காந்தம்

(தொடர்கதை)

 

3

செல்லம்மா கண் விழித்தாள். குடிசைக்குள் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருந்தது. சூரியன் உதித்து வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள். அருகில் படுத்திருந்த பிள்ளைகள் எழுந்து விளையாடப் போய்விட்டன. ராணி மட்டும் இன்னும் தூக்கத்திலிருந்தாள். செல்லம்மா புரண்டு படுத்து கூரையில் தெரிந்த சின்ன சின்ன ஓட்டைகளினூடே தெரியும் வெளிச்ச கீற்றுகளைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். மழை பெய்தால் தான் கஷ்டம். பெய்யாவிடினும் கஷ்டம். தான் இந்த கிராமத்துக்கு வாக்கப்பட்டு வந்து இந்த எட்டு வருடங்களில் ஒரு முறையோ இரு முறையோ தான் மழை பெய்திருந்ததை நினைத்துக்கொண்டாள். அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக கடும் வரட்சி. மழையும் இல்லை வேலையும் இல்லை. சில சமயங்களில் பக்கத்து கிராமத்து மொட்டை மலையில் கல்லுடைக்கும் வேலையிருக்கும். உழுது அன்னமிட்ட கைகளால் மாணிக்கம் கள்ளச்சாராயம் விற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வாழ்க்கை நம்மை கேட்டுக்கொண்டா ஓடுகிறது? நாம் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன?

ஏன் மாணிக்கம் இன்னும் வந்திருக்கவில்லை? இல்லை வந்து விட்டு வெளியே சென்று விட்டாரா? எழுந்து உட்கார முயன்றாள். மிகவும் சிரமாக இருந்தது. கஞ்சி இல்லாத மயக்கம் அவளை பின்னால் தள்ளியது. அருகிலிருந்த குத்துக்கால் மரத்தில் சாய்ந்து கால் நீட்டிக்கொண்டாள். வயிறு மிகவும் பெரிதாக இருப்பது போல இருந்தது. குடிசையின் தாழ்ந்த வாசலில் யார் யாரோ நிற்பது போல இருந்தது. மிகவும் தாகமாக இருந்தது.

“டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று சத்தம் போட்டுக்கொண்டே செந்தில் குடிசைக்குள் நுழைந்தான். அம்மாவைப் பார்த்ததும் அமைதியாக வந்து செல்லம்மாவின் பக்கத்தில் வந்து குத்த வைத்து உட்கார்ந்து கொண்டான். அம்மாவின் கலைப்பான முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்லம்மா அவன் தலையை வருடிக்கொடுத்து கொஞ்சம் தண்ணி கொண்டுவரச்சொல்லி குடித்தாள்.

மடியில் உட்கார்ந்து கொண்டவனின் தலையைக் கோதிக்கொண்டே “அண்ணன் எங்கடா?” என்றாள். “அவன் மந்தல வெளாடுட்டு இருக்கான்” என்றான் செந்தில். “டேய் செந்தில் உனக்கு ராமு மாமா வீடு தெரியும்ல, அங்க போய் மாமா இருந்தார்ன்னா, அப்பா இன்னும் வீட்டுக்கு வரல எங்க போனார்ன்னு தெரியும்மான்னு கேட்டுட்டு வாடா” என்றாள். செந்தில் வேகமாக தலையாட்டிவிட்டு மறுபடியும் டுர் டுர் டுர் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்லிக்கிட்டே வாசலைக்கடந்து சென்றான்.

செல்லம்மா மெதுவாக முட்டியைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றாள், மயக்கமாக வந்தது. மெல்ல நடந்து வாசலுக்கு வந்தாள். சிறியதும் பெரியதுமாக மக்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேலே பார்த்த செல்லம்மாவுக்கு அச்சர்யம் தாங்கவில்லை. ஆங்காங்கே கரு மேகங்கள் தெரிந்தன.

