உறங்கும் பெண்

(சிறுகதை)

சுவாத் தலை குணிந்தாள், “என்னை கூறுபோட்டு என் மீது படிந்த கறையை வேகமாகத் துடையுங்கள்” என்று தன் தாயிடமும் தந்தையிடமும் தன் மூன்று சகோதரர்களிடமும் அவள் விழுந்து மன்றாடினாள். அவளுடைய தந்தை அமைதியாகவும் அழுத்தமாகவும் கேட்டார்” அப்படி என்னதான் நடந்தது. விளக்கமாகச் சொல்”. சுவாத்தினுடைய குரல் தளுதளுத்தது. “எனக்கு நடந்ததை நீங்கள் யாரும் நம்பப்போவதில்லை. நீங்கள் நம்பாமலிருந்தாலும் எனக்கு நடந்தது நடந்ததுதான்”

தந்தை மிகவும் கடினமான குரலில் “என்ன நடந்தது என்பதை எங்களுக்கு தெளிவாக எதையும் மறைக்காமல் சொல்” என்றார். சுவாத் தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கமாக சொல்லத்தொடங்கினாள்.

சென்ற இரவில் எப்பொழுதும்போல அவள் தன் அறையை பூட்டிவிட்டு தூங்கப்போனாள். அவள் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, வேறு உயிரனங்கள் ஏதும் இல்லாத ஏதோ ஒரு பூங்காவில் தான் நடந்துகொண்டிருப்பதைக் கண்டாள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவளை தாக்கினான். அவளுக்கு அவன் யாரென தெரியவில்லை. அவன் இதுவரையில் எங்கே பதுங்கியிருந்தான் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை. அவன் அவளை கீழே விழ்த்தினான். அவள் மீது படர்ந்து அவளது ஆடைகளை கிழித்தெரிந்தான். அவளுடைய இறைஞ்சல்களையும்; அபய குரல்களையும்; அவர்கள் இருவரின் முகங்களையும் நனைத்துவிட்ட அவளுடைய கண்ணீரையும் அவன் கண்டுகொள்ளவும் இல்லை செவிமெடுக்கவும் இல்லை. அவனுக்கு தேவையானவற்றை அவளிடமிருந்து அவன் எடுத்துக்கொண்டான்.

அப்புறம் அவளுக்கு இரண்டாவது கனவு வந்தது. ஜனசந்தடி நிறைந்த தெரு ஒன்றில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது முன்பு கனவில் வந்த அதே இளைஞன் அவள் முன் திடீரென குதித்து அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் அவளை பலாத்காரம் செய்தான். அரங்கேறிய பலாத்காரத்தை பார்ப்பதை அங்கிருந்த ஒருவரும் நிறுத்தவில்லை. அப்புறம் அவளுக்கு மூன்றாவது கனவு வந்தது. அவள் அவளுடைய தாத்தாவின் கல்லறைக்கு அன்று சென்றிருந்தாள். சூரத்-அல்-·பாத்திகாவை வாசித்து தாத்தாவின் ஆன்மாவை நினைத்து பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதே வாலிபன் அவள் முன் மீண்டும் தோன்றி அவளை மூன்று முறை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், சுற்றுப்புறச்சூழலின் அழகியல் தான் எனக்கு இவ்வாறான சக்தி தருகிறது.

அவளுடைய தந்தை அவளிடம் “அவன் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். “அவன் யார் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன் என் வாழ்க்கையில் அவனை நான் பார்த்ததேயில்லை. அவனை கனவில் மட்டுமே பார்த்திருக்கும் பொழுது எப்படி நான் அவனை அறிந்திருக்கமுடியும்? ஆனால் இன்னொருமுறை அவனை நான் நேரில் பார்த்தால் கண்டிப்பாக அடையாளம் கண்டுகொள்வேன். ஏனென்றால் அவனுடைய முகத்தை என்னால் மறக்கமுடியாது” என்றாள் அவள்.

