1
நான் = பிரபு
என்னால் நம்பவே முடியவில்லை. நித்யாவா இப்படி?
‘டேய் உண்மையாகத்தான் சொல்றியா?’ நான் மதனிடம் கேட்டேன். உடன் முரளியின் சகோதரன் கார்த்திக் இருந்தான். நான், முரளி, மதன், கணேஷ், நித்யா, சுபா, திருவேங்கடம் அனைவரும் எம்.சி.யே. கடைசி வருட நண்பர்கள்.
‘நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் தண்ணியடிக்கும் போது கணேஷ் ஒளர்னான்’
நான் நம்ப முடியாமல், முரளியின் சகோதரன் கார்த்திக்கைப் பார்த்தேன். கார்த்திக் தலை கவிழ்ந்தான்.
‘கணேஷ் வீட்டு போன் தான் இதுக்கு மெஸஞ்சர்’ – மதன்
கார்த்திக் இப்பொழுது மதனை முறைத்தான்.
கையில் வைத்திருந்த பீரை இன்னொரு மடக் குடித்தான்.
மதன் – ‘என்னை ஏன்டா முறைக்கிற? முரளி எனக்கு நண்பன் மாதிரி பிரபுவும் எனக்கு நண்பன் தான். எத்தனை நாள் மறைக்கிறது? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ல?’ என்று கூறி சிரித்தான்.
‘டேய்..உன் கெழமொழியெல்லாம் இருக்கட்டும், சத்தியமா சொல் நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ நான்
‘மாப்ள. இந்த பீர் பாட்டில் மேல சத்தியமா சொல்றேன்! நித்யா, முரளிய லவ் பண்றா! அவன் கிட்ட ப்ரோபோசும் பண்ணிட்டா!’
என்னால் நம்ப முடியவில்லை.
மதன் – ‘ஏண்டா! நீயும் நித்யாவும், இணை..பிரியா நண்பர்களாச்சே, உன்கிட்ட அவ இத சொல்லலியா? என்னதான் இருந்தாலும் நீ பாய் பிரண்டு தானே, கேர்ள் பிரண்டா இருந்தா சொல்லியிருப்பா!’ என்று ஏதோ ஜோக் சொன்னவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.
‘நித்யா ஏன் இப்படி செய்தாள்! என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல?’
**
2
நான் = திருவேங்கடம்
நான் திருவேங்கடம். நான், சுபா, நித்யா,மதன், கணேஷ், முரளி அனைவரும் ஒரே கிளாஸ். எம்.சி.யே. மதுரை காமராஜ் மாலை நேர கல்லூரி. ம்..ம்.. ஒருத்தனை விட்டுட்டேன்னு நினைக்கிறேன். அவன் தான்..அலட்டல் கேசு…பிரபு. மெட்ராஸ்லேருந்து மதுரைக்கு படிக்க வந்திருக்கான். படிக்கவா வந்திருக்கான்? ம்..ம்..அவனுக்கு நிறைய பெண்கள் சினேகிதம். அதனாலேயே அவனுக்கு திமிர் ஜாஸ்தி.
நான் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன், இன்னைக்கு.
‘டேய், குழந்தை..சொல்லுடா..பிரபு டைரியில இருந்து எந்த பொண்ணு போன் நம்பரை எடுத்த?’ – கணேஷ்.
குழந்தைன்னு என்னைத்தான் கூப்பிடுறான், இந்த சோடாபுட்டி கணேஷ். ஒன்னும் இல்லீங்க, அதென்ன பிரபு பேசினாத்தேன் பொண்ணுங்க எல்லாம் பேசுமா? நான் பேசுனா பேசாதான்னு பிரபு டைரியில இருந்து எனக்கு பிடிச்ச பொண்ணு போன் நம்பரை எடுத்துட்டேன். அத இவிங்க எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாய்ங்க. மாட்டிக்கிட்டேன். சும்மா விடுவாய்ங்களா? ஆனாலும் நானாவது சொல்றதாவது? ஹ..ஹே..கம்முன்னு நல்லா தவளைய முழுங்கின பாம்பு மாதிரி உக்காந்திருந்தேன்.
