மீள் பதிவு – புல் தரையில் ரத்தம்

(சிறுகதை)

ராஜூ அப்பொழுதுதான் பார்த்தான் அந்தக்காட்சியை. அந்த கிழவர் அந்த குழியை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார். மரத்தினடியில் ஏகாந்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருந்தவன் இந்த செயலைக்கண்டதும் துணுக்குற்றான். அந்த குழி பெரிய குழியாயிற்றே. விழுந்தவர்கள் எழ முடியாதே. இந்த கிழம் எதற்கு அங்கே செல்கிறது. அட என்ன இது புல் தரையில் இரத்தம். இரத்தத்தைப் பார்த்த ராமன் ஐயோ இங்கே எப்படி ரத்தம் வந்தது என்று யோசித்தான். ஐயோ.. அப்பா அல்லவா இங்கே எப்பொழுதும் படுத்துக்கொண்டிருப்பார். இங்கு பெரிய குழியில் என்ன சிவப்பாய்? ராஜூ எழுந்து உட்கார்ந்தான். ஏன் இப்படி அந்தி சாயும் ஏகாந்தத்தை குலைப்பது போல இந்த கிழவர் நடந்து கொள்கிறார்? ராஜூ எழுந்து அந்த கிழவரை நோக்கி கத்தினான். ராமன் ஐயோ ரத்தம் ரத்தம் என்று உரக்க கத்தினான். யார் காதிலும் விழுந்திருக்குமா என்று யோசிக்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமா? அப்பாவை யாரது கொலை செய்திருப்பார்களா? ராமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது மூக்கிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

ஓட முயன்ற ராஜூவின் காலில் பெரிய கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து கொண்டு வந்தது. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து வெளியேறியது. யோவ் கிழவா ராஜூவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உன் தலையில் கல்லை போட்டு உடைக்க. ராஜூ மிக வேகமாக ஓடினான். நகம் பிய்த்துக்கொண்டு வந்த இடத்தில் மண் படர்ந்தது. வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது. ராமன் ஓடினான். அப்பா. அப்பா. ரத்தம் மட்டுமே இருக்கிறது ஆனால் உடல் எங்கே? யாரும் ஏன் இதை பார்க்கவில்லை? ஓடினான். ஓடினான். ஓடினான். டேய் ராமா எதுக்கு தலைதெறிக்க ஓடியாற? டேய் ராமா நில்லுடா. யாரையும் ராமன் கண்டுகொள்ளவில்லை. கிழவர் ராஜுவின் கத்தல்களை கண்டுகொள்ளவில்லை. ஏதோ குழிக்குள் தான் இது வரை சேர்த்து வைத்த தங்க கட்டிகள் எல்லாம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டிருந்தார். ராஜூ மிக வேகமாக அந்த கிழவரை நோக்கி ஓடுவதை அந்த ஜெயிலின் வார்டன் பார்த்துக்கொண்டேயிருந்தார். வார்டனும் ஓடி வரத்தொடங்கினார். யோவ் யோவ். டேய். டேய். ராமா. நில்லுடா. ம்ம்ஹ¥ம். ஓடினான் ராமன். அதோ அங்கே காவல் நிலையம். ஐயா ஐயா. ஐயா. என் அப்பாவை யாரோ கொன்று விட்டார்கள். நான் பார்த்தேன். ரத்தத்தை பார்த்தேன். சிவப்பாய். உறைந்திருந்தது. குழிக்குள். புல் தரையில். எல்லா இடத்திலும். அவரை யாரோ கத்தியால் குத்தியிருக்கிறார்கள். என்னது இங்கே கொலையா? என்னடா சொல்கிறாய்?

