the cove

டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் வைத்திருக்கூடும். பிறகு எதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டும்? டால்·பின்களையும் கஷ்டப்படுத்த வேண்டும்?

இவ்வாறான டால்·பின் ஷோக்களுக்கு தேவைப்படும் டால்·பின்களை சப்ளை செய்வதில் முதலிடத்தில் இருப்பது ஜப்பான். அதிலும் பாட்டில் மூக்கு டால்·பின்களுக்கு கிராக்கி அதிகம். இவ்வாறான டால்·பின்களை எளிதாக பழக்கப்படுத்தலாமாம். டால்·பின்களை பழக்கப்படுத்தத் தொடங்கிவைத்த புண்ணியவான் – ரிக் பேரி(Richard O’Barry). மியாமி கடல் கண்காட்சியகத்துக்காக இவர் முதலில் ஐந்து டால்·பின்களைப் பிடித்தார். பிறகு இவை ப்ளிப்பர் (Flipper) என்கிற அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் மூலமாக மிகப் பிரபலம் அடைந்தன. இந்த அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் கேதி என்கிற பெயரில் ஒரு டால்·பின் நடித்துவந்தது. இந்த கேதியை பிடித்து, சிறுவயதிலிருந்து பழக்கப்படுத்தியது பேரி.

டால்பின்கள் நம்மைப் போல இயல்பாக மூச்சு விடுவதில்லை. அதாவது நாம் நாமாகவே மூச்சை நிறுத்தி தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. ஏனென்றால் நமக்கு மூச்சு விடுவதென்பது இயல்பு – தன்னிச்சையாக நடப்பது. ஆனால் டால்·பின்களுக்கு அப்படியில்லை. ஒவ்வொரு மூச்சையும் அவை பிரயத்தனப்பட்டேதான் விடவேண்டும். மூச்சை நிறுத்தி தற்கொலை செய்யவேண்டும் என்று அவை விரும்பினால் அவைகளால் அதைச் செய்ய முடியும்.

ஒரு நாள் கேதி, கண்காட்சியில் பேரியைப் பார்த்தவுடன், பேரியை நோக்கி வேகவேகமாக நீந்தி வந்தது. பேரியின் கைகளில் தஞ்சப்புகுந்தது. பிறகு பேரியை உற்று நோக்கியது. பிறகு முதல் மூச்சை இழுத்துவிட்டது. பிறகு இரண்டாம் மூச்சை விடவில்லை. தற்கொலை செய்துகொண்டது. பேரியின் கரங்களிலே தற்கொலை செய்துகொண்டது.


(Richard 0’Barry and Cathy)

டால்·பின் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்படும்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு முதலில் தன்னிலை அறிந்திருக்கவேண்டும். அதாவது நாம் கண்ணாடியைப் பார்த்தால் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்பது நமக்குத் தெரியும். அது யார் என்பதும் நமக்குத் தெரியும். அதே போல டால்·பின்களுக்கும் தெரியும். அவைகளுக்கு தன்னிலை தெரியும். தற்கொலை செய்யும் அளவுக்கு டால்பின்களுக்கு என்ன துன்பம்? என்ன மீளாத் துயரம்?

டாள்·பின்கள் தங்கள் இரையை எக்கோ (கிட்டத்தட்ட நம்முடைய சோனார் போல) முறையைப் பயன்படுத்தித் தேடுகின்றன. அவைகளுக்கு ஒலி இயல்பானது. ஒரு டால்·பினை பிடித்து வந்து பல்லாயிரக்கான ஹிஸ்டீரிக் மக்களிடையே நாட்டியமாடச்சொல்லும் பொழுது அவைகளுக்கு கிறுக்கு பிடிப்பது போல இருக்குமாம். டால்·பின்கள் தாவிக்குதித்தவுடன் அங்கே அமர்ந்திருக்கும் பல்லாயிரக்கான மக்களும் ஒரு சேர கத்திக்கூப்பாடு போடும் பொழுது அவை என்ன செய்யும்? மிரளும். மனச்சோர்வு அடையும்.

