மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.

நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?

ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.

சம்பளம் போதவில்லையா? I dont think so.

இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?

1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.

நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.

The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.

ரஹ்மானும் பின்நவீனத்துவமும்

ஒரு முறை நானும் எனது நண்பரும் படம் பாக்க சென்றோம். அந்தப் படம் வங்காளி மொழியில் கபூர்ஷ்வா இனத்தவர்களைப் பற்றிய அண்டாகுஜ நாட்டில் எடுக்கப்பட்ட குறுஞ்செய்திப் படம். ரஹ்மான் இசையமைத்திருந்தார். என் நண்பர் பெயர் ஜாஷி. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் பொழுது இந்தப் படத்தில் எந்தப்பாடல் ஹிட் ஆகும் என்றேன். நீ பிரம்மத்தை ஒத்துக்கொள்வாயாக என்றான் என் நண்பன். நான் சொன்னேன் ஓம் அப்படியே ஆகுக. கத் மத். மேலும் என் நண்பன் கேட்டான் இந்தப்படத்தில் எந்தப்பாட்டு ஹிட் ஆகும் என்று. நான் சொன்னேன் இந்தப்படத்தில் தான் பாட்டே இல்லியே, இது ஒரு குறுஞ்செய்தி படமாச்சே என்றேன். அதற்கு அவன் சொன்னான் நீ பிரம்மத்தின் மூலமாக பார்த்து சொல்வாயாக என்றான். அப்படியானால் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ பாடல் தான் ஹிட் ஆகும் என்றேன் நான். அவன் எப்படி சொல்கிறாய் என்றான். இதில் தான் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோன்னு பின் நவீனத்துவமான வரிகள் இருக்கு அதனாலத்தான் இந்தப்பாடல் ஹிட்டாகும்ன்னு சொல்றேன் என்று சொன்னேன் . ஒட்டகத்த கட்டிக்கிறதுக்கும் கெட்டியாக ஒட்டிக்கிறதுக்கும் பின்நவீனத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற மிக மிக விந்தையான கேள்வியை அவன் கேட்டான். அவன் அப்படிக்கேட்டிருக்கக்கூடாதுதான். பின் நவீனத்துவம் பாடல் வரிகளில் இல்லை, அவர் அவர் யோசிக்கும் முறையில் தான் இருக்கிறது என்கிற விளக்கத்தை அவனுக்கு கொடுத்தேன், மேலும் அவர் இசையமைத்த விதத்தில் தான் பின்நவீனத்துவம் இருக்கிறது என்றேன். புரிந்துகொண்ட அவன் ஆம் அப்படியே ஆகுக என்றான்.

வீட்டுக்கு சென்றவுடன் அந்த மடப்பய மவனான என் நண்பன் மேலும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக கீழே இருக்கும் சுட்டியையும் ஈ மெயிலில் பின் நவீனத்துவமாக அனுப்பினேன்:
இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.

மற்றொரு நண்பர், அவர் காங்கிரஸ்காரர். அவர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்கிற விந்தையான உண்மையை எனக்கு உணர்த்தினார். இந்த சுட்டியையும் எனக்கு அளித்தார்:

Anyway, Congrats தல. மேலே உள்ளதெல்லாம் பாத்தீங்கல்ல. இனியும் என்னென்ன சொல்லுவாய்ங்க பாத்திட்டே இருங்க. சாக்கிரதையா இருங்க.

சிம்புதேவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?

இப்பொழுது சா·ப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறான சம்பளம் கிடைப்பதில்லை, அதனால் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்பது போன்ற காட்சிகள் வைப்பது தமிழ் சினிமாவுக்கு வழக்கமாகப்போய்விட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறான காட்சிகள் வைத்தால் வரி விலக்கு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறதா என்ன?

அறை எண் 305இல் கடவுள் படத்தை இன்று வசந்தம் சேனலில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜாவா சுந்தரேசன் என்கிற சாப்ட்வேர் துறையைச் சார்ந்த நபரைப் பற்றிய காட்சிகள் அதிகம். நேரடியாகவே அவர் வாங்கும் மொத்த சம்பளம் அந்த மேன்சனில் குடியிருப்பவர்களது மொத்த சம்பளத்தை விட அதிகம் என்று அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் குறிப்பிடுகிறார். BSc Computer Science படித்த அவர் 85000 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது, BBA படித்த படத்தின் ஹீரோ 4000 ரூபாய் சம்பளத்துக்கு இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்றோரு வசனமும் வருகிறது. இதில் செம கடுப்பான நம்ப ஹீரோ ஜாவா சுந்தரேசனின் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருக்கும் மேலாளரிடம் இதே கேள்விகளை கேட்டு, இனி எப்படி நீங்கள் சம்பாதிப்பீர்கள் பார்ப்போம் என்று, கேலக்ஸி பாக்ஸின் துணையுடன், அனைவரது விரல்களையும் இல்லாமல் செய்துவிடுகிறார். விரல்கள் இல்லையென்றால் எப்படி கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வீர்கள், எப்படி இவ்ளோ பணம் சம்பாதிப்பீர்கள்?

அந்த சா·ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து மக்களின் விரல்களும் குட்டியாகப் போகும் அந்த காட்சியையும் அவர் சா·ப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களை பயன்படுத்தியே செய்திருக்கிறார், என்கிற விசயத்தை படத்தின் டைரக்டர் சிம்புதேவன் மறந்துவிட்டார். அது கிடக்கட்டும். சிம்புதேவன் இந்த படத்தை இயக்குவதற்கு எத்தனை சம்பளம் வாங்கினார்?

