HiRIS கொடுத்துள்ள செவ்வாய் கிரகத்தின் இந்த படத்தில் மூன்று மண் சரிவுகள் தெரிகின்றன. அட்டகாசமான படம்.
இடதுபக்கம் உறைந்து போன கார்மன் டை ஆக்சைடு தரையை மூடியிருப்பதைக் காண்கிறோம். சிவப்புக் நிறத்தில் செங்கல் செங்கலாகத் தெரிவது ஒரு உயரமான மலையின் செங்குத்தான ஒரு பகுதி. நாமும் கீழ்நோக்கி செங்குத்தாகப் பார்ப்பதால் இந்த மலையின் உயரம் மகவும் குறைவாகத் தெரிகிறது. ஏமாந்துவிடாதீர்கள் உண்மையில் இந்த மலையின் உயரம் 700 மீட்டர். வலது பக்கத்தில் சாம்பல் நிறத்தில் தரை தெரிகிறது. அவை பசால்டிக் பாறையின் மண் துகள்கள். இந்தப் படத்த, செவ்வாய் என்று சொல்லாமல், யாரிடமாவது காட்டினால் (முக்கியமாக பூமியின் வடக்கு பகுதியில் வாழ்பவர்களிடம்; அவர்கள் தானே பனிப்பொழிவுகளையும் பனிக்கட்டிகளையும் சர்வசாதாரணமாகப் பார்ப்பவர்கள்; நாம் அபிராமி மாலுக்குத்தான் போகணும்) இது பூமி என்றே தான் சொல்லுவார்கள்!
மேலும் அப்பொழுதுதான் நிகழ்ந்துவிட்டிருக்கிற மண் சரிவினால் ஏற்பட்ட புகை மூட்டத்தையும் நாம் காணலாம். புகை மூட்டத்தின் நிழலும் தெரிகிறது. நிழலின் மூலம் சூரியனின் கோணத்தையும் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் புகையின் உயரத்தைக் கணக்கிடலாம்.
செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இது நிகழ்ந்திருக்கிறது. தற்போது செவ்வாயின் இந்தப் பகுதியில் வசந்தகாலம். கெட்டியாகிவிட்ட மணல் பாறைகளின் இடையே குளிர் காலத்தில் புகுந்து உறைந்து போன கார்பன் டை ஆக்சைடு வசந்த காலத்தில் சூரிய வெப்பத்தால் உருகிவிடுகிறது. இதனால் மண் பாறைகள் கீழே விழும்பொழுது இது போன்ற சரிவுகள் நிகழ்கின்றனவாம்.இந்த வருடத்தில் மேலும் சில பககுதிகளில் இது போன்ற மண் சரிவுகள் நிகழ்ந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.அற்புதம்.
செவ்வாய் கிரகத்தின் மற்ற எந்தப் படத்தினிலும் இல்லாத ஒரு விசயம் இந்தப் படத்தை சிறப்பானதாக்குகிறது. உறைந்த கார்பன் டை ஆக்சைடு படிந்த தரை, மலையின் செங்குத்தான பகுதி; மீண்டும் மணல் நிறைந்த பாறைகள் மண் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட புகை; இவையனைத்தும் ஒரு சேர மிகவும் தெளிவாக இருக்கிறது.
ம்ம் செவ்வாயில் நிறைய விசயங்கள் நடக்கின்றன!
PS: இவ்வளவு பனிக்கட்டி இருந்தா செவ்வாய்(க்கு ஜல)தோஷம் ஏன் பிடிக்காது? இதத்தான் நம்மாளுக சாட்டிலைட் உதவி இல்லாமலே அந்தக் காலத்திலே சொல்லிருக்காங்கப்பா!