‘டேய்..டேய்.. அது மஞ்சு போன் நம்பர் தானே?’ – மதன், ‘நான் தான் கிளாஸ்லேயே பார்த்திருக்கேனே, உன்னோட ஒன்றரைக் கண்ணில அரைக் கண்ண உருட்டி அவளை பாப்பியே? ஆமா குழந்தை..எனக்கு ஒரு சந்தேகம்..அவளோட பெரிய உடம்பு என் அரைக் கண்ணில பத்துதா?’ என்று கேட்டுவிட்டு மாயா பஜார் ரங்காராவ் மாதிரி சிரித்துவைத்தான்.
நான் சிரிக்கல. ம்..ம்…சிரிப்பனா?
‘ப்ளீஸ்.. டா மாமு. சொல்லிடு. இத்தனை பேர் கேக்கரோமில்ல. உன்னோட ஆளு யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கிறோமே..ப்ளீஸ் டா செல்லம் சொல்லுடா…’ கணெஷ்.
‘ம்ம்..ஹ¤ம்.. மாட்டேன்’ நான்
‘சரி நமக்குள்ள ஒரு டீல். நீ இதச் சொன்னேன்னா..நாங்க..உனக்கு ஒரு ஹாட் மேட்டர் சொல்லுவோம்’ மதன்.
மதனை கணேஷ் முறைத்தான். எதற்கு மதனை கணேஷ் முறைக்கிறான். எனக்கு ஏதோ பொறி தட்டியது.
‘ஓகே..அப்படீன்னா..நீ முதல்ல சொல்லு’ நான்
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நித்யாவும் நல்ல பொண்ணு, முரளியும் நல்ல பையன். வாயே திறக்கமாட்டான். அதுவும் பொண்னுங்ககிட்ட கேக்கவேவேணாம். எப்படி இவர்களுக்குள்? என்ன இருந்தாலும் முரளி என் நண்பன்..ஹ்ம்ம்..எங்கிருந்தாலும் வாழ்க!!
‘இப்ப சொல்லுடா..யாரு போன் நம்பரை நீ எடுத்த?’ மதன் விடுவதாயில்லை.
‘ம்..சொல்லமாட்டேன்..என்னை என்ன லூசுன்னு நினைச்சயா?”
**
3
நான்=கணேஷ்
இன்றைக்கு ரூமில நான், மதன், முரளியின் சகோதரன் கார்த்திக் இருக்கிறோம். கார்த்திக் ஒரு மூளையில படுத்திருக்கிறான். மதனும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் முரளி தூங்கிகொண்டிருக்கிறான். குழந்தை வந்தான்.
‘வாடா..குழந்தை!’ மதன்.
‘என்னடா இரண்டு பேரும் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருக்கீங்க’ – குழந்தை.
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
பானையில் தண்ணீர் குடித்து விட்டு, எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் குழந்தை.
‘சொல்லுங்கடா. என்ன ப்ராபளம்? நான் தீர்த்துவைக்கிறேன்’ – குழந்தை.
‘நித்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். இந்த வருட படிப்பு முடிந்ததும் கல்யாணமாம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இன்ன வரைக்கும் அழுதிட்டு இப்பத்தான் படுத்தான் முரளி’ நான்
சிறிது நேரம் யோசித்த குழந்தை, ‘அதுக்கென்ன, நித்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல், நிச்சயம் முடியட்டும். நம்ம ஆள் தான் காதல் மன்னனாச்சே, கல்யாணத்திற்கு முந்தின நாள் கடத்திட்டு வந்துரட்டும்’..குழந்தை சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி ஏதோ கௌவ்ரம் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டு, ‘என்ன கணேஷ் நான் சொல்றது?’ என்றான்.
மதன் வேகமாக எழுந்து வாஷ் பேசினில் போய் நன்றாகக் காரித்துப்பிவிட்டு வந்தான். எங்கள் குரூப்பிலே குழந்தை தான் ‘ஓட்டு’ வங்கி. அவனைத் தான் ஓட்டு ஓட்டு என்று அனைவரும் ஓட்டுவோம். முரளியின் தம்பி கார்த்திக் கூட சில சமையங்களில் கேலி செய்வான். ஆனால் அதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
‘ஐடியா சரியில்லேன்னா வேற யோசிப்போம்’ என்று நகர்ந்து உட்கார்ந்தான் குழந்தை.
