டாலர் தேசம்

dollardesam

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் படித்ததிலிருந்து வரலாற்றின் மேல் ஒரு காதல் வந்துவிட்டது. காவல் கோட்டம் பற்றி வேறொரு சமயத்தில் எழுதலாம் – இன்னும் படித்து முடிக்கவில்லை. அதற்குள் டாலர் தேசத்துக்கு தாவினேன். இரண்டு அத்தியாயங்கள் படித்த நிலையில், இந்தியா சென்றிருந்த பொழுது, அமெரிக்க வரலாற்றை ஏன் படிக்கவேண்டும் – இந்திய வரலாறே நமக்குச் சரிவரத் தெரியாதே – என்கிற எண்ணம் தோன்றியது.

ஏர்போர்ட்டில் John Keay எழுதிய India: A History வாங்கினேன். 200 பக்கங்கள் படித்த நிலையில், என்ன படித்தோம் என்று ரீவைண்ட் செய்து பார்த்த பொழுது, ஒன்றும் நினைவில் இல்லை. வரலாறு கதை அல்ல. அதை சுவராஸ்யமாக எழுதுவது எளிதல்ல. சுவராஸ்யமாக இல்லையெனில் – படிப்பது எளிதல்ல. மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் டாலர் தேசம் வாங்கிச்சென்ற என் நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். (புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும் சில உயர்ந்த உள்ளங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருப்பதாலேயே, இவ்வுலகம் உய்த்திருக்கிறது. 🙂 ) திருப்பிக்கொடுத்ததோடில்லாமல், அபாரம் என்றும் சொன்னார்.

டாலர் தேசம்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

ஆசிரியர்: பா.ராகவன்

இந்த புத்தகத்தின் நோக்கம், அமெரிக்க வரலாறு அல்ல.  அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுதல்.

நமக்குத் தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்க அல்ல. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜன்நாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஸ்லம், அதன் பணபலத்துக்குப் பின்னாலிருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் – இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா.

இந்த புத்தகத்தைப் படித்தால் அமெரிக்க வரலாற்றைக் கரைத்துக்குடித்துவிடலாம் என்றில்லை. இந்த புத்தகத்தை வரலாற்றுப் பாடமாக்கலாமா என்றால் – முடியாது. பிறகு எதற்குத்தானய்யா இந்த புத்தகம்? அமெரிக்காவைப் புரிந்துகொள்வதற்கு! அமெரிக்காவை எதற்காகய்யா புரிந்துகொள்ளவேண்டும்? அமெரிக்கா என்ன என் மாமியாரா? காரணம் இருக்கிறது. அமெரிக்க வரலாற்றை நீங்கள் புரட்டிப்பார்த்து புரிந்துகொண்டால், நீங்கள் தற்பொழுது பார்க்கும் இந்த உலகம் – நீங்கள் கேட்கும் செய்திகள் – ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

வியட்நாம் யுத்தம் ஏன்? ஈராக்கில் என்ன நடந்தது? சதாம் உசேன் என்னதான்யா தப்பு செஞ்சார்? எகிப்து ஏன் நொண்டுகிறது? முதல் உலக யுத்தத்தில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? என்ன காரணம்? இரண்டாம் உலக யுத்தத்திலும் ஏன் நுழைந்தது? பேர்ல் ஹார்பர் மட்டும் தான் காரணமா? ஜப்பான் மீது ஏன் குண்டு போட்டது? ஜப்பான் ஏன் பேர்ல் ஹார்பரை தாக்கியது? அமெரிக்கா சும்மா தானய்யா இருந்தது – பின்ன ஜப்பான் ஏன் தாக்கியது? திமிர் தான? இல்ல கடுப்பில தாக்கியதா? என்ன காரணம்? க்யூபாவில் என்ன நடந்தது? கௌடமாலாவில் என்ன பிரச்சனை? சுடானில் என்ன பிரச்சனை? அல்-கைதாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வாய்க்கா சண்டை? ஆஃகானிஸ்தானில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் என்னப்பா பிரச்சனை? கொரியாவில் என்ன நடந்தது? பாலஸ்தீனப்போரில் அண்ணனின் பங்கு என்ன? பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது சரி – எதுக்குய்யா கட்டினாங்க? பாக்கிஸ்தான் ஆஃப்கானிஸ்தானைத்தான ஆதரித்திருக்கவேண்டும்? எதுக்கு அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறது? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதற்கான அத்தனை விடைகளும் உங்களுக்கு இந்த ஒரு புத்தகத்தில் கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விடைகளுக்கான தேடலின் தொடக்கமாக இந்த புத்தகம் இருக்கக்கூடும்.

