வெளிர் நீலப் புள்ளி

இந்தப் படத்தில் ஒரு வெளிர் நீலப் புள்ளி தெரிகிறதா? அது தான் பூமி. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்!

·பெப்ரவரி 14 1990 அன்று வாயேஜர்-1 ப்ளூட்டோவைக் கடந்து சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி பரந்து விரிந்த அண்டத்தில் கிட்டத்தட்ட 60,000 கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. கடைசியாக ஒரு முறை சூரியமண்டலத்தைப் பார்த்து விட சட்டென அது திரும்பியது. திரும்பிய வேகத்தில் பூமியை ஒரு புகைப்படம் எடுத்தது. அது தான் மிகப் பிரபலமான வெளிர் நீலப் புள்ளி எனப்படும் புகைப்படம். The Pale Blue Dot. இந்தப் புகைப்படத்தை எடுக்குமாறு நாசாவை வற்புறுத்தியவர் கார்ல் சாகன்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 6.1 பில்லியன் கிலோமீட்டர் தூரத்திலிருந்து எடுக்கப்படது. அண்டத்தின் பரப்பில் இது ஒரு சொற்ப தூரம் தான். இத்தனை குறைவான தூரத்திலிருந்து எடுக்கும் பொழுதே பூமி ஒரு புள்ளியாகத்தான் தெரிகிறது!

தனது புகழ்பெற்ற வீடியோவான காஸ்மோஸில் கார்ல் சாகன் பின்வறுமாறு சொல்கிறார்:

இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த சிறு தூசியின் மேல்ப் பெரிதாக ஈர்ப்பு ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நமக்கு? மீண்டும் ஒரு முறை அந்தப் புள்ளியைப் பாருங்கள். அந்தப் புள்ளி தான் இந்த பூமி. அந்தப் புள்ளியில்தான் நாம் வாழ்கிறோம். அந்தப் புள்ளி தான் நாம். இங்கே தான் – நீங்கள் அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதனும், உங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு மனிதனும், நீங்கள் இது நாள் வரை கேளிவிப்பட்டு தெரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திருக்கிறான் – வாழ்ந்துகொண்டிருக்கிறான். நம்முடைய சுக துக்கங்கள், ஆயிரக்கணக்கான மதங்கள், நம் கொள்கைகள் கோட்பாடுகள் பொருளாதார சித்தாந்தங்கள்; ஹீரோக்கள், கோழைகள்; ஒவ்வொரு நாகரிகத்தை உருவாக்கியவரும், அந்த நாகரீகத்தை அழித்தவரும்; ஒவ்வொரு அரசனும், விவசாயியும், ஆண்டியும்; எல்லா இளஞ்சோடிகளும்; ஒவ்வொரு அப்பாவும் அம்மாவும்; ஒவ்வொரு குழந்தையும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், ஆய்வாளரும், ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியும்; அறநெறி போதித்த ஒவ்வொருவரும்; ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும்; ஒவ்வொரு தலைவரும்; ஒவ்வொரு முனிவரும் – உங்களுக்கு இதுவரைத் தெரிந்த தெரியாத மனித குலத்தில் தோன்றிய எல்லோரும்; மற்ற உயிரினங்கள் எல்லாமும்; இந்த சிறு தூசியில் தான் இருந்திருக்கிறார்கள்.


பரந்து விரிந்த அண்டத்தில் பூமி ஒரு மிகச்சிறிய மேடை. ஒரு தூசி. இந்த தூசியின் ஒரு மிகச்சிறிய பகுதியில் கணநேர அதிகாரத்தை அடைவதற்காக சிந்தப்பட்ட ரத்த ஆறுகள் எத்தனை எத்தனை. இந்த தூசியின் ஒரு பகுதியின் மனிதன் அவனைப் போலவே தூசியின் அந்தப் பக்கத்திலிருக்கும் மனிதனிடம் காட்டிய குரூரங்கள் எத்தனை எத்தனை. இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதலின்மைகள் எத்தனை. இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள எத்தனை முனைப்போடு இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் வெறுப்புகள் எத்தனை.


ஊதிப் பெரிதாக்கப்பட்ட நமது நம்பிக்கைகள், நாமே உருவாக்கிய மதிப்பீடுகள்; நம்முடைய சுயமுக்கியத்துவம்; நமக்கு இந்த அண்டத்தில் எதோவொரு சலுகை இருக்கிறது போன்ற வாதங்களை எல்லாம் இந்த சிறிய புள்ளி கேள்விக்குறி ஆக்குகிறது. பரந்து விரிந்த இருண்ட அண்டத்தில் நாம் ஒரு சிறிய புள்ளி. நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு எங்கோ இருந்து உதவி வரும் என்கிற நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை.


இது வரை நமக்குத் தெரிந்த அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலத்துக்கு வேறு எங்கும் நாம் புலம்பெயர முடியாது. போகமுடியலாம். ஆனால் அங்கேயே வாழமுடியுமா என்றால் – இன்னும் நேரம் வரவில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நம்முடைய வாழ்க்கை இங்கேதான்.


வானவியல் நம்மை எளிமைப் படுத்தும் நற்பண்புகளை வளர்க்கும் ஒரு அனுபவம் என்று சொல்லுவார்கள். மனிதனின் முட்டாள் தனமான தற்பெருமைகளை உடைத்தெரிய இந்த சிறிய புள்ளியை விட வேறு ஏதும் தேவையிருக்காது. என்னைப் பொருத்தவரையில், நாம் நமக்கிடையே இருக்கும் வெறுப்புகளைக் களைந்துவிட்டு; அன்பைச் செலுத்தி; நமக்குத் தெரிந்த ஒரே இருப்பிடத்தை – இந்த வெளிர் நீலப்புள்ளியை – பாதுகாக்க வேண்டும் என்பதையே இந்தப் புகைப்படம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


– கார்ல் சாகன்

Pale blue dot – Video.

இந்தப் புகைப்படம் (இந்த விஞ்ஞானியும்) தான்; என்னை புரட்டிப்போட்டது. என் சிந்தனைகளை மாற்றியமைத்தது. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து, இந்த புகைப்படத்தினாலும் கார்ல் சாகனாலும் தங்களது சிந்தனைகளை மாற்றிக் கொண்டவர்கள் பலர். தன்னை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவர்கள் பலர்.

ஆனால் மாற்றம் அவ்வளவு எளிதல்ல – தொடர்ந்த வாசிப்பும்; திறந்த மனமும்; நிறைய கேள்விகளுமே மாற்றத்தை உருவாக்கும்.

One thought on “வெளிர் நீலப் புள்ளி

Leave a comment