(சற்றே பெரிய கதை)
முதல் நாள் என்பதால் அதிக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு ட்ரெயினிங்குக்காக என்னை சென்னை அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்கள் வரை நான் இங்கு தங்கியிருந்து எனது கம்பெனியின் ஹெச் ஆர் மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வேலை இருக்காது என்று தான் சொல்லி அனுப்பினர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற நான் இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதே வேலை விசயமாக வந்திருப்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வியர்டாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதலில் வேலை பார்த்தேன் என்றாலும் நான் அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடோடி விட்டது; இப்பொழுது இங்கே எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சூழல் மாறிப்போய் இருக்கிறது. அலுவலகத்துக்குள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால் சென்னை அலுவலகம் கலர்புல்லாக இருக்கிறது; இ·ப் யூ நோ வாட் ஐ மீன் ;).
என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் தான். அங்கு தான் அம்மா அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். முதலில் வந்து சென்னயில் ஒரு வாரம் இருந்துவிட்டு பிறகு வார இறுதியில் தஞ்சாவூர் செல்லலாம் என்று திட்டம். யாரிடமும் சொல்லவில்லை. சர்ப்ரைஸ் விசிட்டாக இருக்கட்டும் என்று நினைத்துவைத்திருக்கிறேன். திடீரென்று அம்மாவின் முன்னால் சென்று நின்றாள் அவர்களுக்கு தலைகால் புரியாது.
***
அலுவலகம் எனக்கு நான்கு மணிக்கே முடிந்துவிடும். என் நண்பர்கள் வெகு சிலரே இன்னமும் சென்னையில் இருக்கிறார்கள். மதன் அதிலொருத்தன். படிக்கிற காலத்திலே இந்தியப் பொருட்கள் தான் உபயோகிப்பேன் என்று அடம்பிடிப்பான். ஆனால் வேளை மட்டும் அமெரிக்க மல்டி நேஷனல் கம்பெனியில் பார்க்கிறான். இப்பொழுதும் அதே கம்பெனியில் தான் இருக்கிறான். ப்ளாக் கூட வெச்சிருக்கிறான். அந்தக்காலத்திலே ஜிஆர்ஈக்குப் படித்ததால் அங்கிலம் நன்றாக வரும் அவனுக்கு. இன்று அவன் வீட்டுக்குப் போகிறேன். அவன் வீட்டில் தான் சாப்பாடு. உறக்கம் எல்லாம். வேறு இடத்தில் தங்குவதா மூச் என்று சொல்லிவிட்டான். பாசக்காரப்பயபுள்ளைக.
***
சப்பாத்தியும் கோழிக்குருமாவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. அழகான கொசுக்கடி. ரம்மியமாக இருந்தது. கொசுக்கடி எப்படிய்யா ரம்மியமாக இருக்கமுடியும்? இருக்கிறதே. மதனின் மனைவி மற்றும் குழந்தை கீழிறங்கி சென்று விட்டவுடன் நானும் அவனும் காலேஜ் கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டேன் என்று மறுநாள் காலை சொன்னான் மதன்.
***
மறுநாள் காலை வேறொன்றும் சொன்னான் மதன். நான் தூக்கத்தில் படு பயங்கரமாக அலறினேனாம். ஏன் கத்தினேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை.
***
எனது ஹெச் ஆர் மிஸ்.ரம்பா அலுவலகத்தின் மொத்த விதிகளையும் ஒரு மணி நேரத்தில் அடக்கிவிட முயன்று கொண்டிருந்தார். நான் இந்தியாவில் இருக்கும் வரையிலும் அவர் தான் ச்சீப். மேற்பார்வையாளர். ஷீ லுக்ஸ் குட்.
மதிய உணவு நேரத்தில் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தஞ்சாவூருக்கு சும்மா ரிங் செய்தேன். லைன் டெட்டாக இருந்தது. யாரும் போன் எடுத்தாலும் பேசாமல் வைத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது பேசவேண்டும் போல இருந்தது. யாராவது எடுத்தால் தேவலாம் போல இருந்தது. என் அப்பாவின் செல்போனுக்கு அடித்தேன். ரிங்.ரிங்.ரிங். கட் செய்து விட்டேன்.