1500 இல் ஆரம்பித்து இன்றுவரையிலான அமெரிக்க சரித்திரத்தை அலசுகிறது இந்த புத்தகம். வரலாற்று நூலை இவ்வளவு சுவராஸ்யமாக எழுதமுடியும் என்று நான் நினைத்ததில்லை. பா.ராகவன் செய்திருக்கிறார். மூன்று நாட்கள் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்.

அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை – கட்டாயத்திலும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னுள் இருந்தது. அது ஏன் அமெரிக்கா மட்டும் ஜொலிக்கிறது என்கிற கேள்வி. இதற்கும் அமெரிக்காவின் சரித்திரம் வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. ஐநூறு ஆண்டுகளுக்குள் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? கல்தோன்றி முன்தோன்றா டாஸ்மாக்குடி காலத்தைச் சேர்ந்த நம்மால் ஏன் முடியவில்லை? ஒவ்வொரு இந்தியனிடமும் பெருமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் எப்படி இருந்த நாம், இப்படி ஆகிட்டோம் என்பதுதான். ஆனால் ஏன் இப்படி ஆனாம் என்று நினைத்திருப்போமா? அதற்கு இந்திய வரலாறு (நடுநிலமையான; உண்மை பேசும்; வரலாற்றையும் கற்பிதங்களையும் போட்டுக்குழப்பாத) வேண்டும்.

இல்லையெனில், வளர்ந்த நாடு எப்படி அதைச் செய்தது என்று பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்பொழுதே சாக்கடை கட்டியிருக்கிறோம். அப்போதே பொது தண்ணீர் சேமிப்பு – விநியோக திட்டம் இருந்திருக்கிறது. தெற்கே முத்து வியாபாரம் கண ஜோராக நடந்திருக்கிறது. வடக்கே சந்தைகள் கொழித்திருக்கின்றன. நமது மொழி ஆயிரக்கணக்கான வருஷத்து பழமையானது. பாரதியார் கனவு கண்டார். காசியில் பேசினால் காஞ்சியில் கேட்கவேண்டும் என்றார். ஆனால் ரேடியோ கண்டுபிடித்தோமா நாம்? ராவணன் சீதையை ஆகாய விமானத்தில் வைத்து தூக்கிச்சென்றான் (கதை தான் என்றாலும்) என்று படித்து உருகுகிறோம். விமானம் கண்டுபிடித்தோமா? ஏன் முடியவில்லை? அமெரிக்காவால் ஏன் முடிந்தது?

சிம்பிளா சொன்னா: நம்ம கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவங்ககிட்ட?

இந்த கேள்வி உங்களுக்கு இருக்குமேயானால் இந்த புத்தகத்தைப் படிப்பது அவசியம். பணக்காரர்களை நாம் எட்ட இருந்து பார்க்கும் வரை அவர்களது ஜொலிப்பு அட்டகாசமாய் இருக்கும். அவர்களுடன் பழகிப்பார்த்தால் தான், அவர்களது உண்மை நிலவரம் புரியும். பணக்காரர்களாக இருப்பதற்கு, பணத்தை சம்பாதித்துக்கொண்டேயிருப்பதற்கு, அவர்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது என்பது புரியவரும். பணக்காரர்களாகவே இருப்பது எளிதல்ல. பணக்காரர்களுக்குக் கூட பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு என்ன செய்தால் பணம் காய்த்துக்கொண்டேயிருக்கும்?

