல்லை. பெண்கள் குடங்களை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் அல்லாஹ் அல்லாஹ் என்ற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எழுந்து ஓட சக்தி இல்லாத ஒரு முதியவர், தொலுக ஆரம்பித்தார்.
மாரியப்பன் லாரியில் தாவி ஏறினான். தலைவரிடம் ‘நீங்கள் பயணத்தை நிறுத்த வேண்டாம். கொஞ்சம் இளைஞர்களை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். பிற இளைஞர்களை நானும் பாலுவும் கூட்டிக்கொண்டு தீயை அணைக்க முற்படுகிறோம். பிள்ளையார் சரியான நேரத்தில் கரைக்கப்படவேண்டும் . நீங்கள் பயணத்தை தொடருங்கள்’ சொல்லிய வேகத்தில் லாரியை விட்டு இறங்கி மாரியப்பனும் பாலுவும் ஓடத்தொடங்கினர். இளைஞர்கள் சிலர் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.
தலைவர் பெருமிதத்துடன் பிள்ளையாரை பார்த்தார். பிள்ளையார் இன்னும் அதே சிரிப்புடன் காணப்பட்டார்.
அங்கே ஒரு மதநல்லினக்கம் பெருத்த கூக்குரல்களுக்கிடையே மிக மவுனமாய் நடந்தேரிக்கொண்டிருந்தது.
ஊர்வலம் முன்பை விட வேகமாக செல்லத் தொடங்கியது.
13
சோதனை தீர்ந்தது
சிலை காளவாசல் தெருவை கடந்தது. காளவாசல் தெருவுக்கும் மசூதி தெருவுக்கும் இடையே குறுகிய பாதை ஒன்று இருக்கிறது. அதை கடந்து தான் லாரி செல்லவேண்டும். மசூதி தெரு காலியாக இருந்தது. தெருவில் அனைவரும் தீயை அணைப்பதில் மும்முரமாக இருந்ததால், தெரு வெறிச்சோடிக் கிடந்தது.
‘டிரைவர் அந்த இடத்துல கொஞ்சம் பார்த்து மெதுவா போப்பா’ என்று சொன்ன மறுவிநாடி லாரி ஒரு பெருத்த சத்தம் கொடுத்துவிட்டு நின்றது..
‘மெதுவா போன்னு சொன்னா..மொத்தமா நிப்பாட்டிபுட்டானே..’ என்று சிரித்துக்கொண்டார் தலைவர்.
டிரைவர் வண்டியை ஆன் செய்தார். சில உறுமல்களுக்கு பிறகு இஞ்சின் தானே அணைந்தது. தலைவர் எட்டிப் பார்த்தார்.
மறுபடியும் உறுமல்கள் மறுபடியும் அமைதி. தலைவர் கலவரமானார். பிள்ளையாரை வேண்டிக்கொண்டார்.
மறுபடியும் உறுமல். இந்த முறை உறுமல் நீண்டு கொண்டே சென்றது. பின் லாரி பெரிய மலைப்பாம்பை போல சத்தம் கொடுத்துவிட்டு மொத்தமாய் உட்கார்ந்தது.
பிள்ளையார் ஏனோ இன்று தீர்மானமாய் இருந்தார். தலைவர் மணியை பார்த்தார். இன்னும் இருபது நிமிடத்திற்குள் ஆற்றங்கரையை எட்டவேண்டும்.
டிரைவர் இறங்கி வந்தார், ‘என்னன்னு தெரியல தலைவரே..பாக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றார். கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் டிரைவர் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்ய முயன்றார். இந்த முறை ஸ்டார்ட்டே ஆகவில்லை போல. உறுமலும் இல்லை..மலைப்பாம்பு மூச்சும் இல்லை.
தலைவர் வானத்தை பார்த்தார். பிறகு பிள்ளையாரைப் பார்த்தார். பிறகு கூட்டத்தை பார்த்தார். தலைவர் உற்சாகத்தை குறைக்க விரும்பவில்லை. ‘ஆற்றங்கரை அருகில் தான் இருக்கிறது. தூக்கி கொண்டு சென்று விடலாம்’ என்றார். இளவட்டங்கள் சற்று யோசித்தன.
தொலுகை முடிந்து ஆட்கள் சிலர் மசூதியை விட்டு வெளியே வந்தனர். தீ பிடித்த செய்தி தெரிந்திருக்க வேண்டும் அவர்களது நடையில் அவசரம் தெரிந்தது.
இளவட்டங்கள் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு சிலையை தூக்க முயன்றனர். பிள்ளையார் அசைந்து கொடுக்கவில்லை. நிறைய லட்டுகள் சாப்பிட்டிருப்பார் போல. மிகவும் கனமாக இருந்தார். அடுத்தமுறை சுண்டலை கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று முன்னால் தூக்கிக்கொண்டிருந்தவர் சொன்னார். சிரிப்பொலி எழுந்தது. மிகுந்த சிரமத்துக்கு பிறகு பிள்ளையாரை லாரியிலிருந்து இறக்கி மசூதி தெருவுக்குள் நடக்க ஆரம்பித்தனர். மிகவும் கனமாக இருந்தது. இப்படி நடந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த தலைவர் வேகமாக நடங்கள் என்று கட்டளை இட்டார். கூட்டம் தடுமாறியது.
மேலும் பலர் மசூதியிலிருந்து வெளியேறினர். சிலையைக் கண்டு ஒதுங்கி நின்றனர். சிலை தள்ளாடியது. மக்களும் தான். அவர்களால் தூக்க முடியவில்லை. யாரேனும் உதவிக்கு வந்தால் தேவலாம் போல தோன்றியது அவர்களுக்கு. ஆனால் பலர் தீயை அணைக்க சென்று விட்ட பிறகு, ஆட்கள் அவ்வளவாக இல்லை.
தொலுகை முடித்த அமைதி அவர்களின் முகத்தில் தெரிந்தது. சிலை தள்ளாடுவதையும் மக்களையும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் தீ வேறு எறிகிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தனர். சிலர் கிடைத்த இடைவெளியில் தீயை அணைக்க ஓடினர்.
