போராடுவோம்

இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடித் தேடி
வெறகில் வெந்து சாவாய்
காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கு
லஞ்சம் கோடி
கோடி குமியுது
உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்

நிற்த்தாலும் மதத்தாலும்
பிரிந்துவிட்டோம்
மனிதாபிமானத்தை
நாமெல்லாம்
மறந்துவிட்டோம்
காசின் திருவிளையாடல் கண்டு
நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம்
தொலைத்துவிட்டோம்
உரிமையை
இழந்துவிட்டோம்
நாம் இறந்துவிட்டோம்

அலட்சியம்
ஏழையின் உயிரென்றால்
அலட்சியம்
பணந்தான் நோயின்
மருத்துவம்
மருத்துவமணையின் அரசியல்

உதவிசெய்யத் தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழுமிடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்

நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்கப்
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்கப்
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரைப்
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சுவரைப்
போராடுவோம்

போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள்
போராடுவோம்

*
ரஞ்சித்து ஆசம்யா ஆசம்..#காலா

ஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை

சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.

அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.

ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.

அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.

காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.

ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.

பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?

ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான்.  நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.

மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.

ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?

சவரக்கத்தி – ஒரு நிமிட பார்வை

மிஷ்கினின் லேட்டஸ்ட் படம். ஆனால் இதில் டைரக்டரில்லை. நடிகன்.அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்த அவரது தம்பி ஆதித்யா படத்தை இயக்கியிருக்கிறார். மிஷ்கின் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆனந்த யாழை மீட்டிய ராம் மீண்டும் நடிகராகியிருக்கிறார். காணாமல் போன பூர்ணா ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அஜல் குஜால் சாரி அரோல் கொரலி இசை அமைத்திருக்கிறார்.

ஓகே. மங்காவுக்கு இன்றோடு – மாலை ஆறு மணியோடு – பரோல் முடிகிறது. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும். டென்சனாக இருக்கிறான். மறுபடியும் அந்த நரகத்திற்குள் போக வேண்டுமே என்கிற ஆத்திரம் இருக்கிறது அவனுக்கு. பொதுவாகவே மங்கா ஆத்திரக்காரன். தாய் இறந்துவிட்ட பிறகு தாய்மாமனே மங்காவை வளர்க்கிறார். தாய்மாமன் கூடவே இருந்து மங்கா பைத்தியக்காரன், ஏதாவது செஞ்சு ஜெயில் தண்டனையை கூட்டிக்கப்போறான் என்று அவனைப் பாதுகாத்து எப்படியாவது எந்த வித அசம்பாவிதமும் சண்டையும் இல்லாமல், மாலை ஆறு மணிக்கு ஜெயிலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மங்காவோ நிஜ பைத்தியக்காரன். தாய்மாமனிடம் நீ கக்கூஸ் போறத இன்னொருத்தன் பாத்திருக்கானா, ஜெயில்ல பாப்பான்னு சொல்றான். சூப்பர் டயலாக். அதனால் ஐயோ மீண்டும் போய் அடைபடப் போகிறோமே என்கிற வெறி வேறு. மாமா என்ன கெஞ்சினாலும் காதில் விழமாட்டேனென்கிறது. வெளில போகலாம் என்று காரில் கிளம்புகின்றனர். பிச்சை ஒரு பார்பர். இரண்டு பிள்ளைகள், மனைவியின் வயிற்றில் இன்னொன்று. நிறை மாதம். மனைவியின் தம்பி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப்போகிறான், கையெழுத்து போட்டுட்டு வாழ்த்திட்டு வருவோம் வாங்க என்று மனைவி அழைத்ததும், தன் ஓட்டை ராஜ்தூத்தில் கம்பீரமாக இரண்டு பிள்ளைகளுடனும் நிறைமாத மனைவியுடனும் ஒரே பைக்கில் செல்கிறார். இவர் டீ நகர் ட்ராபிஃக் போலீஸ்கிட்ட மாட்டிக்கொடுத்திருக்கனும், இவரு கைய முறிச்சு, மனைவியை கீழ தள்ளி ரோட்லயே பிள்ள பெற வெச்சு, ரெண்டு பிள்ளைகளோட கால உடச்சு, கடைசில இவரையே ஜெயில்ல போட்ருப்பாங்க. மங்காவும் பிச்சையும் ஒரே ஜெயில்ல இருந்திருப்பாங்க. ஹூம். ஆனா பிச்சையின் ராஜ்தூத்தில் மங்காவோட கார் மோதிவிடுகிறது. பிச்சை கண்டபடி எல்லோரையும் திட்டிவிடுகிறார். ஓங்கி அடித்தும் விடுகிறார். அடித்தாரா இல்லியா என்பது லெஜண்ட். மங்காவின் முகத்தில் ரத்தம் வர, உடன் இருப்பவர்கள, அடிவாங்குனவனுக்கே இவ்ளோ ரத்தம் வருதே, அடி கொடுத்த கைப்பிள்ளையை சும்மா விடலாமா என்று ஏற்றிவிட, தாய்மாமா டேய் மங்கா அவன் அடிக்கலடா என்று வாதிட, மங்கா அடித்தவனின் கையை வெட்டாமல் மாலை ஜெயிலுக்குள் போகமாட்டேன் என்று சபதமெடுக்கிறார். பிச்சையின் கதியும் அவரது குடும்பத்தின் கதியும் என்னானது? மங்கா மாலை பரோலை முடித்து ஜெயிலுக்கு போனானா? பிச்சையின் மச்சானின் கல்யாணம் நடந்ததா? படம் முடியும் போது உங்களுக்கு தலைவலி வந்ததா? மீதியை படம் பார்த்து கதை தெரிஞ்சுக்கவும்.

ராமும் மிஷ்கினும் பொருத்தமாகவே இருந்தனர். பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்ட் ஆனால் படத்தின் காமெடி மூடுக்கு செட்டானார். படத்தை ப்ளாக் காமெடின்னு சொல்றாங்க. மிஷ்கின் கொஞ்சம் கறுப்பா இருக்கறதனாலேயும் கொஞ்சம் காமெடி இருக்கிறதாலேயும் அப்படி சொல்லிருப்பாங்களோ. டீக்கடையில் ராஜ்தூத் மாடல் நம்பர் கேக்கும் இடம் மட்டுமே குபீர். மற்றபடி கபீர். (ஒரு ஃப்லோல வந்திருச்சு)

ஆனால் கடைசிக்காட்சியில் குழந்தை அழும் சத்தம் கேட்ட உடன் பழைய பாரதிராஜா படத்தில ஹீரோயின் அப்படியே ஸ்டில்லக்கொடுத்து நிக்கிற மாதிரி ரெண்டு பேரும் அப்படியே கெடப்பதெல்லாம் ரணகளம். நான் என்னவோ ப்லிம் சிக்கிக்கிருச்சோன்னு நெனச்சேன். அரோல் கொரலியின் இசையில் மிஷ்கினே பாடியிருக்கும் தங்ககத்திபாட்டு செம என்று சொல்ல ஆசைதான். தம்பி படம்ங்கறதால ஓவர் அட்ராசிட்டியா இருக்கு. ஸ்மியூல்ல பாடி பழகியிருப்பாரோ? ஒய் பாஸ்?

படத்திலேயே எனக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் தாய்மாமாதான். சூப்பர் காஸ்டிங்.

இன்னும் பாக்கலீன்னா, பாருங்க. மெர்சல்லாம் பாத்தீங்கல்ல? அப்ப இதப் பாக்கலாம்.

