பூமியிலிருந்து தெரியும் பால்வெளி!

Greenwich Royal Observatory இந்த வருடத்தில் “சிறந்த வானியல் புகைப்படம்” போட்டியின் முடிவை வெளியிட்டிருக்கிறது. வெற்றி பெற்ற புகைப்படங்களை இங்கே காணலாம். மற்ற எல்லா புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.

பூமியும் பிரபஞ்சமும் (Earth and Space) என்கிற தலைப்பில் வெற்றி பெற்ற புகைப்படம் கீழே:

மிகப்பழமையான மரத்தை ஒட்டினாற் போல கத்தையான ஒளிக்கீற்று தெரிகிறதல்லவா அதுதான் நம் பூமி இருக்கும் சூரியகுடும்பம் இருக்கும் பால்வெளி (Milkyway Galaxy). நம் பால்வெளி தட்டையான டிஸ்க் போன்றது; நட்சத்திரங்கள், வாயுக்கள் மற்றும் தூசியிலானது. ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் (9 லட்சம் ட்ரில்லியன் கிலோமீட்டர்)அகலம் கொண்டது. பால்வெளியின் நடுவிலிருந்து பால்வெளியின் கடைக்கோடி தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் நமது சூரியன் இருக்கிறது. (ஒரு ஓரத்தில்!) இந்தப் புகைப்படம் பால்வெளியின் உள் நோக்கிப் மையத்தைப் பார்க்கின்றது.ஒரு டிவிடி டிஸ்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு டிஸ்கின் மையத்தைப் பார்ப்பது போன்று.

மேலும் இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த மரம் மிகவும் பழமையானது – செங்கிஸ் கான் படையெடுப்பின் பொழுது இந்த மரம் இங்கே நின்று கொண்டிருந்ததாம். செங்கிஸ் கான் பார்த்த மரத்தை நாமும் பார்க்கிறோம்! இதுவே ஆச்சரியமாக இருந்தால் – இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஒளி முப்பதாயிரம் வருடப் பழமையானது. நீங்கள் பார்க்கும் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி முப்பதாயிரம் வருடத்திற்கு முன்னால் தனது பயணத்தை ஆரம்பித்தது.

உங்களுக்குத் தெரியுமா?
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? எட்டு நிமிடங்கள். அதாவது நாளை மதியம் 12:00 மணிக்கு தகிக்கும் வெயிலில் நீங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது சூரியனை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டால் 12:08 க்குத்தான் சூரியன் அணைந்துவிட்டது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் 11:59 க்கு சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி பூமியை 12:07க்குத்தான் வந்தடையும். அதேபோல 12:00 மணிக்கு சரியாக சூரியன் அணைந்து விடும் முன்னர் கிளம்பிய ஒளி பூமியை 12:08க்குத்தான் வந்தடையும்.

நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களின் ஒளி ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!

புகைப்படங்களைக் கண்டு களியுங்கள்! Be inspired!

செவ்வாய் கிர‌க‌த்தில் ம‌ண்ச‌ரிவு

HiRIS கொடுத்துள்ள‌ செவ்வாய் கிர‌க‌த்தின் இந்த‌ ப‌ட‌த்தில் மூன்று ம‌ண் ச‌ரிவுக‌ள் தெரிகின்றன‌. அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.

இட‌துப‌க்க‌ம் உறைந்து போன‌ கார்ம‌ன் டை ஆக்சைடு த‌ரையை மூடியிருப்ப‌தைக் காண்கிறோம். சிவ‌ப்புக் நிற‌த்தில் செங்க‌ல் செங்க‌லாக‌த் தெரிவ‌து ஒரு உய‌ர‌மான‌ ம‌லையின் செங்குத்தான‌ ஒரு ப‌குதி. நாமும் கீழ்நோக்கி செங்குத்தாக‌ப் பார்ப்ப‌தால் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் ம‌க‌வும் குறைவாக‌த் தெரிகிற‌து. ஏமாந்துவிடாதீர்க‌ள் உண்மையில் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் 700 மீட்ட‌ர். வ‌ல‌து ப‌க்க‌த்தில் சாம்ப‌ல் நிற‌த்தில் த‌ரை தெரிகிற‌து. அவை ப‌சால்டிக் பாறையின் ம‌ண் துக‌ள்க‌ள். இந்த‌ப் ப‌ட‌த்த‌, செவ்வாய் என்று சொல்லாம‌ல், யாரிட‌மாவ‌து காட்டினால் (முக்கிய‌மாக‌ பூமியின் வ‌ட‌க்கு ப‌குதியில் வாழ்ப‌வ‌ர்க‌ளிட‌ம்; அவ‌ர்க‌ள் தானே ப‌னிப்பொழிவுக‌ளையும் ப‌னிக்க‌ட்டிக‌ளையும் ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள்; நாம் அபிராமி மாலுக்குத்தான் போக‌ணும்) இது பூமி என்றே தான் சொல்லுவார்க‌ள்!