இந்த உத்தியைக் கையாண்டு தான் ஜப்பானியர்கள் வருடம் ஒன்றுக்கு 23000 டால்·பின்களை வேட்டையாடுகின்றனர். இந்த வேட்டையாடும் விளையாட்டு ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் துடங்கும்.

என்ன உத்தி? டால்·பின்கள் வருடந்தோரும் புலம்பெயரும் பொழுது ஜப்பானின் தாய்ச்சி (Taiji) வழியைத் தான் பயன்படுத்தும். வருடந்தோரும் ஆயிரக்கணக்கான டால்·பின்கள் அவ்வழி வரும் பொழுது – ஜப்பானியர்கள் பெரிய பெரிய இரும்புக்கம்பிகளை தண்ணீருக்குள் செலுத்தி, அதன் முனையில் சுத்தியலால் அடித்து பெருத்த சத்தத்தை எழுப்புகின்றனர். இது ஒரு ஒலித் திரையை உருவாக்கும். சத்தத்தைக் கண்டு மிரளும் டால்·பின்கள் வேறு வழி திரும்பும். அந்த வழி தாய்ச்சி மீனவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் கிடங்கில் கொண்டு போய் விடும். டால்·பின்கள் உள்ளே வந்தவுடன் அனைத்து வழிகளும் அடைக்கப்படும். டால்·பின்கள் தப்பிக்க இயலாது.

பிறகு டால்·பின் ட்ரெயினர்கள் (பழக்கப்படுத்துவோர்) வந்து அடைப்பட்டுக்கிடக்கும் டால்·பின்களை அலசி ஆராய்ந்து பாட்டில் மூக்கு கொண்ட டால்·பின்களை தேடிப்பிடித்து எடுத்து சென்று விடுவர். இப்படி விற்கப்படும் ஒவ்வொரு டால்·பினும் மில்லியன் யென்னுக்கு விலை போகும்.

இப்படி சந்தையில் செல்லாத டால்·பின்களை இறைச்சிக்காக கொன்றுவிடுகிறார்கள். அப்படியென்ன டால்·பின் இறைச்சி நல்லதா? டால்·பின்களின் இறைச்சியில் பாதரச (மெர்க்குரி) நச்சு அதிகமாக கலந்திருக்கிறதாம். இது மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது. மேலும் ஜப்பானியர்களிடம் நீங்கள் டால்·பின் இறைச்சி உண்பீர்களா என்கிற சர்வேயில், அவர்கள் டால்பின் இறைச்சியை உண்பதில்லை (டால்·பின் இறைச்சியையுமா சாப்பிடமுடியும்?) என்று தெரியவந்துள்ளது. பிறகு எதற்காக டால்பின்கள் ஆண்டுதோறும் கொன்று  குவிக்கப்படுகின்றன?

டால்·பின் இறைச்சியை சந்தையில் திமிங்கல இறைச்சி என்று விற்றுவிடுகிறார்கள்.

அதென்ன பாதரச நச்சு? ஜப்பானுக்கு இந்த பாதரச நச்சு ஏற்கனவே அறிமுகம். இது ஒரு நோயாகவே இருந்திருக்கிறது. அது மினமாட்டா நோய் (Minamata disease). இந்த நரம்பு சார்ந்த நோய் அதிகமான பாதரச நச்சினால் ஏற்படுகிறது. இந்த நோய் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? கைகளில் உணர்ச்சி இருக்காது. காது சரியாகக் கேட்காது. நாக்கிற்கு சுவை தெரியாது. கண் சரியாகத் தெரியாது. கால்களால் நடக்க இயலாது. இந்த நோய் வலுவாகத் தாக்கினால் பக்கவாதமும், உடனடியாக இறப்பும் ஏற்படும். மேலும் இந்த நோய் கற்பினிப்பெண்களை கடுமையாகத் தாக்கி வயிற்றில் இருக்கும் கருவையும் தாக்கும். இவ்வாறான நோய் தாக்கப்பட்ட பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் இருக்கும்.

