எங்கள் வீட்டில் டீவி வாங்கியதிலிருந்து ஹிந்தி சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். டீவி எப்பொழுது வாங்கினோம் என்பது தெளிவாக ஞாபகம் இருக்கிறது. நான் நான்காவது படிக்கும் பொழுது. ப்ளாக் அன்ட் ஒயிட் சியர்ஸ் எல்காட். மூடி வைத்துக்கொள்ள கதவுகள் கூட இருக்கும். டீவி வாங்கிய அந்த வாரத்தில் சரியாக எந்தக்கட்சியோ பந்த் அறிவித்தது. ஒரு நாள் லீவ் கிடைத்தது. எனவே வாடகைக்கு ஒரு நாள் டெக் எடுத்தோம். பார்த்த படங்கள் கந்தன் கருணை, வருஷம் பதினாறு, ராஜாதி ராஜா, கரகாட்டக்காரன். ராஜாதிராஜா எனக்காக. ரஜினி படம் வேண்டும் என்று நான் அழுது அடம்பண்ணதால்.
டீவி வாங்கி முதலில் வாடகை டெக்கில் படம் பார்க்கும் பொழுது சாமி படம் போடவேண்டுமாம். அதனால் கந்தன் கருணை! அண்டத்தின் ஒரு மூலையில் ஒரு துகள் போல இருக்கும் நம் பூமியின் ஒரு மூலையில் துகள் போல இருக்கும் எங்கள் வீட்டில் ஒரு மூலையில் இருக்கும் இந்த டீவிப் பெட்டியைக் கூட கடவுள் கவனமாகப் பாதுகாக்கிறார் பாருங்கள்! அதுவும் முதலில் சாமி படம் போட்டால் மட்டுமே பாதுகாக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கும் பொழுது ஆச்சரியமே மேலிடுகிறது! அந்தப் படத்தில் வீரபாகுவாக சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்திருப்பதை இன்று நினைத்துப்பார்த்தாலும் ஏனோ எரிச்சல் வருகிறது.
ஓகே. ஹிந்தி சினிமா பற்றியல்லவா பேசவேண்டும். அந்தக் காலத்தில் சனிக்கிழமை மாலைகளில் ஹிந்தி சினிமா தூர்தர்ஷனில் வரும். சனிக்கிழமை மாலைகளில் டியூசன் இருக்காது. பெரும்பாலும் காலையிலே முடிந்துவிடும். அதனால் ராஜேஷ் கண்ணா, ரிஷி கபூர், தேவானந்த், அமிதாப் பச்சன் போன்றோர்களை அன்று மட்டுமே பார்க்கமுடியும். பெரும்பாலும் அம்மாவும் நானும் மட்டுமே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். எனக்கு பள்ளியில் ஹிந்தி உண்டு. என் அம்மா ஹிந்தி படித்ததேயில்லை. ஹிந்தி படிக்கும் எனக்கே ஹிந்திப் படம் புரியாமல் இருக்கும்போது ஹிந்தியே தெரியாதா அம்மாவுக்கு மட்டும் எப்படி எல்லாம் புரிகிறது என்பது எனக்கு வியப்பாகவே இருந்தது.
ரிஷி கபூர் படங்கள் என்றால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதும் பாட்டுப்பாடிக்கொண்டிருப்பார். இந்திய சினிமாவில் யார் தான் பாட்டு பாடாமல் இருப்பர்? இருக்கிறார்கள்? படத்தில் இருக்கும் கதப்பாத்திரங்கள் யாவரும் பாட முடியாத துர் சூழ்நிலை உருவானால் இருக்கவே இருக்கிறார் இளையராஜா! பின்னனியில் பாடிக்கொண்டிருப்பார் அவர். எனக்கு ஏனோ அமிதாப்பச்சன் பிடிக்காது.அப்போது எனக்கு பிடித்த ஹிந்தி நடிகர்கள் இருவர். தேவானந்த் மற்றும் சத்ருக்கன் சின்ஹா. படத்தில் இவர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும் கண்டிப்பாக சண்டை இருக்கும். சண்டையில்லாத படங்கள் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. தர்மேந்திரா கொஞ்சம் பரவாயில்லை. சண்டைக்கு மட்டுமில்லை ஏனோ எனக்கு சத்ருக்கன் சின்ஹாவைப் பிடிக்கும். அவர் ஏன் வில்லனாகவே இருந்தார் என்பது பிறகு ஏன் பிஜேபியில் சேர்ந்தார் என்பதும் புரியாத புதிர். நிஜத்திலும் வாழ்க்கையிலும் அவர் எதிர்கட்சியிலேயே ரொம்பகாலம் இருந்திருக்கிறார்.