மேலும் அப்பொழுதுதான் நிக‌ழ்ந்துவிட்டிருக்கிற‌ ம‌ண் ச‌ரிவினால் ஏற்ப‌ட்ட‌ புகை மூட்ட‌த்தையும் நாம் காண‌லாம். புகை மூட்ட‌த்தின் நிழ‌லும் தெரிகிற‌து. நிழ‌லின் மூல‌ம் சூரிய‌னின் கோண‌த்தையும் அறிந்துகொள்ள‌லாம். இத‌ன் மூல‌ம் புகையின் உய‌ர‌த்தைக் க‌ண‌க்கிட‌லாம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் வ‌ட‌க்குப் ப‌குதியில் இது நிக‌ழ்ந்திருக்கிற‌து. த‌ற்போது செவ்வாயின் இந்த‌ப் ப‌குதியில் வ‌ச‌ந்த‌கால‌ம். கெட்டியாகிவிட்ட‌ ம‌ண‌ல் பாறைக‌ளின் இடையே குளிர் கால‌த்தில் புகுந்து உறைந்து போன‌ கார்ப‌ன் டை ஆக்சைடு வ‌ச‌ந்த‌ கால‌த்தில் சூரிய‌ வெப்ப‌த்தால் உருகிவிடுகிற‌து. இத‌னால் ம‌ண் பாறைக‌ள் கீழே விழும்பொழுது இது போன்ற‌ ச‌ரிவுக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌வாம்.இந்த‌ வ‌ருட‌த்தில் மேலும் சில‌ ப‌ககுதிக‌ளில் இது போன்ற‌ ம‌ண் ச‌ரிவுக‌ள் நிக‌ழ்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்திருக்கின்ற‌ன‌ர்.அற்புத‌ம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் ம‌ற்ற‌ எந்த‌ப் ப‌ட‌த்தினிலும் இல்லாத‌ ஒரு விச‌ய‌ம் இந்த‌ப் ப‌ட‌த்தை சிற‌ப்பான‌தாக்குகிற‌து. உறைந்த‌ கார்ப‌ன் டை ஆக்சைடு ப‌டிந்த‌ த‌ரை, மலையின் செங்குத்தான‌ ப‌குதி; மீண்டும் ம‌ண‌ல் நிறைந்த‌ பாறைக‌ள் ம‌ண் ச‌ரிந்து விழுந்த‌தால் ஏற்ப‌ட்ட‌ புகை; இவைய‌னைத்தும் ஒரு சேர‌ மிக‌வும் தெளிவாக‌ இருக்கிற‌து.

ம்ம் செவ்வாயில் நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌!

PS: இவ்வ‌ள‌வு ப‌னிக்க‌ட்டி இருந்தா செவ்வாய்(க்கு ஜ‌ல‌)தோஷ‌ம் ஏன் பிடிக்காது? இத‌த்தான் ந‌ம்மாளுக‌ சாட்டிலைட் உத‌வி இல்லாம‌லே அந்த‌க் கால‌த்திலே சொல்லிருக்காங்க‌ப்பா!

இந்தியா வானாராய்ச்சித் திட்ட‌ம் 2025

(என்னால் முடிந்த‌ வ‌ரைக்கும் Space Mission ஐ த‌மிழ் ப‌டுத்தியிருக்கிறேன். வேறு ந‌ல்ல‌ சொல் பிர‌வாக‌ம் இருந்தால் சொல்ல‌வும்.)

இஸ்ரோ (ISRO) த‌ள‌த்துக்கு அடிக்கடி செல்லாவிடினும் எப்ப‌வாவ‌து போவ‌து வாய்க்கும். இந்த‌ முறை சென்ற‌ ‌ பொழுது (ப‌ராக் ஒபாமாவின் திட்ட‌ங்க‌ளைப் பார்த்த‌பின்!) த‌ள‌ம் முற்றிலுமாக‌ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. மேலும் இந்தியாவின் அடுத்த‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளின் வானாராய்ச்சித் திட்ட‌மும் இருந்த‌து. மேலோட்ட‌மான‌ பார்வை.

