கொஞ்ச நாட்களுக்கு முன் பிபிசி நாலெட்ஜ் சானலில் ஒரு டாக்குமென்டரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் மலை சூழ்ந்த; எளிதில் யாரும் சென்றுவிடமுடியாத தூரத்தில் ஒரு இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஐரோப்பாவிலிருந்து இரு நபர்கள் ஏறமுடியாத மலைகளையும் கடக்கமுடியாத கடினமான பாதைகளையும் கடந்து வெகு நாட்கள் பயணம் செய்து அந்த மலை உச்சியை அடைகின்றனர். அங்கு தங்கியிருந்து அந்த மக்களுடன் பழகுகின்றனர். பயணம் செய்த அந்த இரு ஐரோப்பியர்களுள் ஒருவர் தாவரவியல் நிபுணர்.
அந்த பழங்குடியினருள் பலர் இன்னமும் நகரங்களைப் பார்க்காதவர்கள்; அந்த காட்டைவிட்டு வெளி வராதவர்கள். ஆங்கில மருத்துவம் மற்றும் ஆங்கில மருந்துகளைப் பற்றியும் தெரியாது. நோய்களைப் பற்றியும் தெரியாது. நமக்கு தெரியாவிடில் நோய்களே இல்லை என்பதாகிவிடுமா? அவர்களுக்கும் நோய்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு நோய்களின் பெயர்களும் அவற்றின் பாதிப்புகளும் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்களில் சிலருக்கு கான்சர் இருந்தும்; அவர்களுக்கு அது தெரியாது.
பல நோய்களால் மக்கள் மாண்டாலும் அது ஏதோ சாபத்தால் தான் நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய மருத்துவம் மூலிகை மருத்துவம் மட்டுமே. தாவரவியலார் அவர்களது மூலிகை மருத்துவம் பற்றி விசாரிக்க; அவர்கள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த இலைகளுக்கு அவர்கள் இருப்பதாகச் சொல்லும் மருத்துவகுணம் ஏதும் இல்லை என்று இவர் சொன்னாலும் அவர்கள் நம்பவில்லை.
அங்கிருக்கும் நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு கழுத்தில் ஒரு வகையான வீக்கம் இருக்கிறது. அது ஒரு கிரிக்கெட் பால் அளவுக்கு பெரிதாகவும் இருக்கிறது; கெட்டியாகவும் இருக்கிறது. இது ஒரு வகையான நோய்; இந்தக் குழந்தையை குணப்படுத்த நகரத்துக்கு கூட்டி சென்று மருத்துவம் பார்க்கவேண்டும் என்றும் இந்தக் குழந்தையை நகரத்துக்கு அழைத்துச் செல்ல எனக்கு அனுமதி தாருங்கள் என்று அவர் கேட்கிறார். அதற்கு அவர்கள் மறுத்துவிடுகின்றனர்.
மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த மாதிரியான வீக்கம் ஒரு வகையான எறும்புகளின் சாபத்தால் வருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்குப் பரிகாரமாக எறும்புகளை நோக்கி பிரார்த்தனை செய்து ஒரு வகையான இலையை அரைத்து சாறு எடுத்து வீக்கத்தின் மீது கொஞ்ச காலம் விட்டுக்கொண்டிருந்தால் சரியாகிவிடும் என்றும் சொல்கின்றனர். நமது தாவரவியலாரின் பேச்சை யாரும் கேட்கிறமாதிரி தெரியவில்லை.
தாவரவியலாரும் அவர்கள் குறிப்பிட்ட அந்த இலையைத் தேடி கண்டுபிடிக்கிறார். இலையைக் கண்டுபிடித்த நொடியில் அந்த இலைக்கு ஏதும் மருத்துவ குணம் இல்லையென்பதை அறிகிறார். இதை நிரூபிக்க அந்த இலைகளை சாறு எடுத்து அந்தக் குழந்தையின் கழுத்திலிருக்கும் வீக்கத்தில் விடுகிறார். கொஞ்ச நேரத்தில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகிறது.
தாவரவியலாருக்குத் தெரியும் அந்த இலையில் ஏதும் மருத்துவ குணம் இல்லை என்பது; எனவே வீக்கம் குறைந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சியே என்பதையும் அறிகிறார். வீக்கம் பல நாளாக இருந்திருக்கிறது; ஏதோ ஒரு காரணத்துக்காக பின் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வற்றிப்போகிறது. இலைக்கும் வீக்கம் குறைந்ததுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ஆனால் இந்த தற்செயல் சம்பவத்தால் அங்கிருக்கும் மக்களுக்கு மூலிகை மருத்துவம் மேல், மேலும் தீவிரமான நம்பிக்கை உருவாகிறது. இதைத் தொடர்ந்து இன்னும் பல நோய்களை இதே போன்றதொரு மூலிகை மருத்துவம் குணப்படுத்தும் என்று அவர்கள் உறுதியாக நம்புவதற்கு இது போன்ற தற்செயல் நிகழ்ச்சிகள் உதவுகின்றன.
*
கொஞ்ச நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். எனக்கு மட்டுமல்ல என்னுடன் சேர்ந்து இன்னும் பலருக்கும் அந்த மெயில் அனுப்பப்பட்டிருந்தது. அது சூரியகிரகணத்தின் பொழுது பூக்களைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்த பாம்பைப் பற்றியது. அதாரம் இருக்கிறது. படங்கள் இருக்கின்றன. சாம்பிளுக்கு அவர் அனுப்பிய ஒரு படம் இங்கே:
அவரைச் சந்தித்த பொழுது ஏன் இவ்வாறான மெயில்களை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்கள் என்று கேட்டபொழுது; எனக்கு வந்தது உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிறகு ஏன் இதையெல்லாம் நம்புகிறீர்கள் என்று கேட்டபொழுது; கொஞ்சநேரம் மழுப்பியவர் பிறகு சட்டென்று, உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுடன் என்று கோபமாகச் சொன்னார்.
*
சரி தான்; அதையே நானும் திரும்பக் கேப்பேன்ல?