அப்புறம் சன்டீவிக்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தவுடன் ஹிந்தியுடனான எனது தொடர்பு அறுந்து போனது. என் பள்ளியிலும் ஹிந்தியை நிறுத்திவிட்டு தமிழ் நான் இரண்டாம் பாடமாக எடுத்தவுடன் ஹிந்தியை மறந்தேபோனேன். என் நண்பன் சூர்யா தான் அவ்வப்போது ஞாபகப்படுத்துவான்.
அதற்கப்புறம் நான் பார்த்த ஹிந்திப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஹம் ஆப் கெ ஹயின் கவுன், தில் வாலே..,குச் குச் ஹோத்தா ஹை, ஹம் ஆப் கே தில் மே ரஹ்தே ஹை, ப்யார் கியா தோ தர்னா க்யா அவ்வளவே. இதுவும் சோனி டீவியின் தயவால்.
அப்புறம் மறுபடியும் இடைவெளி. ரொம்ப காலத்துக்கு அப்புறம் தான் ஸ்வதேஸ் பார்த்தேன். அமெரிக்காவின் நாசாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் இந்தியா வருகிறான். அவனுக்கு இந்தியா பிடிக்கவில்லை. வந்த இடத்தில் ஒரு பெண்னை நேசிக்கிறான். அவனால் முடிந்த ஒரு நல்லுதவியை அந்த குக்கிராமத்திற்கு செய்கிறான். சிவாஜியில் ரஜினி செய்தது சினிமா. ஆனால் ஸ்வதேஸ் யதார்த்தமாக இருக்கும். பிறகு அமெரிக்கா போனானா இல்லை இந்தியாவிலே இருக்கிறானா என்பது தான் படம். ரஹ்மான் பாந்தமாக இசையமைத்திருப்பார். நல்ல படம். இந்தப் படம் பார்த்ததற்கு அப்புறம் தான் ஹிந்தி சினிமா கூட நல்லாருக்குமோ என்ற எண்ணம் வந்தது.
அப்புறம் மேலும் வெகு சில படங்கள். தில் சாக்தா ஹை, ப்ளாக், ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், கஜினி, சக் தே இந்தியா, டான், சர்கார், பூத், கம்பெனி என்று விரல் விட்டு எண்ணிவிடக்கூடியவை. இவை அனைத்துமே அருமையான படங்கள் தான் என்றாலும் எனக்கு இரண்டு படங்கள் ஸ்பெஷல்.
ரங் தே பசந்தி மற்றும் தாரே ஜமீன் பர். அமீர்கான் மட்டும் எப்படி படங்களைத் தேர்வு செய்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். ரங் தே பசந்தி போன்ற கதையை நான் இது வரை படித்ததுமில்லை பார்த்ததுமில்லை. பக்த் சிங்கை தூக்கில் போட்ட ஆங்கில ஜெனரலின் பேத்தி அவர் எழுதி வைத்த டைரிக்குறிப்புகளை ஒரு நாள் படிக்கிறாள். பகத்சிங் மற்றும் அவனது சகாக்களால் ஈர்க்கப்பட்டு அவர்களது கதையை டாக்குமென்டரியாக எடுக்கவேண்டும் என்று விரும்புகிறாள். ஒரு நிறுவனத்திடம் பேசி அனுமதியும் வாங்கிவிடுகிறாள்.
இந்தியாவில் டாக்குமென்டரி எடுக்க எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு நிறுவனத்திடம் பணத்துக்காக காத்திருக்கும் பொழுது அந்த நிறுவனம் மறுத்துவிடுகிறது. ஆனாலும் எப்படியாவது டாக்குமென்டரியை எடுத்தே தீரவேண்டும் என்கிற உறுதியோடு இந்தியா வருகிறாள். இங்கு அவளது தோழி ஒருத்தி அவளுக்கு ஆறுதல் தருகிறாள். தோழிக்கு நண்பர் கும்பல் ஒன்று இருக்கிறது. நண்பர் கும்பல் எதற்கும் கவலைப்படாத டோன்ட் கேர் பார்ட்டிகள். தோழியின் பாய்ப்ரண்ட் மாதவன். ராணுவத்தில் பைலட்.
ஜெனரலின் பேத்தி அவர்களோடு பழகும்பொழுது பக்த்சிங்கின் சகாக்களை அவர்களுள் காண்கிறார். அவர்களைக் கண்வின்ஸ் செய்து டாக்குமென்டரியை ஆரம்பிக்கிறார். லாலா லஜபதிராயைக் கொன்ற ஜெனரலைக் கொல்லவேண்டும். பகத்சிங்கும் சகாக்களும் திட்டம் போடுகிறார்கள். திட்டம் போட்டபடி கொல்கிறார்கள். அரசியல் வாதிகள் ஊழலில் வாங்கிய ப்ளைட்டை ஓட்டும் பொழுது மாதவன் இறந்துபோகிறார். எதற்கும் கவலைப்படாத டோன்ட் கேர் பார்ட்டிகள் என்ன செய்தார்கள் என்பது சினிமா.
(மேலும்)