1. கிராம‌ப்புற‌ங்க‌ளை இணைக்க‌வும், பாதுகாப்பைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌வும், அலைபேசிக‌ளின் ப‌ய‌ன் திற‌னை அதிக‌ரிக்க‌வும் சாட்டிலைட்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து.

2. த‌ட்ப‌வெட்ப‌ நிலைக‌ளை ஆராய்வ‌த‌ற்கு ஏதுவாக‌ மிக‌ நுண்ணிய‌ ப‌ட‌ங்க‌ளை எடுப்ப‌த‌ற்கான‌ தேவைக‌ளை நிறைவேற்றுவ‌து.

3.சூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தையும் பிர‌ப‌ஞ்ச‌த்தையும் மேலும் புரிந்துகொள்ள‌ இன்னும் புதிய‌ வ‌ழிமுறைக‌ள் க‌ண்டுபிடிப்ப‌து.

4. கோல்க‌ளை ஆராய்வ‌து.

5. அதிக‌ ப‌லுவைத் தூக்க‌க்கூடிய‌ ராக்கெட் செலுத்திக‌ளை வ‌டிவ‌மைப்ப‌து. (அமெரிக்காவும் இதே போன்ற‌தொரு மிஷ‌ன் வைத்திருக்கிற‌து! ஆனால் அவ‌ர்க‌ள் சொல்லும் அதிக‌ ப‌லு வேறு ந‌ம‌து அதிக‌ ப‌லு வேறு)

6. மீண்டும் மீண்டும் பய‌ன்ப‌டுத்த‌க்கூடிய‌ ராக்கெட் செலுத்திக‌ளை வ‌டிவ‌மைப்ப‌து.

க‌டைசியாக‌

7. ம‌னித‌னை விண்வெளிக்கு அனுப்புவ‌து!

விக‌ர‌ம் ச‌ர‌பாய் ISRo வை நிறுவும் பொழுது அவ‌ர‌து நோக்க‌ங்க‌ள் மிக‌வும் தெளிவாக‌ இருந்த‌ன‌. ந‌ம் வானாராய்ச்சியின் நோக்க‌ம் வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌ நாடுக‌ளுட‌ன் போட்டிபோட்டுக்கொண்டு நில‌வுக்கோ அல்ல‌து ம‌ற்ற‌ கிர‌க‌ங்க‌ளுக்கோ ம‌னித‌னை அனுப்புவ‌து அல்ல‌. ந‌ம‌து வானாராய்ச்சியின் மூல‌ம் ச‌ராச‌ரி ம‌னித‌னுக்கும் ப‌ய‌ன் இருக்க‌வேண்டும். ந‌ம்மைப் போன்ற‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடுக‌ளின் ம‌க்க‌ள் வ‌ரிப்ப‌ண‌ம் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தே.

ஐம்ப‌து ஆண்டுக‌ள் ஆச்சு. அவ‌ர‌து நோக்க‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ நிறைவேறியும் விட்ட‌து. க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ம‌து GDP யும் வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து. ச‌ம்பா சாகுப‌டியிலிருந்து பேர‌ழிவுக‌ளைக் க‌ண்ட‌றிவ‌து வ‌ரை நாம் முன்னேறிவிட்டோம். அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு முன்னேறுவ‌து மிக‌ அவ‌சிய‌ம்.

அடுத்த‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளில் ம‌னித‌னை விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்ப‌மும் (நில‌வுக்கோ அல்ல‌து செவ்வாய்க்கோ!) திற‌னும் நாம் பெற்றிருக்க‌வேண்டும். அப்பொழுதுதான் நாம் ப‌தினைந்து ஆண்டுக‌ள் கழித்து வ‌ள‌ர்ச்சிய‌டைந்து விட்ட‌ நாடுக‌ளில் ஒன்றாக‌ இருக்க‌முடியும். இன்னும் வானாராய்ச்சியில் எத்த‌னையோ ப‌டிக‌ட்டுக‌ள் ஏற‌ வேண்டியிருக்கிற‌து.