இந்த மினமாட்டா நோய் 1956இல் குமமோட்டோ ப்ரீபெக்ச்சரில் இருக்கும் மினமாட்டா நகரத்தில் முதலில் பரவியது. நச்சுத் தன்மை கொண்ட மெத்தில்மெர்க்குரியை (MethylMercury) தன் கழிவு நீரின் மூலம் 1932இல் இருந்து 1968 வரை சிஸ்ஸோ கார்ப்பரேஷன் (chisso corporation) வெளியேற்றிக் கொண்டிருந்திருக்கிறது. இந்த அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட ரசாயனக்கழிவு மினமாட்டாவின் கடல் சுற்றுப்புறத்தில் படிந்து கடலில் வாழும் மீன்களுக்குள் சென்றுவிட்டன. அந்தப் பகுதி மக்கள் நச்சுத்தன்மை கொண்ட ரசாயானம் நிறைந்த அந்த மீன்களைச் சாப்பிட்டதால் மக்களையும் மெர்க்குரி பாதித்தது. அதன் விளைவே மினமாட்டா நோய். முப்பது வருடங்களாக, பூனை, நாய், பன்றி மற்றும் மனிதர்களின் சாவைப் பார்த்தும் ஜப்பான் அரசும் சிஸ்சோ நிறுவனமும் இந்த ரசாயனச் சுற்றுபுறக்கேட்டை கண்டுகொள்ளாமல் விட்டது தான் மிகுந்த மனவருத்தம் கொடுக்கும் செயல்.


(மினமாட்டா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய கை)

ஏற்கனவே மெர்க்குரி நச்சினால் பாதிக்கப்பட்ட டால்·பின்களை சாப்பிடக்கூடாது என்று WHO பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயத்தில் தாய்ச்சி (Taiji) டால்·பின் இறைச்சியை பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவாகப் பரிந்துரை செய்திருக்கிறது. அந்தப் பகுதி மீனவர்களும் டால்·பின் இறைச்சியை சாப்பிடுகின்றனர். மேலே சொன்னது போல, சந்தைக்கும் டால்·பின் இறைச்சியை திமிங்கல இறைச்சி என்று பெயரிட்டு விற்றுவிடுகின்றனர்.

தான் வளர்த்த டால்·பின் தன் கையிலே இறந்துபோனதை பொறுக்கமாட்டாமல் பேரி அன்றிலிருந்து டால்·பின்களை விடுதலை செய்ய ஆரம்பித்தார். நிறைய இடங்களில் சென்று வலைகளை அறுத்தெரிந்திருக்கிறார். அதற்காக சிறையும் சென்றிருக்கிறார். தான் ஆரம்பித்து வைத்த விளையாட்டு இன்று மல்டி மில்லியன் டாலர் தொழிலாக மாறிப்போனதைக் கண்டு மனம் வறுந்தினார். இந்த மல்டி மில்லியன் டாலர் பிஸினசுக்காக ஆண்டு தோறும் 23,000 டால்·பின்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த நினைத்தார்.

ஆனால் இதை தடுத்துநிறுத்துவது எளிதல்ல. ஏன்? ஆதாரம் வேண்டுமே! இந்த டால்·பின் கொலைகள் ஜப்பான் அரசின் ஆசியோடு நடக்கும் ஒரு பாதகம். எனவே டால்·பின் வேட்டை சீசனில் அங்கே நுழைவது கஷ்டம். மேலும் அங்கிருக்கும் லோக்கல் மீனவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதாவது டால்·பின்கள் கொலை செய்யப்படும் இடத்தை நீங்கள் நெறுங்கி போட்டா எடுப்பது என்பது முடியாது. மீனவர்களே சொல்லுகிறார்கள்: இங்கே நடப்பது வெளி உலகத்துக்குத் தெரிந்தால் எங்களால் தொடர்ந்து இதைச் செய்ய முடியாது. ஏற்கனவே திமிங்கலங்களை ஜப்பான் கொன்று குவிப்பதைப் பார்த்து திமிங்கல வேட்டைக்குத் உலக நாடுகள் தடைவிதித்துவிட்டன. இப்பொழுது டால்·பின்களையும் விட்டுவைக்கவில்லை என்கிற செய்தி உலகத்துக்குத் தெரிந்தால் என்ன ஆவது?