***
அன்றைய இரவு பூரிக்கிழங்கை ஒரு கை பார்த்துவிட்டு மீண்டும் மொட்டைமாடியில் தூங்கப்போகும் பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவேனோ என்னவோ என்று மதன் தூங்குவதற்கு முன்னரே, டேய் கிருஷ்ணா, உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு தூங்குடா, இன்னைக்கும் கத்தித்தொலைக்காதே என்றான். நான் என்ன வேணுமின்னா கத்தறேன்.
***
ஹீரோ ஹோண்டா புதிதாக வாங்கியிருக்கிறேன். பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு முடித்துவிட்டு என் பையனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். காற்றில் எனது முடி அழகாக அசைந்தது. என்னை ரியர் வியூ மிரரில் பார்த்துக்கொண்டேன். அப்பா புது பைக் எப்பப்பா வரும் என்று பையன் நச்சரித்துக்கொண்டேயிருந்தான். பார்த்தால் சந்தோஷப்படுவான். பள்ளிக்கூடத்தை நெருங்கிவிட்டேன். லாரி ஒன்று அதிவேகமாக வருகிறது. நல்லவேளை முன்னாலேயே பார்த்துவிட்டேன். கீழிறங்குவதற்கு இடமிருக்கிறது. ரோட்டைவிட்டுக்கீழிறக்கினேன். அடப்பாவிகளா இப்படி மணலா இருக்கு. வண்டி தடுமாறுகிறது. என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்பா என்றொரு சத்தம். வண்டி கீழே விழுகிறது. சரியாக என் தலைக்கு கொஞ்சமுன்னால் லாரியின் கருப்பான பெரிய டயர்.
சட்டென்று முழித்துக்கொண்டேன். வாட் த ஹெல். அமெரிக்காவில் இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கால் செய்தேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். எவ்ரி ஒன் வாஸ் ஓக்கே. மனைவி முதலில் பயந்து விட்டாள். என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்கன்னு கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் சொல்லவில்லை.
***
சும்மா ஏதாவது கனவாக இருக்கும்டா என்றான் மதன். ஆனால் நிஜம் போல அல்லவா இருந்தது. ஐ பெ·ல்ட் இட் வாஸ் ரியல். எனக்கு அந்த இடம் எல்லாம் நன்றாகத் தெரியும். என்ன இடம் என்றான் மதன். எனக்குத் தெரியவில்லை. அந்த அழகான ஆலமரம். பிள்ளையார் கோவில். போலீஸ் ஸ்டேஷன். குறுகலான ரோடு. பேக்கரிக் கடை. தேவர் சிலை. ஐ நோ தட் ப்ளேஸ் வெரி வெல்.உன்னோட ஊரா இருக்கும் டா. நோ. என்னொட ஊரில் இது போல ஏதும் கிடையாது. பிள்ளையார் கோவிலும் ஆலமரமும் இல்லாத ஊராடா, நல்லா யோசிச்சுப் பாரு. பத்து வருடத்தில மறந்திருப்ப. நோ நெவர். பிள்ளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷன் தேவர் சிலை பேக்கரிக் கடை ஒரே ரோட்டில் எங்கள் ஊரில் இல்லை. சொல்லப்போனால் தேவர் சிலையே எங்கள் ஊரில் இல்லை. டேய் என்ன மறுஜென்மக்கதை விடறியா? என்றான் மதன். ஐ டோன்ட் நோ. மைட் பி?
***
எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது. MAN DIED IN LORRY CRASH HERO HONDA SCHOOL என்று ஹ¥கிள் செய்தேன். எதுவும் தேரவில்லை. மிஸ் ரம்பா இன்றும் செமினார் எடுத்தார். இட் வாஸ் இன்ட்ரஸ்டிங்.
இன்றும் அந்தக் கனவு வரும் என்று காத்திருந்தேன். மதனும் கூட எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் கனவே வரவில்லை. தூங்கினால் தானே கனவு வரும்? கெட்ட கெட்ட கனவா வருதுன்னு மதன் மொட்டைமாடிக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். பத்து வருடங்களாக மொட்டைமாடியில் படுத்துப் பழக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கும் பழக்கத்தை உன் ஜீன் இழந்துவிட்டது என்றான். அமேசிங் தாட்.
தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்து மூன்றுக்கு எழுந்தேன். ஐ கேனாட் ஹெல்ப் பட் தாட்ஸ் வாட் மை டிஜிட்டல் வாட்ச் சொன்னது. இந்த முறை தமிழில் டைப் செய்தேன். “மணலில் சருக்கி லாரியில் அடிபட்டு பள்ளிக்கூட வாசலில்” என்று டைப் செய்தேன். ஹோலி ஷிட்!