“சரி. நீ கனவு முடிந்து எழுந்திருக்கும் பொழுது என்ன நடந்தது?” என்றார் அவளுடைய தந்தை.
அவள் சொன்னாள் : “நான் என்னுடைய படுக்கையில் படுத்திருந்தேன். நான் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. என்னுடைய உடல் முழுவது ரத்தம் படர்ந்திருந்தது. ஆங்காங்கே நகக்கீறல்களும் பற்களை உபயோகித்து கடித்த தடங்களும் இருந்தன.”

அவளுடைய அன்னை சொன்னாள் “இவள் என்னுடைய மகள். இவளை நான் நன்றாக அறிவேன். இவள் ஆழமாக தூங்குகிறவள். பீரங்கி குண்டுகளின் சத்தங்கள் கூட இவளை எழுப்பிவிட முடியாது. நடந்து முடிந்த அனைத்திற்கும் தூக்கத்துக்கும் கனவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவள் தூங்கிவிட்ட பிறகு யாரோ ஒரு வாலிபன் அறைக்குள் ரகசியமாக நுழைந்து இவளை நாசம் பண்ணியிருக்கவேண்டும். ஆம் அதுதான் நடந்திருக்கும்”.

“நான்கு ஆண்கள் இருக்கும் இந்த வீட்டினுள் அப்படி நுழைய இந்த பகுதியில் இருக்கும் எந்த ஆணுக்கு துணிச்சல் இருக்கிறது?” என்று சுவாத்தின் தந்தை கர்ஜித்தார்.

சுவாத்தின் மூன்று சகோதரர்கள் கடும் கோபம் அடைந்து கத்தத்தொடங்கினார்கள். “அந்த இளைஞன் மட்டும் எங்கள் கையில் கிடைத்தால் அவனை துண்டுதுண்டாக வெட்டுவோம். வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் உலர்ந்த திராட்சை பழங்களை விட மிகச்சிறியதாக இருக்கும்” என்று சூளுரைத்தனர்.

சுவாத் தன் அன்னையை பார்த்து “நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ளிளைஞனை எனக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த பகுதியிலிருக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் அறிவேன்” என்றாள் சந்தேகமாக.

சுவாத்தினுடைய தந்தை கேட்டார் “அது இருக்கட்டும். அவன் உன்னை பலாத்காரம் செய்யும் பொழுது ஒரு மானமுள்ள பெண் செய்வது போல நீ அவனை தடுத்து நிறுத்தினாயா? கத்தி கூப்பாடு போட்டாயா?”

“நான் தடுத்தேன். என்னால் முடிந்தமட்டும் சத்தமாக கத்தினேன். கதறினேன். கெஞ்சினேன். ஆனால் அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே அவன் என்னிடம் நாம் கனவுலகில் இருக்கிறோம். உறக்கத்திலிருப்பவர்களின் உலகத்தை விழித்திருப்பவர்கள் அறியமாட்டார்கள் என்றானப்பா” என்றாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு சுவாத்தின் தந்தை உடைந்த குரலில் நடந்ததை பற்றி அவள் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று சுவாத்தை எச்சரித்தார்.

ஆனால் சுவாத்துக்கு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியிலிருக்கும் வேறு பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் சிறுமைப்படுத்தப்படுவர்; அவர்களை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க இயலாத ஒரு கையறுநிலைக்கு அந்த ஆண்கள் தள்ளப்படுவார்கள்; எனவே இதற்கு தீர்வாக அவர்கள் தங்களது பெண்டு பிள்ளைகளை தூங்கவிடாமல் தடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுத்தான் போகும். ஏனென்றால் பெண்கள் தூங்குவதற்கு கடமைப்பட்டவர்கள். தூக்கத்தில் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள். கிழிந்த உடையுடன் தூக்கத்திலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள்.

*

-எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைபக்கத்தில் இந்த Zakaria Tamer எழுதிய The Sleeping Woman என்கிற இந்த கதயை குறிப்பிடிருந்தார். அதை யாரெனும் பொழுபெயர்த்துத் தருமாறும் கேட்டிருந்தார். என்னால் முடிந்தவரையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s