எதிரே இருந்த குடிசையின் வெளியிலே கால் நீட்டி உட்கார்ந்திருந்த செங்கமலக்கிழவி “இன்னக்கி வந்துரும் ஆத்தா. காத்து சுத்துவட்டா இல்ல பாரு. காலையில இருந்து ஒரே புழுக்கமா வேற இருக்கு. கண்டிப்பா வரும் ஆத்தா” என்றாள். பக்கத்தில் அவள் பொக்கைவாய் அழகையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மூன்று வயது பேத்தி ராக்கம்மா “என்ன அப்பத்தா வரும்?” என்றாள் ஆர்வமாக. “ஏ சின்னச்சிறுக்கி.. மழ வரப்போகுதுடி..ஊரெல்லாம் குளிரப்போகுது” என்று ஆருடம் சொல்லும் பாணியில் நீட்டி நிறுத்தி சொன்னாள். ராக்கம்மா “மழையா? வானத்திலிருந்து விழுமா” என்றாள் வானத்தைப் பார்த்துக்கொண்டே, அதிர்ந்தவளாக. அவளுக்கு நிச்சயமாக மழை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செல்லம்மாவுக்கு ஏனோ மனது ஆனந்தத்தில் அதிர்ந்தது. உடனே மாணிக்கத்தை நினைத்து பழைய சோக நிலைக்கு திரும்பியது. அப்படியே கதவில் சாய்ந்து நின்று கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். தூரத்தில் யாரோ தெருவெங்கும் பேசிக்கொண்டு கையிலும் இடுப்பிலும் பையுடன் ஒரு பெண் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். “அட பேச்சியம்மா வரா” என்றாள் சத்தமாக. மறுபடியும் மனம் குதியாட்டம் போடத் தொடங்கியது.

***

காளியம்மன் கோவில் திடலில் புழுதி படர்ந்து கொண்டிருந்தது. மந்தைக்கு வந்த செந்தில அப்படியே நின்று விட்டான். அவனுடைய அண்ணன் குமாரும், ராமு மாமாவின் மகன் மருதுவும் கட்டிப்புரண்டு கொண்டிருந்தார்கள். மற்ற கோலிகுண்டு சிறுவர்கள் இவர்களின் சண்டையைக் கண்டு கொள்ளாமல் தங்களது விளையாட்டில் மிகுந்த மும்முரமாய் இருந்தனர். சில சிறுவர்கள் கீழே உட்கார்ந்து சண்டையையும் வானத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர். எதைப்பார்ப்பது எதைவிடுவது என்கிற பதட்டம் அவர்களது கண்களில் தெரிந்தது.

செந்தில் அவர்கள் பக்கத்தில் சென்று “அண்ணா அண்ணா” என்று கூப்பிட்டான். குமார் நிமிர்ந்து பார்த்து மேலும் தீவிரமாக சண்டையைத் தொடர்ந்தான். அங்கேயிருந்த பிள்ளையார் கோவிலில் உறங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து சண்டையை விலக்கிவிட்டார்கள்.

குமார் இன்னும் மருதுவை முறைத்துக்கொண்டேயிருந்தான். செந்திலைக் கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்று அனாதையாக விடப்பட்ட தனது கோலிக்குண்டை எடுத்து பின்னால் பெரிதும் கிழிந்திருந்த டவுசர் பையில் போட்டுக்கொண்டான். அமைதியாக கோவில் படியில் வந்து உட்கார்ந்து கொண்டான். செந்தில் சத்தம் போடாமல் அவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். செந்தில் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். குமாரின் முட்டிகாலில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அப்பா வந்தவுடன் மருதுவுக்கு அடிவாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான், செந்தில்.

“அப்பா வீட்டுக்கு வரல தெர்யுமா?” என்றான் செந்தில். குமார் தெரியும் என்பது போல தலையாட்டினான். “ஏண்ணா அவன் கூட சண்டபோட்ட?” என்றான். குமார் பதில் சொல்லவில்லை. தூரத்தில் நின்றபடியே தூங்கிக்கொண்டிருக்கும் வண்டிமாட்டையே பார்த்துக்கொண்டிருந்தான். செந்தில் குமாரின் கையைப் பற்றி “அண்ணா இன்னிக்கு மழ வருமா?” என்றான்.

குமார் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். முன்பைவிட மேகங்கள் நிறைய இருந்தன. வானம் கரு வண்ணமாயிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த பெரிசுகள் இப்பொழுது எழுந்து உட்கார்ந்து வானத்தைப்பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். மருது தூரத்தில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

இரண்டு கிழவிகள் காளியம்மனுக்கு முன்னால் கைகளை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்துகொண்டிருந்தது. “காளியாத்தா எங்க கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு கொடு ஆத்தா. இதுக்கு மேலயும் எங்கள சோதிக்காத. புள்ள குட்டியெல்லாம் மழ தண்ணி இல்லாம வாடி வதங்குதுக. கைவிட்டுறாத ஆத்தா” என்று முனகியபடி நெடுஞ்சான்கடையாக விழுந்து கும்பிட்டனர்.