சிலை மேலும் தள்ளாடியது. எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழலாம் என்ற நிலையில் இருந்தது. தலைவர் கலங்கினார். சிலையை தூக்கிக்கொண்டிருந்த ஒருவன் கனம் தாங்கமாட்டாமல் கீழே விழுந்தான். விழுந்ததில் மேலும் சிலை தடுமாற்றம் கண்டது. ‘பிள்ளையாரப்பா..வேலா’ என்ற கோஷங்கள் காதை பிளந்தன.
சலீம் பாயும் நசீரும் மசூதியை விட்டு வெளியேறினர். சிலை தடுமாறிக்கொண்டிருந்ததை கவனித்த சலீம் பதற்றமானார். ஓடிச் சென்று சிலைக்கு தோள் கொடுத்தார். நசீரும் ஓடினான். அதுவரை தயங்கிக்கொண்டிருந்த மற்றவர்களும் சலீம்மின் செயல் பார்த்து அவர்களும் சிலையை தாங்கிப்பிடித்தனர்.
தலைவர் மகிழ்ச்சியில் துள்ளினர். இளைஞர்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். பிள்ளையார் கம்பீரமாக நிமிர்ந்து நின்றார். பிள்ளையாரின் முகத்தில் இப்பொழுது சிரிப்பு மாறி ஒரு வகையான பெருமிதம் குடி கொண்டிருந்தது.
சிலை வேகமாக ஆற்றை நோக்கி முன்னேறியது.
14
பிரிவு
என்னடா இது எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது இவன் இவ்வளவு எளிதாக சொல்கிறான்? எனக்கு பிரமிப்பாக இருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்புண்டா? ஆனால் இரு விசயம் கேள்விப்பட்டதுண்டு. என் தாத்தா ஒரு முறை மிக எளிதான கேள்வி ஒன்றைக் கேட்டார். ‘பூமி ஏன் சுற்றுகிறது தெரியுமா?’ எனக்கு சிரிப்பு தான் வந்தது. ‘என்ன தாத்தா உன் காலம் என்று நினைப்பா. நான் இதை எனது ஆறாம் வகுப்பிலேயே படித்துவிட்டேனாக்கும்’ என்றேன் அவர் விடவில்லை. ‘பரவாயில்லை சொல்லப்பா’ என்றார். ‘பூமி சுற்றுவது ஈர்ப்பு விசையால் தான்’ என்று சொல்லிவிட்டு கலிலியோ போல ஒரு பார்வை பார்த்தேன். கலிலியோவை நான் பார்த்ததில்லை என்பது வேறு விசயம்.
தாத்தா சிரித்து விட்டு தொடர்ந்தார். பூமி உருவான காலம் தொட்டு பூமியில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பூகோள இராசாயன மாற்றங்கள் பலவும் தோன்றிவிட்டன மனித குலத்தை வேறோடு அழிக்கும் தீய சக்திகளும் தோன்றிவிட்டன. பிறகும் இன்று வரை இந்த பூமி அழியாமல் சுற்றிக்கொண்டேயிருப்பது இந்த உலகில் தன் நலன் பாராட்டாமல் பிறர் நலம் பேணும் நல்லவர்கள் சிலர் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான்’ என்று தன் லெக்சரை முடித்துக்கொண்டார் என் தாத்தா.
‘மாட்டுத்தாவணி இறங்குகிறவர்கள் இறங்கவும்’ கண்டக்டரின் கனமான குரல் காதில் விழுந்தது. ‘அட அதற்குள்ளாக மாட்டுத்தாவணி வந்துவிட்டதா’ மணி பார்த்தேன். காலை 5:45. இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தது அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. கண்கள் எரிய ஆரம்பித்தன.
ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு நிம்மதியும் சந்தோஷமும் பெருமையும் என் உள்ளத்தில் தோன்றியது. வீட்டிற்கு போகப் போகிறோம் என்கிற சந்தோஷமும் உடன் சேர்ந்து கொண்டது. இறங்க ஆயத்தமானேன். நசீரும் தயாராகிக்கொண்டிருந்தான். ‘நீயும் இங்கே தான் இறங்க வேண்டுமா’ என்றேன் தலையை மட்டும் ஆட்டினான். இறங்கும் பொழுது கண்டக்டர் என்னைப்பார்த்து சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டேன்.
‘சார் ஆட்டோ, ஆட்டோ சார்’
‘வேண்டாம்ப்பா. ஆட்டோ வேணாம்’
‘எங்க சார் போகணும்’
‘இல்ல ஆட்டோ வேணாம்’
‘எங்க போகணும் அதச் சொல்லு சார்’
‘ஆட்டோ வேண்டாமின்னு சொல்றேன்ல’ சுள்ளென்று விழுந்தேன்.
‘ஏன் சார் கோபப்படுற. பஸ் இன்னும் அரைமணி கழிச்சு தான். ஆட்டோல போணா நீயும் வேகமா போயிடுவ எனக்கும் சவாரி கிடச்ச மாதிரி இருக்குமேன்னு கேட்டா இப்படி கோபப்படுறியே’
நசீர் எனக்கும் முன்னால் சென்று கொண்டிருந்தான். நான் வேகமாக நடை போட்டேன்.
இன்னொரு ஆட்டோக்காரர் நெருங்கினார்.
‘எங்க சார் போகணும்?’
எனக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற ‘மாவிலிபட்டி’ என்றேன். ஆட்டோக்காரன் ‘மாவிலிபட்டியா’ என்று என்னை மேலும் கீழும் பார்த்தான் ‘இல்ல வராது’ என்று சொல்லிவிட்டு நிற்க கூட இல்லை போயேவிட்டான். ‘எனக்கு தெரியும்!’ மாவிலிபட்டிக்கு வரமாட்டார்கள் என்று மதுரைக்கு மேற்கே உள்ளடங்கி இருக்கும் கிராமம் அது. பாதை கரடுமுரடாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். நானா ஆட்டோ கேட்டேன். அவனா வந்தான். கேட்டான். முடியாதுன்னுட்டான். சே!