அப்பொழுது தான் தூக்கதிலிருந்து கார்த்திக் எழுந்தான். ‘டேய் கார்த்திக்..இங்க வாடா!’ என்றான் குழ்ந்தை.
கார்த்திக் வந்து உட்கார்ந்தான்.
‘பயப்படாதே! ஒன்றும் நடக்காது! நான் இருக்கிறேன். எப்படியாவது உங்க அண்ணனையும் அண்ணியையும் (நித்யா) சேர்த்து வைக்கிறேன்’ குழந்தை.
கார்த்திக் பேசாமல் இருந்தான்.
‘ஆமா..உங்க அண்ணன், இத பத்தி உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?’ குழந்தை.
‘எங்க அப்பாகிட்டயா?’ கார்த்திக்
‘ஆமா’ குழந்தை.
‘செருப்பாலடிப்பாரு’ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கார்த்திக்.
குழந்தை எங்களைப் பார்த்தான்.
**
4
நான்=பிரபு
என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கலாம் என்றால், தன்மானம் இடம் தரவில்லை. அவளா வந்து சொல்லியிருக்கலாம். ச்.சே..கடைசியில் இப்படி ஆகிடுச்சே. கணேஷ் வீட்டு போன் தான் மெசஞ்சராமே!..ஹம்ம்..
நான் கணேஷ் வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘வாப்பா, பிரபு! எப்படி இருக்கே! உன்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் நலமா? நலமறிய அவா!’ என்று சொல்லிக் கண்சிமிட்டினார், கணேஷின் அப்பா.
கணேசஷின் அப்பா கணேஷைப் போல கல்லூளி மங்கன் கிடையாது.எதையும் மறைக்காமல் பேசுபவர்.
‘எல்லாம் நால்லாயிருக்கங்கப்பா!’ நான்
‘ஏண்டி மரகதம், யார் வந்திருக்கா பாரு, மன்மதராசா வந்திருக்காக! காப்பி எடுத்திட்டு வாம்மா!’ மனைவியை அழைத்தார். எனக்கு சிரிப்புதான் வந்தது. நானா மன்மதராசா?
‘கணேஷ் எங்கப்பா காணோம்?’ என்றேன்.
‘முரளி வந்திருந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? கணேசுக்கு பொண்ணுங்ககிட்டே இருந்தெல்லாம் போன் வருது! இன்னைக்கு நான் போனை எடுத்திட்டேன்! ஹி..ஹி..ஹி..’ என்று சொல்லி மறுபடியும் கண்சிமிட்டினார்.
எனக்கு பகீரென்றது.
‘போன்ல யாருப்பா?’ நான்.
‘நித்யாவோ சத்யாவோ சரியா ஞாபகம் இல்ல. நீ என்ன ரொம்ப ஆர்வமாயிருக்க. அதான நீ தான் காதல் மன்னனாச்சே!’ என்றார்.
ம்..ம்.. என்க்கு தெரியாமலா? எனக்கு கோபம் வந்தது.
‘இப்போ எங்க போயிருக்கானுங்க இவனுங்க?’ நான்
‘போன் வந்த கொஞ்ச நேரத்தில ரெண்டு பேரும் வெளியில கிளம்பி போய்ட்டாய்ங்க. இவிங்க திரியிற திரிச்சலே சரியில்ல. ஏண்டியம்மா காப்பித் தண்ணிய கொண்டுவா!’
‘சரிப்பா நான் போயிட்டு வாரேன்’ நான்
‘அட, இருடா! காபி சொல்லியிருகேன்ல! நீ இருந்தா தான் எனக்கு கிடைக்கும்!’
**
5
நான்=கார்த்திக். முரளியின் சகோதரன்.
குழந்தை வந்து உட்கார்ந்தார். ‘டேய்! கார்த்தி! உனக்கு சின்ன வயசு. நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே.!’
