ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)

இளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.

ஏன் இந்த அவசரம்?

ஹோட்டல்கலில் இட்லி தோசை மற்றும் புரோட்டா ஐட்டங்களை பார்சல் செய்பவர்களைப் பார்த்ததுண்டா? பார்சல் டோக்கன் வாங்கிக்கொண்டு தனியாக, அருகில் இருக்கும் டேபிளிலோ அல்லது சுவற்றில் சாய்ந்துகொண்டோ பலமுறை நான் அவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஏனோ அவர்கள் பறபறவென்றே வேலை செய்வார்கள். சட்னி கட்டிக்கொடுப்பவர்கள் ஆகட்டும், சாம்பார் கட்டுபவர்கள் ஆகட்டும், இட்லி தோசை கட்டுபவர்களாகட்டும், ஒவ்வொருவரிடமும் அதே அவசரம் தெரியும். ஏதோ இந்த நிமிடத்தில் இத்தனை இட்லிகள் பார்சல் செய்யாவிட்டால் தட்டிலிருக்கும் இட்லிகள் அத்தனையையும் கடோத்கஜன் வந்து தின்று தீர்த்துவிடுவான் என்பது போல அவர்களது அவசரம் இருக்கும்.

இன்றும் முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் ஆனந்தபவனில் நான்கு இட்லி மற்றும் இரண்டு தோசைகள் பார்சல் சொல்லிவிட்டு என்னுடைய டோக்கன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும் வரை, அவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் அதே அவசரம். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. பிறகும் ஏன் இந்த அவசரம்? பெரும்பாலும் சட்னி கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கிறது. அது ஒரே பார்சலா அல்லது எத்தனை பார்சல்கள் என்பதே.

இதே போல ஒரு அவசரத்தை நான் காலேஜில் கம்ப்யூட்டர் லேப் அசிஸ்டென்ட்களிடம் தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கமாண்ட்லைனில் அவர்கள் ஏதோ ஒரு கமாண்ட் டைப் செய்யும் போதும், ஏதோ நியூக்ளியர் பாம் ஒன்றை டிஸ்அஸம்பிள் செய்வது போல அவ்வளவு அவரமாக டைப் செய்வார்கள். சிலர் எக்கோ கமாண்ட் போட்டுவிட்டு, டைப் செய்வது திரையில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று நாம் உணர்ந்துகொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். எல்லாம் சரியாகிவிட்டது என்பது போல பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவார் லேப் அஸிஸ்டண்ட்.

டெவலப்பர்ஸ் கூட தங்களுக்கு தெரிந்த queryக்களை டைப் செய்யும் பொழுது அதி வேகமாக டைப் செய்வதை பார்த்திருக்கிறேன். I think people do things faster, to proove their mastery. சரியா?

மக்கள் இன்னமும் புத்தகங்கள் படிக்கிறார்கள்!

சில சமயங்களில் பதிவிடும் போது, தினமும் ஒரு பதிவிட எப்படியும் வாய்த்துவிடும். சில சமயங்களில் வாரக்கணக்கில் ஒரு பதிவு கூட எழுதாமல் விட்டுவிடுவோம். எழுத ஏதும் கிடைக்கவில்லை என்கிற அர்த்தம் இல்லை. நேரம் கிடைக்காதது ஒரு காரணமாக இருந்தபொழுதிலும், சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் ஒரு மனநிலை தான் காரணம். திடீரென்று ஒரு நாள் எழுத ஆரம்பித்தால், பதிவுகள், ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.

ஒரு புத்தகத்தை முழுதாக வாசித்து நிறைய நாட்கள் ஆகிறது. புத்தகத்தை எடுத்து படித்தே நிறைய நாட்கள் ஆகிறது. பஸ்ஸிலோ ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு விசயத்துக்காக காத்திருப்பின் பொழுதோ அருகில் யாரேனும் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் வயித்தெரிச்சல் தான் வருகிறது. நான் ஐ·போன் வைத்திருக்கிறேன். நீங்கள் கடும் வெயிலையும் பனிபொழிவையும் ஒரு சேர பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அது போன்ற ஒரு விசயம் தான் இந்த ஐ·போன். முட்டாள்தனமான ஆனால் அதே சமயத்தில் மிகச்சிறந்த device இதுதான். ஐ·போனில் நான் ரசிக்கும் விசயம் : Multi zoom. கடந்த சில ஆண்டுகளாக நான் நிறைய PDAக்கள் மாற்றி மாற்றி வைத்திருந்திருக்கிறேன். HPiPAQ, O2 மற்றும் Black Berry. என் நண்பர்கள் சிலர் HT, dopod,Nokia E series மற்றும் ஆம்னியாக்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொன்ன ஒரு PDAவில் கூட ஐ·போனில் இருக்கும் அளவுக்கு வசதியாக internet browse செய்ய முடியாது. எம்.எம்.எஸ், எஸ்.எம்.எஸ் ·பார்வேர்ட் செய்ய முடியாதது போன்ற விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டேஅல்ல. I need browsing; that is realy fantastic in iPhone.

ஐ·போன் வாங்கிய பிறகு (அக்ச்சுவலா ஐ·போன் என் மனைவிக்குத் தான் வாங்கினேன்!) ஏனோ புத்தகம் எடுத்துச்செல்வதில்லை. என் நண்பர்கள் அடித்த கமெண்ட்: முன்பெல்லாம் முத்துவோட பையில புத்தகம் இருக்கும்; இப்போ காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று பைய திறந்தா ஒரே டப்பாக்கள் மயமா இருக்கு! உண்மைதான். ஆனால் புத்தகம் எடுத்துச்செல்லாமல் இருப்பதற்கு பையில் இடமில்லாதது காரணம் இல்லை. மனமிருந்தால் மார்க்கபந்து! எடுத்துச்செல்ல விருப்பமில்லாததே காரணம். ஐ·போனில் என் கூகிள் ரீடரைத் திறந்தால், நேரம் போவதே தெரியாது. அதற்கப்புறம் இருக்கவே இருக்கிறது டிவிட்டர். அதற்குள்ளாக ஆபீஸ் வந்துவிடும். அப்புறம் மீண்டும் வீடு திரும்பும் போது அதே ரீடர் மற்றும் டிவிட்டர். ஐ மிஸ் மை புக்ஸ்.

இன்று ஆபிஸிலிருந்து வீட்டுக்கு MRTயில் வந்துகொண்டிருக்கும் பொழுது, என் அருகே நின்றிருந்த ஒரு நபர் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். என்னிடம் ஒரு கெட்ட பழக்கமிருக்கிறது. அநேகமாக புத்தக பிரியர்கள் அனைவருக்குமே இந்த நோய் இருக்கும் என்று நினைக்கிறேன். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் நபர் என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் எங்களுக்கு மண்டை வெடித்து சுக்குநூறாகிவிடும். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். அப்பொழுது தான் கவனித்தேன் அந்த நபருக்கு அருகில் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் சீரியஸாக எட்டிப்பார்த்து அந்த நபர் திறந்துவைத்திருக்கும் பக்கங்களை ஓசியாக படித்துக்கொண்டிருந்தார். He must be very bored. கடைசியாக என் பிரயத்தனங்களை பார்த்து பாவப்பட்ட அந்த நபர், சும்மா ரிலாக்ஸ்டாக புத்தகத்தை மடிப்பது போல மடித்து எனக்கு அந்த புத்தகத்தின் தலைப்பைக் காட்டினார். One night at a call center.

அந்த நபர் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். புத்தகம் படிக்கும் பொழுது வாசிப்பவரின் முகபாவனைகளை எனக்கு ரசிக்கப்பிடிக்கும். நான் எழுதிய கதைகளை என் நண்பர்களுக்கு படிக்க கொடுக்கும் பொழுது, அருகில் உட்கார்ந்து அவர்களின் முக மாற்றங்களை கவனித்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் அவர்களது முகம் ஏதோ மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போன்றே இருக்கும். ஆனால் இந்த நபர் பல்வேறு உணர்ச்சிகளை காட்டிக்கொண்டிருந்தார். சிரிப்பு. வெட்கம். சிரிப்பு கலந்த வெட்கம். அவர் வாசித்தலை பறிபூரணமாக ரசித்துக்கொண்டிருந்தார்.