ஏதோ ஞாபகம் வந்தவனைப் போல செந்தில் எழுந்து மறுபடியும் ஓடத்தொடங்கினான். குமார் “எங்கடா போற” என்றான். “ராமு மாமா வீட்டுக்கு” என்று கத்தி சொல்லியபடி மந்தவெளியைக்கடந்து ஒரு சந்துக்குள் புகுந்து மறைந்தான்.

***

“அடி ராக்கம்மா என்னாடி இந்தப்பக்கம்?” என்றாள் செல்லம்மா முகம் நிறைய மகிழ்ச்சியோடு. பொய்யான கோபத்தை முகத்தில் வைத்துக்கொண்ட ராக்கம்மா “நீங்க சொல்லாட்டி எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களாக்கும். எப்படி வந்துட்டேன் பாருங்க. எப்படிண்ணி இருக்கீங்க? முகமெல்லாம் வாடிப்போயிருக்கு. பசங்க எல்லாம் எங்க?” என்றவளின் பேச்சைக்கேட்டவுடனே செல்லம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

“ஐ ராணிகுட்டி தூங்கறாளா? இன்னும் உனக்கு விடியலையாடா செல்லம்” என்று கொண்டுவந்திருந்த பைகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு ராணியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். தூக்கத்திலிருந்து முழித்த ராணி, தனது அழகிய சிறு கண்களால் அதிர்ச்சி காட்டி “அத்த” என்றாள்.

செல்லம்மா ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சிரமப்பட்டு ராக்கம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சில மாதங்களுக்கு முன் வரை சிறு பெண்ணாக தெரிந்த ராக்கம்மாவா இவள் என்று நினைத்துக்கொண்டாள். சட்டென்று திரும்பிய ராணி “பசங்கள எங்கண்ணி? அண்ணன எங்க?” என்றாள்.

“மந்தவெளிலதான் இருப்பான் குமார் நீ அவன பாக்கலியா? உங்க அண்ணன் நேத்து போனவரு இன்ன வரலடி” என்றாள். பிறகு “நீ எப்படிடி இருக்க? நல்லாயிருக்கியா? உன் புருஷன் உன்ன நல்லா வெச்சுக்கிறானா?” என்று நெகிழ்ச்சியான குரலில் கேட்டாள்.

“நான் நல்லாயிருக்கேன் அண்ணி. அவரு நல்லா பாத்துக்குறாருண்ணி” சிறிது இடைவெளி விட்டு “நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. இப்படி ஒத்த ஆளா நெற மாசத்தோட கஷ்டப்படுறீங்க. வலியெடுக்குதாண்ணி” என்றாள்.

“இல்லடி காலைல கொஞ்சம் இருந்தது. இப்போ இல்ல” என்றாள் செல்லம்மா.

***

குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. “அத்த மட்டும் தான் வீட்ல இருந்தாங்க. வீட்டுக்கு வரேன்டான்னு சொல்லிட்டாங்க” என்று மூச்சு வாங்க சொல்லிவிட்டு குமாரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான் செந்தில். “அத்த கெழங்கு கொடுத்தாங்க” என்று சொல்லியபடி மரவல்லிக்கிழங்கை டவுசர் பையிலிருந்து எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் “எனக்கு வேண்டாம் நீ சாப்டுடா” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

காற்று பலமாக வீசியது. செந்திலின் வெட்டப்படாத நீண்ட முடி காற்றில் அலைந்தது. புழுதி எழுந்து கண்களை அப்பியது. கரு மேகங்கள் கலையத்தொடங்கின. கிழவிகள் வாயடைத்து மௌனமாக வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

***
(தொடரும்)

காந்தம்

(தொடர்கதை)

 

2

மாணிக்கம் ஓசையின்றி கதவைச் சாத்தினான். பனிகாற்று சில்லென்று அவன் முகத்தைத் தாக்கியது. குளிருக்கு இதமாக கைகளை சூடு பறக்க தேய்த்துக்கொண்டான். தோளில் கிடந்த துண்டை எடுத்து காதோடு சேர்த்து தலையில் கட்டிக்கொண்டான்.மண்ணோடு மண்ணாகத் தேய்ந்து மீதமிருக்கும் ஒற்றை மண் படியில் உட்கார்ந்தான். தெரு வழக்கத்தைவிட மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்ந்தான். வானம் சுத்தமாக இருந்தது. நட்சத்திரங்கள் தெளிவாக இவனைப் பார்த்து கண்சிமிட்டின.

