சுஜாதாமேனியாக்கள்

இந்த சுஜாதாமேனியாக்களின் தொல்லை தாங்கமுடியலப்பா. அவர மாதிரி வருமா. அவர ரீப்லேஸ் பண்ண முடியாது. சேர் எப்பவும் காலியாத்தான் இருக்கும். பொது புத்தி. மிடில.sujatha

இது, தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் ரஜினியெல்லாம் ஒரு ஆளான்னு கேக்குறமாதிரி. தீவிர ரஜினி ரசிகர்கள் விஜயை மதிக்காத மாதிரி. இந்த ஜெனரேஷன் விஜய் ரசிகர்கள்கிட்ட பேசீனீங்கன்னா தெரியும் அவர்கள் ரஜினியை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள், விஜயை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள் என்று. ஜெயகாந்தனைப் படித்து சிலாகித்தவர்கள் எஸ்ராவைக் கண்டுகொள்வதில்லை. எஸ்ராவைப் படித்த என்னால் ஜெயகாந்தனைப் படிக்க இயலவில்லை.

Carl_Sagan_Planetary_Society

கார்ல் சாகனும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே மாதிரியான பீல்டில் இருந்தவர்கள். கார்ல் சாகன் அமெரிக்காவில் செய்ததை சுஜாதா 10% கூட இங்கே செய்யவில்லை என்பதே உண்மை. காஸ்மோஸ் போன்ற ஒரு புத்தகத்தை சுஜாதா எழுதியிருந்தால் – அதுவே அவர் தமிழ் சமூகத்துக்கு ஆற்றிய மிகப்பெரிய தொண்டாக இருந்திருக்கக்கூடும்.

கார்ல் சாகன் ஒரு ஜெனரேஷனை தட்டி எழுப்பினார். இன்றைக்கு இருக்கும் பல அமெரிக்க விஞ்ஞானிகள் கார்ல சாகனை ரோல் மாடலாகக் கொண்டவர்கள். அதுபோல, சுஜாதா தமிழ் இளைஞர்களுக்கு அறிவியலைக் கொண்டுசேர்த்திருக்கவேண்டும். சுஜாதா ஒரு செலிபிரிட்டி. பாப்புலர் ஃபிகர். நட்சத்திரம். தமிழின் எழுத்தாளர்களில் முதல் ராக் ஸ்டார். அப்படியிருந்தும், ஏன் பாப்புலர் சயின்ஸ் புத்தகங்களை அவர் எழுதவில்லை என்று புரியவில்லை.

விஞ்ஞானத்தை கதைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டவர். மைக்கேல் க்ரிக்டனைப் போல. ஸ்டீஃபன் கிங் போல. அவ்வளவே. மைக்கேல் கிரிக்டனைப் போல கூட சுஜாதா முழுவதுமாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். அவரது பல கதைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எப்படி கமலஹாசனுக்கு ப்ரா பத்தி பேசாமல் படம் எடுக்கத்தெரியாதோ, அதே போல சுஜாதாவுக்கு பெண்களின் மாரைப் பற்றிப் பேசாமல் கதை எழுதத்தெரியாது. பாலகுமாரன் நாவல்களை முதன்முறையாகப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். பூசுமஞ்சளில் மஞ்சள் தொழிலை அலசி ஆராயிந்திருப்பார். எப்படி முடிகிறது என்று தோன்றும். ஆனால் அவரது பிற நாவல்களை தொடர்ந்து படிக்கும் போது கிட்டத்தட்ட ஐந்து நாவல்களுக்குள்ளேயே ஒரு பேட்டர்ன் தெரிந்துவிடும். பிறகு அயர்ச்சி தான் மிஞ்சும். அதேதான் சுஜாதாவுக்கும். அவரது “ஆ” நாவல் எல்லாம் உண்மையிலே மிடில. தம்பி ஜோடா குடுங்கிற ரேஞ்சில தான் இருந்தது.

சிறுகதை என்றாலே டிவிஸ்ட் வேண்டும். ட்விஸ்ட் இல்லாவிட்டால் அது சிறுகதையே இல்லை என்கிற அளவுக்கு நம்மைத் தள்ளியவர் சுஜாதா., ஒரு பக்கக் கதை, ஒரு வரிக் கதை, ஒரு சொல் கதை, ஒரு எழுத்துக்கதை என்று சிறுகதையின் ஃபார்மெட்டை டைல்யூட் செய்தவர் சுஜாதா. சுஜாதா கதைகளைப் படித்துவிட்டு, கிராவின் சிறுகதைகளைப் படிக்கும் பொழுது என்னடா இது ஒரு மண்ணையும் காணோம்னு நினைத்தேன். அது திருப்பாச்சி பார்த்துவிட்டு இரண்டாம் உலகம் பார்ப்பதைப் போல. டென்ஷனாகாதீங்க. சும்மா ஒரு ஃப்ளோல வந்துருச்சு. ஓக்கே. ரீடேக். திருப்பாச்சியைப் பார்த்து விட்டு மூன்றாம் பிறை பார்ப்பது போல. முல்லும் மலரும் பார்ப்பது போல.