ஐ·போன்களும் கின்டில்களும் Audio Booksஉம் வந்துவிட்ட பிறகும் மக்கள் இன்னமும் பேப்பர் புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Surrogacy and Lahore Murder Mystery.

நியுயார்க் டைம்ஸில் வெளிவந்த இந்த கட்டுரை படித்தீர்களா?

They were saying that this was done to show the Indians that we in Pakistan are also the victims of terrorism.
“You think our own government did it?” I asked.
“No one else could get away with this kind of thing,” he insisted.

Others were more specific: a member of the opposition Pakistan Muslim League said he “had no doubt” that this was the work of the Indian intelligence agencies. A former head of Pakistan’s security service, the I.S.I., agreed with him. An analyst from Islamabad, discussing the attack later in the day on a popular chat show, said that “from every angle” it was evident that India, by attacking a foreign cricket team in Pakistan, had gained. “Who benefits?” she said. “You have to ask who benefits.”

Again at the paan stall, now surrounded by listeners, I asked Ali Raza if he thought there was a chance that the attack was the work of terrorists or criminals. “There is a chance,” he admitted. “But it could be the agencies. It could be the government. It could be India also.”
I asked, “What about other people?”
“Which other people?”
I said, “The people who kidnap journalists and bomb the homes of politicians and slit the throats of government spies.”
He was thinking about it.

லாகூரில் நடந்தது என்ன? யார் காரணம் என்றெல்லாம் பலரும் யோசித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த சம்பவம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கு ஒரு மூடுவிழாவாக இருக்கும் என்று பலர் சொன்னாலும், இதனால் இந்தியாவும் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை; உண்மையிலும் உண்மை. ஐபிஎல் விளையாட வருவதற்கு ஏற்கனவே பல நாடுகள் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த சம்பவம் இந்தியாவின் கிரிக்கெட்டையும் பாதிக்கத்தான் போகிறது. Anything that happens in the sub-continent affects the whole sub-continent. இதில் யாருக்கு அதிக லாபம்? அல்லது அதிக இழப்பு? ஐபிஎல் பாதிப்படைந்தால் யாருக்கு நஷ்டம்?

*

Surrogacy பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதில் வாடகைத் தாய் ஒரு தொழிலாக வளர்ந்து வருவதைப் பற்றி குறைபட்டுக்கொண்டிருந்தார் Thomas Frank.

வாடகைத்தாய் தொழிலாக வளர்ந்துவருவது மட்டுமின்றி அது இந்தியாவுக்கு outsource செய்யப்பட்டும் விட்டது. இந்தியாவில் வாடகைத்தாய்க்கு ஒரு குழந்தை பெற்றுத்தர ஏழாயிரம் ரூபாய் சம்பளமாம். இதே வாடகைத்தாய்க்கு அமெரிக்காவில் 70000 டாலர் வரை செலவிடவேண்டுமாம். Outsourcing looks like a better alternative!

இதற்கெல்லாம் ஒபாமா தடை போடுவாரா என்பது மற்றொரு கிளைக்கேள்வியாக இருந்தபொழுதிலும், இந்த வாடகைத்தாய் முறையை, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதி உடைய நார்மல் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதிலிருந்து தப்பிக்க பயன் படுத்தலாமா கூடாதா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. ஆனால் பதில் இல்லை. It depends.

பெண்கள் பலரும் வேலைக்கு வந்துவிட்ட இந்தச் சூழலில் பெண்கள் குடும்ப வேலைகள் செய்வதில் சிக்கல் வந்துவிடுகிறது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு முக்கியமான வேலை. இப்பொழுது சிங்கப்பூரில் நான் பார்த்தே என்னுடைய நண்பர்கள் பலர் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்கின்றனர். வீட்டுக்கு வந்து பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டர்ஸ் ஒரு வகை. இது ரொம்ப காஸ்ட்லி. எளிமையான வழி: பேபி சிட்டர்ஸின் வீட்டுக்கே சென்று குழந்தையை விட்டுவிட்டு வருவது. பிறகு சாயந்தரம் போய் கூட்டிக்கொள்வது. எத்தனை மாதக்குழந்தை? இரண்டு மாதக்குழந்தை. என் நண்பரும் நானும் அவருடைய குழந்தைக்கு பேபி சிட்டர் தேடிக்கொண்டிருந்த பொழுது வந்த resumeவில் இருந்த ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் அறைக்குள்ளேயே புகை பிடித்துக்கொண்டிருந்தார். நிராகரித்தோம். நாங்கள் போனபோது அவர் அப்படி புகை பிடித்துக்கொண்டிருந்ததால் தான் எங்களுக்கு தெரிந்தது இல்லையேல்? இவ்வாறு பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று நான் சொல்லவரவில்லை; அதைத் தான் it depends என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே. ஆனால் ஒரு இருபது வருடத்திற்கு முன்னர் இது கண்டிப்பாக சாத்தியமாக இருந்திருக்காது. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. சில முக்கிய கடமைகளையும் துறந்து.

பெரும்பாலான அலுவலகங்கள் பெண்களுக்கு மூன்று மாதமே மகப்பேறு விடுமுறை அளிக்கின்றன. மூன்று மாதம் கழித்து, பிள்ளைகளை யார் பார்த்துக்கொள்வது? பிள்ளைகளை பார்த்துக்கொள்வதை விட மகப்பேற்றினால் ஏற்படும் சிக்கல்கள் மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடுவதில்லை. அப்போ வேலைக்கு எப்படி போவது? மேலும் பிள்ளையை சுமந்துகொண்டிருக்கும் காலத்தில் ஒழுங்காக வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை. அதனால் வேலையில் நியாயமாகக் கிடைக்கும் முன்னேற்றமும் கிடைப்பதில்லை. நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய பிஸினஸ் அனலிஸ்ட் ஒருவர் பிள்ளை பிறக்கும் ஒரு நாளுக்கு முன் வரை தானாக காரை ஓட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வருவார். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஒரு மணிக்கும் மேலாக பயணம் செய்யவேண்டியிருக்கும். அவரை பார்க்க எங்களுக்கே பயமாக இருக்கும். ஏன் இந்த தேவையில்லாத பிரச்சனை? பேசாமால் வாடகைத்தாயிடம் outsource செய்துட்டா பிரச்சனை தீர்ந்ததுல்ல என்று சில கெரியர் ஓரியன்டட் பெண்கள் நினைக்கிறார்கள்.

தவறில்லையே? இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் வலியைக்குறைக்க (அல்லது வலியே தெரியாமல் இருக்க) ஊசிகள் போடப்படுகின்றன. இதைத் தவிர சி-செக்ஷனுக்கு போகலாமே என்று விரும்பிக்கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியாவில் சி-செக்சன் கேட்காமலயே கிடைக்கும் என்பது வேறு விசயம். (முதலில் இதை வழிமுறைப் படுத்த அரசு முன்வரலாம். இது ஒரு தனி டாபிக்.) இதே போல இன்னும் சில பல வருடங்கள் கழித்து வாடகைத்தாயும் சர்வ சாதாரணமான விசயம் ஆகிவிடலாம், யாருக்கு தெரியும்? Division of labour! (via)

*

வாக்குமூல‌ம் (சிறுக‌தை) (மீள் ப‌திவு)