***
அனுபவம் என்கிற கட்டுரையில் குரல்வலை என்கிற ப்ளாக்கில் MSV Muthu என்கிற ப்ளாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
அனுபவம் -10
ஒரு சோக நிகழ்ச்சி.
அன்று நான் என் நண்பன் சூர்யாவும் அந்தச் சிறுவனுடன் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.அவனுடைய அப்பா வரும் நேரம் வந்துவிட்டது. எங்களுக்கு ஸ்டடி பெல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்துவிடும். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் வாங்குவதற்கு நான் திரும்புகையில் அந்தச் சிறுவன் அப்பா என்று கத்தினான். ஒரு லாரி தூரத்தில் கிரீச்சிட்டு நின்றது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை. சூர்யா ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.
…
அந்த சிறுவனின் கதறல் எனக்கு இன்று வரையில் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
…
***
உடனே முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். என் ஹாட்மெயில் பாக்ஸை ரெ·ப்ரெஷ் செய்து கொண்டேயிருந்தேன். ஏதோ முத்து இப்பொழுதே ரிப்ளை செய்துவிடுவதைப்போல. நோ மெயில்ஸ்.
வீடே நிசப்தமாக இருந்தது. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. எழுந்து சென்று ப்ரிட்ஜில் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். என் செல் போன் ரிங் செய்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்தேன். முத்து.
***
முத்துவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் உங்களுக்கு எப்படி இந்தக்கனவு வந்தது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலியே என்றார் சிரித்துக்கொண்டே. நல்லா காமெடியா பேசுவார் போல. சட்டென்று ரைமிங்காக எப்படி பேசமுடிகிறது? என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலையே! நல்லாயிருக்குல்ல? இல்ல. உண்மையிலேதான் சொல்றேன் என்று சத்தியம் வைத்தேன்.
அவர் சிங்கப்பூரில் இருக்கிறாராம். அவர் அவருடைய ப்ளாகில் எழுதிய சம்பவம் அவர் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததாம். திருமங்கலத்தில் நடந்திருக்கிறதாம். நான் எந்த ரோடு என்று கேட்டபொழுது உசிலம்பட்டி ரோடு என்றார். அங்கே தேவர் சிலை இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்கிறதே. பிள்ளையார் கோவில். ஆமாம் இருக்கிறது. ஒரு பேக்கரிக்கடை? ஆமாம் வீ பி மதுரா பேக்கரி இருந்தது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார். ஆமாம நீங்கள் எந்த வருடத்தில் பத்தாவது படித்தீர்கள் என்று கேட்டபொழுது நிறைய யோசித்துப் பிறகு 1995 என்றார்.
***
1995. திருமங்கலம்.
·ப்யூச்சர் சாப்ட்.
போனவருடம் நீங்க நல்லா பெர்பார்ம் பண்ணினதுக்காக உங்களுக்கு சீனியர் அனலிஸ்ட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிவா. ஆர் யூ ஹேப்பி வித் திஸ்? யெஸ் மிஸ்டர் கௌதம். அதுமட்டுமில்ல உங்களுக்கான போனஸ் இந்தக் கவரில இருக்கு. தாங்க்யூ கௌதம். ஒன் மோர் க்வஸ்டீன் சிவா. யெஸ் சொல்லுங்க கௌதம். உங்களுக்கே தெரியும் நாம சின்ன கம்பெனியா இருந்தாலும் நம்முடைய ப்ராடக்ட் ரொம்ப நல்லாயிருக்கிறதால இப்போ கொஞ்ச நாளா வெளிநாடுகளில் பிரபலம் ஆகிட்டு வருது. இப்போ அமெரிக்காவில இத இன்ஸ்டால் செய்யனும் கூட இருந்து ஆறு மாதம் கவனிக்கனும்னு இது வரை ரெண்டு கம்பெனிகள் கேட்டிருக்கு. சட்டுன்னு எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல? ஒரு பையன் கூட இருக்கான்ல? யெஸ் கௌதம். இட்ஸ் ஓகே. ஐ வில் மானேஜ்.சோ நீங்க அமெரிக்க போறதுக்கு ரெடியாயிட்டீங்கன்னு சொல்லுங்க! ஆமா கௌதம். இது நல்ல ஆப்பர்சூனிட்டி இல்லியா? பிஎஸ்ஸி பிஸிக்ஸ் மட்டும் படிச்ச எனக்கு இது மாதிரியெல்லாம் சந்தர்ப்பம் நிறைய கிடைக்காது கௌதம்.