சிம்புதேவனுக்கு இது எத்தனையாவது படம்? அவர் பெரிய கார்ட்டூனிஸ்ட் என்பதெல்லாம் இருக்கட்டும். இது இவருக்கு ரெண்டாவது படம் தானே? எத்தனை மாதங்கள் உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்? 6 மாதங்கள்? குத்துமதிப்பாக ஒரு 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார் என்று வைத்துக்கொள்வோம். ஷங்கர் இதற்கும் குறைவானதொரு தொகை கொடுத்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு 25 லட்ச ரூபாய். மாதத்திற்கு எத்தனை லட்சங்கள் வருகிறது? நான்கு லட்சம்! இது சா·ப்ட்வேர் துறையினர் வாங்கும் பணத்தை விட மிகவும் அதிகம்.

இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு அவர் என்ன படித்திருக்கிறார். எனக்கு தெரியாது. என்னமோ படித்திருக்கிறார். அவர் படித்த அந்த படிப்பை படித்த அத்தனை பேரும் தமிழ் நாட்டில் அவர் வாங்குகிற சம்பளமா வாங்குகிறார்கள்? பிறகு ஏன் இவர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? கேட்டால், அவர் மூளையை (creativity) காரணம் காட்டக்கூடும்.

சிம்புதேவன் கார் வைத்திருக்கிறாரா? படத்தில் வரும் ஜாவா சுந்தரேசனைப் போல அவரும் இன்னும் ரெண்டு படங்கள் கழித்து ஹெலிகாப்டர் வாங்கக்கூடும்.

வெட்கிக் கூசச்செய்யும்..

கீழே இருக்கும் இந்த யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பார்த்து மனம் வேதனைப் பட்டிருக்கக்கூடும். வெட்கிக் கூசியிருக்கக்கூடும். தமிழனாக இருப்பதற்கு வெட்கிக் கூசியிருக்கக்கூடும்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் “இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாமென்று” சொல்லுகிறார்கள்..நான் சொல்லுவது : “என்னைப்போல emotional guys கூட பார்க்கக்கூடாது. you are warned!”

மாணவர்களுக்குள் சண்டைகள் நடக்கும். இந்த சண்டை மாணவர்களுக்குள் நடக்கும் சாதரண சண்டை போல தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. சண்டைகள் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட ஒருவர் இப்படி அடிவாங்குவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் போலீஸ் என்கின்ற ஒன்று அங்கே நின்று கொண்டிருந்ததே. அவர்கள் என்னத்தை செய்து கொண்டு இருந்தார்கள்? ஒருவரை பத்து பதினைந்து பேர் சேர்ந்து அடிக்கும் பொழுது அங்கேயிருக்கும் போலீஸ் அந்த சண்டையை தடுக்காமல், அடிவாங்குபவன் சாகும் வரை வேடிக்கை பார்க்கும் எனில்.. கேட்டால் permission கிடைக்கவில்லையாம்..அட போங்கப்பா.

அசிஸ்டென்ட் கமிஷ்னரை டிரான்ஸ்·பர் செய்தாகிவிட்டது. ஏழு மாணவர்களை அரெஸ்ட் செய்தாகிவிட்டது. Everything is ok now. ****. இன்னும் இது ஒரு மிகப்பெரிய கலவரமாக உருவாகக்கூடும் என்று சொல்லுவது ஒரு மிகப்பெரிய கலவரம் உருவாக வேண்டும் என்று நினைப்பதைப் போன்றது. எவ்வளவு பெரிய கலவரம் உருவானாலும், இந்த சம்பவத்தை, அடி தாங்காமல் மயக்கமுற்று ஒன்றும் செய்யமுடியாமல் கீழே சாய்ந்து விட்ட ஒரு மனிதனை, பெரிய பெரிய கம்புகளை வைத்து விடாமல் அடித்து, கடைசி எழும்புகள் நொறுங்கும் வரை அடித்து நொறுக்கும் காட்டுமிராண்டிக் காட்சியை போலீஸ் கண்டு களித்ததை இன்னும் கொஞ்சநாளில் நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் கூட மறந்துவிடும்.

எத்தனையோ விசயங்களை மறந்திருக்கிறோம்..இதை மறக்கமாடோமா என்ன?

http://in.youtube.com/watch?v=d5AsWevkj1A

இந்தியன் ஏர்லைன்ஸ் : புகார் பக்கம்

இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaints blog ஒன்று create செய்திருக்கிறேன். இந்தியன் ஏர்லைன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சென்று தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நிறைய புகார்கள் இருக்கும் பட்சத்தில் யாரேனும் முக்கிய புள்ளி அல்லது ரிப்போர்டருக்கு அனுப்பலாம். இது ஒரு முயற்சியே.

புகார்களை மேலதிகாரிகளுக்கும் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதே இந்த புகார் பக்கத்தின் நோக்கம். இந்தியன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து இந்த மாதிரி தவறுகளை செய்துகொண்டிருக்க முடியாது.

(நான் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட அன்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த நான், அன்று அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலரிடம், கையழுத்து வாங்கி வைத்திருக்கிறேன். மேலும் பெரும்பாலன நபர்களின் பாஸ்போர்ட் நம்பர்களும் இருக்கின்றன. புகார்கள் அதிகம் வரும் பட்சத்தில், இதையும் சேர்த்து வைத்து அனுப்பலாம்.)

இதை விட்டு விட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது டைகர் ஏர்லைன்ஸில் செல்வது தானே என்று கேட்பவர்களுக்கு, முடிந்த வரை இந்தியன் ஏர்லைன்ஸை மாற்ற முயற்சிப்போம். முடியாவிடில் பரவாயில்லை. நமக்கு ஏதும் நட்டமில்லை. நான் இந்த பதிவை டைப் செய்த நேரமும், zohoவை உபயோகித்து புகார் பக்கம் தயாரித்த நேரமும் மட்டுமே வீணடையும். பரவாயில்லை. இல்லையென்றால் மட்டும் என்ன செய்திருக்கப்போகிறேன்.

