காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s