நசீர் வேகவேகமாக சென்றுகொண்டிருந்தான். ஒரு இடத்தில் நின்றான். நானும் சென்று அவன் அருகில் நின்றேன். அவனுடைய பஸ் இங்கே தான் நிற்கும் போல. எனக்கு இங்கே அல்ல. நான் அடுத்த ப்ளாட்பாரத்திற்கு செல்லவேண்டும். இங்கு பொதுவாக என்ன பஸ்கள் நிற்கும் என்று யோசித்தேன். மினி பஸ்கள் மட்டுமே கண்களுக்கு தெரிந்தன.
‘நசீர் உனக்கு எந்த ஊர்’ என்றேன். நசீர் என்னை பார்த்தான். ‘இல்ல எங்க போகணும் நீ’ என்றேன்.
‘புதுப்பட்டி’ என்றான்.
‘ஓகோ’ ஏதோ புதுப்பட்டி தெரிந்தமாதிரி.
‘எந்த புதுபட்டி?’ புதுப்பட்டிக்கு இனிசியல் வேறு இருக்கா? நல்லா கேக்குறாய்ங்கடா டீட்டெயிலு.
‘T.புதுப்பட்டி’ அட இனிசியல் இருக்கு போல!
‘ஓ T.புதுப்பட்டியா’ எனக்கு T.புதுப்பட்டியும் தெரியாது.
பையன் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். ஆலம்பட்டி என்ற போர்டு போட்ட ஒரு மினி பஸ் ஒன்று வந்து நின்றது. என்ன பையன் புதுப்பட்டி என்று சொல்லிவிட்டு ஆலம்பட்டிக்கு போகும் பேருந்தில் ஏறினான்? ‘ஒரு வேளை புதுபட்டி ஆலம்பட்டி செல்லும் வழியில் இருக்கலாம்!’ ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு.
ஆனாலும் இந்த பையன் ரொம்ப மோசம். இரவு முழுவதும் பேசியிருக்கிறேன். ஒரு டீ வேறு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். ஒரு டாட்டா கூட சொல்லாமல் செல்கிறானே! டாட்டா கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரிக்கலாமே! அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ்ஸின் அருகில் சென்றான். ‘ஏதோ கேட்டான். பின் சரியென்றான். பஸ்ஸின் படியை நோக்கி நடந்தான். ம்ஹீம் என்னை கண்டுகொள்ளவில்லை. படியில் ஏறியவன் சட்டென்று என்னை திரும்பிப் பார்த்தான். சிரித்தான்.
படிகளில் ஏறினான். நான் திரும்பி எங்கள் ப்ளாட்பாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
15
கதை சொல்பவனின் சிந்தனை
நீண்ட நாள் பழகிய நண்பனை சட்டென்று பிரிந்து விட்டதை போன்று உணர்ந்தேன். ஏன் அப்படி?
‘சார் ஆட்டோ வேணுமா’
ஆஹா என் மேல எவ்வளவு அக்கரை உங்களுக்கு? விடவே மாட்டீங்களா! தைரியமாக கேட்கலாம்.
‘ஆட்டோ மாவிலிபட்டிக்கு வருமா’ நிறுத்தி நிதானமாக கேட்டேன்.
‘மாவிலிபட்டிக்கெல்லாம் வராது. விளக்கு வரை வேணும்னா போகலாம்’
‘ஒன்னுசெய். விளக்கு வரைக்கு போய் நீ நின்னுக்க. என்ன கூப்பிடாத’
‘ஓ சாரு மாவிலிபட்டிக்கே போகணுமா? போ போ இன்னிக்கு எவனும் வரமாட்டான்’
‘வராட்டி போங்க. பஸ்ல போய்க்கிறேன்’
‘பஸ்ஸா. நீ இன்னிக்கு பூராவும் நின்றாலும் உனக்கு பஸ் வராது!’
அடப்பாவி வழியக்க வந்து சாபம் கொடுத்துவிட்டு போகிறாயே நீர் வாழ்க உன் சுற்றம் வாழ்க!
இன்றைக்கு ஏதோ புதியதாய் இருப்பது போல இருக்கிறது. நசீருடன் பேசியதாய் இருக்கலாம். அவன் சொன்ன சம்பவங்கள் கூட காரணமாக இருக்கலாம். என் எண்ணங்களை நிறையவே மாற்றிவிட்டன அவனது சம்பவங்கள். இந்துக்கள் முஸ்லீம்களின் துன்பங்களை தங்களது துண்பங்களாக எண்ணிக்கொள்வதும், இந்துக்கள் கஷ்டப்படும் பொழுது சட்டென்று முஸ்லீம் மக்கள் தோள் கொடுப்பதும்! நடக்குமா!
அடப்பாவி நடந்திருக்கிறதே! ஏதோ கதை போல யோசிக்கிற?!
ஏன் நடக்காது? அவன் இந்து இவன் முஸ்லீம் இவன் கிறுஸ்துவன் என்பதை விடுத்து அவனும் நம்மை போல இந்த பூமியில் பிறந்து அல்லலுறும் ஒரு மனிதன் என்று நினைத்தால் நான் ஏன் உதவ மாட்டோம்?
மதம் என்பது ஒரு அடையாளம் தானே! மனிதன் மதம் என்கிற விசயத்தை பீட்டர் இங்கிலாண்ட் என்கிற சட்டையை போல உபயோகிக்க வேண்டும். போட்டுக்கொள்வது பெரிதல்ல. அதை எளிதாக கழட்டவும் தெரிய வேண்டும். சட்டையை போட்டுக்கொண்டேயிருப்பது எவ்வளவு கஷ்டம்? குளிக்கும் போது போட்டுக்கொண்டா குளிக்கிறோம்? கழட்டிவிடுவதில்லை? மதத்தை எப்பொழுது கழட்டனும்? பிற மதத்தினரிடம் பழகும் போது.
