Bhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்

போப்பால் பேரழிவைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் அறிந்ததில்லை. அதைப் பற்றி படித்ததில்லை. படிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை. அது ஏதோ மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நினைத்திருந்தேன். ஒரு பேரழிவு எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கத்தெரியவில்லை. உண்மையில் பேரழிவுகள் உலகம்தோரும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் பேரழிவுகளுக்குப் பிறகு ஒரு அரசு அந்த அழிவில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி அந்த அழிவிலிருந்து வெளிக்கொணர்ந்தது என்பது மிக முக்கியம்.

ஸ்வரூப்பா முகர்ஜியின் புத்தகத்தை எதேச்சையாக சிங்கப்பூர் நூலகத்தில் பார்த்து அதை எடுத்து படிக்கும் வரை போப்பால் பேரழிவு என்னுள் பெரிய அதிர்வை உண்டுபண்ணும் என்று நான் நினைக்கவில்லை. அதைத் தமிழில் எழுதவேண்டும் என்கிற எண்ணமும் அதற்குப்பிறகுதான் தோன்றியது. மொழிபெயர்ப்பு எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றி நானே எழுதும் அளவுக்கு கள ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடையாது. அலுவலகம் முடித்து வந்த பிறகு கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுதவேண்டும், மேலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை.

சில கதைகளின் கரு மனதில் தோன்றிவிடும். ஆனால் அது வளர்ந்து கதையாக மலர வெகு நாட்களாகும். சில சமயம் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கதையாக வளர்ந்து விட்ட பின் அது மண்டைக்குள் தங்காது. அது வெளி வந்தே தீரவேண்டும். எனது வடமிழந்த தேர் சிறுகதை இவ்வகையைச் சேர்ந்தது. இந்தக்கதையின் கரு எனக்கு ஆறு வருடங்களுக்கு முன் தெரியும். நான் பாரீசுக்கு அலுவலகப் பணி நிமித்தமாக சென்றிருந்த பொழுது, அலுவலகத்திலிருந்து மாலை கடுங்குளிரில் நடந்து வந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில் முழுக் கதையாக உருமாறியது. அதற்குப்பின் அதை என்னுள் வைத்திருக்க இயலவில்லை. கடும்பணிச்சுமைக்கு மத்தியிலும் பத்து நாட்கள் நிதமும் இரவு ஒருமணி நேரம் செலவழித்து கதையை எழுதிமுடித்தேன்.

அப்படி ஒரு நிலைக்கு போப்பால் பேரழிவைப் படித்தப் பிறகு நான் தள்ளப்பட்டேன். சரி வேறு வழியில்லை – மொழிபெயர்ப்பே சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தேன். முதல் அத்தியாயம் எழுதியது 2006ல். கடைசி அத்தியாயம் எழுதியது 2009ல். மூன்று வருடங்கள் எழுதியிருக்கிறேன் – 🙂 என்னுடைய மிகச்சிறந்த எழுத்து இல்லை இது. ஆனால் போப்பால் பேரழிவைப்பற்றியும் அதற்குப்பின்னால் இருந்த வெளிநாட்டு கார்ப்பரேட் பண முதலைகளையும் அவர்களுக்கு பாதுகாப்பளித்த உள்ளூர் அரசியல்வாதிகளையும் பற்றிய சிறு தெளிவு இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உண்டாக்கினால் அது போதும் எனக்கு.

இதன் மின் புத்தகம்:

https://dl.dropboxusercontent.com/u/91280476/Bhopal%20Gas%20Tragedy.pdf

 

முத்து. மே 18 2014.