இந்த சுஜாதாமேனியாக்களின் தொல்லை தாங்கமுடியலப்பா. அவர மாதிரி வருமா. அவர ரீப்லேஸ் பண்ண முடியாது. சேர் எப்பவும் காலியாத்தான் இருக்கும். பொது புத்தி. மிடில.
இது, தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் ரஜினியெல்லாம் ஒரு ஆளான்னு கேக்குறமாதிரி. தீவிர ரஜினி ரசிகர்கள் விஜயை மதிக்காத மாதிரி. இந்த ஜெனரேஷன் விஜய் ரசிகர்கள்கிட்ட பேசீனீங்கன்னா தெரியும் அவர்கள் ரஜினியை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள், விஜயை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள் என்று. ஜெயகாந்தனைப் படித்து சிலாகித்தவர்கள் எஸ்ராவைக் கண்டுகொள்வதில்லை. எஸ்ராவைப் படித்த என்னால் ஜெயகாந்தனைப் படிக்க இயலவில்லை.
கார்ல் சாகனும் சுஜாதாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே மாதிரியான பீல்டில் இருந்தவர்கள். கார்ல் சாகன் அமெரிக்காவில் செய்ததை சுஜாதா 10% கூட இங்கே செய்யவில்லை என்பதே உண்மை. காஸ்மோஸ் போன்ற ஒரு புத்தகத்தை சுஜாதா எழுதியிருந்தால் – அதுவே அவர் தமிழ் சமூகத்துக்கு ஆற்றிய மிகப்பெரிய தொண்டாக இருந்திருக்கக்கூடும்.
கார்ல் சாகன் ஒரு ஜெனரேஷனை தட்டி எழுப்பினார். இன்றைக்கு இருக்கும் பல அமெரிக்க விஞ்ஞானிகள் கார்ல சாகனை ரோல் மாடலாகக் கொண்டவர்கள். அதுபோல, சுஜாதா தமிழ் இளைஞர்களுக்கு அறிவியலைக் கொண்டுசேர்த்திருக்கவேண்டும். சுஜாதா ஒரு செலிபிரிட்டி. பாப்புலர் ஃபிகர். நட்சத்திரம். தமிழின் எழுத்தாளர்களில் முதல் ராக் ஸ்டார். அப்படியிருந்தும், ஏன் பாப்புலர் சயின்ஸ் புத்தகங்களை அவர் எழுதவில்லை என்று புரியவில்லை.
விஞ்ஞானத்தை கதைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டவர். மைக்கேல் க்ரிக்டனைப் போல. ஸ்டீஃபன் கிங் போல. அவ்வளவே. மைக்கேல் கிரிக்டனைப் போல கூட சுஜாதா முழுவதுமாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். அவரது பல கதைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எப்படி கமலஹாசனுக்கு ப்ரா பத்தி பேசாமல் படம் எடுக்கத்தெரியாதோ, அதே போல சுஜாதாவுக்கு பெண்களின் மாரைப் பற்றிப் பேசாமல் கதை எழுதத்தெரியாது. பாலகுமாரன் நாவல்களை முதன்முறையாகப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். பூசுமஞ்சளில் மஞ்சள் தொழிலை அலசி ஆராயிந்திருப்பார். எப்படி முடிகிறது என்று தோன்றும். ஆனால் அவரது பிற நாவல்களை தொடர்ந்து படிக்கும் போது கிட்டத்தட்ட ஐந்து நாவல்களுக்குள்ளேயே ஒரு பேட்டர்ன் தெரிந்துவிடும். பிறகு அயர்ச்சி தான் மிஞ்சும். அதேதான் சுஜாதாவுக்கும். அவரது “ஆ” நாவல் எல்லாம் உண்மையிலே மிடில. தம்பி ஜோடா குடுங்கிற ரேஞ்சில தான் இருந்தது.
சிறுகதை என்றாலே டிவிஸ்ட் வேண்டும். ட்விஸ்ட் இல்லாவிட்டால் அது சிறுகதையே இல்லை என்கிற அளவுக்கு நம்மைத் தள்ளியவர் சுஜாதா., ஒரு பக்கக் கதை, ஒரு வரிக் கதை, ஒரு சொல் கதை, ஒரு எழுத்துக்கதை என்று சிறுகதையின் ஃபார்மெட்டை டைல்யூட் செய்தவர் சுஜாதா. சுஜாதா கதைகளைப் படித்துவிட்டு, கிராவின் சிறுகதைகளைப் படிக்கும் பொழுது என்னடா இது ஒரு மண்ணையும் காணோம்னு நினைத்தேன். அது திருப்பாச்சி பார்த்துவிட்டு இரண்டாம் உலகம் பார்ப்பதைப் போல. டென்ஷனாகாதீங்க. சும்மா ஒரு ஃப்ளோல வந்துருச்சு. ஓக்கே. ரீடேக். திருப்பாச்சியைப் பார்த்து விட்டு மூன்றாம் பிறை பார்ப்பது போல. முல்லும் மலரும் பார்ப்பது போல.
சுஜாதா ஒரு நல்ல ஜனரஞ்சகமான எழுத்தாளர். கமலஹாசன் ஒரு நல்ல நடிகர். இருவரும் ஒரு மசாலாவை அறிவாளித்தனமாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்கிற வித்தை அறிந்தவர்கள். அதை தெளிவாக இருவரும் செய்தனர். கமலஹாசன் இன்னும் செய்து கொண்டிருப்பது வேதனை. மற்றபடி இருவரும் மிகுந்த தேடல் கொண்டவர்கள். ஆனால் இருவரும் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சுஜாதா பாப்புலர் சயின்ஸ் புத்தகங்கள் எழுதாது – ஒரு மிகப்பெரிய குறை. கமலஹாசன் இன்னும் விஸ்வரூபம் போன்ற மரணமொக்கைகள் கொடுப்பதை என்னவென்று சொல்வது.
வழிகள் இருந்தும் இண்ட்ரஸ்ட் இல்லாதவர்களை ஒன்றும் சொல்லமுடியாது. ரஜினியைப் போல. கெஜ்ரிவால் என்கிற இன்கம்டேக்ஸ் ஆபிசர் செய்கிறார் என்றால் ரஜினியால் செய்யமுடியாதா? இண்ட்ரஸ்ட் இல்லை அவ்வளவே. எது ஈசியோ அத செஞ்சிட்டுப் போவோம்.
எழுத்தாளர்கள் வருவார்கள் போவார்கள். தலைவர்களைப் போல. நடிகர்களைப் போல. பிஸினஸ்மேன்கள் போல. ரிக்ஷா இழுப்பவர்கள் போல. அவர்களுக்கு நாற்காலிகள் இருந்திருக்கும். அவர்கள் போனபிறகு அந்த நாற்காலிகள் காலியாக இருப்பதில்லை. அவர்களே அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள். இல்லையென்றால் அந்த நாற்காலியே இருக்காது. வேறொருவர் வந்து அந்த நாற்காலியில் உட்கார முடியாது. வேறு ஒரு நாற்காலி பக்கத்திலே போட்டு அமர்ந்துகொள்ளலாம். அவ்வளவே.