மதம் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது? வாழ்க்கை என்னும் மிகப் பெரிய அலைகள் கொண்ட சமுத்திரத்தை கடக்க மனிதனுக்கு உதவுவதற்காக மனிதால் உருவாக்கப் பட்ட. கவலைகள் கஷ்டங்கள் என்ற மிகப்பெரிய அலைகள் அடிக்கும் பொழுது அந்த அலைகளில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது தப்பிக்க தைரியம் கொள்வதற்காக ‘பிள்ளையாரப்பா என்னை காப்பாற்றுப்பா’ என்று கூறுவதற்காகவும் ‘பிள்ளையார் நம்மை காப்பாற்றுவார்’ என்று தன்னம்பிக்கையை உருவாக்குவதற்காகவுமே உருவாக்கட்டவை.
நாம் பிள்ளையாரை அழைப்பது போலவே அவர்கள் அல்லாவையும் வேறு சிலர் இயேசுவையும் சிலர் புத்தரையும் அழைக்கிறார்கள்.
இன்னும் சிலர் பிரேமானந்தாவைக் கூட அழைக்கிறார்களே அது ஏன்?
எனக்கு பீட்டர் இங்கிலாண்ட் பிடித்திருக்கிறது. சிலருக்கு சோடியாக் சட்டை பிடித்திருக்கிறது. அதற்காக சோடியாக் சட்டை போட்டவனை எல்லாம் நீ ஏன்டா சோடியாக் சட்டை போட்டாய் என்று அடிக்க முடியுமா?
இந்த முறை ஊருக்கு போய் முதலில் சட்டை எடுக்கவேண்டும். என்ன சட்டையா? ஏதோ ஒரு சட்டை. ஆனால் இந்த வசந்தன் ஏன் இப்படி இருக்கிறான். அவன் தான் என்னை குழப்பினான். இந்த முறை அவனைப்பார்த்து நடந்தவை எல்லாம் சொல்லவேண்டும். நான் கண்ட கனவிலிருந்து நசீர் அழுததையும் சேர்த்து…
ஆமாம் நசீர் ஏன் அழுதான்? நான் கேட்கவேயில்லையே? எப்படி மறந்தேன்? இப்படி பாதியிலே விட்டுவிட்டானே!
ஐயையோ! அவன் எதுக்காக அழுதான்? எனக்கு தெரியவேண்டுமே. அவனை கடைசியாக பார்த்த இடத்தை நோக்கி வேகவேகமாக நடந்தேன்.
16
எதுக்காக அழுதான் நசீர்?
எனக்கிருக்கும் ஞாபகமறதி மிகவும் பெரியது. என்னை சபித்துக்கொண்டே அவன் நின்றிருந்த இடத்திற்கு வந்தேன். நான் தான் மறந்து விட்டேன். அவனாவது சொல்லியிருக்க வேண்டாமா. அதே அந்த இடம் தானே. ஆனால் மினி பஸ்ஸை காணவில்லையே. பஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அருகில் இருந்தவரிடம் விசாரிக்கலாம் என்று சென்றேன்.
‘இங்கே பஸ் ஒன்று நின்று கொண்டிருந்ததே!’ என்றேன். திரும்பிப்பார்த்தார். பஸ் நின்றுகொண்டிருந்தது. ‘அப்புறம் இதுக்கு பேர் என்ன?’ என்றார் பஸ்ஸைக்காட்டி.
‘அதில்ல சார்..அதுவந்து ஒரு மினி பஸ்..’
‘பஸ் வந்து நின்னா நின்னுட்டேயிருப்பானா? ஆள் சேர்ந்திடுச்சுன்னா எடுத்துட்டு போயிடுவான்..அதுதான் வாழ்க்கை’ என்றார்.
செம விரக்தியில் இருந்திருப்பார் போல.
பஸ் போயிடுச்சா. நசீரும் போயிட்டானா. ஏன் அழுதான் என்று கேட்கவேயில்லையே.
திடீரென்று பின்னாலிருந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என்று சொல்வானோ? திரும்பி பார்த்தேன். ம்ஹீம்.
எதற்காக அழுதிருப்பான்? சரி! நாமே ஒரு முடிவுக்கு வருவோம். நசீர் படிப்பதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தான். வந்த இடத்தில் ஒழுங்காக படிக்காமல் ஊரைச் சுற்றி பாடத்தில் பெயில் ஆகிவிட்டான். அதனால் தான் வீட்டிற்கு அழுது கொண்டே செல்கிறான்.
‘உம் புத்தி உன்னைய விட்டு எங்க போகும்’ ஆனா கோர்வையா வருதே! ஆனா இதுக்கெல்லாம் போய் அழுவாங்களா? இந்த பரிட்சை போனா அடுத்த பரிட்சை. அவனை பார்த்த பெயில் ஆகிறவனை போல தெரியவில்லையே.
‘என்னா சார் இங்கயே சுத்திட்டு இருக்க! பஸ் வரலையா? தனியா வேற பேசிட்டு இருக்க’ ஆட்டோக்காரன்.
‘அட இருய்யா. நீ வேற’
பேசாமல்..அது என்ன ஊர்..ம்ம்ம்..புதுபட்டிக்கே போய்விடலாமா? ‘ஆனால் வீட்டில் அம்மா தேடுவார்களே!’ ஒன்னு செய்வோம், மினி பஸ் போறதால ஊர் பக்கதுல எங்கேயோ தான் இருக்கும். வீட்டுக்கு போன் பண்ணி ·ப்ரண்ட் வீட்டுக்கு போவதாய் சொல்லிவிட்டு புதுபட்டிக்கு போயிட்டு வந்துடலாம். மாதவா எங்கேயோ போயிட்டடா!
நம்பர்களை ப்ரஸ் செய்து, காத்திருந்தேன். ரிங் போய்கொண்டேயிருந்தது. யாரும் எடுக்கவில்லை, மறுபடியும் ரீடயல் செய்தேன். மறுபடியும் ரிங் சவுண்டு. ரீடயல்.இந்த முறை என்கேஜுடு ட்டோன். என்ன ஆச்சு? ஏன் யாரும் எடுக்கவில்லை.
