பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதான ஒரு கிரகம் நமக்கு அருகில் இருக்கும் சிறிய சிவப்பு (red dwarf) நட்சத்திரமான கில்லசி 581ஐ (Gilese 581) சுற்றி வந்து கொண்டிருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் இது ஒரு மிகபெரிய செய்தி. இந்த மாதிரி கிரகங்களை கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம். (ஏன் இதுநாள் வரை ஜோதிடர்களால் இது போன்றதொரு கிரகத்தைக் கணக்கிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை? அதானே, அவர்கள் இது வரையிலும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் லிஸ்டில் வைத்திருப்பவர்கள் தானே?!)
மிகவும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் நட்சத்திரத்திலிருந்து இந்த கிரகம் அமைந்திருக்கும் தொலைவு அதை கால்டிலாக் ஜோனில் வைக்கிறது. (Goldilock Zone) – அதாவது நட்சத்திர மண்டலத்தின் இந்தப் பகுதியில் தான் தண்ணீர் திரவமாக இருக்கும்!
1) Gilese 581 ஒரு சிறிய வெப்பம் குறைந்த நட்சத்திரம். நம்மிடமிருந்து (பூமியிலிருந்து) வெறும் 20 ஒளிஆண்டு தூரமே! (ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு கொஞ்சம் குறைவான தூரம்!) இருபது ஒளிஆண்டு என்பது பிரபஞ்சத்தின் பரப்போடு ஒப்பிடும் பொழுது, மிக மிகக் குறைவான தூரம். (குறைவான தூரம் என்று சொன்னாலும், நாம் இருநூறு ட்ரிலியன் தூரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க!)
2) இந்த கிரகம் அந்த நட்சத்திர குடும்பத்திலிருக்கும் மற்ற ஆறு கிரகங்களில் ஒன்று. (இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை தான் இது) எல்லா கிரகங்களின் சுற்றுப்பாதையும் தெளிவான வட்டவடிவமாய் இருப்பதால், இந்த நட்சத்திரக்குடும்பம் கொஞ்சம் நிலையாக இருக்கிறது. இந்த புதிய கிரகம் தன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றிவர 37 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நட்சத்திரத்திலிருந்து இந்த புதிய கிரகம் அமைந்திருக்கும் தூரம், பூமி சூரியனிலிருந்து அமைந்திருக்கும் தொலைவில், 1/6 மடங்காகும். இது அந்த சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவது கிரகம்.
3) சரி இந்த மாதிரி கிரகங்களை பூமியில் உட்கார்ந்து கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? டாப்லர் முறையைப் பயன்படுத்தி தான்! கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் பொழுது நட்சத்திரத்தை கொஞ்சம் இழுக்கும், அப்படி இழுக்கும் பொழுது நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியின் அலைநீளத்தில் (wavelength) கொஞ்சம் மாற்றம் இருக்கும். கிரகத்தின் நிறை (mass), தன் நட்சத்திரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு, அதன் கோளப்பாதை போன்றவை இந்த அலைநீளத்தின் (wavelength) மாற்றத்தை தீர்மானிக்கும். இந்த அலைநீளத்தின் மாறுதல், கிரகத்தின் குணங்களை விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள உதவிபுரிகின்றது.
இவைதான் நமக்கு தெரிந்த விசயங்கள். நாம் வேறு எந்தெந்த விசயங்களில் உறுதியாக இருக்கிறோம்?
நீங்கள் நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருந்தால் தண்ணீர் திரவ வடிவில் இருக்காது; ஆவியாகிவிடும். நட்சத்திரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தால் வேறு பிரச்சனை தண்ணீர் உறைந்து விடும். ஏனவே நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தண்ணீர் திரவ வடிவமாக இருக்கும்! இது தான் நான் மேற் சொன்ன கால்டிலாக் ஜோன் (Goldilock zone). மேலும் இது கிரகத்தைப் பொருத்தும் அமையும். வீனஸில் தண்ணீர் திரவ வடிவில் இருந்திருக்கக்கூடும் ஆனால் அதன் மிக அடர்த்தியான வளிமண்டலம் க்ரீன் ஹவுஸ் எ·பகெட்டை ஏற்படுத்தி கிரகத்தை 460 டிகிரி செல்சியஸிற்கு சூடாக்கி விடுகிறது! மார்ஸ் (செவ்வாய்) கிரகத்தின் வளிமண்டலம் அடர்த்தியாக இருந்திருந்தால் தண்ணீர் அங்கு திரவ வடிவில் இருந்திருக்கும்! எனவே கால்டிலாக் ஜோனை மீறி கிரகத்தின் தன்மையும் தண்ணீரின் திரவத்தன்மையை தீர்மானிக்கிறது.
கில்லசி 581ஜி – அப்படித்தான் புதிய கிரகத்தை அழைக்கிறார்கள் – நட்சத்திரத்திலிருந்து சரியான தொலைவில் இருக்கிறது. பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதாக இருப்பதனால் இது கேஸ் ஜெயன்ட்டாக (Gas Giant) – ஆவியால் ஆன கிரகம் – இருக்க வாய்ப்பில்லை. ஆவியால் ஆன கிரகமா? புதுசா இருக்கே! ஆமாம். நம் நட்சத்திரக் குடும்பத்திலே நான்கு ஆவி கிரகங்கள் இருக்கின்றன அவை ஜூப்பிடர், சாட்டர்ன், நெப்டியுன் மற்றும் யுரேனஸ். (இந்த ஆவி சமாச்சாரம் ஜோதிடர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனிதன் செத்ததற்கு பிற்பாடு ஆவியாகி இந்த கிரகங்களுக்குத் தான் போகிறான். அங்கே உங்களை எண்ணைக் கொப்பரையில் போடாமல் இருக்கவேண்டுமென்றால் இவை ஒவ்வொன்றையும் முறையே சனி, திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் நானூற்றி நாற்பது முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி தென்கிழக்கே திரும்பி வழிபட வேண்டும் என்று தோஷ நிவர்த்தி சொன்னாலும் சொல்வார்கள். உஸ்..அப்பா முடியல!)
