(குட்டித் தொடர்கதை)
1
“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”
சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.
“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”
நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.
“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”
…
“பசங்க கிண்டல் பண்றாங்களா?”
…
“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”
ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.
“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..
நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.
“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”
நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.
“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”
…
…
…
“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”
…
..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”
…
அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?
“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”
…
…
(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..
ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.
“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”
…
…
அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.
“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்
தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.
“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”
என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.
“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”
இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.
“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”
…
…
“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”
“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”
(தொடரும்)