1

நான் = பிரபு

என்னால் நம்பவே முடியவில்லை. நித்யாவா இப்படி?
‘டேய் உண்மையாகத்தான் சொல்றியா?’ நான் மதனிடம் கேட்டேன். உடன் முரளியின் சகோதரன் கார்த்திக் இருந்தான். நான், முரளி, மதன், கணேஷ், நித்யா, சுபா, திருவேங்கடம் அனைவரும் எம்.சி.யே. கடைசி வருட நண்பர்கள்.
‘நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் தண்ணியடிக்கும் போது கணேஷ் ஒளர்னான்’
நான் நம்ப முடியாமல், முரளியின் சகோதரன் கார்த்திக்கைப் பார்த்தேன். கார்த்திக் தலை கவிழ்ந்தான்.
‘கணேஷ் வீட்டு போன் தான் இதுக்கு மெஸஞ்சர்’ – மதன்
கார்த்திக் இப்பொழுது மதனை முறைத்தான்.
கையில் வைத்திருந்த பீரை இன்னொரு மடக் குடித்தான்.
மதன் – ‘என்னை ஏன்டா முறைக்கிற? முரளி எனக்கு நண்பன் மாதிரி பிரபுவும் எனக்கு நண்பன் தான். எத்தனை நாள் மறைக்கிறது? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ல?’ என்று கூறி சிரித்தான்.
‘டேய்..உன் கெழமொழியெல்லாம் இருக்கட்டும், சத்தியமா சொல் நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ நான்
‘மாப்ள. இந்த பீர் பாட்டில் மேல சத்தியமா சொல்றேன்! நித்யா, முரளிய லவ் பண்றா! அவன் கிட்ட ப்ரோபோசும் பண்ணிட்டா!’
என்னால் நம்ப முடியவில்லை.
மதன் – ‘ஏண்டா! நீயும் நித்யாவும், இணை..பிரியா நண்பர்களாச்சே, உன்கிட்ட அவ இத சொல்லலியா? என்னதான் இருந்தாலும் நீ பாய் பிரண்டு தானே, கேர்ள் பிரண்டா இருந்தா சொல்லியிருப்பா!’ என்று ஏதோ ஜோக் சொன்னவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.
‘நித்யா ஏன் இப்படி செய்தாள்! என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல?’

**

2
நான் = திருவேங்கடம்

நான் திருவேங்கடம். நான், சுபா, நித்யா,மதன், கணேஷ், முரளி அனைவரும் ஒரே கிளாஸ். எம்.சி.யே. மதுரை காமராஜ் மாலை நேர கல்லூரி. ம்..ம்.. ஒருத்தனை விட்டுட்டேன்னு நினைக்கிறேன். அவன் தான்..அலட்டல் கேசு…பிரபு. மெட்ராஸ்லேருந்து மதுரைக்கு படிக்க வந்திருக்கான். படிக்கவா வந்திருக்கான்? ம்..ம்..அவனுக்கு நிறைய பெண்கள் சினேகிதம். அதனாலேயே அவனுக்கு திமிர் ஜாஸ்தி.
நான் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன், இன்னைக்கு.
‘டேய், குழந்தை..சொல்லுடா..பிரபு டைரியில இருந்து எந்த பொண்ணு போன் நம்பரை எடுத்த?’ – கணேஷ்.
குழந்தைன்னு என்னைத்தான் கூப்பிடுறான், இந்த சோடாபுட்டி கணேஷ். ஒன்னும் இல்லீங்க, அதென்ன பிரபு பேசினாத்தேன் பொண்ணுங்க எல்லாம் பேசுமா? நான் பேசுனா பேசாதான்னு பிரபு டைரியில இருந்து எனக்கு பிடிச்ச பொண்ணு போன் நம்பரை எடுத்துட்டேன். அத இவிங்க எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாய்ங்க. மாட்டிக்கிட்டேன். சும்மா விடுவாய்ங்களா? ஆனாலும் நானாவது சொல்றதாவது? ஹ..ஹே..கம்முன்னு நல்லா தவளைய முழுங்கின பாம்பு மாதிரி உக்காந்திருந்தேன்.
‘டேய்..டேய்.. அது மஞ்சு போன் நம்பர் தானே?’ – மதன், ‘நான் தான் கிளாஸ்லேயே பார்த்திருக்கேனே, உன்னோட ஒன்றரைக் கண்ணில அரைக் கண்ண உருட்டி அவளை பாப்பியே? ஆமா குழந்தை..எனக்கு ஒரு சந்தேகம்..அவளோட பெரிய உடம்பு என் அரைக் கண்ணில பத்துதா?’ என்று கேட்டுவிட்டு மாயா பஜார் ரங்காராவ் மாதிரி சிரித்துவைத்தான்.
நான் சிரிக்கல. ம்..ம்…சிரிப்பனா?
‘ப்ளீஸ்.. டா மாமு. சொல்லிடு. இத்தனை பேர் கேக்கரோமில்ல. உன்னோட ஆளு யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கிறோமே..ப்ளீஸ் டா செல்லம் சொல்லுடா…’ கணெஷ்.
‘ம்ம்..ஹ¤ம்.. மாட்டேன்’ நான்
‘சரி நமக்குள்ள ஒரு டீல். நீ இதச் சொன்னேன்னா..நாங்க..உனக்கு ஒரு ஹாட் மேட்டர் சொல்லுவோம்’ மதன்.
மதனை கணேஷ் முறைத்தான். எதற்கு மதனை கணேஷ் முறைக்கிறான். எனக்கு ஏதோ பொறி த‌ட்டிய‌து.
‘ஓகே..அப்படீன்னா..நீ முதல்ல சொல்லு’ நான்
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நித்யாவும் நல்ல பொண்ணு, முரளியும் நல்ல பையன். வாயே திறக்கமாட்டான். அதுவும் பொண்னுங்ககிட்ட கேக்கவேவேணாம். எப்படி இவர்களுக்குள்? என்ன இருந்தாலும் முரளி என் நண்பன்..ஹ்ம்ம்..எங்கிருந்தாலும் வாழ்க!!
‘இப்ப சொல்லுடா..யாரு போன் நம்பரை நீ எடுத்த?’ மதன் விடுவதாயில்லை.
‘ம்..சொல்லமாட்டேன்..என்னை என்ன‌ லூசுன்னு நினைச்சயா?”

**

3
நான்=கணேஷ்
இன்றைக்கு ரூமில நான், மதன், முரளியின் சகோதரன் கார்த்திக் இருக்கிறோம். கார்த்திக் ஒரு மூளையில படுத்திருக்கிறான். மதனும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் முரளி தூங்கிகொண்டிருக்கிறான். குழந்தை வந்தான்.
‘வாடா..குழந்தை!’ மதன்.
‘என்னடா இரண்டு பேரும் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருக்கீங்க’ – குழந்தை.
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
பானையில் தண்ணீர் குடித்து விட்டு, எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் குழந்தை.
‘சொல்லுங்கடா. என்ன ப்ராபளம்? நான் தீர்த்துவைக்கிறேன்’ – குழந்தை.
‘நித்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். இந்த வருட படிப்பு முடிந்ததும் கல்யாணமாம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இன்ன வரைக்கும் அழுதிட்டு இப்பத்தான் படுத்தான் முரளி’ நான்
சிறிது நேரம் யோசித்த குழந்தை, ‘அதுக்கென்ன, நித்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல், நிச்சயம் முடியட்டும். நம்ம ஆள் தான் காதல் மன்னனாச்சே, கல்யாணத்திற்கு முந்தின நாள் கடத்திட்டு வந்துரட்டும்’..குழந்தை சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி ஏதோ கௌவ்ரம் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டு, ‘என்ன கணேஷ் நான் சொல்றது?’ என்றான்.
மதன் வேகமாக எழுந்து வாஷ் பேசினில் போய் நன்றாகக் காரித்துப்பிவிட்டு வந்தான். எங்கள் குரூப்பிலே குழ‌ந்தை தான் ‘ஓட்டு’ வங்கி. அவனைத் தான் ஓட்டு ஓட்டு என்று அனைவரும் ஓட்டுவோம். முரளியின் தம்பி கார்த்திக் கூட சில சமையங்களில் கேலி செய்வான். ஆனால் அதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
‘ஐடியா சரியில்லேன்னா வேற யோசிப்போம்’ என்று நகர்ந்து உட்கார்ந்தான் குழந்தை.
அப்பொழுது தான் தூக்கதிலிருந்து கார்த்திக் எழுந்தான். ‘டேய் கார்த்திக்..இங்க வாடா!’ என்றான் குழ்ந்தை.
கார்த்திக் வந்து உட்கார்ந்தான்.
‘பயப்படாதே! ஒன்றும் நடக்காது! நான் இருக்கிறேன். எப்படியாவது உங்க அண்ணனையும் அண்ணியையும் (நித்யா) சேர்த்து வைக்கிறேன்’ குழந்தை.
கார்த்திக் பேசாமல் இருந்தான்.
‘ஆமா..உங்க அண்ணன், இத பத்தி உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?’ குழந்தை.
‘எங்க அப்பாகிட்டயா?’ கார்த்திக்
‘ஆமா’ குழந்தை.
‘செருப்பால‌டிப்பாரு’ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கார்த்திக்.
குழந்தை எங்களைப் பார்த்தான்.

