ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

மரங்கள் நடக்கின்றன
Thanks: தளவாய் சுந்தரம்

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்…

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த ‘மண்வாசனை’ (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)

நன்றி: மரம் தங்கசாமி படம் – நல்லது நடக்கட்டும் வலைப்பூ.

One thought on “ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s