சுஜாதா ஒரு நல்ல ஜனரஞ்சகமான எழுத்தாளர். கமலஹாசன் ஒரு நல்ல நடிகர். இருவரும் ஒரு மசாலாவை அறிவாளித்தனமாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்கிற வித்தை அறிந்தவர்கள். அதை தெளிவாக இருவரும் செய்தனர். கமலஹாசன் இன்னும் செய்து கொண்டிருப்பது வேதனை. மற்றபடி இருவரும் மிகுந்த தேடல் கொண்டவர்கள். ஆனால் இருவரும் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சுஜாதா பாப்புலர் சயின்ஸ் புத்தகங்கள் எழுதாது – ஒரு மிகப்பெரிய குறை. கமலஹாசன் இன்னும் விஸ்வரூபம் போன்ற மரணமொக்கைகள் கொடுப்பதை என்னவென்று சொல்வது.

வழிகள் இருந்தும் இண்ட்ரஸ்ட் இல்லாதவர்களை ஒன்றும் சொல்லமுடியாது. ரஜினியைப் போல. கெஜ்ரிவால் என்கிற இன்கம்டேக்ஸ் ஆபிசர் செய்கிறார் என்றால் ரஜினியால் செய்யமுடியாதா? இண்ட்ரஸ்ட் இல்லை அவ்வளவே. எது ஈசியோ அத செஞ்சிட்டுப் போவோம்.

எழுத்தாளர்கள் வருவார்கள் போவார்கள். தலைவர்களைப் போல. நடிகர்களைப் போல. பிஸினஸ்மேன்கள் போல. ரிக்‌ஷா இழுப்பவர்கள் போல. அவர்களுக்கு நாற்காலிகள் இருந்திருக்கும். அவர்கள் போனபிறகு அந்த நாற்காலிகள் காலியாக இருப்பதில்லை. அவர்களே அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள். இல்லையென்றால் அந்த நாற்காலியே இருக்காது. வேறொருவர் வந்து அந்த நாற்காலியில் உட்கார முடியாது. வேறு ஒரு நாற்காலி பக்கத்திலே போட்டு அமர்ந்துகொள்ளலாம். அவ்வளவே.

டாலர் தேசம்

dollardesam

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் படித்ததிலிருந்து வரலாற்றின் மேல் ஒரு காதல் வந்துவிட்டது. காவல் கோட்டம் பற்றி வேறொரு சமயத்தில் எழுதலாம் – இன்னும் படித்து முடிக்கவில்லை. அதற்குள் டாலர் தேசத்துக்கு தாவினேன். இரண்டு அத்தியாயங்கள் படித்த நிலையில், இந்தியா சென்றிருந்த பொழுது, அமெரிக்க வரலாற்றை ஏன் படிக்கவேண்டும் – இந்திய வரலாறே நமக்குச் சரிவரத் தெரியாதே – என்கிற எண்ணம் தோன்றியது.

ஏர்போர்ட்டில் John Keay எழுதிய India: A History வாங்கினேன். 200 பக்கங்கள் படித்த நிலையில், என்ன படித்தோம் என்று ரீவைண்ட் செய்து பார்த்த பொழுது, ஒன்றும் நினைவில் இல்லை. வரலாறு கதை அல்ல. அதை சுவராஸ்யமாக எழுதுவது எளிதல்ல. சுவராஸ்யமாக இல்லையெனில் – படிப்பது எளிதல்ல. மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் டாலர் தேசம் வாங்கிச்சென்ற என் நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். (புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும் சில உயர்ந்த உள்ளங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருப்பதாலேயே, இவ்வுலகம் உய்த்திருக்கிறது. 🙂 ) திருப்பிக்கொடுத்ததோடில்லாமல், அபாரம் என்றும் சொன்னார்.

டாலர் தேசம்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

ஆசிரியர்: பா.ராகவன்

இந்த புத்தகத்தின் நோக்கம், அமெரிக்க வரலாறு அல்ல.  அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுதல்.