**

4
நான்=பிரபு

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கலாம் என்றால், தன்மானம் இடம் தரவில்லை. அவளா வந்து சொல்லியிருக்கலாம். ச்.சே..கடைசியில் இப்படி ஆகிடுச்சே. கணேஷ் வீட்டு போன் தான் மெசஞ்சராமே!..ஹம்ம்..
நான் கணேஷ் வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘வாப்பா, பிரபு! எப்படி இருக்கே! உன்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் நலமா? நலமறிய அவா!’ என்று சொல்லிக் கண்சிமிட்டினார், கணேஷின் அப்பா.
கணேசஷின் அப்பா கணேஷைப் போல கல்லூளி மங்கன் கிடையாது.எதையும் மறைக்காமல் பேசுபவர்.
‘எல்லாம் நால்லாயிருக்கங்கப்பா!’ நான்
‘ஏண்டி மரகதம், யார் வந்திருக்கா பாரு, மன்மதராசா வந்திருக்காக! காப்பி எடுத்திட்டு வாம்மா!’ மனைவியை அழைத்தார். எனக்கு சிரிப்புதான் வந்தது. நானா ம‌ன்ம‌த‌ராசா?
‘கணேஷ் எங்கப்பா காணோம்?’ என்றேன்.
‘முரளி வந்திருந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? கணேசுக்கு பொண்ணுங்ககிட்டே இருந்தெல்லாம் போன் வருது! இன்னைக்கு நான் போனை எடுத்திட்டேன்! ஹி..ஹி..ஹி..’ என்று சொல்லி மறுபடியும் கண்சிமிட்டினார்.
எனக்கு பகீரென்றது.
‘போன்ல யாருப்பா?’ நான்.
‘நித்யாவோ ச‌த்யாவோ ச‌ரியா ஞாபகம் இல்ல‌. நீ என்ன‌ ரொம்ப‌ ஆர்வ‌மாயிருக்க‌. அதான‌ நீ தான் காத‌ல் ம‌ன்ன‌னாச்சே!’ என்றார்.
ம்..ம்.. என்க்கு தெரியாமலா? எனக்கு கோபம் வந்தது.
‘இப்போ எங்க போயிருக்கானுங்க இவனுங்க?’ நான்
‘போன் வந்த கொஞ்ச நேரத்தில ரெண்டு பேரும் வெளியில கிளம்பி போய்ட்டாய்ங்க. இவிங்க திரியிற திரிச்சலே சரியில்ல. ஏண்டியம்மா காப்பித் தண்ணிய கொண்டுவா!’
‘சரிப்பா நான் போயிட்டு வாரேன்’ நான்
‘அட, இருடா! காபி சொல்லியிருகேன்ல! நீ இருந்தா தான் எனக்கு கிடைக்கும்!’

**

5
நான்=கார்த்திக். முரளியின் சகோதரன்.
குழந்தை வந்து உட்கார்ந்தார். ‘டேய்! கார்த்தி! உனக்கு சின்ன வயசு. நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே.!’
எனக்கு சின்ன வயசாம். நானும் எம்.சி.யே ஈவினிங் காலேசில தான் படிக்கிறேன். இவங்களோட ஒரு வயசு கம்மி. குழந்தை அளந்தாருன்னா அதுக்கு அளவே இருக்காது. டுபுக்ககு. இவரை குழந்தைன்னு கூப்பிடறதுக்கே ஒரு கதை இருக்கு.

ஒரு நாள் இரவு ரொம்ப நேரமா பன்றி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் பன்றியின் சத்தம் ஓயவில்லை. எங்களுக்கே தூக்கம் வரவில்லை. குழந்தை வீராப்பாக நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். வந்தவர்,’அது ஒன்றுமில்லை பசங்களா. பன்றி ‘குழ்ந்தை’ போட்டிருக்கு’ என்றார்.

பன்றியாவது? குழந்தையாவது? எங்களுக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் அவரிடம் மறுபடியும் கேட்க, அவர் கூலாக ‘என்னங்கடா, புரியாதமாதிரி பார்க்கறீங்க! பன்றி குழந்தை போட்டிருக்கு அதுதான் கத்தறது. தூங்குங்க!’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். அன்றிலிருந்து திருவேங்க‌ட‌த்தின் திருநாமம் குழ‌ந்தை என்றான‌து.

‘டேய்..கார்த்திக்! நான் வேணும்னா உங்க அப்பாரு கிட்ட வந்து பேசட்டுமா? நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு! ஒன்னு செய்யறேன், இந்த வாரம் உங்க அப்பாகிட்ட வந்து பேசறேன்!’
இவர் வந்து பேசினா எங்க அப்பா கேட்ருவாரா? டுபுக்குன்னா ச‌ரியாத்தான் இருக்கு.

**

6
நான்=பிரபு
அதோ முரளியும் கணேசும் std பூத்திலிருந்து வெளியே வருகிறார்கள். நான் மறைந்து கொள்கிறேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றபின், நான் மெதுவாக கடைக்குள் நுழைகிறேன்.
‘வாங்க பிரபு, அண்ணே’ என்றான் பூத் பையன்.
‘ஏண்டா! முரளியும் கணேசும் இங்க வந்தாங்களா? என்றேன். தெரியாததுபோல்.
‘ஆமாண்ணே! வந்தாங்க!’
‘எதுக்கு வ‌ந்தாங்க‌?’
‘ம்ம் புரோட்டா சால்னா சாப்பிட‌ வ‌ந்தாங்க’
நான் அவ‌ன் க‌ஸ்ட‌ம‌ர்க‌ள் ட‌ய‌ல் செய்யும் போன் ந‌ம்ப‌ர்க‌ளை குறித்து வைக்கும் லெட்ஜ‌ரைப் புர‌ட்டினேன்.
‘அண்ணே..என்னாச்சு? சிபிஐல‌ வேலை கிட‌ச்சுடுச்சா?’
அவள் வீட்டு நம்பர் தான்.

**

7
நான்=கணேஷ்
குழந்தை வந்தான். முரளியிடம் சென்றான்.
‘டேய் முரளி! உனக்கு இதெல்லாம் தேவையாடா! நீ எதுக்கு இங்க வந்த? படிக்கத்தானே? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்ல படிக்க வைக்கிறாங்க? உனக்கு லவ்வெல்லாம் தேவையாடா?’ முரளி மவுனமாக இருந்தான்.
‘அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிற பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும் அதுதான் நிலைக்கும்! காதல் கல்யாணம் எல்லாம் சும்மா ஜிகினா தூள் மாதிரி’ குழந்தை. உதாரணத்துக்கொன்னும் கொறைச்சல் இல்ல. முரளி ஏதும் பேசவில்லை.
‘என்னடா பேசாம இருக்க? இப்ப என்னையே எடுத்துக்கோ. வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் நான் இன்னும் லவ் பண்ணாம இருக்கேன்!’ குழந்தை
திஸ் இஸ் டூ மச். எனக்கு சிரிப்பு வந்தது. முரளி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
‘இப்போ என்னதான் பண்ணலாம்னு முடிவோட இருக்க?’ குழந்தை முரளியை விடுவதாகை இல்லை.
‘டேய் மாமா! இங்க வா! ஏற்கனவே பயத்துல இருக்கிற அவன் கிட்ட எதையாவது சொல்லி மேலும் பயமுறுத்தாத. பய ஏதாவது பண்ணிக்கப் போறான்! நான் குழந்தையைக் கூப்பிட்டேன்.
குழந்தை திகிலுடன் முரளியைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்தான்.
‘என்னடா சொல்ற?’ குழந்தை.
‘நீ தான் ஏதாவது ஐடியா கொடுக்கனும்’ நான்
குழந்தை தீவிரமாக யோசித்தான்.

