மரண தண்டனை

தனி மனிதனின் அடிப்படை உரிமை – உயிர் வாழ்வது. அதைப் பறிப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை – அந்தத் தனிமனிதனையும் சேர்த்து. அதனால் தான் தற்கொலை செய்ய முயற்சிப்பது குற்றம். அதனால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதும் குற்றம்.

ஒருவன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். முன்கூட்டியே திட்டமிடுகிறான். நாள் குறிக்கிறான். நேரம் குறிக்கிறான். எப்படிக் கொல்வது என்று திட்டமிடுகிறான். பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி அந்தக் கொலையை அவன் செய்கிறான். நீதிபதி விசாரிக்கிறார். பலரது சாட்சிகளைக் கவனமாகக் கேட்கிறார். ஆழ்ந்து யோசிக்கிறார். ஒரு முடிவுக்கு வருகிறார். கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். நாள் குறிக்கப்படுகிறது. நேரம் குறிக்கப்படுகிறது. எப்படி மரண தண்டனை வழங்குவது என்று முடிவுசெய்யப்படுகிறது. பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்பே திட்டமிட்டபடி கொலையாளி கொலை செய்யப்படுகிறான். இரண்டும் என்ன வித்தியாசம்? இரத்தத்துக்கு இரத்தமா? இது சரியாகுமா?

டிஎன்ஏ (DNA) சோதனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அலெக் ஜெ·ப்ரி (Alec Jeffery). அவர் அறிமுகப்படுத்திய ஆண்டு 1984. அப்பொழுது மிகவும் பிரபலமான பிட்ச் ·போர்க் வழக்கில் தான் முதன் முதலில் DNA fingerprinting பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது பக்லேண்ட்(Buckland). கிட்டத்தட்ட போலீஸ் வழக்கை மூடிவிட்ட நிலையில், அலெக் ஜெ·ப்ரீயின் தொழில்நுட்பம் காலின் பிட்ச்·போர்க் என்பவனை மிகச்சரியாக அடையாளம் காட்டியது. பக்லேண்ட் தப்பித்தான். பிட்ச்·போர்க் மாட்டிக்கொண்டான். குற்றம் மிகச் சரியாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவன் குற்றவாளி. டீஎன்ஏ சோதனை அறிமுகம் ஆனபிறகு எண்ணற்ற அப்பாவிகள் விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1973இல் இருந்து 130 நபர்கள் தூக்குதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவிகள். இவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தால்?

டிவிட்டரில் ஒருவர் டிவிட்டிருந்தார்: “மூவரை தூக்கிலிட்டால் என்ன என்று சாதரணமாய் கேட்கிறார்கள். அந்த மூவருள் ஒருவர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்துச் சொல்லுங்கள்” என்று.  இது ஒரு விசயத்தை நடுநிலையாக ஆராயாமல், உணர்ச்சி வசப்பட்டுப் பார்ப்பது. அதே கேள்வியைத் திருப்பிக்கேட்க முடியும். “அந்த மூவர் கொலை செய்த நபர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்து சொல்லுங்கள்” என்று.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை கண்களை மூடிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு அதரத்ததைப் போல. அன்னா போல மற்றொருவர் இந்த ஆவின்பால் சட்டம் கொண்டுவந்தால் நாட்டில் சர்வாதிகாரப் போக்கு அதிகரிக்கும். யாரையும் எளிதாக லஞ்ச ஒழிப்பு வழக்கில் தண்டிக்க முடியும். அப்பாவிகள் மாட்டிக்கொள்வதற்கு சாத்தியம் ஏராளம். அதனால் நான் இந்த ஆவின்பால் சட்டத்தை எதிர்க்கிறேன் என்று எதிர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் – யாரும் செய்யாதது அன்னாவின் வெற்றி. அவர் கிளறிவிட்டு தூபம் போட்டதற்கு கிடைத்த வெற்றி – அப்பொழுது நீங்கள் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? கவனிக்க அன்னாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர், லஞ்சத்தை ஒழிக்கக்கூடாது என்று உண்ணாவிரதம் இருக்கவில்லை. லஞ்சத்தை ஒழிப்பதற்கு சொல்லப்படுகின்ற தீர்வைத்தான் எதிர்க்கிறார்!

உண்ணாவிரதம் இருப்பது ஒரு மிக மோசமான முன்னுதாரணமாக ஆகிவருகிறது. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். மரண தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது ஒரு வகையான ப்ளாக் மெயில். மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்று மற்றொரு கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தால் என்ன செய்வது? அரசு யாருடைய கோரிக்கையை நிறைவேற்றும்?

அதே சமயத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குதண்டனை சுப்ரீம் கோர்ட் விதித்த பொழுது மக்கள் அதைக் கொண்டாடத்தான் செய்தனர். கோயம்பத்தூர் குழந்தைகளின் இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டதும் இதே மக்கள் தான் ஆர்ப்பரித்தனர். மேலும் 2008 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கசாப்புக்கு தூக்குத்தண்டனை கொடுக்கவேண்டும் என்று வாதிட்டவர் பலர்.

நாளுக்கு ஒன்றும் நேரத்துக்கு இரண்டும் பேசித்திரிவது நமக்கு பழக்கமாகிவிட்டது.

யாராக இருந்தாலும் தூக்குத்தண்டனை என்பது கூடாது. ஒருவரது உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பது என்பது நாகரீகமான ஒரு சமூகம் செய்யத்தகுந்ததா. இதற்கும் நரபலிக்கும் என்ன வித்தியாசம்?

ஐரோப்பா யூனியன் பிற நாடுகள் தங்கள் குழுமத்தில் இணைய தகுதியாக மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்கிற விதியை வைத்துள்ளது. நமக்குத்தான் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை மேற்கோள் காட்டாமல் இருக்கமுடியாதே! எதற்கெடுத்தாலும் மனித உரிமையைக் காரணம் காட்டி சீனாவையும், க்யூபாவையும் வம்புக்கிழுக்கும் அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விசயம். (அங்கும் கூட சில மாகானங்களில் மரணதண்டனையை ஒழித்துவிட்டனர்.)

தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள் எதிர்க்கிறோம் என்கிற கோஷம் உணர்ச்சியைத் தூண்டிவிட வழிவகுக்கும் ஆனால் இந்திய அளவில் பெரிய ஆதரவைப் பெற்றுத்தராது.

மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது. எனவே அதனை எதிர்க்கிறேன்.

மரண தண்டனைக்கு இன்னும் மிகச் சொற்ப நாட்களே இருக்கின்றன.

5 thoughts on “மரண தண்டனை

  1. உயிருக்கு உயிர் என்றால் உலகத்தில் எதுவுமே மிஞ்சாது

    Like

  2. மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது. எனவே அதனை எதிர்க்கிறேன்.

    Like

  3. மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது. எனவே அதனை எதிர்க்கிறேன்.

    Like

  4. அப்போ அப்ச‌ல் குரு, க‌சாப் வ‌கைய‌ராக்க‌ள் எவ்வ‌ள‌வு அப்பாவி ம‌க்க‌ளை வேண்டுமானாலும் கொன்று போட‌லாம்…அவ‌ங்க‌ எல்ல‌ரையும் பிற‌கு ம‌ன்னிச்சி விட்ற‌லாம்..அப்ப‌டித்தானே? நல்லாயிருக்குயா உங்க‌ க‌ருத்து!

    Like

Leave a comment