ந‌ம் கால‌த்துக்குள் வேறொரு ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌த்துக்கு ந‌ம் (ந‌ம்!) விண்க‌ள‌ங்க‌ள் போவ‌தைப் பார்க்க‌வேண்டாமா?

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை.

ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான் இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.(மீண்டும் படியுங்கள்: நேரம் வரவில்லை; நேரம் கிடைத்தது:) ). ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Planet Mass
(10^22 kg)
Distance
Gravity
(Moon=1)
Tides
(Moon=1)
Mercury 33 92 0.00008 0.0000003
Venus 490 42 0.006 0.00005
Mars 64 80 0.0002 0.000001
Jupiter 200,000 630 0.01 0.000006
Saturn 57,000 1280 0.0007 0.0000002
Uranus 8,700 2720 0.00002 0.000000003
Neptune 10,000 4354 0.00001 0.000000001
Pluto ~1 5764 0.0000000006 0.00000000000004
Moon 7.4 0.384 1.0 1.0

(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட “அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே” என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.
1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது;ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.

(மேலும்)

டைனோச‌ர்க‌ள் ஏன் திடீரென்று அழிந்து போயின‌?

டைனோச‌ர்க‌ள் ஏன் திடீரென்று அழிந்து போயின‌ என்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ல‌ சொல்ல‌ப்பட்டாலும், இப்பொழுது ஆதார‌ப்பூர்வ‌மாக‌ ஒரு கார‌ண‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

65.5 மில்லிய‌ன் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் சுமார் 15 கிமீ நீள‌முள்ள‌ ஒரு விண் க‌ல் க‌ல்ஃப் ஆப் மெக்சிகோவில் (Chicxulub on Mexico’s Yucatan Peninsula) வினாடிக்கு இருப‌து கிமீ வேக‌த்தில் வ‌ந்து மோதிய‌து. இந்த‌ மோத‌ல் எப்ப‌டி இருந்த‌து தெரியுமா? 100 ட்ரில்லிய‌ன் ட‌ன்க‌ள் எடைகொண்ட‌ டிஎன்டியின் எரி ச‌க்தியைப் போல‌; அதாவ‌து ஹிரோஷிமா நாக‌சாகியில் போட‌ப்ப‌ட்ட‌ அணுகுண்டுக‌ளைப் போல‌ பில்லிய‌ன் ம‌ட‌ங்கு அதிக‌ ச‌க்தி இந்த‌ மோத‌லில் இருந்து வெளிப்ப‌ட்ட‌தாம்.

இந்த‌ மோத‌லால் ஏற்ப‌ட்ட‌ 180 கிமீ விட்ட‌ம் கொண்ட‌ குழி இன்றும் மெக்சிகோவில் இருக்கிற‌து. இந்த‌ ச‌ம்பவ‌ம் க‌டும் எரி ச‌க்தியை ஏற்ப‌டுத்தி அருகாமையில் இருந்த‌ உயிரின‌ங்க‌ளைக் கொன்ற‌தோடு நில்லாம‌ல் வேறொரு ப‌க்க‌விளைவையும் ஏற்ப‌டுத்திய‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தால் ஏற்ப‌ட்ட‌ புகை பூமியை ஒரு போர்வை போல‌ மூடிக்கொண்ட‌து. சூரிய‌வெளிச்ச‌ம் உள்ளே வ‌ராம‌ல் பூமி இருட்டில் மூழ்கிப்போன‌து. பூமியின் வெப்ப‌ம் அதிவேக‌மாக‌க் குறைந்து க‌டும் ப‌னி ப‌ர‌விய‌து. இந்த‌ திடீர் வெப்ப‌ மாற்ற‌த்தைத் தாங்கிக்கொள்ள‌ இய‌லாம‌ல் ப‌ல‌ உயிரின‌ங்க‌ள் அத்திப்ப‌ட்டி போல‌ ம‌றைந்து போயின‌. டைனோச‌ர்க‌ள், ப‌ற‌க்கும் டெரோசெர‌ஸ்க‌ள், மிக‌ப்பெரிதான‌ இன்ன‌ பிற‌ க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ள் எல்லாம் அழிந்து போயின‌. ஆனால் இவைதான் ம‌னித‌ன் உருவாவ‌த‌ற்கு வ‌ழிசெய்து கொடுத்த‌ன‌ என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. டைனோச‌ர்க‌ள் உயிரோடு இருந்திருந்தால் ம‌னித‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி அடைந்திருப்பானா என்ப‌து கேள்விக்குறி தான்.
இந்த‌ 20 வ‌ருட‌ ஆராய்ச்சியை 41 ந‌ப‌ர்க‌ள் கொண்ட‌ குழு ஒன்று மீண்டும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிற‌து.
>>

The review confirms that a unique layer of debris ejected from a crater is compositionally linked to the Mexican crater and is also coincident with rocks associated at the Cretaceous-Tertiary (K-T) boundary.