எங்கேயும் பிஸினஸ். எதிலும் பிஸினஸ். ஆயிரத்தில் ஒருவனில் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட கார்த்திக்கு, பார்ப்பதெல்லாம், பீரும் பிரியாணியாகத் தெரிவது போல – எதிலும் பணத்தைப் பார்ப்பது. மனிதநேயத்தையும் பிஸினஸையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒழுக்கவிதிகளையும் பிஸினஸையும் மிக்ஸ் செய்யக்கூடாது. இது சரியா? செய்த தவறுகளை பணத்தை வைத்து மறைத்துவிடு.

 அயல்நாடுகளுடன் உறுதியான, வளமான வர்த்தகத் தொடர்புகள் இருந்தாலொழிய அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி உட்காரவைக்க முடியாது என்பது ரூஸ்வெல்டுக்குத் தெரிந்தது.

ஆனால் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய தேசங்களுக்குள்ளேயே பல அமெரிக்காவுடன் நட்பு-பகை என்று மாறிமாறி உறவாடிக்கொண்டிருந்தன. பிஸினஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டால் இந்த உறவு சமாச்சாரமெல்லாம் சரிப்படாது என்று அப்போதைய அமெரிக்க அரசு கருதியது.

இப்படி சர்வாதிகார தேசங்களையெல்லாம் கம்யூனிஸ்டு சோவியத்துக்கு எதிரானா மனோபாவத்தை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்தகைய தேசங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்து தனது வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சோவியத்துக்கு எதிரான அத்தேசங்களின் கோபங்களைக் கொம்பு சீவிவிடலாம் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

இது ஒரே கல்லில் ரெண்டு தேங்காய் சமாச்சாரம். பிஸினஸுக்கு பிசினஸும் ஆச்சு. சோவியத்தையும் கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெடுநாளைய ஆசைக்கும் வடிகால். அதுவும் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ஜெர்மனியையும் ஜப்பானையும் தூண்டிவிட்டுச் செயல்படுவதால் தனக்கு நேரடியாக வில்லன் இமேஜ் வந்து சேராது.

சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரம் சீர்படத் தொடங்கியது இப்போதுதான். கொஞ்ச நஞ்சமல்ல. பல லட்சக்கணக்கான ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களோ கப்பல் கப்பலாக அனுப்பிவைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட அமெரிக்காவே ஒரு கொல்லன் பட்டறை மாதிரித்தான் இருந்தது. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பில்லியன் கணக்கிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால் அவரே [ஹிட்லர்] கூட நினைத்துப் பார்த்திராத விசயம், அமெரிக்கா மீதான ஜப்பானின் அந்த திடீர் தாக்குதல. பேர்ல துறைமுகத் தாக்குதல். . எப்படிப் பார்த்தாலும் ஜப்பானின் எழுச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. ராணுவ ரீதியில் அந்த தேசம் பெரிய அளவில் வளர்ந்து நிற்க மறைமுகமாக நிறைய பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்திருந்தது….

ஆனால் இப்படி க்ளோசப்பின் நேசப்பிணைப்பாக இருந்த இரு நாடுகள் ஏன் தாக்கிக்கொண்டன? எப்படியிருந்தாலும் இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர். அணுகுண்டு போடுவதென்றால் ஜெர்மனி மீது தான் அமெரிக்கா போட்டிருக்கவேண்டும் – ஆனால் ஏன் துக்கனூண்டு ஜப்பான் மீது போட்டது? பொதுநலமா? “குண்டு போட்டது பெருமையா கடமை ப்ரோ”ன்னு உலகநியாயம் பேசினாலும், குண்டுக்குப்பின் இருந்தது, வர்த்தக போட்டி. பொறாமை. ஆற்றாமை. ஏன்? என்ன ஆற்றாமை? ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அப்படியென்ன உள்குத்து?