நமக்குத் தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்க அல்ல. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜன்நாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஸ்லம், அதன் பணபலத்துக்குப் பின்னாலிருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் – இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா.

இந்த புத்தகத்தைப் படித்தால் அமெரிக்க வரலாற்றைக் கரைத்துக்குடித்துவிடலாம் என்றில்லை. இந்த புத்தகத்தை வரலாற்றுப் பாடமாக்கலாமா என்றால் – முடியாது. பிறகு எதற்குத்தானய்யா இந்த புத்தகம்? அமெரிக்காவைப் புரிந்துகொள்வதற்கு! அமெரிக்காவை எதற்காகய்யா புரிந்துகொள்ளவேண்டும்? அமெரிக்கா என்ன என் மாமியாரா? காரணம் இருக்கிறது. அமெரிக்க வரலாற்றை நீங்கள் புரட்டிப்பார்த்து புரிந்துகொண்டால், நீங்கள் தற்பொழுது பார்க்கும் இந்த உலகம் – நீங்கள் கேட்கும் செய்திகள் – ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

வியட்நாம் யுத்தம் ஏன்? ஈராக்கில் என்ன நடந்தது? சதாம் உசேன் என்னதான்யா தப்பு செஞ்சார்? எகிப்து ஏன் நொண்டுகிறது? முதல் உலக யுத்தத்தில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? என்ன காரணம்? இரண்டாம் உலக யுத்தத்திலும் ஏன் நுழைந்தது? பேர்ல் ஹார்பர் மட்டும் தான் காரணமா? ஜப்பான் மீது ஏன் குண்டு போட்டது? ஜப்பான் ஏன் பேர்ல் ஹார்பரை தாக்கியது? அமெரிக்கா சும்மா தானய்யா இருந்தது – பின்ன ஜப்பான் ஏன் தாக்கியது? திமிர் தான? இல்ல கடுப்பில தாக்கியதா? என்ன காரணம்? க்யூபாவில் என்ன நடந்தது? கௌடமாலாவில் என்ன பிரச்சனை? சுடானில் என்ன பிரச்சனை? அல்-கைதாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வாய்க்கா சண்டை? ஆஃகானிஸ்தானில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் என்னப்பா பிரச்சனை? கொரியாவில் என்ன நடந்தது? பாலஸ்தீனப்போரில் அண்ணனின் பங்கு என்ன? பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது சரி – எதுக்குய்யா கட்டினாங்க? பாக்கிஸ்தான் ஆஃப்கானிஸ்தானைத்தான ஆதரித்திருக்கவேண்டும்? எதுக்கு அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறது? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதற்கான அத்தனை விடைகளும் உங்களுக்கு இந்த ஒரு புத்தகத்தில் கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விடைகளுக்கான தேடலின் தொடக்கமாக இந்த புத்தகம் இருக்கக்கூடும்.

1500 இல் ஆரம்பித்து இன்றுவரையிலான அமெரிக்க சரித்திரத்தை அலசுகிறது இந்த புத்தகம். வரலாற்று நூலை இவ்வளவு சுவராஸ்யமாக எழுதமுடியும் என்று நான் நினைத்ததில்லை. பா.ராகவன் செய்திருக்கிறார். மூன்று நாட்கள் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்.

அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை – கட்டாயத்திலும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னுள் இருந்தது. அது ஏன் அமெரிக்கா மட்டும் ஜொலிக்கிறது என்கிற கேள்வி. இதற்கும் அமெரிக்காவின் சரித்திரம் வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. ஐநூறு ஆண்டுகளுக்குள் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? கல்தோன்றி முன்தோன்றா டாஸ்மாக்குடி காலத்தைச் சேர்ந்த நம்மால் ஏன் முடியவில்லை? ஒவ்வொரு இந்தியனிடமும் பெருமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் எப்படி இருந்த நாம், இப்படி ஆகிட்டோம் என்பதுதான். ஆனால் ஏன் இப்படி ஆனாம் என்று நினைத்திருப்போமா? அதற்கு இந்திய வரலாறு (நடுநிலமையான; உண்மை பேசும்; வரலாற்றையும் கற்பிதங்களையும் போட்டுக்குழப்பாத) வேண்டும்.

