ப்ரான்ஸ் பயணம் – 3

எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, “She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today” என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது.

ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.

கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், “என்ன?” என்றார் அந்தப் பெண்மணி. “அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்” என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். “அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?” என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga “The White Tiger”இல் எழுதியிருக்கிறார்.

அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.

எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.

வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.

பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் “ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க” என்றார் என் மனைவி.

2 thoughts on “ப்ரான்ஸ் பயணம் – 3

  1. //ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க” //அப்ப திரும்ப ஏர்போர்ட் போகணுமே ஸ்ட்ரோலரை எடுக்க.

    Like

  2. சின்ன‌ அம்மினி: வேற‌ என்ன‌ செய்ய‌ற‌து! போய்த்தான‌ ஆக‌னும். அடுத்த‌ ப‌குதியில‌ அந்த‌ க‌தைய‌ சொல்றேன் அம்மினி.

    Like

Leave a comment