**

8
நான்= சுபா
2..5..6..6..3..6..4 எண்களை டயல் செய்து, ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
ஒரு ரிங்…ரெண்டு ரிங்…’மடையா எடுடா..’
‘ஹலோ’ மறுமுனை
‘ஹலோ! பிரபுவா?’ நான்
‘ம்ம்.. சுபா?’ பிரபு
‘ஆமா! எப்படிடா இருக்க?’ நான்
‘ரொம்ப முக்கியம். என்ன விசயம் சொல்லு!’ பிரபு
‘என்னடா ரொம்ப சூடா இருக்க போலிருக்கு, ம்..ம்..சரி..முரளியை எப்படி பிடிக்கிறது?’ நான்
‘வாட்?’ பிரபு
‘இல்லப்பா! முரளியை எப்படி கான்ட்டாக்ட் பன்றதுன்னு கேட்டேன்?’ நான்
‘நீ எதுக்கு அவனைக் கான்ட்டாக்ட் பண்ணனும்?’ பிரபு
‘இன்னிக்கு காலையில, நித்யாவும் முரளியும் வெளியில போனாங்க, இன்னும் வரலை! மதியம் 2 ஆச்சு, அவங்க அம்மா தேடறாங்க! அதான் கேட்டேன்! நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணற’ நான்
சிறிது மவுனம். பிறகு லைன் துண்டிக்கப்பட்ட சத்தம்.
எனக்கு ஏமாற்றம். கோபமும் கூட. ‘இவன் ஏன் இப்படி பண்றான், ஸ்டுப்பிட்’ ரிசீவரை வைத்தேன்.

**

9
நான்=கணேஷ்

திருவேங்கடம் இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தான். திருவேங்கடமா? யாரு அதுன்னு யோசிக்கிறீங்களா? அதுதாங்க, நம்ம குழந்தை! ஹி..ஹி..

குழந்தை, நித்யா-முரளி க்கு ஒரு வழி யோசித்துக் கொண்டிருந்தான். அறையில் மதன், நான்,குழந்தை,கார்த்திக் ஆகியோர் இருக்கிறோம்.
குழந்தை தொல்லை தாங்கமுடியல. ஐடியா தருகிறேன் பேர்வழி என்று எதையாவது ‘அச்சு பிச்சு’ ன்னு உளறார்.
‘இப்படிப் பண்ணா என்ன? பேசாமா நித்யாவை முரளி வீட்லையும் முரளியை நித்யா வீட்லையும் வேலை செய்ய சொல்வோம். அப்புறம் நித்யா வீட்ல முரளியையும், முரளி வீட்ல நித்யாவையும் புடிச்சுப் போயிரும். அப்புறம் என்ன சுபம் தான்’ குழந்தை.
‘என்ன படம் முடிஞ்சிருச்சா! ஏன் குழந்தை நீ வேற படுத்தற? எரிச்சலக் கிளப்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா?’ நான்
‘அதெப்படி நாம பேசாம இருக்கிறது, நம்ம பிரண்டோட வாழ்க்கை இல்லியா?’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.

**

10
நான்=கணேஷ்
‘டேய் எல்லோரும் இருக்கீங்களா? எங்கடா போய் தொலைஞ்சீங்க?’ நல்ல போதையில் பிரபு வந்தான்.
நான் பிரபுவைப் பார்த்து, ‘ என்னடா பிரபு? எப்பவுமே இங்க வந்து தானே ஏத்துவ? இன்னிக்கு ஏத்திக்கிட்டு அப்புறம் இங்க வந்திருக்க?’ என்று கேட்டேன்.
பிரபு, ‘உஷ்…நீ பேசாத!’ விக்கல் ‘நீ கூட..நீ கூட..என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா?
நான், ‘டேய்..நித்யா உன் பிரண்டு, உனக்கு தெரியும்னு நினைச்சேன்’
‘பிரண்டு..பொல்லாதா பிரண்டு..அவளை நான் என் பிரண்டு மாதிரியாடா வெச்சிருந்தேன்..இங்க டா..இங்க வெச்சிருந்தேன் அவளை’ பிரபு இதையத்தைக் காட்டினான்.
எனக்கு விளங்கியது. ஆகா மேட்ட‌ர் இப்ப‌டி போகுதா?
‘என்னடா சொல்ற மச்சான்?’ மதன்
‘என்ன நொன்னாடா சொல்ற? அதான் சொன்னேனே, இதயத்தில வெச்சிருக்கேன்னு. யெஸ். ஐ லவ் ஹெர்! அதுக்குள்ள இந்த முரளி பய வந்து ஆட்டைய களைச்சுட்டான்’ விக்கல்.
நாங்கள் விக்கித்து நின்றோம்.
‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னானுங்க, ஊமை மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணியிருக்கான் பாரு இந்த முரளி. அவனுக்கு துணை இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு தலைவர்..கணேஷ்’..என்னைப் பார்த்து கண்ணை உருட்டினான், பிரபு.
‘நான் ஒரு வேளை செத்தா, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் அப்படீன்னு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். கவிதை கூட எழுதிருக்கேன். படிக்கவா?’ பாக்கெட்டைத் துளாவி ஒரு லெட்டர் ஒன்றை எடுத்தான்.
எனக்கு திக்கென்றது. கவிதைக்காக அல்ல.
‘நீ எதுக்குடா சாகனும்?’ நான்.
‘டேய் மடையா, மனுசனா பிறந்தா, சாகறது உறுதிடா. அதுவும் ரெண்டு புல் பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து குடிச்சா கண்டிப்பா குளோஸ் டா..ஹா..ஹா..’ சிரித்துக் கொண்டே சரிந்தான் பிரபு. வாயில் லேசாக நுரை.
‘ஐயையோ…விளையாட்டு வினையாகிடுச்சேடா! தூக்குங்கடா தூக்குங்கடா’ பதறிக்கொண்டு தூக்கினோம்.

**

11
நான்=நித்யா

இன்று காலை எழுந்து குளித்து விட்டு, என்னுடைய கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தேன். நாளைக்கு அஸைன்மென்ட் வைக்க வேண்டும். இன்று புரோகிராம் எழுதி டெஸ்ட் செய்ய வேண்டும். தெண்டப் பசங்க, நாளைக்கு என்னைப் பார்த்துதான் காப்பியடிப்பானுங்க. பவர் பட்டனை ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. ஆப் செய்து ஆன் செய்தேன்..ம்..ஹ¤ம்…பூட் ஆகவில்லை..போனதடவை..இது மாதிரி ஆனப்போ கணேஷ் தான் சரி செய்து கொடுத்தான்.
கணேஷ் நம்பரை சுழற்றினேன்.
கணேஷின் அப்பா எடுத்தார். ‘ஹலோ..யார் பேசறது?’
‘கணேஷ் இருக்காறா?’
‘நீ யாரும்மா?’
‘நான் கணேஷோட பிரண்ட் நித்யா.’
‘ஓஹோ…!! டேய் கணேஷ் ஓடியாடா! எதோ பொண்ணு பேசுதுடா..ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்..’ சிரித்தார்
கணேஷ் போனை வாங்கி பேசினான்.
‘என்ன நித்யா?’

**

12
நான்=கணேஷ்
அப்பாவிடமிருந்து போனை வாங்கினேன்.
‘என்ன நித்யா?’
‘என் கம்ப்யூட்டர் பூட் செய்யலடா. ஏதோ ப்ராபளம் போல் தெரியுது!’ என்றாள்
நான் சில சிம்ட்டம்ப்ஸ் (symptoms) கேட்டும் எனக்கு புலப்படவில்லை, சரி வீட்டிற்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு, முரளி இதில் எக்ஸ்பேர்ட் என்பதால் அவனையும் வருமாறு அழைத்துக் கொண்டேன். நானும் முரளியும் நித்யா வீட்டிற்கு சென்றோம்.

