குரல்வலைப் பக்கங்கள்

(உலகக்கோப்பை கிரிக்கெட், ஓலைச்சிலுவை, பழசிராஜா, நடுநிசி நாய்கள், யாரும் ஜெஸிக்காவைக் கொலைசெய்யவில்லை.)

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 350 வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் என் நண்பரிடம்; அவர் சிரித்தார். உண்மைதான். ஒரு ஓவர் இல்லை இல்லை ஒரு பால் கூடப் பார்த்து நிறைய வருடங்கள் ஆச்சு. நான்கு வருடங்கள். போன உலகக்கோப்பை நினைவிருக்கிறதா? அதில் இந்தியா பங்களாதேஷ் போட்டி நினைவிருக்கிறதா. சூடு சொறனை இருக்கிற கிரிக்கெட் ரசிகன் எவனும் அந்த மேட்சை மறக்கமாட்டான். அப்புறம் இந்தியா இலங்கை மேட்ச் ஞாபகம் இருக்கிறதா?

விடிய விடிய காலை நான்கு மணி (சிங்கப்பூர் நேரம்) வரை மேட்ச் பார்த்தோம். அப்பொழுது நான் பேச்சுலர். சச்சின், ராகுல், கங்கூலி என்கிற நட்சத்திரங்கள் நிறைந்த டீம். என்ன ஆயிற்று? முதல் சுற்றிலேயே வெளியேறினோம். தோல்வி. அதுவும் யாரிடம் கத்துக்குட்டி பங்களாதேஷிடம். பிறகு இலங்கையிடம். அந்த மேட்ச் இன்று வரை எனக்கு நினைவிருக்கிறது. டிராவிட் அவுட் ஆன கனம் என் கிரிக்கெட் பார்க்கும் ஆசையை குழிதோண்டிப் புதைத்தது. மறுநாள் எங்கள் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டது. அது தான் நான் பார்த்த கடைசி மேட்ச்.

கங்கூலியும், சச்சினும், டிராவிட்டும் அன்றோடு ரிட்டையர்ட் ஆகிவிட்டார்கள். வெற்றி தோல்விகள் சகஜம் தான். ஆனால் எப்படித் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். யாரிடம் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். கிரிக்கெட் பார்க்கவில்லையென்றாலும், செய்திகள் அவ்வப்போது கண்ணில் படும். இந்த முறை உலகக்கோப்பைக்கு முன் சேவாக் “இந்த முறை பங்களாதேஷைப் பழி வாங்குவோம்” என்று சொல்லியிருந்தார். எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. சட்டென்று எனக்கு தோன்றிய வசனம் “இந்த உலகம் இன்னுமாடா உங்கள நம்பிக்கிருக்கு” என்பது தான். இந்த வேர்ல்ட் கப் நாம் வாங்கலாம் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாங்கலாம். அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கலாம். ஆனால் என் அளவில் போன உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய அன்றே இந்திய கிரிக்கெட் டீம் கலைக்கப்பட்டாயிற்று. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளைகளப் படிக்கப்போடுங்கப்பா.

மா.சிவக்குமார் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்த உலகக்கோப்பையைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறார். நான் எப்பொழுதோ புறக்கணிக்கத் தொடங்கியாச்சு.

***

ஜெயமோகன் எழுதிய ஓலைச்சிலுவை படித்தீர்களா? சிறுகதை படிக்கும் பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக படியுங்கள். இதுபோன்ற ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை. கதை தோறும் பல தருனங்களில் நெகிழ்வாக உணர்ந்தேன்.

உலகப்போரில்; ப்ரான்ஸின் ஒரு போர் முனையில் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் சாமர்வெல். ராணுவ வீரர்கள் பலருக்கு கைகால்கள் சிதைந்து போயிருக்கிறது. குருதி வழிந்தோடி ஒரு கால்வாய் போலவே ஆகிவிட்டிருக்கிறது. அடிபட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிடில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சாமர்வெல் வெறி பிடித்தார் போல சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நேர உழைக்குப் பின்; கலைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்கிறார். அங்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் கால்கள் சிதைந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரன் தன்னைக் கூர்ந்து பார்ப்பது கண்டு துடுக்குற்று எழுகிறார். பரவாயில்லை ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சைகையில் சொல்கிறான் அந்த ராணுவவீரன்.

விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு:
During the Battle of the Somme in 1916 he was one of four surgeons working in a tent, while hundreds of wounded men lay dying on stretchers outside. On short breaks from surgery, he spoke with some of the dying men, and noted that not one asked to be treated ahead of the others.

எத்தகைய மனிதன் சாமர்வெல்?
1. எவரஸ்ட்டை இரண்டு முறை ஏறுவதற்கு கடும் முயற்சி செய்திருக்கிறார்.
2. மணிக்கனக்காக பேட்மிட்டன் விளையாடுபவர்.
3. இசையில் தேர்ந்தவர்
4. அறுவை சிகிச்சை நிபுணர்
5. தன் நாட்டு மக்கள் அல்லாத வேறொரு நாட்டின் மக்கள் மேல் அதீத அன்பு கொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பனித்தவர்.
6. தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்.