ஓக்கே சிவா. குட். இந்த விசயத்தை கன்பார்ம் ஆகிற வரைக்கும் யாரிடமும் சொல்லாதீங்க. ஓக்கே கௌதம். உங்க மனைவி கிட்ட கூட. ஓக்கே கௌதம்.
***
எந்த வருஷம் சார்?1995ப்பா. எனன சார் பதினாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடென்ட்ல போயிட்ட ஒருத்தன இப்ப வந்து தேடுற. எனக்கு ரொம்ப வேண்டியவர்ப்பா. கொஞ்சம் பாத்துச்சொல்லு. ரொம்ப வேண்டியவருன்னு சொல்ற பேரு என்னன்னு தெரியலன்ற?என்னமோ போ..உள்ள நிறைய பேரு இருக்காங்க..எல்லோருக்கும்..மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவன் கைகளில் வைத்தேன்.சரி சார். நீ போய் டீ குடிச்சிட்டு அங்க நில்லு நான் விசயத்தோட வர்றேன்.
***
பேரு சிவா. அவன் அப்பா பெயர் தங்கவேலு. மனைவியின் பெயர் இந்திரா. மகனின் பெயர் இல்லை. இறந்த பொழுது அவனுடைய முகவரி: 78 பெரிய கடை வீதி என்று இருந்தது. எங்கே வேலை பார்த்தான் என்கிற விசயம் இல்லை. வேறு எந்தத் தகவலும் இல்லை.
ஆபீஸில் சொல்லாமல் லீவு போட்டுவிட்டேன். மிஸ் ரம்பா என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஆன்ஸர் பண்ணவில்லை.
***
கிருஷ்ணன்?
மதனா..ஆமாடா..நான் தான் பேசறேன்..
யாரோ முத்துங்கறவரு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருந்தார்..உன்னத்தான் கேட்டார்..
அப்படியா? எதும் தகவல் சொன்னாரா?
இல்ல என்ன நிலைமைன்னு கேட்டார்..
ஓ..ஒன்னும் தேரலைன்னு சொல்லு..
ஏன்டா உனக்கு இந்த வீண் வம்பு? பேசாம வந்த வேலையப் பாக்க வேண்டியதுதான?
அதத்தான்டா பாத்திட்டிருக்கேன்..
***
78 பெரிய கடை வீதியைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. எனக்கு அந்த இடம் ஏதும் நினைவில் இல்லை. இந்த இடத்துக்கு வந்தால் எல்லாமே ஞாபகத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். சுத்தம்.
அது இரு இரண்டு மாடிக்கட்டிடம். வெளியே கம்பிகேட் போட்டிருந்தது. ஒரு நாய் வெளியே படுத்திருந்தது. தெரு நாய். என்னைப் பார்த்தும் எழுந்துகொள்ளாமல் அப்படியே இருந்தது. நான் வந்ததும் அங்கே இருக்கிற யாராவது என்னை அடையாளம் கண்டுகொண்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். நோப்.
காலிங் பெல் இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு அழுத்திக் காத்திருந்தேன். இதயம் அதி வேகமாகத் துடித்தது. என் இதயத்துடிப்பின் ஓசை படுத்திருந்த அந்த நாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். எழுந்து நின்று கவனமாக என்னைப் பார்த்தது. கொஞ்சம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்தார். யார் வேணும் என்றார்? எனக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. உங்க பெயர் இந்திராவா?
***
ஏன் கேக்கறீங்க? இல்லை. உங்க பெயர் என்ன? மேனகா. உங்களுக்கு என்ன வேணும் சார்? நீங்க யார்? நான்.. நான்… சிவான்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? சிவா? அப்படி யாரையும் தெரியாதே. உங்க கணவர்? வேலைக்குப் போயிருக்கார். உங்களுக்கு என்ன சார் வேணும்? உங்களுக்கு இந்திரான்னு வேற பெயர் ஏதும் இருக்கா? இல்ல சார். நீங்க தவரான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும். நம்பர் 78 பெரிய கடை வீதி. இதுதான். ஆனா நீங்க கேக்குற மாதிரி யாரும் இங்க இல்ல சார். பக்கத்தில விசாரிச்சுப் பாருங்க.
மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பத்து வருடங்கள் ஆச்சு. எது வேணும்னாலும் மாறி இருக்கலாம். அவங்க இப்ப எங்க இருக்காங்களோ? எனக்கும் அவங்களுக்கும் முதலில் ஏதும் சம்பந்தம் இருக்குமா? அந்தப் பையன் என்ன செய்துகொண்டிருப்பான்? இனி நான் என்ன செய்யப்போகிறேன்?
***
உசிலம்பட்டி ரோடு தூசியாக இருந்தது. தேவர் கூண்டுக்குள் அடைந்துகொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. பள்ளிக்கூடம் தொலைவில் தெரிந்தது. பள்ளிக்கூடத்தில் போய் கேட்டுப்பார்த்தேன். முத்து என்பவரையே தெரியாது என்று சொல்லிவிட்டனர். 1995இல் மூன்றாம் வகுப்பு படித்த அந்தப் பையனைப் பற்றி என்ன கேட்பது? பெயர் தெரியவில்லையே. சின்னாவோ என்னவோ. முழுப்பெயரும் தெரியவில்லை. அவர்களிடம் என்னவென்று கேட்ப்பது? பிரின்ஸிப்பால் முதற்கொண்டு பலரும் மாறியிருந்தனர்.
1995இல் இங்கு பிரின்ஸிப்பாலாக வேலைப்பார்த்தவர் இப்பொழுது கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் பிடி மாஸ்டராக வேலை செய்கிறார். பக்கத்தில் தான் குடியிருக்கிறார். வேண்டுமென்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் என்றார் ஆயா. நீங்கள் சொல்லுவது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அவர் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். முத்துவை எனக்குத் தெரியும் என்றார் அந்த ஆயா.
பழைய பிரின்ஸிப்பாலின் முகவரி வாங்கிக்கொண்டேன்.
***
உசிலம்பட்டி ரோட்டில் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். பேக்கரி பற்றிய ஞாபகம் அப்பொழுது தான் வந்தது. அதே வீ பி மதுரா பேக்கரி அங்கிருந்தது. ஒரு காப்பியும் ஹனி கேக்கும் ஆர்டர் செய்துவிட்டு அங்கு உட்கார்ந்தேன். பல கோணத்தில் யோசிக்க முயன்றேன். இந்தியா வந்து இரண்டு வாரங்கள் ஆச்சு.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் ஏதும் சிக்கவில்லை. வீட்டிலிருந்து ஒரு காலும் இல்லை. மனைவிக்கும் நான் கால் செய்யவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. என் செல்போனை மிஸ் ரம்பாவுக்குப் பயந்து சுவிட்ச் ஆ·ப் செய்திருக்கிறேன். இருக்கட்டும். இன்று இரவு மனைவிக்கு கால் செய்யலாம். இன்றுடன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொள்ளலாம்.
இன்று இரவு தஞ்சாவூர் போய்விட்டு அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னை போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
***
நீங்க இங்க ரொம்ப நாளா கடை வெச்சிருக்கீங்களா? ஆமா. எங்கப்பா ஆரம்பிச்ச கடை. அவர் தவறிட்டார். இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ நாளா கடையப் பாத்துக்கறீங்க? பதினைந்து வருஷமா நான் தான் பாத்துக்கறேன். என்னை வித்தியாசமாக அவர் பார்க்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்: 1995ல உங்க கடைக்கு முன்னால ஒரு விபத்து நடந்து பைக்ல வந்த ஒருத்தர் அந்த இடத்திலேயே பலி ஆயிட்டாரு. அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியலையே சார். இந்த ரோட்ல ஆக்ஸிடென்ட்டுக்கா பஞ்சம். பிள்ளையார் கோயில் இருக்கு பாரு, நேத்து கூட அந்தத் திருப்பத்தில ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.இறந்தவன் என் நண்பர் ஒருவருக்கு சொந்தம். 26 வயசுப் பையன். புதுசா கல்யாணம் பண்ணவன். புது பைக். பாவம். இன்னும் கொஞ்ச ஒரு மாசத்திலேயோ என்னவோ அவன் அமெரிக்க போகப்போறதா சொல்லிட்டிருந்தானாம். அமெரிக்காவுக்கா எதுக்கு? படிக்கவா? ஏதோ வேலை விசயமாவாம்? வேலை விசயமா? அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..
***
மீண்டும் கார்பரேஷனுக்கு விரைந்தேன். இந்த முறை ப்யூனுக்கு மூவாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.