குமுதம் ரிப்போர்ட்டரில் இந்தப் புத்தகம் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். வாரா வாரம் படிக்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தகமாக மொத்தமாக படிக்கும்பொழுது, அதுவும் வரலாறு, நன்றாகவா இருக்கும் என்ற எண்ணம் வருவது இயல்பு. நன்றாகத்தான் இருந்தது. மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அதற்குக் காரணம் பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை கலந்த நடை.

உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரைப்பற்றிப் பேசும்போது:

 இந்தப் பனிப்போரைப் பற்றி நமது பாடப்புஸ்தகங்கள் சொல்லுகிற விவரங்கள் எல்லாமே மிகவும் தமாஷானவை. கம்யூனிசத்தின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா கவலைப்பட்டது; அமெரிக்காவின் ஆயுத பொருளாதாரப் பெருக்கத்தைப் பார்த்து ரஷ்யா வெறுப்படைந்தது; அதனால் பனிப்போர் ஏற்பட்டது என்று ஒரு வாயில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

உண்மையில் புரோட்டா மாதிரி லேயர் லேயராக நிறைய சங்கதிகளும் , காரணத்துக்குள் காரணம், அதற்குள் இன்னொரு காரணம் என்று பூரணக்கொழுக்கட்டைகளாக உள்ளே பொதிந்து வைத்த மேட்டர்கள் மிக அதிகம்!

அடிமைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அடிகளாலானது. கசையடி. நிற்க வைத்து நூறு, நூற்றைம்பது என்று எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட கசையடிகள். கசையடிக்கு அப்புறம் உழௌப்பி. ஒரு தினத்தில் குறைந்தபட்சம் பதினெட்டு மணிநேரம் அவர்கள் உழைத்தாக வேண்டும். உழைக்கும் நேரமெல்லாம் அவர்களின் வெற்றுடம்பிலிருந்து சொட்டிக்கொணே இருப்பது வியர்வை மட்டுமல்ல; காயங்களிலிருந்து ரத்தமும் கூட.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான அத்தியாயம் பிரடரிக் டக்ளஸின் அத்தியாயம் தான்.

டக்ளஸின் கலிவித்தாகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அவரது சுயசரிதத்தில் டக்ளஸ் கையாண்டிருக்கும் மொழி, வாசிக்கும் போது பிரமிப்பூட்டக்கூடியது. வாழ்நாளில் ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாதவர், சேர்ந்தாற்போல் பத்துநிமிடம் உட்கார்ந்து பாடம் என்று எதையுமே படிக்காதவர், வெறும் கேள்வி ஞானமும் சுயமுயற்சியும் மட்டுமே கொண்டு எழுதப்படிக்கக் (அதுவும் பயந்து பயந்து, ரகசியமாக!) கற்றுக்கொண்டவர் அவர்.

அமெரிக்க கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு குடியேற்றம், தாய்நாட்டுக்கு எதிரான விடுதலைப் புரட்சி, ப்ரஸிடெண்ட்டுகள், அரசியல் கட்சிகள், அடிமை வரலாறு, அவர்களின் புரட்சி, பொருளாதார மேம்பாடு, உற்பத்திப்பெருக்கம், உற்பத்தி செய்த பொருட்களை விற்க சந்தைகள் பிடிப்பது, சந்தைகள் பிடிக்க பல குட்டிகரணங்கள் போடுவது, தில்லிமுல்லு செய்தது, ஆட்சியைக் கலைப்பது, கலைத்த ஆட்சியை தனக்குச் சாதகமாக நேர்செய்வது, பிறகு சந்தையை நிறுவுவது, தீவிரவாதிகளை உருவாக்குவது, பிறகு வேலை முடிந்தபின் அவர்களை நடு ராத்திரியில் வீட்டிற்குள் புகுந்து அழித்தொழிப்பது, பிள்ளையைக் கிள்ளுவது, தொட்டிலை ஆட்டுவது என்று பல திருவிளையாடல்கள் புரியும் அமெரிக்கசிவனின் நடன-பாவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பது அவசியம்.

உலக வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s