இது கதையாக இருந்தாலும்; பல உண்மைச் சம்பவங்களை வைத்துப் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த கதையின் நாயகனான சாமர்வெல்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியாவைப் பாருங்கள்.

வேறொரு நண்பர், அவ்ளோ நல்லாருக்கா? கதையில கடைசியா ட்விஸ்ட் இருக்கா? என்றார். இல்ல, அதனால படிக்க உக்காரும் முன் ஒரு பாக்கெட் ட்விஸ்ட் வாங்கி வைத்துக்கொண்டு உக்காருங்கன்னு சொன்னேன். கஷ்டம்.

***

பழசிராஜா பார்த்தேன். கேரள வர்மா பழசிராஜா. வரலாற்றுத் திரைப்படங்களை இப்பொழுது எடுக்கும் பொழுது எப்படி ஒரு நாடகத்தன்மை தெரிகிறதோ அதே போன்றதொரு நாடகத்தன்மை இதிலும் இருக்கிறது. அதிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். மம்முட்டியின் குரல் ஒரு பக்கம் கெட்கிறது. வாய் ஒருபக்கம் அசைகிறது. இதில சரத்குமார் வேற. சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு வர்றார். அவ்வளவுதான். சுமன் கூட ஒரு ·பைட். இதுக்குத்தான் என்னைய படத்தில வெச்சிருக்காங்கன்னு சொல்றார். கிட்டத்தட்ட. 🙂 ஒரு படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு பழசிராஜாவின் வாழ்க்கையில் சம்பவங்கள் இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

***

அப்புறம் த மோஸ்ட் வாண்டட் மூவி பார்த்தேன். அதாங்க: நடுநிசி நாய்கள். தியேட்டர்க்குள்ள இருந்து டிவிட்டினேன். தெரியாம படத்துக்கு வந்துட்டன்டா. இனிமே இந்தப் பக்கவே வர மாட்டேன்டான்னு. கொடுமை.

எனக்கு படத்தின் சப்ஜெக்டில் பிரச்சனை ஒன்றும் இல்லை. எடுக்கட்டும். ஆனா ஒரு த்ரில்லர் இப்படியாப்பா இருக்கும்? ஹாலிவுட் படங்கள் எல்லாம் பார்க்கறீங்க தான? அட்லீஸ்ட் கொரியன் படங்கள் கூட பார்த்ததில்லையா? பின்ன ஏன் இப்படி? லக்ஷ்மியம்மா லக்ஷ்மியம்மான்னு. இதுல மல்டிபிள் பர்சனாலிட்டி கதை வேற.

உங்களுக்கெல்லாம் திரில்லர் எதுக்கு? ஹீரோ சைக்கோ. சோ வாட்? அவர் எப்படி சைக்கோ ஆனார்ன்னு ஹிஸ்டரி ஆப் த இனிஸிடென்ட் ஜியோகரபி ஆப் த ப்ரசிடென்ட் சொல்லி முடிக்கறதுக்குள்ள படமே ஒரு முடிவுக்கு வந்திடுது. எதுக்குய்யா சைக்கோவ சைக்கோவாவே விட்றவேண்டியதுதான? எதுக்கு காரணத்தை தேடிக்கிட்டே அலையறீங்க? ஹீரோ ஒரு சைக்கோ. அவனோட வேலை சாம்பர குடிச்சு கத்திரிக்காய கடிக்கறதுதான்னு விட்றவேண்டியதுதான? அவன் எதுக்காக சாம்பார விடாம குடிக்கிறான்? அவனுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிச்சுப்போனதுன்னு ஏன் எங்களப் படுத்தறீங்க? செவன்னு ஒரு படம் வந்துச்சு பாத்திருக்கீங்களா சார். பாத்திருப்பீங்க. காக்க காக்கவில டப்பாக்குள்ள மண்டைய வெச்சு பார்சல் பண்றத வேற எங்கருந்து பிடிச்சீங்க? அப்பவே நினைச்சிருக்கீங்க நாமளும் வாழ்க்கையில ஒரு சைக்கொ த்ரில்லர் எடுக்கனும்னு. எடுத்துட்டீங்க. சரி. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போதா என் மனைவி ஊருக்குப் போகனும். அதனாலத்தான தியேட்டரில போய் உக்காந்தேன். இல்லன்ன போயிருந்திருக்க முடியுமா?! மிஸ் யூ டா ச்செல்லு. 😉

எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றை பெரிதுபடுத்தி எழுதினாத்தான் கதை. சினிமா. சிறுத்தையில கார்த்தி எப்படி போலிஸா சும்மா புகுந்து விளையாடறார். அப்படியா இருக்கு நம்ம ஊர்ல போலிஸ¤? சாமர்வெல் எவரஸ்ட் ஏறும் போது, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பனிச்சறிவு ஏற்பட்டு கூடவந்தவர்கள் அடித்துச்செல்லப்பட, அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரும் செத்துவிட துணிகையில், அவர் தலைக்கு மேலே பனிச்சறுக்கு ஏற்பட்டு பனி ஏசுவின், ஆசீர்வதிக்கும் ஒரு கை போல உறைகிறது. சாமர்வெல் எவரஸ்டை ஏறின உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டும் கற்பனையைத் தட்டிவிட்டால் கிடைப்பது இது தான். இது தான் கதை. குழந்தைக்கு யானை வானத்தில் பறந்தால் தான் கதை.

