நேற்றோ அதற்கு முன் தினமோ அதிகாலையில் எழுந்து மிகுந்த பசியுடன் செரியல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் நகர குண்டு வெடிப்பு பீதி சம்பந்தமான செய்தி சிஎன்என் இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இது தொடர்பான நபரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெயர் தெரியவில்லை. அல்லது நீதிபதி அறிவிக்கிறவரை சொல்லக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். நீதிபதி அறிவிப்பு செய்ய இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது. அப்பொழுது தான் தீவிரவாதம் உருவாக்கியிருக்கிற வேலைவாய்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
இரண்டு நபர்கள் பேசினார்கள். ஒருவரின் வேலையின் பெயர் Terror Expert மற்றொருவரின் வேலை யின் பெயர் Terrorism Analyst.
தீவிரவாத ஆய்வாளர்(?!) சரி Terror Expert?! எப்படித் தன்னை அறிமுகம் செய்து கொள்வார்?
இன்னும் கொஞ்ச காலத்தில் வானிலை ஆய்வாளர் தினமும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன இன்ன இடங்களில் மழை பெய்யக்கூடும் கடும் புயல் வீசக்கூடும் என்று சொல்வது போல, பின்னாடி ஒரு உலகவரைபடத்தை வைத்துக்கொண்டு, தீவிரவாதத்தையும் ஆராய்ந்து இந்த இடங்களில் மிதமான குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராபத்து ஏதும் இருக்காது. இந்த இடத்தில் கடுமையான குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் பலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக குடை எடுத்து வருவது போல தீவிரவாதநிலையைத் தெரிந்து கொண்டு என்ன செய்வது? குடை உதவாதே?
இன்ஸ்யூரன்ஸ் வாங்கிக்கொண்டு போகலாம். குண்டு வெடிக்கிறது என்று போகிற இடத்துக்குப் போகாமல் இருக்க முடியுமா என்ன?
மும்பை மேரி ஜான் என்கிற ஹிந்திப்படம் பார்த்திருக்கிறீர்களா? மும்பையில் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அதனால் பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கையை அழகாக அலசுகிறது இந்தப் படம்.
மாதவன் மயிரிழையில் தப்பியிருப்பார் ஆனால் அவரது நண்பர் ஒரு கையை இழந்து விடுவார். ரயில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வந்தும் மறுத்துவிடுகிற மாதவன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாமல் அமெரிக்கா போய்விடலாம் என்று நினைக்கிறார். இங்கு ரயிலில் ஏறவே பயப்படுகிறார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் அவரது நண்பரிடம் இதைச் சொல்லகிறார். எந்த நாட்டில் தான் தீவிரவாதம் இல்லை? பாதுகாப்பான தேசம் என்று கருதப்பட்ட அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தைத் தீவிரவாதிகள் தகர்த்து எறியவில்லையா?
கடைசியில் அந்த நண்பர் சொல்லுவார்: நம் பிள்ளைகளுக்கு தீவிரவாதம் பழகிவிடும். எப்படி பூகம்பத்தினோடும் புயல்களோடும் சூறாவளிகளோடும் சுனாமிகளோடும் வாழப்பழகிக்கொண்டோமோ அதே போல நம் பிள்ளைகள் தீவிரவாதத்தோடு வாழப் பழகிக்கொள்வார்கள்.
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.
நல்ல பதிவு தல… கலக்கல்ஸ்…
LikeLike
நன்றி சுகுமார்..
LikeLike