இல்லையெனில், வளர்ந்த நாடு எப்படி அதைச் செய்தது என்று பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்பொழுதே சாக்கடை கட்டியிருக்கிறோம். அப்போதே பொது தண்ணீர் சேமிப்பு – விநியோக திட்டம் இருந்திருக்கிறது. தெற்கே முத்து வியாபாரம் கண ஜோராக நடந்திருக்கிறது. வடக்கே சந்தைகள் கொழித்திருக்கின்றன. நமது மொழி ஆயிரக்கணக்கான வருஷத்து பழமையானது. பாரதியார் கனவு கண்டார். காசியில் பேசினால் காஞ்சியில் கேட்கவேண்டும் என்றார். ஆனால் ரேடியோ கண்டுபிடித்தோமா நாம்? ராவணன் சீதையை ஆகாய விமானத்தில் வைத்து தூக்கிச்சென்றான் (கதை தான் என்றாலும்) என்று படித்து உருகுகிறோம். விமானம் கண்டுபிடித்தோமா? ஏன் முடியவில்லை? அமெரிக்காவால் ஏன் முடிந்தது?

சிம்பிளா சொன்னா: நம்ம கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவங்ககிட்ட?

இந்த கேள்வி உங்களுக்கு இருக்குமேயானால் இந்த புத்தகத்தைப் படிப்பது அவசியம். பணக்காரர்களை நாம் எட்ட இருந்து பார்க்கும் வரை அவர்களது ஜொலிப்பு அட்டகாசமாய் இருக்கும். அவர்களுடன் பழகிப்பார்த்தால் தான், அவர்களது உண்மை நிலவரம் புரியும். பணக்காரர்களாக இருப்பதற்கு, பணத்தை சம்பாதித்துக்கொண்டேயிருப்பதற்கு, அவர்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது என்பது புரியவரும். பணக்காரர்களாகவே இருப்பது எளிதல்ல. பணக்காரர்களுக்குக் கூட பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு என்ன செய்தால் பணம் காய்த்துக்கொண்டேயிருக்கும்?

எங்கேயும் பிஸினஸ். எதிலும் பிஸினஸ். ஆயிரத்தில் ஒருவனில் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட கார்த்திக்கு, பார்ப்பதெல்லாம், பீரும் பிரியாணியாகத் தெரிவது போல – எதிலும் பணத்தைப் பார்ப்பது. மனிதநேயத்தையும் பிஸினஸையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒழுக்கவிதிகளையும் பிஸினஸையும் மிக்ஸ் செய்யக்கூடாது. இது சரியா? செய்த தவறுகளை பணத்தை வைத்து மறைத்துவிடு.

 அயல்நாடுகளுடன் உறுதியான, வளமான வர்த்தகத் தொடர்புகள் இருந்தாலொழிய அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி உட்காரவைக்க முடியாது என்பது ரூஸ்வெல்டுக்குத் தெரிந்தது.

ஆனால் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய தேசங்களுக்குள்ளேயே பல அமெரிக்காவுடன் நட்பு-பகை என்று மாறிமாறி உறவாடிக்கொண்டிருந்தன. பிஸினஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டால் இந்த உறவு சமாச்சாரமெல்லாம் சரிப்படாது என்று அப்போதைய அமெரிக்க அரசு கருதியது.

இப்படி சர்வாதிகார தேசங்களையெல்லாம் கம்யூனிஸ்டு சோவியத்துக்கு எதிரானா மனோபாவத்தை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்தகைய தேசங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்து தனது வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சோவியத்துக்கு எதிரான அத்தேசங்களின் கோபங்களைக் கொம்பு சீவிவிடலாம் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

இது ஒரே கல்லில் ரெண்டு தேங்காய் சமாச்சாரம். பிஸினஸுக்கு பிசினஸும் ஆச்சு. சோவியத்தையும் கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெடுநாளைய ஆசைக்கும் வடிகால். அதுவும் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ஜெர்மனியையும் ஜப்பானையும் தூண்டிவிட்டுச் செயல்படுவதால் தனக்கு நேரடியாக வில்லன் இமேஜ் வந்து சேராது.

சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரம் சீர்படத் தொடங்கியது இப்போதுதான். கொஞ்ச நஞ்சமல்ல. பல லட்சக்கணக்கான ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களோ கப்பல் கப்பலாக அனுப்பிவைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட அமெரிக்காவே ஒரு கொல்லன் பட்டறை மாதிரித்தான் இருந்தது. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பில்லியன் கணக்கிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால் அவரே [ஹிட்லர்] கூட நினைத்துப் பார்த்திராத விசயம், அமெரிக்கா மீதான ஜப்பானின் அந்த திடீர் தாக்குதல. பேர்ல துறைமுகத் தாக்குதல். . எப்படிப் பார்த்தாலும் ஜப்பானின் எழுச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. ராணுவ ரீதியில் அந்த தேசம் பெரிய அளவில் வளர்ந்து நிற்க மறைமுகமாக நிறைய பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்திருந்தது….

