ஒரு குழந்தை அப்பாவிடம் வந்தது. அப்பா அன்று மிகுந்த களைப்புடன் இருந்தார்.
“அப்பா அப்பா அண்டம் எவ்வாறு உருவானது?”
ஒரு நிமிடம் யோசித்த அப்பா, கேள்வி காதில் விழாதது போல, “ம்ம்ம் என்னடா செல்லம்” என்கிறார்.
“ம்ம்..அண்டத்தை யார் உருவாக்கினார்கள் அப்பா?”
“அண்டத்தை கடவுள் உருவாக்கினார்டா செல்லம். ம்ம்..எங்க ஹோல்ட் யுவர் ஹேன்ட்ஸ் டுகெதர்..ப்ரே நௌ..”
குழந்தை சொன்னது போல ப்ரே செய்கிறது.
அப்பா டீவியைப் போடுகிறார். அன்றைய தினத்தில் இருநூறாவது முறையாக ஒளிபரப்பப்படும் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சியின் ட்ரெய்லரைப் பார்த்து அப்பா லயித்துக்கொண்டிருந்த பொழுது, மீண்டும் அந்தக் குழந்தை கேட்கிறது, “அப்பா..கடவுளை யார் உருவாக்கினார்கள்?”
அப்பா சொல்கிறார் “கடவுள் எப்பொழுதுமே இருக்கிறார்!”
சத்தியமாக நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தக் கேள்விகளை நான் கேட்டதில்லை. நம்மில் பலரும் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கமாட்டோம். முதல் கேள்வியைக் கேட்டிருந்தாலும் இரண்டாவது கேள்வியை கேட்டிருப்போமா என்பது சந்தேகமே. ஏன் நாம் இவ்வாறான கேள்விகளைக் கேட்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை.
நாம் நமக்கு புலப்படாத அல்லது அறிவுக்கு எட்டாத விசயங்களை கடவுளிடம் விட்டுவிடுகிறோம். ஆனால் அது மாபெரும் தவறு இல்லியா? தி மார்ச் ஆஃப் த பென்குயின்ஸ் என்றொரு திரைப்படம் இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா பென்குயின்களும் இனப்பெருக்கம் செய்து கொள்ள ஒரே ஒரு இடத்துக்குத் தான் போகுமாம். போகும் பாதையில் நமக்கு இருப்பது போல வசதியாக மைல்கல்கள் அவைகளுக்கு இருக்காது. மேலும் இன்று எங்கு பனி விழும் நாளை எங்கு பனி விழும் என்று ஆண்டவனுக்கே தெரியாமல் இருக்கும் பொழுது பென்குயின்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பனிக்காட்டில் அவை மிக நுண்ணியமாக கணக்கிட்டு தங்களது இனப்பெருக்க இடத்தை அடைகின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? இன்ஸ்டிங்க்ட் என்கிறது அறிவியல்.
ஆனால் ஒரு ஆர்தோடாக்ஸிடம் கேட்டால் கடவுள் அழைத்துச்செல்கிறார் என்று பெருமையாக அவர் சொல்லக்கூடும். இந்த ஒரு பொதுவான பதிலால் அன்றைய தினம் நாம் தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் கேள்வி கேட்ப்பவரின் இன்ன பிற தொடர்ச்சியான கேள்விகளை இந்த பதில் முடக்கிப்போடுகிறது. அல்லது கேள்வி கேட்டவர் மீண்டும் அதே கேள்விக்கு வந்து நிற்கலாம்:கடவுளுக்கு எப்படி வழி தெரியும்? அப்பொழுது அந்த ஆர்தோடாக்ஸ் அப்பா என்ன சொல்வார்: கடவுளுக்கு எல்லாம் தெரியும்!
இவ்வாறான பொதுவான பதில்களால் கேட்ப்பவரை மட்டும் நாம் முடக்கிப்போடுவதில்லை; அறிவியலையே முடக்கிப்போடுகிறோம். எப்படி பென்குயின் தனது இனப்பெருக்க இடத்தை கண்டடைகிறது என்பதற்கான தேடல் வேறு ஏதாவதொரு புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கக் கூடும் இல்லியா?
எனவே அப்பாக்களே அம்மாக்களே உங்களுக்கு பதில்கள் தெரியாவிடிலும் பரவாயில்லை; குழந்தைகளை தவறாக வழிநடத்தாதீர்கள், ப்ளீஸ். தெரியாவிடில் எனக்கு தெரியாதப்பா, படித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லுங்கள். பிறகு கண்டிப்பாக படித்துவிட்டு அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
அடுத்தமுறை அப்பா இந்த அப்ரோச் ட்ரை பண்ணலாம் (சரியான பதில் தெரியாவிடில்)
“அப்பா அண்டத்தை யார் உருவாக்கினார்கள் அப்பா?”
“அண்டம் எப்பொழுதுமே இருக்கிறதுடா செல்லம்”
அட்லீஸ்ட் நடுவில் இருக்கும் அந்த ஒரு கேள்வியை அப்பா மிச்சப்படுத்தலாம் இல்லியா?
ஐயா! புதிய முயற்சி..வித்தியாசமான கட்டுரை!தாங்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல ‘இறைவனை’ வேண்டுகிறேன்!
LikeLike