Greenwich Royal Observatory இந்த வருடத்தில் “சிறந்த வானியல் புகைப்படம்” போட்டியின் முடிவை வெளியிட்டிருக்கிறது. வெற்றி பெற்ற புகைப்படங்களை இங்கே காணலாம். மற்ற எல்லா புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.
பூமியும் பிரபஞ்சமும் (Earth and Space) என்கிற தலைப்பில் வெற்றி பெற்ற புகைப்படம் கீழே:
மிகப்பழமையான மரத்தை ஒட்டினாற் போல கத்தையான ஒளிக்கீற்று தெரிகிறதல்லவா அதுதான் நம் பூமி இருக்கும் சூரியகுடும்பம் இருக்கும் பால்வெளி (Milkyway Galaxy). நம் பால்வெளி தட்டையான டிஸ்க் போன்றது; நட்சத்திரங்கள், வாயுக்கள் மற்றும் தூசியிலானது. ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் (9 லட்சம் ட்ரில்லியன் கிலோமீட்டர்)அகலம் கொண்டது. பால்வெளியின் நடுவிலிருந்து பால்வெளியின் கடைக்கோடி தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் நமது சூரியன் இருக்கிறது. (ஒரு ஓரத்தில்!) இந்தப் புகைப்படம் பால்வெளியின் உள் நோக்கிப் மையத்தைப் பார்க்கின்றது.ஒரு டிவிடி டிஸ்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு டிஸ்கின் மையத்தைப் பார்ப்பது போன்று.
மேலும் இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த மரம் மிகவும் பழமையானது – செங்கிஸ் கான் படையெடுப்பின் பொழுது இந்த மரம் இங்கே நின்று கொண்டிருந்ததாம். செங்கிஸ் கான் பார்த்த மரத்தை நாமும் பார்க்கிறோம்! இதுவே ஆச்சரியமாக இருந்தால் – இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஒளி முப்பதாயிரம் வருடப் பழமையானது. நீங்கள் பார்க்கும் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி முப்பதாயிரம் வருடத்திற்கு முன்னால் தனது பயணத்தை ஆரம்பித்தது.
உங்களுக்குத் தெரியுமா?
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? எட்டு நிமிடங்கள். அதாவது நாளை மதியம் 12:00 மணிக்கு தகிக்கும் வெயிலில் நீங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது சூரியனை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டால் 12:08 க்குத்தான் சூரியன் அணைந்துவிட்டது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் 11:59 க்கு சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி பூமியை 12:07க்குத்தான் வந்தடையும். அதேபோல 12:00 மணிக்கு சரியாக சூரியன் அணைந்து விடும் முன்னர் கிளம்பிய ஒளி பூமியை 12:08க்குத்தான் வந்தடையும்.
நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களின் ஒளி ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!
புகைப்படங்களைக் கண்டு களியுங்கள்! Be inspired!
Thanks for the nice photo!!
LikeLike