அடித்தால் மாங்காய் இல்லையேல் கல். நமக்கு பெரிதாக நட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் நமது புகார்கள் செவிமெடுக்கப்பட்டால் இந்தியன் ஏர்லைன்ஸ் திருந்த வாய்ப்பிருக்கிறது.

உங்களது ஈமெயில் ஐடியை மற்ற யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன். இறுதியாக மொத்த புகார்களும் சமர்பிக்கப்படும் போது மட்டுமே, உங்கள் ஈமெயில் சேர்த்து அனுப்பப்படும்.

புகார் பதிவு பக்கத்திற்கு இங்கே செல்லவும்:

பதியப்பட்ட புகார்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகார் பக்கத்தின் லிங்க் கொடுக்கவும்.

இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில் சென்ற இந்த பயணம், மிகுந்த வித்தியாசமாகவே இருந்தது. பயணச்சவுகரியங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. மூன்றரை மணி நேர பயணத்தில் சவுகரியங்கள் பெரிதாக தேவைப்படாது. சரியான நேரத்துக்கு, பாதுகாப்பாக, செல்லவேண்டிய இடத்துக்கு, சென்றால் மட்டுமே போதுமானது. சரியான நேரம் என்பது, இப்ப 9:10 க்கு விமானம் சென்னையில் தரையிறங்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், 9:10 க்கு exactly தரையிறங்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஒரு கால்மணி நேரம் அரைமனி நேரம் தாமதத்தை அனுமதிக்கலாம். காரணங்கள்: ஏதாவது எதிர்பாறாத விசயங்களால் – தட்பவெட்ப நிலை சரியில்லை, மிகுந்த மழையாக இருக்கிறது போன்ற காரணங்களால் – கூட தாமதமாகலாம். இந்த காரணங்கள் எல்லாம் தினமும் நடக்காது. என்றோ ஒரு நாள் அல்லது சில மாதங்களில் மட்டும் (மழைக்காலம், பனிக்காலம்) நடக்கும். மேலும் தொழில்நுட்ப பிரச்சனைகளும் விமானம் தாமதமாக செல்வதற்கு காரணியாக அமைந்து விடுவதுண்டு. தொழில்நுட்ப பிரச்சனை தினமும் ஏற்படுமா?

நான் முதன்முதலில் இந்தியன் ஏர்லைன்சில் பயணம் செய்த அன்று விமானம் ஒன்றரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதம். காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கப்புறம் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் போகவில்லை. சிங்கப்பூர் வந்ததற்கு அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு நாளும் தாமதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்றதில்லை, ஒரு முறை தவிர. ஆனால் அந்த முறை தாமதமானதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, பேக்கேஜ் செக் இன் செய்து விட்ட ஒரு நபர் கடைசி நேரத்தில், பயணம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். அவருடைய பெட்டிபடுக்கைகளை மீண்டும் எடுத்து வைப்பதற்கு தாமதமாகிவிட்டது. இது போன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், இல்லியா?

என் நண்பர்கள் யாவரும் இந்தியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்கள். அவர்களை வழியனுப்பி விட பெரும்பாலும் நான் செல்வதுண்டு. அத்தனை முறையும் இந்தியன் ஏர்லைன்ஸ் தாமதமாகவே புறப்பட்டது. ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ. நாங்கள் நண்பரை வழியனுப்பிவிட்டு MRT ஏறியிருப்போம், அவரிடமிருந்து கால் வந்துவிடும்: விமானம் ஒரு மணி நேரம் தாமதாம்! என்று. சிரித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

***

இந்த முறை இந்தியா சென்றிருந்த பொழுது நான் இந்தியன் ஏர்லைன்ஸில் புக் செய்தேன். எல்லோரும் இந்தியன் ஏர்லைன்ஸில் சென்று மிச்சம்பிடிக்கிறார்களே, நாமும் மிச்சம்பிடித்தால் என்ன என்று தோன்றவே, இந்த முடிவை எடுத்தேன். ஒரு மணி நேரம் தானே தாமதம். so what? இந்தியா சென்று மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையா கை எழுத்திடப்போகிறாய்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இல்லைதான்.

அந்த நாளும் வந்தது. நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் ஏர்போர்ட்டில் குழுமியிருந்தோம். என்னுடன் என்னுடைய கலீக் ஒருவரும் பயணம் செய்தார். நான், எனது கலீக் அவரது மனைவி, மற்றும் எங்களது நண்பர்கள் என அன்று மாலை அரட்டைக்கச்சேரி ஏர்போர்ட்டில் ஆரம்பமானது. நண்பர்கள் இருந்ததால் கொஞ்ச நேரம் கழித்து பேக்கேஜ் செக்கின் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டோம். இன்பாக்ட் இதை நான் எதிர்ப்பார்த்திருந்தேன். அரட்டைக்கச்சேரி தொடர்ந்தது. மீண்டும் தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை எத்தனை மணி நேரம் என்று அறிவிப்பு செய்யப்படவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் போல, காலவரையற்ற தாமதம். அப்படீன்னா, டிக்கட் மூனு மாசத்துக்கு முன்னவே எடுத்து, பர்சேஸ் செய்து, பெட்டி படுக்கைகளை எல்லாம் பேக் செய்து, நாளைக்கு இந்தியா போகக் போகிறோம் என்ற நினைப்போடு தூக்கம் வராமல் தவித்து, காலை ஆபீஸ் சென்று, இரண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து, நண்பனையும் அழைத்துக்கொண்டு, டாக்சி பிடித்து, ஏர்போர்ட்டில் வந்து அமர்ந்து, காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் என்ன கேனையனா?