‘என்னா சார் ரிங் போகலியா?’ வாய்யா வா.
‘ம்ம்ம்.. என்றவாரு வெளியே வந்தேன்’
பஸ்ஸ¤க்காக காத்திருக்க முடியாது. ஆட்டோ பிடித்து போய்விடலாம்.
‘ஏனப்பா..’
‘முடியாது சார்’ சட்டென்று பதில் வந்தது.
நான் இன்னும் கேட்கவேயில்லையே.
‘இல்லப்பா புதுபட்டிக்கு போகணும்’
‘புதுப்பட்டியா.. 90 ரூபாய் ஆகும்’
அநியாயம் தெரியதுன்னா ஏமாத்தப் பாக்குறார்.
‘ஏம்ப்பா.. இந்த ஆலமப்ட்டிக்கிட்ட இருக்கிற புதுப்பட்டிக்கா 90 ரூபாய்’
எப்படி மடக்கினேன்!
‘ஓ ஆலம்பட்டி புதுபட்டியா நான் Tபுதுபட்டின்னுல்ல நினைச்சேன். ஆட்டோ வராது’
‘இல்ல இல்ல Tபுதுபட்டிதான்’
‘என்கிட்டியே டபாய்கிறியே சார். நான் என்ன உன்ன ஏமாத்தவாபோறேன்? உக்காரு சார். 50 ரூபாய் கொடுசார்’ பேசாமல் ஏறி உட்கார்ந்தேன்.
ஆட்டோ கிளம்பியது.
17
நம்ம நாட்ட பிடிச்ச சனி
‘ஆமா சார்! நீ எதுக்கு Tபுதுப்பட்டிக்கு போற? பத்திரிக்கைகாரனா? எந்த பத்திரிக்கை? ஆனந்த விகடனா?’
‘பத்திரிக்கையா? அதெல்லாம் ஒன்னும் இல்லங்க., ஒரு ப்ரண்டை பார்க்க போறேன்’
‘ஓகோ! அப்படியா! நீ நீட்டா டிரஸ் போட்டுட்டு பின்னாடி பை போட்டுட்டு திரு திருன்னு முழிச்சிட்டு இருந்தியா..நான் கூட பத்திரிக்கைகாரனோன்னு நினைச்சிட்டேன்’
என்னது திருதிருன்னு முழிச்சனா?
‘கோவிச்சுக்காத சார். உண்மைய சொல்லிப்புட்டேன்’
இது வேறையா?
‘ஆனா சார் நேத்திலிருந்தே பத்திரிக்கை காரங்க சார் தான் நிறைய பேர் அங்க போறாங்க. நான் கூட நேத்து சாயங்ககாலம் ரெண்டு பேரை அங்க கொண்டு போய் இறக்கி விட்டேன்’
என்ன சொல்கிறான் இவன்? ‘எதுக்கு பத்திரிக்கைகாரங்க நிறைய பேர் அங்க போறாங்க?’
‘எல்லா இடத்திலயும் மதக்கலவரம் நடந்திட்டு இருக்கறப்போ இந்த மாதிரி கிராமங்கள் இருக்கிறதால தான் மனசுக்கு தெம்பா இருக்கு’
எங்கேயோ இடிக்குதே!
‘நீ என்ன சார் சொல்ற?!’
நான் என்ன சொல்ல?
‘ஆனா இது மாதிரித்தான் இருக்கணும்! தலைவரே சொல்லியிருக்கார் ‘ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் உன்னைத் தொடுமா’ அதில ஜாதிங்கறதை எடுத்திட்டு மதம்ன்னு போடணும் சார். என்ன நான் சொல்றது! கரெக்ட் தான?’
எனக்கு டென்ஷன் ஏறியது.
‘என்னய்யா சொல்ற’
‘ஏன் சார் கோபப்படுற? பொறுமையா கேட்டா நான் சொல்லமாட்டேனா?’
‘ம்ம்..நேரம்..சொல்லுப்பா’
‘இந்த ஊர்ல..ம்ஹ¥ம் இந்த மாநிலத்தில..ம்ஹ¥ம்..இந்த நாட்ல..ம்ஹ¥ம்..இந்த உலகத்தில..எங்கேனாச்சும் நீ கேட்டிருக்கியா சார் இத?’
‘எதப்பா?’
‘முஸ்லீம்கள் பிள்ளையார் தூக்கின கதை?’
‘அட நம்ம கதை’
ஆட்டோக்காரன் திரும்பி பார்த்தான்.
‘ஓ நீ சினிமாகாரனா? இந்த கதைய வெச்சு படம் பண்ண போறியா?’
‘அட இல்லப்பா! நீ மேற்கொண்டு சொல்லு’
‘அதுல என்ன கூத்துன்னா? இந்துக்கள் பிள்ளையார் ஊர்வலத்தை விட்டுட்டு முஸ்லீம் தெருவில எறிஞ்ச தீய அமத்துனதுதான்’
‘இது தான் எனக்கு தெரியுமே’
ஆட்டோக்காரனுக்கு நிஜமாகவே கோபம் வந்திருக்க வேண்டும்.
‘சரி! அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு சொல்லு சார்’
‘அது தானப்பா தெரியாது!’
முறைத்தான்.
‘அன்னைக்கு நடந்த தீ விபத்தில தன் உயிரையும் பணையமா வெச்சு நெறைய இந்துக்கள் முஸ்லீம்களை காப்பாற்றியிருக்காங்க. அதுல ஒருத்தருக்கு பயங்கரமான தீ காயம். அதுல முஸ்லீம் பிள்ளையார் தூக்கினாங்கன்னு சொன்னேனுல்ல அதுல் ஒருத்தர் தனது வயிற்றுவலியைக் கூட பொருட்படுத்தாமல் கனமாக பொருட்களை தூக்ககூடாதுங்கறது தெரிஞ்சும், இந்துக்கள் கஷ்டப்படுவதை பார்த்து தானும் பிள்ளையாரை தூக்கியிருக்கிறார்’
‘ஆனா சார் மனுஷன் செம ஆளு சார். தூக்க ஆரம்பிச்ச உடனே அவருக்கு வலி அதிகமாயிருக்கு. மனுஷன் ஆத்துபடுகைக்கு போற வரைக்கும் ஒன்னுமே சொல்லலியாம். கரைச்ச பிறகு தான் புரண்டு புரண்டு அழுதிருக்கார்’
‘இது நடந்து மூனு நாலு மாசம் ஆச்சு சார். இது வரைக்கும் அவங்க உயிர் ஊசலாடிட்டு இருந்து நேத்து மதியம் தான்…’
நான் ஸ்தம்பித்தேன்.