**

13
நான்=முரளி
நித்யா வீட்டிற்கு சென்றும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. எங்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எனவே புராஸஸரை எடுத்துக் கொண்டு செர்வீஸ் ஸ்டேசன் போகலாம் என்று முடிவு செய்தோம். நித்யாவும் ‘நானும் ஹார்டுவேர் கத்துக்கணும் அடுத்த முறை உன்னைக் கூப்பிடவேண்டாம் பாரு, அதனால நானும் வருவேன்’ என்று அடம் பிடிக்கவே அவளையும் அழைத்து சென்றோம். செர்வீஸ் ஸ்டேசனில் நேரமாகும் என்று சொல்லவே, நித்யாவை அனுப்பிவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே, இந்த தகவலை நித்யாவிடம் சொல்ல std பூத்திற்கு சென்றோம். பூத் பையன் நாங்க‌ள் ட‌ய‌ல் செய்த‌ நம்பரைக் குறித்துக் கொண்டான்.

**

14
நான்=மதன்
ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. பிரபு அரை மயக்கத்திலிருந்தான். பல்ஸ் இருந்தது. நாங்கள் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.
‘டேய்..பிரபு’ நான்
‘ம்ம்..ம்ம்..ய்..ய்..யா..யாலு இது..நி.நி..நி..ல்த்யா..வ.கூல்ட்டிட்டுவா’
‘டேய் நான் மதன்டா. என்னை மன்னிச்சிடுடா. நீ கேர்ள் பிரண்டு அது இதுன்னு பிலிம் காட்டினதால உன்னை உன் டியர் பிரண்டோட சண்டை போட வைக்கலானுதான் பிளான் போட்டோம். நான் தான் உன்கிட்ட முதன் முதலா சொன்னது! உண்மையிலே முர‌ளிக்கும் நித்யாகவுக்கும் ந‌டுவில‌ ஒன்னுமே இல்ல.பொய் சொன்ன‌துக்கு ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா!’
சைரன் ஒலி காதைப் பிளந்தது.
‘ப்ளீஸ் சாரிடா!’ கணேஷ்
‘ம்….ம்…ல்ல்…ல்..’ பிரபு முனகினான்
‘மன்னிச்சிட்டேன்னு சொல்றா’ நான்
‘ம…ன்..ல்…னி..ச்…சி..ட்..ட்…ட்..டே….ன்…’
‘சரி! அந்த வாக்குமூல‌ லெட்டர் எங்கேடா வெச்சிருக்க!’ நான் துலாவினேன்.
மடேர் என்று அடி விழுந்தது.
பிரபு எழுந்து உட்கார்ந்தான்.
‘அட பாவி! நான் உயிருக்கு போறாடிக்கிட்டிருக்கிற நேரத்திலும் உனக்கு லெட்டர் தான் முக்கியமா? Driver sir அம்புலன்ஸ நிறுத்துங்க! எனக்கு ஒன்றுமில்லை! ஐயாம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்!’ பிரபு.
எங்களுக்கு நிலைமை விளங்கி, அவனை மொத்த ஆரம்பித்தோம்.

**

15
நான்=பிரபு

நாங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ஆளுக்கொரு மூலையில். குழந்தை வந்தான்.
‘அடடே..பிரபுவா? வாடா! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்க?’
ம்ம் என்றேன்
‘ஆமா..உனக்கு மேட்டர் தெரியுமா?’
‘என்ன?’ நான்
‘நம்ப நித்தியும்…’
‘நித்தியா? யாரு அது?’
‘அதாண்டா உன் பிரண்டு நித்யா!’
‘ம்ம்.ம்ம்’
‘உன் பிரண்டு நித்யாவும். நம்ப முரளியும் லவ் பண்றாங்களாமே!! நித்தி வீட்ல..மாப்ள பார்த்துட்டாங்களாம்..அவங்களைச் சேர்த்து வைக்க நீதான் ஐடியா ஏதாவது கொடுக்கனும்’
நான் கணேஷைப் பார்த்தேன். கணேஷ் மதனைப் பார்த்தான். ம‌த‌ன் முரளியை பார்த்தான். முரளி என்னைப் பார்த்தான்.

குழந்தைக்காக நான் ஐடியா யோசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த‌தும் யோசித்த‌தும்

போஸ்ட் ஆபீஸ் மோசடி,ஜேம்ஸ் ஓடிஸ்,யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை,kindle,H1B, Movies

மோசடிகள் எங்குமே வழக்கமாகிவிட்ட பிறகு போஸ்ட் ஆ·பீஸில் மட்டும் நடக்காமல் இருக்குமா என்ன? வேடசந்தூர் போஸ்ட் ஆ·பீஸில் மோசடி செய்யப்பட்ட பணம் அதிகமில்லை ஜென்டில் மேன் : ஜஸ்ட் ஒன்றரைக்கோடி! போஸ்ட் ஆபீளில் கூட பணத்துக்குப் பாதுகாப்பு இல்லியா? மேலும் ஒரு விசயம் இங்கே யோசிக்கவேண்டும்: இந்த கேஸை துப்பறிய சிபிஐ வேண்டுமா? இங்கே இருப்பவர்களால் ஏன் பல் வெளக்கி துப்பமுடியவில்லை?

என் மனைவி நேற்று என்னிடம் “இனிமே பாங்க நம்பி பணம் போடவே முடியாதா?” என்றார். முதல்ல பணம் இருந்தாத்தானே போடுவோங்கறது இன்னொரு பக்கம், ஆனா உண்மையில பாங்கமட்டுமில்ல யார நம்பியும் பணம் போட முடியாது என்பது தான் உண்மை. குழந்தைகள் பேரில் ஏழு வருசத்துக்கு ரெட்டிப்பு, ஒன்பது வருசத்தில் முட்டிப்பு என்றெல்லாம் இனி அவ்வளவு சுலபமாக போட முடியாதோ?. எப்ப எந்த பேங்க் காலியாகும்ன்னு யாருக்குமே தெரியல. சிங்கப்பூரில ஒரு வயதான தம்பதியினர் தங்களது பென்ஷன் பணத்தை (நூறாயிரம் டாலர்) லேமேன் பிரதர்ஸில் 2008 ஜூனில் இன்வெஸ்ட் செய்தனர். ஆறு மாதங்களில் போட்ட பணம் காலி. சுத்தம். இப்போதைக்கு தங்கம் வாங்குவது தான் சிறந்த வழி என்றும் சிலர் சொல்கின்றனர். கெட்டித்தங்கமாக இருந்தால் பின் நாளில் விற்கலாம். நகையாக வாங்கினால் விற்கும் பொழுது அவ்வளவு லாபம் இருக்காது. ஆனால் தங்கம் விலையும் ராக்கெட் வேகத்துக்கு ஏறிக்கொண்டு போகும் போது என்னத்தான்யா வாங்குறது? So, Cash is King. சிங்கப்பூரில் என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களது வீடுகளை விற்று விட்டு கனிசமான ஒரு தொகையை கையகப்படுத்தியிருக்கின்றனர். எனக்கு விற்க ஆசை தான். வீடு?