***

எந்த ஸ்டுபிட் காரணங்களுக்காகவும் நீங்கள் உங்கள் விமானத்தை தாமதமாக கிளப்பலாம். எத்தனை மணி நேரம் என்று எங்களுக்கு சொல்லவேண்டுமா வேண்டாமா? எங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்களா மாட்டார்களா? அவர்களுக்கு நாங்கள் தோராயமாக ஒரு நேரம் சொல்லவேண்டுமா வேண்டாமா? உங்களைப் போல irresponsible fellows என்று எங்களை நினைத்தீர்களா? என் நேரம் மட்டுமல்ல, என் நணபர்களின் நேரமும் வீணாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் பெண்களும் அடக்கம். என்னை வழியனுப்பிவிட வந்தவர்கள் என்னை வழியனுப்பாமல் எப்படி போவார்கள்? முதல்லையே மூணுமணி நேரம் ஆவும் என்று சொல்லித் தொலைத்தால் அவர்கள் வீட்டுக்கு போவார்கள் அல்லவா?

எத்தனை மணி நேரம் தாமதம் என்றே சொல்லாதவர்கள், ஏன் தாமதம் என்றா சொல்லப்போகிறார்கள்?

***

நேரம் பறந்தோடியது. இன்னும் ப்ளைட் எப்பொழுது கிளம்பும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே மூன்று மணி நேரம் தாமதம். நானும் என் நண்பரும் மட்டும் கிளம்பி என்ன ஆச்சு என்று பார்க்கப்போனோம். அங்கே ஏற்கனவே பெரும் கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரித்ததில்: ப்ளைட் கேன்சல் செய்யப்பட்டது தெரியவந்தது.

அங்கிருந்த ஒரு நபர், எல்லோருக்கும் அடுத்தநாள் இதே நேரம் சிங்கப்பூரிலிருந்து கிளம்பவிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் லேட். சிலர் அதையும் கேட்டுக்கொண்டு சரி என்று உள்ளே தாங்கள் ஏற்கனவே செக் இன் செய்து விட்ட பேக்கேஜ் என்னவாகும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனக்கும் என் நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன இது இவ்ளோ அசால்டா ப்ளைட்ட கேன்சல் செய்துட்டு கூலா அடுத்தநாள் ப்ளைட்டுக்கு போ என்று சொல்கிறார்களே என்று நினைத்தோம். கேன்சல் செய்யப்பட்டதற்கு காரணம் மழையாம். ஏதோ சில தட்பவெட்ப காரணங்களால் ப்ளைட் தாமதம் அல்லது கேன்சல் செய்யப்படும். அது OK. அப்படி என்றால் அந்த விமான நிலையத்தில் இருந்து எந்த ப்ளைட்டும் கிளம்பாது. எல்லாமே கேன்சல் செய்யப்படும். atleast ஒரே இடத்திற்கு செல்லும் விமானங்கள் யாவும் கேன்சல் செய்யப்படும். இங்கே, சென்னைக்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது, மலேசியன் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு மட்டும் ஜலதோஷம் பிடித்து கடும் காய்ச்சல் கண்டு விட்டது, எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மற்ற விமாங்கள் எல்லாம் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டா போகிறது? அல்லது யாராவது குடை பிடிக்கிறார்களா?

பிறகு தான் தெரிந்தது: விமானம் பழுதடைந்து விட்டதாம். Technical Problem.

***

இதில் எங்களுடம் பயணம் செய்த ஒரு குழு (முதலமைச்சருடன் கோயம்புத்தூரில் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டது) ஏன் விமானம் பழுதடைந்தது உங்களுக்கு முன்னமே தெரியாதா? என்று அங்கிருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் representativeஐ கேட்ட பொழுது, அது எப்படி தெரியும்? விமானத்தை ஸ்டார்ட் செய்யும் போது தானே தெரியும் என்று அவர் அப்பாவியாய் பதிலளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தயாரானோம். அந்த முதலமைச்சருடன் மீட்டிங் குழுவும், நானும்,என் நண்பரும், அமேரிக்காவில் இருந்து தனது திருமணத்திற்கு செல்லும் மற்றொருவரும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டோம்.

எங்களது கோரிக்கை: நாளை இரவு வரை காத்திருக்க முடியாது. எங்களை இன்றே வேறு ஏதாவது ப்ளைட்டில் இந்தியாவுக்கு அனுப்பிவிடு. பயணிகள் நாங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அல்லது extend செய்தால் fine வசூலிக்கிறீர்களா இல்லியா?

நாங்கள் எவ்வளவு போராடினாலும் அந்த representative தான் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
***

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அந்த அமேரிக்க நபரின் திருமணம் நாளை மறுநாள். அதாவது நாளைக்கு அவருக்கு நிச்சயதார்த்தம். முதலில் இப்படி ஒரு சூழ்நிலையை அவரே உருவாக்கிக்கொள்ளலாமா? இவ்வளவு அசால்டா வரலாமா? வந்தாலும், இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கெட் போடலாமா? அவர் மிகுந்த டென்சன் ஆகிவிட்டார். மீட்டிங் குழு, தங்களுக்கு நாளை காலை மீட்டிங் இருக்கிறது என்றும் கண்டிப்பாக காலையில் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

இதில் காமெடி என்னவென்றால்: மீட்டிங் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த குழுவைப் பார்த்து கடுப்பான அந்த representative, உங்க மீட்டிங் பேப்பரை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சொல்ல, தடுமாறிய அவர்கள், தேடித் துலாவி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினர்.