‘ரெண்டு பேருமே திக் ப்ரண்ட்ஸாம் சார்’ ‘ரெண்டு பேருமே ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் முன்ன பின்ன தான்..’
‘அப்படியா’ என்றேன் அதிர்ச்சி தாளாமல்.
‘அதுல அந்த முஸ்லீமோட பையன் சென்னையில இருக்கானாம்..யாரையோ பாத்து பணம் புரட்ட போனானாம்..அவன் வரும் வரைக்கும் அவனுக்காக ஊரே காத்திட்டு இருக்கு சார்’
‘போய் பாரு சார். ஊரே அழுது புலம்பிட்டு இருக்கு சார். கூட்டம் கூடிட்டே இருக்கு சார். அக்கம் பக்கம் ஊர்ல இருந்தெல்லாம் வந்திட்டிருக்காங்க சார்.’
‘ஆனா இது நம்ம நாட்ட பிடிச்ச சனி சார். பாரதில ஆரம்பிச்சி இன்ன வரைக்கு..உயிரோட இருக்கறவரைக்கும் ஒரு பய கண்டுக்கமாட்டான்..’
‘எது எப்படியோ சார்..எதுக்குடா கலவரம் பண்ணலாம்னு காரணம் தேடிட்டு இருக்கறவங்க மத்தில..இந்த ரெண்டு நண்பர்களால அந்த கிராமமே ஒன்னு சேர்ந்து கண்ணீர் சிந்திட்டு இருக்குசார்’
‘என்ன சார் பேசாமலே வர்ற?’
18
பிறகு என்ன் —– சிலைன்னு கேக்கறேன்?
‘இங்க இப்படி இருக்கு! ஆனா சார் நீ மொதோ போகணும்னு நெனச்சியே மாவிலிபட்டி! அங்க என்னடான்னா ஒரு ரத்த ஆறே ஓடிட்டு இருக்கு!’
‘என்னது ரத்த ஆறா?’
‘ஆமா சார் ஜாதிக்கலவரம் சார்’
‘என்னது ஜாதி கலவரமா?’
‘ஆமா அதான் நீ கூப்பிட்டப்போ நான் வரமாட்டேன்னுட்டேன்’
‘அடப்பாவி இத மொதல்லய்யே சொல்லியிருக்கக்கூடாதா. ஆட்டோவ திருப்புயா’
‘என்னது ஆட்டோவ திருப்பனுமா? எங்க சார் போகணும்?’
‘மாவிலிபட்டிக்கு’
‘ஐயோ நான் வரலை. நீ எதுக்கு சார் அங்க போற?’
‘அது என் சொந்த ஊரய்யா’
‘சார் சார் நான் வரலை சார் என்ன உட்ரு சார்’
‘யோவ் உனக்கு 200ரூபாய் தாரேன்..இல்ல முன்னூறு ரூபா தாரேன்..ப்ளீஸ் என்ன மாவிலி பட்டிக்கு கொண்டுபோய் விட்ருய்யா’
‘இல்ல சார் அது வந்து சார்’
‘அந்த விளக்கு வரைக்குமாவது வாயேன்’
‘சரி சார் உனக்காக அந்த விளக்கு வரைக்கும் வாரேன்’
‘சரி’
‘நல்லா கேட்டுக்கோ சார். விளக்கு வரைக்கும் தான்’
‘சரிப்பா வேகமா போ’
ஆட்டோ திரும்பியது.
‘ப்ளீஸ் கொஞ்சம் வேகமா போயேன்’
ஆட்டோ வேகம் பிடித்தது.
அதுதான் போன் பண்ணப்போ யாருமே எடுக்கலையா? பிள்ளையாரப்பா நீதான் காப்பாத்தனும்.
‘பயப்படாத சார் அதெல்லாம் ஒன்னும் நடக்காது’
ஒரு STD பூத் தெரியவே, ‘கொஞ்சம் நிறுத்துப்பா ஒரு போன் பண்ணி பார்த்துக்கறேன்’
நம்பர்களை டயல் செய்து காத்திருந்தேன். வியர்வைத் துளி ஒன்று என் மூக்கின் மீது நின்று கொண்டிருந்தது.
ரிங் போனது. யாரோ எடுத்தார்கள். அப்பாடா.
‘ஹலோ? யாரு சிவசா?’
‘சிவசா?’
‘ஹ்ம்ம்..மாவிலிபட்டிதானே?’
‘இல்ல ராங்க நம்பர்’ டொக்.
‘டென்சன் ஆகாம நம்பர போடு சார்’
மறுபடியும் ரிங் டோன். ஒன். டூ. த்ரீ.
ம்ஹ¥ம்..
மறுபடியும் ரிங்.
ம்ஹ¥ம்.
‘சார் ஊருக்கே போயிடலாம் என்ன சொல்ற நீ’
ஆட்டோ வேகம் பிடித்தது.
முருகா. பிள்ளையாரப்பா. அல்லாஹ். ஜீசஸ்.
‘என்ன பிரச்சனையாம்ப்பா?’
‘இவனுங்களுக்கு என்ன சார் வேலை? இவனுங்களே சிலையை வெப்பானுங்க. இவனுங்களே சிலையை உடைப்பானுங்க. பிறகு அதுக்கு கலவரம் வேற பண்ணுவாங்க’
‘நேத்து சார் ஒரு முழு பஸ்ஸையே எறிச்சிருக்கானுங்க’
‘இவனுங்களுக்கெல்லாம் பஸ்ஸே விடக்கூடாது சார். சிலையா சார் இவனுங்களுக்கு சோறு போடப்போகுது. நாம உழைச்சா நமக்கு சாப்பாடு.’