நாச்சியார் – ஒரு நிமிட பார்வை

நாச்சியார்

பாலாவின் படம். அப்படியா என்ன? இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜோவுக்காகவா, ஜீவிக்காகவா அல்லது நமக்காகவா? ஒரு சீன் கூட சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

பொருளாதாரத்தின் அடிதட்டில் தினக்கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன். அதே போன்றொதொரு நிலையில் ஒரு சிறிய பெண். மைனர் பெண். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒரு எதிர்பாராத சந்திப்பில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வைத்து இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்தப் பெண் கருவுருகிறாள். மைனர் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு பையனை போலீஸ் கைது செய்கிறது. ஜோ கேஸுக்குள் எண்ட்ரி. டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததில் அந்தப் பையனுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. பிறகு யார் காரணம்? அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இந்த விஷயம் தெரிந்ததா? அந்தப் பையன் ஏற்றுக் கொண்டாரா? போன்ற அதிபயங்கர அதிநவீன முடிச்சுகளை பால அவிழ்த்தாரா?இல்லை ஜோ கண்டுபிடித்தாரா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

கெட்ட வார்த்தை பேசும், யாரையும் மதிக்காத எல்லோரையும் தூக்கிப் போட்டு மிதிக்கும் போலீஸாக ஜோ. போலீஸே சட்டத்தை மதிக்கலேன்னா பொது ஜனம் எப்படி மதிக்கும்? மேகம் கருக்குது பாடல் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அந்த ஜோவா இது என எனக்கும் கேட்க ஆசை தான். ஆனால் அதே ஜோ தான். ஜீவி? அனுராக் காஷ்யப் கூப்பிட்டிருக்கிறாராமே? ஆனால் பரவாயில்லை கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துபவர் அந்தச் சிறிய பெண் இவானா தான். துப்பறியும் கதையில் படம் பார்ப்பவர்களை குழப்புகிறேன் என்று அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டின் ஓனர் போலிஸையும் இழுத்து விட்டிருப்பது காமடி. ப்ரீ க்ளைமேக்ஸில் ஜோ வழங்கும் தண்டனை திகில் என்று சொல்ல ஆசைதான். க்ளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டி க்ளைமேக்ஸை விட பெரிய காமெடி.

வேறு வேலை இல்லையெனில் இன்னும் பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

ஆமாம் படத்திற்கு ஏன் நாச்சியார் என்று பெயர்?

ஒழிவு தெவசத்தே களி

சினிமா விமர்சனம்

Off-day-1140x687

சாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

ஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.

என்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.

Director_Sanal_Kumar_Sasidharan

சனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.

*

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.

மரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.

பேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.

ozhivudivasathe-kali-380

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.

“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின்  உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும்? இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்?

இத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.

நேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.

friends

விளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது? நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது? அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ? அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.

 

ஓவியர் பாரதிராஜா – கதைசொல்லி சிவக்குமார் – அட்லாண்டிஸ் வீடியோ

நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் பாரதிராஜா மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.

அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.

பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.

(படம்: விகடன்)
*

நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ  ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!

அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.

என்னை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு அட்வைஸ் (பெண்களுக்கு):
படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தவுடன் கூட வேலை பார்பவனையே (நல்லவனா என்று பார்த்து!) கல்யாணம் செய்துக்கனுமாம். இல்லீன்னா யாரோடவாவது அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்களாம்!

எப்பூடி!

இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.

அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.

*

ஜுலை 17 அன்று அமெச்சூர் வானாராய்ச்சியாளர் ஸ்காட், அட்லான்டிஸ் ஸ்பேஸ் ஷட்டிள், இன்டர்னேஷனல் ஸ்பேஸ் (ISS) ஸ்டேஷனில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஐஎஸ்எஸின் மேலே தெரிகிற வெள்ளையான பொருள் தான் அட்லாண்டிஸ். சோலார் பேனல்களையும் நீங்கள் பார்க்கமுடியும்.

*

குரல்வலைப் பக்கங்கள்

(உலகக்கோப்பை கிரிக்கெட், ஓலைச்சிலுவை, பழசிராஜா, நடுநிசி நாய்கள், யாரும் ஜெஸிக்காவைக் கொலைசெய்யவில்லை.)

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 350 வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் என் நண்பரிடம்; அவர் சிரித்தார். உண்மைதான். ஒரு ஓவர் இல்லை இல்லை ஒரு பால் கூடப் பார்த்து நிறைய வருடங்கள் ஆச்சு. நான்கு வருடங்கள். போன உலகக்கோப்பை நினைவிருக்கிறதா? அதில் இந்தியா பங்களாதேஷ் போட்டி நினைவிருக்கிறதா. சூடு சொறனை இருக்கிற கிரிக்கெட் ரசிகன் எவனும் அந்த மேட்சை மறக்கமாட்டான். அப்புறம் இந்தியா இலங்கை மேட்ச் ஞாபகம் இருக்கிறதா?

விடிய விடிய காலை நான்கு மணி (சிங்கப்பூர் நேரம்) வரை மேட்ச் பார்த்தோம். அப்பொழுது நான் பேச்சுலர். சச்சின், ராகுல், கங்கூலி என்கிற நட்சத்திரங்கள் நிறைந்த டீம். என்ன ஆயிற்று? முதல் சுற்றிலேயே வெளியேறினோம். தோல்வி. அதுவும் யாரிடம் கத்துக்குட்டி பங்களாதேஷிடம். பிறகு இலங்கையிடம். அந்த மேட்ச் இன்று வரை எனக்கு நினைவிருக்கிறது. டிராவிட் அவுட் ஆன கனம் என் கிரிக்கெட் பார்க்கும் ஆசையை குழிதோண்டிப் புதைத்தது. மறுநாள் எங்கள் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டது. அது தான் நான் பார்த்த கடைசி மேட்ச்.

கங்கூலியும், சச்சினும், டிராவிட்டும் அன்றோடு ரிட்டையர்ட் ஆகிவிட்டார்கள். வெற்றி தோல்விகள் சகஜம் தான். ஆனால் எப்படித் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். யாரிடம் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். கிரிக்கெட் பார்க்கவில்லையென்றாலும், செய்திகள் அவ்வப்போது கண்ணில் படும். இந்த முறை உலகக்கோப்பைக்கு முன் சேவாக் “இந்த முறை பங்களாதேஷைப் பழி வாங்குவோம்” என்று சொல்லியிருந்தார். எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. சட்டென்று எனக்கு தோன்றிய வசனம் “இந்த உலகம் இன்னுமாடா உங்கள நம்பிக்கிருக்கு” என்பது தான். இந்த வேர்ல்ட் கப் நாம் வாங்கலாம் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாங்கலாம். அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கலாம். ஆனால் என் அளவில் போன உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய அன்றே இந்திய கிரிக்கெட் டீம் கலைக்கப்பட்டாயிற்று. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளைகளப் படிக்கப்போடுங்கப்பா.

மா.சிவக்குமார் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்த உலகக்கோப்பையைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறார். நான் எப்பொழுதோ புறக்கணிக்கத் தொடங்கியாச்சு.

***

ஜெயமோகன் எழுதிய ஓலைச்சிலுவை படித்தீர்களா? சிறுகதை படிக்கும் பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக படியுங்கள். இதுபோன்ற ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை. கதை தோறும் பல தருனங்களில் நெகிழ்வாக உணர்ந்தேன்.

உலகப்போரில்; ப்ரான்ஸின் ஒரு போர் முனையில் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் சாமர்வெல். ராணுவ வீரர்கள் பலருக்கு கைகால்கள் சிதைந்து போயிருக்கிறது. குருதி வழிந்தோடி ஒரு கால்வாய் போலவே ஆகிவிட்டிருக்கிறது. அடிபட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிடில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சாமர்வெல் வெறி பிடித்தார் போல சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நேர உழைக்குப் பின்; கலைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்கிறார். அங்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் கால்கள் சிதைந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரன் தன்னைக் கூர்ந்து பார்ப்பது கண்டு துடுக்குற்று எழுகிறார். பரவாயில்லை ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சைகையில் சொல்கிறான் அந்த ராணுவவீரன்.

விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு:
During the Battle of the Somme in 1916 he was one of four surgeons working in a tent, while hundreds of wounded men lay dying on stretchers outside. On short breaks from surgery, he spoke with some of the dying men, and noted that not one asked to be treated ahead of the others.