***
எங்களுக்கு மீட்டிங் இருக்கு சேட்டிங் இருக்கும் அதப்பத்தி உங்களுக்கு என்ன? நீங்க சீட்டிங் பண்ணாம எங்களை ஏதாவது ஒரு ப்ளைட்டில ஏத்திவிடுங்கப்பா என்றே தோன்றியது. கடைசியில் சண்டை போட்டு, மறு நாள் அதி காலை சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் கிளம்பும், இந்தியன் ஏர்லைன்ஸில் இடம் கிடைத்தது.

அந்த அமெரிக்க நபர், மறு நாள் காலை பதினோறு மணிக்கு பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில், தனது மாமாவின் மூலம் டிக்கெட் ஏற்பாடு செய்தார்.

நான், என் நண்பர்களின் மூலம், பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல டிக்கெட் எடுக்க முற்பட்டேன். முடியவில்லை. சரி பெங்களூர் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

***

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் மறு நாளும் லேட். ஒன்பதுரைக்கு பெங்களூர் செல்லவேண்டிய விமானம், சரியாக பத்தே முக்காலுக்கு பெங்களூர் சென்டடைந்தது. நானும் என் நண்பரும் அந்த அமேரிக்க நபரும்அடித்து பிடித்துக்கொண்டு வெளியேறினோம். அந்த அமேரிக்க நபருக்கு இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் ப்ளைட். அவர் முகம் வெளுத்துவிட்டது. ஒர் வகையில் அவர் லக்கி: அவரது லக்கேஜ் தான் முதலில் வந்தது. அடித்து பிடித்து ட்ராலியில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். தூரமாக சென்று கைகாட்டி விட்டு சென்றார். அதற்கப்புறம் ப்ளைட்டை பிடித்தாரா இல்லியா என்பது தெரியவில்லை. பிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அதுவும் தாமதமாகத்தான் கிளம்பியிருக்கும். கண்டிப்பாக.

***

அடுத்தது லக்கேஜ் பிரச்சனை. என் கலீக்கினுடைய லக்கேஜ் வரவேயில்லை. அதில் தான் அவர் நகைகளை வைத்திருந்தார். பயந்து போன அவர், மானேஜரிடம் புகார் செய்ய, அவர் கண்டிப்பாக லக்கேஜ் உங்கள் வீடு தேடி வரும் என்று உறுதியளித்தார். விசயம் என்னவென்றால்: அவருக்கு போன இரண்டு முறையும் லக்கேஜ் ஒழுங்காக வந்து சேரவில்லை. இதை என்னிடம் பிரயாணம் முழுதும் புலம்பிக்கொண்டே வந்தார். சில சமயம் பயந்தால் அப்படியே ஆகி விடும் என்று சொல்வார்கள். உண்மையோ என்னவோ?!

அவருடைய மனைவிக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் அன்று இருந்தது. இந்தியன் ஏர்லைன்ஸின் irresponsible தனத்தால் அவருடைய மனைவிக்கு அன்றைய அப்பாய்ன்ட்மென்ட் கேன்சல் செய்யப்பட்டது. அவர் மலேசிய தமிழர், மனைவியின் சிகிச்சைக்காகவே சென்னைக்கு புறப்பட்டார். மீண்டும் அந்த பிஸியான டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவதற்கு இரண்டு நாள் பிடித்தது. அதுவரை சென்னையில் இவர் எங்கு தங்குவார்? முதலில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு போக பணம் இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவா கொடுக்கும்? சென்னையில் இரண்டு நாள் தங்குவதற்கு இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவோட தாத்தாவா பணம் கொடுப்பார்?

***

எனக்கும் முக்கியமான ஒரு வேலை இருந்தது. அது என் வருங்கால மனைவியைப் பார்ப்பது. மற்றும் சென்னையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைப்பது. இவர்கள் அன்றைய காலை என்னை பெங்களூரில் இறக்கிவிட்ட பொழுது, சென்னைக்கு செல்லும் எல்லா விமானங்களும் சென்று விட்டன. அடுத்த விமானம் சாய்ங்காலம் ஐந்து மணிக்கு தான். அன்றைய மதியம் முழுவதும், 200 ரூபாய்க்கு ஒரு வெளங்காத பிரியாணியை ஏர்போர்ட்டிலே சாப்பிட்டு விட்டு, நேரடியாக மதுரைக்கு டிக்கெட் எடுத்து, அன்று சாயங்காலமே மதுரைக்கு வந்து சேர்ந்தேன். என் வருங்கால மனைவியையும் பார்க்கவில்ல, நண்பர்களுக்கு கல்யாணப்பத்திரிக்கையும் வைக்கவில்லை.

***

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. ஹதம் கதம்.

***

என்னுடைய மனைவியின் ப்ளைட் டிக்கெட்டை extend செய்ய இந்தியன் ஏர்லைன்ஸில் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். முதலில் எப்படியேனும் என்னை திருப்பி அனுப்பிவிடவே அந்த லேடி முயற்சி செய்தார். லைக், உன் மனைவியின் பாஸ்பொர்ட் வேணும் என்றார். எதற்கு என்று கேட்டதற்கு, அவர் சிங்கப்பூருக்கு வந்த தேதி வேண்டும் என்றார். எனக்கு தெரியும் என்றபொழுது, அது தவறாக இருக்கும் முடியாது என்றார். பிறகு ஒரு வழியாக பேசி ஒத்துக்கொள்ளவைத்த பிறகு, only cash என்றார்.