இறந்தவரின் பெயர்: மணிகண்டன். அப்பா பெயர்: மணிமாறன். வயது: 27 ·ப்யூச்சர் சா·ப்ட் என்கிற கம்பெனியில் வேலை பார்த்தவராம்.
இந்த சின்ன ஊரில் சாப்ட்வேர் கம்பெனி இருக்கிறதா?
***
எம்டியப் பாக்கணும். நீங்க யாரு? என்ன விசயமா வந்திருக்கீங்க? உங்க எம்டி கிட்ட பேசிட்டேன். இன்னைக்கு காலையில பத்து மணிக்கு வரச்சொன்னார். ஓ அப்படியா உக்காருங்க. வந்திடுவார்.
*
ஸோ.. மிஸ்டர்..கண்ணன்..யெஸ் யெஸ் மிஸ்டர் கண்ணன்..நீங்க திருமங்கலத்திலேயே தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? ஆமா மிஸ்டர் கௌதம். என்னுடைய பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்க. கடைசிக்காலத்தில அவங்களக் கூட இருந்து பாத்துக்கனும்னு தோணுச்சு அதான் இங்கயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு நினைக்கிறேன். வெல்…எங்க டெக்னிக்கல் மானேஜர் லீவுல இருக்கார்..உங்க மாதிரியான டாலன்ட்ஸை விடவும் மனசில்ல..ஐ வில் கால் யூ பேக் இன் டூ டேஸ்..
*
கௌதம் தனது பர்ஸனல் லேப்டாப்பை திறந்து HR என்கிற அந்த மென்பொருளை திறந்தார். மிக நீளமான ஒரு பாஸ்வேர்டை அடித்தார். நீண்ட நேரம் காத்திருந்தார்.
BODY SHOP மெனுவை க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருந்தார். இரண்டு இரண்டு புகைப்படங்கள் வரிசையாகத் தோன்றின. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கீழே படத்தில் தோன்றியவரின் பெயர் மற்றும் வருடம், பக்கத்திலே வேறு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ; பெயர் இல்லை வருடமும் இல்லை. நிறைய போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஒரு போட்டோவில் அப்படியே எழுந்து நின்று விட்டார். அந்த போட்டோவில் இருந்த நபருக்குக் கீழே சிவா என்று இருந்தது; வருடம் 1995; பக்கத்தில் தற்பொழுது கண்ணன் என்று தன்னைப் பார்க்க வந்த நபரின் போட்டோ.
Authenticating the caller..
2134A897Z0000011100000N….I9988653.
டயல் டோன்…
Authenticating the receiver..
6734561238965367429076452Y35…TY..
பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்..
RAT ESCAPED. POSSIBLE BREACH.
பீப்..பீப்..பீப்..பீப்..பீப்..
COPIED. CONTROL INIT.
கௌதமின் முகம் கலவரத்தில் வெளுத்திருந்தது. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.
***
அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கனவில் தோன்றியவரின் மகனும் மனைவியும் எங்கே போயிருப்பார்கள்? எந்த லிங்க்கும் எனக்குப் புலப்படவில்லையே. நாளைக்கு ஊருக்குக் கிளம்பவேண்டும். இதுவரை வீட்டுக்கும் கால் செய்யவில்லை. என் மனம் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனவாக இருக்குமோ? ஜஸ்ட் கோயின்ஸிடன்ஸ்? நான் தான் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொண்டேனோ? பேசாம வேலையப் பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாமா?மீண்டும் சிவாவை பற்றிய குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். சிவா. இந்திரா. 78 பெரிய கடை வீதி. இதில் இருக்கும் முகவரியில் அவர்கள் இல்லை. எங்காவது காலி செய்து சென்றிருக்கக்கூடும். பக்கத்தில் சிலரிடம் விசாரித்தாயிற்று. பெட்டிக்கடை வைத்திருப்பவர். துணி அயர்ன் செய்பவர். யாருக்கும் சிவாவையும் இந்திராவையும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சின்னப்பையன்? பழைய ப்ரின்ஸிப்பாலிடமும் விசாரித்துவிட்டேன். நோ க்ளூஸ். 1995இல் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பொழுது பணிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஹவ் டிட் ஐ மிஸ் திஸ்?
எழுந்து ஓடினேன். கதவைக் கூடப் பூட்டவில்லை. ஹோட்டலைவிட்டு வெளியேறியதும் கண்ணில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.