எப்பொழுதும் எங்கேயும் நடப்பது போல அப்பா பையனுக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தாருன்னு சொன்னா என்ன ஆகும்? ஒரு பய திரும்பிப்பாக்கமாட்டான். ஊருக்குள்ள ரவுடின்னு ·பார்ம் ஆயாச்சு; அப்புறம்? இந்த மாதிரி ஒரு நாலும் படம் எடுத்தாத்தானே நாலு பேர் பேசுவாங்க .

சின்னப்பிள்ளைகள் பாப்பாங்க?! சின்னப்பிள்ளைங்க எதுக்குப் பாக்கறாங்க? அதான் சர்டிபிகேட் இருக்கே. பின்ன எப்படி சின்னப்பிள்ளைங்க தியேட்டருக்குள்ள போவாங்க? (திருட்டு) டீவிடி? தாட்ஸ் நாட் டைரக்டர்ஸ் பிராப்ளம்.

சிகப்பு ரோஜாக்கள் முப்பது வருடங்களுக்கு முன் வந்தது. சிவக்குமார் பென்சில்ல மீசை வரைஞ்சிட்டு நடுச்சிட்டிருந்த சமையம். செக்ஸ் காட்லையா? அதுவும் பெண்ணே வலிய வந்து செக்ஸ் கேட்பது போல காட்டவில்லையா? மகன் (வளர்ப்பு மகனாக இருந்த போதிலும்) செக்ஸ் வைத்துக்கொளவதை அப்பா படம் பிடித்து ரசிப்பது போலக் காட்டவில்லையா?

கௌதம் மேனனின் எந்த படங்களும் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை. காக்க காக்க தவிர. வேட்டையாடு விளையாடுவின் முதல் 20 நிமிடங்கள் தவிர.

ஆறுதலுக்கு சிகப்பு ரோஜாக்களில் இருந்து அட்டகாசமான இந்தக் காட்சியைப் பாருங்கள்.

தமிழில் நல்ல த்ரில்லருக்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ தெரியல.

***

No one killed jessica (யாரும் ஜெஸிக்காவைக் கொலை செய்யவில்லை) என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். துப்பறியும் பத்திரிக்கையாளர்கள். மீடியாக்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம்.

ஜெஸிக்கா வளர்ந்துவரும் மாடல். அதிநவீன பார்களில் காக்டெயில் மேக்கர். ஒரு நாள் பாரில் நள்ளிரவைத் தாண்டியபின்னர் டிரிங்க்ஸ் தீர்ந்து விடுகிறது. மூன்று நபர்கள் ஜெஸிக்காவிடம் வந்து டிரிங்க்ஸ் கேட்கின்றனர். ஜெஸிக்கா இல்லை என்று சொல்ல, அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஜெஸிக்கா அதான் இல்லையே பின்ன எங்க இருந்து கொடுக்கிறதுன்னு கேட்டுக்கொண்டிருக்கிற போதே அவன் சட்டென்று ஜெஸிக்காவைச் சுட்டுவிடுகிறான். கொஞ்ச நேரத்தில் ஜெஸிக்கா இறந்து விடுகிறாள். சுட்டவன் மந்திரியின் மகன். மந்திரி பண பலம் செல்வாக்கை வைத்து சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார். ஜெஸிக்காவின் அக்கா போறாடுகிறார். முன்னூறு நபர்கள் இருந்த அந்த பாரில் இரண்டு மூன்று பேரே சாட்சி சொல்கின்றனர். முக்கிய சாட்சி ஜெஸிக்காவின் நண்பன் (குடும்பத்தின் நண்பனும் கூட) கடைசி நேரத்தில் நான் வாக்குமூலமே கொடுக்கவில்லை. எனக்கு ஹிந்தியே தெரியாது என்று ஜகா வாங்கிவிடுகிறான். ஜெஸிக்காவைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இது வரை படம் அட்டகாசம். அருமையான மேக்கிங். வித்யா பாலன் கன கச்சிதமாக செய்திருக்கிறார். இது போல தமிழில் படங்கள் எப்பொழுது வரும்?!

இதற்கப்புறம் ஒரு மீடியா மேடம் இந்த வழக்கில் அக்கறை கொண்டு எப்படி உண்மையை வெளிக்கொணர்கிறார் என்பதே கதை.

சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

***

One thought on “குரல்வலைப் பக்கங்கள்

  1. நைஸ் பாஸ்… //சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். //இதாண்ணே உங்ககிட்ட புடிச்சதே…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s