பாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா? இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்கள் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.
ஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.
இவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.
இரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்பரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.
இது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும்? இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.
நாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.
இருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)