எனக்கு சின்ன வயசாம். நானும் எம்.சி.யே ஈவினிங் காலேசில தான் படிக்கிறேன். இவங்களோட ஒரு வயசு கம்மி. குழந்தை அளந்தாருன்னா அதுக்கு அளவே இருக்காது. டுபுக்ககு. இவரை குழந்தைன்னு கூப்பிடறதுக்கே ஒரு கதை இருக்கு.
ஒரு நாள் இரவு ரொம்ப நேரமா பன்றி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் பன்றியின் சத்தம் ஓயவில்லை. எங்களுக்கே தூக்கம் வரவில்லை. குழந்தை வீராப்பாக நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். வந்தவர்,’அது ஒன்றுமில்லை பசங்களா. பன்றி ‘குழ்ந்தை’ போட்டிருக்கு’ என்றார்.
பன்றியாவது? குழந்தையாவது? எங்களுக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் அவரிடம் மறுபடியும் கேட்க, அவர் கூலாக ‘என்னங்கடா, புரியாதமாதிரி பார்க்கறீங்க! பன்றி குழந்தை போட்டிருக்கு அதுதான் கத்தறது. தூங்குங்க!’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். அன்றிலிருந்து திருவேங்கடத்தின் திருநாமம் குழந்தை என்றானது.
‘டேய்..கார்த்திக்! நான் வேணும்னா உங்க அப்பாரு கிட்ட வந்து பேசட்டுமா? நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு! ஒன்னு செய்யறேன், இந்த வாரம் உங்க அப்பாகிட்ட வந்து பேசறேன்!’
இவர் வந்து பேசினா எங்க அப்பா கேட்ருவாரா? டுபுக்குன்னா சரியாத்தான் இருக்கு.
**
6
நான்=பிரபு
அதோ முரளியும் கணேசும் std பூத்திலிருந்து வெளியே வருகிறார்கள். நான் மறைந்து கொள்கிறேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றபின், நான் மெதுவாக கடைக்குள் நுழைகிறேன்.
‘வாங்க பிரபு, அண்ணே’ என்றான் பூத் பையன்.
‘ஏண்டா! முரளியும் கணேசும் இங்க வந்தாங்களா? என்றேன். தெரியாததுபோல்.
‘ஆமாண்ணே! வந்தாங்க!’
‘எதுக்கு வந்தாங்க?’
‘ம்ம் புரோட்டா சால்னா சாப்பிட வந்தாங்க’
நான் அவன் கஸ்டமர்கள் டயல் செய்யும் போன் நம்பர்களை குறித்து வைக்கும் லெட்ஜரைப் புரட்டினேன்.
‘அண்ணே..என்னாச்சு? சிபிஐல வேலை கிடச்சுடுச்சா?’
அவள் வீட்டு நம்பர் தான்.
**
7
நான்=கணேஷ்
குழந்தை வந்தான். முரளியிடம் சென்றான்.
‘டேய் முரளி! உனக்கு இதெல்லாம் தேவையாடா! நீ எதுக்கு இங்க வந்த? படிக்கத்தானே? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்ல படிக்க வைக்கிறாங்க? உனக்கு லவ்வெல்லாம் தேவையாடா?’ முரளி மவுனமாக இருந்தான்.
‘அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிற பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும் அதுதான் நிலைக்கும்! காதல் கல்யாணம் எல்லாம் சும்மா ஜிகினா தூள் மாதிரி’ குழந்தை. உதாரணத்துக்கொன்னும் கொறைச்சல் இல்ல. முரளி ஏதும் பேசவில்லை.
‘என்னடா பேசாம இருக்க? இப்ப என்னையே எடுத்துக்கோ. வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் நான் இன்னும் லவ் பண்ணாம இருக்கேன்!’ குழந்தை
திஸ் இஸ் டூ மச். எனக்கு சிரிப்பு வந்தது. முரளி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
‘இப்போ என்னதான் பண்ணலாம்னு முடிவோட இருக்க?’ குழந்தை முரளியை விடுவதாகை இல்லை.
‘டேய் மாமா! இங்க வா! ஏற்கனவே பயத்துல இருக்கிற அவன் கிட்ட எதையாவது சொல்லி மேலும் பயமுறுத்தாத. பய ஏதாவது பண்ணிக்கப் போறான்! நான் குழந்தையைக் கூப்பிட்டேன்.