சிங்கப்பூரில் மூலைமுடுக்கெல்லாம் eNets (eNets என்பது debit card system போல) accept பண்ணும் பொழுது, இவர்கள் மட்டும் only cash என்பார்கள். சரி cash எடுத்துவிட்டு வருகிறேன், என்று மீண்டும் வந்த வழியே நடந்து சென்று cash எடுத்துவிட்டு வந்தேன்.

இந்த முறை வேறு பெண்மணி. எனக்கு முதல் லேடிக்கு நடந்த பேச்சுவார்த்தையை இவர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

நான் சென்று உட்கார்ந்த உடன், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு, கூலாக சொன்னார்: 73 dollars. cash. only cash. only exact change. என் கிட்ட சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டு, சரியான சில்லரை இருந்தால் உட்கார், இல்லீன்னா, அப்படியே எழுந்து ஓடிப்போய்டு, என்பது போல ஒரு பார்வை பார்த்தார். (அவருடைய தோரணை இருந்ததே, அப்பப்பா!) Lucky me, என்கிட்ட சில்லரை இருந்தது.

***
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது அந்தப்பெண்ணின் மனப்போக்கு. I am master, you are servant என்பது போல. உண்மையில் யார் master, யார் servant? காந்தியடிகள் என்ன சொன்னார்? காந்தியடிகள் இருக்கட்டும்.

நான் 73 டாலர் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து டிக்கெட் extend பண்ண வருவதால் தான் அவருக்கு அந்த வேலை இருக்கிறது என்பதை அவர் மறந்து விட்டார். மறந்தே விட்டார்.

உண்மையிலே, சரியான சில்லரை கொடுக்கவேண்டும் என்பதை நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு – டவுன் பஸ்ஸில் கண்டக்டர் சொல்லிக் கேட்டது – அன்று தான் கேட்டேன்.

நான் அந்த பெண்மணியிடம் கேட்டது ஒன்று தான்: இந்த சில்லரை (கேட்க்கும்) பழக்கத்தை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து விட்டீர்கள் போல!

***

குமுதம் : ஜாங்கிரியா? வீங்கிரியா?

சமீபத்தில் குமுதம் செய்த போக்கிரி திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது, குமுதத்தின் ரசனை ஏன் இப்படி மாறிக்கொண்டே வருகிறது?

வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றிக்கூறும் போது.

“வழக்கம்போல அடி வாங்கும் பாத்திரத்தில் வடிவேலு. அண்ணே, மாத்துங்கண்ணே உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கறாங்கண்ணே. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் கலகல”

எதிர்மாறான விமர்சனம் இது. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் தான் கலகல இல்லை. அது தான் கொஞ்சம் நெளிய வைத்த காமெடி. “தண்ணீர் எங்கிருந்து வந்தாலும் பிடிப்பீங்களா” என்று வடிவேலு கேட்கும் போது “கலகல” சிரிப்பு வருவதைவிட எரிச்சலே வருகிறது. அதை எப்படி குமுதம் கலகல என்று சொல்கிறது? மேலும் படம் பார்த்த அனைவரும் சொல்லும் வடிவேலு ஆடும் சுட்டும் விழி சுடரே பாடல் பற்றி ஒரு கமெண்ட்டும் இல்லை. அவரது கெட்டப் பற்றியும் பேச்சில்லை. சன் டீவியில் காட்டப்பட்ட கிளிப்பிங்சைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்களோ?

அப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றியது:

“பிரகாஷ்ராஜுக்கு நடிக்க ஸ்கோப் இல்லை.”

அவர் என்ன படத்தோட ஹீரோவா? பாசமலரில் சிவாஜி சார் நடித்த கேரக்டர் போன்றா இதற்கு முன்னர் நடித்துக்கொண்டிருந்தார்? அவர் வேலையை அவர் கரெக்ட்டாக செய்திருக்கிறார். ஜெயிலில் அவர் அடிக்கும் லூட்டி ஒன்றே போதுமானது. அதைப்பற்றியும் குறிப்பிடவில்லை.

கடைசியாக:
சண்டைப்பிரியர்களுக்கு போக்கிரி ஜாங்கிரி மற்றவர்களுக்கு வீங்கிரி.

ஜாங்கிரி ஓகே அதென்ன வீங்கிரி? டீராஜேந்தர் மாதிரி வசனம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா குமுதம் சார்?

குமுதம் அண்ணே கொஞ்சம் ஒழுங்கா விமர்சனம் பண்ணுங்கண்ணே, உங்கள நம்பி நெறைய பேரு படத்துக்குப் போறாங்கண்ணே.

பிறகு அட்டையில் “ரஜினி வாய்ஸ் ரகசியம்” என்று போட்டிருந்தார்கள். உண்மையச்சொல்லுங்க சார், ரஜினி வாய்ஸ் ன்னா நமக்கு என்ன தோணும்? உள்ளே ஒண்ணுமே இல்லை. ரஜினிக்கு இருக்கும் பேஸ் வாய்ஸ் எப்படி வந்தது என்று சொல்கிறார்கள். காலையில் எழுந்து சீரகத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கவேண்டுமாம், அப்படி செய்தால் ரஜினியின் வாய்ஸ் நமக்கு வந்துவிடுமாம்.

ரஜினியின் வாய்ஸ் என்றால் எல்லோருக்கும் ரஜினி அரசியலில் கொடுக்கும் வாய்ஸ் என்று தான் சட்டென்று எண்ணத்தோன்றும். அவருடைய குரல் வளம் பற்றியா யோசிப்போம்? ஏதோ அரசியல் விசயம் போல என்று நினைத்து சிலர் குமுதம் வாங்கலாம் இல்லியா? அதுதான் ட்ரிக்.

வியாபாரம் செய்வதற்கு என்னென்ன தந்திரங்கள் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்.

