டெஸ்லாவிற்கு இந்த வருடம் சோதனைக் காலம்

தொடர்ச்சியாக உற்பத்தி தாமதமாவதால் டெஸ்லாவின் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தான் தனது அசுர வளர்ச்சியினால் வாகனத் தொழில் துறையையே முற்றிலும் டெஸ்லா மாற்றப் போகிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆடம்பரக் கார்கள் வாங்குபவர்களிடையே பேட்டரியில் ஓடக் கூடிய டெஸ்லாவின் மாடல் எஸ் ரக செடான் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனுடைய தானியங்கி கார் ட்ரைவிங் சாஃப்ட்வேர் மற்ற போட்டியாளர்களை விட பல மடங்கு சிறந்ததாக இருந்தது. எலான் மஸ்க், டெஸ்லாவின் சி.ஈ.ஓ, இன்னும் விலை குறைந்த மாடல் எஸ் கார்கள் இன்னும் துரிதமாக உற்பத்தியாகி சுற்றுப்புறச் சூழலை கொஞ்சமும் சேதப் படுத்தாமல் (ஜீரோ எமிஷன்) சாலைகளில் ஓடும் என்று கூறியிருந்தார்.

வால் ஸ்ட்ரீட் உணர்ச்சிமிகு எழுச்சி கொண்டது. கார் உற்பத்தியில் நூறாண்டு காலம் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸை விட சந்தை மதிப்பில் சட்டென உயர்ந்தது டெஸ்லா.

ஆனால் அதற்கப்புறம் சவாரி அவ்வளவு எளிதாக இல்லை!

மாடல் 3இன் அறிமுகம் நிறைய சிறு தவறுகளையும், தாமத்கங்களையும் சந்தித்ததது. எலான் மஸ்க் இதனை “உற்பத்தி நரகம்” என்று எரிச்சலாகக் குறிப்பிட்டார். தானியங்கி கார் தயாரிப்பின் சொல்லிக்கொள்ளும் படியாக முன்னேறாமல், ஒவ்வொறு காலிறுதியிலும் முதலீட்டாளர்களின் பணத்தை வேகமாக இழந்து வருகிறது.

போன வாரம் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது மூடீஸ் (Moody’s). மூடீஸ், டெஸ்லாவில் கடன் மதிப்பீட்டை தரமிறக்கம் செய்தது. டெஸ்லா பணத்தை தாறுமாறாக செலவழிப்பது கவலையளிக்கிறது என்று காரணம் சொன்னது. ஆனால் ஆய்வாளர்கள் இந்தக் கவலையெல்லாம் ஜுஜூப்பி, டெஸ்லாவிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் பணம் மொத்தமும் கரைந்துவிடுமே, என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

டெஸ்லாவினுடைய ஷேர்கள் கடந்தவார செவ்வாய்க்கிழமை 8 சதவிகதமும் புதன்கிழமை 8 சதவிகிதமும் கீழிறங்கியது. அப்புறம் கொஞ்சம் மீண்டாலும் தனது மதிப்பில் ஏறக்குறைய கால் பங்கை இழந்துவிட்டது. டெஸ்லாவின் பாண்டுகளின் சரிவும் வாங்கிய கடனை டெஸ்லாவால் திருப்பிச் செலுத்த முடியுமா என்கிற கேள்வியை நியாயப்படுத்துகிறது.

டெஸ்லாவின் சமீபத்திய பிரச்சனைகள் அதன் வரவு செலவுக் கணக்குகளையும் தாண்டியது. சமீபத்தில் கலிஃபொர்னியாவில் நடந்த ஒரு கொடூரமான விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்த விவகாரத்தை ஃபெடரல் போலீஸ் கையிலெடுத்திருக்கிறது. விபத்து சமயத்தில் தானியங்கி (auto pilot) செயல்பாட்டில் இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறது போலீஸ். ஃப்லோரிடாவில் 2016இல் நடந்த விபத்தில் ஒட்டடுனர் கொள்ளப்பட்ட பொழுது தானியங்கி செயல்பாட்டில் இருந்தது. ஆனால் தானியங்கி மென்பொருளில் குறைகள் இல்லையெனவும் அதைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து ஓட்டுனரை தடுப்பதில் தான் பிரச்சனை என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.