ஆனால் இதையெல்லாம் வைத்து, நாம் இந்த புதிய கிரகத்தில் வசிக்க முடியும் என்று சொல்லமுடியாது. பூமி போல இருக்குமா என்றும் சொல்லமுடியாது. இங்கே தண்ணீர் இருக்குமா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே அங்கே உயிரினங்கள் இருக்கிறது என்றும் எப்படி நாம் அங்கே குடியேறலாம் என்றும் மூச்சுவிடாமல் மீடியா பேசினால் நம்பிவிடாதீர்கள். 🙂
இருந்தாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து சிலவற்றை யூகிக்க முடியும்.
இந்த கிரகம் தன் நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் 37 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்வதால் இது நட்சத்திரத்துக்கு வெகு அருகில் இருக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரம் நம் நட்சத்திரத்தை போன்றது அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல அது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரம் (red dwarf). (நட்சத்திரங்களின் வகைகளைப் பற்றி பிரிதொருமுறை பேசலாம்.) நட்சத்திரம் சிறிதாக இருப்பதால் இந்த கிரகம் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் சூடாகாது.
நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தால் கண்டிப்பாக கிரகம் மிகுந்த வெப்பமாகி விடவேண்டும் என்பதில்லை ;). ஆனால் நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால் அந்த நட்சத்திரம் இந்த கிரத்தின் மீது பலமான ஒரு விசையை செலுத்தும். அந்த விசையின் பெயர்: டைடல் விசை. இந்த டைடல் விசை கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் வேகத்தை மந்தப்படுத்தி இறுதியில் கிரகம் தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும், நட்சத்திரத்தை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒரே அளவில் இருக்கும். இது கிட்டத்தட்ட கண்டிப்பாக இந்த கிரகத்துக்கு நடந்திருக்கிறது – எனவே இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்துக்கு சமம். நிலா பூமிக்கு எப்பொழுதும் தன் ஒரே முகத்தை (பகுதியை) காட்டிக்கொண்டிருப்பதைப் போல இந்த கிரகமும் தன் நட்சத்திரத்துக்கு ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.
இது இங்கே உயிரனங்கள் தோன்றுவதற்கு கொஞ்சம் தடையாக இருக்கும். நட்சத்திரத்தை பார்த்தே இருக்கும் கிரகத்தின் பகுதி மிகுந்த வெப்பமாகிவிடும். அதே நேரத்தில் கிரகத்தின் மற்ற பகுதி கடும் குளிராக இருக்கும். ஆனால் வளிமண்டலம் குளிர் பகுதியிலிருந்து குளிர் காற்றை வெப்பமிகுந்த மற்ற பகுதிக்கு அனுப்புவதன் மூலம் அந்தப் பகுதியின் வெவப்பம் குறைவதற்கு சாத்தியங்கள் இருந்தாலும், கிரகத்தில் வளிமண்டலம் இருக்கிறதா என்பது நமக்கு இப்பொழுது தெரியாது.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நமது பால்வெளியில் மட்டும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமது பால்வெளியின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு பயணிப்பதற்கு 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். நமக்கு வெகு அருகில் 20 ஒளி ஆண்டு தூரத்தில், பூமியைப் போன்ற தன்மை மிகுந்த ஒரு கிரகத்தை நாம் இப்பொழுது கண்டுபிடித்திருப்பது, பரந்து விரிந்த அண்டத்தில் (தோராயமாக 125 பில்லியன் விண்வெளி மண்டலங்கள் – galaxy) இது போன்று பல ஆயிரக்கனக்கான கிரகங்கள் கண்டிப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு அளித்திருக்கிறது.
ஒரு அண்டத்திலே (universe) இப்படி என்றால் பல அண்டங்கள்(multiverse) இருக்கக்கூடும் என்று வேறு சில விஞ்ஞானிகள் பட்டையை கிளப்புகிறார்கள்!
அருமையான செய்தி கட்டுரை அண்ணே.. தங்கள் அனுமதி இல்லாமல் இன்ட்லியில் இணைத்து விட்டேன்…
LikeLike
எனக்கு UFO, Aliens, Universe இதுபோன்ற செய்திகளில் கொஞ்சம் ஆர்வம் அதிகம்… அதன்காரணமாக உங்கள் பதிவினைப் படித்தேன்… நன்றாக விளக்கியிருந்தீர்கள்…
LikeLike
அருமையான தகவல்கள்! நன்றி!
LikeLike
வலைச்சரத்திலிருந்துதான் உங்கள் வலை முகவரி கிடைத்தது. பெரிய விஷயங்களையும் அசாதாரண வகையில் எழுதியிருக்கிறீர்கள். இன்னும் படிக்க நிறைய இருக்கிறது உங்கள் வலையில். இப்படிப்பட்ட பதிவுகளுக்கு நன்றி 🙂
LikeLike