நான் உஷிதமணி அல்ல

தமிழ் மொழிக்கு விக்கிப்பீடியா இருக்கிறது என்பது எனக்கு இன்று தான் தெரியவந்தது. டெக்னாலஜியில் மிகவும் பின் தங்கியிருக்கிறேன் என்பது தெரியவருக்கிறது. நன்றி:நற்கீரன். விக்கிப்பீடியாவின் வசதி/தனித்தன்மை என்னவென்றால், யார் வேண்டுமானாலும் ஒரு புதிய விசயத்தை (Topic) ஆரம்பிக்கலாம் என்பதும், பின் யார் வேண்டுமானாலும் அதை திருத்தி / மேலும் விசயங்களை சேர்க்க முடியும் என்பதே. இதில் பல நன்மைகளும்/சில தீமைகளும் இருக்கிறது. அது சரி, தீமையும்/நன்மையும் ஒரு சேர இல்லாமல் இருக்கும் விசயம் உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா என்ன?

தமிழில் விக்கிபீடியா இருக்கிறது என்று அறிந்தவுடன் நான் அதில் புதிதாக சேர்க்க நினைக்கும் வார்த்தை “தாமதம்”. சேர்த்ததும், அதில் ஏர்-இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்றுன் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தீமை? நன்மை?

என் நண்பர்கள் அனைவரும் ஏர்-இந்தியாவையோ அல்லது இந்தியன் – ஏர்லைன்ஸையோ உபயோகிப்பவர்கள் தான். அவர்கள் சென்ற அனைத்து முறையும் விமானம் தாமதமாக கிளம்பியது என்பது எதிர்பாராத அல்லது எதிபார்த்த ஒன்றுதான். கோயின்சிடன்ஸ் அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல (unintentional) என்றே வைத்துக்கொள்வோம். திட்டமிட்டு செய்யமாட்டார்கள் என்பதே என் உறுதியான கருத்து அல்லது நம்பிக்கை. அதுசரி, நம்பிக்கை தானே வாழ்க்கை. நான் ஒரே ஒரு முறை மட்டுமே ஏர்-இந்தியாவில் சென்றிருக்கிறேன். அப்பொழுது 20 நிமிடங்கள் தாமதம். ஏன் இப்படி?

20 நிமிடங்கள் தாமதமாகச் செல்வதால், என்னுடைய 20 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல்(?!) போகும், என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் பலருக்கு இந்த 20 பில்லியன் டாலரை விட 20 நிமிடங்கள் பெரியது. தாமதம் மிக மிக கொடிய விசயங்களில் ஒன்று. தாமதமாகச் செல்வதால், நாம் நமது நேரத்தை மட்டும் வீணடிப்பதில்லை, நம்மை சார்ந்தவர்களின் நேரத்தையும் அநியாயமாக வீண் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 200 * 20 நிமிடங்கள்?

சரி. பயணச்சீட்டு கொடுத்தபின், திடீரென்று விமானம் ஏன் ரத்து செய்யப் படுகிறது? பல காரணங்கள் இருக்கலாம். எப்பொழுதும் தாமதம் என்று அறிந்து யாரும் பயணம் செய்ய முன்வராததால், எதிர்பார்த்த கூட்டம் இல்லையென்று விமானத்தையே ரத்து செய்யலாம். செய்யுங்கள். விமானம் உங்களுடையது. வாழ்க்கை எங்களுடையது. விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டுமா இல்லையா? அந்த அறிவிப்பு ஒவ்வொரு பயணியையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமா இல்லையா?
சரி. என்னதான் நடந்தது?

ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானம் ஏறி, வேறு நாட்டுக்கு செல்கிறார். ரிட்டன் டிக்கெட்டும் சேர்த்துதான். பயணிக்கு வெளிநாட்டில் விசா ஒரு மாதத்திற்கு மட்டுமே. சரியாக விசா முடியும் நாளில் அவருக்கு ரிட்டன் டிக்கெட். ஆசை ஆசையாக, அயல்நாட்டில் உடன் தங்கியவர்களுக்கும், தாய்நாட்டில் பார்க்கப் போகும் சொந்தங்களுக்கும், பரிசுகள் கொடுத்து/வாங்கி கொண்டு விமான நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி, விமானம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. [இரு வாரங்களுக்கு முன்னரே ரத்து செய்தி வெளியாகியிருக்கிறது. ஏஜெண்ட் தெரிவிக்கவில்லை]. அவருக்கு விசா இன்றோடு முடிகிறது. நாளை தான் வேறு பிளைட். நாளை பிளைட்டுக்கு மாற்றித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்கள். நாளைக்கு சென்று விடலாம் தான். வேறு முக்கியமான் விசயங்கள் இல்லை தான். இமிகிரேஷனில் ‘வார்ன்’ மட்டுமே செய்வார்கள் தான். அதை போன் செய்து கேட்டாயிற்று தான். போனில் பேசிய இமிகிரேசன் பெண்மணி தன் பெயரை மட்டுமே கூறினாள் தான். ICயை சொல்லவில்லை தான். எல்லாம் நன்மைக்கே தான்.

ஆனால் நாளைவரை, அவர் ஒரு பிரச்சனையும் இல்லாமல், இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும்வரையில், அலைபாயும், ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும், அவர் மனதிற்கு யார் ஆறுதல் கூறுவது?

அவர் உலகநாடுகளில் பல இடங்களுக்கு சென்று வந்தவர். தனக்கு இவ்வாறு நேர்வது இதுதான் முதல் முறை என்றார்.

தவறு இருபக்கமும் இருக்கிறது. ஆனால் விழுக்காடு? அன்பர்களே உஷார்.