The team also says that an abundance of shocked quartz in rock layers across the world at the K-T boundary lends further weight to conclusions that a massive meteorite impact happened at the time of the mass extinction. This form of the mineral occurs when rocks have been hit very quickly by a massive force. It is only found at nuclear explosion sites and at asteroid impact sites

>>
Source

Earth close to Mars and Moon : NASA chat room

செவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம். உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும். இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.

இத‌ற்கு முன் 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில் இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும் 56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.
இப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆகிற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.

இது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌ ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.

சிங்க‌ப்பூரில் ச‌யின்ஸ் சென்ட‌ர் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் சாட்ட‌ர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து.

Also read: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

இருட்டின‌ பிற‌கு நீங்க‌ள் வெளியே (ஷாப்பிங் மால்க‌ளுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்க‌ள் என்றால் கிழ‌க்குப்ப‌க்க‌ம் கொஞ்ச‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பிர‌காச‌மான‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் தெரிவ‌தைக் க‌ண்டிருக்க‌க்கூடும். ஆனால் அது ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌; அது ஒரு கிர‌க‌ம். சிவ‌ப்பு என்று சொன்ன‌வுட‌ன் நிறைய‌ பேர்க‌ளுக்கு அந்த‌ கிர‌க‌த்தின் பெய‌ர் என்ன‌வென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரிய‌னைச் சுற்றிக்கொண்டிருப்ப‌தால் ஒவ்வொரு ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். இன்னும் தெளிவாக‌ சொல்ல‌ப்போனால் உள் சுற்றில் வேக‌மாக‌ ப‌ய‌ணிக்கும் கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாக‌ப் ப‌ய‌ணிக்கும் காரை எப்ப‌டிக் க‌ட‌ந்து செல்லுமோ அதே போல‌ உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் க‌ட‌க்கும்.

பூமி செவ்வாயைக் க‌ட‌க்கும் பொழுது செவ்வாய் சூரிய‌ன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். என‌வே சூரிய‌ன் உதிக்கும் பொழுது ம‌றையும்; சூரிய‌ன் ம‌றையும் பொழுது உதிக்கும். இந்த‌ ச‌மய‌த்தில் ந‌ம‌க்கு இர‌ண்டு சாத‌க‌மான‌ விச‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்க‌ளில் மிக‌ப்பெரிதாக‌த் தெரியும்; இர‌வு முழுவ‌தும் தெரிவ‌தால் ந‌ம‌து சௌக‌ரிய‌த்துக்கு செவ்வாயை டெல‌ஸ்கோப் மூல‌ம் பார்த்துக்கொண்டே இருக்க‌லாம். (என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் டெல‌ஸ்கோப் இருக்கிற‌து. அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ டெல‌ஸ்கோப் இல்லை என்றாலும் ஓர‌ள்வு பார்க்க‌லாம். இங்கே ச‌யின்ஸ் சென்ட‌ரில் டெல‌ஸ்கோப் க‌டை ஒன்று இருக்கிற‌து. எப்பொழுது போனாலும் அந்த‌க் க‌டையில் க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ரைத் த‌விர‌ யாருமே இருக்க‌மாட்டார்க‌ள். க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ர் மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர். விசாரித்த‌தில் அவ‌ருக்கு டெல‌ஸ்கோப் ப‌ற்றி எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அள‌வே தெரிந்திருந்த‌து!)

இது போல‌ பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்ப‌து இன்னும் கொஞ்ச‌ நாட்க‌ளில் ந‌ட‌க்க‌ப்போகிற‌து: ஜ‌ன‌வ‌ரி 29 2010.