ஆனால் இப்படி க்ளோசப்பின் நேசப்பிணைப்பாக இருந்த இரு நாடுகள் ஏன் தாக்கிக்கொண்டன? எப்படியிருந்தாலும் இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர். அணுகுண்டு போடுவதென்றால் ஜெர்மனி மீது தான் அமெரிக்கா போட்டிருக்கவேண்டும் – ஆனால் ஏன் துக்கனூண்டு ஜப்பான் மீது போட்டது? பொதுநலமா? “குண்டு போட்டது பெருமையா கடமை ப்ரோ”ன்னு உலகநியாயம் பேசினாலும், குண்டுக்குப்பின் இருந்தது, வர்த்தக போட்டி. பொறாமை. ஆற்றாமை. ஏன்? என்ன ஆற்றாமை? ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அப்படியென்ன உள்குத்து?

குமுதம் ரிப்போர்ட்டரில் இந்தப் புத்தகம் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். வாரா வாரம் படிக்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தகமாக மொத்தமாக படிக்கும்பொழுது, அதுவும் வரலாறு, நன்றாகவா இருக்கும் என்ற எண்ணம் வருவது இயல்பு. நன்றாகத்தான் இருந்தது. மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அதற்குக் காரணம் பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை கலந்த நடை.

உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரைப்பற்றிப் பேசும்போது:

 இந்தப் பனிப்போரைப் பற்றி நமது பாடப்புஸ்தகங்கள் சொல்லுகிற விவரங்கள் எல்லாமே மிகவும் தமாஷானவை. கம்யூனிசத்தின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா கவலைப்பட்டது; அமெரிக்காவின் ஆயுத பொருளாதாரப் பெருக்கத்தைப் பார்த்து ரஷ்யா வெறுப்படைந்தது; அதனால் பனிப்போர் ஏற்பட்டது என்று ஒரு வாயில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

உண்மையில் புரோட்டா மாதிரி லேயர் லேயராக நிறைய சங்கதிகளும் , காரணத்துக்குள் காரணம், அதற்குள் இன்னொரு காரணம் என்று பூரணக்கொழுக்கட்டைகளாக உள்ளே பொதிந்து வைத்த மேட்டர்கள் மிக அதிகம்!

அடிமைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அடிகளாலானது. கசையடி. நிற்க வைத்து நூறு, நூற்றைம்பது என்று எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட கசையடிகள். கசையடிக்கு அப்புறம் உழௌப்பி. ஒரு தினத்தில் குறைந்தபட்சம் பதினெட்டு மணிநேரம் அவர்கள் உழைத்தாக வேண்டும். உழைக்கும் நேரமெல்லாம் அவர்களின் வெற்றுடம்பிலிருந்து சொட்டிக்கொணே இருப்பது வியர்வை மட்டுமல்ல; காயங்களிலிருந்து ரத்தமும் கூட.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான அத்தியாயம் பிரடரிக் டக்ளஸின் அத்தியாயம் தான்.

டக்ளஸின் கலிவித்தாகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அவரது சுயசரிதத்தில் டக்ளஸ் கையாண்டிருக்கும் மொழி, வாசிக்கும் போது பிரமிப்பூட்டக்கூடியது. வாழ்நாளில் ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாதவர், சேர்ந்தாற்போல் பத்துநிமிடம் உட்கார்ந்து பாடம் என்று எதையுமே படிக்காதவர், வெறும் கேள்வி ஞானமும் சுயமுயற்சியும் மட்டுமே கொண்டு எழுதப்படிக்கக் (அதுவும் பயந்து பயந்து, ரகசியமாக!) கற்றுக்கொண்டவர் அவர்.