கைலியின் சுருட்டில் குடித்துவிட்டு வைத்திருந்த பாதிக்கும் குறைவான மீதி பீடியை எடுத்து பற்றவைத்தான். உடனே தொற்றிக்கொண்டு வந்த இருமலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.தூரத்தில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் பனி புகையாய் படர்ந்து கொண்டிருந்தது. இன்னும் தூரத்தில் மொட்டை மலை ஒற்றை மின் விளக்கு மங்களாகத் தெரிந்தது. நேரம் பீடிப் புகையாய் காற்றில் கரைந்தது. உள்ளடங்கிய மிகச் சிறிய கண்கள் வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

அணைந்து போன பீடியைக் கீழே போட்டுவிட்டு மாணிக்கம் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றான். முட்கள் மண்டிய புதர் குளிரில் நனைந்திருந்தது. மாணிக்கம் மெதுவாக முட்களை அப்புறப்படுத்தினான். பின் மண் தரையை தோண்ட ஆரம்பித்தான். உள்ளிருந்து சிறிய மண் பாணையை எடுத்து வெளியே வைத்தான். மண் பானை அழுக்கடைந்த ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தது. தோண்டிய மண்ணை குழியில் அடைத்து முட்களை அதன் மேல் வைத்துவிட்டு பானையை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கத்துக்கு வந்தான். தோளிலிருந்த பானையிலிருந்து சலக் சலக் என்ற ஓசை அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த செல்லாமவைப் பார்த்து மாணிக்கம் ஒரு கணம் திடுக்கிடவேசெய்தான். வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா,”யோவ்..இன்னிக்கு எங்கயும் போகவேணாம்னு ஏட்டையா சொல்லிட்டு போயிருக்காருய்யா. எங்கயும் போகவேணாம்யா. உன் செல்லம்மா சொல்றேன் கேளுய்யா” என்றாள். கண்களினோரம் ஈரம் கசியத்தொடங்கியிருந்தது. தோளிலிருந்த மண் சட்டியை கீழிறக்காமல் சிறிது நேரம் பேசாமலிருந்தான் மாணிக்கம். பின்னர் “எத்தன நாளைக்குத்தான் நீங்க பசியோட இருப்பீங்க? நெறமாசக்காரி உன்ன எத்தன நாளைக்கு பட்டினி போடுவேன். சோர்ந்து சோர்ந்து அடிவயித்த பிடிச்சிக்கிட்டு சுருண்டு கெடக்குற பிள்ளைகள என்னால பாக்க முடியலத்தா. இன்னிக்கு பாண்டி கண்டிப்பா வாங்கிறேன்னும் சொல்லியிருக்கான். போய்கொடுத்துட்டு காசோட வாரேன் புள்ள. நாளைக்காவது அடுப்பபத்தவைக்கலாம். ஒன்னும் பயப்படாத. எனக்கு ஒன்னும் ஆகாது. குளிருல ரொம்ப நேரம் வெளியில உக்காராத உள்ள போ படுத்துக்க. ராணி முழிச்சுக்கிட்டா பாரு” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் மாணிக்கம்.

தூரத்தில் இருட்டில் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

***
மந்தைக்கு வந்த மாணிக்கம் தூரத்தில் பானையை வைத்துவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கம்பி கதவுக்குள் சிறைப்பட்டிருந்த காளியம்மனை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டான். சித்தம் கலங்கிய பைத்தியக்காரனைப்போல அவன் வாய் ஏதேதோ முனுமுனுத்துக்கொண்டேயிருந்தது. உதடு துடித்துக்கொண்டேயிருந்தது. சிறிய எண்ணெய் விளக்கில் காளியம்மன் மிகவும் மங்கலாகத்தான் தெரிந்தார். இவன் விசும்பலைக் கேட்டதாலோ என்னவோ சுவற்றிலிருந்த பல்லி முழித்துக்கொண்டு காளியம்மனை எழுப்பத்தொடங்கியது.