*


இந்த ஜேம்ஸ் ஓடிஸ் தொல்ல தாங்க முடியலப்பா. காந்தி உபயோகப்படுத்தின பொருட்களை வைத்துக்கொண்டு அவர் விடுகிற ரவுசு தாங்கல.ஆமா அவ‌ருகிட்ட‌ எப்ப‌டி இந்த‌ பொருட்க‌ள் எல்லாம் போச்சுங்க‌ற‌ கேள்வி என் ம‌ண்டைய‌ காலையிலிருந்து குடைந்து கொண்டிருக்கிற‌து. ஏலம் விடக்கூடாதுன்னா இந்தியா போருக்கு செலவழிக்கும் பணத்தை ஏழைகளின் சுகாதாரத்துக்கு செலவழிக்கவேண்டுமாம். இதெல்லாம் ரொம்ப நக்கல் ஆமா. ரிசன்டா ஸ்லம்டாக் மில்லியனர் படம் பாத்திருப்பார் போல. அப்படியே அரவிந்த அடிகா எழுதின வைட் டைகரையும் படிச்சிருங்க. நான் இன்னும் ஸ்லம்டாக்கும் பார்க்கவில்லை, வைட் டைகரும் படிக்கவில்லை. ஆமா, ஸ்லம்டாக் மில்லியனருக்கு அப்புறம், இந்தியர்களை ஸ்லம் டாக்ஸ் என்று அமெரிக்கர்கள் கேலி பண்ணுகிறார்களாமே? உண்மையா?

*

வருகிற தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லையா, கவலையை விடுங்கள், நீங்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பப்படவில்லை என்பதை அரசுக்கு தெரிவித்துவிடலாம். ஒரு பாரம் இருக்கிறதாம். அது ஓட்டுச்சாவடியிலே கிடைக்குமாம். ஓட்டுப்பதிவு தினத்தன்று ஓட்டுச்சாவடிக்கு சென்று, அந்த பாரத்தை அங்கிருப்பவர்களிடமிருந்து பெற்று, பூர்த்திசெய்து கொடுத்துவிடவேண்டுமாம். எங்களப் பாத்தா என்ன இனாவானா மாதிரி இருக்கா? ஓட்டுப்போட்டாலேநம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க. நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா? இது சம்பந்தமாக ஒரு கேஸ் நிலுவையில் இருக்கிறதாம். ஆனால் ஓட்டுப்போடவில்லை என்றால், தேர்தல் முடிவில் மாற்றம் இருக்குமா? யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா? அங்கேயும் நமக்குத்தான் ஆப்பு. மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும். உண்மையில் யாருக்குமே டெபாஸிட் கிடைக்கலேன்னா அந்த தொகுதில என்ன தான்யா பண்ணுவாங்க?

*

அமேசான் ஐ·போனில் தங்களது டிஜிட்டல் புத்தகங்களை தறவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்திருப்பதைப் பார்த்தீர்களா? Smart Move. இப்போ அமேசான் தான் iTunes for Books. இதன் மூலம் கண்டிப்பாக அவர்களது இரண்டாம் ஜெனரேஷன் Kindle விற்பனை கனிசமாக பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்றாலும், ஐ·போனில் தறவிறக்க அனுமதித்த பிறகு, நிறைய புத்தகங்கள் (கிட்டத்தட்ட 240,000 புத்தகங்கள்) விற்கும் என்பது உண்மைதான். After all, Amazon sells books. மேலும் இந்த கடினமான எகனாமிக் காலத்தில் புத்தகம் வாசிப்பதற்கென்று (Kindle) யார் நூற்றுக்கனக்கான டாலர்களை செலவலிக்கப்போகிறார்கள்?

*

H1B விசா ப்ராஸஸிங் கடினமாக்கப்படுகிறதாமே?

Senators Charles Grassley (R-Iowa) and Richard Durbin (D-Ill.), two of the program’s vocal critics, are pressing for legislative reform as well. They plan to introduce legislation by early April that would require employers to pledge they had attempted to hire American workers before applying for H-1B visas—a step not required under current law. “I want to make sure that every employer searches to make sure there is no American available to do the job,” says Grassley.

செய்தி எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், இந்த செய்திக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் நன்றாக இருந்தன:

1. Outsourcing is irreversible – it will continue to happen in some form or the other (as it has happened all through history). Did you know that Microsoft, JPM & Goldman Sachs have shifted jobs from people laid off here to India and China in the past couple of months? They have not ‘technically’ outsourced any jobs. They’ve just moved jobs to their own offices elsewhere. How do you expect to catch such crooks, who’ll find ways to manipulate your definition of outsourcing?

2. With US universities producing approximately 330,000, computer science and informationsystems graduates annually, I find it difficult to believe that companies can’t staff positions with trained US citizens. Low pay is the reason. I’d be willing to bet that on anyy given day a US trained individual could out perform an H-1B holder.

கிழே இருக்கும் இந்தப்பின்னூட்டம் தான் என்னை எரிச்சலடையச் செய்தது:
3. One solution to the H1-B and L1 problem would be to tighten eligibility. If it is truly for the best and brightest then only those with PhD’s from the top 50 international universities should be eligible and may be Master’s from the top 25. One commonly cited ranking is the Shanghai Jiaotong University and the Times of London Survey. A link is below: http://www.eurogates.nl/en_holland_news/page/15/id/683/

ஏன் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியை உங்களிடம் அனுப்பிவைக்கிறோம். ஓகேவா?

Cartoon from Newyorker:

*
ஸ்டாக் மார்கெட் எல்லாம் மண்ணைக்கவ்வ மூவி பிஸினஸ் லாபத்தை அள்ளிக்கொடுக்கிறதாமே? Up by 14%?

*

ராக‌ம், பெய‌ர்க‌ள், அபி அப்பா ம‌ற்றும் அர‌சு ப‌ள்ளிக‌ள்.

மாச‌ற்ற‌ கொடி த‌லையைக்குணியும் தாம‌ரையே பாட‌ல் ரீதிகௌள‌ ராக‌ம் என்று சொல்லியிருக்கிறார். இசையின்ப‌ம் த‌ன் ப‌திவில் ராக‌த்தைக் க‌ண்டுபிடிக்க‌ பிற‌ பாட‌ல்க‌ளின் ராக‌ங்க‌ளை தெரிந்துகொண்டு அந்த‌ப் பாட‌லையும் இந்த‌ப்பாட‌லையும் க‌ம்பேர் செய்ய‌வேண்டும் என்றார். மாச‌ற்ற‌ கொடி க‌ண்க‌ள் இர‌ண்டால் பாட‌லும் இதே ராக‌ம் தான் என்கிறார். த‌லையைக் குணியும் தாம‌ரையேவும் க‌ண்க‌ள் இர‌ண்டாலும் ஒரே ராக‌த்திலா இருக்கிற‌து? இருப்ப‌து போல‌வும் இருக்கிற‌து. இல்லாத‌து போல‌வும் இருக்கிற‌து.

அது என்ன‌ ரீதிகௌள‌ ராக‌ம்? ஏன் இப்ப‌டி பெய‌ர்? ராக‌ங்க‌ள் தெரிந்துகொள்ள‌ ஏதாவ‌து சைட் (வெப் சைட்ட‌ சொன்னேம்ப்பா! நீங்க‌ வேற‌!) இருக்கிற‌தா என்ன‌? இருந்தால் சொல்ல‌வும்.

*

ராக‌ம் எப்ப‌டியோ, மாச‌ற்ற‌ கொடி பெய‌ர் ந‌ன்றாக‌ இருக்கிற‌து. மாச‌ற்ற‌ கொடி! எப்ப‌டி பிடிக்கிறாங்க‌ பாருங்க‌? என‌க்கு பிடித்த‌ ம‌ற்ற‌ ப்ளாக‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள்:
இட்லிவ‌டை
பினாத்த‌ல்
க‌ப்பிப்பய‌
வெட்டிப்ப‌ய‌ல்
ஒன்றுமில்லை (நிர்ம‌ல் இப்பொழுது ஏன் ப‌திவ‌தே இல்லை? இல்லை ஜாகை மாற்றிவிட்டாரா?)
பொட்டீக்க‌டை (டீ க்கு ம‌ட்டும் “” போட்டிருப்ப‌து!)
செந்த‌ழ‌ல ர‌வி (செந்த‌ழ‌ல்!)
ச‌ர்வேச‌ன் (அவ‌ருடைய‌ லோகோவும்)
வால் பைய‌ன்
அபி அப்பா

இன்னும் நிறைய‌ அப்ப‌ப்போ பாக்கிற‌ப்போ தோணும், இப்போ ஞாபக‌ம் வ‌ர‌ல‌.