Dolphin Slaughter Taiji Japan The Cove Movie Brooke McDonald | Adventure Journal

எனவே பேரிக்கு ஆதாரம் திரட்டுவது மிகப்பெரிய வேலை. மிகவும் கடினமான வேலை. அவர் வெளியே காரில் சென்றாலே, பின்னாலே வேவு பார்ப்பவர்கள் வருகிறார்கள். போலீசும் வருகிறது. ஒரு முறை நகரத்தின் தலைமை காவல்துறை அதிகாரியே பேரியை வேவு பார்த்திருக்கிறார் என்றால் இந்தக் கொடூரம் யார் யாரின் துணையோடு நடக்கிறது என்று பார்த்தீர்களா?

பேரி ஆதாரம் திரட்டியே தீர்வது என்ற தீர்மானத்தோடு படை திரட்டுகிறார். குழு தயார் செய்கிறார். குழுவிற்கு ஓசன்ஸ்-11 (oceans-11) என்று பெயரிடப்படுகிறது. தன்னார்வலர்களை துறை வரிசையாக தேர்ந்தெடுக்கிறார். எக்ஸ்-மிலிட்டரி நபர், கேமரா பொறுத்துபவர், நீரில் டைவ் அடிப்பவர் என்று துறைக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக திட்டம் போடுகிறார். நள்ளிரவில் யாவருக்கும் தெரியாமல் கேமராவை தண்ணீருக்கு அடியிலும் மறைவாகவும் பொருத்துகிறார்கள்.

கொஞ்சநாட்களில் தேவையான வீடியோ காட்சி கிடைக்கிறது.

டால்·பின்களை கூர்மையான ஈட்டியைப் போன்ற ஒன்றைக்கொண்டு குத்திக்கிழிக்கிறார்கள். டால்·பின் கதறுகிறது. தண்ணீருக்கடியில் அவர்கள் பொருத்திய ஒலி பதிவும் செய்யும் காமெராவில் டால்·பின்களின் கூக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. ஒரு டால்·பின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கரையை நோக்கி வருகிறது. அதன் ஒரு புறம் குத்திக்கிழிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் வழிந்தோடுகிறது. தண்ணீருக்குள்ளிருந்து தாவி வருகிறது. எந்தத் தாவலை நாம் டால்·பின் காட்சியங்களில் பார்த்து ரசித்தோமோ அதே போன்றதொரு தாவல். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாவல் அடங்குகிறது. கடைசி முறையாக ஒரு முறை வெளியே வந்து தலை காட்டுகிறது. பிறகு அவ்வளவு தான். அந்த டால்·பின்னைக் காணோம். கிடந்த டால்·பின் குவியலில் அது கலந்திருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ஆற்றில் அதன் ரத்தமும் கலந்திருக்கும்.

அந்தப் பகுதியே கடும் ரத்தச்சிவப்பாகக் காட்சி தருகிறது. அடுத்த டால்·பின் வேட்டைக்கு மீனவர்கள் தயாராகிறார்கள்.

இது தான் The Cove என்கிற டாக்குமெண்டரிப் படம்.

இதைத் தடுத்து நிறுத்த இங்கே செல்லுங்கள்: http://www.takepart.com/cove

மேலும் படிக்க:

  1.  http://en.wikipedia.org/wiki/Ric_O’Barry
  2. http://en.wikipedia.org/wiki/Bottlenose_dolphin
  3. http://en.wikipedia.org/wiki/The_Cove_(film)
  4. http://en.wikipedia.org/wiki/Minamata_disease
  5. http://en.wikipedia.org/wiki/Taiji

Richard O’Barry’s Facebook page:
http://www.facebook.com/pages/Richard-OBarry/241314570366

Advertisement

One thought on “the cove

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s