ஹாங்? யாருப்பா? ஏன் கத்தற? யோவ் கிழவா குழியிருக்கு. விழுந்த அப்படியே போய்கினுருப்ப. ஓ. என்ன ஓ? ஓங்கி ஒன்னு விட்டன்னா ஓன்னு வாயப்பொளப்ப. எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குதுப்பா. மன்னிச்சுக்க. சரி சரி வா இந்தப்பக்கம். வா இந்தப்பக்கம். அது என்ன உன் கையில் ரத்தம்? உறைந்து இருக்கிறது? யார் நீ? உன் பெயர் என்ன? ராமன் பதில் சொல்லவில்லை. உன் வீடு எங்கிருக்கிறது. ஏன் உன் மூக்கில் ரத்தம் வருகிறது? டேய் ராமா போ. போ இளநி காய்களை பெறக்கிட்டு வா. உங்கய்யன் வந்துடபோறான். அப்புறம் உனக்கு அடிதான். அப்பத்தா. அம்மா எங்க? எவடா உனக்கு அம்மா? அந்த ஓடுகாளிசிறுக்கியா? —முண்டையா? என் குடும்ப கவுரவத்தையே சிதச்சுட்டு போயிட்டா. அம்மாவாம் அம்மா. போடா வெளங்காதவனே. போ. பொறக்கிட்டுவா. உங்கப்பன் கிட்ட அவளப்பத்தி கேட்டு அடிவாங்கி சாகாத. ராமன் ஓடுகிறான். அப்பத்தா ஏன் இப்படி திட்டுகிறது என்று தெரியாமல் ஓடுகிறான். அதோ அங்கே இருக்கிறது இளநி ஒன்று. எடுத்துக்கொள்கிறான். மேலும் மேலும் மேலும். ஒரு மரத்தினடியில் வந்து குவித்துவைக்கிறான்.

ஒரு மரத்தினடியில் வந்து ராஜூ அந்த கிழவரை உட்கார வைக்கிறான். டேய். என்னாச்சு? வார்டன் சார்.ஒன்னுமில்ல சார். இந்த கிழம் குழிக்குள்ள விழப்பாத்துச்சு சார். நான் தான் காப்பாத்தினேன். ஆமா பெரிய ரசினிகாந்து. இவருக்கு என்னாச்சு? கண்ணு தெரியலையாம். யோவ். ஹாங். யோவ். யாரு. பெரிய இந்தியன் தாத்தா. யாருன்னு கேக்கறாரு. உம் பேரு என்னய்யா? ராமன் எல்லா இளநி காய்களையும் பெறக்கிக்கொண்டுவிட்டான். தென்னைமரத்தின் நிழல் குளுகுளுவென்றிருந்தது. குளிர்ந்த காற்று ஓடியாடி காய் பெறக்கியதற்கு இதமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் குடிக்கலாம் என்று கீழே குனிந்தான். தண்ணீரில் தன் முகம் கலங்கலாய் தெரிந்தது. கிழத்துக்கு வார்டனின் முகம் அவ்வளவாக தெரியவில்லை. கலங்கலாக மங்கலாக இருந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. யோவ் உன் பேரு என்னன்னு கேக்கறின்னுல்ல? ஏன் உன் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது? டேய் ஓடி போய் தண்ணி கொண்டுவா. ராஜூ ஓடுகிறான். வார்டன் கிழத்தின் முகத்தினருகே குணிந்து பார்க்கிறார்.