*

அபி அப்பா அபியும் நானும் ப‌ட‌ம் வ‌ந்து ரொம்ப‌ நாள் க‌ழித்து ப‌ட‌ம் ப‌ற்றி விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருந்தார். நிறைய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் ப‌டித்துவிட்டு ச‌ரி அபி அப்பா அபியின் அப்பாவாச்சே, அபியும் நானும் ப‌ற்றி என்ன‌ எழுதியிருக்கிறார் என்று படிக்க‌ப் போனேன், ப‌டித்து முடித்து விட்டு, கீழே பின்னூட்ட‌ங்க‌ளையும் வாசிக்கும் பொழுது என்னையும் அறியாம‌ல் நான் சிரித்து விட்டேன்.

அந்த‌ பின்னூட்ட‌ம்: என்னது‌ காந்தி செத்துட்டாரா?

அபி அப்பா, கேலிப‌ண்ற‌துக்காக‌ எழுதல‌, த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌. இந்த‌ மாதிரி பின்னூட்ட‌க்கார‌ர்க‌ளுக்கு ப‌ய‌ந்துட்டேதான் நிறைய‌ எழுதாம விட்டுட‌ வேண்டியிருக்கு. ந‌ம‌க்கு ஒரு விச‌ய‌ம் தெரிந்து அதை எழுத‌னும்னு தோணுற‌ப்போ, ப‌திவுல‌க‌மே அந்த‌ விச‌ய‌த்தை நார்நாரா கிழிச்சு காய‌ப்போட்றாங்க‌!

அத‌னால‌ தான் இப்போ ப‌ட‌ம் விம‌ர்ச‌ன‌ம் எல்லாம் நான் எழுத‌ற‌தேயில்ல‌. முன்ன‌ பேச்சுல‌ரா இருந்த‌ப்போ ப‌ட‌ம் பாக்குற‌து ஒன்னு தான் தொழில். எந்த‌ மொக்க‌ப் ப‌ட‌மா இருந்தாலும் தயங்காம போய் பாத்திட்டு வ‌ந்து ப‌திவு போடுவோம். இப்போ குடும்ப‌ம் பெருத்துப்போச்சு. நான் சிறுத்துப்போயிட்டேன்.

அப்ப‌டியும் அப்ப‌ப்போ ப‌ட‌ம் பாத்துட‌றேன். க‌டைசியாக‌ பாத்த‌ ப‌ட‌ம் க்ரான் டொரினோ.

செந்தில் என‌க்கு பிடித்த‌ ப‌திவ‌ர், அவ‌ருடைய‌ இந்த‌ ப‌திவு க‌ண்டிப்பாக‌ உங்க‌ளையும் சிரிக்க‌ச்செய்யும்.

*

சும்மா த‌மிழ்நாடு அர‌சு ப‌ள்ளிக‌ளைப் ப‌ற்றித் தேடிக்கொண்டிருந்த‌ பொழுது இந்த‌ http://www.coimbatoregovtschools.com வெப் சைட் கிடைத்த‌து. ந‌ல்ல‌ முய‌ற்சி. முத‌லில் பெற்றோர்க‌ளுக்கான‌ வெப் சைட் என்று தான் நினைத்தேன். அப்புற‌ம் வெப் சைட் மூல‌ம் பிள்ளைக‌ளின் க‌ல்வித் திற‌னைத் தெரிந்துகொள்ள‌க்கூடிய‌ பெற்றோர்க‌ள் எத‌ற்காக‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் சேர்க்க‌ப்போகிறார்க‌ள் என்கிற‌ உண்மை பிற‌கு தான் உண‌ர்ந்தேன். இந்த‌ வெப் சைட் ந‌ன்கொடைக‌ளை நோக்கியே நிறுவ‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இதில் இருக்கும் ப‌ள்ளிக‌ளின் இன்ஃப்ரா ஸ்ட்ர‌க்ச்ச‌ர் நிலைமைக‌ளையும் தெரிந்துகொள்ள‌லாம். எப்ப‌டி இருந்தாலும் இது ஒரு ந‌ல்ல‌ முய‌ற்சியே.

ந‌ன்கொடைக‌ளை எதிர்பார்த்து நிற்கின‌ற‌ன‌வா அர‌சு ப‌ள்ளிக‌ள்? ஆசிரிய‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டும் ஜெட் வேக‌த்தில் உய‌ர்ந்துகொண்டு போகும் பொழுது ஏன் ப‌ள்ளிக‌ளின் த‌ர‌த்தையும் அர‌சு உய‌ர்த்த‌ முன் வ‌ர‌க்கூடாது?

ஹிந்துவில் வெளிவ‌ந்த‌ இந்த‌ செய்தியும் என் க‌ண்ணில் ப‌ட்ட‌து.

*

அரசு பள்ளிகள்:எங்கேயிருக்கிறது பிழை?

இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா? The Beautiful Tree வாங்கவேண்டும். என்னை இந்தப் புத்தகத்தை வாங்கவைப்பதினால் இந்தக் கட்டுரை வெற்றிபெற்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாமா?

அதிருக்கட்டும், இந்திய அரசுப் பள்ளிகளின் நிலை நன்றாக இருக்கிறதா? என்னைக் கேட்டால் Higher Secondary கொஞ்சம் தேவலாம். என் அக்காவே +1, +2 அரசு பள்ளியில் தான் படித்தவர். அவர் பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் மதிப்பெண்கள் வாங்கினார். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இதே போல அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்? மிக மிக குறைவாகத்தான் இருக்கமுடியும்.

எலிமென்டரி பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் டியூசன் எடுக்கும் காலத்தில் எங்களிடம் ஒரு மாணவன் வந்தான், அவன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா என் அண்ணனிடம் இவன எப்படியாவது எட்டாவது பாஸ் பண்ண வெச்சிருங்கன்னு கெஞ்சிட்டுப் போனார். எங்களிடம் வந்தபொழுது அந்த பையனுக்கு தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரியாது. ஆங்கிலம் கேட்கவே வேண்டாம்.அதே சமயத்தில் எங்களிடம் அருகிலிருந்த சில மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் மூன்றாம் வகுப்பு மாணவன் இவனை விட நன்றாக தமிழும் ஆங்கிலமும் ஏன் ஹிந்தியும் கூட வாசித்தான். மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவனுடைய கல்வி முறை வேறு. அரசு பள்ளி மாணவனுடைய கல்வி முறை வேறு. அவன் மாதா மாதம் நூற்றிஎன்பது ரூபாய் கட்டவேண்டும். இவனுக்கு அது இல்லை. ஆனால் அவனுக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்கள். இவனுக்கு சொல்லித்தரும் வாத்தியார்கள் கண்டிப்பாக ஐயாயிரம் ரூபாய், ஏன் அதற்கு மேலும், சம்பளம் வாங்குவார்கள். அப்புறம் ஏன் இருவருக்குள் இந்த அதீத வித்தியாசம்?

இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் அரசுப் பள்ளிகளை விட நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு தானாகவேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட மிக மிக அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள். பம்பர் போனஸ் வேறு கிடைக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மிக மிக குறைவாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?

எங்கே இருக்கிறது பிழை? எனக்கு புரியவில்லை.

என்னுடைய கனவு: மிக குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வித்தரம் அளிக்கும் பள்ளிகளை உருவாக்கவேண்டும் என்பதே. சிரிக்காதீர்கள். கனவு. உயர்தர கல்வித்தரம் கொடுக்கவெண்டும் என்றால் அவ்வாறான ஆசிரியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் அதிக சம்பளம் கேட்ப்பார்கள், இல்லியா?

உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பவர்கள், அதிக சம்பளம் கேட்ப்பார்கள் = True.
அதிக சம்பளம் வாங்குபவர்கள், உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பார்கள் = Looks logically true.

நம்மிடம்(அரசு பள்ளிகள்) அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள், கண்டிப்பாக அவர்கள் உயர்தர கல்வி கற்றுத்தந்துதானாக வேண்டும்? ஏன் அவ்வாறு செய்வதில்லை? எங்கேயிருக்கிறது பிழை?