குழந்தை திகிலுடன் முரளியைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்தான்.
‘என்னடா சொல்ற?’ குழந்தை.
‘நீ தான் ஏதாவது ஐடியா கொடுக்கனும்’ நான்
குழந்தை தீவிரமாக யோசித்தான்.
**
8
நான்= சுபா
2..5..6..6..3..6..4 எண்களை டயல் செய்து, ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
ஒரு ரிங்…ரெண்டு ரிங்…’மடையா எடுடா..’
‘ஹலோ’ மறுமுனை
‘ஹலோ! பிரபுவா?’ நான்
‘ம்ம்.. சுபா?’ பிரபு
‘ஆமா! எப்படிடா இருக்க?’ நான்
‘ரொம்ப முக்கியம். என்ன விசயம் சொல்லு!’ பிரபு
‘என்னடா ரொம்ப சூடா இருக்க போலிருக்கு, ம்..ம்..சரி..முரளியை எப்படி பிடிக்கிறது?’ நான்
‘வாட்?’ பிரபு
‘இல்லப்பா! முரளியை எப்படி கான்ட்டாக்ட் பன்றதுன்னு கேட்டேன்?’ நான்
‘நீ எதுக்கு அவனைக் கான்ட்டாக்ட் பண்ணனும்?’ பிரபு
‘இன்னிக்கு காலையில, நித்யாவும் முரளியும் வெளியில போனாங்க, இன்னும் வரலை! மதியம் 2 ஆச்சு, அவங்க அம்மா தேடறாங்க! அதான் கேட்டேன்! நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணற’ நான்
சிறிது மவுனம். பிறகு லைன் துண்டிக்கப்பட்ட சத்தம்.
எனக்கு ஏமாற்றம். கோபமும் கூட. ‘இவன் ஏன் இப்படி பண்றான், ஸ்டுப்பிட்’ ரிசீவரை வைத்தேன்.
**
9
நான்=கணேஷ்
திருவேங்கடம் இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தான். திருவேங்கடமா? யாரு அதுன்னு யோசிக்கிறீங்களா? அதுதாங்க, நம்ம குழந்தை! ஹி..ஹி..
குழந்தை, நித்யா-முரளி க்கு ஒரு வழி யோசித்துக் கொண்டிருந்தான். அறையில் மதன், நான்,குழந்தை,கார்த்திக் ஆகியோர் இருக்கிறோம்.
குழந்தை தொல்லை தாங்கமுடியல. ஐடியா தருகிறேன் பேர்வழி என்று எதையாவது ‘அச்சு பிச்சு’ ன்னு உளறார்.
‘இப்படிப் பண்ணா என்ன? பேசாமா நித்யாவை முரளி வீட்லையும் முரளியை நித்யா வீட்லையும் வேலை செய்ய சொல்வோம். அப்புறம் நித்யா வீட்ல முரளியையும், முரளி வீட்ல நித்யாவையும் புடிச்சுப் போயிரும். அப்புறம் என்ன சுபம் தான்’ குழந்தை.
‘என்ன படம் முடிஞ்சிருச்சா! ஏன் குழந்தை நீ வேற படுத்தற? எரிச்சலக் கிளப்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா?’ நான்
‘அதெப்படி நாம பேசாம இருக்கிறது, நம்ம பிரண்டோட வாழ்க்கை இல்லியா?’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.
**
10
நான்=கணேஷ்
‘டேய் எல்லோரும் இருக்கீங்களா? எங்கடா போய் தொலைஞ்சீங்க?’ நல்ல போதையில் பிரபு வந்தான்.
நான் பிரபுவைப் பார்த்து, ‘ என்னடா பிரபு? எப்பவுமே இங்க வந்து தானே ஏத்துவ? இன்னிக்கு ஏத்திக்கிட்டு அப்புறம் இங்க வந்திருக்க?’ என்று கேட்டேன்.
பிரபு, ‘உஷ்…நீ பேசாத!’ விக்கல் ‘நீ கூட..நீ கூட..என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா?
