(என்னால் முடிந்த வரைக்கும் Space Mission ஐ தமிழ் படுத்தியிருக்கிறேன். வேறு நல்ல சொல் பிரவாகம் இருந்தால் சொல்லவும்.)
இஸ்ரோ (ISRO) தளத்துக்கு அடிக்கடி செல்லாவிடினும் எப்பவாவது போவது வாய்க்கும். இந்த முறை சென்ற பொழுது (பராக் ஒபாமாவின் திட்டங்களைப் பார்த்தபின்!) தளம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவின் அடுத்த பதினைந்து ஆண்டுகளின் வானாராய்ச்சித் திட்டமும் இருந்தது. மேலோட்டமான பார்வை.
1. கிராமப்புறங்களை இணைக்கவும், பாதுகாப்பைப் பலப்படுத்தவும், அலைபேசிகளின் பயன் திறனை அதிகரிக்கவும் சாட்டிலைட்களை பயன்படுத்துவது.
2. தட்பவெட்ப நிலைகளை ஆராய்வதற்கு ஏதுவாக மிக நுண்ணிய படங்களை எடுப்பதற்கான தேவைகளை நிறைவேற்றுவது.
3.சூர்ய மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் மேலும் புரிந்துகொள்ள இன்னும் புதிய வழிமுறைகள் கண்டுபிடிப்பது.
4. கோல்களை ஆராய்வது.
5. அதிக பலுவைத் தூக்கக்கூடிய ராக்கெட் செலுத்திகளை வடிவமைப்பது. (அமெரிக்காவும் இதே போன்றதொரு மிஷன் வைத்திருக்கிறது! ஆனால் அவர்கள் சொல்லும் அதிக பலு வேறு நமது அதிக பலு வேறு)
6. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் செலுத்திகளை வடிவமைப்பது.
கடைசியாக
7. மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது!
விகரம் சரபாய் ISRo வை நிறுவும் பொழுது அவரது நோக்கங்கள் மிகவும் தெளிவாக இருந்தன. நம் வானாராய்ச்சியின் நோக்கம் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு நிலவுக்கோ அல்லது மற்ற கிரகங்களுக்கோ மனிதனை அனுப்புவது அல்ல. நமது வானாராய்ச்சியின் மூலம் சராசரி மனிதனுக்கும் பயன் இருக்கவேண்டும். நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் வரிப்பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே.
ஐம்பது ஆண்டுகள் ஆச்சு. அவரது நோக்கம் கிட்டத்தட்ட நிறைவேறியும் விட்டது. கடந்த பத்து வருடங்களாக நமது GDP யும் வளர்ந்து வருகிறது. சம்பா சாகுபடியிலிருந்து பேரழிவுகளைக் கண்டறிவது வரை நாம் முன்னேறிவிட்டோம். அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது மிக அவசியம்.
அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்பமும் (நிலவுக்கோ அல்லது செவ்வாய்க்கோ!) திறனும் நாம் பெற்றிருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் பதினைந்து ஆண்டுகள் கழித்து வளர்ச்சியடைந்து விட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கமுடியும். இன்னும் வானாராய்ச்சியில் எத்தனையோ படிகட்டுகள் ஏற வேண்டியிருக்கிறது.
நம் காலத்துக்குள் வேறொரு நட்சத்திரக்குடும்பத்துக்கு நம் (நம்!) விண்களங்கள் போவதைப் பார்க்கவேண்டாமா?