கீழே குணிந்து ராமன் தண்ணீரில் தெரியும் தன் முகத்தை கொஞ்சம் அள்ளி பருகிக்கொள்கிறான். எப்படியோ மீண்டும் அங்கே முகம் வந்துவிடுகிறது. ராமன் எவ்வளவு எடுத்து குடித்தும் அவன் முகம் தீரவேயில்லை. நச் என்று தலையில் ஏதோ விழுந்ததை போல இருந்தது. தண்ணீரில் தொப்பென்று ஒரு இளநி காய் விழுந்து தண்ணீர் இவன் முகத்தில் அடிக்கிறது. ராமன் நிமிர்ந்து மேலே பார்க்கிறான். தலை வலிப்பது போல இருக்கிறது. தலை சுற்றுகிறது. கிழத்துக்கு தலை சுற்றுகிறது. டப்பென்று அப்படியே கீழே சாய்கிறது. வார்டன் தாங்கி பிடிக்கிறார். தலையை பின்னால் பிடித்தவாறு தான் பெறக்கி சேமித்து வைத்த இளநி காய் குவியலுக்கு அருகே ராமன் உட்காருகிறான். தூரத்தில் ஒரு மரம் குட்டையாகவும். பின் நெளிந்துகொண்டும். வளைந்துகொண்டும். பின் ஏன் திடீரென்று வளர்ந்து பெரிதாகிறது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறான் ராமன். கால்களுக்கு இடையிலே பெரிய பெரிய பாம்புகள் ஊறுகின்றன. தண்ணீரில் தவளைகள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த தவளைகள் இவனது முகத்தை அள்ளி அள்ளி குடிக்கின்றன. இவனுடைய அம்மா வருகிறாள். உடன் யாரோ வருகிறான். அவன் இவனிடம் வந்து வாடா ராமா. ஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கிறான். வாடா ராமா. ஹா ஹா ஹா. வாடா ராமா. ஹா ஹா ஹா. அம்மா அப்படியே அவனை விழுங்குகிறாள். அப்பத்தா ஓடி வருகிறாள். கையில் துடைப்பம் இருக்கிறது. அப்பத்தா பாம்பாய் மாறிவிடுகிறாள். ராமா என்னடா ஆச்சு? என்ன ஆச்சு?

என்ன ஆச்சு வார்டன்? தெரியலை. இவர் யார் என்று பாருங்கள். சுத்தமாக கண் தெரியவில்லை. எப்படி இந்த ஜெயிலில் காலம் தள்ளுகிறார். நான் பார்த்ததில்லையே இவரை. இவரை யாருக்காவது தெரியுமா? ராமா என்னடா ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அப்பத்தா தலையில் கொம்பொன்று முளைக்கிறது. ராமன் சிரிக்கிறான். அப்பத்தாவின் நாக்கு பாம்பு போல நெளிகிறது. ராமன் பயப்படுகிறான். பக்கத்தில் வராதே. பக்கத்தில் வராதே. ராமன் மூக்கை தொட்டுப்பார்க்கிறான். மூக்கில் ரத்தம். செக்கச்செவப்பாய் ரத்தம். ரத்தம் வழிந்துகொண்டேயிருக்கிறது. ராசா. ராமா. என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்க? தலையை ஏன் பிடிச்சிட்டு இருக்க? ஏன்டா உனக்கு மூக்கில் ரத்தம் வருகிறது?

ஏன் உன் கையில் ரத்தம் இருக்கிறது? உன் அப்பாவை யார் கொன்றார்கள்? சார். இன்ஸ்பெக்டர் சார். என்னய்யா ஏட்டையா? எனக்கு இவனைத் தெரியும் சார். இவன் எனக்கு பக்கத்து வீட்டு பையன் தான். கொஞ்சம் ஒரு மாதிரி. இல்ல. நான் அப்படி இல்ல. ராமன் கத்தினான். இல்ல வார்டன் சார். யாருக்குமே தெரியல. இவர் யாருன்னு. எல்லோரும் எப்பவோ ஒரு வாட்டி பாத்திருக்காங்க ஆனா யாரு? பேரென்னன்னு தெரியல. எங்களுக்கும் தெரியல. அவரோட நம்பர் வெச்சு தான் பாக்கனும். வெக்கமாயில்லையாயா உங்களுக்கு. என்ன தான் கிழிக்கிறீங்க? போங்க போய் இவரு யாரு என்னன்னு பாருங்க. ஏட்டைய்யா பையனை கூப்பிட்டுட்டு போய் என்னன்னு பாருங்க. கொலை அது இதுன்னு உளறுறான். கையில வேற ரத்தமா இருக்கு. வேணும்னா கூட 206ஐயும் கூப்பிட்டுக்கோங்க. ராமசாமி ஐயாவோட ஆதரவாளர்கள் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் பண்றாங்களாம். நான் அங்க போகணும். நீங்க கிளம்புங்க. டேய் பையா உம் பேரென்ன சொன்ன? ராமன் ஆங்.. போ ஏட்டைய்யா கூட போய் எங்க ரத்தம் பாத்தன்னு சொல்லு.