‘நீ ஆட்டோவில ஏறுன சார்…உங்கிட்ட நான் என்ன ஜாதின்னு கேட்டனா சார்? இல்ல நீ தான் கேட்டியா?’
‘மொதல்ல ஊர்ல இருக்கிற சிலையெல்லாம் எடுக்கணும் சார். நல்ல மனுஷங்களுக்கு சிலை வெக்கனும் சார்’
‘இந்த ஊர்ல ரெண்டு பேர் செத்தாங்களே அவங்களுக்கு வெக்கனும் சார் சிலை’
‘நீயே சொல்லு சார். காந்திக்கு இங்கே எத்தன ஊர்ல சார் சிலை இருக்கு’
‘வேணாம் வேணாம் சிலையே வேணாம்’
‘சிலை வெச்சுட்டாப்ல? காந்தி சிலைய பாத்து பாத்து எவனும் பொய் சொல்றத உட்ருவானா சார்’
‘அட பொய்ய உடு சார். மொதல்ல தண்ணியடிக்கிறத உட சொல்லு சார்’
‘அதெல்லாம் ஒன்னும் —- மாட்டாங்க..பிறகு என்ன் —– சிலைன்னு கேக்கறேன்’
‘தோ..இந்த மாதிரி அடிச்சிக்கினு சாவறதுக்கு தான்’
‘அரசியல் கட்சிக்காரய்ங்க சொன்னய்ங்கன்ன இவிங்களுக்கு எங்க சார் போச்சு புத்தி. சாராயக்கடையில் பூந்துனு இருக்கு சார் புத்தி’
‘என்ன சார் பேசாமலஏ வர்ற’
‘அட நீ ஒன்னு சார்! ஒன்னும் ஆவாது கவலைய உடு சார்’
போலீஸ் தொப்பி தெரிந்தது. ஆட்டோ நிறுத்தப்பட்டது.
‘எங்க போற’ போலீஸ் கேட்டார்.
‘மாவிலிபட்டி சார். இந்த சார் அந்த ஊராம்..பாவம் பயந்துட்டு போறாரு’
‘அதெல்லாம் போக முடியாது. நீ இவர இங்க இறக்கி விட்டுட்டு போகலாம்’
‘சார்’
‘போய்யாங்கறேனில்ல’
காசு கொடுத்துவிட்டு நான் இறங்கினேன்.
ஆட்டோக்காரர் ‘அதெல்லாம் ஒன்னும் பயப்படதா சார். போயிட்டுவா சார்’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவை திருப்பி போய்விட்டார்.
‘நீ எந்த ஊரு’
‘அதான் சொன்னாருல்ல’
போலீஸ் முறைத்தார்.
‘நீ சொல்லமாட்டியோ’
‘மாவிலிபட்டி’
‘எங்க போயிட்டு வர்ற’
‘ஊர்ல இருந்த வர்றேன்’
‘டேய் எல்லாரும் ஊர்ல இருந்துதான் வருவாய்ங்க.பின்ன காட்ல இருந்தா வருவாய்ங்க’
‘சென்னை’
‘பையில என்ன’
‘டிரஸ். புக்ஸ்’
‘ஆயுதம் எதுவும் வெச்சிருக்கியா?’
‘ஆ..ஆயுதமா..இ…இல்ல’
‘எப்படி நம்புறது’
நான் முழித்தேன்.
‘பையை திற’
19
பாட்டியும் வரவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் பையை திறந்து பார்த்தார். அழுக்கு துணிகளும், The Glass Palace புத்தகமும், புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பும் இருந்தது. புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பை எடுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் பார்த்தார்.
‘சோம்பேறியா இருப்ப போல தெரியுது’
‘அழுக்கு துணியெல்லாம் வீட்டுக்கு எடுத்திட்டு போற’
‘சார் வீட்டுக்கு போகணும்’
‘உன்னைய நான் என்ன புடிச்சா வெச்சிருக்கேன். ஓடு’
முழித்தேன்.
‘சென்னையில எங்க வேலை பாக்குற’
சொன்னேன்.
‘என்னவா இருக்க’
சாப்ட்வேர் இஞ்சினியர்.
‘எம்மகனும் தான் இஞ்சினியர் படிக்கறான். உன்னமாதிரி இல்ல. கம்ப்யூட்டர் இஞ்சினியர். இப்பவெல்லாம் அது படிச்சாத்தான் ஈசியா வேலை கிடைக்குதாம்’
ஓ அப்படியா.
‘சார் நான் கிளம்பலாமா’
‘பாத்து போ. ஓடு. கூட்டம் கும்பல் வந்தா பிழைப்பது உன் சாமர்த்தியம்’
எனக்கு விட்டால் போதும் போலத் தோன்றியது. ஓட்டமும் நடையுமாக நடக்கத்தொடங்கினேன். திரும்பிக்கூட பார்க்கவில்லை.
தூரத்தில் மாவிலிபட்டி விளக்கு தெரிந்தது. வேகத்தை கூட்டினேன். ஓடத்தொடங்கினேன். மூச்சு வாங்கியது.
விளக்கிலிருந்து ஊருக்கு பிரியும் பாதையில் திரும்பினேன். பயங்கர நிசப்தம்.
இன்னும் எப்படியும் இரண்டு கிலோமீட்டர் தூரம் போகணும்.
பிள்ளையார் கோவில் தெரிந்தது. அவசரஅவசரமாக கும்பிட்டுக்கொண்டு திருநீர் பூசிக்கொண்டேன். கீழ் மாவிலிபட்டிக்கு கொஞ்ச நேரம் தான். அங்கு சென்றுவிட்டால் ஆள் நடமாட்டம் தெரியும்.
