The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)
நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்
நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!
யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))
இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!
நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:
ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?
***
சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.
Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.
Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.
God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)
மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை
என்று சொல்கிறார் Hitchens.
பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.
எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?
ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.
அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!
பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!
***
நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.
சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்
என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.
***
நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?
1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?
(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)
***
சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.
அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.
முற்றிலும் உண்மை. 🙂
***
கார்ல் சாகனின் தத்துவம் அருமை… மற்றபடி ஆங்கில நாவல்கள் அதிகம் பரிட்சயமில்லை…
LikeLike
பிரபாகர்: பரிட்சயமில்லையென்றாலும் பரிட்சயம் ஏற்படுத்திக்கொள்வது வெகு சுலபம் 🙂
LikeLike