என்னய்யா ரெக்கார்ட்ஸ்ல பாத்தீங்க சொல்லுங்க. கிழம் எங்க வார்டன் சார்? அவரை இப்பத்தான் டாக்டர்ஸ் செக்கப்புக்கு கொண்டுபோய் இருக்காங்க. சார் ரெக்கார்ட்ஸ் பார்த்ததுல இவரு இங்க இருபது வருஷத்துக்கும் மேலா இருக்கார் போல தெரியுது சார். என்னது இருபது வருஷத்துக்கும் மேலையா? என்னய்யா சொல்றீங்க? ஏன் இவரை விடுதலை செய்யல? என்ன தப்பு செஞ்சிருக்கார்? கொலை சார். கொலையா? இவரா? அப்படீன்னு தான் சார் போட்டிருக்கு. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும் ராமச்சந்திரன்…ம்ம்ம்…1957இல்..என்னது? 1957லா? டேய் எங்கடா ரத்தம்? இதோ இங்கதான் சார். இங்கயா? எங்கடா இருக்கு? இதோ இங்க சார். யோவ் 206 இங்கவாய்யா. எங்க இருக்கு ரத்தம்? இல்ல ஏட்டைய்யா. இவன் ஏதோ உளறுறான். குழிக்குள்ள இருக்கு சார். குழிக்குள்ளயா? பாருங்க சார்..ரத்தம் இருக்கு. 206 இவனுக்கு பைத்தியம் முத்திப்போச்சு. எங்கையுமே ரத்தம் இல்லையே, டேய் போ போய் ஒழுங்கா வேலைய பாரு. பக்கத்து வீட்டுக்காரன்ங்கிறதால விடறேன். போ. இல்ல ரத்தம் பாத்தேன். நான் பாத்தேன். ஏட்டைய்யா இவன் சொல்றமாதிரி புல் தரையில ரத்தம் இல்ல. ஆனா இவன் கையில ரத்தம் இருக்கே கவனிச்சீங்களா? ஹா..ஆமா 206..டேய் உங்கப்பா எங்க? அதான் சொல்றேனில்ல. யாரோ கொன்னிருக்காங்க. டேய் லூசு.. வாடா உங்க வீட்டுக்கு போகலாம். 206 இவன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?

ஆமா சார். 1957ல்ல தான்..ம்ம்ம்ம்…ரங்கசாமி என்பவரை கத்தியால் குத்தி…இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர்…தில்லையிலிருக்கும் மனநலகாப்பகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டார்…அங்கு சிகிச்சை முடிந்து குணமானதும்…1957ல்ல கொலை செஞ்சிருக்காரா? என்னய்யா இது? இன்னி வரைக்கும் ஜெயில்ல என்ன செய்யறார்? கிட்டத்தட்ட 50 வருஷம் ஆச்சே? எனக்கு ·புல் ஹிஸ்டரி கிடைக்குமா? எடுத்திட்டு வர முயற்சி பண்ணுங்க. யார் இவர்? எதற்காக இவ்வளவு வருஷம் சிறையில் இருக்கிறார். ஏன் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள்? அப்பா? அம்மா? அவ்வளவு வேண்டாதவர்களாக போய்விட்டாரா? ஹலோ வார்டன். டாக்டர் என்னாச்சு டாக்டர்? வழக்கமா வயசானா வருகிற வியாதிதான். கண்ணுக்கு ஆபரேஷன் தான் செய்யனும். ஆபரேஷன் செஞ்சாலும் அத தாங்குவாரான்னு தெரியல. இங்க விட்டுட்டு போறீங்களா இல்ல.. தெரியல டாக்டர்..இவருடைய கேஸ் புதிராக இருக்கிறது..இன்னும் நிறைய விசாரிக்கனும்..நாங்க வர்றோம்….யோவ்..கிழத்த பிடிச்சுக்கோங்க..

