அந்த மிகவும் துரதிர்ஷ்டமான குரங்கனி ட்ரெக்கிங்கை ஏற்பாடு செய்த சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் நிறுவனர் பீட்டர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறார்.
குரங்கனி போலீஸ் அவர் மீது எஃபையார் பதிவு செய்து, முதல் குற்றவாளியாக சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது:
- செக்ஷன் 174
- செக்ஷன் 336 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும்படி நடந்து கொள்வது)
- செக்ஷன் 337 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடுவிளைவுக்கக் கூடிய தீங்கை செய்வது)
- செக்ஷன் 338 (மிக மோசமான காயங்களை ஏற்படுத்தி அதன் மூலம் உயிருக்கும் பாதுகாப்புக்கும் கேடுவிளைவிப்பது)
- செக்ஷன் 304(2) (கொடூரமான கொலை ஆனால் திட்டமிடப்பட்ட கொலை அல்ல)
சம்பவம் நடந்த அன்று போடி காவல் நிலையத்தில் போடப்பட்ட எஃபையாரில் பிரபு அளித்த வாக்குமூலத்தின் பேரில் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பில்லை என்றே இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஒரு தன்னார்வக் குழு, உறுப்பினர் சேர்க்கைக்கு யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ஒருவர் பலி
மேலும் மார்ச் 11இல் நடந்த குரங்கனி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த புதன் கிழமையன்று காலமானார். இறப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு.
பீட்டர் ஒரு ஃபிட்னஸ் பிரியர். ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை ஓடவும் நீந்தவும் மலை ஏறவும் ஊக்குவித்தவர். சென்னையில எங்க பாஸ் நீந்தறது? எங்க ஓடுறது? மலை ஏறுவதா சான்சே இல்லை என்று சொன்னவர்களுக்கு மனது இருந்தால் மார்க்கபந்து என்று செய்து காட்டியவர்.
குப்பைகளை கார்பரேஷன் கிளீன் செய்கிறதோ இல்லியோ இவர் க்ளீன் செய்தார். அடையார் ஆறாகட்டும், சென்னை கடற்கரையாகட்டும், நீர் நிரம்பிய குவாரிகளாகட்டும் இவர் அள்ளிய குப்பைகள் ஏராளம்.
படம்: சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஃபேஸ்புக் பேஜ்
இரத்த தானத்தை ஒரு பிரச்சாரமாகவே செய்து உறுப்பினர்களை ஊக்குவித்து தானம் செய்ய வைத்தவர். கடந்த சென்னை வெள்ளத்தின் போது கடுமையாக உழைத்து மக்களை கரையேற்றினார். மக்களுக்கு மறந்து போன உடல் உழைப்பை மீண்டும் கற்றுக்கொடுத்தவர். இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவார் என்று நம்புவோம்.