எத்தகைய மனிதன் சாமர்வெல்?
1. எவரஸ்ட்டை இரண்டு முறை ஏறுவதற்கு கடும் முயற்சி செய்திருக்கிறார்.
2. மணிக்கனக்காக பேட்மிட்டன் விளையாடுபவர்.
3. இசையில் தேர்ந்தவர்
4. அறுவை சிகிச்சை நிபுணர்
5. தன் நாட்டு மக்கள் அல்லாத வேறொரு நாட்டின் மக்கள் மேல் அதீத அன்பு கொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பனித்தவர்.
6. தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்.

இது கதையாக இருந்தாலும்; பல உண்மைச் சம்பவங்களை வைத்துப் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த கதையின் நாயகனான சாமர்வெல்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியாவைப் பாருங்கள்.

வேறொரு நண்பர், அவ்ளோ நல்லாருக்கா? கதையில கடைசியா ட்விஸ்ட் இருக்கா? என்றார். இல்ல, அதனால படிக்க உக்காரும் முன் ஒரு பாக்கெட் ட்விஸ்ட் வாங்கி வைத்துக்கொண்டு உக்காருங்கன்னு சொன்னேன். கஷ்டம்.

***

பழசிராஜா பார்த்தேன். கேரள வர்மா பழசிராஜா. வரலாற்றுத் திரைப்படங்களை இப்பொழுது எடுக்கும் பொழுது எப்படி ஒரு நாடகத்தன்மை தெரிகிறதோ அதே போன்றதொரு நாடகத்தன்மை இதிலும் இருக்கிறது. அதிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். மம்முட்டியின் குரல் ஒரு பக்கம் கெட்கிறது. வாய் ஒருபக்கம் அசைகிறது. இதில சரத்குமார் வேற. சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு வர்றார். அவ்வளவுதான். சுமன் கூட ஒரு ·பைட். இதுக்குத்தான் என்னைய படத்தில வெச்சிருக்காங்கன்னு சொல்றார். கிட்டத்தட்ட. 🙂 ஒரு படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு பழசிராஜாவின் வாழ்க்கையில் சம்பவங்கள் இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

***

அப்புறம் த மோஸ்ட் வாண்டட் மூவி பார்த்தேன். அதாங்க: நடுநிசி நாய்கள். தியேட்டர்க்குள்ள இருந்து டிவிட்டினேன். தெரியாம படத்துக்கு வந்துட்டன்டா. இனிமே இந்தப் பக்கவே வர மாட்டேன்டான்னு. கொடுமை.

எனக்கு படத்தின் சப்ஜெக்டில் பிரச்சனை ஒன்றும் இல்லை. எடுக்கட்டும். ஆனா ஒரு த்ரில்லர் இப்படியாப்பா இருக்கும்? ஹாலிவுட் படங்கள் எல்லாம் பார்க்கறீங்க தான? அட்லீஸ்ட் கொரியன் படங்கள் கூட பார்த்ததில்லையா? பின்ன ஏன் இப்படி? லக்ஷ்மியம்மா லக்ஷ்மியம்மான்னு. இதுல மல்டிபிள் பர்சனாலிட்டி கதை வேற.

உங்களுக்கெல்லாம் திரில்லர் எதுக்கு? ஹீரோ சைக்கோ. சோ வாட்? அவர் எப்படி சைக்கோ ஆனார்ன்னு ஹிஸ்டரி ஆப் த இனிஸிடென்ட் ஜியோகரபி ஆப் த ப்ரசிடென்ட் சொல்லி முடிக்கறதுக்குள்ள படமே ஒரு முடிவுக்கு வந்திடுது. எதுக்குய்யா சைக்கோவ சைக்கோவாவே விட்றவேண்டியதுதான? எதுக்கு காரணத்தை தேடிக்கிட்டே அலையறீங்க? ஹீரோ ஒரு சைக்கோ. அவனோட வேலை சாம்பர குடிச்சு கத்திரிக்காய கடிக்கறதுதான்னு விட்றவேண்டியதுதான? அவன் எதுக்காக சாம்பார விடாம குடிக்கிறான்? அவனுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிச்சுப்போனதுன்னு ஏன் எங்களப் படுத்தறீங்க? செவன்னு ஒரு படம் வந்துச்சு பாத்திருக்கீங்களா சார். பாத்திருப்பீங்க. காக்க காக்கவில டப்பாக்குள்ள மண்டைய வெச்சு பார்சல் பண்றத வேற எங்கருந்து பிடிச்சீங்க? அப்பவே நினைச்சிருக்கீங்க நாமளும் வாழ்க்கையில ஒரு சைக்கொ த்ரில்லர் எடுக்கனும்னு. எடுத்துட்டீங்க. சரி. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போதா என் மனைவி ஊருக்குப் போகனும். அதனாலத்தான தியேட்டரில போய் உக்காந்தேன். இல்லன்ன போயிருந்திருக்க முடியுமா?! மிஸ் யூ டா ச்செல்லு. 😉

எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றை பெரிதுபடுத்தி எழுதினாத்தான் கதை. சினிமா. சிறுத்தையில கார்த்தி எப்படி போலிஸா சும்மா புகுந்து விளையாடறார். அப்படியா இருக்கு நம்ம ஊர்ல போலிஸ¤? சாமர்வெல் எவரஸ்ட் ஏறும் போது, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பனிச்சறிவு ஏற்பட்டு கூடவந்தவர்கள் அடித்துச்செல்லப்பட, அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரும் செத்துவிட துணிகையில், அவர் தலைக்கு மேலே பனிச்சறுக்கு ஏற்பட்டு பனி ஏசுவின், ஆசீர்வதிக்கும் ஒரு கை போல உறைகிறது. சாமர்வெல் எவரஸ்டை ஏறின உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டும் கற்பனையைத் தட்டிவிட்டால் கிடைப்பது இது தான். இது தான் கதை. குழந்தைக்கு யானை வானத்தில் பறந்தால் தான் கதை.

எப்பொழுதும் எங்கேயும் நடப்பது போல அப்பா பையனுக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தாருன்னு சொன்னா என்ன ஆகும்? ஒரு பய திரும்பிப்பாக்கமாட்டான். ஊருக்குள்ள ரவுடின்னு ·பார்ம் ஆயாச்சு; அப்புறம்? இந்த மாதிரி ஒரு நாலும் படம் எடுத்தாத்தானே நாலு பேர் பேசுவாங்க .

சின்னப்பிள்ளைகள் பாப்பாங்க?! சின்னப்பிள்ளைங்க எதுக்குப் பாக்கறாங்க? அதான் சர்டிபிகேட் இருக்கே. பின்ன எப்படி சின்னப்பிள்ளைங்க தியேட்டருக்குள்ள போவாங்க? (திருட்டு) டீவிடி? தாட்ஸ் நாட் டைரக்டர்ஸ் பிராப்ளம்.

சிகப்பு ரோஜாக்கள் முப்பது வருடங்களுக்கு முன் வந்தது. சிவக்குமார் பென்சில்ல மீசை வரைஞ்சிட்டு நடுச்சிட்டிருந்த சமையம். செக்ஸ் காட்லையா? அதுவும் பெண்ணே வலிய வந்து செக்ஸ் கேட்பது போல காட்டவில்லையா? மகன் (வளர்ப்பு மகனாக இருந்த போதிலும்) செக்ஸ் வைத்துக்கொளவதை அப்பா படம் பிடித்து ரசிப்பது போலக் காட்டவில்லையா?

கௌதம் மேனனின் எந்த படங்களும் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை. காக்க காக்க தவிர. வேட்டையாடு விளையாடுவின் முதல் 20 நிமிடங்கள் தவிர.

ஆறுதலுக்கு சிகப்பு ரோஜாக்களில் இருந்து அட்டகாசமான இந்தக் காட்சியைப் பாருங்கள்.

தமிழில் நல்ல த்ரில்லருக்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ தெரியல.

***

No one killed jessica (யாரும் ஜெஸிக்காவைக் கொலை செய்யவில்லை) என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். துப்பறியும் பத்திரிக்கையாளர்கள். மீடியாக்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம்.

ஜெஸிக்கா வளர்ந்துவரும் மாடல். அதிநவீன பார்களில் காக்டெயில் மேக்கர். ஒரு நாள் பாரில் நள்ளிரவைத் தாண்டியபின்னர் டிரிங்க்ஸ் தீர்ந்து விடுகிறது. மூன்று நபர்கள் ஜெஸிக்காவிடம் வந்து டிரிங்க்ஸ் கேட்கின்றனர். ஜெஸிக்கா இல்லை என்று சொல்ல, அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஜெஸிக்கா அதான் இல்லையே பின்ன எங்க இருந்து கொடுக்கிறதுன்னு கேட்டுக்கொண்டிருக்கிற போதே அவன் சட்டென்று ஜெஸிக்காவைச் சுட்டுவிடுகிறான். கொஞ்ச நேரத்தில் ஜெஸிக்கா இறந்து விடுகிறாள். சுட்டவன் மந்திரியின் மகன். மந்திரி பண பலம் செல்வாக்கை வைத்து சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார். ஜெஸிக்காவின் அக்கா போறாடுகிறார். முன்னூறு நபர்கள் இருந்த அந்த பாரில் இரண்டு மூன்று பேரே சாட்சி சொல்கின்றனர். முக்கிய சாட்சி ஜெஸிக்காவின் நண்பன் (குடும்பத்தின் நண்பனும் கூட) கடைசி நேரத்தில் நான் வாக்குமூலமே கொடுக்கவில்லை. எனக்கு ஹிந்தியே தெரியாது என்று ஜகா வாங்கிவிடுகிறான். ஜெஸிக்காவைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இது வரை படம் அட்டகாசம். அருமையான மேக்கிங். வித்யா பாலன் கன கச்சிதமாக செய்திருக்கிறார். இது போல தமிழில் படங்கள் எப்பொழுது வரும்?!

இதற்கப்புறம் ஒரு மீடியா மேடம் இந்த வழக்கில் அக்கறை கொண்டு எப்படி உண்மையை வெளிக்கொணர்கிறார் என்பதே கதை.

சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

***

Hindi Movie – Karthik calling Karthik

தமிழ்ல வேட்டைக்காரன் சுறா புறான்னு எதுனாச்சும் எடுத்துட்டுப்போறாங்க விடுங்க, ஹிந்தில கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீன்னு ஒரு படம் வந்திருக்கு பாருங்க. கண்டிப்பா பாருங்க.

பாடம் பாத்த கையோட இந்த பதிவு போடறேன். கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீங்கற டைட்டில் பார்த்த உடனே என்னைய மாதிரி கொஞ்சம் அறிவாளியா இருந்தீங்கன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சிருவீங்க என்ன கதைன்னு. அதேதான் கதை. ஆனால் படத்தில இன்னும் நிறைய இருக்கு. காமெடி காதல் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாம்.

படத்தை பாக்கணுங்கறவங்க இதுக்கு மேலே தயவுசெய்து படிக்காதீங்க.

கார்த்திக் ஒரு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறவர். சின்ன வயசில தன்னோட அண்ணன் இறந்ததுக்கு காரணம் தான் தான்னு நினைச்சுக்கறார். அதுக்கப்புறம் மனசுக்குள்ளேயே சுயவெறுப்பு வளர்கிறது. யாரோடும் சரிவர பேசுவதில்லை. சைக்கியாட்ரிஸ்ட் இடம் செல்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் இது உனது தவறு இல்லை என்று எடுத்துச்சொல்லியும் மீண்டும் அதே போல சுயவெறுப்பில் ஆழ்கிறார். சுயவெறுப்பு அவறுக்கு தன்னம்பிக்கையை மழுங்கச்செய்கிறது. ஐஐஎம்மில் படித்திருந்தாலும் வேலையில் அவரை எல்லோரும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். எம்டி இவரை தூசு போல நடத்துகிறார்.

நீண்ட நாட்களாக நான்கு வருடங்களாக உடன் வேலைசெய்யும் சொனாலியை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நிதமும் ஈமெயில் எழுதி சேமித்து வைத்துக்கொள்கிறார். சொனாலிக்கு அனுப்பவதில்லை. நீண்ட நாட்களாக உடன் வேலை செய்தும் சொனாலிக்கு கார்த்திக் யார் என்றே தெரியாது.

ஒரு நாள் எம்டி போனில் கார்த்திக்கைப் பிடி பிடி என்று பிடிக்க போனை தூக்கிப்போட்டு உடைத்து  விடுகிறார்.பிறகு மறுநாளே வேறு ஒரு புதிய போன் வாங்கிக்கொள்கிறார். அப்படியே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு எம்டியிடம் கார்த்திக் பேசப்போக அது பெரிய பிரச்சனையாக முடிகிறது. வேலையை இழக்கிறார். ஆழ்ந்த சோகத்தில் மூழ்குகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்கமாத்திரையை விழுங்கப்போகும் போது டெலிபோன் அழைப்பு வருகிறது.

பேசுவது கார்த்திக்கேதான்.முதலில் கார்த்திக் பயந்துபோகிறார். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் விசாரிக்கிறார். கார்த்திக்குக்கு ஏதும் கால்கள் வரவில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருவழியாக போன் கார்த்திக் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிவிடுவதாக உறுதியளித்தப்பின் கார்த்திக் அவரிடம் பேசுகிறார்.

போன் கார்த்திக்கின் அறிவுரையின் பேரில் கார்த்திக் இழந்த தன் வேலையை மீட்கிறார். அதே அலுவலகத்தில் பெரிய பதவியில் அமர்கிறார். சொனாலியிடம் காதலை தைரியமாக சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார். பெரிய புது வீட்டுக்குக் குடிபோகிறார். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

போனில் பேசும் கார்த்திக் கார்த்திக்கிடம் தான் தினமும் காலை ஐந்து மணிக்கு கால் செய்வதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் கார்த்திக் மற்றொரு கார்த்திக்கைப் பற்றி சொனாலியிடம் சொல்லிவிடுகிறார். சொனாலி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கச்சொல்கிறார்.

சைக்கியாட்ரிஸ்ட் கார்த்திக் சொல்வதை பொறுமையாகக் கேட்டு அப்படி நடக்க சாத்தியமில்லை உங்களுக்காக அதிகாலை ஐந்து மணிக்கு நான் வருகிறேன் கார்த்திக் கால் செய்கிறாரா பார்ப்போன் என்று நக்கலாகச் சொல்கிறார். மறுநாள் காலை ஐந்து மணிக்கு மிகச்சரியாக போன் அடிக்கிறது. முதலில் கார்த்திக்கின் நண்பர்களுல் யாரோ ஒருவர் தான் விளையாடுகிறார் என்று நினைக்கும் சைக்கியாட்ரிஸ்ட் பிறகு தான் உணர்ந்துகொள்கிறார் அது கார்த்திக் தான் என்று. சைக்கியாட்ரிஸ்ட் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இதையெல்லாம் நம்ப மறுக்கும் சொனாலியும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு காத்திருக்கிறார். சரியாக ஐந்து மணிக்கு போன் வருகிறது. பயந்து போன சொனாலி போனை எடுக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

போன் கார்த்திக்குக்கு கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி என் போனை நீ எடுக்காமல் போகலாம் என்று சொல்லி எப்படி உன்னை மேலே ஏற்றினேனோ அப்படி உன்னை கீழே இறக்குகிறேன் பார் என்று சொல்கிறார். அதே போல வேலையும் போகிறது. சொனாலியும் பிரிந்து போகிறார்.

கார்த்திக் பேங்கில்ப் சேமித்து வைத்திருந்த பதினைந்து லட்ச ரூபாயும் ஏதோ அனாதை இல்லத்துக்கு போன் கார்த்தி டெலிபேங்கிங்கில் மாற்றிவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போகிறார் கார்த்திக்.

பிறகு அவருக்கே தெரியாமல் இன்னொருவரை விட்டு டிக்கெட் எடுக்க சொல்லி கண்ணைக் கட்டிக்கொண்டு எங்கோ தூரதேசத்துக்கு சென்று விடுகிறார்.

சில மாதங்கள் கழித்து கார்த்திக் அந்த தூரதேசத்தில் ஒரு சின்ன கம்பெனியில் வேலையில் சேர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். போனே வைத்துக்கொள்வதில்லை. மானேஜரின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் போன் வாங்குகிறார்.ஐந்து மணிவரையிலும் முழித்திருக்கிறார். கால் வரவில்லை. கார்த்திக் கால் செய்யவில்லை.

சொனாலிக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக மெயில் அனுப்பி நாளைக்கு மும்பய் வருகிறேன் என்கிறார். பே செய்துவிட்டுத் தூங்கிவிடுகிறார். சரியாக காலை ஐந்து மணிக்கு மீண்டும் கார்த்திக் கால் செய்கிறார்.

என்னையா ஏமாத்தப்பாக்குற..எப்படி பிடிச்சேன் பார்..நீ சாகத்தான் போகிறாய்..செத்துவிட்டதாக நினைத்துகொள் என்று கொக்கறிக்கிறார்.

மீதியை வெள்ளித்திரையில் காண்க. அல்லது டிவிடி வாங்கி சின்னத்திரையில் காண்க. அல்லது விக்கிப்பீடியாவில் சென்று என்னதாண்டா நடக்குதுங்கறத தெரிஞ்சுக்கோங்க.

ஆனா நான் சொல்லமாட்டேன்.

This songs rocks.

*

ஏம்ப்பா கோடம்பாக்கத்து குசேலங்களா, நீங்க இங்கிலீசுப் படத்தயெல்லாம் பாத்து கிழிச்சு படமெடுத்து ஆஸ்கார் நாயகனா ஆனதெல்லாம் போதும் மொத ஹிந்திப்படத்தப் பாருங்க.

*
Karthik calling Karthik, hindi cinema,Deepika,Movies

நானும் ஹிந்தி சினிமாவும்

எங்க‌ள் வீட்டில் டீவி வாங்கிய‌திலிருந்து ஹிந்தி சினிமா பார்க்க‌ ஆர‌ம்பித்தேன் என்று நினைக்கிறேன். டீவி எப்பொழுது வாங்கினோம் என்ப‌து தெளிவாக‌ ஞாப‌க‌ம் இருக்கிற‌து. நான் நான்காவ‌து ப‌டிக்கும் பொழுது. ப்ளாக் அன்ட் ஒயிட் சிய‌ர்ஸ் எல்காட். மூடி வைத்துக்கொள்ள‌ க‌த‌வுக‌ள் கூட‌ இருக்கும். டீவி வாங்கிய‌ அந்த‌ வார‌த்தில் ச‌ரியாக எந்த‌க்க‌ட்சியோ ப‌ந்த் அறிவித்த‌து. ஒரு நாள் லீவ் கிடைத்த‌து. என‌வே வாட‌கைக்கு ஒரு நாள் டெக் எடுத்தோம். பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் க‌ந்த‌ன் க‌ருணை, வ‌ருஷ‌ம் ப‌தினாறு, ராஜாதி ராஜா, க‌ர‌காட்ட‌க்கார‌ன். ராஜாதிராஜா என‌க்காக‌. ர‌ஜினி பட‌ம் வேண்டும் என்று நான் அழுது அட‌ம்ப‌ண்ண‌தால்.

டீவி வாங்கி முத‌லில் வாட‌கை டெக்கில் ப‌ட‌ம் பார்க்கும் பொழுது சாமி ப‌ட‌ம் போட‌வேண்டுமாம். அத‌னால் க‌ந்த‌ன் க‌ருணை! அண்ட‌த்தின் ஒரு மூலையில் ஒரு துக‌ள் போல‌ இருக்கும் ந‌ம் பூமியின் ஒரு மூலையில் துக‌ள் போல‌ இருக்கும் எங்க‌ள் வீட்டில் ஒரு மூலையில் இருக்கும் இந்த‌ டீவிப் பெட்டியைக் கூட‌ க‌ட‌வுள் க‌வ‌ன‌மாக‌ப் பாதுகாக்கிறார் பாருங்க‌ள்! அதுவும் முத‌லில் சாமி ப‌ட‌ம் போட்டால் ம‌ட்டுமே பாதுகாக்கிறார் என்ப‌தை நினைத்துப்பார்க்கும் பொழுது ஆச்ச‌ரிய‌மே மேலிடுகிற‌து! அந்த‌ப் ப‌ட‌த்தில் வீர‌பாகுவாக‌ சிவாஜி ஓவ‌ர் ஆக்டிங் செய்திருப்ப‌தை இன்று நினைத்துப்பார்த்தாலும் ஏனோ எரிச்ச‌ல் வ‌ருகிற‌து.

ஓகே. ஹிந்தி சினிமா ப‌ற்றிய‌ல்லவா பேச‌வேண்டும். அந்த‌க் கால‌த்தில் ச‌னிக்கிழ‌மை மாலைக‌ளில் ஹிந்தி சினிமா தூர்த‌ர்ஷ‌னில் வ‌ரும். ச‌னிக்கிழ‌மை மாலைக‌ளில் டியூச‌ன் இருக்காது. பெரும்பாலும் காலையிலே முடிந்துவிடும். அத‌னால் ராஜேஷ் க‌ண்ணா, ரிஷி க‌பூர், தேவான‌ந்த், அமிதாப் ப‌ச்ச‌ன் போன்றோர்க‌ளை அன்று ம‌ட்டுமே பார்க்க‌முடியும். பெரும்பாலும் அம்மாவும் நானும் ம‌ட்டுமே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். என‌க்கு ப‌ள்ளியில் ஹிந்தி உண்டு. என் அம்மா ஹிந்தி ப‌டித்த‌தேயில்லை. ஹிந்தி ப‌டிக்கும் என‌க்கே ஹிந்திப் ப‌ட‌ம் புரியாம‌ல் இருக்கும்போது ஹிந்தியே தெரியாதா அம்மாவுக்கு ம‌ட்டும் எப்ப‌டி எல்லாம் புரிகிற‌து என்ப‌து என‌க்கு விய‌ப்பாக‌வே இருந்த‌து.

ரிஷி க‌பூர் ப‌ட‌ங்க‌ள் என்றால் என‌க்கு பிடிக்க‌வே பிடிக்காது. எப்பொழுதும் பாட்டுப்பாடிக்கொண்டிருப்பார். இந்திய‌ சினிமாவில் யார் தான் பாட்டு பாடாம‌ல் இருப்ப‌ர்? இருக்கிறார்க‌ள்? ப‌ட‌த்தில் இருக்கும் க‌த‌ப்பாத்திரங்க‌ள் யாவ‌ரும் பாட‌ முடியாத‌ துர் சூழ்நிலை உருவானால் இருக்க‌வே இருக்கிறார் இளைய‌ராஜா! பின்ன‌னியில் பாடிக்கொண்டிருப்பார் அவ‌ர். என‌க்கு ஏனோ அமிதாப்ப‌ச்ச‌ன் பிடிக்காது.அப்போது என‌க்கு பிடித்த‌ ஹிந்தி ந‌டிக‌ர்க‌ள் இருவ‌ர். தேவான‌ந்த் ம‌ற்றும் ச‌த்ருக்க‌ன் சின்ஹா. ப‌ட‌த்தில் இவ‌ர்க‌ளில் யாரேனும் ஒருவ‌ர் இருந்தால் போதும் க‌ண்டிப்பாக‌ ச‌ண்டை இருக்கும். ச‌ண்டையில்லாத‌ ப‌ட‌ங்க‌ள் என‌க்கு பிடிக்கவே பிடிக்காது. த‌ர்மேந்திரா கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ச‌ண்டைக்கு ம‌ட்டுமில்லை ஏனோ என‌க்கு ச‌த்ருக்க‌ன் சின்ஹாவைப் பிடிக்கும். அவ‌ர் ஏன் வில்ல‌னாக‌வே இருந்தார் என்ப‌து பிற‌கு ஏன் பிஜேபியில் சேர்ந்தார் என்ப‌தும் புரியாத‌ புதிர். நிஜ‌த்திலும் வாழ்க்கையிலும் அவ‌ர் எதிர்க‌ட்சியிலேயே ரொம்ப‌கால‌ம் இருந்திருக்கிறார்.

அப்புற‌ம் ச‌ன்டீவிக்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்த‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் ஹிந்தியுட‌னான‌ என‌து தொட‌ர்பு அறுந்து போன‌து. என் ப‌ள்ளியிலும் ஹிந்தியை நிறுத்திவிட்டு த‌மிழ் நான் இர‌ண்டாம் பாட‌மாக‌ எடுத்த‌வுட‌ன் ஹிந்தியை ம‌ற‌ந்தேபோனேன். என் ந‌ண்ப‌ன் சூர்யா தான் அவ்வ‌ப்போது ஞாப‌க‌ப்ப‌டுத்துவான்.

அத‌ற்க‌ப்புற‌ம் நான் பார்த்த‌ ஹிந்திப்ப‌ட‌ங்களை விர‌ல் விட்டு எண்ணிவிட‌லாம். ஹ‌ம் ஆப் கெ ஹ‌யின் க‌வுன், தில் வாலே..,குச் குச் ஹோத்தா ஹை, ஹ‌ம் ஆப் கே தில் மே ர‌ஹ்தே ஹை, ப்யார் கியா தோ த‌ர்னா க்யா அவ்வ‌ள‌வே. இதுவும் சோனி டீவியின் த‌யவால்.

அப்புற‌ம் ம‌றுப‌டியும் இடைவெளி. ரொம்ப‌ கால‌த்துக்கு அப்புற‌ம் தான் ஸ்வ‌தேஸ் பார்த்தேன். அமெரிக்காவின் நாசாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞ‌ன் இந்தியா வ‌ருகிறான். அவ‌னுக்கு இந்தியா பிடிக்க‌வில்லை. வ‌ந்த‌ இட‌த்தில் ஒரு பெண்னை நேசிக்கிறான். அவ‌னால் முடிந்த‌ ஒரு ந‌ல்லுத‌வியை அந்த‌ குக்கிராம‌த்திற்கு செய்கிறான். சிவாஜியில் ர‌ஜினி செய்த‌து சினிமா. ஆனால் ஸ்வ‌தேஸ் ய‌தார்த்த‌மாக‌ இருக்கும். பிற‌கு அமெரிக்கா போனானா இல்லை இந்தியாவிலே இருக்கிறானா என்ப‌து தான் ப‌ட‌ம். ர‌ஹ்மான் பாந்த‌மாக‌ இசைய‌மைத்திருப்பார். ந‌ல்ல‌ ப‌ட‌ம். இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்த‌த‌ற்கு அப்புறம் தான் ஹிந்தி சினிமா கூட‌ ந‌ல்லாருக்குமோ என்ற‌ எண்ண‌ம் வ‌ந்த‌து.

அப்புற‌ம் மேலும் வெகு சில‌ ப‌ட‌ங்க‌ள். தில் சாக்தா ஹை, ப்ளாக், ர‌ங் தே ப‌ச‌ந்தி, தாரே ஜ‌மீன் ப‌ர், க‌ஜினி, ச‌க் தே இந்தியா, டான், ச‌ர்கார், பூத், க‌ம்பெனி என்று விர‌ல் விட்டு எண்ணிவிட‌க்கூடிய‌வை. இவை அனைத்துமே அருமையான‌ ப‌ட‌ங்க‌ள் தான் என்றாலும் என‌க்கு இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் ஸ்பெஷ‌ல்.

ர‌ங் தே பசந்தி ம‌ற்றும் தாரே ஜ‌மீன் ப‌ர். அமீர்கான் ம‌ட்டும் எப்ப‌டி ப‌டங்க‌ளைத் தேர்வு செய்கிறார் என்று ஆச்ச‌ரியமாக‌ இருக்கும். ர‌ங் தே ப‌ச‌ந்தி போன்ற‌ க‌தையை நான் இது வ‌ரை ப‌டித்த‌துமில்லை பார்த்த‌துமில்லை. ப‌க்த் சிங்கை தூக்கில் போட்ட‌ ஆங்கில‌ ஜென‌ர‌லின் பேத்தி அவ‌ர் எழுதி வைத்த‌ டைரிக்குறிப்புக‌ளை ஒரு நாள் ப‌டிக்கிறாள். ப‌க‌த்சிங் ம‌ற்றும் அவ‌ன‌து ச‌காக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள‌து க‌தையை டாக்குமென்ட‌ரியாக‌ எடுக்க‌வேண்டும் என்று விரும்புகிறாள். ஒரு நிறுவ‌ன‌த்திட‌ம் பேசி அனும‌தியும் வாங்கிவிடுகிறாள்.

இந்தியாவில் டாக்குமென்ட‌ரி எடுக்க‌ எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் ப‌ண‌த்துக்காக‌ காத்திருக்கும் பொழுது அந்த‌ நிறுவ‌ன‌ம் ம‌றுத்துவிடுகிற‌து. ஆனாலும் எப்ப‌டியாவ‌து டாக்குமென்ட‌ரியை எடுத்தே தீர‌வேண்டும் என்கிற‌ உறுதியோடு இந்தியா வ‌ருகிறாள். இங்கு அவ‌ள‌து தோழி ஒருத்தி அவ‌ளுக்கு ஆறுத‌ல் த‌ருகிறாள். தோழிக்கு ந‌ண்ப‌ர் கும்ப‌ல் ஒன்று இருக்கிற‌து. ந‌ண்ப‌ர் கும்ப‌ல் எத‌ற்கும் க‌வ‌லைப்ப‌டாத‌ டோன்ட் கேர் பார்ட்டிக‌ள். தோழியின் பாய்ப்ர‌ண்ட் மாத‌வ‌ன். ராணுவ‌த்தில் பைல‌ட்.

ஜென‌ர‌லின் பேத்தி அவ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும்பொழுது ப‌க்த்சிங்கின் ச‌காக்க‌ளை அவ‌ர்க‌ளுள் காண்கிறார். அவ‌ர்க‌ளைக் க‌ண்வின்ஸ் செய்து டாக்குமென்ட‌ரியை ஆர‌ம்பிக்கிறார். லாலா ல‌ஜப‌திராயைக் கொன்ற‌ ஜென‌ர‌லைக் கொல்ல‌வேண்டும். ப‌க‌த்சிங்கும் ச‌காக்க‌ளும் திட்ட‌ம் போடுகிறார்க‌ள். திட்ட‌ம் போட்ட‌ப‌டி கொல்கிறார்க‌ள். அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லில் வாங்கிய‌ ப்ளைட்டை ஓட்டும் பொழுது மாத‌வ‌ன் இற‌ந்துபோகிறார். எத‌ற்கும் க‌வ‌லைப்ப‌டாத‌ டோன்ட் கேர் பார்ட்டிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள் என்ப‌து சினிமா.

(மேலும்)‌

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்

காக்கோச் வா வா க‌ட்ச்சு..காக்கோச் வா வா க‌ட்ச்சு என்று என் ம‌க‌ள் பேசும் ம‌ழ‌லையை கேட்டுக்கொண்டே இருக்க‌லாம். அப்ப‌டிக் கேட்டுக்கொண்டேயிருப்ப‌தால் தான் அதிக‌ம் ப‌திவு எழுத‌ முடிவ‌தில்லை. 🙂 காக்கோச் வா வா க‌ட்ச்சு ?! காக் ரோச் வா வா வ‌ந்து க‌டிச்சு வை என்ப‌து தான்.

*
ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்தேன். ப‌ட‌ம் பார்த்துவிட்டு; குழ‌ப்ப‌த்தில் விக்கிப்பீடியாவில் என்ன‌ தான்டா சொல்ல‌வ‌ர்றாய்ங்க‌ என்று என்னைத் தேட‌வைத்த‌ முத‌ல் த‌மிழ்ப்ப‌ட‌ம் இது தான். அதுக்காக‌ புரிய‌வில்லை என்று நான் சொல்ல‌வ‌ர‌வில்லை. அது முக்கிய‌மும் இல்லை. புரிந்து கொள்ள‌வேண்டும் என்கிற‌ ஆர்வ‌த்தை தூண்டிய‌து தான் முக்கிய‌ம்.

பாட‌ல்க‌ளை கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌த்துக்கு முன்ன‌ர் கேட்ட‌ பொழுதே என‌க்கு மிக‌வும் பிடித்துவிட்ட‌து. ஜூனில் என் ம‌க‌ளின் முத‌ல் பிற‌ந்த‌நாளின் போது இந்த‌ ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளைத் தான் திரும்ப‌த் திரும்ப‌ ஒலிக்க‌ச்செய்து கொண்டிருந்தோம். பெம்மானே பாட‌ல் அப்பொழுது ந‌ட‌ந்து முடிந்திருந்த‌ ஒரு துய‌ர‌ச்ச‌ம்ப‌வ‌த்தை நினைவூட்டிய‌து. இன்றும் அந்த‌ ச‌ம்ப‌வ‌த்தையும் பெம்மானே பாட்டையும் ம‌ன‌தும் மூளையும் இணைத்தே தான் பார்க்கின்ற‌ன‌. அதே போல‌ உள்ளே தேட‌த்தேட‌ பாட‌லும் கோவிந்தா கோவிந்தாவும் பீட் ந‌ம்ப‌ர்ஸ். நெல் ஆடிய‌ நில‌மெங்கே பாட‌ல் இன்றும் என‌க்கும் என் ம‌னைவிக்கும் ஃபேவ‌ரிட் தான். ரீமா சென்னின் ந‌ட‌ன‌ம் அந்த‌ப் பாட‌லுக்கு மிக‌ அற்புத‌ம்.மாலை நேர‌ம் பாட‌ல் சூப்ப‌ர் மெல‌டி ஆனால் ப‌ட‌த்தில் இல்லை. இந்த‌ப் ப‌ட‌த்தில் இந்த‌ப் பாட‌லுக்கு இட‌மில்லை.
*

சிற்ப‌ம் வ‌டித்து க‌லையை வ‌ள‌ர்த்த‌ சோழ‌ர்க‌ள் சோற்றுக்கு அடித்துக்கொள்வார்க‌ளா? புல்ஷிட் கேள்வி. த‌மிழ்நாட்டில‌ இப்ப‌ கொஞ்ச‌ நாளா கிள‌ப்ப‌ப்ப‌டுகிற‌ ப‌ல‌ ஸ்டுபிட் பிர‌ச்ச‌னைக‌ளில் இதுவும் ஒன்று. இந்த‌ மாதிரி அச‌ட்டுத்த‌ன‌மான‌ கேள்வி கேக்குற‌வைங்க‌ல‌ சோறு த‌ண்ணியில்லாம‌ குகையில‌ போட்டு ஆயிர‌ம் வ‌ருச‌ம் வெச்சாத்தான் தெரியும். சிற்ப‌ம் வ‌டிச்சா சிற்ப‌த்தையாய்யா சாப்பிட‌ முடியும்? சோத்த‌ வ‌டிச்சாத்த‌ன‌ய்யா சோத்த‌ சாப்பிட‌முடியும்?

ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌துக்கு முன்ன‌ரே டைர‌க்ட‌ர் சொல்லிட்டாருல்ல‌ இது க‌ற்ப‌னைக் க‌தைன்னு அப்புற‌ம் என்ன‌? அதுவுமில்லாமல் பாலைவ‌ன‌த்தில் ஒரு குகைக்குள் ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ எவ‌ர் க‌ண்க‌ளிலும் ப‌டாம‌ல் வாழும் ம‌னித‌ர்க‌ள் சோற்றுக்கு எங்கே போவார்க‌ள்? கிடைக்கிற‌த‌ அடிச்சு பிடுங்க‌த்தான் சொல்லும். ஏன் அவ்வள‌வு தூர‌ம் போக‌னும். காட்ரினா புய‌ல் வ‌ந்த‌ப்போ உல‌க‌ப் ப‌ண‌க்கார‌ நாடான‌ அமெரிக்காவில‌ வ‌சிக்கிற‌ ம‌க்க‌ள் ப்ர‌ட்டுக்கு அடிச்சிக்கிட்ட‌த‌ பாத்தோம்ல‌?

டைர‌க்ட‌ர் சோழ‌ ம‌ன்ன‌ர்க‌ளுக்கு ப‌திலா கூழ‌ ம‌ன்ன‌ர்க‌ள் பூண்டிய‌ ம‌ன்ன‌ர்க‌ள் அப்ப‌டீன்னு பேரு வெச்சிருந்திருக்க‌லாம். இந்த‌ டூபாக்கூர்க‌ளிட‌மிருந்து த‌ப்பித்திருப்பார்.

*

அதுக்க‌ப்புற‌ம் இந்த‌ சீன் கிளாடியேட்ட‌ர்ல‌ வ‌ருது இந்த‌ சீன் ம‌ம்மில‌ வ‌ருது இந்த‌ சீன் ட‌ம்மில‌ வ‌ருதுன்னு சொல்ல‌ப்ப‌டுற‌ குற்ற‌ச்சாட்டுக‌ள். ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் முன்னிலையில் கேம் ஷோ போல‌ குண்ட‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிடுவ‌தும் சிங்க‌ம் புலிக‌ளுட‌ன் ச‌ண்டையிடுவ‌தும் குலேப‌காவ‌லியிலே எம் ஜி ஆர் செய்துவிட்டார். அப்ப‌ கிளாடியேட்ட‌ர் குலேப‌காவ‌லிய‌ப் பார்த்து காப்பிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌தா? மேலும் இந்த‌ மாதிரியான‌ கேம் ஷோ வ‌ர‌லாறு. ரோமில் அத‌ன் சின்ன‌ம் சித‌ல‌டைந்து இன்றும் இருக்கிற‌து. வ‌ர‌லாற்றை எல்லோரும் ப‌டிப்பார்க‌ள் அல்ல‌வா? மேலும் ஒத்துக்க‌முடியாத‌ இன்னொரு வாத‌ம் போர்க்காட்சிக‌ள் 300 திரைப்ப‌டத்தைப் போல‌ இருக்கின்ற‌ன‌ என்ப‌து. உல‌க‌த்தில‌ வேறு எங்குமே போர் ந‌ட‌ந்த‌தில்லைய்யாய்யா?!

*
இதெல்லாம் ச‌ரிதான் ஆனால் டைர‌க்ட‌ர் சொல்ல‌வ‌ந்த‌தை ஒழுங்க‌ சொல்லாம‌ குழ‌ப்பிட்டாருல்ல‌? அவ‌ரு என்ன‌ சொல்ல‌வ‌ந்தாருன்னு உங்க‌கிட்ட‌ சொன்னாரா? அவ‌ரு குழ‌ப்பித்தான் சொல்ல‌னும்னு கூட‌ நென‌ச்சிருக்க‌லாம் இல்ல‌? 😉 மேலும் என‌க்கும் முத‌ல் முறை ப‌ட‌ம் பாக்குற‌ப்போ ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருக்க‌த்தான் செஞ்ச‌து. ஆனா மீண்டும் ஒரு முறை ப‌ட‌ம் பார்த்த‌ பொழுது குழ‌ப்ப‌ம் தீர்ந்த‌து. ரெண்டு த‌ட‌வ‌ பாத்தாத்தான் புரியுமோன்னு நீங்க‌ கேக்க‌ற‌து புரியுது. ஆனா எத்த‌ன‌ மொக்க‌ ப‌ட‌த்த‌ ரெண்டு த‌ட‌வைக்கு மேல‌ பாத்திருப்போம்?

*

வ‌ல்க‌ரா இருக்கு. ம்ம்க்கும். தூள் ப‌ட‌த்தில் இல்லாத‌ வ‌ல்காரிட்டியாய்யா? அதெல்லாம் த‌லையில தூக்கிவெச்சுக் கொண்டாடினீங்க‌?

*

லாஜிக் இல்ல‌. ம‌றுப‌டியும் அவ்வ்வ்வ்வ்வ்வ். த‌மிழா த‌மிழா இது உன‌க்கே ஓவ‌ராத்தெர்ல‌யா?

*
இந்த‌ மாதிரி குறை சொன்ன‌ ம‌க்க‌ள் நிறைக‌ளைப் ப‌ற்றிச் சொல்ல‌வேயில்ல‌. அது ஆர்ட் டைர‌க்ஷ‌ன், ரீமாவின் ந‌டிப்பு, கார்த்தியின் ந‌டிப்பு, செல்வ‌ராக‌வ‌னின் டைர‌க்ஷ‌ன் ம‌ற்றும் கோஆர்டினேச‌ன்.

ஹீரோயின்க‌ள் ந‌டிக்க‌வேறு செய்வார்க‌ளா என்கிற‌ அதிச‌ய‌மாக‌ கேட்கும் நிலையில் இருக்கும் நாம் ரீமாவின் ந‌டிப்பை க‌ண்டிப்பாக‌ பாராட்டியே ஆக‌வேண்டும். ஓவ‌ர் ஆக்ட் இல்லாம‌ல் ஜ‌ஸ்ட் லைக் தேட் ந‌டிப்பு.

1. ரீமாவின் ந‌டிப்பு: கார்த்தி “ஒரு காத‌ல‌ன் ஒரு காத‌லிகிட்ட‌ கேக்குற‌மாதிரி கேளு”ன்னு சொன்ன‌வுட‌னே ரீமா சென் ஒரு சிரிப்பு சிரிப்பார்ல‌ அங்கேயே சிக்ஸ‌ர் அடிச்சிட்டாரு; சிலையைப் பார்த்த‌வுட‌ன் அழுவ‌து; சோழ‌ர்க‌ள் ரீமா, கார்த்தி,ஆன்ட்ரியாவை க‌ட்டிவைக்க‌ கூட்டிக்கொண்டு போகும் பொழுது அங்கிருக்கும் பெண் ஒருவ‌ர் ரீமாவை பின்ன‌ந்த‌லையில் த‌ட்டிவிடுவார் ரீமா திரும்பி நின்று முறைப்ப‌து

2. ரீமாவின் ந‌ட‌ன‌ம்: நெல் ஆடிய‌ நில‌ம் எங்கே பாட‌ல். க்ளாசிக்.

3. ரீமாவின் ஆக்ஷ‌ன்: ரீமா இந்த‌ கேர‌க்ட‌ரில் கொஞ்ச‌ம் கூட‌ நெருட‌லாக‌ இல்லாத‌து; இவ‌ர் செய்வார் என்று ந‌ம்மை ந‌ம்ப‌வைத்த‌து.

கார்த்தி அஸ் யூஸ்வ‌ல்.

1. ஒரு எடுத்துக்காட்டு. கார்த்தி ரீமா ஆன்ட்ரியா மூவ‌ருக்கும் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்டு ச‌ட்டென்று ரீமா துப்பாக்கியின் ட்ரிக்க‌ரை அழுத்திவிடுவார். அப்போ கார்த்தி முக‌த்தில் தெரியும் எக்ஸ்ப்ர‌ஷ‌ன். உங்க‌ள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்ரிக்க‌ரை அழுத்தி ல‌க்கிலி ஒன்றும் ஆகாம‌ல் இருந்தால் ம‌ட்டுமே உங்க‌ளுக்குப் புரியும். 😉

*

பார்த்திப‌ன். பார்த்திப‌ன் ந‌ல்ல‌ செல‌க்ஷ‌ன். ஆனால் இந்த‌ ரோலுக்கு த‌னுஷ் ந‌டிப்ப‌தாக‌ இருந்த‌தாம். ந‌டித்திருந்தால் அற்புத‌மாக‌ இருந்திருக்கும். காம‌டியில்லீங்க‌ நெஜ‌ம். த‌னுஷ் ந‌டிச்சிருந்தாருன்னா ப‌சி ப‌ஞ்ச‌த்தில‌ வாடுற‌ ம‌க்க‌ளின் உண்மையான‌ அர‌சனா ரீமா கேலி பேசும் “சுருங்கிப்போன‌ ர‌த்த‌ம்” ட‌ய‌லாக்குக்கு ஏற்ற‌ மாதிரி இருந்திருப்பார்.

பார்த்திப‌னின் உருவ‌ம் ம‌ட்டுமே ஒரு நெருட‌ல். ஆனால் சுய‌ந‌ல‌ அர‌ச‌ன் அல்லது பாச‌க்கார‌ ம‌க்க‌ள் என்ற‌ வாத‌த்தால் அவ‌ர் ம‌ட்டும் பெருத்திருக்கிறார் என்று ஒத்துக்கொள்ள‌லாம். பார்த்திப‌னின் “நெல் ஆடிய‌” ந‌ட‌ன‌ம் ந‌ன்றாக‌ இருந்த‌து.

*

செல்வ‌ராக‌வ‌ன். கைய‌க் கொடுங்க‌ சார். க‌ல‌க்கிட்டீங்க‌. “காத‌ல் கொண்டேன்” ப‌ட‌த்திலிருந்தே உங்களோட‌ ஃபேன் நான். ம‌ணிர‌த்ன‌த்துக்கு அப்புற‌ம் நீங்க‌ தான்னு சில‌ர் சொல்லுவாங்க‌. அவ‌ங்க‌ சொல்ல‌ட்டும் அதெல்லாம் க‌ண்டுக்காதீங்க‌..அது கால‌வ‌ரிசைப்ப‌டுத்தினா ம‌ட்டுமே பொருந்தும்.

7ஜி ரெயின்போ கால‌னியில் க்ளைமேக்ஸில் ஹீரோ உண்மையை ம‌றைத்து போலீசிட‌ம் பொய் சொல்லும் போது ஹீரோயினின் அப்பா “என் பொண்ணு தெய்வ‌ம்பா தெய்வ‌ம்” என்று க‌த‌றும் பொழுது, அருகில் இருக்கும் ஹீரோயினின் அம்மா ஹீரோவின் த‌லையில் ர‌க‌சிய‌மாக‌ ஆசீர்வாத‌ம் செய்கிற‌ அந்த‌ காட்சிய‌மைப்பு ஒன்றே நான் மேற்கூறிய‌து உண்மைதான் என்று பொருந்தும்.டைர‌க்ஷ‌ன் இருக்க‌ட்டும் இவ்வ‌ள‌வு ந‌ப‌ர்க‌ளை வைத்துக்கொண்டு எப்ப‌டி கோஆர்டினேட் செஞ்சீங்க‌?

செல்வா மென் மேலும் கல‌க்குங்க‌. ஒரு இன்வ‌ஸ்டிகேட்டிவ் த்ரில்ல‌ர் த‌மிழ்ல‌ கொடுங்க‌ செல்வா.
*
இவ்வ‌ள‌வு தூர‌ம் துணிச்ச‌லா ஒரு ப‌ட‌ம் எடுத்திருக்கீங்க‌, இன்னும் ஏன் பாட‌ல்க‌ள் வெக்க‌றீங்க‌? பாட‌ல்க‌ள் இருந்தும் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌டு ஸ்பீடாப்போச்சுங்க‌ற‌து தான் உண்மை. ஆனா பாட‌ல்க‌ள் இல்லீன்னா ப‌ட‌ம் இன்னும் ந‌ல்லாயிருக்கும்.

*

ந‌ல்ல‌ முய‌ற்சி என்றெல்லாம் சொல்லி இந்த‌ முய‌ற்சியை ப‌த்தோடு ப‌தினொன்னா ஆக்க‌வெல்லாம் விரும்ப‌வில்லை.

அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.