நிலவில் தண்ணீர் : எங்கிருந்து வந்தது?

அக்டோபர் 9 அன்று LCROSS(Lunar CRator Observation and Sensing Satellite) செயற்கைக்கோள், Centaur எனப்படும் ராக்கெட் பூஸ்டர் நிலவின் தென் பகுதியில் சென்று மோதுவதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. நிலவின் நிலத்துக்கடியில் ஏதும் தண்ணீர் உறைந்திருக்கிறதா என்று அது ஆராய்ந்துகொண்டிருந்தது.

மில்லியன் மில்லியன் வருடங்களாய் வால்நட்சத்திரங்களும் (comets) எரிநட்சத்திரங்களும் (meteors) நிலவுக்கு தண்ணீர் கொண்டுவந்தவாரே இருக்கின்றன. வால் மற்றும் எரி நட்சத்திரங்கள் நிலவில் அதிவேகமாக வந்து மோதுவதால் மோதிய இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு (பெருங்குழி) ஒன்று உருவாகிவிடும். இதை ஆங்கிலத்தில் Crater என்று சொல்லுவார்கள். இந்த மாதிரியான பெருங்குழிகள் நிலவில் அதிகம். அதனால் தான் நாம் இங்கிருந்து நிலவைப் பார்க்கும் பொழுது கறை படிந்தது போல இருக்கிறது. பூமியையும் கூட comets மற்றும் meteors நிறைய முறை தாக்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்த இது போன்ற நிகழ்வு தான் டைனோசர்களை பூண்டோடு அழித்தது. மேலும் பல உயிரனங்களை சுத்தமாக அழிவுக்கு இட்டுச்சென்றது என்று இன்றளவும் நம்பப்படுகிறது.

நிலவில் இது போன்ற பெருங்குழிகள் ஏற்படும் பொழுது வால் நட்சத்திரங்களும் எரி நட்சத்திரங்களும்  கொண்டுவந்த தண்ணீர் அந்த பள்ளத்தாக்குகளிலே தங்கிவிடும். நிலவில் வெப்பநிலை என்ன தெரியுமா? -233 டிகிரி செல்சியஸ். எனவே தண்ணீர் உரைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். அந்தப் பெருங்குழியில் வெயில் படாத இடத்தில் அது இருந்து விட்டால் கண்டிப்பாக அது பனிக்கட்டியாகவே தான் இருக்கும்.

இது போல ராக்கெட் பூஸ்டர்களைக் கொண்டு மோதுவதால் நிலவின் பெருங்குழிகளில் இருக்கும் ஐஸ் தெரித்து வெளியேறும். அப்படி வெளியேறும் பொழுது சூரியனின் வெப்பத்தால் ஐஸ் உருகி தண்ணீராக மாறி பின் தண்ணீர் உடைந்து ஹைட்ரஜனாகவும் ஹைட்ராக்ஸிலாகவும் மாறிவிடும். இதை செயற்கோள் மூலம் நாம் கண்டுபிடிக்கலாம்.

இந்த முறை பூஸ்டர் ராக்கெட் மோதிய இடத்தின் பெயர் Cabeus என்கிற பெருங்குழி. இதன் வெப்பநிலை -230 செல்சியஸ். ஐஸாக வைத்திருக்க போதுமான வெப்பநிலைதான். நமது ராக்கெட் பூஸ்டர் அதிவேகத்தில் நிலவில் மோதியதில் இது மற்றுமொரு புதிய 20 மீட்டர் அகல குழியை உருவாக்கி; இன்னும் அதிக அளவில் தூசியையும் புகையையும் உண்டாக்கியது. இந்த புகையில் தான் தண்ணீருக்கான ஆதாரம் இருந்தது.LCROSSஇன் infrared spectrumமும் ultraviolet spectrumமும் மிகச் சரியாக தண்ணீருக்கான அதாரத்தைப் பதிந்திருக்கின்றன.

இந்த புகையில் இருநூறு கிலோவுக்கும் அதிகமான தண்ணீர் இருந்தது என்று சொல்கிறார்கள். இதை ஆதாரமாகக் கொண்டு, மேலும் அதிக அளவு தண்ணீர் நிலவில் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது; எவ்வளவு நாளாக அங்கே இருக்கிறது; இனி நிலவுக்குப் போகும் (அல்லது விண்கலத்துக்குப் போகும்) வீரர்களுக்கு எவ்வாறு இது பயன்படும் என்று போகப்போகத்தான் தெரியும்!

2 thoughts on “நிலவில் தண்ணீர் : எங்கிருந்து வந்தது?

Leave a comment