206 இவன பிடிச்சுக்கோ..ஓடிட போறான்..என்னது யாருமே இல்லயா வீட்ல..ரங்கசாமி..ரங்கசாமி..டேய் உங்க அப்பா எங்கடா போயிட்டார்..கொன்னுட்டாங்க சார்..போட்டன்னா..ரங்கசாமி..என்னது பிசுபிசுப்பா இருக்கு..206 தீப்பெட்டி வெச்சிருக்கீங்களா? 206 தீப்பெட்டி இல்ல ஏட்டைய்யா..ஒன்னு தான் இருக்கு..யோவ்?! இருங்க ஏட்டைய்யா கொளுத்தறேன்..ரங்கசாமி..ரங்கசாமி..ஏட்டையா..இங்க பாருங்க..அடப்பாவி..கத்தியால குத்தப்பட்டிருக்கிறார்..யாரோ நிறைய தடவை குத்திருக்காங்க..ஐயோ..ரங்கசாமி..மூச்சு இல்லய்யா..அடப்பாவி அப்பாவையே கொன்னுட்டியே..பிடிங்க அவனை..என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ணின? ஏன் உங்கப்பாவை குத்தின? ஏட்டையா இங்க இருக்கு கத்தி..

எத்தன வாட்டி கத்தி கத்தி கேக்குறது, கிழத்துக்கு காதுலையே விழல..அடச்சே..தாத்தா..உங்க பேர் என்ன? ஹாங்..ராமன்..ராமன் என்கிற இந்த சிறுவன் தன் தந்தையை நான்குமுறை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காரணத்துக்காக, சிறுவன் என்பதை மனதில் கொண்டு இந்த நீதிமன்றம் அவனை மனநலக்காப்பகத்தில் சேர்க்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும் தண்டனை காலத்துக்கு முன் மனநலம் தேறிவிட்டால்ராமனுக்கு மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது..ஜட்ஜின் வெள்ளை முடியில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தன..மூக்கிலிருந்து ஒரு வண்டு வெளியேறி வாயினுள் நுழைந்தது..அவனை பாம்புகள் கொத்த ஆரம்பித்தன..ராமன் ஐயோ ஐயோ என்று கத்த ஆரம்பித்தான் ராமன்.. இந்த சிறுவனை யாரேனும் பார்க்க வருவதென்றால்…ஏன் தாத்தா உன்ன யாருமே பாக்கவரலை? 50 வருஷமாச்சு…உனக்கு தண்டனை கொடுத்து..ஏன் நீ வெளியிலே வருவதற்கு முயற்சி செய்யல? இப்படி ஒன்னுமே பேசாம இருந்தா எப்படி? நீங்களும் நானும் ஒரே ஊர் தான் தெரியுமா? வார்டன் சார். என்னய்யா..அந்த மனநலகாப்பக ரெஜிஸ்டர் பாத்தோம்..யாரோ காசின்னு ஒருத்தர்..இவருக்கு மாமா முறை வேணுமாம்..அவருதான் ரெகுலரா கொஞ்ச நாளைக்கு வந்து பாத்திருக்கிறார்..யாரு காசியா?