***
நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நான் ஐந்து நிமிடங்கள் மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பையன் இன்று வரை அதே பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பானா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஜஸ்ட் கிவ் இட் எ ட்ரை.
கதையை முழுசாகச் சொல்லாமல் விபத்தையும் அந்தப் பையனைப்பற்றி மட்டும் சொன்னேன். மாணவர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசிக்கொண்டேயிருந்தனர். பாய்ஸ் எனி க்ளூ? என்று கேட்டுப்பார்த்தேன்.
நான் கூட்டத்தை முடிக்கும் வரையிலும் எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தனர். நோ க்ளூஸ்.
***
என்னா சார்? ஏதாவது க்ளூ கெடச்சதா? பள்ளியின் கேம்பஸில் இருக்கும் ஸ்டேஸனரி ஸ்டோர்ஸ் கடைக்காரர். இவரிடமும் முன்னாலே விசாரித்துப் பார்த்துவிட்டேன். பயனில்லை. என்னா மணி சார் என்ன தேடறார்? அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் கேட்டார். பதினாலு வருடத்துக்கு முன்னர் இங்க நடந்த ஒரு பைக் ஆக்ஸிடென்ட் பத்தி என்கிட்ட அன்னைக்குக் கேட்டுட்டிருந்தார். பதினாலு வருஷத்துக்கு முன்னாடியா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. நான் சொல்லிமுடித்ததும் எழுந்து என் பக்கத்தில் வந்தார் அந்தப் பெரியவர்.
***
நீங்க சொல்ற அந்தப் பையன எனக்கு நல்லாத் தெரியும். அப்ப இதோ இங்க தான் கயித்துக்கடை வெச்சிருந்தேன். அவங்க அப்பா இதே ஊர்ல தான் ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கம்பெனியா? ஆமா. சைக்கிள்லதான் வந்து பையனக் கூப்பிட்டுட்டு போவார். அவர் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆச்சுன்னா பையன் என் கடையில தான் இருப்பான். என்கிட்ட நல்லா பேசுவான் அந்தப் பையன். பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் அவனப்பிடிக்கும். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போகப்போறேன்னு சொல்லிட்டிருந்தான். ஆக்ஸிடென்ட் நடந்த அன்னிக்கு முதல் நாள் அவங்க அப்பா அவனக் கூப்பிட வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அவர் வந்தப்ப சைக்கிள்ல நிப்பாட்டிட்டு டீ சொல்லிட்டு என் கூட பேசிட்டிருந்தார். பேச்சுவாக்கில, என்ன சார், ஸ்கூலுக்கு லீவு போடப்போறேன்னு சொல்றான்னு கேட்டேன். சொல்லிட்டானா? ஒன்னுமில்ல சும்மாதான்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது; அவர் வெளிநாடு போவதா அவர் மனைவி கிட்ட மட்டும் சொல்லிட்டிருந்திருக்கார். வெளிநாடா? அப்படித்தான் அவருடைய மனைவி சொன்னதா சொன்னாங்க.
இப்ப அவங்க மனைவி அந்தப்பையன் எல்லோரும் எங்கிருக்காங்கன்னு தெரியுமா?
***
யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?
நீங்க இந்திரா..
ஆமா…நான் தான்…நீங்க?
நான்..நான்..நான்..உங்க..உங்க..
அந்தப் பையன் வந்து நின்றான்..கையில் கெமிஸ்ட்ரிப் புத்தகம்..
உங்களுக்கு யார் வேணும் என்றான்..
அப்பு..அப்புக்குட்டி எப்படிடா இருக்கே?
ர்..ர்..ர்..ராணி நீ எப்படிம்மா இருக்கே?
நீ..நீ..நீ..நீ..நீங்க…கண்களிலிருந்து நீர் வழிகிறது…என்னங்க..என்னங்க..என்னங்க..ஐயோ..ஐயோ..என்னங்க..
என் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..ராணிம்மா..நான்..நான் தான்..நான் தான்..
எனக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறார் போல இருக்கிறது..
பக்கத்தில் இரண்டு பேர்..இடப்பக்கமும் வலப்பக்கமும்..
ஐயோ..என்ன இது..என்ன இது…நான் எங்கு போகிறேன்..
ராணி ராணி என்னப்பிடி..என்னப்பிடி..பிடி..அப்பு..அப்புக்குட்டி..
ராணி கதவைப் பிடித்துக்கொண்டு சரிகிறாள்..
