2025க்குள் நிலவைத் தாண்டி மேலும் செல்ல விண்கலம் கண்டுபிடித்துவிடுவோம் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார். பல பட்ஜெட் கட்டிங்குகளுக்கு அப்புறம் இது நாசா விஞ்ஞானிகளின் வயிற்றில் பாலை வார்க்கும் ஒரு செய்தியாகும். பூமிக்குப் பக்கத்தில் நிலவை விட தொலைவில் இருக்கும் விண்கல்லுக்கு முதலில் மனிதனை அனுப்புவதும் பிறகு செவ்வாயைச் சுற்றி வர மட்டும் அனுப்புவதும் பிறகு செவ்வாயில் மனிதன் இறங்குவதற்கு விண்கலம் அனுப்பவும் திட்டம் இருப்பதை ஒபாமா இன்று அறிவித்திருக்கிறார். விரைவில் செவ்வாயில் மனிதன் தரையிறங்கி பல ஆராய்ச்சிகள் செய்வதை பார்க்கமுடியும் என்று நினைக்கிறேன். கென்னடி 1961 இல் இன்னும் பத்து வருடங்களில் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று சொன்னதையும் 1969இல் மனிதன் நிலவுல் காலடி எடுத்துவைத்ததும் நினைவிருக்கலாம்.
இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ராக்கெட்டிலே பயணம் செய்துகொண்டிருப்பது? 2025க்குள் வார்ம்ஹோல் கண்டுபிடித்து டக்குன்னு மார்ஸுக்கோ வேறு தூரமான கிரகங்களுக்கோ அல்லது தொலைவில் இருக்கும் நட்சத்திரத்துக்கோ சென்றுவிடவேண்டுமெ. வார்ம்ஹோல் என்பது அண்ட்த்தில் இருக்கும் ஒரு குறுக்குப்பாதை. ஒரு இடத்தில் இருந்து வெகு வெகு தூர்த்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல உதவும் ஒரு பாலம்.
வார்ம் ஹோல் இன்னும் ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஜெனரல் ரிலேட்டிவிட்டியின் படி வார்ம் ஹோல் என்பது சாத்தியமே. கார்ல் சாகன் எழுதிய கான்ட்டாக்ட் நாவல் படித்திருக்கிறீர்களா? அல்லது ஜோடி ஃபாஸ்டர் நடித்த கான்ட்டாக்ட் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வார்ம்ஹோல் பயன் படுத்தித்தான் நம் சூரிய குடும்பத்திலிருந்து லைரா நட்சத்திரக்குடும்பத்தில் இருக்கும் வேகா எனப்படும் நட்சத்திரத்துக்கு போவார் ஜொடி ஃபாஸ்டர்.
இன்னும் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமாயின் இரண்டு பரிமானத்தில் அண்டத்தை மேலும் கீழுமாக வளைந்து இருக்கும் ஒரு துணிபோல நினைத்துக்கொள்ளுங்கள்; மேலிருக்கும் துணியின் மேலேயே பயணம் செய்து கீழிருக்கும் துணியை அடைவதற்குப் பதிலாக, மேலிருக்கும் துணியில் ஒரு துளையை ஏற்படுத்தி கீழிருக்கும் துணிக்கு டக்கென்று செல்லமுடியுமல்லவா? அந்த துளையும் துளை ஏற்படுத்திக்கொடுக்கும் பாதையும் தான் வார்ம்ஹோல். எப்படி ஒரு புழு மாம்பழத்தைத் துளைத்து மற்றொரு புறம் வருகிறதோ அது போல!