யார் முழித்திருக்க போகிறார்கள் – 8

UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.

குரல்கள்:
பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.
Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984

இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.

மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.

வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் – அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.

உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?

குரல்கள்:
போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.
Curtis Moore, former Attorney to US Senate

1990-91

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.

இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.

குரல்கள்:
ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்”போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்” (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.
Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984

1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.

இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் – புதிய காந்தி நகர் – கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.

இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.

விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.

வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)
thanks : swaroopa mukarjee

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s