மற்றவர்கள் திருந்துவார்கள் என்று நினைப்பதைவிட நாம் திருந்துவது தான் உஷிதம் (நான் உஷிதமணி அல்ல!). பயணம் செய்யும் ஓரிரு நாட்களுக்கு முன், விமான நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

விதிகள்

விதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கிறதா? தண்டனை என்பது என்ன? இதுபோன்ற சில அதிமுக்கியமான கேள்விகள் என் தலையைக் குடைவது எதற்காக? கேள்விகள் சில சமயங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக்கொண்டு, கடும் புகை கக்கிச் செல்லும் தொடர்வண்டியாகின்றன. பல சமயங்களில் அந்த புகை பெறும்பாலும் ஆக்ஸ்சிஜனாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ஒரு வீட்டில் ஒன்றாய், இரத்த பந்தங்களாய் வாழ்பவர்களே பல சமயங்களில் விட்டுக் கொடுக்க மறக்கிறார்கள், மறுக்கிறார்கள். அவர்கள் ஒருமித்த ஒத்தக் கருத்தை அடைவது என்பது பெரும்பாலும் பகற்கனவே. பகற்கனவு பலிக்காதா என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். பலிக்காதுதான் அதுதான் விதி. கற்பிதம். அவ்வாறு இருக்க யாரோ ஒருவர் எப்பொழுதோ விதித்த விதிகளை அனைத்து மக்களும் ஒருசேரக் கட்டிப்பிடித்து கடைப்பற்ற அல்லது கடைப்பிடிக்க ஒத்துக்கொள்வது எவ்வாறு சாத்தியமாகிறது? தீர விசாரித்துப் பார்த்து அதன் ரிஷிமூலத்தைத் தொடர்ந்தோமேயானால், அந்த விதி யாரால் எப்பொழுது இடப்பட்டது, என்பதே புரியாமல், தெரியாமல், ஐன்ஸ்டினின் ரிலேடிவிட்டித் தியரியை ஸ்பெசல் டியூசன் வைத்து படித்தும் புரியாமல் முழிக்கும் மாணவனைப் போன்றே முழிக்க வேண்டிவரும்.

காலங்கள் மாறுகின்றன. தெய்வங்களும் தான். அந்தக் காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். கொற்றவை என்ற தெய்வம் இப்பொழுது எங்கே இருக்கிறது?

தூய்மைக்கு அளவுகோல் எதேனும் உண்டா? அவ்வாறு அளவுகோலைத் தயாரிக்க வேண்டுமெனில் தூய்மையை விளக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? தூய்மை வெறும் பறத்தூய்மை மட்டுமா? அல்லது அகத்தூய்மையையும் சேர்த்தது தானா?

சப்பானியர்களிடம் சொல்லி, மனிதன் அருகில் வந்தவுடன், அவன் தூய்மையை கண்டுபிடித்து, மூக்கைப் பிடித்துக் கொள்ளும், அல்லது வாந்தி எடுக்கும் அல்லது ஒரே ஓட்டம் பிடிக்கும் ரோபோட்டுகளை செய்யச் சொல்லலாம் தான். அதை வாங்கி தமிழகத்தில் மற்றும் கேரளாவில் இருக்கும் அனைத்துக் கோவில்களுக்கும் கொடுத்து விடலாம் தான். அதையும் மீறி அசுத்தமான மனிதனோ, மனுசியோ அல்லது நடிகையோ நுழைந்து விட்டாலும், அந்த தோஷத்தைப் போக்க, உடனுக்குடன் என்ன யாகம் செய்யலாம், எத்தனை அபராதம் விதிகலாம் என்று சொல்லும் ரோபோவையும் செய்யச் சொல்வது தான் அதி முக்கியம். அவ்வாறு செய்வதால் அசுத்தமான யாவரும் கோவிலுக்குள் புகாமல் தடுத்துவிடல்லம் தான். ஆனால் மனத்தூய்மையை எவ்வாறு அளப்பது? விதிகள்? அதுசரி, சில கண்ணப்பநாயனார்களை வைத்துக் கொண்டு புறத்தூய்மையையே விளக்க அல்லது வகுக்க முடியாமல் திணறும் பொழுது, அகத்தூய்மையின் விதிகளை யார் அளப்பது?

கோவிலுக்குச் செல்லும் பொழுது அனைவரும் ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்று சட்டம் இயற்றலாம். அப்படி செய்தால் சில் மீரா ஜாஸ்மின்களை கோவிலுகுள் புகுந்துவிடாமல் தடுத்துவிடலாம் தான், ஆனால் ரேஷன் கார்டில் அடையாளத்திற்கு புகைப்படம் கிடையாதே? மீரா ஜாஸ்மின், நயந்தாராவின் ரேஷன்கார்டை காண்பித்தால் என்ன செய்வது? அது சரி, நயன் தாராவை யாராவது தெரியாமல் இருப்பார்களா என்ன?

பேசாமல், இப்படிச் செய்தால் என்ன? வாக்களர் அடையாள அட்டை? ஏன் சிரிக்கிரீர்கள்?

பின் குறிப்பு:
மீராஜாஸ்மீன் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராயினும் :
அஞ்சப்பர் உணவு விடுதியில், மட்டன் சுக்காவை ஒரு கட்டு கட்டிவிட்டு, நேரே சிவன் கோவிலுக்குச் செல்லும், சிவனின் கண்மூடித்தனமான பக்தன் ஒருவன் எங்கள் ரூமில் இருக்கிறான். கேட்டால் கண்ணப்பனாயனாரைக் காட்டுகிறான். வந்தால் கேஸ் ஒன்று நிச்சயம். ஆனால் ஒன்று, அவன் நடிகையோ, நடிகனோ இல்லை!