மந்தையைக் கடந்து தார் ரோட்டைக் க்ராஸ் செய்யும் போது அங்கிருந்த இலைகளை பெரிதும் உதிர்த்து விட்ட காய்ந்து போன வேப்பமரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த வண்டி மாடுகள் சேர்ந்தார்ப்போல் மாணிக்கத்தைத் திரும்பிப்பார்த்தன. மாணிக்கம் ஒத்தயடிப்பாதையை ஓட்டமும் நடையுமாக கடந்து ஊரணியை அடைந்தான். அங்கிருக்கும் பாழடைந்த பிள்ளையார் கோவிலின் மூலையில் உரங்கிக்கொண்டிருந்த சித்தன் ஒருவன் திடீரென எழுந்து உட்கார்ந்தான். பின் ஏதோ புரியாத பாஷையில் வரம் தந்து விட்டு மீதி உறக்கததை தழுவிக்கொண்டான்.

நேரம் நத்தையைவிட மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பாண்டி வருகிறார் போல் தெரியவில்லை. நிலாவைப் பார்த்தான். அது எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல அமைதியாக இவனை பார்த்துக்கொண்டிருந்தது. பாதி உடைந்த நிலையிலிருந்த பிள்ளையார் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒற்றைக்கண்ணில் தெரிவித்தார். வற்றிப்போன ஊரணியிலிருந்த காய்ந்து போன இலைச்சறுகுகள் மெல்லிய காற்றில் அசைந்து ஒரு விதமான பீதியை உண்டாக்கும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. அந்த குளிரிலும் மாணிகத்தின் நெற்றி வியர்த்திருந்தது. இப்பொழுது முற்றிலும் தேவைப்படாத தலைக்கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். குழந்தைகளின் வாடிய முகத்தை நினைத்துக்கொண்டான், பாண்டி வேகமாக வந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்தில் புதர் அசையும் சத்தமும் காலடியில் சருகு மிதிபடும் சத்தமும் கேட்டது. மிக லேசான விசில் சத்தம் ஒன்று கேட்டது. மாணிக்கம் சட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு புதரின் அருகில் சென்று அதே போன்றதொரு விசில் அடித்தான்.

சிறிது நிசப்தத்திற்குப் பிறகு, “அண்ணே, நான் பாண்டியோட மச்சான் முத்து.” என்றொரு குரல் கேட்டது. அடையாளம் கண்டுகொள்ள முயன்ற மாணிக்கத்திடம், முத்து ரகசியமாக, சன்ன குரலில் பேசினான்: “பாண்டி மாமா இன்னக்கி வரமுடியல. நல்ல காய்ச்சல் தூக்கி தூக்கி போட்டது. அதனால அக்கா என்ன அனுப்பிச்சது.” என்றான்.

“நீ..உன்ன..ம்..ம்ம்..பாண்டிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றான் மாணிக்கம். “நல்லாயிருக்காருண்ணே. வாங்க என்கூட. என்கிட்ட பணம் இல்ல. மலைக்கு பின்னால் போய் வாங்கிக்கொடுக்கறேன்” என்றான் முத்து.

“மலைக்கு பின்னாலையா?. நான் அங்கெல்லாம் போக மாட்டேன்ப்பா. நீ போய் கொடுத்துட்டு வந்திடு. நான் நாளைக்கு கூட பணம் வாங்கிக்கறேன்” என்றான் மாணிக்கம். நடக்க ஆரம்பித்த மாணிக்கம், திரும்பி, சரிப்பா “நானும் வாரேன்.” என்றான்.

இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். இப்பொழுது மீண்டும் குளிரெடுக்கத்தொடங்கியது. இருவரின் காலடி சத்தங்களையும் தூரத்தில் கேட்கும் நாய்களின் குரைப்புகளையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. முத்து நடையைத் துரிதப்படுத்தினான்.

“அண்ணே நீங்க இந்த புதருக்கு பின்னால உக்காந்திருங்க. நான் வந்து விசில் சத்தம் கொடுத்தா மட்டும் வெளியில் வாங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு கணப்பொழுதில் ஓட்டமும் நடையுமாக ஓடி மறைந்தான் முத்து.

இரவுப்பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம் சூழ்நிலையை மேலும் கலவரப்படுத்தியது. மாணிக்கம் ஒரு சாரப்பாம்பு பக்கத்துப்புதரில் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தான். ஏனோ அவனுக்கு ஒட்டிய அடி வயிறுடன் படுத்துக்கிடக்கும் செந்தில் தான் ஞாபகத்துக்கு வந்தான். மாணிக்கம் “நாளைக்கு சோறாக்கிடலாம்” என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்திலிருந்த இடிந்த மண் மேட்டில் அசையாமல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று மாணிகக்த்திடம் ஏதோ சொல்ல நினைத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்தது.