நான், ‘டேய்..நித்யா உன் பிரண்டு, உனக்கு தெரியும்னு நினைச்சேன்’
‘பிரண்டு..பொல்லாதா பிரண்டு..அவளை நான் என் பிரண்டு மாதிரியாடா வெச்சிருந்தேன்..இங்க டா..இங்க வெச்சிருந்தேன் அவளை’ பிரபு இதையத்தைக் காட்டினான்.
எனக்கு விளங்கியது. ஆகா மேட்டர் இப்படி போகுதா?
‘என்னடா சொல்ற மச்சான்?’ மதன்
‘என்ன நொன்னாடா சொல்ற? அதான் சொன்னேனே, இதயத்தில வெச்சிருக்கேன்னு. யெஸ். ஐ லவ் ஹெர்! அதுக்குள்ள இந்த முரளி பய வந்து ஆட்டைய களைச்சுட்டான்’ விக்கல்.
நாங்கள் விக்கித்து நின்றோம்.
‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னானுங்க, ஊமை மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணியிருக்கான் பாரு இந்த முரளி. அவனுக்கு துணை இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு தலைவர்..கணேஷ்’..என்னைப் பார்த்து கண்ணை உருட்டினான், பிரபு.
‘நான் ஒரு வேளை செத்தா, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் அப்படீன்னு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். கவிதை கூட எழுதிருக்கேன். படிக்கவா?’ பாக்கெட்டைத் துளாவி ஒரு லெட்டர் ஒன்றை எடுத்தான்.
எனக்கு திக்கென்றது. கவிதைக்காக அல்ல.
‘நீ எதுக்குடா சாகனும்?’ நான்.
‘டேய் மடையா, மனுசனா பிறந்தா, சாகறது உறுதிடா. அதுவும் ரெண்டு புல் பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து குடிச்சா கண்டிப்பா குளோஸ் டா..ஹா..ஹா..’ சிரித்துக் கொண்டே சரிந்தான் பிரபு. வாயில் லேசாக நுரை.
‘ஐயையோ…விளையாட்டு வினையாகிடுச்சேடா! தூக்குங்கடா தூக்குங்கடா’ பதறிக்கொண்டு தூக்கினோம்.
**
11
நான்=நித்யா
இன்று காலை எழுந்து குளித்து விட்டு, என்னுடைய கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தேன். நாளைக்கு அஸைன்மென்ட் வைக்க வேண்டும். இன்று புரோகிராம் எழுதி டெஸ்ட் செய்ய வேண்டும். தெண்டப் பசங்க, நாளைக்கு என்னைப் பார்த்துதான் காப்பியடிப்பானுங்க. பவர் பட்டனை ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. ஆப் செய்து ஆன் செய்தேன்..ம்..ஹ¤ம்…பூட் ஆகவில்லை..போனதடவை..இது மாதிரி ஆனப்போ கணேஷ் தான் சரி செய்து கொடுத்தான்.
கணேஷ் நம்பரை சுழற்றினேன்.
கணேஷின் அப்பா எடுத்தார். ‘ஹலோ..யார் பேசறது?’
‘கணேஷ் இருக்காறா?’
‘நீ யாரும்மா?’
‘நான் கணேஷோட பிரண்ட் நித்யா.’
‘ஓஹோ…!! டேய் கணேஷ் ஓடியாடா! எதோ பொண்ணு பேசுதுடா..ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்..’ சிரித்தார்
கணேஷ் போனை வாங்கி பேசினான்.
‘என்ன நித்யா?’
**
12
நான்=கணேஷ்
அப்பாவிடமிருந்து போனை வாங்கினேன்.
‘என்ன நித்யா?’
‘என் கம்ப்யூட்டர் பூட் செய்யலடா. ஏதோ ப்ராபளம் போல் தெரியுது!’ என்றாள்
நான் சில சிம்ட்டம்ப்ஸ் (symptoms) கேட்டும் எனக்கு புலப்படவில்லை, சரி வீட்டிற்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு, முரளி இதில் எக்ஸ்பேர்ட் என்பதால் அவனையும் வருமாறு அழைத்துக் கொண்டேன். நானும் முரளியும் நித்யா வீட்டிற்கு சென்றோம்.