வெறுமை.வெறுமை.வெறுமை.மூச்சு விட முடியவில்லை. உடலே பாரமாக இருக்கிறது…நீண்ட பயணம்..
***
அம்மா..அம்மா..
என்னம்மா ஆச்சு? ஏன் கொய்யாப்பழம் விக்க வந்தவனப்பாத்து ஐயோ ஐயோன்னு சொல்லிட்டிருந்தீங்க..
இந்திரா அழுது கொண்டேயிருக்கிறாள்..ஏதும் பேசவில்லை..
சுவற்றில் சிவா சிரித்துக்கொண்டிருக்கிறான்.
***
ஹலோ மிஸ்டர் மதன்?
யெஸ்..
நான் முத்து பேசறேன்..
முத்து? எந்த முத்து?
குரல்வலை ப்ளாக்கர்..
குரல்வலை? யாரு சார் நீங்க?
நான் நான்..உங்கவீட்ல கிருஷ்ணன் அப்படீன்னு ஒருத்தர் தங்கியிருந்தார் இல்லியா?
கிருஷ்ணன்? யார் அது?
உங்க ப்ரண்ட்..
என் ப்ரண்டா? ராங் நம்பர்..
இல்ல..அவர் இந்த நம்பர் தான் கொடுத்தார்..
இல்லங்க..எனக்கு கிருஷ்ணன்னு யாரும் ப்ரண்ட் இல்ல..தவிரவும் யாரும் என் வீட்ல வந்து தங்கவேயில்ல..இப்ப போன வெக்கறீங்களா?
முத்து மதனின் வீட்டு நம்பருக்கு அடிக்கிறார்.
ஹலோ..
ஹலோ..
மிஸ்..மிஸ்டர்..மதன் இருக்காரா?
யெஸ் மதன் ஸ்பீக்கிங்..
நான் முத்து பேசறேன்..
ஏன் சார் சொன்னாக் கேக்கமாட்டீங்களா? என் வீட்டு நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
சார்..நான் இந்த நம்பருக்கு ஏற்கனவே ஒரு தடவ கால் பண்ணிருக்கனே..நாம் ரெண்டு பேரும் பேசிருக்கோம்..
என்ன சார் விளையாடறீங்களா?
உங்க ப்ரண்ட் கிருஷ்ணன்..
கிருஷ்ணனையும் தெரியாது ராதாவும் தெரியாது..குழப்பாம உங்களுக்கு எந்த நம்பர் வேணுங்கிறதப்பாத்து கரெக்டா அந்த நம்பருக்கு அடிங்க..
யாருடி அது கிருஷ்ணன்? என் ப்ரண்டாம்? உனக்கு யாரையும் அப்படித் தெரியுமா? ம்ம்..இல்லியே? இது என்ன புதுக்குழப்பம்?
***
·ப்யூச்சர் சாப்ட்.
கௌதம் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தார்.
HRஇடமிருந்து மெயில் வந்திருந்தது. மெயிலை டீக்ரிப்ட் செய்து படிக்க ஆரம்பித்தார்.
நடந்ததுக்கு மன்னிக்கவும். எப்பொழுதும் போலத்தான் ட்ரெயினிங்குக்கு பூலோகத்திற்கு ஒருவரை அனுப்பிவைத்தோம். நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்தப்பிறகு தான் அனுப்பினோம். ஆனால் எப்படியோ அவருக்கு நினைவு வந்துவிட்டது. இன்னும் அதற்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவரை மீட்டுக்கொண்டாயிற்று. பூலோகத்தில் அவர் விட்டுச்சென்ற எல்லா நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு யாரையும் இங்கே அனுப்பவேண்டாம். பிறகு சந்திப்போம்.
– Heaven (and Hell) Resource Management,
***
hr>connect to earth.global.network
connected..
hr>connect to blogger.com /use adminforall
connected..
hr>login msvmuthu@gmail.com ******
authentication success..logging in..
hr>delete post https://kuralvalai.com/2008/09/blog-post11.html
deleting..successfull..
hr>connect to cache.earth.golobal.network /use adminforall
connected..
hr>clear cache ref::https://kuralvalai.com/2008/09/blog-post11.html /all
clearing cache…..
***
Update:கதையை எழுதினப்பிறகு தான் சர்வேசன் நடத்தும் நச்சுன்னு ஒரு கதைப் போட்டி தெரியவந்தது. போட்டிக்கும் கதையை அனுப்பிவிட்டேன்!