என் பெயர் காசி..இங்க காப்பகத்துல இருக்கிற ராமனுக்கு நான் மாமா…என்ன கொண்டுவந்திருக்க அந்த லூசு பையலுக்கு..போ..அந்த கடைசில இருப்பான்..என்ன தான் பெறக்குவானோ..கீழ இருந்து கல்லு கல்லா பெறக்குதான்..திடீர்ன்னு மேலே நிமிந்து பாக்கான்..பின் ஐயோ ஐயோன்னு கத்..டேய் ராமா.. நான் காசி வந்திருக்கன்..டேய் ராமா..கல்லு பெறக்குனது போதும் இப்படி வந்து உக்கார்..கல்லா? நான் இளநி பெறக்குறேன்..அங்க உக்காராத மாமா..பாம்பு நெறைய இருக்கு..ம்ம்ம்..இந்தா தயிர்சாதம்….உனக்கு பிடிக்குமே..உனக்கு ஒன்னு தெரியுமா? சொன்னா உனக்கு புரியுமா? தடாலென்று அன்னாந்து வானத்தை பார்க்கிறான் ராமன்..உங்கப்பா ரங்கசாமி சாகலை தெரியுமா? ஹா ஹா ஹா ஹா..காசியா? அவரோட ஊரு பேரு? எதுனாலும் கெடச்சதா? இல்ல சார்.. தேடிட்டிருக்கோம்..நான் சொல்றேன்..அப்பாடா கிழம் பேசிருச்சு…காசி எனக்கு மாமா முறை வேணும்…என் மேல ரொம்ப பாசமா இருப்பார்..அவர் மட்டும் தான்..அவர் மட்டும் தான்..என்னை எப்படியும் வெளில கூட்டிட்டு போயிருவேன்னு சொல்லிட்டேயிருப்பார்.

தாத்தா…தாத்தா..காசி.. காசி இப்ப இருக்காரா? கிழம் சிரித்தது…காசியும் நடயனேரியில தான் இருந்தாரா? ஆமா எங்க வீட்டுக்கு பக்கம் தான்…அடுத்த தெரு.. அவர் தெக்குவீட்டுக்கு பக்கத்தில இருந்தார்..தெக்குவீடா? வார்டன் அவசர அவசரமாக தன் பர்ஸைத் திறந்து அதிலிருக்கும் போட்டோ ஒன்றை எடுத்து காட்டுகிறார்..இவரா..இ..இவரா..காசி.. ஆ..ஆமா..நான் தான் நீங்க சொல்ற காசி வடிவேல் முருகனுடைய பேரன்..காசி வடிவேல் முருகன் இந்த ஜெயிலுக்கு வார்டனா ரெண்டு மாசத்துக்கு முந்திதான் வந்தேன்… ராமன் சிரிக்கிறார். தாத்தா..எனக்கு உங்களை பாத்ததுமே ஏதோ ஒன்னு பிடிபட ஆரம்பிச்சது..ஏதோ ஒன்னு..ஏதோ ஒன்னு..

ஆ..ஆமா நானும் அப்பலேருந்து கேட்டுட்டே இருக்கேன்ல.. ஏன் நீங்க 50 வருஷமா இப்படியே இங்கேயே இருந்திட்டீங்க? வெளில வர முயற்சி செய்யலையா? சிரிக்கிறார் ராமன். சிரிக்கிறார். நான் லூசுப்பா..லூசு….இந்த லூச யாருமே கவனிக்கல..யாருமே..நான் இன்னும் அதிகமா முயற்சி செஞ்சிருக்கனும்னு இப்போ தோணுது..இப்போ தோணுது..

3 thoughts on “மீள் பதிவு – புல் தரையில் ரத்தம்

  1. சிறப்பான Narration. உங்கள் கதைகளில் அந்த மெல்லிய மர்மம் ரொம்ப நல்லா இருக்கு.. புல்லை மாடு மேய்வது போல் மேயும் என்னை இப்படி உன்னிப்பாக படிக்க வைத்து விட்டீர்கள் :)சில டவுட்கள்.. விளக்குவீர்களா??1. //உங்கப்பா ரங்கசாமி சாகலை தெரியுமா? ஹா ஹா ஹா ஹா//இதை என் காசி சொல்கிறார்..? அவர் தான் அவரின் பேரனை அந்த ஜெயிலிற்கு வார்டனாக அனுப்புகிறாரா..?2. அந்த பாட்டி, இளநி எல்லாமே ராமனின் கற்ப்பனையா?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s