அமெரிக்க கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு குடியேற்றம், தாய்நாட்டுக்கு எதிரான விடுதலைப் புரட்சி, ப்ரஸிடெண்ட்டுகள், அரசியல் கட்சிகள், அடிமை வரலாறு, அவர்களின் புரட்சி, பொருளாதார மேம்பாடு, உற்பத்திப்பெருக்கம், உற்பத்தி செய்த பொருட்களை விற்க சந்தைகள் பிடிப்பது, சந்தைகள் பிடிக்க பல குட்டிகரணங்கள் போடுவது, தில்லிமுல்லு செய்தது, ஆட்சியைக் கலைப்பது, கலைத்த ஆட்சியை தனக்குச் சாதகமாக நேர்செய்வது, பிறகு சந்தையை நிறுவுவது, தீவிரவாதிகளை உருவாக்குவது, பிறகு வேலை முடிந்தபின் அவர்களை நடு ராத்திரியில் வீட்டிற்குள் புகுந்து அழித்தொழிப்பது, பிள்ளையைக் கிள்ளுவது, தொட்டிலை ஆட்டுவது என்று பல திருவிளையாடல்கள் புரியும் அமெரிக்கசிவனின் நடன-பாவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பது அவசியம்.

உலக வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

நீயா நானா – வருடாந்திர பலன்கள்

நீயா நானா பார்த்த பாதிப்பு.

நீயாநானா ஒரு மொக்கங்கறது என் தாழ்மையான கருத்து. அதுல எடுத்துவைக்கப்படும் தலைப்புகளும் பொதுமக்களின் கருத்துக்களும் மிகவும் மொன்னை. மிடில் க்ளாஸுக்கு பொதுவா ஷார்ப்பா பேசத்தெரியாது. பேச வராது. பேசவும் பிடிக்காது. அரே யார்.. தேட் ஆல்சா குட் திஸ் ஆல்சோ குட் என்கிற யதார்த்தம் தான் இருக்கும். தப்பித்தவறி ஒன்னுரெண்டு தத்துபித்துன்னு ஏதாச்சும் சொல்லுச்சுன்னாலும், அத உடச்சு யாராச்சும் சொன்னா, அதுக்கு பிறகு என்ன பேசறதுன்னே அதுங்களுக்கு தெரியாது. அப்படியே அதுங்க பேசுச்சுன்னாலும், நீயாநானால, “கனம்கோட்டார்” மடக்கி நிமித்திவிட்டுடுவார். அடடே வட போச்சேன்னு, பிடுங்கப்பட்ட மைக்கப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கும்கள். நானூறு வருஷம் ஒலியும் ஒளியும் பாத்துவளர்ந்த குமரிக்கண்ட மூத்தகுடிகளுக்கு, நீயா நானா ஏன் பிடித்தது என்று பல்லுவெளக்கி துப்பத் தேவயில்லை.

நான் பாக்கறதில்லை – ஆனா அவார்டு எல்லாம் கொடுத்தப்பிறகு, என்னதான்யா செய்றாய்ங்கன்னு பாக்க ரெக்கார்ட் பண்ணிவெச்சேன். ஊத்தாப்பம் வர லேட்டான கேப்பில ரீப்ளே பண்ணதால வந்த வெண.

இந்த நீயா நானாவிலே ஏதோ ஒரு ராசிக்கு சொத்து தகராறு தீரும் என்று ஒரு விஞ்ஞானி சொன்னவுடன், நின்றுகொண்டிருந்த அந்த அப்பாவி குறுஞ்சிரிப்பு சிரித்தார். உடனே மற்ற விஞ்ஞானிகளும் அதே பாடலை ராகம் மாற்றாமல் பாடினர். கனம்கோட்டாரும் நெறைய விஞ்ஞானிகள் இதயே சொல்றாங்கன்னு, ஏத்திவிட, வழிந்த அந்த அப்பாவி, தனக்கு சொத்துப்பிரச்சனை இருக்கிறது, அதுவும் முடிஞ்சிரும்னு, அசட்டு சிரிப்புடன் சொன்னார்.

சிம்பிள். நீங்கள் இப்படி முகப்புத்தகத்தில் தவம் கிடப்பது போல, அவர்கள் உங்கள் முகப்புத்தகத்தின் ஒவ்வொரு தசையின் அசைவையும் படிக்கிறார்கள். கதை ரெடி செய்கிறார்கள். சமீபத்திய ஆன் டிமாண்ட் பிரிண்டிங் மாதிரி. அப்பப்ப சுடச்சுட வடை சுடுகிறார்கள். மாவு? ஆல்டைம் ரெடி. சேம் ப்ளட்.

பி கேர்ஃபுள். நான் என்ன சொன்னேன்.

தெரியாமத்தான் கேக்கறேன் – தமிழ்நாட்ல சொத்துப்பிரச்சனை இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன?

சீரியசா கேக்கறேன் – இன்னுமா இந்த உலகம் இவிங்கள நம்பிக்கிருக்கு?

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய பொய். பொய்யைத் தவிர வேறில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவு.