Making Of ஆவியும் பாவியும்.

எழுதின டுபாக்கூர் கதைக்கு மேக்கிங் வேறயா? இதெல்லாம் டூ மச். ரொம்ப ஓவர்ன்னு ஏம்ப்பா நெனக்கறீங்க. நான் எழுதின எல்லா கதையுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் (ஆமா இவரு பெரிய ஆர்.கே.செல்வமணி!). ஆனா இந்த கதை கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு செய்திகளை -தினமலரில் வெளிவந்தது – அடிப்படையாகக் கொண்டது. நிர்மல் வேறு, முத்து ஆவி மேட்டர வெச்சு கண்டிப்பா ஒரு கதை எழுதுங்கன்னு சொல்லியிருந்தார் (பாவம் அவர விட்டுருங்க. சொன்னது தப்பாய்யா!) ஆனால் உண்மையிலே பலசரக்கு கடை சமாச்சாரம் அதிர்ச்சிதான். என்னத்த சொல்றது. ஆனா சிலர், என்ன இப்படி எழுதறீங்க நம்புறமாதிரி இல்லியேன்னு சொன்னதால, சில அதாரங்களை (?!) சமர்ப்பிக்கிறேன். ஆதாரங்கள் தினமலரில் வெளிவந்த செய்திகள்.

ஆவி ஜோதிடம் பற்றிய செய்தி:

பலசரக்கு கடை சீடி பற்றிய செய்தி:

அப்புறம், இந்த கதைக்காக நான் போட்ட flowchart இது. (அடப்பாவி இதுவேறையா!) ம்ம்..என்ன பண்றது, இந்த கதை நான் readers கண்டிப்பா guess பண்ணக்கூடாதுங்கறதுல கண்டிப்பா இருந்தேன். எத்தன பேரு கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல.

இப்ப போறேன். Next meet பண்றேன்.

 

ஆவியும் பாவியும்

(சிறுகதை)

“நானும் கேள்விப்பட்டிருக்கேன்யா. எங்க ஊர்ல கூட பேசிப்பாய்ங்க. நான் ஒரு தடவ நேர்லயே பாத்திருக்கேன்.” என்றார் இன்ஸ்பெக்டர். “நீங்க நேர்ல பாத்திருக்கீங்களா? நான் ஆவிகளோட பேசவேசெஞ்சிருக்கேன்” என்றார் ஏட்டையா பெருமையாக. “அப்படியா? சும்மா ரீல் சுத்தாதயா” “இல்ல இன்ஸ்பெக்டர் சார். உண்மை நான் பேசிருக்கேன். சில ஆவிங்க என் கூட பேசும். இப்ப வேணும்னா செஞ்சு பாக்கலாமா?” இன்ஸ்பெக்டர் ஆழ்ந்து யோசித்தார். பிறகு “ம்ம்..செஞ்சு பாக்கலாம்”

டேபிளில் இருந்த பொருட்கள் யாவும் தங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக இழந்தன. பூமிபந்து உட்பட. ஏட்டையா ஒரு சாக்பீஸை எடுத்துவந்து டேபிளில் கோடுகள் போட்டார். பிறகு அழகாக A B C என்று Z வரைப் போட்டார். பிறகு 1 2 3 என்று ஒன்பது வரை எண்கள் எழுதினார். லைட்கள் ஆப் செய்யப்பட்டன. இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் ஏற்றப்பட்டன. இன்ஸ்பெக்டருக்கு வேர்த்து விட்டது.

ஒரு தடித்த இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு கட்டத்தில் வைத்தார் ஏட்டையா. ஒரு முனையை அவர் பிடித்துக்கொள்ள மறுமுனையை இன்ஸ்பெக்டர் பிடித்துக்கொண்டார். இருவரும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

திடீரென்று நாணயம் HA HA HA HA என்று நகர்ந்த்து. “பாத்தீங்களா சார், எப்படி சிரிக்குதுன்னு” என்றார் ஏட்டையா.”யாருய்யா சிரிக்கிறா?” என்றார் இன்ஸ்பெக்டர் அப்பாவியாய். முறைத்த ஏட்டைய்யா, பின்னர் சற்று பவ்யமாக “காட்டேரி சார்” என்றார். “என்னது” என்று கிட்டத்தட்ட விழுந்தேவிட்டார் இன்ஸ்பெக்டர்.ஏட்டையா யார் நீ என்று கேட்டதற்கு நாணயம் K A T E R I என்று நகர்ந்தது. அதிர்ந்து போன ஏட்டையா “சாரி நாங்க உன்ன கூப்பிடல. நீ போயிடு” என்றார். நாணயம் N O என்று நகர்ந்தது. ஏட்டையா “தயவுசெஞ்சு போயிடு” என்றார்.

டேபிளுக்கு மேலிருந்த குண்டு பல்ப் சட்டென்று உடைந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாக உடைந்தது. இன்ஸ்பெக்டர் அரண்டு போய்விட்டார். ஒரே ஒட்டமாக ஓடி வெளியே சென்று நின்று கொண்டார். ஏட்டையாவும் பிற காண்ஸ்டபிள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடினர். பிறகு சுதாரித்து லைட்களைப் போட்டனர். ஸ்டேசனுக்கு உயிர் வந்தது.

வெளியே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் இறங்கினார். நேரே, வெளியே விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து “சார்” என்றார். இன்ஸ்பெக்டர் திரும்பி தன் பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக : யாருய்யா நீ என்றார். “சார் என் பேரு மாணிக்கம் சார்” என்றார் வந்தவர்.

***

“உங்களுக்கு எத்தனவாட்டிடா சொல்றது? வேலைசெய்யுற பொண்ணுங்க மேல கையவெக்காதீங்கன்னு? அப்படியா கொழுத்து போய் அலயறீங்க? இந்ததடவ உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. யார் சொன்னாலும் நான் கேட்கப்போவது இல்ல. உங்க மூனு பேரையும் நான் டிஸ்மிஸ் செய்யறேன். உங்க சம்பளபாக்கிய அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல போய் வாங்கிக்கோங்க. இப்ப நீங்க போகலாம்.”

“இல்ல சார். இந்த தடவ..”

“என்னால ஒன்னும் செய்ய முடியாது சுந்தர். கெட் அவுட் நௌவ்”

மானேஜர் மாணிக்கத்தின் அறைக்கதவு படீரென்று சாத்தப்பட்டது. சுவர் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது போல இருந்தது. நெற்றியில் தோன்றிய வியர்வையை கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டார். வெள்ளை வெளேர் என்ற கர்சீப். முனையில் அழகாக G என்று எம்ப்ராய்ட் செய்யப்பட்டிருந்தது. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
“ஹலோ சார். ம்ம். சொல்லுங்க சார்” “ம்ம் அனுப்சுட்டேன் சார்” “இது நல்ல சந்தர்ப்பம். அவிங்களா வந்து மாட்னாய்ங்க. ஒன்னும் பிரச்சனை இருக்காது சார்.” “பொண்ணுங்க விசயம்ங்கறதனால யூனியனும் ஒன்னும் கண்டுக்காது.” “பாத்துக்கலாம் சார்” “ஓகே சார்” டொக். நீல நிற ரிசீவர் பத்திரமாக தன் இருக்கையில் சென்று சமர்த்தாக அமர்ந்துகொண்டது.

மாணிக்கம் சேரில் சாய்ந்து விட்டத்தை பார்த்தான். பேன் மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தது. எழுந்து சென்று பேனின் வேகத்தை அதிகப்படுத்தினான். மேஜையிலிருந்த ஓரிரு பேப்பர்கள் பறந்தன. AAA மோட்டார்ஸின் வவுச்சர் இவன் காலடிக்கு வந்தது.

சில நம்பர்கள் டயல் செய்து ரிசீவரை காதுக்கு கொடுத்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிசீவரை படீரென்று சாத்தினான். அறையின் மூலையில் இருந்த மண்பானையில் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டான். குளிர்ச்சியாகவே இல்லை. மண்பானையில் கூட டூப்ளிகேட் செய்வாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டான். மீண்டும் வந்து டயல் செய்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “எங்கடி போன?” “அடுப்பில வேலையா இருந்தேங்க” “ம்ம்..ஏன் இப்படி மூச்சு வாங்குது உனக்கு..ஓடி வந்தியா?” “ஆமாங்க. நீங்க கிளம்பிட்டீங்களா?” “இல்லடி. இன்னும் நேரமாகும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். நீ சாப்பிட்டு படு. எனக்கு எடுத்துவெக்க வேணாம்” “ம்ம்..சரிங்க. நான் பக்கத்து கோயிலுக்கு போயிட்டு வாரேன்” “ம்ம்.”

***

குளிர்ந்த காற்று முகத்தை இதமாக வருடிக்கொண்டிருந்தது. பின்னிரவில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்வது என்பது மிகவும் ரசிக்கத்தகுந்த ஒன்று. யாரைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. தெருவிலும் ரோட்டிலும் ஈ காக்கா இருக்காது. அதுவும் டிசம்பர் மாசத்து இரவு என்றால் பனிக்காற்று மேலும் அழகு சேர்க்கிறது. தனது வீடு இருக்கும் தெருவுக்கு திரும்பினான். தங்கம் பலசரக்கு கடைக்கு அருகிலே இருக்கும் பெட்டிக்கடை திறந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீ சொல்லிவிட்டு காலியாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். தெருவில் இரண்டொரு குடிமகன்களைத்தவிர யாரும் இல்லை. ஆங்காங்கே தெருநாய்கள். இந்த தெருநாய்களுக்கு விவஸ்தையே கிடையாது என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே டீயை வாங்கிக்கொண்டான். டீயின் இளஞ்சூடு உள்ளங்கையில் மிகவும் இதமாக படிந்தது. டீ மாஸ்டர் தன்னை கூர்ந்து பார்ப்பதைப் போல உணர்ந்தான்.

ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு. பின்னால் வைத்திருந்த கவரை எடுத்து முழுதுமாக ஸ்கூட்டரை மூடினான்.. கேட்டின் கொண்டியை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரும்பு கேட் மிகுந்த அபஸ்வரமாய் ஒலி எழுப்பியது. குளிருக்கு கேட்டுக்கு அருகே முடங்கிக்கிடந்த பூனை எழுந்து சலிப்பாக நெட்டிமுறித்துக்கொண்டது. பிறகு இவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

கங்கா இந்நேரம் எழுந்து லைட்டப்போட்டிருப்பாளே? கதவைத்தட்டினான்.

இனி தட்டி பிரயோஜனம் இல்லை என்று பையில் வைத்திருந்த மாற்றுச்சாவியை சிகரெட் லைட்டரை வைத்து தேடி எடுத்து திறக்கமுயன்றான். பூனை இவனையே முறைத்துக்கொண்டிருந்தது.

வீடு இருட்டாக இருந்தது. சுவற்றைத்தடவி சுவிட்சை ஆன் செய்தான். இரண்டு சினுங்களுக்குப் பிறகு டியூப் லைட் உயிர் பெற்றது. கங்கா என்றழைத்தான். பதிலில்லை. செருப்பைக் கழற்றாமலே படுக்கையறைக்குச் சென்றான். அங்கு யாரும் இல்லை. சமயலறை. சமைத்து வைத்தவை வைத்தபடி அப்படியே இருந்தன. கங்கா என்று மிகச் சன்னமாக முனங்கினான்.

வெளியே வந்து படியில் உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வியர்வை அரும்பியது. கைகள் நடுங்கியபடியே இருந்தன. மணி இரவு ரெண்டு. எங்கே போயிருப்பாள்? அவளது பழைய செருப்புக்கள் ஒரு மூலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடந்தன, கவனிக்கப்படாமல், தூசி படிந்து.

***
“யாருய்யா நீ” என்றார் இன்ஸ்பெக்டர் தனது பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக. “சார் என் பேரு மாணிக்கம் ” என்றார் வந்தவர்.

“என்ன பேரு சொன்ன? கங்காவா? ஒரு கம்ப்ளயண்ட் எழுதிக்கொடுத்திட்டு போ. நாளைக்கு காலையில பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் ஏட்டையாவைக் கைகாட்டினார். ஏட்டையா கொடுத்த பேப்பரில், எழுதமுடியாமல் மாணிக்கத்தின் கைகள் உதறல் எடுத்துக்கொண்டேயிருந்தன. மாணிக்கம் டேபிளில் உடைந்து கிடக்கும் பல்பையும், கிழே சுக்கலாக கிடக்கும் கெடிகாரத்தையும் வினோதமாக பார்த்துக்கொண்டேயிருந்தான்.

***

கங்கா ஓடாத. நில். இங்க வா. எங்க போற. போகாதடி. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். டக்கென்று முழித்தான் மாணிக்கம். ஓ எல்லாம் கனவா? என்று நினைத்தான்.கங்கா போன் அடிக்குது பார். வந்து எடுடி. ட்ரிங். ட்ரிங். பாதித்தூக்கத்தில் சென்று போனை எடுத்தான். ஹலோ. ட்ரிங். ட்ரிங்.ட்ரிங். ஹலோ.ஹலோ. அது தான் எடுத்தட்டன்ல. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். ஓ. காலிங்பெல்லா. சட்டென்று முழு நினைவுக்கு வந்தான். ஹாலைத்திரும்பிப் பார்த்தான். சுத்தம். கங்கா. ஓட்டமும் நடையுமாக போய் கதவைத்திறந்தான்.

ஏட்டையாவும். கான்ஸ்டபிளும் நின்றிருந்தார்கள். “சட்டைய போட்டுட்டு என் கூட வா” என்றார் ஏட்டையா. மாணிக்கம் அதிர்ந்தான். “எ..எ…எ..என்ன” “போய்..சட்டைய போட்டுட்டு வா.. சொல்றேன்”

“கோயிலுக்கு பின்னால இருக்கிற ஆத்துப்பாலத்தில உன் பொண்டாட்டி செத்துக்கிடக்குறா” என்றார் ஏட்டையா. சுசுகி இன்னும் வேகமெடுத்தது. மாணிக்கத்தின் உலகம் தலைகீழாக சுழன்றது. காண்ஸ்டபிளின் தோள்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான். ரோட்டில் வாகனங்கள் அனைத்தும் சத்தமின்றி நிசப்தமாக சென்றுகொண்டிருந்தன.

***

இரவு மணி ஏழு இருக்கும். சுசுகி மெதுவாக வந்து டீக்கடையின் முன்னால் நின்றது. இன்ஸ்பெக்டர் சுசுகியிலிருந்து இறங்கி ஸ்டாண்டிட்டு அதில் சாய்ந்து நின்றுகொண்டு ஸ்டைலாக ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஏட்டையா டீக்கடைக்குள் சென்று எதையோ வாங்கி பையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

இண்ஸ்பெக்டர் தங்கம் பலசரக்குக் கடையை நோட்டம் விட்டார். கங்கா ஏதோ வாங்கிக்கொண்டிருந்தாள். கடைக்காரர் கொடுத்த ஏதோ ஒன்றை சட்டென்று அவசரமாக வாங்கி பையில் போட்டுக்கொண்டாள். கொடுக்கும்போது கடைக்காரர் கங்காவின் கைகளில் கிள்ளியதை இண்ஸ்பெக்டர் கவனிக்காமல் இல்லை.

கங்கா கடையை விட்டு இறங்கி வேகவேகமாக பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். இன்ஸ்பெக்டர் மெதுவாக நடந்து பலசரக்குக் கடையில் ஏறினார். இன்ஸ்பெக்டரை பார்த்த பலசரக்கு கடைக்காரர் அதிர்ந்தார். இன்ஸ்பெக்டர் சிரிக்கவே. பலசரக்கு கடைக்காரரும் சிரித்தார். இன்ஸ்பெக்டர் என்ன என்றார் சிரித்துக்கொண்டே. “என்ன நடக்குது”. “ஒன்னும் இல்லீங் சார்” என்றார் கடைக்காரர் இன்னும் சிரிப்பை நிறுத்தாமல். உள்ளே திரும்பி “டேய் பையா சாருக்கு ஒரு சேர் போடுடா” என்றார்.

இன்ஸ்பெக்டர் உட்கார ஏட்டையா வந்து நின்றார். ஏட்டையா கடைக்காரரிடம் கையை நீட்ட. கடைக்காரர் “நேத்துதானே சார் கொடுத்தேன்” என்றார். “நேத்து கொடுத்தா இன்னைக்கு நீ சீடி கொடுக்கலையா” என்றார் இன்ஸ்பெக்டர் சற்று கடுமையாக. “எங்க சார்.. முன்ன மாதிரி இல்ல சார். காலெஜ் கேர்ல்ஸ் தான் கொஞ்சம் வருதுங்க. அப்புறம் இந்த மாதிரி சில பேமிலி பொண்ணுங்க” என்று கங்கா சென்ற திசையை நோக்கி கையைக் காட்டினார்.

“சரி நாளைக்கு சேர்த்து வித்துக்கோ இன்னைக்கு பணத்த குடு” என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி சுசுகிக்கு வந்து டீக்கடைக்காரன் கொடுத்த டீயை வாங்கி சுவராஸ்யமாய் உறிஞ்சிக்கொண்டே கங்கா சென்ற திசையை நோக்கி பார்த்துக்கொண்டேயிருந்தார்.

***

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கங்கா முதலில் பயந்தாள். பிறகு பார்த்துக்கொண்டிருந்த சீடியை நிறுத்திவிட்டு சீடியை எடுத்து கீழே இருந்த புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்தாள். டீவியை ஆப் செய்து விட்டு, மெதுவாக சென்று கதவைத்திறந்தாள். இன்ஸ்பெக்டர்.

எதிர்பாராத சமயத்தில் இன்ஸ்பெக்டர் அவளை உள்ளே தள்ளிக்கொண்டு நுழைந்தார். இங்க அந்த மாதிரி சீடி நிறைய இருக்காமே என்று சொல்லிக்கொண்டே வீட்டை தேடுவது போல பாவனை செய்தார். பிறகு கதவைப் பூட்டி தாழ் போட்டார்.

“இல்ல சார் வந்து சார்..” என்று கங்கா முனகியதை அவர் கேட்கவேயில்லை.

***

காலிங்பெல் சத்தம் கேட்டு கங்கா திடுக்கிடவே செய்தாள். இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாக பேண்டை மாட்டிக்கொண்டார். கங்கா சேலையை சரிசெய்து கொண்டு வேறு வழியில்லாமல் கதவைத்திறக்க போனாள். இன்ஸ்பெக்டர் ஒளிவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்.

கதவைத் திறந்தாள் கங்கா. நின்று கொண்டிருந்தது ஏட்டையா. “அம்மா. இன்ஸ்பெக்டர் இருக்காராமா? கொஞ்சம் வரச்சொல்லுங்கம்மா. அவசர கேஸ் ஒன்னு” என்றார் ஏட்டையா.

***

“ஏன்யா ஏட்டையா இவ்வளவு நாளாச்சு இந்த கேசில ஒன்னுமே பிடிபட மாட்டீங்குதே. கங்கா செத்து ஒரு மாசமாகுது. இன்னும் ஒரு லீட் கூட கிடைக்கலியேயா. எந்தப்பக்கம் போனாலும் ஒரே முட்டுச்சந்தா இருக்கே. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு வேற” என்று சொல்லி இன்ஸ்பெக்டர் சற்று சீரியஸானார். ‘ஒருவேளை விசயம் தெரிஞ்சு கங்காவோட வீட்டுக்காரன் போட்ருப்பானோ” என்றார். ஏட்டையா “இருக்கலாம் சார். ஆனா தெரியறதுக்கு வாய்ப்பில்லையே. தெரிஞ்சாமாதிரியும் தெரியலையே. தெரிஞ்சிருந்தா அவன் எதுக்கு ராத்திரியோட ராத்திரியா கம்ப்ளயின்ட் பண்ண வரான்? அதுவும் உங்ககிட்ட” என்றார். முறைத்த இன்ஸ்பெக்டர் “அதுவும் சரிதான். எனக்கு மண்டைய குழப்புதுய்யா. ஒரு பீடி இருந்தா குடு” என்றார்.

ஏட்டையா “ஆவி ஜோதிடம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா சார்” என்றார். கொஞ்சம் அதிர்ந்த இன்ஸ்பெக்டர் “என்னது ஆவி ஜோதிடமா. அன்னிக்கு பட்டதே போதும்யா இனிமே ஆவிகளோட சங்காத்தமே வேணாம்” என்றாஎ இன்ஸ்பெக்டர். “ஆவி ஜோசியம் பாக்கலாம் சார் எங்கேயாவது லீட் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் ஏட்டையா.

***

மீடியம் அமைதியாக இருந்தார். ஏதும் வந்ததற்கான அறிகுறிகள் அவ்வளவாக இல்லை. இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. திடிரென்று ஏதோ தெலுங்கில் ஏதோ பேசினார் மீடியம். வேங்கஒலிபேசுரா கொடுக்கா என்றார். பிறகு அமைதியானார். பிறகு ஏதோ சட்சட்சட்சட்சட்சட்சட்சட் என்றார். உண்மையிலே அது ஏதோ மொழி தான் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் பரிதாபமாக ஏட்டையாவைப் பார்த்தார். ஏட்டையாவுக்கும் ஏதும் புரிந்திருக்கவில்லை என்று அவரது குழம்பிய முகம் காட்டியது.

நீண்ட அமைதிக்குப் பிறகு மீடியம் சாந்தமானார். பிறகு இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் தேராது என்று நினைத்து எழுந்திருக்கையில் “இன்ஸ்பெக்டர்” என்ற பெண்குரல் அமைதியாக ஒலித்தது. இன்ஸ்பெக்டருக்கு புல்லரித்து விட்டது. திரும்பிப் பார்த்தார். “நான் தான் கங்கா வந்திருக்கிறேன்” என்றார் மீடியம்.

***

“என் புருஷனுக்கு என் மேல சந்தேகம் எப்பவுமே. உங்க கூட இருந்தப்பவும். இல்லாதப்பவும். நீங்க வந்து போக ஆரம்பிச்ச பிறகு இன்னும் அதிகமாகிருச்சு. எப்பப்பாத்தாலும் என் மேல சந்தேகம் சந்தேகம். நிறைய தடவ போட்டு அடிஅடின்னு அடிச்சிருக்கார். அழுது அழுது என் கண்ணீரே வத்திப்போச்சு. அன்னைக்கு கோயிலுக்கு போறேன்னு சொன்னப்ப சரின்னு சொன்னவர். நான் கோவிலுக்கு போனப்பிறகு என்னை கண்காணிக்க வந்தார். நான் கோவிலைச்சுற்றி விட்டு நீண்ட நேரமாக பாலத்தில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலத்திலிருந்து குதித்து விடலாம் என்று கூட யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்த -இல்லை இல்லை நகர்ந்து கொண்டிருந்த- ஆற்றின் தாங்கமுடியாத துர்நாற்றத்தால் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்து வைத்திருந்த போதுதான், அவர் வந்தார். யார எதிர்பார்த்து இங்க உட்கார்ந்திருக்க என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை சும்மாதான் உட்கார்ந்திருக்கேன்னு சொல்லியும் அவர் கேட்கவில்லை. என் மீது அபாண்டமாக வார்த்தைகள் அள்ளி வீசினார். என் குடும்பத்தை கேவலமாக பேசினார். என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..ஹக்..ஹக்..ஹக்..ஹக்..”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சோடா உடைக்கப்பட்டது. மீடியம் சோடாவைக் குடித்தார். “டொரினோ இல்லையா?” என்றார். இன்ஸ்பெக்டர் வெளியில் நின்று கொண்டிருந்த காண்ஸ்டபிளை கூப்பிட்டு வாங்கிவரச்சொன்னார். நீண்ட நேரம் மவுனமாக உட்கார்ந்திருந்தார் மீடியம். இன்ஸ்பெக்டர் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மீடியத்தின் கைகள் இழுத்துக்கொண்டன. விரல்கள் பிணைந்துகொண்டன. அவர் உடல் விரைத்தது. நாடி கட்டிக்கொண்டது. வார்த்தை வருவதற்கு மிகவும் கடினப்பட்டது. டஸ். டஸ். மஸ். கஸ். மஸ். கஸ். புர்..சர்..மங்.சங்.டஸ் டஸ் டஸ் புங்.. என்று வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தவர் சட்டென்று மென்மையான பெண் குரலுக்கு மாறினார்.

“என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் தான் அவர் எனக்கு உறவினர் யாரும் இல்லாத இந்த ஊருக்கு அழைத்து வந்தார். எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. அது ஒரு வகையில் வசதியும் கூட. என் குடும்பத்தை தரக்குறைவாக பேசிய பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவரை விலக்கி நடக்க முற்பட்டேன். அவர் என்னைப்பிடித்து இழுக்கவே நான் திமிறினேன். என்னை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர் என்னை மிகுந்த கோபத்தோடு கீழே தள்ளி விட்டார். எதிர்பாராமல் கீழே விழுந்த நான் அருகில் இருந்த கல்லில் மோதி பாதி நினைவை இழந்தேன். அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவர்..அவர் அவர்..ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். டொரினோ உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் எழுந்திருத்தார். “ஏட்டையா வண்டியஎடு.”

***

மாணிக்கம் கைது செய்யப்பட்டான். “நான் கொல்லவில்லை நான் கொல்லவில்லை” என்று அவன் கோர்ட்டில் கதறிக்கொண்டேயிருந்தான். சாட்சியங்கள் அவனுக்கு எதிராகவே இருந்தது.

***

epilogue.
———–

அந்த தெரு மிகவும் அமைதியாக இருந்தது. மிகவும் குறுகலாகவும் இருந்தது. நாய்கள் வழியிலே படுத்துக்கொண்டிருந்தன. கவனிக்காமல் விட்டால் மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. மிதித்தால் அவைகளுக்கு கோபம் தலைக்குமேல் ஏன் காதுக்கு மேலேயே வரும். ஏட்டையா மிகவும் கவனமாக கடந்து சென்றார். ஒரு வீட்டின் முன் சென்று நின்றார். அந்த வீட்டின் சுவரில் காவி பூசப்பட்டிருந்தது. பிறகு மெதுவாக தட்டினார். சரியாக மூன்று தட்டுகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. மீடியம். சபாஷ் என்று சொல்லிவிட்டு கைகளில் ரூபாய் நோட்டுக் கத்தை ஒன்றைத் திணித்தார். மீடியம் வாங்கிக்கொண்டு மிக மெதுவாக சிரித்தார். பிறகு ஹக் ஹக் ஹக் ஹக் என்றார்

கங்கா கோயிலைச் சுற்றி வந்தாள். மனதுக்கு ஏதோ போல இருந்தது. ஒரு புறம் நீண்ட துக்கமாக இருந்தது. ஏன் இந்த தவறை செய்ய ஆரம்பித்தோம் என்று வருந்தினாள். ஆற்றுப்பாலத்துக்கு அருகே சென்று அமர்ந்தாள். ஆற்றின் துர்நாற்றம் அவளது நிலையை மிஞ்சிவிட்டிருந்தது. ஏதும் பேசாமல் பாலத்திலே உட்கார்ந்திருந்தாள். ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாதது கொஞ்சம் வசதியாக இருந்தது. நீண்ட நேரம் தனிமையில் உட்காந்திருக்கவே விரும்பினாள். தன்னை முழுதாக அழித்துவிட விரும்பினாள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தன்னை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிட மாணிக்கத்திடம் சொல்லவேண்டும். மாணிக்கம் மிகவும் நல்லவன். மாணிக்கம் என்னை மன்னிப்பியா? என்றாள் மனசுக்குள். தோளில் கைவிழ திரும்பிப்பார்த்தாள். ஏட்டையா. சிரித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார். வாயில் சாராய நெடி.

***

தோன்றலும், பின் மறைதலும்

(சிறுகதை)

மிகவும் இருட்டாக இருந்தது. கண்களைத் திறந்திருக்கிறேனா இல்லையா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. திறந்துதான் இருக்கிறேன். ஏசி குளிர் கடினமாக என்னைத்தாக்கியது. நான் கனத்த ரசாயால் என்னை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். ரசாய்க்குள் இன்னும் இருட்டாக ஆனது போல் இருந்தது. கண்களை விழித்து ரசாயை ஊடுருவி பார்க்க முயன்றேன். தலை வலித்தது. இல்லை அப்படி தோன்றுகிறதா? ரசாயை விலக்கி எழுந்து உட்கார்ந்தேன். குளிர் எனது நாசிக்குள் செல்ல முயன்றது. உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஏற்பட்டது போல இருந்தது. அட்லீஸ்ட் பேனையாவது ஆப் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன். எழுந்து சென்று ரீடிங் டேபிளில் ஜண்டு பாமைத் தேடினேன். புத்தகங்களுக்கு மத்தியில் அது ஒளிந்து கொண்டிருந்தது. கைகளில் தட்டுப்பட்டது. நன்றாக தேய்த்துக்கொண்டேன். மெதுவாக நடந்து ஜன்னல் அருகில் வந்து திரைச்சீலையை விலக்கினேன். வெளியே பொங்கிக்கொண்டிருந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளி பாய்ந்து வந்து என்னில் ஒட்டிக்கொண்டது. நிசப்தமாக இருக்கும் மரங்களை என் ஜன்னலின் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் வந்து என் கட்டிலில் மெத்தென்று உட்கார்ந்தேன். ரசாயை கழுத்துவரை போர்த்திக்கொண்டேன். காது மடல்கள் ஜில்லிட்டு குறுகுறுவென்றிருக்கவே மீண்டும் தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டேன். இப்பொழுது ரசாயின் ஊடே மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் பரவியது. ஜண்டுபாம்மின் கனத்த நெடி மூச்சுக்காற்றில் ஊடுறுவி என் சுவாசத்தை கடினப்படுத்தியது. தலையிலிருந்து ரசாயை விலக்கிகொண்டேன். அருகிலிருந்த் டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தேன். மணி சரியாக ஒன்று. மீண்டும் விட்டத்தை பார்க்கத் தொடங்கினேன். திடீரென்று என் செல்போனை எடுத்து ஏதேனும் கால் அல்லது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை.

ஒரு பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டேன். டிஜிட்டல் கடிகாரத்தில் எண்கள் மெர்குரி நிறத்தில் பளிச்சென்று இருந்தன. நடுவில் இரண்டு புள்ளிகள் தொன்றின. பின் மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்..தலையை திருப்பி மறுபக்கம் சாய்ந்து கொண்டேன். தலையனையிலிருந்து ரூம் ஸ்ப்ரே அல்லது என் பாடி ஸ்ப்ரே அல்லது என் செண்ட் அல்லது இவையெல்லாம் சேர்ந்தது போல் ஒரு நெடி எழுந்து அழுத்தமாக என் நாசிக்குள் நுழைந்தது. ஜண்டு பாமின் ஸ்மெல் இப்பொழுது தலையனையின் ஸ்மெல்லால் அடக்கியாளப்பட்டிருந்தது. சோனி மியூசிக் சிஸ்டம் சாந்தமாக இருந்தது.

இருட்டிலே இளையராஜாவின் சிடியைத் தேடினேன். கிடைத்த ஒன்றை எடுத்து ட்ரேயை திறந்து உள்ளே வைத்து மூடினேன். ரிமோட் கன்ட்ரோலை எடுத்துக்கொண்டு மெத்தைக்கு வந்தேன். மீண்டும் ரசாயை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டேன். ப்ளே. சோனியின் சின்ன திரையில், சிடி 1 என்று தோன்றி சிறிது நேரம் யோசித்து விட்டு, பாட ஆரம்பித்தது. “ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு..” பாடல் சன்னமாக ஒலித்தது. ஜானகி ஹிட்ஸ் போல இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸாக கூட இருக்கலாம். ஏன் எம்.எஸ்.வி ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். இல்லையேல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். தவறுதலாக இந்தப் பாடலை நான் பதிவு செய்திருக்கலாம். அடுத்த பாடலை வைத்துதான் என்ன ஹிட்ஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எதையும் யாரையும் நம்பமுடியவில்லை. பிஸ் அடித்து விட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது.

நான் என் அறைக்கதவை முடியபோது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நமது மூளைக்கு அல்லது மனதுக்கு -மனதென்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன? இருந்தால் எங்கே இருக்கிறது? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற?- இப்படி ஒரு ப்ளஷ் இருந்தால் ரொம்ப வசதியாக இருக்கும். தெவையில்லாத நினைவுகளை எவ்வளவு எளிதாக ப்ளஷ் செய்து கொள்ள முடியும்? ஒரு செர்ச் வசதி கூட இருக்கலாம். என்ன நினைவுகள் என்று தேடுவதற்கு! மறுபடியும் ஜன்னலோரம். ஆழ்ந்த அமைதி. “ராசாவே.. உன்னை விட மாட்டேன்” என்ற பாடல் பாடத்தொடங்கியது. ஜானகி ஹிட்ஸ் தான் போல இருக்கிறது.

மீண்டும் மெத்தை. இப்பொழுது காலில் ஈரம் படர்ந்திருப்பதால் முன்பை விட அதிகமாக குளிர்ந்தது. ரசாயை எடுத்து போர்த்திக்கொண்டேன். கைகளை தலைக்கு அடியில் சேர்த்து வைத்துக்கொண்டு விட்டத்தை மீண்டும் முறைக்க ஆரம்பித்தேன். சோனி ப்ளேயரில் லைட் சீராக பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தது.

திடீரென்று செல்போனை எடுத்து A வைப் ப்ரஸ் செய்தேன். அடுத்து K வை ப்ரஸ் செய்தேன். அக்ஷதா என்று திரையில் தோன்றியவுடன், கால் பட்டனை ப்ரஸ் செய்தேன். காலிங் அக்ஷதா என்று திரையில் தோன்றியது. காதுக்கு கொடுத்தேன். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்….”Please record your voice message….” டாமிட். யூ ஆர் கில்லிங் மீ அக்ஷதா. வை டோன்ட் யூ ஜஸ்ட் ஆன்சர் மை கால். கோபம் பீறிட்டுக்கொண்டு வரவே, செல்போனை தூக்கியெறிந்தேன். அது மெத்தையின் ஒரு முனையில் சென்று விழுந்தது. அதிலிருந்து மங்கலான ஒரு வெளிச்சம் வந்து கொண்டுருந்தது. கட்டிலில் தவழ்ந்து மறு முனையை அடைந்து செல்போனை எடுத்து மீண்டும் கால் செய்தேன். ரிங். ரிங். ரிங். ரிங்…

***

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்..மான் புலியை வேட்டைதான் ஆடிடுமே கட்டில்..முன்னும் பின்னும் நான் முழுமையா..” தலையில் தட்டப்பட்டு காதில் இருந்த பெரிய இயர்போனை கழட்டினேன். ஆல்ட்-டேப் போட்டு சட்டென்று என் ஸ்க்ரீனை மறைத்தேன். “டர்டி பெல்லோ” என்று குரல் கேட்டு பின்னால் திரும்பினேன்..”என்ன” “செவுடாடா நீ. எத்தனவாட்டி போன் அடிக்குது. எடுக்கறதில்ல? மூஞ்சப்பாரு!” என்று சொல்லிவிட்டு தன் இடத்தில் -எனக்கு நேர் எதிராக இருந்த க்யூபிக்கள்- சென்று அமர்ந்துகொண்டாள். “ச்..சே..முதல்ல இடத்த மாத்தி வேற பக்கம் போகனும். இவ கண்ணிலே சிக்கக்கூடாது. தலையில் அடிக்கறா?!” “என்ன முணுமுணுக்கற?” “ம்ம்..உன் போனிடெய்ல் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னேன்” “அது. அந்த பயம் இருக்கட்டும்!” என்னுடைய டெஸ்க் போனில் ஐந்து மிஸ்டு கால்ஸ் இருந்தது. யார் யார் என்று பார்த்தேன். என் பாஸ் தான். 342 டயல் செய்தேன். விஷாந்த் என்று போன் ஸ்கிரீனில் தெரிந்தது. “வேர் வேர் யூ மேன்? ஹவ் மெனி டைம்ஸ் ஐ ஹாவ் டு கால் யூ? டோன்ட் யூ எவர் புட் தாட் ஸ்டுபிட் இயர்போன் அகெய்ன் ஆன் யுவர் ஸ்டுபிட் ஹெட். அன்டர்ஸ்டான்ட்” “ஓகே விஷாந்த். கூல்!” (போடா பவர் மண்டையா! பவர் : அவருடைய ப்ராஜெக்ட்) “ஸோ.வாட்ஸ் அப்?” “யூ காட் டு கோ டு செமினார் ஹால் 5. ப்ரஸெர்ஸ் ஆர் வெயிடிங் பார் யூ. கமான் மேக் இட் பாஸ்ட்!” “ஓகே. ஜஸ்ட் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்(பவர் மண்டையா!)” டொக்கென்று போனை வைத்தேன்.

“என்ன வாங்கிக்கட்டினியா?” என்றாள். “ம்ம்..அஞ்சு கால் அடிச்சப்புறம் தான் வந்து தலையில் தட்டுவியா? மொத கால் அடிக்கும்போதே வறதுக்கென்ன?” “நான் என்ன உனக்கு பிஏவா? உன் ப்ளேஸ்க்கு வரதுக்கே பயமாக இருக்கு. நீ என்னென்னம்மோ பாக்குற! (உதட்டை சுழித்துக்கொண்டாள். மச்சம் கொஞ்சம் மேலே ஏறி பின் கீழே இறங்கி தன் இடத்துக்கு மீண்டும் வந்தது) டர்டி பாய். (நான் பார்ப்பதை உணர்ந்தவளாக) வோய் என்ன பாக்குற? உத வாங்கப் போற” “ம்ம்..க்க்க்ம்ம்ம்..அசின்னு நெனப்பு. சரி நான் ஹால் பைவுக்கு போறேன்.” “போ. எனக்கென்னவந்தது!” என்னுடைய டைரியை எடுத்துக்கொண்டேன். பேனா இல்லை. “பேனா கொடுடி” “முடியாது போடா. நீ கடிச்சு கடிச்சு கொடுப்ப. பேனா கூட இல்லாம நீ என்ன வொர்க் பண்ற?” “ப்ளீஸ் டா” சற்றே கோபமாக தன்னுடைய ஹேன்ட் பேக்கில் தேடி எடுத்துக்கொடுத்தாள். அழகான மெல்லிய நீல கலர் பேனா. “வோய் பத்திரமா கொண்டுவா. வாய்ல கடிச்சு எச்ச பண்ணாம கொண்டுவா புரியுதா?” “சரி (டி முட்டகண்ணி)” ஓட்டமும் நடையுமாக லிப்டை நோக்கி சென்றேன். “ஐயோ செல்போன்” மீண்டும் என் க்யூபிக்களுக்கு வந்து சார்ஜ் போட்டிருந்த செல் போனை எடுத்தேன், அவள் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள் “என்ன” என்றேன் “நத்திங்” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

***

செமினார் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று தான். “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “சோ நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். அக்ஷதா” “ஓகே மிஸ். அக்ஷதா. கோ அகெட் ப்ளீஸ்” “வென் வீ ஹேவ் திஸ்…” அவள் உதடுகள் மிகச் சரியாக அளவாக அழகாக இருந்தன.

“ஸோ..த டேட்டா ப்ளோஸ் த்ரூ திஸ் லேயர்.. அன்ட்” அவளுடைய ப்ரீ ஹேர் மெல்லிய காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்தது. ஒரு கற்றை முடி கண்னத்தில் விழுந்து அவளது கண்களை சில சமயம் மறைத்தது. “வீ ஹாவ் செக்ரிகேட்டட் எவ்ரி அதர் திங்க்ஸ் இன் திஸ்..” அவளது மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் முடியை பின்னால் இழுத்து விட்டுக்கொண்டன. அளவான கண்ணம். சின்ன கண்கள். இரண்டு முறை சிமிட்டிக்கொண்டது. பட்டர்ப்ளை தன் மெல்லிய சிறகை அழகாக அடித்துக்கொள்வதைப் போல. “திஸ் இஸ் ப்ரஸண்டேசன் லேயர்..வாட் எவர்..” மாநிறம். நிறத்துக்கு ஏற்றார் போல மெல்லிய பீச் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டா மிஸிங். ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..”ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்” செறுமலுடன் மார்க்கர் பேனாவை மூடி போர்டில் இருந்த ஸ்டாண்டில் வைத்துவிட்டு, டேபிலை அடைந்து வாட்டர் பாடிலை எடுத்து தண்ணீர் குடித்தேன். “சோ தாட்ஸ் ஆல் பார் டுடே கைஸ். லெட் அஸ் மீட் டுமாரோ..ஹெல்ப்..” என்று வாட்டர் பாட்டிலை மூடி டேபிளில் வைத்தேன். அவள் தன்னுடைய ஹேண்ட் போனை எடுத்து ஏதோ மெசேஜ் செக் செய்துகொண்டாள். பாய் ப்ரண்டாக இருக்குமோ? மீண்டும் தண்ணீர் குடித்துக்கொண்டேன்.

லிப்ட் மூன்றாவது மாடியில் நின்றது. ஒரு தெய்வீக மனம் கமழ்ந்தது போல இருந்தது. அவள் தான் நுழைந்தாள். ப்ளூ ஜீன்ஸ் அன்ட் வைட் ரவுண்ட் நெக். ப்ரீ ஹேர். “ஹாய்” “ஹாய்” வட்ட கருப்பு பொட்டு. கூடவே ஒரு அட்டு பிகரு. அட்டு பேசியது: “ஹலோ” “ம்ம்” “வீ கேம் பார் எ டீ ப்ரேக்” “ஓ” (ரொம்ப முக்கியம். நீ கொஞ்ச நேரம் வாய மூடேன். அவ பேசமாட்டாளோ?!) கையில் நோக்கியாவில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள். “ஆர் யூ லேட் டுடே?” (அடச்சே!) “ம்ம்..” ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் இறங்கிச் சென்றாள். ஒரு வார்த்தை கூட பேசாமல்.

யாம் வெயிட்டிங் பார் யூ அட் த லிப்ட் லாபி. யா இட்ஸ் அர்ஜெண்ட்” அக்ஷதா அழைக்கும் போது அர்ஜெண்டாவது மண்ணாவது. அவளது ப்ராடெக்ட் (முதலில் என் வசமிருந்தது!) ஏதோ மக்கர் பண்ணுகிறதாம். ஷி வான்ட்ஸ் மீ டு கோ வித் ஹெர்.


“யூ டிட் வெல்” என்றாள் லிப்டில் நுழைந்து கொண்டே. “யூ டூ” என்றேன். “இல்லை. எனக்கு நெர்வஸாகிவிட்டது.” என்றாள். “ஆர் யூ தாம்மிழ்ழ்?” (நீ என்னைத் தீண்டினால் தீராதடி ஆசைத் தமிழ்!) என்றேன் தெரியாதமாதிரி. “யெஸ். ப்ரம் திருச்சி” என்றாள். ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் வெளியே போகும் போது, “கேன் ஐ ஹாவ் யுவர் நம்பர்” என்றேன். திரும்பிப் பார்த்தவள், சிரித்தாள். “ஓ ஸ்யூர்.” நம்பர் பரிமாறிக்கொண்டோம். “ப்ளீஸ் கால் மீ ஒன்ஸ். நான் தெரியாதவங்க கிட்டருந்து கால்ஸ் வந்தால் எடுக்க மாட்டேன்” “ஓகே” கால் செய்தேன். அக்ஷதா என்று ஸ்க்ரீனில் தெரிந்தது. செல்போன் தனது பிறவிப்பயனை அடைந்தது.

தாட்ஸ் ஆல் பார் டுடே. லெட்ஸ் மீட் டுமாரோ த ஸேம் டைம்” என்றவாறு டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டேன். செல் போன் அடிக்கவே, எடுத்தேன். “வோய். எங்க சாப்பாடு” என்றாள்.

பேனா எங்கடா?” என்றாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தீடீரென்று. “ரொம்ப தான் அலட்டிக்காத பெரிய பேனா தங்க பேனா!” பையிலிருந்து எடுத்துக்கொடுத்தேன். வாங்கியவள், கடிச்சியா? என்றாள் இல்லை இல்லையென்று அவசரமாக தலையாட்டினேன்.

டேபிள் டென்னிஸ் விளையாடிவிட்டு ஷ¥வை வைப்பதற்காக வந்தேன். அவளது க்யூபிகள் காலியாக இருந்தது. டெடி பியர் -நான் ப்ரஸண்ட் பண்ணினது தான்- என்னைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தது. “யாரடா தேடுற டம்போ?” என்றது தனது கிரிஸ்டல் கண்களை உருட்டியபடி, அவளைப் போலவே. க்யூட்.

லிப்ட்க்கு வந்து டவுன்-ஆரோவை ப்ரஸ் செய்து காத்திருந்தேன். அக்ஷதா வந்தாள். “வோய் நீ இன்னும் வீட்டுக்கு போகலயா?” “இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது. ஆட்டோவில தான் போகனும். சாப்டியா?” என்றாள். “இல்ல. இப்பத்தான் போறேன். எங்க போகலாம்?”

“வர வர பர்கர் நல்லாவேயில்ல” என்று சொல்லிக்கொண்டே பவுண்டெய்னுக்கு எதிரில் உட்கார்ந்தேன். ஏப்பம் ஒன்று போனஸாக வந்தது. அக்ஷதா ஒரு டிஸ்கஸ்டட் பார்வை வீசினாள்.

நிலா மிகவும் அழகாக இருப்பது போல இருந்தது. இருக்காதா பின்ன? ஏதேதோ பேசினோம். (என்னன்னு கண்டிப்பா தெரியாது. ப்ளீஸ் கேட்காதீங்க!) “நான் நல்லா பாடுவேன் தெரியுமா?” என்றாள். “வாவ். வாட் எ சர்ப்ரைஸ். ச்சோ ஸ்வீட். ப்ளீஸ் பாடாத. ஷாப்பிங் வந்திருக்கறவங்க பாவம்.” ஒரு முறை என்னை ஆழமாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“சும்மா சொன்னேன். பாடேன். ப்ளீஸ்.” “முடியாது. நான் கிளம்பறேன்.” எழுந்து கொண்டாள். நானும் அவள் பின்னே சென்றேன். “நீ எங்க வர்ற?” “ஆட்டோ வரைக்கும் வர்றேன். லேட் ஆயிடுச்சு தனியா போய்டுவியா?” “ஆஹா. ரொம்பத்தான் கரிசனம். எல்லாம் எங்களுக்கு தெரியும். இத்தன நாள் போகலையா?”

“இவங்கள லேக் கார்டன்ஸ்ல கொண்டுபோய் விட்டுடுப்பா” “சரி சார்” என்னை முறைத்தவாரே உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஆட்டோ ஸ்டார்ட் செய்ய தடுமாறியபோது என் மனம் ஸ்டார்ட் ஆகிக் கொண்டது. “தள்ளி உக்காரு” என்று சொல்லி நானும் உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

ஆட்டோ மிக மெதுவாக – மிக மெதுவாக. ஸ்டுபிட் டிரைவர். – சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் தெருவிளக்கால் அவளுடைய முகம் அவ்வப்போது எனக்கு கொஞ்சம் மட்டும் தெரிந்தது, மணிரத்னம் படம் போல. நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். திரும்பிய போது, அவளது கடைக்கண் பார்வையை அறிந்து கொண்டேன். சட்டென்று தலையை திருப்பிக்கொண்டாள். (எப்படி பிடிச்சேன் பாரு!). மவுனத்தை கலைக்க “எனக்கு ஜோசியம் பார்க்க தெரியும், தெரியுமா?” என்றேன். “தெரியுமே குடுகுடுப்ப பேமிலின்னு” என்று சிரித்தாள். கை நீட்டினாள். “இந்த இடம் மேடா இருந்தா..” “என்னடா?” என்றாள் முறைத்தவாறு “இல்ல இல்ல..இந்த இடம் மேடா இருந்த உனக்கு லீடர் ஷிப் க்வாளிட்டீஸ் அதிகம் இருக்குன்னு அர்த்தம்” என்றேன். “ம்ம்ம்..அந்த பயம் இருக்கட்டும்!”

சோனி ப்ளேயரை ஆன் செய்தேன். “சட்டென நனைந்தது நெஞ்சம்..சர்க்கரையானது கண்ணே...” செல் போன் ரிங் செய்தது. எடுத்தேன். அக்ஷதா. “என்னடா வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்தியா?” ஏசியை ஆன் செய்தேன். –இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்..

மணி இரண்டு. “அப்பத்தான் என்னோட ஸ்கூல்ல நான்..” -எந்த வாசல் வழி காதல் வந்ததென்று..-
மனி மூன்று “எல்லோரும் என்னத்தான் பார்த்திட்டு இருந்தாங்க. ஒரு பால். மூனு ரன் அடிக்கனும். நான் என்ன பண்ணினேன் தெரியுமா….”
மணி நாலு. “பாடேன் ப்ளீஸ்” “என்ன சொன்ன நீ? ஷாப்பிங் வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்கன்னு சொன்னேல்ல. பாடமாட்டேன் போடா” “என்னது போடாவா?” “ம்ம்..” “சரி”
மனி நாலேமுக்கால். “ஓகே bye. சோம்பேறி காலைல லேட்டா வராத, ஒழுங்க டைமுக்கு எழுந்து வா.” “சரிங்க மேடம்.” “bye” “bye”

ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “ஹலோ..யாரு?” “அடப்பாவி அதுக்குள்ள கும்பகர்ணம் போட்டு தூங்கிட்டியா?” “ஹாங்..யாரு?” எனக்கு இன்னும் தூக்கம் கலைந்த பாடில்லை. “யாரா?போடா!” டொக்.

அடிப்பாவி. ரிங். ரிங். ரிங். அவள் ஆன்ஸர் பண்ணவில்லை.

ரிங். ரிங். ரிங். ரிங். “என்னடா கோபமா?” “இல்லடி” “டியா?” “ஆமா. நான் சொல்லுவேன்” “ம்ம்” “பாட்டு பாடலேன்னு கோபமா?” ஆகா இது தானா மேட்டரா. “இல்லடி. நீ பாடலன்னு சந்தோஷம் தான். பாரு தூங்கிட்டேன் பாரு. இல்லன்னா எனக்கு தூக்கம் வந்திருக்குமா?” “போடா.” “ப்ளீஸ் கோச்சுக்காதடா செல்லம்” “செல்லமா?” “ம்ம்ம்..நான் சொல்லுவேன்” “ம்ம்ம்..” “பாடேன் ப்ளீஸ்” “முடியாது” “ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்” “சரி. ஒரு ஸ்டான்சா தான் பாடுவேன்” “ம்ம்..அமிர்தம் ஒரு சொட்டுன்னா என்ன புள் பாட்டில்ன்னா என்ன? அமிர்தம் அமிர்தம் தான?” “ஆரம்பிச்சுட்டான்” “பாடேன்” “ம்ம்” மௌனம். நிசப்தம். அமைதி. “ஹலோ. எனிபடி ஹோம்” “ம்ம்” “பாடலயா? வெக்கமா” “உன்கிட்ட எனக்கு என்னடா வெக்கம். பாடறேன் பாரு!ச்சீ. கேளு!” கட். போன்ல க்ரெடிட் முடிஞ்சது. அடப்பாவிகளா.

ரிங். ரிங். ரிங். ரிங். கதவைப் பூட்டும் போது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டது. அவசரமாக ஓடி வந்து போனை எடுத்தேன். “என்னடா ஆச்சு? ஏன்டா கட் பண்ணின?” “கட் ஆயிடுச்சு. க்ரெடிட் முடிஞ்சிருச்சு” “ஓ. பாத்தியா நான் பாடறது அவங்களுக்கே பிடிக்கல!” “ம்ம்” “ம்ம் ஆ” “இல்ல இல்ல. பாடேன்” (ஆட போங்கப்பா!) “ஊரு சனம் தூங்கிருச்சு…”

“டேய் ப்பாடு” விக்ரம் சிம்மக்குரலில் யாரையோ அழைத்தார். தியேட்டரில் சத்தம் காதைப் பிளந்தது. என்னுடைய காதுகளுக்கு அருகில் வந்தவள், “ஆமா, பாடுன்னா என்னடா?” என்றாள். எனக்கென்ன தெரியும்? புதுசா வந்திருக்கே தமிழகராதி அதுல வேணா பாக்கலாம். காதக்குடு என்றேன். சொல்லிமுடித்தவுடன் நறுக்கென்று கிள்ளினாள். “டர்டி மைன்டட்”. சத்தியமா அவ்ளோ அழகான ஸ்மைல் – வித் வெக்கம் யூ நோ!- நான் பார்த்ததேயில்ல. அவளுடைய கையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன். அவளுடைய கைகள் மிகவும் குளிர்ந்திருந்தது. என் கண்களை ஊடுறுவி பார்த்த அவள், என் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“எனக்கு வென்னிலா வித் பனானா ஸ்பிலிட்” என்றாள்.

பனானா அவள் உதடுகளில் சிக்கி மோட்சம் அடைந்து கொண்டிருந்தது. வெண்ணிலா ஐஸ்கிரீம் அவள் வாய்க்குள் சென்றும் உருகாமால் இருந்தது. நீங்களே சொல்லுங்கள் பனிக்குகைக்குள் ஐஸ்கிரீம் எப்படி உருகும்?

“வோய். உத வாங்கப்போற! என்னடா பாக்குற? ஒழுங்கா சாப்டு!” என்றாள் முட்டக்கண்ணை உருட்டியபடி. பயமாகத்தான் இருந்தது. இவள் எனக்கு யார்? ப்ரண்டா. கேர்ள் ப்ரண்டா. லவ்வரா? “வோய் முட்டகண்ணி. நீ யாரயாவது லவ் பண்ணிருக்கியா?” சர்வ சாதரணமாக உதட்டைப் பிதுக்கினாள். உண்மையில் பிதுக்கப்பட்டதென்னவோ என் இதயம் தான். மச்சம் மேலேயேறி மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்தது. “ப்ச்..இல்லடா. நீ?” நானும் தோளை குலுக்கிக்கொண்டேன். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்துக்கொண்டவள், “வவ் வீலிங் வெவ்வடி இவுக்கும்?” என்றாள். “ம்ம்ம்..என்னம்மா? முழுங்கிட்டு சொல்லு” “ம்ம்ம்ம்” “இல்ல. லவ் பீலிங் எப்படி இருக்கும்?” என்றாள்.

“ம்ம்ம்” மறுபடியும் செமினாரில் விட்டது போல இருந்தது. “அதாவது நீ எப்பவெல்லாம் ப்ரீயா இருக்கியோ..லைக்..வேலை இல்ல..சும்மா உக்காந்திருக்க..நாட் பிசி அட்டால்..ங்கறப்போ சட்டுன்னு அவன் முகம் உனக்கு ஞாபகம் வரும். அப்படி வந்தா யூ ஆர் இன் லவ்! இன்பாக்ட் நீ வேலை செஞ்சுகிட்டிருக்கும் போதே உனக்கு அவன் முகம் ஞாபகம் வருதுன்னா, முத்திப்போச்சுன்னு அர்த்தம். அப்பாகிட்ட சொல்லிடு.” என்றேன். “ம்ம்ம்”

“ம்ம்ம்..அப்படீன்னா எனக்கு உன் முகம் தான்டா ஞாபகம் வருது!” என்றாள்.

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு. உயிரை மட்டும் விட்டுவிடு! சட்டென நனைந்தது நெஞ்சம்!-

“அப்பாகிட்ட சொல்லிடவா?” என்றாள்.

ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்”
“அழாதடா”
அவள் அழுது கொண்டே
“எனக்கு தெரியும்டா. உன்னால என்ன கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு. அது தான் நான் ரொம்ப நாள் சொல்லாம இருந்தேன்” என்றாள்.

“அழாதடா”
“இல்லடா நான் அழல. அப்புறமா பேசறேன்.” “bye”
“ஏண்டா என்னாச்சு?”
“இடியட். அப்புறமா பேசறேன்னு சொல்றேன்ல” “bye”

ப்பா அவன் வீட்டுக்கு போய் பேசப்போறார்டா. எப்படியும் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் இருக்கும்”
“ம்ம்”

***

ன்னடா செமினார் முடிஞ்சதா. ப்ரெஸ்சர்ஸ் என்ன சொன்னாங்க. யாரும் புது பொண்ணு வரலையா? நல்லா சைட் அடிச்சிருப்பியே” என்றாள் நான் வந்ததும் வராததுமாக. நான் டைரியை வைத்து விட்டு, அவளைப் பார்த்தேன் “நான் சைட் அடிக்கறதில்ல” “சொன்னாங்க சொன்னாங்க. பேனா எங்கடா” “இந்தா” “கடிச்சியா” “இல்ல” “நீ கடிச்சிருப்ப உன்னால பேனாவையோ பென்சிலையோ கடிக்காம யோசிக்கவே முடியாதே. பொய் சொல்லாத!” ஷீ த்ரு அவே எ நாட்டி ஸ்மைல்.

(பேனாவை வாங்கி தன் மேஜை ட்ராயரில் போட்டுக்கொள்கிறாள். அங்கே நான்கைந்து பேனாக்கள் இருக்கின்றன முனை கடிபட்டு. தனக்குள் சிரிக்கிறாள்.)

“என்னைக்கு நிச்சயதார்த்தம்?” “டிசம்பர் 3”
“ம்ம்”
“டேய் சுப்பு. ஏண்டா சோகமா இருக்க? நாம பேசித்தான முடிவு எடுத்தோம்?”
“ஒன்னும் இல்ல.ஓகே. bye. நான் போறேன்.”

***

ரிங். ரிங். ரிங்.
“என்னடா தூங்கலயா?”
“ம்ம்”
“என்ன செஞ்சிட்டிருக்க?”
“சும்மா படுத்திருக்கேன்”
“சும்மாவா? அய்யே!”
“ஸ்டுபிட். டர்டி மைண்டட்.”
“ம்ம்”
……
“ஏதாவது பாடேன்”
“என்ன பாட்டு பாட?”
“ஏதாவது”
“ஏதாவதுன்னா எனக்கு தெரியாது. நானே ஒரு ஸ்டுபிட்”
“ம்ம்”
“சொல்லுடா என்ன பாட்டு பாடட்டும்?”
சொஞ்சநேரம் கழித்து..”ஊரு சனம் தூங்கிருச்சு..”
…..
“வை யூ லெட் மீ கோ?” என்றாள்.
“என்னடா?”
“நீ என்ன லவ் பண்ணதான? நான் வேறொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடனே நீ ஏன் தடுக்கல? வை யூ லெட் மீ கோ?” (ஆழுகிறாள்)
..
“அக்ஷதா. நீ ஏன் என்னை விட்ட? நான் முடியாதுன்னப்புறம் ஏன் நீ என்ன கம்பெல் பண்ணல? வை யூ லெட் மீ கோ?”
“என்ன பழி வாங்கறயா?”
“இல்ல பொறுக்கி. நான் கேக்கறேன்”

“அக்ஷதா. வில் யூ மேரி மீ?”
“எப்படிடா? அப்பா பேசிட்டாருடா.”
“சோ வாட். இன்னும் நிச்சயம் முடியலைல”
“சோ வாட்டா? எவ்வளவு ஈசியா சொல்ற. எத்தன வாட்டிடா நான் உங்கிட்ட கேட்டேன்”

“ம்ம்ம். bye”
“bye”

அழுகிறாள். அழுகிறாள். அழுதுகொண்டேயிருக்கிறாள். விடியும் வரை.
***

SMS சத்தம் கேட்டு போனை எடுத்தேன். அக்ஷதாவிடமிருந்து SMS. “ப்ளீஸ்டா இனிமே எங்கூட பேசாதடா. ப்ளீஸ்!” வெடித்துக் கிளம்பிய அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

***

ரிங். ரிங். ரிங். ரிங். “டாமிட். ப்ளீஸ் அக்ஷதா ஆன்சர் பண்ணுடா. ப்ளீஸ்” ஏசி குளிர் பொறுக்கமுடியவில்லை. ரசாயை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அழுகை வெடித்து வெடித்து கிளம்பியது. ஐ மேட் எ மிஸ்டேக். ப்ளடி ஸ்டுபிட் மிஸ்டேக். எ மிஸ்டேக் ஐ ஆம் கோயிங் டு ரெக்ரட் பார் எவர் அன்ட் எவர். தலையை திருப்பி டிஜிட்டல் க்ளாகில் மணி பார்த்தேன். மணி நாலு என்றது. எத்தனை இரவுகள்? எழுந்து ஜன்னலுக்கு வந்தேன். எங்கும் நிசப்தம். திரைச்சீலையை இழுத்து வெளிச்சம் வராதபடி மூடினேன். சோனி ப்ளேயரை ஆப் செய்தேன். எங்கும் இருட்டு. டிஜிட்டல் க்ளாகில் மட்டும் இரண்டு புள்ளிகள் தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்..

பீஸில் வேலை எதுவும் ஓடவில்லை. எதிர் சீட் காலியாக இருந்தது. அக்ஷதா நோட்டீஸ் கூட கொடுக்காமல் ரிசைன் செய்து விட்டாளாம்.

டெஸ்க் போன் அடித்தது. என் பாஸ். “ஹலோ” “ஷால் வீ கோ? ஹால் நம்பர் 5.” “ம்ம்..ப்ரெஸர்ஸ் அகெய்ன்?” “ம்ம்..ஹ¥ எல்ஸ்?” “விசாந்த். ஐ யாம் பெட்அப் வித் திஸ், யூ நோ?”..

“சோ. ஆல் த ப்ராஸஸ் ஹாவ் டு கோ த்ரூ திஸ் லூப்.” நான் மீண்டும் செமினார் எடுத்துக்கொண்டிருந்தேன்.. “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “ஸோ. நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். ப்ரியா. ப்ரியா சிங்கால்” “ம்ம்ம்..க்க்ம்ம்ம்..மே ஐ நோ ஹ¥ இஸ் திஸ் ‘சிங்கால்’, இப் யூ டோன்ட் மைண்ட்!” அங்காங்கே சிரிப்பலை எழுந்தது. அவளும் சிரித்தாள். க்யூட் அன்ட் ஸ்வீட். “ஆப் கோர்ஸ், மை டாட்!”

இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்

***

குரல்வலை: 111:1
தோன்றியது மறைந்துதான் ஆக வேண்டும். மறைந்தது தோன்றித்தான் ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.

-முத்துசீனிவாசசுவாமிகள்.

டன் டன் டன் டகா

(சிறுகதை) தேன் கூடு போட்டிக்கு

ந்த குசும்பு தான வேணாங்கறது. என்னப் பாத்தா எப்படித் தெரியுது? வாடக வீடு தேடும்போதே இந்த நக்கலா?” என்றார் புரோக்கர்.

கேட்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு உதவியா இருக்கும்னு நினைக்கறப்போ, கேக்கறதுல்ல தப்பில்ல இல்லையா? அப்புறம் கேட்டிருக்கலாமேன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

புரோக்கர் இன்னும் என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்.

***

டீவியில் அக்னிநட்சத்திரம் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல படம் தான். எத்தன வாட்டி பாக்குறது? தரையில் உட்கார்ந்து நல்லா கால் நீட்டி, சோபாவுல சாஞ்சுகிட்டு, கையில குமுதத்த வெச்சுக்கிட்டு, சும்மா படம் பாத்திட்டிருந்தேன். அசின் அழகு தான் இல்லியா? அதுவும் போக்கிரில கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. மேக்கம் ஓவரா போட்டிருப்பாய்ங்களோ? வெளியே மழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது. தம் அடித்தால் தேவலை ஆனால் இந்த ராட்சஸி…..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ என்று கத்திக்கொண்டு தெருவில் ஓடிக்கொண்டிருந்தார் ஜனகராஜ். அட ஆமால்ல! தனமும் இல்லியே. ஊருக்கு போயிட்டால்ல..ஹா…ஹா…ஹா…ஹா…என்று சத்தமாக சிரித்தேன். இந்தக் காட்சியை நான் நிறைய தடவை பார்த்திருந்தாலும் இன்றைக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.குமுதத்தை தூக்கி கடாசினேன். அது ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. ஆவேசமாக எழுந்தேன். வேட்டிய மடிச்சு கட்டினேன். ..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ வேகமாக மாடியிலிருக்கும் என் ரூமுக்கு ஓடி என் பையில் ( என்னுடைய ஷோல்டர் பேக்கின் பின் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிப் வைத்த எக்ஸ்ட்ரா இடம் இருக்கிறது. பொண்டாட்டிக்கு தெரியாமல் தம் அடிக்கும் எங்களுக்காகவே ஆண்டவன் அருளிச்செய்தத பேக் இது) இருந்த கோல்ட் பிளேக் சிகரெட்டையும், ஒழித்து வைத்திருந்த லைட்டரையும் எடுத்தேன். இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது. பூங்காற்று திரும்பியது. வாழ்க ஜனகராஜ். ச்..சே..இவ்வளவு சுதந்திரமா? கண்ணாடியில் பார்த்தேன். டேய் சுந்தரம்..எப்படிடா இவ்வளவு ஸ்மார்டா இருக்க? பின்ன சும்மாவா கவிதா, சார் மெமரி லீக் இருக்கு சார், கோர் டம்ப் ஆகுது சார்ன்னு சும்மா சும்மா நம்பமேல டம்ப் ஆகுறா? கவிதா? கவிதையே தெரியுமா? கவிதையே தெரியுமா…என் கனவு நீ தானடி…சிகரெட் என் உதடுகளில் சதாவாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

எம் டீவியில் ஷகீரா ஹம்ம்ம்…ஆடிக்கொண்டிருந்தாள். சிகரெட் பாக்கெட் தீர்ந்து போய்விட்டது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் குப்பை. தனம் பாத்தான்னா பேயாட்டம் ஆடுவா. பிசாசு. மணி எட்டு தான ஆகுது. சுந்தரம்..ம்ம்…ம்ம்…இன்னும் காலைலைக்கு நிறைய நேரம் இருக்கேடா.

கைலியக் கழட்டி ஷோபாவில கடாசி விட்டு, பேண்டை மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.

கையில் பிளாக் லேபிலும், நான்கு பாக்கெட் கோல்ட் பிளேக்கும், ஒரு குங்குமமும், ஒரு டஜன் வாழைப்பழமும், புரோட்டா சிக்கன் ஆம்லேட் பொட்டனமும்..ம்ம்ம்…அடப்பாவி ஆப்பாயில் வாங்கலியே டா..பரவாயில்ல வீட்ல போட்டுக்கலாம்..ஒரு லிட்டர் கோக் பாட்டிலும் வெச்சுக்கிட்டு கதவ எப்படித்தான் திறக்குறது?

தனியா எப்படி அடிக்குறதுன்னு சிவாவக் கூப்பிட்டா, முடியாது வேல இருக்குன்னுட்டான். பராவியில்ல தனிமையிலே இனிமை காண முடியுமே! நடு இரவினிலும் சூரியனும் தெரியுமே..தனிமையிலே….கதவை கிச்சின்னு பூட்டினேன். சிகரெட் புகை இன்னும் காற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.

டீபாயில் வரிசையாக பிளாக் லேபிளையும், கோக் பாட்டிலையும், புரோட்டா பொட்டனத்தையும், வாழைப்பழத்தையும் அடுக்கி வைத்து அழகு பார்த்தேன். கிச்சனுக்கு போய் ஆப்பாயில் போட்டுக்கொண்டு வந்தேன். கைலிக்கு மாறிடலாமா? அது தான் வசதி. சோபாலதான போட்டேன்? எங்க காணோம்? கீழ விழுந்திருச்சா? இல்லையே!

ஹாங்…அந்தா கொடியிலே கிடக்கு! சுந்தரம் நீ வர வர பொறுப்பாகிட்டே இருக்கியேடா. அழகா மடிச்சு கொடியில போட்ருக்க.


‘தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தான்டா..சூராவளி சூராவளி சூராவளி சுந்தரம் தான்டா’ பாதி பாட்டில் காலி. ஹக். ஹக். ப்ரியா பிக்கில்ஸ். சுவையும் அலாதி. நாக்கு சத்தமாக சப்பு கொட்டியது. என்னமா டான்ஸ் ஆடறா அசின்? அடா அடா..குமுதத்திலிருந்த அசின் படம் ஞாபகத்திற்கு வந்தது. டேய் சுந்தரம் குமுதத்த எடுத்து அசின க்ளோசப்ல பாருடா. அசின் நீ ஒரு பிசின்..ஹா..கவிதை கவிதை..சுந்தரம்… பொண்டாட்டி ஊருக்கு போனதுக்கப்புறம் கவிதை கூட சொல்றியா நீ?

டீபாயில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிப் போட்டு அசின் இருந்த குமுதத்தை தேடினேன். தனம் எடுத்தா எடுத்த எடத்தில வைன்னாடி சொல்வ, இப்பபாருடி, விகடனையும் குமுதத்தையும் மூலைக்கு ஒன்றாக வீசினேன். விகடன் ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. முதல் பக்கத்திலே போக்கிரி அசின் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார். “போக்கிரி” என்று செல்லமாக அசினின் கண்ணத்தை பிடித்து கிள்ளினேன்.

நேத்து ராத்திரி ஆடிச்சது கின்னுன்னு இருக்கு. ஏற்கனவே லேட். அடித்து பிடித்து ஆபிசுக்கு கிளம்பினேன். ராத்திரி அடிச்ச கூத்துல வீடே ரணகளமாகியிருந்தது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் துண்டுகள். வாழைப்பழத்தோல்கள்..காய்ந்து போன ஆப்பாயில் பிளேட்..தீர்ந்து போன பிளாக் லேபில்.

ஷ¥ ரேக்கிலிருந்து ஷ¥வைத்தேடி பிடித்து எடுத்தேன், விகடன் கீழே விழுந்தது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நிழைந்தேன். படுத்து எடுத்துட்டாயங்க. தனம் செல்லம் இருந்தான்னா சூடா காப்பி போட்டுக் கொடுப்பா. சேரில் உட்கார்ந்து ஷ¥ வைக்கழட்டி கடாசி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். செல்லம் எப்படா வருவ?

ஹ¤ம்..ம்ம்.. சோபாவில் வந்தமர்ந்தேன். குமுதம், விகடன், குங்கும எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு சுரீர் என்றது. ஷ¥ ரேக்கைப் பார்த்தேன்..நான் சமீபத்தில் கடாசிய ஷ¥வைத்தவிர சுத்தமாக இருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். சிகரெட் துண்டுகளைக்காணவில்லை. சுத்தம். ஆப்பாயில் பிளேட்டைக்காணோம். பிளாக் லேபில் காலி பாட்டில் இல்லை. மெதுவாக திரும்பி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். அட்சர சுத்தம். யார் கிளீன் பண்ணது.

வேகமாக எழுந்து கிச்சனிலிருக்கும் குப்பைத்தொட்டியைப் பார்த்தென். சிகரெட் துண்டுகளும், பிளாக் லேபிள் பாட்டிலும், வாழைப்பழத்தோல்களும் கிடந்தன. யார் கிளீன் பண்ணது?

ஒன்றும் புரியவில்லை. சாவி என்கிட்ட மட்டும் தான இருக்கு. தனம் வந்துட்டாளா?ஐயையோ.மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக ஏறிச்சென்று பார்த்தேன். தனம் இல்லை. என் ரூமில் நான் காலையில் கழட்டிப் போட்ட கைலி அழகாக மடித்து ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்தது.

தனம் நமக்கு தெரியாமல் வேலைக்காரி செட்டப் பண்ணிருப்பாளோ? இல்லியே. என் கிட்ட மட்டும் தான சாவி இருக்கு!

மணி பார்த்தேன். ஒரு மணி என்று தவறாகக் காட்டிக்கொண்டிருந்தது.

என்ன எழவெடுத்த கடிகாரம் டா, ஒன்னுலே நிக்குது. என் வாட்சைப் பார்த்தேன் மணி 9:40 காலை. நேற்று கடாசிய ஷ¥ வைத்தேடினேன். அழகாக ஹ¥ ரேக்கில் இருந்தது.

ஷ¥ மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் போது, ஒரு யோசனை தோன்றியது. புத்தகங்களையும் பேப்பரையும் எடுத்து ஹால் பூராவும் விசிறினேன். ஷ¥ ரேக்கை ஒரே எத்து. கலைந்து கீழே விழுந்தது. கொடியில் கிடந்த துணிகளை எடுத்து கடாசினேன். ஏன்னா, நேத்து ராத்திரி தனத்துக்கு போன் பண்ணி, எனக்கு வேலைக்காரி எதுவும் செட்அப் பண்ணிருக்கியாடா செல்லம்னு கேட்டேன். உனக்கு அந்த நெனப்பு வேற இருக்காடா, செருப்பால அடிப்பேன்னா. இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கதவை இழுத்து கிச்சுன்னு பூட்டினேன்.

வேலையே ஓடல. பயங்கர ஆன்டிசிபேஷன். கதவைத் திறந்தேன். கிட்டத்தட்ட நான் மயங்கி விழாத குறை. இன்றைக்கும் அட்சர சுத்தம்.

வீட்டுக்குள்ளே போறதா? வேணாமான்னு ஒரு சந்தேகம்! ‘ஹலோ எனிபடி ஹோம்?’ ன்னு கத்த நினைச்சேன், ஆனா ஈனசுரத்தில தான் முனங்க முடிஞ்சது.

வீட்டில் என்னைத்தவிர யாரும் இல்லை.

மணி அதே ஒன்றைக்காட்டிக்கொண்டிருந்தது. வாங்கி வந்திருந்த புது பேட்டரியை மாற்றினேன். 7:10 என்று திருப்பி வைத்தேன். ஏனோ சாமி பாட்டு கேட்கலாம் போல தோன்றவே. மஹாநதி ஷோபனா பாடிய முருகன் என்றால் அழகு பாடலில் ப்ளேயரில் போட்டேன்.

பயங்கர குளிர். தூங்கிவிட்டேன் போல.ப்ளேயர் சில இடங்களில் திக்கித்திணறிக்கொண்டிருந்தது. விரல்கள் ஜில்லென்றிருந்தது. ஜில்லென்று பத்து விரல்கள். சிடி தேய்ந்து விட்டதோன்னு நினைக்கிற அளவுக்கு மஹாநதி ஷோபனா திக்கினார். பாட்டை நிறுத்தி விட்டு, டீவியை ஆன் செய்தேன். படம் சரியாகத்தெரியவில்லை. சில சமயம் நன்றாகத்தெரிந்தது. பல சமயம் இருட்டாகியது. சை..மணி என்னான்னு பார்த்தேன். 7:15 என்று காட்டியது. அடப்பாவி பேட்டரி ஒர்க ஆகலையா? புது பேட்டரி ஆச்சே. என் வாட்சை எடுத்து பார்த்தேன். அதுவும் ஓடவில்லை. ஏன் இப்படி குளிர்கிறது? டீவியில் செல்வி நாடகம் முடிந்தது.

அப்பொழுதுதான் யாரோ படியிலிருந்து இறங்கி கிச்சனுக்குள் செல்வது போல இருந்தது. குட்டையாக. பெண். தலையை விரித்துக் கொண்டு. எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. தடால் புடால் என்று அடித்துக் கொண்டு எழுந்தேன். கிச்சன் காலியாக இருந்தது. பைப்பில் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்புறம் பழகி விட்டது. பெயரி ஆனந்தியாம். இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்திருக்கிறது. அந்த ஐயா ஏமாற்றி விடவே, இதோ நான் உட்கார்ந்திருக்கும் ஷோபாவுக்கு மேலே ரொம்ப வீக்காக சுற்றிக்கொண்டிருக்கும் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்தி கொஞ்சம் கனம் தான். பேன் எப்படி தாங்கியது என்று தெரியவில்லை.

நான் எவ்வளவு தூரம் கலைத்துப் போட்டாலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறது. சம்பளம் கொடுக்கத்தேவையில்லை. ஓசியில் ஏசி குளிர்.ஆனால் கடிகாரத்திற்கும் என் வாட்சுக்கும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேட்டரி மாற்றித்தான் மாளவில்லை. கடைக்காரார், “என்னடா புரோட்டா கிரோட்டா வாங்கித் திங்கப்படாது, பேட்டரிய ஏன் திங்கற” ங்கறமாதிரி பார்க்கிறார். செல்போனை ஒழித்து வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாள் அலுப்புடனும் தலைவலியுடனும் வந்து,”ஆனந்தி கொஞ்சம்” காப்பி என்றேன், கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்து விட்டு மறைந்துவிட்டது. இரண்டு நாள் லீவு போட்டு விட்டது. வீடெங்கும் ஒரே குப்பை. அப்புறம் நான் காப்பி கேட்க மாட்டேன் நான் காப்பி கேட்க மாட்டேன் என்று என்பது பக்க நோட்டில் எழுதியப் பிறகு வந்து வேலையில் ஜாயின் செய்து கொண்டது. நான் கிரிகெட் மேட்ச் பார்க்கும் பொழுதும், செல்வி தொடர் பார்க்கும் பொழுது மட்டும், இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இருந்தாலும் அப்பப்ப வந்து தொந்தரவு செய்யும். மேட்ச் மங்கலாக தெரியும்.

ஒரு வழியா அட்ஜெஸ்ட் ஆகியிருந்தப்பத்தான், வீட்டு ஓனரு தன்னுடைய மகன் (வெளிநாட்டில் வேலை பார்த்தவர்) வந்து இந்த வீட்டில் தங்கப்போவதாகவும், அதனால் வீட்டை காலி செய்யுமாறு சொன்னார். எவ்வளோ மன்றாடியும் கேட்கவில்லை. உங்கள் மகனை நிறைய பேட்டரிகள் அமெரிக்காவிலிருந்து வாங்கி வரச்சொல்லுங்கள், தேவைப்படும் என்று சொன்னேன். புரியாமல் முழித்தார். போகப் போகப் புரியும் அந்த பேயின் வாசம் தெரியும்.

***

கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா நமக்கு உபயோகமா இருக்கும்கிறப்போ கேட்கறது தான முறை. அப்புறம் கேட்டிருக்கலாமோன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

‘சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க’ என்றேன்.

காபி குடித்துக்கொண்டிருந்த வீட்டு புரோக்கர் நிமிர்ந்து பார்த்து, ‘என்ன சொல்லுங்க’ என்றார்.
நான் தயக்கத்துடன்,’உங்களுக்கு தெரியாதது இல்ல. வீட்டப்பத்தின எல்லா விசயங்களும் உங்களுக்கு தெரியும். வீடு எப்படி. யாராரு இருந்தாங்க.ம்..ம்…ம்…ம்ம்…யாராரு தற்கொலை செஞ்சிருக்காங்கன்னு…’

நான் முடிப்பதற்குள்ள, ‘சரிப்பா. அப்படி எதுவும் இல்லாத வீடாபார்த்து தாரேன்’ என்றார்.
‘இல்ல இல்ல..யாராவது தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன். அதுவும் வேலைக்காரி தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன்’ ன்னு சொன்னேன்.

சற்று நேரம் முறைத்து பார்த்த புரோக்கர், ‘இந்த குசும்பு தான வேணாங்கிறது…’ என்று கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.

***

மனைவியின் துணையில்லாமலே ஒண்டி ஆளாய் வீட்டை ஷிப்ட் செய்து விட்டேன். புது வீடுதான். சுவற்றி வாட்ச் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஆபீஸ் கிளம்புன் முன் – ஒரு நப்பாசையில் – ஷ¥ ரேக்கை கலைத்துப் போட்டேன். பேப்பரையும், துணிகளையும் கடாசினேன். வீடு குப்பையாக இருந்தது.

கதவைத்திறந்தேன். குப்பென்று சிகரெட் வாடை அடித்தது. காலையில் அடித்த சிகரெட் புகை இன்னுமா சுற்றிக்கொண்டிருக்கிறது. கலைத்தது கலைத்து போட்ட மாதிரியே இருந்தது. சுந்தரம் உனக்கு லக் இல்லடான்னு நினைச்சுக்கிட்டே சிகரெட் பாக்கெட்ட எடுத்தேன். பாக்கெட் காலி. டீவி பக்கத்தில் வெச்சிருந்த புது சிகரெட் பாக்கெட்ட எடுக்க போனேன். பாக்கெட் பிரிக்கப் பட்டிருந்தது. இரண்டு சிகரெட்களே மீதமிருந்தது. சோபாவுக்கு அடியிலெங்கும் சிகரெட் துண்டுகள்.

வாட்ச் ஓடவில்லை. மிகவும் குளிராக இருந்தது. யாரோ லுங்கி பனியனுடன் நிற்பது போலிருந்தது. இனி கோல்ட் பிளேக்கும், பிளாக் லேபிலும் இரண்டு மடங்காக வாங்கவேண்டும். ‘ஹாய்’ என்றேன் புதிய கம்பெனி கிடைத்து விட்ட சந்தோஷத்துடன்.

***

தேன்கூடு போட்டி : காடனேரி விளக்கு (சிறுகதை)

காடனேரி விளக்கு (சிறுகதை)

நின்று கொண்டிருந்த பஸ்ஸின் இரைச்சல் அந்த இரவின் நிசப்தத்தை ஒரு ஈட்டி போல் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. நாய்கள் எழுந்து நின்று வேடிக்கை பார்த்து விட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. சில நாய்கள் எங்கள் தூக்கத்தை ஏன் கெடுத்துத்தொலைக்கிறீர்கள் என்று பதிலுக்கு ஊளையிடத்தொடங்கின. நாளை விடிகாலை ஆண்டாளை தரிசிக்க அந்த பேருந்தில் சென்று கொண்டிருக்கும் சில பக்தர்கள் தூக்கத்திலிருந்து விழித்து பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்க இயலாமல் பெரிய கொட்டாவிகளை விட்டுக்கொண்டிருந்தனர்.’அமைதிக்கு பெயர் தான் சாந்தி’ என்ற பாடல் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தது, சன்னமாக. டிரைவர் ரோட்டை விட்டு சற்று தொலைவில் இருந்த கிணற்றில் கண்டக்டர் நீர் இறைப்பதையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

குடத்துடன் கண்டக்டர் ஓட்டமும் நடையுமாக வந்து, டிரைவரிடம் கீழே இருந்தபடி கொடுத்துவிட்டு, பின் வாசல் வழியாக பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பஸ் புறப்பட்டது.

கம்பியில் சாய்ந்த கொண்டே கையிலிருந்த இன்வாய்ஸ் பேப்பரை நிரப்பிக்கொண்டு வந்தவர், ஆட்களை எண்ணத்தொடங்கினார்.

இன்வாய்ஸ் பேப்பரை மடித்து கைப்பையில் வைத்து விட்டு, பின்னால் வந்தவர் அங்கே உட்கார்ந்திருந்த சிவப்பு சட்டை நபரிடம், ‘நீங்க எங்க ஏறுநீங்க’ என்றார். அவர் ‘T.கல்லுப்பட்டி’ என்றார். கண்டக்டர் சந்தேகமாக பார்த்துக்கொண்டே ‘எங்கே இறங்கனும்?’ என்றார். ‘காடனேரி விளக்கு’ என்றார் சிவப்பு சட்டை நபர். ‘டிக்கெட் வாங்கிட்டீங்களா?’ ‘ம்ம்.ம்ம்.’ என்று பையில் கை விட்டவரை ‘அடுத்த ஸ்டாப் தானே, எழுந்து நில்லுங்க விசில் கொடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்து சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

டிரைவரின் தலைக்கு மேல் பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த கடிகாரம் 11:30 என்றது. பயணிகள் ‘தேவதை இளம் தேவி’ என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

***

காடனேரி விளக்கு. பஸ் மிகுந்த இரைச்சலுடன் புறப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கிய செந்தில் அங்கேயே நின்று தனக்கு முன்னால் ஒரு பாம்பைப் போல நீண்டு வளைந்து கிடக்கும் தார் ரோட்டையே பார்த்துக்கொண்டு நின்றான். காடனேரி விளக்கிலிருந்து தன் கிராமமான காடனேரிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் நடக்கவேண்டும். வாட்சைப்பார்த்துக் கொண்டான். மணி 11:45. ரோட்டில் ஆள் அரவம் சுத்தமாக இல்லை. இருட்டு கடுமையாக படர்ந்திருந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

செந்தில் காடனேரியில் தான் பிறந்தான். பண்ணிரண்டு வயது வரை காடனேரியிலே வளர்ந்தான். பிறகு குடும்பம் மதுரைக்கு மாறியவுடன் இந்த பத்து வருடங்களில் காடனேரியை மறந்தே போனான். ஆனால் காடனேரி விளக்கிலிருந்து காடனேரிக்கு செல்லும் ரோட்டில் இருந்த அந்த மிகப்பெரிய ஆலமரமும், அதற்கு பின்னாலிருந்த சுடுகாடும், அப்பத்தாவின் பேய்க் கதைகளும் மனதில் அப்படியே பதிந்துவிட்டன. சரியான நேரத்தில் வெளிவரத்துடிக்கின்றன.

அவனையுமறியாமல் ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடல் வாயிலிருந்து வெளிப்பட்டது. ஓணான் ஒன்று காலுக்கடியில் புகுந்து ஓடியது. செந்திலை சிலீர் என்ற பயம் கலந்த உணர்ச்சி தாக்கி உடம்பெல்லாம் புல்லரிக்க செய்தது. நடப்பதை நிறுத்தி விட்டு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. தெளிவான நிசப்தம்.

யாராவது வந்தால் தேவலாம் போல இருந்தது. பால் வண்டி, மணல் லாரி அல்லது சிப்ட் முடிந்து திரும்புகிறவர்கள் என யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பயமாவது விலகும்.

காற்று கூட நின்று விட்டிருந்தது. ஏதேதோ சம்பந்தாசம்பந்தமில்லாத பாடலை வாய் முனுமுனுத்துக் கொண்டே வந்தது. கல்லுப்பட்டி லட்சுமி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திருக்க கூடாதோ? நேரத்தோடு வந்திருந்தால் ஒழுங்காக இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். சிவப்பு கலர் பேய்க்கு விருப்பமான கலரா? நான் சிவப்பு சட்டை வேறு போட்டிருக்கிறேனே. இவ்வளவு கருமையான இருட்டில் வெள்ளை வெளேர் என்று பேயொன்று வந்தால் தூரத்திலே தெரிந்துவிடாதா என்ன? பின்னால் வந்துவிட்டால். பேய் முதுகில் தானே அடிக்குமென்பார்கள்? சட்டென்று திரும்பிப்பார்த்தான். யாருமில்லை. எங்குமிருக்கும் காற்றைத்தவிர. தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவதைப்போல இருந்தது. உண்மைதானா? கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். உண்மைதான். சைக்கிளில் யாரோ வந்து கொண்டிருந்தார்கள். அருகில் வரட்டும் லிப்ட் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

சைக்கிளில் வந்தவர் இவனைப்பார்த்ததும் நிறுத்தினார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். செந்தில் அவரிடம் ‘அண்ணே நான் காடனேரி வரைக்கும் போகனும், கொஞ்சம் செக்கிளிலே கொண்டுபோய் இறக்கிவிட்டுடறீங்களா? இருட்டில நடக்க பயமாயிருக்கு’ என்றான். அவர் ‘காடனேரியா? காடனேரியில எந்த வீட்டுக்குப்போகனும்?’ என்றார். ‘ஆசாரி வீட்டுக்கு’ என்றான் செந்தில். அவர் சிறிது நேரம் அமைதியாய் அவனைப்பார்த்துவிட்டு. பிறகு ‘சரி முன்னால் ஏறிக்க’ என்றார். பின்னால் ஏதோ மூட்டையிருந்தது. செந்தில் ஏறப்போகும் பொழுது, ‘கொஞ்சம் பொறு’ என்றவர், ஹேண்ட்பாரைப்பிடித்து முன் டயரை அமுக்கிப்பார்த்தார். பின ‘தம்பி, முன் டயரில காத்து இருக்கான்னு பாரு’ என்றார். டயர் பங்சர்.

‘அண்ணே. நீங்களும் காடனேரி தானா?’ என்றான் செந்தில் நடந்து கொண்டே. ‘இல்லப்பா. நான் கீழக்காடனேரி. ம். ஆசாரி வீட்டுக்கு என்ன விசயமா வந்திருக்க?’ என்றார் சைக்கிளைத் தள்ளிக்கோண்டே. மூட்டை பத்திரமாக் பின் கேரியரில் உட்கார்ந்திருந்தது. ‘அக்கா கல்யாணத்திற்கு தாலி செய்யக்கொடுத்திருந்தோம். அவங்கதான் காலம்காலமா எங்க குடும்பத்திற்கு தாலி செஞ்சு கொடுப்பாங்கலாம். நாளைக்கு வாங்கிட்டு மத்தியான பஸ்ஸிலே போய்டுவேன்’ என்றான். கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

‘அண்ணே உங்க பேரு என்னண்ணே?’ என்று செந்தில் படர்ந்திருந்த அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கபார்த்தான். அவர் எதையோ தேடும் பாவணையில் இருந்தவர், திடீரென செந்தில் பக்கம் திரும்பி, ‘என்னப்பா? பேரா? ஆறுமுகம்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தேடத்தொடங்கினார். ஆந்தை ஒன்று கருவேல மரத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. மறுபடியும் அமைதி. சைக்கிள் டயர்கள் கல்லில் ஏறி இறங்கும் சத்தத்தை தவிர வேறு சத்தங்கள் இல்லை.

‘அண்ணே, என்னண்ணே தேடுறீங்க?’ என்றான் செந்தில். ‘ம்..ம்.. ஒன்னுமில்லப்பா.’ என்றவர், மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தார்.

கொஞ்ச தூரத்தில் ஆலமரம் தெரிந்தது. மேகச்சிறையில் விடுபட்ட நிலவு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்தது. உடன் ஒருவர் வந்து கொண்டிருந்தாலும் ஆலமரம் திகிலூட்டவே செய்தது.

திடீரென்று, ‘டேய். நீ அங்க தான் இருக்கியா? உன்னக் கொல்லாம விடமாட்டேன்டா’ என்று சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு மூட்டைக்குள் கைவிட்டு அறிவாளை எடுத்துக்கொண்டு ரோட்டைவிட்டு கீழிறங்கி ஓடினார் ஆறுமுகம். ரோட்டின் ஓரத்தில் பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் அவர் கால் மிதித்து ஓடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான். போய்விடலாம் என்று நினைத்தவனின் கால்கள் தூரத்தில் தெரியும் ஆலமரத்தைப் பார்த்தவுடன் நடக்க மறுத்தன.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஆறுமுகம், அவர் ஓடிச்சென்ற பாதையிலிருந்து வேகவேகமாக வெளிப்பட்டார். கையில் அறுவாள் இல்லை. வாய்க்காலில் இறங்கி வேகவேகமாக தண்ணீரை அள்ளி அள்ளி குடித்தார். செந்தில் அருகில் சென்று அவரை ‘அண்ணே’ என்று அழைத்தான். நிமிர்ந்த அவர் இவனைப்பார்த்துக்கொண்டே தொப்பென்று வாய்க்காலில் நிலைகுப்புற விழுந்தார். விக்கித்து நின்ற செந்தில் மறுபடியும் ‘அண்ணே’ என்றான். பதிலில்லை. மெதுவாக வாய்க்காலில் இறங்கினான். அவர் சலனமில்லாமல் படுத்துக்கிடந்தார். மூச்சிருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. பகீரென்றது. தூக்க முயற்சித்தான். முடியவில்லை. வேக வேகமாக ரோட்டில் ஏறி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் வேகமாக நடந்ததில் ஆலமரத்தை தாண்டியதைக்கூட அவன் கவனிக்கவில்லை. யாராவது தெனபடுகிறார்களா என்று அவன் கண்கன் தேடிக்கொண்டிருந்தன.

சிறிய பாலம் போன்று இருந்த திண்டில் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அருகில் சென்று ‘ஐயா’ என்று அழைத்தான். கம்பளிப்போர்வைக்குள் உடலை மறைத்துக்கொண்டிருந்தவர் சிறிது நேரம் கழித்து திரும்பினார். அவர் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது.’ஐயா ஒருத்தர் ஆலமரத்திற்கு பக்கத்தில வாய்க்கால்ல மூச்சு பேச்சில்லாம விழுந்து கிடக்கிறார். கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா தூக்கிரலாம்’ என்றான். அவன் இவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு, கம்பளியை விலக்கினார். ஒரு கை இல்லை. கம்பளியை மூடிக்கொண்டு மறுபடியும் திரும்பிக்கொண்டார். பீடிப்புகை மட்டும் வானத்தை நோக்கி மேலெழும்பிக்கொண்டிருந்தது.

செந்தில் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். கீழக்காடனேரியை கொஞ்ச நேரத்தில் தொட்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒத்தையாக நின்ற பொட்டிக்கடையின் கீழே ஒருவன் குத்தவவைத்து உட்கார்ந்திருந்தான்.

‘ஐயா ஒருத்தர் வாய்க்காலில்….’ என்று செந்தில் சொல்வதற்குள் அவன், ‘ அவன்கிட்டயிருந்துதான் நான் தப்பிச்சு ஓடியாறேன். என்ன பார்த்தானா கொன்னுபோடுவான்’ என்று சொல்லிவிட்டு தலையைப்பிடித்துகொண்டு கீழே பார்த்தான். அப்பொழுதுதான் செந்தில் கவனித்தான் கீழே குளமாக வாந்தி. செந்தில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகள் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தனர். குழந்தைகளின் உடம்பில் பொட்டுத்துணியில்லை. இந்த பெண்ணிடம் உதவி கேட்கலாமா என்று தயங்கிய செந்திலிடம், அந்த பெண், ‘தம்பி, வழியில யாரையாவது சைக்கிள்ல பார்த்தியாப்பா?’ என்றாள். ‘ம்ம்..ஆறுமுகன்னு ஒருத்தர் வந்தார். இப்போ பேச்சு மூச்சில்லாம வாய்க்கல்ல விழுந்துகிடக்கிறார். அனேகமா..’ என்று முடிப்பதற்குள் ‘ஐயோ என்னங்க..எத்தன தடவ சொன்னேன்…’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள். குழந்தைகளும் பின்னாலேயே ஓடின. ஒரு குழந்தை செந்திலை திரும்பிப்பார்த்தது.

முதலில் ஓடாமல் நின்று கொண்டிருந்த செந்தில், பிறகு என்ன நினைத்தானோ அவர்கள் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

***

காடனேரி விளக்கு. தன்னை இறக்கிவிட்ட பஸ் செல்வதையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. யாராவது கண்டிப்பாக சைக்கிளில் வருவார்கள், தொத்திக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்த பஸ்ஸ்டாண்ட் திண்டிலே உட்கார்ந்து விட்டான்.

சைக்கிளில் ஒருவர் வரவும், கை நீட்டினான். அவர் நிறுத்தவே, ‘அண்ணே காடனேரியில இறக்கி விட்டுடறீங்களா?” ‘பின்னால மூட்டையிருக்கு முன்னால ஏறிக்கோ’ என்றார் அவர். பாண்டி ஏறி உட்கார்ந்துகொண்டான்.

சைக்கிள் நபரிடமிருந்து சாரய நெடி தூக்கலாக அடித்தது. பாண்டி நாவில் எச்சில் ஊரியது. ‘அன்ணே, ஆலமரத்து சுடுகாட்ட தாண்டி இருக்கில கிணறு. அதுக்கு பின்னால இப்ப சாரயம் விக்கிறாய்ங்க பாத்தீங்களா?” என்றான். ‘அப்படியா? போனதில்லையேப்பா” என்றார் சைக்கிள் நபர். ‘அண்ணே இப்ப போவோமா. ஒரே ஒரு ரவுண்டு மட்டும் குடிச்சிட்டு உடனே போயிடலாம்” என்றான் பாண்டி. “இல்லப்பா, ஏற்கனவே நிறைய குடிச்சிட்டேன். வீட்ல கடங்காரி திட்டுவா” என்றார். “அக்காவ பத்தி பின்னாடி கவலப்படலாம். நீ மொதோ சைக்கிள அங்க விடுண்ணே” என்றான் தூரத்தில் தெரிந்த ஆலமரத்தைப் பார்த்துக்கோண்டே.

பாண்டியும், சைக்கிள் நபருக்கும் போதை தலைக்கேறியிருந்தது. இருவரும் ஏதேதோ உளரிக்கொண்டிருந்தனர். சைக்கிள் நபர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தன் மனைவி தன்னை குடிக்ககூடாது என்று நச்சரிப்பதாகவும் கொல்லிக்கொண்டிருந்தவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் சத்தமாக, “கொஞ்சம் ஊறுகா இருந்தா கொடுடா” என்றார். அந்த நபர் முறைத்துப் பார்த்துக்கொண்டே, மீதமிருந்த ஊறுகாயை இடது கையால் எடுத்துக்கொடுத்தார். ‘என்னா நொட்டாங்கையில் தார? இன்னொரு கை என்ன கள புடுங்குதா?” என்று சொல்லிக்கொண்டே ஊறுகாயை வாங்கினார் ஆறுமுகம். பாண்டி “அவன் ஒத்தக்கையண்ணே. சோத்தாங்கை அவனுக்கில்ல” என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். ஒத்த கையன் முறைத்துக்கொண்டே பாட்டிலை முழுவதுமாக் குடித்து முடித்தான். “ஐயோ அம்மா” என்று அங்கே குடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வயிற்றைப்பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவன் துடிதுடித்து அழுவதைக்கண்டு கிணற்றுத் தவளைகளெல்லாம் பதுங்கிக்கொண்டன. அனைவரும் பீதியில் உரைந்தனர். அடித்த போதை இறங்குவதை போல இருந்தது. தொடர்ந்து நிறைய பேர் வயித்தை பிடித்துக்கொண்டு விழுந்தனர்.ஒத்தக்கையன் வயிற்றைப் பிடித்தவாறு எழுந்து சென்றான்

ஆறுமுகம் தான் குடித்துப்போட்ட மூன்று பாட்டில்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆறுமுகத்திற்கு வயிற்றைப்புரட்டிக்கொண்டு வந்தது. பிறகு பயங்கரமாக வலித்தது. பாண்டி’ அண்ணே சாரயத்தில விஷம் கலந்திருச்சு போல இருக்குண்ணே” என்றவன் “ஐயோ அம்மா” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டான்.

ஆறுமுகம் “ஐயோ. இப்போ என்ன செய்வேன்?” என்றவர், ” நான் வரமாட்டேன்னு சொல்லியும் நீ தாண்டா வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்த?” என்று பாண்டியை ஓங்கி ஒரு மிதி விட்டார். பாண்டி எழுந்து வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடினான்.

ஆறுமுகம் “ஐயோ, பிள்ள குட்டிகள யாரு காப்பாத்துவா? உன்னக்கொல்லாமா விடமாட்டேன்டா” என்று அவனை விரட்டிக்கொண்டு வந்தவர், வாய்க்காலில் தண்ணீரைப்பார்த்ததும், வேக வேகமாக அள்ளி அள்ளிக்குடித்தார். பிறகு பொத்தென்று வாய்க்காலில் விழுந்தார்.

பாண்டி வயிற்றைப்பிடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ஒத்தகையன் பாலத்தின் திண்டில் சாய்ந்து கிடந்தான். உயிர் போகும் அளவுக்கு கத்திக்கொண்டிருந்தான். பாண்டியால் வெகுதூரம் ஓட முடியவில்லை. வயிற்று வலி மிகப்பயங்கரமாக இருந்தது. பொட்டிக்கடையருகே நின்று சோடா வாங்கி குடித்தவன், குத்த வைத்து உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தான். கை கால்களை உதைத்துக்கொண்டு கத்தினான். பிறகு மரத்தில் இவனுக்கு போட்டியாக கரைந்து கொண்டிருந்த காகத்தை இமைக்காமல் வெறிக்கத்தொடங்கினான்.

‘ஐயோ.. என்னங்க..எத்தனை தடவ சொன்னேன். குடிக்காதீங்க குடிக்காதீங்கன்னு” என்று கத்திக்கொண்டே ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே இரண்டு குழந்தைகள் பொட்டுத்துணியில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை திரும்பி பாண்டியைப் பார்த்தது.

***

“ஐயோ எத்தனை தடவை சொன்னேன்..” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் அந்தப் பெண். குழந்தைகளும் கூட ஓடினர். முதலில் ஓடாமல் இருந்த செந்தில் ஓட ஆரம்பித்தான்.

அந்த பெண் வாய்க்காலில் விழுந்துகிடந்த ஆறுமுகத்தை நெருங்கினாள். “ஐயோ எங்கள விட்டுட்டு போய்டீங்களா? இந்த பிள்ளைகளை வெச்சு நான் எப்படி காப்பாத்துவேன்” என்று கதறிக்கொண்டே தூரத்தில் தெரிந்த கிணற்றைப் பார்த்தாள்.

செந்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றான். அந்த பெண் கிணற்றை நோக்கி ஓட அரம்பித்தது. குழந்தைகளும் பின்னாலேயே ஒடினர். செந்தில் “ஐயோ வேணாம். தற்கொலை செய்துக்காதீங்க” என்று அவர்களை தடுத்து விடும் நோக்கத்தோடு ஓடினான்.

திடீரென்று அந்த பெண், மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. ஓடிய சுவடே தெரியவில்லை. எங்கும் நிசப்தம். செந்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். ‘ஷ்..ஷ்’ என்ற சத்தம் கேட்கவே, கீழே பார்த்தான். ஒரு கரு நாகப்பாம்பு படமெடுத்து நின்று கொண்டிருந்தது.

***

கண்டக்டரின் விசில் சத்தம் கேட்டு பஸ் நின்றது. ‘ராஜா மகள் புது ரோஜா மலர்’ பாடல் சத்தமாக கேட்டது. கண்டக்டர் எழுந்து, ‘ஏய் யாருப்பா காடனேரி விளக்கு கேட்டது. சட்டுன்னு இறங்குப்பா’ என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. இறங்கவில்லை.

எரிச்சலடைந்த கண்டக்டர் ‘அதுக்குள்ள தூங்கிட்டானா?’ என்று எழுந்து பின்னால் வந்தார், ‘ஏம்பா இங்க ஒரு சிவப்பு சட்டை உட்கார்ந்திருந்தானே. காடனேரி விளக்கு இறங்கனும்னு சொன்னானே. எங்க காணோம்?” என்றார்.

‘பஸ் வேற எங்கவும் நிக்கவேயில்ல. அவன் எங்க இறங்கினான்? எப்படி மாயமானான்?’ என்று யோசித்துக்கொண்டே, இன்வாய்சை எடுத்துப் பார்த்துவிட்டு பயணிகளை எண்ணினார். சரியாக இருந்தது. கண்டக்டர் குழம்பியவாறு டபுள் விசில் கொடுத்தார்.

***

15-09-2006 அன்று கடைசிப்பகுதிக்கு முந்தைய பகுதி சேர்க்கப்பட்டது.

தேன்கூடு-போட்டி : தொலைவு

(சிறுகதை)

பிப்ரவரி 2 2003
கோடாங்கிபுரம்


கருப்பாயிதாயி, தனது முதுமையைப் பற்றி பெரிதும் அலடிக்கொள்ளவில்லை. அந்த சுட்டெரிக்கும் சூரியனையும் கண்டுகொள்ளவில்லை. சூரியன் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, மேலும் சூடானான். கருப்பாயி 50 வயதை தாண்டியவள், என்றாலும் இடைவிடாத உழைப்பு அவளை மேலும் மேலும் வலுவாக்கிக்கொண்டேயிருக்கிறது. மேலக்கோணார்புரத்திலிருந்து, மலேசியாவிலிருக்கும் தன் மகன் செல்லையாவின் குரலைக் கேட்க, இந்த வேகாத வெயிலில் தன் அண்ணன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். மேலக்கோணார்புரத்தில் போன் வசதி கிடையாது. மலேசியாவிலிருக்கும் செல்லையா தன் மாமாவின் வீட்டிற்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பேசுவான். கருப்பாயி வாழ்க்கையில் எதைத் தவறவிடுகிறாளோ இல்லையோ, முதல் ஞாயிற்றுக்கிழமையை தவறவிட்டதில்லை. செல்லையாவும் தான்.

படி ஏறியவுடன், கருப்பாயி தன் அண்ணனிடம் செல்லையா இன்னும் போன் செய்திருக்கவில்லை என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள். மதனியிடம் ஒரு டம்பளர் மோர் வாங்கிக் குடித்துவிட்டு, கருமை நிறத்தில் சாந்தசொரூபியாய் அமர்ந்திருக்கும் டெலிபோனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் மதியம் 12:00 மணிக்கு ‘டான்’ – டிரிங் – என்று போன் செய்துவிடுவான் செல்லையா. இன்று மணி மூன்றைத்தாண்டிக்கொண்டிருந்தது. மதனி சாப்பிட அழைத்ததும், ஒப்புக்கு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் வந்து டெலிபோன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

மணி ஆறாகியது. மாலை ஏழாகியது. பக்கத்து வீட்டு முனியனைக் கூப்பிடச்சொல்லி, கெஞ்சிய ‘காலை’த் தவிற வேறு ஒரு ‘காலும்’ வரவில்லை.

‘ஏதாவது வேலையா இருந்திருப்பான்மா, கவலைப்படாதே’ என்று தேற்றிய அண்ணனுக்கு செவிசாய்க்கவில்லை.

இரவு தங்கிவிட்டு, காலை செல்லலாம் என்று வற்புறுத்திய அண்ணிக்கு, தாரணி வீட்டில் தனியாக இருப்பாள் என்ற காரணத்தைக் காட்டி, வெற்று மனதோடும், கனத்த மவுனத்தோடும் மறுபடியும், மேலக்கோணார்புரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், சோர்வோடு.

மார்ச் 2 2003
கோடாங்கிபுரம்.

மாலை மணி ஆறாகியும் செல்லையாவிடமிருந்து போன் வரவில்லை.

மார்ச் 6 2003
மேலக்கோணார்புரம்.

யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு தாரணி வீட்டு வாசலுக்கு வந்தாள். ‘ஆத்தா இல்லையா?’ ‘இல்ல. என்ன விசயம்?’ ‘உங்க அண்ணன் செல்லையா மலேசியாவிலேருந்து கூப்பிட்டிருந்தானாம். நல்லா இருக்கானாம். அடுத்த மாசம் மொதோ ஞாயிற்றுக் கிழமை கூப்பிடறேன்னு சொன்னானாம். கோடாங்கிபுரத்திலிருந்து ராமையா சொல்லி அனுப்பிச்சாரு’ என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று நடந்து சென்றார், வந்தவர்.

ஏப்ரல் 6 2003
கோடாங்கிபுரம்.

கருப்பாயி, போனையே வெறித்துக்கொண்டிருந்தாள். ‘அட இங்கன வந்து உக்காரு தாயி, அவன் போன் பண்ணுவான்’ கூப்பிட்ட அண்ணனையும் கண்டுகொள்ளவில்லை.
மணி அடித்தது.

‘யாரு செல்லையாவா?’
‘ஆமாப்பா, ஆத்தாதேன் பேசுறேன். நல்லாயிருக்கியா ராசா?’
‘நான் நல்லாயிருக்கேஞ்சாமி. நீ நல்லாயிருக்கியாய்யா?’
‘சாப்பிட்டியா ராசா?’
‘நல்லா சாப்பிடனும் தம்பி. என்னய்யா சாப்ட?’
‘நல்லா கோழி கீழிய வாங்கி திங்கப்படாது?’
‘ஆத்தா நல்லாயிருக்கேன் ராசா. தாரணியும் நல்லாயிருக்கு. அவதேன் நெடு நெடுன்னு வளர்ந்து நிக்கிறா’
‘அத பாத்துக்கிடலாம்யா. நீ கவலைப்படாத!’
‘குரல் ஏன்யா ஒரு மாதிரி கரகரன்னு இருக்கு. உடம்புகிடம்புக்கு சரியில்லையா?’
‘உடம்ப பார்த்துக்க ராசா! தொலவட்டுல இருக்குற பய! எங்களப்பத்தி கவலப்படாத’
‘ஏன்யா? தம்பியா?’
‘தம்பி நல்லாயிருக்கான்யா. காலு இப்ப பரவாயில்ல!’
‘ஏதோ ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்கல்ல’
சரிப்பா’
‘சரிப்பா. கொண்டு போய் காமிக்கறேன்’
‘எனக்கு அனுப்பறது இருக்கட்டும். நீ உன் செலவுக்கு வெச்சுக்கையா.’
‘சரிப்பா. இருபதினாயிரமா. சரி ராசா’
‘உடம்ப பாத்துக்க ராசா’
‘தம்பி கிட்ட சொல்றேன். சரிப்பா’
‘தாரணி நல்லாயிருக்காப்பா’
‘வெச்சிடுறேன். நல்லா சாப்பிடு ராசா’

ஆகஸ்ட் 3 2003
கோடாங்கிபுரம்.

….
‘மழைக்கு வீடெல்லாம் ஒழுகிப்போச்சுப்பா. ராத்திரியெல்லாம் நின்னுகிட்டேயிருந்தோம்’
‘அதுகிடக்கட்டும்யா. பாத்துகிடலாம்’
‘ரொம்ப செல்வாகுமேய்யா’
‘கூரையப்பிரிச்சிட்டு ஓடுமட்டும் போட்டுக்குவோம்யா. சொன்னா கேளு ராசா. இழுத்துப்போட்டுக்கிடாத’
‘சரிப்பா’
‘நீ உன் செலவுக்கும் கொஞ்சம் வெச்சுக்கப்பா’
‘சரி ராசா’

நவம்பர் 2 2003
கோடாங்கிபுரம்.

‘டாக்டர் இன்னும் கொஞ்ச நாள்ல கால் சரியாயிடும்னு சொல்லியிருக்காருய்யா. மருந்து தொடர்ந்து சாப்பிடச் சொல்லியிருக்காரு’
‘ம்ம்..கொஞ்சம் கொஞ்சம் நடக்குறானய்யா’
‘ஓடு போட்டாச்சுப்பா’
‘ஏன்யா குரல் ஒரு மாதிரி இருக்கு. முன்ன மாதிரி கலகலன்னு பேசமாட்டேங்கிறியே?’
‘ஊரு புடிக்கலைன்னா வந்திடு ராசா’
‘சொல்லுய்யா. ஏன்யா பேசாம இருக்க?’
‘வாங்குன கடனையெல்லாம் நான் அடைக்கிறேன்யா. நீ எதுக்கு ராசா கவலைப்படுற?’
‘தாரணி நல்லாயிருக்காப்பா. அடுத்த தடவ கூட்டியாறேன்’

டிசம்பர் 7 2003
கோடாங்கிபுரம்

‘அண்ணே. எப்படிண்ணே இருக்க?’
‘நல்லாயிருக்கண்ணே. தம்பி நல்லாயிருக்காண்ணே’
‘கொஞ்சம் நடக்குறாண்ணே’
‘சாப்பிட்டேண்ணே. நீ என்ன சாப்பிட்ட?’
‘நல்லா சாப்பிடுண்ணே’
‘அழலண்ணே’
‘இல்லண்ணே அழலண்ணே’ (அழுகிறாள்)

‘ஏ கழுத! ஏன் அழுகுற?’ கருப்பாயி போனை மகளிடமிருந்து வாங்குகிறாள்.

‘கோணாருக்கு கொடுத்தாச்சுப்பா.’
‘ஆமாய்யா. இன்னும் 30 பாக்கி இருக்கு’
‘அது வந்துகிட்டேதான் இருக்கு. மசமசன்னு வளர்ந்து நிக்கறாளே’
‘30,40 பவுன் கேக்காறாங்கய்யா.’
‘நமக்கு சரிப்பட்டு வராதுய்யா’
‘வேணாம்யா. அகலக்காலு வெக்கவேணாம்’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் பாக்கனுமா. வேற ஏதாவது பாப்பம்யா’
‘நீ எஞ்சாமி கஷ்டப்படுற?’
‘சரிய்யா. உன் இஷ்டம்’
‘தாரணி இங்க வா.அண்ணன் கூப்பிடறான் பாரு’

மே 2 2004
கோடாங்கிபுரம்.

‘அண்ணே நீ வாண்ணே. நீ வந்தாத்தேன் நான் கல்யாணம் பண்ணுவேன்’
‘போண்ணே’
‘அழலண்ணே’
‘அழலண்ணே’ (அழுகிறாள்)

கருப்பாயி போனை வாங்குகிறாள்.
‘ஜூன் 14 முகூர்த்தம் வச்சிருக்குய்யா’
‘அவளுக்கு சந்தோசம் தான். புடிச்சிருக்கு புடிச்சிருக்கு’
‘கவர்மெண்ட் மாப்பிள்ளை, கசக்குதா என்ன?’
‘ஏஞ்சாமி ரொம்ப வேலையோ? ஒரெட்டு வந்திட்டுபோயேன்’
‘ஏன்யா. ஆமாய்யா’
‘அதான் அனுப்பிச்சிருக்கல்லய்யா?’
‘சரிய்யா’
‘உடம்ப பார்த்துக்கராசா’
‘உடம்புக்கு முடியல்லையா? குரல் ஏன் கரகரன்னு இருக்கு?’

டிசம்பர் 5 2004
கோடாங்கிபுரம்.

‘முடிச்சாச்சுய்யா. எல்லா கடனும் முடிச்சாச்சு.’
‘பாயுக்கும் கொடுத்தாச்சு’
‘நீ தான்யா செஞ்சுகாட்டியிருக்க’
‘ஒரெட்டு வந்திட்டுப் போயேன்’
‘வேலை அதிகமா இருக்கா?’
‘வேலை வேலைன்னு உடம்பக்கெடுத்துக்காத’

ஜனவரி 2 2005
கோடாங்கிபுரம்.

மணி மாலை ஆறு ஆகியும் போன் வராமல், போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

பிப்ரவரி 6 2005
கோடாங்கிபுரம்

கருப்பாயி போனையே வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

***

சனவரி 5 2003
சன்பெங். கோலாலம்பூர்.

ராஜா அந்த ரூமின் கதவைத்திறந்தான். ரூம் லைட் போடப்படவில்லை. லைட்டரை உபயோகித்து சுவிட்சைப் போட்டான். அறை பிரகாசமாகிறது.
செல்லையா ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தான்.
‘டேய் செல்லையா. எழுந்திரு’
செல்லையா அழுது வீங்கிய கண்களோடு ராஜவை ஏறிட்டுப்பார்த்தான்.
‘இந்தாடா சாப்பிடு’ ராஜா ஒரு புரோட்டா பார்சலைக்கொடுத்தான். அவன் வாங்காததால் அதைக்கீழே வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான்.
‘சாப்பிடு டா. எதுக்கு வயித்த பட்டினி போடற?’
நிறைய வற்புறுத்தலுக்குபிறகு, செல்லையா பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். சிறிது நேரத்திலேயே அழ ஆரம்பித்தான்.
‘என் ஆத்தா சாப்புட்டுச்சா என்னான்னு தெரியல்லையே. ஊர்ல கடன உடன வாங்கி இங்க வந்தேன், கட்டட வேலைன்னு சொன்னாங்க. ஆனா டேபிள் கிளீன் பண்ணேன். இப்ப அதுவும் போச்சு. வேலையில்லாமா சம்பளமில்லாம கடனை எப்படி அடைப்பேன். கால் ஆனியிருக்கிற தம்பிக்கு எப்படி வைத்தியம் பார்ப்பேன். தங்கச்சிய எப்படி கரையேத்துவேன். ஆத்தா ஒத்தையில கஷ்டப்படுது ராஜா’
கண்களைத் துடைத்துக்கொண்டு புரோட்டாவையே வெறித்துக்கொண்டிருந்தான் செல்லையா.
‘ம்ம்.. கவலைப்படாதடா. செக்கியூரிட்டி வேலை ஒன்னு இருக்கு. எனக்கு தெரிஞ்ச இடம் தான். கொஞ்ச நாள் அங்க வேலை செய்யி. பிறகு பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடு, எதுக்கும் கவலைப்படாத. இங்க வார எல்லார் பாடும் இபப்டித்தேன்’ ராஜா சொல்லிவிட்டு விட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த மங்கலான விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சனவரி 6 2003
சன்பெங். கோலாலம்பூர்.
சுனங்கா கோண்டோமினியம்
. மாலை மணி 6

செல்லையா தனக்கு கொஞ்சமும் பொருந்தாத செக்யூரிட்டி உடையை அணிந்து கொண்டு, கோண்டோவின் வாசலில் நின்றான். கோண்டோவின் முகப்பில் இருக்கும் அறையின் உள்ளேயிருந்த மற்ற இரு செக்யூரிட்டிகளும், வெளியே தலையை நீட்டி இவனை அழைத்தனர். அவர்கள் இவனுக்கு எதிர்மாறாய் நல்ல அகலமாக இருந்தனர். கண்கள் இரத்த சிவப்பாக இருந்தது. கைகளில் கருகருவென்று முடி அடரிந்திருந்தது.

விசாரிப்புகள் முடிந்தபிறகு ரவுண்ட்ஸ் போகச் சொன்னார்கள். செல்லையா கோண்டோவைச்சுற்றிலும் நடந்து, அதன் அமைப்பை உணர்ந்து கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். விதம் விதமான மலேசியத்தயாரிப்பு கார்கள். விதம் விதமான பைக்குகள். சினிமாவில் ஐரோப்பிய புல் வெளிகளில் விஜய், அசினைப் பின்னால் வைத்துக்கொண்டு ஓட்டி வருவதைப்போல. செல்லையா தொட்டுபார்த்துக்கொண்டான்.

கோண்டோவின் பின்புறம் கார்கிளீன் பண்ணும் செட் ஒன்று இருந்தது. ‘பாபா கிச்சுத்தா’ பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. நாலைந்து இந்திய இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கோண்டோவில் கார்கள் வந்தவன்னம் இருந்தன. கேட் திறந்து விடுவதே பெரிய வேலையாக இருந்தது. அவனும் மற்ற ஒரு செக்யூரிட்டி மட்டுமே இருந்தார்கள். இன்னொரு செக்யூரிட்டி செல்லையாவை சிகரெட் வாங்கிவர நாலாவது மாடியில் இருக்கும் கடைக்கு அனுப்பினார்.

மணி 12:00 இரவு.
கார் வரத்து குறைந்துவிட்டது. மற்றொரு செக்யூரிட்டியின் குரட்டை காதைப்பிளந்தது. பிளாக் லேபிள் ஒன்று காலியாக இருந்தது. ‘எங்கம்மா உங்கம்மா’ பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. நேயர் விருப்பமாம். எந்த மடையன் இராத்திரி 12 மணிக்கு இந்த பாட்டைக்கேட்கிறானென்று தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். இண்டர்காம் ஒலித்தது. நாலாவது மாடியின் கடைப்பையன் அழைத்தான்.

லிப்டைவிட்டு வெளியேறி நாலவது மாடியில் நுழைந்ததுமே சத்தம் பயங்கரமாக கேட்டது. உடைந்த பாட்டில் துண்டுகள், இவன் கனத்த பூட்ஸ் காலில் மிதிபட்டு மேலும் சில்லாகியது. தரையெங்கும் பாட்டில் சிதிலங்கள். செல்லையா மெதுவாக நடந்து கடையின் அருகே சென்றான். அங்கு தடிதடியாக ஆறு பேர், போதையில் தாருமாறாக விளையாடிக்கொண்டிருந்தனர். கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

முதலில் செல்லையாவை அவர்கள் சட்டைசெய்யவில்லை. செல்லையா எச்சரித்தான். அவர்கள் அடங்கவில்லை. ஒருவன் இவனை அடிக்க கை ஓங்கவும், செல்லையா போலிசுக்கு போகிறேன் என்று கடையின் உள்ளே சென்று போனைத்தேடி நம்பரை அழுத்தினான். சற்று நேரம் வெறித்துப் பார்த்த அவர்கள், ஒவ்வருவராக வெளியேறினர். ‘நீங்க மொதல்லையே போலிசுக்கு போக வேண்டியதுதான?’ என்று கடைக்காரரை கேட்டுவிட்டு, கீழே வந்தான், செல்லையா, முதல் நாள் வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியோடு.

‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மணி இரண்டு அடித்தது. தொப்பியை எடுத்து மாட்டிக்கோண்டு, லத்தியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ¤க்கு தயாரானான்.

குளிர் அதிகமாக இருந்தது. நாளைக்கு ஜாக்கெட் கேட்டு வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆத்தா இந்நேரம் தூங்கியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான். கார்கள் அமைதியாக நின்றன. அந்த மணியிலும் ஒருவன் காரை கிளப்பும் ஓசை கேட்டது. கோண்டோவின் பின்புரம் வந்தான். கார் கிளீன் செட் அமைதியாக இருந்தது. அங்கு சற்று ஈரமாக இருந்தது. சில இரவுப்பறவைகளின் சத்தங்களைத் தவிர வேற எந்த சத்தமும் இல்லை. கார் செட்டுக்குப் பக்கத்தில் ஏதோ நிழல் தெரியவே, சற்று நின்று கவனித்தான். மறைவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. நாலாவது மாடியில் பார்த்தது போலத் தோன்றவே, ‘ஏய்…நீ என்ன இங்க..’ என்று கேட்டு முடிப்பதற்குள், பின் மண்டையில் கனமாக தாக்கப்பட்டதை உணர்ந்தான். திரும்பிப் பார்க்க நினைத்தான் முடியவில்லை. நினைவு தப்பிக்கொண்டிருந்தது. கீழே விழுந்தான். ஆத்தாவின் முகம் வானமெங்மும் நிறைந்திருந்தது. ஒரு உருவம் ஸ்பேனர் பொன்ற தடியான ஒன்றை தன் முகத்துக்கு நேரே ஓங்குவது மங்கலாகத்தெரிந்தது. ‘ராஜா’ என்று சன்னமாக கூப்பிட்டான். பின் சுத்தம்.

***

மார்ச் 6 2003.
கோலாலம்பூர்.

ராஜா, தொலைபேசியில் எண்களை டயல் செய்து, காதுக்கு கொடுத்தான்,
‘கோடாங்கிபுரமா? மாமா நான் தான், செல்லையா பேசுறேன்.’

***

சேர்ப்பு: 21-08-2006

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே சென்று வாக்களிக்கவும்.
http://www.thenkoodu.com/survey/2006-08/

மழையும் கொலையும்

(சிறுகதை)

ருப்பட்டிக் காப்பியின் மனம், என் மூளையின்(?) அடி வரை சென்று, வடிந்து கொண்டிருந்த உற்சாகத்தை மீட்டெடுத்துக்கொண்டிருந்தது. அப்பத்தாவின் காப்பி மட்டும் ஏன் இத்தனை ருசியாக இருக்கிறது? இரைச்சல் மிகுந்த நகரத்தின் புழுதிகளில் புகுந்து எங்கு தேடினாலும், இதுபோன்றதொரு காப்பியைக் கண்டுபிடிக்கமுடியாது. கிராமங்கள் தான் எவ்வளவு அழகனாவை? அமைதியானவை? செமஸ்டர் விடுமுறை முடிந்து, கல்லூரி செல்லத் தொடங்கினாலும் இந்த கிராமத்தின் நினைவுகள், ஒரு நிழலைப் போல, சில மாதங்கள் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு செமஸ்டரின் விடுமுறையிலும் தவறாமல் நான் என் அப்பத்தாவின் கிராமத்திற்கு வந்துவிடுவேன். நான் வந்து சில நாட்களில் அப்பாவும் அம்மாவும் வந்து விடுவார்கள். ஒருவாரம் இங்கே இருப்போம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய நபர்களைத் தெரிந்திருக்கும். எனக்கு ஒரு சில நண்பர்களே உண்டு. குறிப்பாக அன்பு. கருப்பட்டிக்காப்பியின் படிந்த துகள்கள், தொண்டையில் கமறலை உண்டுபண்ணியது.

நான் மெதுவாக எழுந்து வெளியில் வந்து நெட்டி முறித்தேன். கொட்டாவி ஒன்று போனஸாக வந்தது. குற்றாலத்துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, செறுப்பை அணிந்து கொண்டேன். நாயொன்று என்னைச் சுற்றி சுற்றி வந்து வாலாட்டியது. அன்பு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

‘வாப்பா, மாணிக்கம். எப்ப வந்த? அப்பா அம்மா நல்லாயிருக்காங்களா?’ அன்புவின் அம்மா கேப்பையை புடைத்துக்கொண்டிருந்தார். ‘வாங்கண்ணே, நல்லாயிருக்கீங்களா?’ அன்புவின் சகோதரி மீனா எழுந்துகொண்டாள். ‘ஏண்டி, அண்ணனுக்கு காப்பித்தண்ணி போடு. உக்காரு ராசா.’ மீனா பாயை விரித்தாள். பாய் நைய்ந்திருந்தது.நான் காப்பியை வேண்டாமென்று சொல்லவில்லை. ‘எல்லாம் நல்லாயிருக்காங்கம்மா. அப்பா அம்மா இரண்டு நாள் கழித்து வற்ராங்க’. ‘அடடே, மாணிக்கமா. பரிட்சை முடிஞ்சதா?’ என்று கேட்டுக்கொண்டே அன்பு வந்தான். ‘முடிஞ்சது அன்பு. நீ எப்படியிருக்க?’ என்றேன். அன்பு மெலிந்திருக்கிறான். தலையில் கட்டு போட்டிருக்கிறான். தலைக்கட்டை நான் கவனிப்பதைப் பார்த்ததும், ‘மாணிக்கம், உன் பிரண்டுக்கு புத்தி சொல்லிட்டுப் போ. எப்ப பார்த்தாலும் செவலை கூடவே மல்லுக்கு நிக்கறான். அவன் பவுசு என்ன, நம்ம நிலமை என்ன? நேத்து ரெண்டு பயலுகளும் கட்டி உருண்டிருக்கானுங்க. போனவரு போயிட்டாரு. இவனுங்க சண்டை போட்டு என்ன பண்ணப்போறானுங்க. இவனுக்கு மண்டை உடைஞ்சது தான் மிச்சம்’ அன்பு அம்மாவை முறைத்தான். ‘என்னடா?’ என்றேன். ‘அது ஒன்னுமில்லைடா. இந்தா காப்பியைக் குடி’ என்று மீனாவிடமிருந்து காப்பியை வாங்கிஎன்னிடம் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘காட்ல கொஞ்சம் வேலையிருக்கு. நீ மலைக்கு போ. நான் ஒரு மணி நேரத்தில வந்துடறேன்.’ என்று அன்பு சொன்னான். நானும் அவனும் வெளியே வரும்பொழுது,’அன்பு, காட்டுக்கு போனமா வந்தமான்னு இருக்கனும். செவலை கூட மல்லுக்கு நிக்காத’ என்றார் அன்புவின் அம்மா. நானும் அதையே சொன்னேன். அவன் சிரித்துக்கொண்டான்.

நான் தெருவில் இறங்கி மலையை நோக்கி நடந்தேன். நாய்கள் தலையை நிமிர்த்தி, என்னை விசித்திரமாக பார்த்தன. பின் ஏனோ தலையை கீழே தாழ்த்தி கண்களை மூடிக்கொண்டன. காளியம்மன் கொவில் மந்தையைத்தாண்டி, ரோட்டைக்கடந்து, கம்மாக் கரையில் நின்று வயல்வெளிகளைப் பார்த்தேன். அதோ அந்த ஒற்றை ஆலமரத்தை சுற்றித்தான் எங்கள் வயல் இருக்கிறது. காற்று மிக இதமாக வீசிக்கொண்டிருந்தது. கம்மாத்தண்ணீரின் ஈரப்பதமும் சேர்ந்து, எனக்கு அயர்வைக் கொடுத்தது.

அன்புவின் அப்பாவை, செவலையின் அப்பாதான் கொன்றார். ஏதோ சொத்து விவகாரம். செவலையின் அப்பா இப்பொழுது ஜெயிலில் தான் இருக்கிறார். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன இது நடந்து. இன்னும் பகை மறைந்த பாடில்லை.அன்பு அமைதியாய் இருந்தாலும் செவலை அவனை விடுவதில்லை. அன்பு நிறையப் படிக்கவில்லை. இங்கு கிராமத்தில் இருந்த படியே வயல்வெளிகளைக் கவனித்துக் கொள்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் வயதை மீறின பொறுப்பாளி. செவலை முரடன்.

கம்மாவில் தண்ணீர் நிறைய இருக்கிறது. இந்த ஆண்டு விவசாயம் நல்லபடியாக நடக்கும். தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. நீர்மட்டத்தை ஒட்டியபடியே வெளிர்சாம்பல் நிற பறவையொன்று பறந்து கொண்டிருந்தது. பெயர்தான் தெரியவில்லை. கம்மாவை விட்டு, ஒற்றையடிப்பாதையில் நடந்தேன். மாலை, வயல் வேலை முடிந்து சிலர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். என்னை ஆழமாகப் பார்த்தபடி என்னைக் கடந்து சென்றனர். நகரத்து மனிதர்கள் ஏனோ கிராமத்து மக்களிடம் ஒட்டுவதேயில்லை. ஒரு அன்னியத்தன்மை இருவருக்கிடையே, ஒரு காற்றைப் போல், எப்பொழுதுமே இருக்கிறது. மலை என்னை நோக்கி வருவது போல இருந்தது.

மலையின் அடிவாரத்திலிருக்கும் பிள்ளையார் கோவிலில் வந்தமர்ந்தேன். மலை பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. மரங்கள் இல்லாத மொட்டை மலை. மலையின் உச்சியில் ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. கோவிலுக்குப்பின்புறம் ஒரு பெரிய, மிகப் பெரிய ஆலமரம் இருக்கிறது.மலை ஏறும் பொழுது கவனமாக ஏறவேண்டும். சில இடங்களில் பாறை வழுக்குவதாக இருக்கும். பள்ளங்கள் கூட உண்டு. கேணிகளும் இருக்கின்றன. சில கேணிகளின் ஆழம் மலையின் அடிமட்டத்தையும் தாண்டி இருக்கும், என்று அப்பத்தா சொல்லியிருக்கிறார். கேணிகளில் அடர்ந்த பாசி படிந்த தண்ணீர் ஆழத்தை மறைத்தபடி மிக அமைதியாய் – கவணிக்கப்படாத தேர் போல – நிற்கும்.

அரச மரத்தின் இலைகள் ஒன்றோடொன்று உரசி புதிய ராகப்பரிமானம் செய்து கொண்டிருந்தன. பலவிதமான பெயரில்லாத பறவைகள் விசித்திரமான ஓசைகளை எழுப்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் இவை அனைத்தையும் இரசித்தபடி, அனையாமல் சுடர்விட்டெரியும் ஒற்றை விளக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மலையின் அடியில் இருக்கும் ஊரணியில் கால்களையும், முகத்தையும் கழுவிக்கொண்டேன். தாமரை மலர்கள் சூரியன் மறைந்து கொண்டிருப்பதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.

பெருமாள் கோவில் மிக அமைதியாக இருந்தது. மலை ஏறிவந்த கலைப்பு, மூச்சாக என்னிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கோவிலின் பின்புறம், நானும் அன்பும் எப்பொழுதும் வந்தமரும் ஆலமரத்தடிக்கு வந்தேன். காற்று, என் வருகையை அறிந்து சுத்தமாக கூட்டிவிட்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் அருகிலிருக்கும் இரண்டு கிராமங்கள் தெரியும். பச்சை வெல்வெட்டாய் வயல் படிந்திருக்கும். வெல்வெட்டு சீறாக காற்றில் அலைந்துகொண்டிருக்கும். இங்கே அடிக்கும் காற்றும், காற்றில் கலந்த அமைதியும், என்னுள் ஒரு தெளிந்த வெளியைத் தோற்றுவிக்கும். மனம் அதில் அமிழ்ந்து, அடங்கிவிடும். பின் காற்றே அந்த வெற்றிடத்தை நிறப்பும்.

குற்றாலத்துண்டை சுருமாடாக மடித்து, தலைக்கு வைத்து, படுத்துக்கொண்டு, ஆல மரத்தின் இலைகளையும், அங்கு வந்தமர்ந்திருக்கும் பறவைகளையும் எண்ணத் தொடங்கினேன். காற்று மிகக் குளிர்ச்சியாக இருந்தது.

கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். இலைகள் தெரியவில்லை. இலைகளினூடே சில நட்சத்திரங்கள் தெரிந்தன. மற்றொரு துளி என் கன்ணத்தில் விழ, அடுத்தடுத்த துளிகள் சற்று பெரியதாயிருந்தன. எழுந்து உட்கார்ந்தேன். நல்ல இருட்டு. பெருமாள் கோவில் மேல் எப்பொழுதும் எரியும் ஒற்றை மின் விளக்கும் விடுமுறை எடுத்து விட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கண் தெரியவில்லை. வேகவேகமாக நடந்து கோவிலின் முன்புறம் வந்தேன். காற்றில் அலைந்துகொண்டிருந்த ஒற்றை விளக்கில் பெருமாள் மிக மங்கலாகத் தெரிந்தார்.

மணி என்னவென்று தெரியவில்லை. மழை நன்றாக பிடித்து விடுவதற்குள், கீழே போய் விடவேண்டும். இந்த கும்மிருட்டில் எப்படி போவது. போய்த்தானாக வேண்டும். நடக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் பலத்த இடி ஒன்று கிழிறங்கியது. என் இடது காலில் பெரிய கூர்மையான கல் ஒன்று இடித்தது. விரல்கள் நன்றாக எரிந்தன. தூரல் வலுத்துக்கொண்டேயிருந்தது. பாறை வழுக்கியது. பாதை சுத்தமாகத் தெரியவில்லை. மின்னல் ஒன்று கூர்மையாக இறங்கியது. கண்களை மூடிய நான், குழிக்குள் காலைவைத்து தலை குப்புற விழுந்தேன். குழியில் முட்கள் இருந்திருக்க வேண்டும். இரண்டு மூன்று முட்கள் குத்தியிருக்க வேண்டும்.மழை சடசடவென்று அடிக்க ஆரம்பித்தது. ஐயோ கடவுளே நான் எப்படி மலையைவிட்டு கீழிறங்கப்போகிறேன். மையிருட்டில் திண்டாடியபொழுது, சிறிது தூரத்தில் யாரோ ஒருவர், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையணிந்து வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவருக்கு பாதை நன்றாக பழகியிருக்க வேண்டும். ஐயா – அழைத்தேன். பதில் இல்லை. வேகமும் குறையவில்லை. அவரைப் பின் தொடர்ந்து நடந்தேன். வேகமாக. வழுக்கினாலும் பாதை மாறவில்லை. மறுபடியும் அவரை அழைத்தேன். பதில் இல்லை. நான் வேகத்தைக் கூட்டினேன். நான் எத்தனை வேகமாக நடந்தும் அவரைப் பிடிக்கமுடியவில்லை. எங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி குறையவேயில்லை, பெய்துகொண்டிருக்கும் மழையைப்போல. நான் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அடிவாரத்தைத் தொட்டுவிடலாம். அதோ அவர் இறங்கிவிட்டார். நானும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டேன். அவரைக் காணவில்லை. சட்டென்று என் கண்களை மறைத்து, மறைந்துவிட்டார்ம் ஒரு மின்னலைப் போல. எங்கே போனார்? எங்கே போனாலும் என் கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. பிள்ளையார் கோவிலில் இருக்கிறாரா? காற்றின் இரைச்சல் மனதிற்கு கிலி ஏற்படுத்தியது.

பிள்ளையார் கோவிலில் யாருமில்லை, வழக்கம் போல் பிள்ளையார் தனியாகவே அமர்ந்திருந்தார், காற்றில் அலையும் விளக்கின் துணையோடு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்கே மறைந்திருப்பார் அந்த வெள்ளைச்சட்டைக்காரர்? அப்பொழுதுதான் கேட்டது அந்த சத்தம். மிகப் பயங்கரமான அலறல் சத்தம். இடியின் சத்தத்தை விட மிகப் பயங்கரமாயிருந்தது, அந்த அலறல்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். ஆல மரத்தின் இலைகள் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. காற்று இதமாக இருந்தது. பெருமாள் கோவில் மின் விளக்கு மிக பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். மலையில் கண்ணுக்கெட்டியதூரம் வரை யாருமில்லை. மழையும் பெய்திருக்கவில்லை. வானம் பிரகாசமாயிருந்தது, நட்சத்திரங்களோடு. நிலவு முழுமையாய் இருந்தது. மறுபடியும் அந்த சத்தம் கேட்டது. மிக அழுத்தமாக. எனக்கு மிக அருகில். நான் என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ‘என்னை விடுடா’ ஒரு பெண்ணின் அழுகை கலந்த அலறல் சத்தம் கேட்டது. நான் எழுந்தேன். கோவிலுக்கு முன்புறத்திலிருந்து மீனா ஓடிவந்தாள். பின்னாலேயே, செவலை அவளைத் துரத்திக்கொண்டுவந்தான். மீனாவின் மேலாடையைக் காணவில்லை. எனக்கு நிலமை விளங்கியது.

என்னைப் பார்த்ததும் மீனா, அழுதுகொண்டே என் பின்னால் ஒளிந்து கொண்டாள். ‘மீனா, நீ எங்கம்மா இந்நேரம் இங்க வந்த?’ என்றேன் செவலையை முறைத்தபடி. ‘அண்ணா, அன்பு அண்ணனை காட்ல பாம்பு கடிச்சிருச்சு. அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகப்போறாங்க. அம்மா உன்னை கூட்டியாரச்சொல்லுச்சு. இந்த செவலை..செவலை..என்னை..’ என்று அழ ஆரம்பித்தாள்.

‘செவலை, வேண்டாம். போயிடு.’ என்றேன். ‘நீ என்னடா, பண்ணுவ? அசலூர்க்காரன் நீ. அப்பத்தா ஊருக்கு வந்தமா, பெருமாள் மலை ஆலமரத்துக்கடியில படுத்துக்கிடந்தமான்னு இருந்திட்டு போயிடு. எங்க சண்டையில குறுக்க வராத’ என்று சொல்லிக்கொண்டே மீனாவின் கைகளைப் பற்ற முயன்றான்.

நான் என் பலங்கொண்ட மட்டும் அவனை ஒரே தள்ளாக தள்ளினேன். இதை எதிர்பாறாத செவலை நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்தவன் விழுந்த வேகத்தில் எழுந்தான். இப்பொழுது அவன் கையில் கத்தி முளைத்திருந்தது.

‘செவலை, கத்தியைக்கீழே போடு’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முழு வேகத்துடன் பாய்ந்து, அதே வேகத்தில் என் வயிற்றில் கத்தியை கனகச்சிதமாக செருகினான். குடலை கிழித்திருக்க வேண்டும். வழி உயிரை எடுத்தது. எடுக்கப்போகிறது. பிசுபிசுப்பாய் சூடான கருஞ்சிவப்பு இரத்தம் மிக மெதுவாக விடுதலை பெற்றது. கீழே சரிந்தேன். ‘அண்ணா அண்ணா’ மீனாவின் குரல் மிகச் சன்னமாக ஒலித்தது. பின் சுத்தமாய் அடங்கியது.

கண் இமைகளில் குளிர்ந்த நீர் சொட்டு விழ, கண் விழித்தேன். வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டேன். எழுந்து உட்கார்ந்தேன். கும்மிருட்டு. மீனாவையும் காணவில்லை, செவலையையும் காணவில்லை. பெருமாள் கோவிலின் மேல் இருக்கும் மின் விளக்கு எரியவில்லை. மழைத்தூரல் அதிகமாகியது. மணி என்ன இருக்கும்? ஏன் இன்னும் அன்பு வரவில்லை? ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னானே. இடியொன்று மிகப் பயங்கரமாயொலித்தது. மழை நன்றாகப் பிடித்துவிடுவதற்குள் கீழே போய்விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பாதை சரியாகத் தெரியவில்லை. கூர்மையான பெரிய கல் ஒன்று காலில் இடறியது.

**************

என்ன சத்தம்?

(சிறுகதை)

“ப்யூரட்டை எடுத்துக்கொள்ளவும். அதில் 200 மில்லிலிட்டர் பொட்டாஷியம் பெர்மாங்கணேட் ஊற்றவும். பிப்பட்டை எடுத்து அதில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட்”
“ஏய்..ஏன் இப்படி கத்தற. மணி என்ன ஆகுது தெரியுமா?’ என்றேன். இருந்தாலும் எனக்கு மணி என்ன என்று தெரியாது. என்ன ஒரு 12:45 இருக்கும். நாளைக்கு என் அக்காவுக்கு பரிட்சை. அவள் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக இப்படியா கத்த வேண்டும். எனக்கும் பரிட்சை தான். அதற்காக இப்படியா யாராவது இரவு 12:45 மணிக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். நான் தான் என் அக்காவுக்கு காவல். நானும் புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் படிப்பை விட தூக்கம் தான் வருகிறது. இதோ இப்பொழுது தூக்கம் கெட்டுவிட்டது. ‘டேய்! தூங்கறதா இருந்தா, அந்த ரூம்ல போய்த் தூங்கு. நான் இப்படித்தான் கத்துவேன்’ அப்பாடா இதுதான் சந்தர்ப்பம் என்று எழுந்து பக்கத்து ரூம் போய்விட்டேன்.

பரிட்சை ஹாலில் கொஸ்டீன் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெரிய கேள்விகளில் ஒன்று கூட எனக்கு தெரியவில்லை. வியர்வை பெருக்கெடுத்தது. எத்தனை தெய்வங்களை வேண்டினேன்? ச்சே.. எல்லா தெய்வங்களும் இப்படி கை விட்டு விட்டனரே. கண்டிப்பாக பெயில் தான். மறுபடியும் பத்தாம் கிளாசா? அதுவும் அந்த ஒன்பதாப்பு நாராயணன் கூட படிக்கனுமா? ஐயோ.. அதை விட கேவலம்..அசிங்கம் ஒன்றும் இல்லை. அது மட்டும் நடக்கக் கூடாது. நாராயணனும் பெயில் ஆகி ஒன்பதாப்பிலே இருந்து விட்டால் நன்றாக இருக்கும். அது நடக்குமா? வேறு வழியில்லை பிட்டை எடுத்துவிட வேண்டியதுதான்.ம்ம்..இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து பிட் தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். சட்டைப் பையில் தான் இருக்கிறது. பஸ் பாஸில் செருகி வைத்திருக்கிறேன். திடுதிப்பென்று ஐந்து பேர் ஹாலுக்குள் நுழைந்தனர். ப்ளையிங் ஸ்குவாட். என்னடா இது சோதனை மேல் சோதனை. பெயிலானால் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம். பிட்டைப் பிடித்தால் மூன்று வருடத்திற்கு எழுத முடியாதே. முன் இருக்கும் மாணவர்களை செக் செய்து கொண்டிருந்தார்கள். திருட்டுமுழி முழித்தவர்களின் சட்டைப் பைகளை துலாவி துலாவி சோதனைப் போட்டுக்கொண்டுவந்தனர். எனக்கு இயற்கையிலே திருட்டு முழிதான். ஐயையோ மறுபடியும் தெய்வங்களை வேண்டினேன். கடவுளே. முருகா. காப்பாத்து. அருகில் வந்த ப்ளையிங் ஸ்குவாட். எழுந்திருடா என்றார். குரல், ஆனால் இனிமையாக இருக்கிறதே. ‘டேய். எழுந்திருடா. எழுந்திருடா.’ யாரோ என்னை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கண் முழித்துப் பார்த்தேன். என் அக்கா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாடா…கனவு போலிருக்கிறது? விடிந்துவிட்டதா என்ன?. இல்லை. கும்மிருட்டு. எழுந்து உட்கார்ந்தேன். ‘என்ன?’ என்றேன் எரிச்சலுடன். ‘பயமா இருக்குடா’-அக்கா. ‘எதுக்கு’ – நான். குழந்தை அழும் சத்தம் கேட்குது. கவனிச்சியா?’ – அக்கா. ‘குழந்தைனா அழுகத்தான் செய்யும். போக்கா. போய் படு.’ எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. அது என்ன கேள்வி? கனவில் கொஸ்டீன் பேப்பரில் பார்த்த கேள்விகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தேன். ம்..ஹீம். ஒன்றும் நினைவில் இல்லை. அப்பொழுதுதான் அந்த சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம். மிக அருகாமையில். எனக்கு தூக்கம் கலைந்து விட்டது. அட ஆமாம்! ஆனால் இங்கு பக்கத்து வீட்டில் கைக்குழந்தை யாரிடமும் கிடையாதே. ‘டேய். வெளியே போய் பாப்பமா?’ அக்கா கேட்டாள். கதவை திறந்தோம். காற்று வந்தது.(?) அக்கா முதலில் எட்டிப் பார்த்தாள். நான் பின்னாடியே சென்றேன். ம்..ஹ¤ம். யாரையும் காணோம். எதிர் வீட்டில் இருந்துதான் வந்தது. ஒருவேளை யாரேனும் விருந்தினர் வந்திருக்கக்கூடும். விருந்தினருக்கு குழந்தை இருக்கக்கூடும். நானும் அக்காவும் மறுபடியும் வீட்டிற்குள் வந்து தூங்கிவிட்டோம். மறுநாள் காலை தெருவெங்கும் இதே பேச்சு. எல்லோருக்கும் கேட்டிருக்கிறது குழந்தை அழும் சத்தம். மிகச் சத்தமாக அழுதிருக்கிறது போல. விசயம் என்னவென்றால், யார் வீட்டிலும் குழந்தை இல்லையென்பதே. எதிர் வீட்டிற்கும் விருந்தினர் யாரும் வரவில்லை.

நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.பரிட்சை சுமூகமாக முடிந்தது. கண்டிப்பாக பாஸ் செய்து விடுவேன். நாளைக்கு கணக்கு பரிட்சை. ‘தவளையின் இருதயம்..’ அக்கா படித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் கணக்கு நோட்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டேய், பாலு பார்த்தியா? நேத்து குழந்தை அழும் சத்தம் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் சின்னக்குழந்தையே இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது…’ ‘அக்கா. பேசாம இருக்கியா. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது.’ அப்பொழுதுதான் கேட்டது. குழந்தை அழும் சத்தம். இந்த முறை மிகத் தெளிவாக. ‘டேய்.பார்த்தியா.மறுபடியும் கேட்குது.’ ‘அக்கா. நான் தூங்கப்போறேன். நீ படிச்சிட்டு வந்து படு!’ நான் அவசர அவசரமாக அப்பா பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் பலரது வீட்டில் எழுமிச்சை தொங்கிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலும் தான்.

நாளை எனக்கு வரலாறு. அக்காவுக்கு பரிட்சை முடிந்துவிட்டது. ஆனாலும் இந்திரா சௌந்திராஜன் கதையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்பத் தேவைதான். அதுவும் ராத்திரி நேரத்தில் இந்திராசௌந்தர்ராஜன் கதை. ரொம்பநேரம் படிக்கவேண்டாம் வேகமாகவே தூங்கிடுங்க என்று அம்மா சொல்லிவிட்டுப் போனார்கள். அக்கா தீவிரமாக கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். அக்பர் கனவில் தோன்றவே, முழித்துக்கொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். அக்கா இப்பொழுதும் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். ‘ச்..சே. பரிட்சை முடிஞ்சதுனா தூங்கவேண்டியதுதானே?’ எனக்கு பொறாமையாக இருந்தது. மறுபடியும் அந்த சத்தம். குழந்தை அழும் சத்தம். அக்கா நிமிர்ந்து பார்த்தாள். ‘பாலு டார்ச் எடுடா. போய் பார்ப்போம்’ ‘வேண்டாம்கா. நான் வரலை’ ”ஆம்பிளைப் பையன் தானடா நீ? நான் போறேன். நீ வரதுனா வா. வராட்டினா போ.’ அக்கா டார்ச் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வேறு வழியில்லை. இரத்த பாசம். பின்னாலையே சென்றேன். கதவைத் திறந்தோம். காற்று வரவில்லை. யாரும் இல்லை. கப் சிப். எங்கள் வீட்டுக் கொய்யா மரம் கூட குழந்தை அழும் சத்தத்தை இரசித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தது. மிகத்தெளிவாகக் கேட்டது குழந்தை அழும் சத்தம். எதிர் வீட்டு தொழுவத்திலிருந்துதான் கேட்டது. ‘பாலு அங்க இருந்துதான் சத்தம் வருது. வா போகலாம்’ ‘என்னது! போறதா? நான் வரலை.’ என்னைக் கண்டுகொள்ளாமலே சென்றாள் அக்கா. நானும் சென்றேன். உள்ளே சென்று டார்ச் அடித்தாள். பட்டென்று கொட்டத்து விளக்கு எரிந்தது. எதிர் வீட்டுக் காரருக்கும் கேட்டிருக்கவேண்டும். அவரும் வந்து விட்டார். இப்பொழுது சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து சத்தம் எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்டது. அக்கவும் நானும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் தோட்டதிற்குள் நுழைந்தோம். எங்கள் தோட்டத்தில் குழந்தையா? எங்கள் தோட்டம் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் நிறைய. டார்ச் அடித்தது தான் தாமதம். படாரென்று சின்ன நாய் சைசில் ஒரு பூனை தாவிக்கொண்டு வெளியே ஓடியது. ‘ச்சே. வெறாகா?’ என்றார் எதிர்வீட்டுக்காரர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்காவுக்கும் புரிந்திருக்கவில்லை என்பது அவள் முழியிலிருந்து தெரிந்தது. எங்கள் வீட்டிலும் விளக்கு எரிந்தது. அப்பா வெளியே வந்தார். ‘அது ஒன்னும் இல்லை வாத்தியார் சார், வெறாகுதான் இப்படி கத்தியிருக்கு’ என்று சொல்லிவிட்டு எதிர்வீட்டுக்காரர் போய்விட்டார்.

நாங்களும் வந்து படுத்துக்கொண்டோம். அப்பாவிடம் கேட்டேன். ‘வெறாகுன்னா என்னாப்பா?’ ‘வெறாகுன்னா காட்டு பெண் பூனை. அது குட்டி போட்டால் இப்படித்தான் குழந்தை மாதிரி கத்தும். ஆனால் பொதுவா ஊருக்குள்ளே வராது. காட்டிலேதான் இருக்கும். என்னமோ தெரியல இப்ப ஊருக்குள்ளே வந்திருக்கு. நாளைக்கு பரிட்சை இருக்கில்ல பேசாம படு’ என்றார்.

எங்கள் வீடே ஊரின் ஒதுக்குப்புறத்தில் தான் இருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கி 20 நிமிடம் நடக்கவேண்டியிருக்கிறது. எஙகள் வீட்டைத் தாண்டியும் இன்னும் நிறைய வீடுகள் இருக்கின்றன. நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா? அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா? என்று விட்டத்தில் சுழலும் ப்பேனையே வெறித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நாளைக்காலை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுபடியும் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. விடியும்வரை.

அமுதத்தை இட்டாள்

(சரித்திர சிறுகதை)
(நீண்ட நெடுங்காலத்திற்கு முன், திருக்கோவலூர் என்னும் ஊரில்)

‘அய்யனே, தாங்கள் எப்பொழுது வருவீர்கள்’ என்று கேட்டாள் அந்தச் சின்னஞ்சிறு சிறுமி. பத்து அல்லது பதினோறு வயது தான் இருக்கும் அந்தப் சிறுமிக்கு. குழந்தைத்தனம் மாறாத முகமும், இன்னமும் ஒரு மழலையின் குரலுமே கொண்டிருந்தாள் அவள். மழை மேகம் திரண்டு கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில், காலையில் பக்கத்துக் காட்டில் திரட்டிய சுள்ளிகள், அடுப்பில் கணலாக இருக்க, மண்சட்டியை இறக்கி கீழே வைத்தாள். பின் சிறிதளவு நீரைக்கொட்டி அடுப்பை அனைத்தாள். அருகிலிருந்த மண் சட்டியில் கூழ் இருந்தது. ‘தெரியவில்லை தாயே! மழை நிற்பதற்குள் வந்துவிடுவேன். சோழ நாட்டில் மழைக்கு பஞ்சமேது? ம்..ம்.. வேடுவனும் உடன் வருகிறான்.’ என்று தன் மகளைப் பார்த்து கூறிக்கொண்டே, மரப் பலகையில் அமர்ந்து கொண்டான். அந்த பெண், மற்றொரு மண்சட்டியில் கூழை ஊற்றிவிட்டு, கீரைக்கறியை சுடசுட எடுத்து வைத்தாள். மழை சிறு துளிகளாக இறங்கிக் கொண்டிருந்தது. ஓலைக் கூரையில் பட்டுத் தெரித்தது. மழை ஓசை இசைப்பெருவெள்ளமென ஓங்கி ஒலித்தது. மண் வாசனை, கீரை வாசனையையும் விஞ்சிவிட்டிருந்தது. ஒரு திவலை குடித்த இடையன், கீரைக்கறியை எடுத்துக் கொண்டான். மண்வாசனையையும், கீரைக்கறியையும் ஒரே நேரத்தில் புலன்கள் ரசித்துக்கொண்டிருக்க, நா அதற்கு ‘சப் சப்’ என்று எதிர்வினை காட்டிக்கொண்டிருந்தது. ‘மகளே! உன் அன்னையின் கைப் பக்குவத்தையும் மிஞ்சிவிட்டாய் தாயே! உன் அன்னை இப்பொழுது இருந்திருந்தால், உன்னை மெச்சிப் புகழ்ந்து பாடியிருப்பாள்’ என்ற இடையன், சிறிது நேரம் கூரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அய்யனே. தாங்கள் தான் எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறீர்களே! ஒரு குறை இல்லை தந்தையே!’ என்றாள் அந்த சிறுமி.

தன் கைத்தடியை எடுத்துக் கொண்டு இடையன் புறப்பட்டபொழுது, ‘அம்மா! ஆடுகளை நினைத்து நீ வருத்தம் கொள்ளாதே. மழையில் நீ நனைந்து, உன்னிடமிருக்கும் ஒரே ஆடையையும் நீ நனைத்துக் கொள்ளாதே. நீயும் கூழைக் குடித்துவிட்டு, அமர்ந்திரு. நான் விரைவில் திரும்பிவிடுவேன். இந்த விளைச்சலில் உனக்கு மாற்று ஆடை வாங்கிகொள்ளலாம்’ என்றான். ‘கவலையில்லை அய்யனே. காலம் வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம். சென்று வாருங்கள் தந்தையே!’ இடையன், புண்ணகைத்துவிட்டு, வெளியே சென்றான்.

தன் தந்தையின் வழி தடங்களில், மழை தன்னை நிரப்பிக் கொள்வதையே, வெகு நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த சிறிய பெண். தந்தை கூழ் குடித்த அந்த மண்சட்டியை மழை நீரிலே சுத்தம் செய்துவிட்டு, சாப்பிட மனமில்லாமல், மழையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

மழை வலுத்திருந்தது. மழையின் பலத்த துளிகளில், ஒரு கிழவி, ஊண்று கோலைப் பற்றிக்கொண்டு, மழையைவிட வேகமாக, மழையைப் போல் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தாள்.’வாரிக்கொடுக்கும் மழையே. நீ அவள் கிழவி என்பதை அறியாயோ? உன் கனிவுக் கரம் கொண்டு, அவளது கணிந்த உடலை, என் குடிசைக்கு வரும் வரையில் தழுவாமல் தான் இரேன்!’ என்று மழை தேவனை பணித்துக்கொண்டிருந்தாள்.

தள்ளாடிய வயதில், நெடுந்தூரம் பயணம் செய்த கிழவி, மழையரசனிடம் விடுபட்டு, அந்த சிறு குடிசையில் தஞ்சம் புகுந்தாள். அந்த சிறிய பெண், அந்த கிழவியை, ‘வாருங்கள்! வாருங்கள் மூதாட்டியே! மழை உங்களுக்காக நிற்காது. அப்படி நின்றால் மண் செழிக்காது! நன்றாக நனைந்திருக்கிறீர்களே. துவட்டிக்கொள்ளுங்கள்’ என்று கிழவி துவட்டிக்கொள்ள ஆடை தேடினாள். இடையன் தன் ஒற்றை துணியை சுற்றிக்கொண்டு சென்று விட, மாற்றுத் துணி தேடினாள். வேறு துணி இல்லை. கிழவி குளிரில் நடுங்குவதைக் கண்ட அந்த சிறுபெண், பாரியை விடவும் கொடையாளியானாள். மாற்றுத்துணி வேறில்லாத பொழுதும், தன் ஒற்றை துணியான, அந்த நீல நிற சிற்றாடையை அவிழ்த்துக் கொடுத்தாள். ‘தலை துவட்டிக்கொள்ளுங்கள், பாட்டி!’ என்று சொல்லிவிட்டு, உள்ளே ஓடினாள். உள்ளே என்றால் என்ன? ஒரு மூலைக்குத்தான்.

திடுக்கிட்டு விழித்த கிழவி, அச்சிறுபெண்ணின் இப்பெருஞ்செயல் கண்டு விக்கித்து நின்றாள். மானம் காக்க, மூலைக்கு ஓடிய அந்த சிறுமியை போற்றினாள். வார்த்தை சிக்காமள் துணுக்குற்றாள்.

அந்த சிறுமி மானம் காக்கவா ஓடினாள்? இல்லை. இல்லவே இல்லை. ஓடிய சிறுமி, ஒரு மண்சட்டியில் மீதமிருந்த கீரைக்கறியையும், கூழையும் எடுத்துக்கொண்டு வந்தாள். ‘பாட்டி, தாங்கள் மழையில் நனைந்து சோர்வாக இருப்பீர்கள். துவட்டிக்கொண்டு இந்த சூடான கீரைக்கறியை உண்ணுங்கள்’ என்றாள்

மிகுந்த பசியுடன் வந்த கிழவி, அந்த சிறுமியின் முகம் கூட பார்க்காமல், பரிமாறும் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

****

சோழ தேசத்தின் தலைநகர். ஒரு நள்ளிரவு. நல்ல நிலவு. ஒரு மண்டபத்திலே கூனிக் குறுகிய கிழவி காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். நகர சோதனைக்காக உருமாறி வந்த சோழ மன்னன் கிழவியைப் பார்க்கிறான். இவளைக் கண்டு யார் என்று அறிய ஆவல் கொண்டு ‘அம்மே நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்றான். கிழவியின் கூர்ந்த கண்கள் அவன் யார் என்று அறிந்து கொள்கின்றன.
கிழவியிடம் பேசிய மன்னன், அவள் புழமைகண்டு வியக்கிறான்.
கிழவியின் கவிப்புழமையில் மயங்கிய மன்னன், மேலும் கிழவியிடம் கதை கேட்க ஆவலாகிறான்.
கிழவி தன் முடிப்பை அவழ்த்து சிறிய குழந்தைகள் போட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நீலச்சிற்றாடையை எடுக்கிறாள். ‘அப்பனே இதைப் பார்த்தாயா?’ என்று மன்னனிடம் கெட்டுக் கொண்டே, பின் வருமாறு கூறாலானாள்,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யாய்
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் செறிந்தகை யாள்

அந்த கிழவியை யாரென்று நான் சொல்லவும் வேண்டுமோ!

***

பிகு
புதுமைப்பித்தன் “கூழுக்குப் பாடி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஔவையாரின் பாடலுக்கு என் பார்வையில் ஒரு திரைக்கதை

அசட்டு மனிதர்கள் – தேன்கூடு போட்டிக்கான சிறுகதை

(சிறுகதை)

ஊ…ஊ..ஊ…
நாய்கள் மிகப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தால் கூட பயம் இராது. ஊளையிட்டுக்கொண்டிருந்தால் மனதிற்கு கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதுவும் இந்த அர்த்த ராத்திரியில்.
மணி என்ன இருக்கும்? நான் வரும்போதே 12:00 இருக்குமே?

அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு கவலை இருக்காது. என் குடும்பம் மிக சிறியது. என் கணவர் நான் மற்றும் என் மூன்று வயது குழந்தை.

என் கணவர் மிகவும் அன்பானவர். அவருக்கு ஏகப்பட்ட கடன் தொல்லைகள். அதனால் குடிக்க ஆரம்பித்தார். அவர் எப்பொழுது குடிக்க ஆரம்பித்தாரோ அப்பொழுதிலிருந்து என்னை அடிக்கவும் ஆரம்பித்தார். அவர் குடித்தால் என்ன? அடித்தால் என்ன? அவர் என் கணவர். அதுவும் அன்பான கணவர். என் மூன்று வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. எனது பக்கத்தில். கண்ணம்மா அந்தப் பக்கம் போகாதே! என்ன கிழே போய் குழ்ந்தைகளிடம் விளையாட வேண்டுமா? வேண்டாம் செல்லம். அதுகள் தான் உன்னைப் பார்த்தாலே கத்துகிண்றனவே? அப்புறம் பெரிய பிரச்சனையாகிவிடும். நாம் இந்த வீட்டில் இருக்க முடியாது. இங்கேயே விளையாடு கண்ணா. அம்மா சிறிது நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. எப்படி இந்த அண்டாவை மாடிக்கு தூக்கிக் கொண்டு வந்தேன்? அண்டா நிறைய அவித்த நெல். அதுவும் நன்றாக கொதித்த நீரில். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து காயப் போட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.
சுத்தமான பளீர் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறாள் என் மகள். நானும் கூடத்தான் வெள்ளை சேலை.இப்பொழுது புதிதாக வந்திருக்கும் மிஷெனில் துவைத்தது. முன்பெல்லாம் நான் தான் கைகளால் துவைப்பேன். இவர்கள் வந்த பின் சவுகரியமாக போய்விட்டது. வெள்ளை நிற கவுனில் தேவதை மாதிரி இருக்கிறாள் என் மகள். விளையாடட்டும். ஊ..ஊ…சே…இந்த நாய்கள் ஏன் இப்படிக் ஊளையிடுகின்றன? அவர் வந்துவிட்டால் இந்த நாய்களை விரட்டியடித்து விடுவார். வேகமாக முடித்துக் கொண்டு செல்ல வேண்டும். அவர் வந்து விடுவார். குறுக்கு வலிக்கிறது. இன்னும் குணிந்து நெல்லை நன்றாக பரப்பிவிடுகிறேன்.

கணவர் அடித்தாலும், என் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், நான் ரேஷன் கடையில் அரிசி வாங்கி வரும்பொழுது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என் கணவர். அவருக்கு பிடித்தமான என் சேலையை பேனில் கட்டி தற்கொலை செய்துகொண்டார். காற்று இதமாக வீசுகிறது. முடியப்படாத எனது கூந்தல் காற்றில் அலை பாய்கிறது. மல்லிகை மனம் வீசுகிறது. எங்கிருந்து வாசனை வருகிறது? நான் மல்லிகைப்பூ வைக்கவில்லையே. அன்றிலிருந்து எனக்கு என் மகள் தான் துணை. அவளுக்காகத்தான் நான் உயிர் வாழ்கிறேன். எங்கே எனது மகள்? காணவில்லையே? கீழே போய் விட்டாளா? ‘செல்லம் எங்கேடா போய்ட்ட? எழுந்தேன். சுற்றிப்பார்த்தேன். மொட்டை மாடியிலே காணவில்லை. ஐயோ..எங்கே போனாள்? அதோ அங்கே..என்ன அது? அண்டாவின் வெளியே இரண்டு சின்னக் கால்கள் வானத்தை நோக்கிப் பார்த்தன. ஐயோ என் மகள்! மகளே..ஓடுகிறேன். கத்துகிறேன். கதறுகிறேன். நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிட்டன.கொதிக்கும் நெல் குவியலில்..அண்டாவுக்குள்…ஆ…ஆ….எனது தொண்டை அடைக்கிறது. விம்முகிறேன். என்னால் முடிந்த வரையில் கதறுகிறேன். தரையில் முட்டி முட்டி சாய்கிறேன். என் செல்லம்.. எழுந்து ஓடுகிறேன். மொட்டை மாடியிலிருந்து குதிக்கிறேன். எதற்காக வாழ வேண்டும்? எனது தலை நச்சென்று தரையில் மோதுகிறது. மூளை சிதறுகிறது. இரத்தம் வழிந்தோடுகிறது.

இப்பொழுது நானும் எனது கணவரும் என் மூன்று வயது குழந்தையும் சந்தோசமாக வாழ்கிறோம். கடன் தொல்லை கிடையாது. அவர் குடிப்பதும் இல்லை என்னை அடிப்பதுமில்லை.மணி என்ன இருக்கும்? நான் வரும்பொழுதே 12:00 இருக்குமே. அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு பிரச்சினை இருக்காது.நான் நெல்லை காயப்போட்டுக்கொண்டிருக்கிறேன். எனது மூன்று வயது மகள் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர் வந்து விடுவார்.

எனது குழந்தையை அழைத்துக்கொண்டு மாடி படிகளில் இறங்கி கீழே வந்தேன். கீழே இரண்டு பையன்களும் ஒரு பெண்களும் இருந்தார்கள். பையன்கள் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு பரிட்சையாக இருக்கும். என் குழந்தை சிரித்தது. நன்றாக சிரித்தது. அந்த பெண் மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தது. பிறகு தன்னால் ஆன மட்டும் ‘வீல்’ என்று கத்தியது. சத்தத்தில் பையன்களும் முழித்துக் கொண்டு அவர்களும் கத்தினார்கள்.
இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள். நான் மறுபடியும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன், என் குழந்தையோடு. நெல் காயப்போடவேண்டுமே. என் செல்லத்திடம் இனிமேல் இப்படி சிரிக்காதே என்று சொல்லிவைத்தேன்.

**