***
திடீரென்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவே மாணிக்கம் உஷாரானான். எழுந்திருக்கலாமா என்று யோசித்தான். கொஞ்ச தூரத்திலிருந்த புதரிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். துப்பாக்கி சத்தமும், அலறல் சத்தமும் கேட்டது. மேலும் காலடியோசைகள் கேட்டது. மாணிக்கம் எழுந்திருக்கவில்லை. போலீஸ் விசில் சத்தமொன்று மிக அருகில் கேட்கவே மாணிக்கத்தின் இதயம் துடிப்பை அதிகரித்தது. மாணிக்கம் இருந்த இடத்திலே உரைந்தான்.

தடிமனான லத்தி ஒன்று அவன் தோளில் தட்டியது. புதருக்கு அந்தப்பக்கம் கனத்த பூட்ஸ் கால்கள் தெரிந்தன. “எந்திரிடா” என்ற கடுமையான குரல் ஒன்று ஒலித்தது.

(தொடரும்)

காந்தம் : நாவல் (1)

காந்தம் : நாவல்

பாகம் 1 : கிழக்கு

1953

1

ஏட்டையா போலீஸ் ஸ்டேஷனை விட்டு ரோட்டில் இறங்கி, வெகுதூரம் நடந்துவிட்டிருந்த போதும், உடன் வந்த காண்ஸ்டபிளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது விசித்திரமாக இருந்தது. குளிருக்கு இதமாக காதுகளை சுற்றிலும் மப்ளரால் கட்டியிருந்ததால் கூட இருக்கலாம். குளிர் இன்று மிக அதிகமாக இருந்தது. ஏட்டையா கால்சட்டைப் பையை துலாவி, பீடிக்கட்டு ஒன்றை எடுத்து, ஒரு பீடியை வாயில் வைத்துக்கொண்டார். சட்டைப்பையில் துலாவி தீப்பெட்டியை எடுத்து, பீடியை பற்ற வைத்துக்கொண்டார். தீக்குச்சியின் நெருப்பு முகத்திற்கு இதமாக இருந்தது. மிகவும் இரசித்து முதல் இழுப்பை இழுத்துக்கொண்டார். புகையை வெளியே விடும் பொழுது மட்டும் ஏனோ வானத்தைப் பார்த்துக் கொண்டார். அவர் விடும் புகை நட்சத்திரங்களை சென்றடையுமா என்ன? இல்லை வெளியேறும் புகை தன்னை மெதுவாக நட்சத்திரங்களுக்கு அருகே அழைத்துச் செல்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். ‘அண்ணே’ என்ற ஹெட்காண்ஸ்டபிளின் குரல் கேட்டு, மறுபடியும் கால்சட்டைப் பையைத் துலாவினார்.

ரோடெங்கும் இருவரின் லத்தி ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் எரிச்சான்பட்டியை அடையும் போது மணி இரவு ஒன்பதை எட்டிவிட்டது. ‘அண்ணே கீழத்தெருவுக்கு இப்படி குறுக்கே போகலாம்’ என்றார் காண்ஸ்டபிள். அனையபோகும் பீடியை சாலையின் ஓரம் எறிந்தார் ஏட்டையா. வறண்டு போய், புதர் மண்டிக்கிடந்த குழாயடியில் படுத்துக்கொண்டிருந்த செவலை நாயொன்று விழித்துக்கொண்டு ‘கர்’ என்றது. இருவரின் லத்திகளையும் பார்த்து பின் வாங்கியது. அங்கிருந்த வேறு சில நாய்களும் தூங்கியிருக்கவில்லை. மேகமில்லாத வானத்தையே வெறித்துக்கொண்டு சோகமாய் படுத்துக்கிடந்தன.

