இருட்டின பிறகு நீங்கள் வெளியே (ஷாப்பிங் மால்களுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால் கிழக்குப்பக்கம் கொஞ்சம் சிவப்பு நிறத்தில் பிரகாசமான ஒரு நட்சத்திரம் தெரிவதைக் கண்டிருக்கக்கூடும். ஆனால் அது நட்சத்திரம் அல்ல; அது ஒரு கிரகம். சிவப்பு என்று சொன்னவுடன் நிறைய பேர்களுக்கு அந்த கிரகத்தின் பெயர் என்னவென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரியனைச் சுற்றிக்கொண்டிருப்பதால் ஒவ்வொரு ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் கடந்து செல்லும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உள் சுற்றில் வேகமாக பயணிக்கும் கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாகப் பயணிக்கும் காரை எப்படிக் கடந்து செல்லுமோ அதே போல உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் கடக்கும்.
பூமி செவ்வாயைக் கடக்கும் பொழுது செவ்வாய் சூரியன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். எனவே சூரியன் உதிக்கும் பொழுது மறையும்; சூரியன் மறையும் பொழுது உதிக்கும். இந்த சமயத்தில் நமக்கு இரண்டு சாதகமான விசயங்கள் இருக்கின்றன: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்களில் மிகப்பெரிதாகத் தெரியும்; இரவு முழுவதும் தெரிவதால் நமது சௌகரியத்துக்கு செவ்வாயை டெலஸ்கோப் மூலம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். (என் நண்பர் ஒருவரிடம் டெலஸ்கோப் இருக்கிறது. அதிக சக்தி வாய்ந்த டெலஸ்கோப் இல்லை என்றாலும் ஓரள்வு பார்க்கலாம். இங்கே சயின்ஸ் சென்டரில் டெலஸ்கோப் கடை ஒன்று இருக்கிறது. எப்பொழுது போனாலும் அந்தக் கடையில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவரைத் தவிர யாருமே இருக்கமாட்டார்கள். கல்லாவில் உட்கார்ந்திருப்பவர் மிகவும் வயதானவர். விசாரித்ததில் அவருக்கு டெலஸ்கோப் பற்றி எங்களுக்குத் தெரிந்த அளவே தெரிந்திருந்தது!)
இது போல பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்பது இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கப்போகிறது: ஜனவரி 29 2010.
அதனால் தான் “Beauty with out borders” என்னும் தளம் Hello Red Planet என்று ஒரு புரோகிராம் ஆரம்பித்திருக்கிறது. இதன் நோக்கம் எல்லோரையும் டீவி மற்றும் ஷாப்பிங் மால்களில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண வைப்பது. டெலஸ்கோப்பில் பார்ப்பதால் செவ்வாய் மிக மிகப் பெரிதாக தெரியும் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்கள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் பனிப்பாறைகளைக் காணமுடியும் என்று சொல்கிறார்கள். இங்கு சயின்ஸ் சென்டர் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும்; எல்லாருக்கும் இலவச அனுமதி. நானும் மனைவியும் குழந்தையும் போகலாம் என்று நினைத்திருக்கிறேன்.
நீங்கள் டெலஸ்கோப் உபயோகித்துப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் கண்ட காட்சியை குழுவுக்கு தெரியபடுத்தினால் அவர்கள் உலகம் முழுவதிலும் கிடைக்கும் தகவல்களை திரட்டுவார்கள். மற்ற எல்லோரும் போலத்தான் நீங்களும் செவ்வாயைப் பார்த்தீர்கள் என்பதையும் நீங்கள் உறுதிப்படுதிக்கொள்ள முடியும்.
இந்த முறை இந்தியா வந்திருந்தபொழுது இந்த காவலூரில் இருக்கும் observatoryக்குப் போகவேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிகப் பெரிய டெலஸ்கோப் இருக்கிறதாம்! காவலூருக்குப் பக்கத்தில் இருக்கும் நண்பர்களே தவறாமல் செவ்வாய் கிரகத்தைப் பார்த்து எனக்குத் தெரிவியுங்கள் ப்ளீஸ்.
சென்னையில் சயின்ஸ் சென்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை; அல்லது உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோனமர் குழு ஏதும் இருக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். மேலும் சென்னை அல்லாத உங்கள் ஊரில் இப்படி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்கள்.
கூகிள் செய்ததில் இந்த குழு ஒன்று சென்னையில் இருப்பது தெரியவந்தது.
Name: TANASTRO (Tamilnadu astronomy association)
Address: C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai
Contact: President .Proff.P.Devados
Phone: 24416751
Email: Tanastro@yahoo.com
URL: Website
Members: 90
One thought on “செவ்வாயைக் (வெறும் கண்களில் கூட) காணுங்கள்!”