சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂
நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂
ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.
அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.
ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.
அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.
அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.
காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.
ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.
பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?
ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான். நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.
மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.
ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?