அந்த தெருவின் கடைசிக் கூரை வீட்டின் முன் வந்து நின்றார் ஏட்டையா. அங்கொன்றும், இங்கொன்றுமாய் மனிதர்கள் வெளியே, அந்த குளிரிலும் படுத்துக்கிடந்தனர். தூரத்தில் ஊளையிடும் நாய்களின் ஓசையின்றி வேறு சத்தங்கள் இல்லை. வீட்டின் கூரைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. காண்ஸ்டபிள் இருமுறை கதவைத் தட்டிவிட்டு, பின் ‘செல்லம்மா’ என்று கூப்பிட்டார். கதவு சாத்திதான் வைக்கப்பட்டிருந்தது. பதில் இல்லாததால் மறுபடியும் ‘செல்லம்மா’ என்றார் காண்ஸ்டபிள், இந்த முறை கொஞ்சம் சத்தமாக. உள்ளே யாரோ எழுந்து உட்காரும் சத்தம் சன்னமாக கேட்டது, காண்ஸ்டபிள் தன் காலுக்கு கீழே உடைந்து கிடந்த மண்சட்டியையே வெறித்துக்கொண்டிருந்தார். சிதிலங்களில் மண் மட்டுமே அப்பிக்கிடந்தது. யாரோ மெதுவாக நடந்து வந்து கதவைத்திறந்தார்கள்.

மிகவும் ஒடிசலான நிறைமாத கர்பினி பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். சேலையால் முகத்தை துடைத்துக்கொண்டு, கண் விழித்து மிகவும் சிரமப்பட்டு பார்த்து, அடையாளம் கண்டுகொண்டபின் ,’ஐயா நீங்களா? என்னங்கையா இந்த நேரத்தில?’ ‘செல்லம்மா, உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும், உன் புருஷன் மாணிக்கம் வீட்ல இருக்கானா?’ ‘ஆமாங்கையா வீட்ல தான் இருக்காரு. தூங்கிட்டு இருக்காருய்யா. இன்னைக்கு எங்கையும் போகல’ ‘ம்..ம்.. சரி. இன்னைக்கு அவன எங்கையும் போக வேணாமுன்னு சொல்லு. இன்னைக்கு கெடுபிடி அதிகம். சுட்டுத்தள்ள உத்தரவு வந்திருக்கு. அதையும் மீறி உன் புருஷன் போனான்னா, என்னால காப்பாத்த முடியாது. நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். இனி உன்பாடு’

செல்லம்மா எதுவும் பேசாமல் ஏட்டையாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக ‘சரிங்கைய்யா போகாம பார்த்துக்கிறேன்’ என்றாள். ‘எத்தனை மாசம்?’ ‘இன்னும் ஒருவாரத்தில ஆயிடும் போல இருக்குங்கய்யா’ என்றாள் பெரிதாக இருந்த வயிற்றைத் தடவிக்கொண்டே. ‘சரிம்மா நாங்க வாறோம்!’ ‘அண்ணே, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு…’ என்றவள் முடிக்காமல் தரையைப் பார்த்தாள். ஏட்டையா சிரித்துக் கொண்டு, காண்ஸ்டபிளோடு தெருவில் இறங்கி நடந்தார், கால் சட்டைப்பையைத் துலாவிக்கொண்டே.

செல்லம்மா வெகு நேரம் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றாள். பிள்ளை அழும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்தாள். சின்னவள் ராணி எழுந்து உட்கார்ந்து அழத்தொடங்கியிருந்தாள். பெரியவன் குமாரும், செந்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் சற்று தள்ளி படுத்திருந்தான். ‘என்னம்மா பசிக்குதா?’ ராணி ‘ம்..ம்..’ என்று தலையாட்டினாள். செல்லம்மா அவளை வாரி அனைத்து தூக்கிக் கொண்டாள். கண்ணத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டு, இடுப்பில் வைத்துக்கொண்டாள். மூலையில் இருந்த மண் பானையை துலாவி, கொஞ்சம் தண்ணீர் எடுத்து ராணிக்கு கொடுத்தாள். முதலில் மறுத்து தலையாட்டிய ராணி, பிறகு கொஞ்சம் குடித்து விட்டு, அம்மாவின் தோழில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ராணியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே, செல்லம்மா உட்கார்ந்திருந்தாள். ராணி தூங்கிவிட்டிருந்தாள். மண் சுவற்றில் முருகன் படம் தொங்கிக்கொண்டிருந்தது. செல்லம்மா கண்கொட்டாமல் முருகனையே வெறித்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது. மாணிக்கம் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

ராணியை தரையில் போட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டாள் செல்லம்மா. ராணியின் அழகு முகத்தியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று தூங்கிப்போனாள்.

சிறிது நேரம் கழித்து, மாணிக்கம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். முருகன் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)