ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பதிவும் தொடங்கியிருக்கிறேன். http://booksmoviesastronomy.blogspot.com. Books Movies Astronomy என்று பெயர் வைத்திருக்கிறேனே தவிர கிடைக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதலாம் என்று தான் நினைத்திருக்கிறேன்! இரண்டு காரணங்கள். ஒன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம். மற்றொன்று தமிழ் தவிர பிற மொழி பேசுவோரையும் மொக்க போடலாம் என்கிற நல்லெண்ணம் தான். அவ்வப்போது அங்கேயும் வாருங்கள். 🙂
*
Spectrum ஊழல் தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ச்சே..சாரி..இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறார்கள். 60,000 கோடி என்கிறார்கள் ஒரு லட்சம் கோடி என்கிறார்கள்; எவ்வளவு கோடி என்பது ஆள்பவர்களுத்தான் வெளிச்சம். நித்யானந்தா வீடியோவை அத்தனை முறை ஒளிபரப்பு செய்தவர்கள் கிடைத்திருக்கும் இந்த ஆடியோ க்ளிப்பை எத்தனை முறை ஒளிபரப்பினார்கள்? பாரீஸில் எனக்கு இந்தியத் தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகள் கிடைப்பதில்லை.
*
இங்கே ஐரோப்பாவில் க்ரீஸ் திவாலாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது திவாலாகமல் இருக்கவேண்டும் என்றால் தோராயமாக தேவைப்படும் தொகை 120 பில்லியன் டாலர். யூரோப்பியன் யூனியனும் IMF உம் சேர்ந்து அதைக் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்குப் பல கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள். அப்புறம் பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா? அறிவுரைகளும் கூடவே சில கண்டிஷன்களும் வரும் தானே. எனக்குத் தெரிந்த சில கண்டிஷன்கள்: அரசு வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது இன்னும் பணிரெண்டு வருடங்கள் அதிகமாக வேலை பார்க்கவேண்டும். இப்பொழுது அவர்கள் ரிட்டையர் ஆகும் வயது 55 என்று வைத்துக்கொள்ளுங்கள் இனி அவர்கள் 67 வயதில் தான் ரிட்டையர் ஆக முடியும். பணிரெண்டு வருட கூடுதல் உழைப்பு!
இன்று கார்டியனில் நான் படித்தது மற்றும் என் நண்பர் கொடுத்த தகவல்கள்.கிரீஸ் நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். யார் மீது கோபம்? அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால்? நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும்? சில மாதங்களில் அது எப்படி சரியாகும்? ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது?
க்ரீஸில் இன்று வரை நடந்துவந்தது ஒரு இரும்புத்திரை அரசாங்கம். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அந்த இரும்புத்திரையை உருவாக்கி அந்த திரை விலகிவிடாமல் போற்றிப் பாதுகாத்துவந்தவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சர்வென்ட்ஸ் என்கிற அரசு ஊழியர்கள். குறிப்பாக உயர்பதவியில் இருந்த அரசு ஊழியர்கள். இந்த இரும்புத்திரை அவர்கள் செய்யும் ஊழல்களை எளிதாக மறைக்க உதவியது. பிரச்சனை என்னவென்றால் க்ரீஸின் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்கிற வரை நமக்கேன் வம்பு என்று இருந்தது தான். மேலும் கிரீஸில் நான்கில் ஒரு பங்கு அரசு ஊழியர்களாம். எனவே நமக்கு நிரந்தர அரசு வேலை இருக்கிற வரை என்ன கவலை? மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா? அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன? யார் ஊழல் செய்தால் நமக்கென்ன?
அரசியல்வாதிகள் மக்கள் கண்டுகொள்ளாததால் அவர்கள் போக்குக்கு வேலைசெய்துகொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வேலைகளை உருவாக்கினார்கள். கடன் வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் செய்வதை ஆய்வு செய்யவும் மதிப்பீடு செய்யவும் யாரும் இல்லை. அவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லை.
இந்த அரசியல் முறை வேறென்னத்துக்கு வழிவகுக்கும்? கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம் பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன? அப்படியென்றால் நம்ம பணத்தை நாம ஊழல் செஞ்சா மட்டுமே முடியும். செய்தி கசிந்தது. மக்கள் சில மந்திரிகளின் மிக ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற மீடியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். மீடியாவும் கண்டுகொள்ளவில்லை; நீதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழல் நடப்பது தெரிகிறது. மீடியாவில் துப்பறியும் துறை கண்டிப்பாக இருக்கும். ஏன் கண்டுகொள்ளவில்லை?
இப்படி முப்பது வருடங்களாக நடந்த ஊழலை எப்படித் திருத்துவது? ஜனாதிபதி முதல் சராசரிக் குடிமகன் வரை எல்லோரும் எல்லார் மீதும் கோபமாக இருக்கிறார்கள். ஹீரோவாக இருக்கவேண்டும், மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஜனாதிபதியை எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்பொழுது எதை எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் 1980இல் இப்பொழுதிருக்கிற நம்ம ஹீரோ ஜனாதிபதியின் அப்பா ஏற்படுத்திய மாற்றங்களாம்.
வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது.
*
இப்போது தமிழ் நாட்டில் நடப்பதும் இதே தான். 1 ருபாய் அரிசி, இலவச தொலை காட்சி பெட்டி, இலவச காஸ் சிலிண்டர், இலவச மின்சாரம், மலிவு விலையில் ரேஷனில் சில மளிகை பொருட்கள் எல்லாம் எந்த உழைப்பும் இல்லாமல் கிடைப்பதால், அரசியல் வாதிகள் என்ன செய்தாலும் யாருக்கும் கவலை இல்லை. தமிழ் நாடும் greece போல ஆவதற்கு அதிக நாட்கள் ஆகாது
LikeLike
Ravi: Exactly. That’s the point.
LikeLike