மேலும் கடந்த வியாழன் அன்று, 2016 ஏப்ரலுக்கு முன் தயாரித்த 123000 மாடல் எஸ் கார்களை, பவர் ஸ்டியரிங் மோட்டாரை அதன் இடத்தில் வைத்திருக்க உதவும் போல்ட்களை மாற்றவேண்டும் என்று கூறி டெஸ்லா திரும்பப்பெற்றுக் கொண்டது. அந்த போல்ட்கள் துருப்பிடித்து உடைந்து போகுமாம், அப்படி உடைந்தால் auto pilot வேலை செய்யாது, ஓட்டுநர் தான் ஓட்ட வேண்டும்.

டெஸ்லாவின் இந்த பிரச்சனைகள் நிறுவனத்துக்கு மட்டுமின்றி அதன் சீ ஈ ஓ எலான் மஸ்க்கிற்கும் பின்னடைவு தான். கனவு கண்டால் மட்டும் போதாது, அந்தக் கனவை உண்மையாக்க எவ்வளவு தூரம் நீங்கள் இறங்கி வேலை செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எலான் மஸ்க் ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதைத் தாண்டி அந்தச் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பவராகவும் கருதப்பட்டார். முற்றிலும் புதிய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கிய சூத்திரதாரி, உலத்திலேயே மிக பெரிய பேட்டரி உற்பத்திசாலைக்கு கட்டுமானப்பணி தொடங்கிய விஷனரி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்கிற துணிகர முயற்சியால் வின்னில் (நிஜ) ராக்கெட் செலுத்திய (நிஜ) செயல் தலைவர் என்று எலான் மஸ்க் கொண்டாடப் பட்டார்.

நிறுவனம் தொடங்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் லாபம் பார்க்காமல் இருந்தாலும், வாடிக்கையாளர்களும் சில முதலீட்டாளர்களும் டெஸ்லாவிற்கு உற்சாகமான ஆதரவையே கொடுத்துவந்திருக்கின்றனர். புதிய மாடலை அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எலான் மஸ்கின் ஒவ்வொரு புதிய அறிவிப்பையும் பல ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றிருக்கின்றனர். மாடல் 3க்கான எதிர்பார்ப்பு எகிறி கிட்டத்தட்ட 400,000 வருங்கால டெஸ்லா உரிமையாளர்கள் ( என் நண்பன் உட்பட) ஆயிரம் டாலர் முன் பணம் செலுத்தி முன் பதிவு செய்தனர்.

டெஸ்லா நிறைய திருப்புமுனைகளை ஏற்படுத்தி ஏற்கனவே வாகன உற்பத்தியிலிருக்கும் சில கம்பெனிகளின் நெடு நாள் உறக்கத்தை நிறுத்தி விழித்துக்கொள்ள செய்தது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் மின்சாரக் கார்களுக்கு ஒரு பெரிய சந்தை இருப்பதையும் அதற்கு பெரிய விலை கொடுக்கவும் வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதையும் டெஸ்லா படம் பிடித்துக் காட்டியது. ஐஃபோன் காற்றிலேயே புதிய மென்பொருளை தரவிறக்கி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதைப் போன்று கார்களும் தங்களை எளிதாக மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை செய்துகாட்டிய முன்னோடி.

கார் ஓட்டுநர்களுக்கு – விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு – உதவும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க தீவிரமான போட்டியை டெஸ்லாவின் auto pilot தான் ஏற்படுத்தியது. இன்று ஜென்ரல் மோட்டார்ஸும், கூகுலின் கிளை நிறுவனமான வேமோவும் (waymo) auto pilotஐக் காட்டிலும் மிக நவீன மென்பொருளைத் தயாரித்துவிட்டனர்.