என்னால் முடியவில்லை. சுடுகாட்டு பிட்சில கொளுத்தற வெயில்ல மணிக்கணக்கா கிரிக்கெட் ஆடியவன் தான். இப்ப உக்காந்து உக்காந்து இப்படி கொஞ்சதூரம் ஓடினா கூட முடியல. தண்ணீர் கிடைச்சா தேவலாம் போல இருந்தது. கீழ் மாவிலிபட்டிக்கு போயிட்டா எதாவது வீட்ல தண்ணி வாங்கி குடிக்கலாம்.
இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். இங்கே ஒரு பெட்டிக்கடை இருக்கனுமே. கிழே சில மரக்கட்டைகள் மட்டுமே தென்பட்டன. சுகவனம் டீ ஸ்டால் என்ற போர்டு கீழே கிடந்தது. இந்த கடை வெச்சிருந்த தாத்தா இப்ப என்ன செய்வார் என்கிற யோசனை என்னுள் எழுந்தது. அவருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்ச தூரத்தில் வீடுகள் தென்பட்டன. முதலாக தென்பட்ட வீட்டின் வாசற்படியில் ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். பாட்டிகளின் முகத்தில் எப்பொழுதும் தோன்றியபடி இருக்கும் சோகம் அவர் முகத்தில் தெரிந்தது.
‘பாட்டி’
‘பாட்டி’
பாட்டி மெதுவாக நிமிர்ந்து பார்த்தது.
‘கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா’
‘இரு ராசா தாரேன்..’
பாட்டி எழுந்தார்.
‘ஏய் கிழவி! அவென் என்ன ஆளுகன்னு தெரியுமா? பாத்தா மாவிலிபட்டிக்காரன் மாதிரி இருக்கான்.’
‘யாரா இருந்தா என்னம்மா..பாவம் தவிச்ச வாயிக்கு..’
‘போ போயி மோந்து கொடு. நல்லா சொம்பு நெறைய குடிச்சிட்டு உம் புள்ளையோட இன்னொரு கையையும் வெட்டட்டும்’
கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். பாட்டியும் வரவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை..
பாவம் பாட்டி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.
நடக்க ஆரம்பித்தேன்.
‘ஓ! ரெண்டு ஊரு சண்டையா மாறிடுச்சா. அதோ அங்கே தெரிகிறதே அது என்ன?’ எனக்கு புரியவில்ல. அருகில் சென்றவுடன் கவனித்தேன்.
எரிக்கப்பட்ட ஒரு பஸ். வெறும் கூடு மட்டுமே இருந்தது. பஸ்ஸை சுற்றி வந்து பார்த்தேன். இதோ இங்கே கீழே கிடப்பது என்ன? குனிந்து பார்த்தேன்.
குமட்டிக்கொண்டு வந்தது. ‘கடவுளே’ சட்டென்று திரும்பிக்கொண்டேன். உலகம் வேகமாக சுற்ற ஆரம்பித்தது. காக்கை ஒன்று தூரத்தில் கரைந்து கொண்டேயிருந்தது.
கண்ணை திறந்து பார்த்த பொழுது அங்கே பாதி எறிந்த குடிசை. ஓடி விடு என்று உள் மனசு எச்சரித்தது.
ஓட ஆரம்பித்தேன். அதோ! அதோ! யாரோ சிலர் உட்கார்ந்திருக்கிறார்களே.
அவர்கள் என்னையே பார்ப்பது போல இருந்தது.
கையில் என்ன அது. அறுவா.
என் கால்கள் நின்றன. இப்பொழுது அவர்கள் என்னை கூர்ந்து பார்த்து அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர். ஒருவன் எழுந்தான்.
வழியில் வைத்துக்கொண்ட பிள்ளையார் விபூதி வியர்வையில் இந்நேரம் கரைந்திருக்கும்.
ஓடிவிடு. ம்ஹ¥ம் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
பைக் சத்தம் கேட்டது.
நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
திரும்பிய நேரத்தில் இவன் ஏதாவது செய்து விட்டால்?
பைக் சத்தம் இப்பொழுது துள்ளியமாக கேட்டது. அருகில் வந்துவிட்டது போல. ஆப் செய்யப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர்.
திரும்பிப்பார்த்தேன். போலீஸ்.
‘பேக்க அங்கயே விட்டுட்டு ஓடியாந்துட்ட. நாங்க என்ன கூரியர் சர்வீஸ் பண்றமா’
‘இந்த உன் பேக். வண்டியில ஏறு’
நான் முழித்தேன்.
‘ஐயா பைய குடுத்திட்டு உன்ன வீட்ல பத்திரமா கொண்டுபோய் விட்டுட்டு வரச்சொன்னார்’
‘வண்டியில் ஏறு’
இன்னொரு பைக் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன்.
‘வாங்க வக்கீல் சார்’ போலீஸ் சொன்னார்.
எங்க அண்ணன்.
‘ஆமா ஏட்டையா. என் தம்பி தான். ஏன்டா இவ்வளவு நேரம். வா வண்டியில ஏறு’
‘சரி ஏட்டையா. தாங்க்ஸ். இன்ஸ்பெக்டர்ட்ட கேட்டேன்னு சொல்லுங்க. அப்ப நாங்க கிளம்புறோம்’
பையை வாங்கிக்கொண்டேன். போலீஸை பார்த்து சிரித்தேன். வண்டி புறப்பட்டது.
குளிர்ந்த காற்று மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. காக்கை இன்னும் எங்கிருந்தோ கரைந்து கொண்டேயிருந்தது.
(முற்றும்)
Disclaimer: இந்த கதையில் வரும் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.
Cliche ஆக ஆகிவிடுமோ என்னும் பயத்துடன் முழுவதுமாக படித்தேன்.மிக மிக நன்றாக இருந்தது.பகிர்வுக்கு நன்றி.நேரம் ஒத்துழைத்தால், விரிவான வாசக பார்வை இடுகிறேன் 😉
LikeLike
நல்லா இருந்தது. ஆனா முடிவு கொஞ்சம் சீக்கிரமாவே வந்த மாதிரி இருந்ததே!
LikeLike