**
13
நான்=முரளி
நித்யா வீட்டிற்கு சென்றும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. எங்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எனவே புராஸஸரை எடுத்துக் கொண்டு செர்வீஸ் ஸ்டேசன் போகலாம் என்று முடிவு செய்தோம். நித்யாவும் ‘நானும் ஹார்டுவேர் கத்துக்கணும் அடுத்த முறை உன்னைக் கூப்பிடவேண்டாம் பாரு, அதனால நானும் வருவேன்’ என்று அடம் பிடிக்கவே அவளையும் அழைத்து சென்றோம். செர்வீஸ் ஸ்டேசனில் நேரமாகும் என்று சொல்லவே, நித்யாவை அனுப்பிவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே, இந்த தகவலை நித்யாவிடம் சொல்ல std பூத்திற்கு சென்றோம். பூத் பையன் நாங்கள் டயல் செய்த நம்பரைக் குறித்துக் கொண்டான்.
**
14
நான்=மதன்
ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. பிரபு அரை மயக்கத்திலிருந்தான். பல்ஸ் இருந்தது. நாங்கள் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.
‘டேய்..பிரபு’ நான்
‘ம்ம்..ம்ம்..ய்..ய்..யா..யாலு இது..நி.நி..நி..ல்த்யா..வ.கூல்ட்டிட்டுவா’
‘டேய் நான் மதன்டா. என்னை மன்னிச்சிடுடா. நீ கேர்ள் பிரண்டு அது இதுன்னு பிலிம் காட்டினதால உன்னை உன் டியர் பிரண்டோட சண்டை போட வைக்கலானுதான் பிளான் போட்டோம். நான் தான் உன்கிட்ட முதன் முதலா சொன்னது! உண்மையிலே முரளிக்கும் நித்யாகவுக்கும் நடுவில ஒன்னுமே இல்ல.பொய் சொன்னதுக்கு ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா!’
சைரன் ஒலி காதைப் பிளந்தது.
‘ப்ளீஸ் சாரிடா!’ கணேஷ்
‘ம்….ம்…ல்ல்…ல்..’ பிரபு முனகினான்
‘மன்னிச்சிட்டேன்னு சொல்றா’ நான்
‘ம…ன்..ல்…னி..ச்…சி..ட்..ட்…ட்..டே….ன்…’
‘சரி! அந்த வாக்குமூல லெட்டர் எங்கேடா வெச்சிருக்க!’ நான் துலாவினேன்.
மடேர் என்று அடி விழுந்தது.
பிரபு எழுந்து உட்கார்ந்தான்.
‘அட பாவி! நான் உயிருக்கு போறாடிக்கிட்டிருக்கிற நேரத்திலும் உனக்கு லெட்டர் தான் முக்கியமா? Driver sir அம்புலன்ஸ நிறுத்துங்க! எனக்கு ஒன்றுமில்லை! ஐயாம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்!’ பிரபு.
எங்களுக்கு நிலைமை விளங்கி, அவனை மொத்த ஆரம்பித்தோம்.
**
15
நான்=பிரபு
நாங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ஆளுக்கொரு மூலையில். குழந்தை வந்தான்.
‘அடடே..பிரபுவா? வாடா! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்க?’
ம்ம் என்றேன்
‘ஆமா..உனக்கு மேட்டர் தெரியுமா?’
‘என்ன?’ நான்
‘நம்ப நித்தியும்…’
‘நித்தியா? யாரு அது?’
‘அதாண்டா உன் பிரண்டு நித்யா!’
‘ம்ம்.ம்ம்’
‘உன் பிரண்டு நித்யாவும். நம்ப முரளியும் லவ் பண்றாங்களாமே!! நித்தி வீட்ல..மாப்ள பார்த்துட்டாங்களாம்..அவங்களைச் சேர்த்து வைக்க நீதான் ஐடியா ஏதாவது கொடுக்கனும்’
நான் கணேஷைப் பார்த்தேன். கணேஷ் மதனைப் பார்த்தான். மதன் முரளியை பார்த்தான். முரளி என்னைப் பார்த்தான்.
குழந்தைக்காக நான் ஐடியா யோசிக்க ஆரம்பித்தேன்.