நான் எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தாலும்; இந்தப்படம் என்னை ஆச்சரியத்திலும், வியப்பிலும்; நான் எவ்வளவு சிறியவன் என்பதையும் உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேலெக்ஸி. தமிழில் நல்ல சொல் தேடிப்பார்த்தேன் நட்சத்திரக்குடும்பம் என்று தான் கிடைத்தது. பால்வெளி என்று சொல்வது தவறு. ஏனென்றால் பால்வெளி என்பது நமது நட்சத்திரமண்டலத்தை மட்டுமே குறிக்கும் ஒரு பெயர்ச்சொல். முத்து என்பதைப் போல; மில்கி வே.
மில்கிவே கேலக்ஸி என்பது எப்படி வந்தது என்று தெரியுமா? வானில் சில நேரங்களில் லைட் பொல்யூசன் இல்லாத இடங்களில் பால் போன்ற வெள்ளைக் கோடு தெரியும். அது நாம் குடியிருக்கும் நமது மில்கிவே கேலக்ஸி தான். கிரேக்கர்கள் தங்கள் கடவுளான ஹெராவின் மார்பிலிருந்து பீய்ச்சி அடித்த பால் என்று நம்பினார்கள். கேலக்ஸி என்பதற்கு கிரேக்கத்தில் பால் என்று பொருள்.
சரி இந்தப் படத்துக்கு வருவோம். மறுபடியும் நான் சொல்லவருகிற கணக்கு உங்களுக்கு புரியவில்லை என்றால்; என்னுடைய வியப்பை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்; மீண்டும் சொல்கிறேன் நீங்கள் இந்தப் படத்தில் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேலக்ஸி.
ஒரு கேலக்ஸியில் சுமார் 250 பில்லியன் நட்சத்திரங்கள் (சூரியன்கள்) இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். மொத்தம் தோராயமாக நூறிலிருந்து இருநூறு பில்லியன் கேலக்ஸிகள் இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். நாம் பேசிக்கொண்டிருப்பது பில்லியன் கணக்கு என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரு பில்லியன் = 1000000000!
நம்ம நட்சத்திரம் (சூரியன்) ஒரு கடைசில இருக்கிற ஒரு கேலக்ஸில ஒரு கடைசில இருக்கிற ஒரு மிகச்சாதரண நட்சத்திரம். அதை சுத்தி வர்ற மிகச் சிறிய கிரகம் நம்ம பூமி. அந்த பூமில ஒரு சின்ன இடத்தில வசிக்கிற ஒரு துகள் நான். அப்ப, நான் எவ்வளவு சிறியவன்? அண்டம் எவ்வளவு பெரியது?
சால்வடார் டாலியின் இந்த ஓவியமும் இதைத்தான் சொல்கிறது.
பாரீஸில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று இருக்கிறது. பாரீஸ் போனால் கண்டிப்பாகப் போய்வாருங்கள்.