GMCruise

ஜெனரல் மோட்டார்ஸின் ட்ரைவிங் வீலே இல்லாத கார்!

இப்படியான தருணத்தில் எலான் மஸ்க் வேறொரு சர்ச்சையையும் கிளப்பினார். அது வீடுகளுக்கு சோலார் பேனல் தயாரிக்கும் கம்பெனியான சோலார் சிட்டியை, டெஸ்லா வாங்க முயற்சித்தது. சோலார் சிட்டியின் நிறுவனர் எலான் மஸ்கின் நெருங்கிய உறவினர்கள்.

சில முதலீட்டாளர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர் ஏனென்றால் சோலார் சிட்டியின் சேர்மேனாகவும் எலான் மஸ்க் இருந்தார். ஒரு கம்பெனியில் சேர்மேனாக இருந்து கொண்டு தன்னுடைய வேறு கம்பெனியை வைத்து அந்தக் கம்பெனியை வாங்குவதென்பது conflict of interest அதாவது உள்குத்து. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த கடந்த வாரம் ஒரு நீதிபதி அனுமதி அளித்து விட்டார்.

எலான் மஸ்க் இந்த வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை வைத்து அவருக்கான சம்பளத்தை ஜனவரியில் அறிவித்தது டெஸ்லா. எல்லா இலக்குகளையும் அவர் அடைந்தால் அவருக்கு 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஷேர்ஸ் கிடைக்கும்.

ஆனால் டெஸ்லா தொடர்ச்சியாக அதன் இலக்கை அடையமுடியவில்லை. 2017இல் மாடல் 3 வெளிவந்து, 2018 இல் 500,000 கார்கள் விற்கப்படும் என்று மஸ்க் சொன்னார். பின்னர் 2017இல் 100,000 என்று குறைத்துக் கொண்டார். பின்னர் அதிலிருந்தும் பேக் அடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் டிசம்பருக்குள் மதந்தோறும் 20,000 கார்கள் தயாரிக்க முடியும் என்றும் பொதுமக்களுக்கு உற்பத்தி குறித்த எந்தக் கவலையும் தேவையில்லை என்று சொன்னார்.

ஆனால் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் டெஸ்லா 2424 மாடல் 3 கார்களே தயாரித்தது. சமீபத்திய இலக்கில் வாரத்திற்கு 2500 மாடல் 3 கார்கள் தயாரிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது. இந்த வருடம் முதல் காலாண்டில் எவ்வளவு உற்பத்தி நடந்திருக்கிறது என்று ஏப்ரல் முதல் ஒரு வாரங்களில் தெரிந்துவிடும்.

மாடல் 3 தான் மிக முக்கியம். டெஸ்லா உற்பத்தியைப் பெருக்கி விற்பனையைக் கூட்டி வருவாயை பெருக்க வேண்டும், அப்பொழுதுதான் வாங்கின கடனை அடைத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரமுடியும். மேலும் டெஸ்லாவின் அடுத்த இலக்கான தானியங்கி லாரிகளில் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டாளர்களிடம் ரெண்டு பில்லியன் டாலர்கள் பெற்றால் தான் உற்பத்திக்கும் முதலீட்டுக்கும் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருக்கும் என்று மூடீஸ் கணக்கிட்டுள்ளது. இந்த வருடத்தின் இருதியில் 200 மில்லியன் டாலரும் 2019 இன் தொடக்கத்தில் 900 மில்லியன் டாலரும் மாற்றத்தக்க பத்திரங்களாக டெஸ்லா வைத்திருக்கிறது.

இந்த வருடக் கடைசியில் நிறைய பணம் டெஸ்லாவுக்குத் தேவைப் படும் என்பது நிச்சயம். சமாளிக்குமா டெஸ்லா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s