அத‌னால் தான் “Beauty with out borders” என்னும் த‌ள‌ம் Hello Red Planet என்று ஒரு புரோகிராம் ஆர‌ம்பித்திருக்கிற‌து. இத‌ன் நோக்க‌ம் எல்லோரையும் டீவி ம‌ற்றும் ஷாப்பிங் மால்க‌ளில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண‌ வைப்ப‌து. டெல‌ஸ்கோப்பில் பார்ப்ப‌தால் செவ்வாய் மிக‌ மிக‌ப் பெரிதாக‌ தெரியும் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்க‌ள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் ப‌னிப்பாறைக‌ளைக் காண‌முடியும் என்று சொல்கிறார்க‌ள். இங்கு ச‌யின்ஸ் சென்ட‌ர் வெள்ளிக்கிழ‌மை திற‌ந்திருக்கும்; எல்லாருக்கும் இல‌வ‌ச‌ அனும‌தி. நானும் ம‌னைவியும் குழ‌ந்தையும் போக‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

நீங்க‌ள் டெல‌ஸ்கோப் உப‌யோகித்துப் பார்த்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் க‌ண்ட‌ காட்சியை குழுவுக்கு தெரிய‌ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் உலக‌ம் முழுவ‌திலும் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ எல்லோரும் போல‌த்தான் நீங்க‌ளும் செவ்வாயைப் பார்த்தீர்க‌ள் என்ப‌தையும் நீங்க‌ள் உறுதிப்ப‌டுதிக்கொள்ள‌ முடியும்.

இந்த‌ முறை இந்தியா வ‌ந்திருந்த‌பொழுது இந்த‌ காவ‌லூரில் இருக்கும் observatoryக்குப் போக‌வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடிய‌வில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிக‌ப் பெரிய‌ டெல‌ஸ்கோப் இருக்கிற‌தாம்! காவ‌லூருக்குப் ப‌க்க‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளே த‌வ‌றாம‌ல் செவ்வாய் கிர‌க‌த்தைப் பார்த்து என‌க்குத் தெரிவியுங்க‌ள் ப்ளீஸ்.

சென்னையில் ச‌யின்ஸ் சென்ட‌ர் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை; அல்ல‌து உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோன‌ம‌ர் குழு ஏதும் இருக்கிற‌தா என்றும் என‌க்குத் தெரிய‌வில்லை. அப்ப‌டி இருந்தால் என‌க்குத் தெரிவியுங்க‌ள். மேலும் சென்னை அல்லாத உங்க‌ள் ஊரில் இப்ப‌டி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்க‌ள்.

கூகிள் செய்த‌தில் இந்த‌ குழு ஒன்று சென்னையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.

Name: TANASTRO (Tamilnadu astronomy association)
Address: C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai
Contact: President .Proff.P.Devados
Phone: 24416751
Email: Tanastro@yahoo.com
URL: Website
Members: 90

எறும்பின் சாப‌ம் ம‌ற்றும் பாம்பு செய்த‌ பூஜை

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் பிபிசி நாலெட்ஜ் சான‌லில் ஒரு டாக்குமென்ட‌ரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் ம‌லை சூழ்ந்த‌; எளிதில் யாரும் சென்றுவிட‌முடியாத‌ தூர‌த்தில் ஒரு இன‌ ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். ஐரோப்பாவிலிருந்து இரு ந‌ப‌ர்க‌ள் ஏற‌முடியாத‌ ம‌லைக‌ளையும் க‌ட‌க்க‌முடியாத‌ க‌டின‌மான‌ பாதைக‌ளையும் க‌ட‌ந்து வெகு நாட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து அந்த‌ ம‌லை உச்சியை அடைகின்ற‌ன‌ர். அங்கு த‌ங்கியிருந்து அந்த‌ ம‌க்க‌ளுட‌ன் ப‌ழகுகின்ற‌ன‌ர். ப‌ய‌ண‌ம் செய்த‌ அந்த‌ இரு ஐரோப்பிய‌ர்க‌ளுள் ஒருவ‌ர் தாவ‌ர‌விய‌ல் நிபுண‌ர்.

அந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ருள் ப‌ல‌ர் இன்ன‌மும் ந‌க‌ர‌ங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ள்; அந்த‌ காட்டைவிட்டு வெளி வ‌ராத‌வ‌ர்க‌ள். ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் ஆங்கில‌ ம‌ருந்துக‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. நோய்க‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. ந‌ம‌க்கு தெரியாவிடில் நோய்க‌ளே இல்லை என்ப‌தாகிவிடுமா? அவ‌ர்க‌ளுக்கும் நோய்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு நோய்களின் பெய‌ர்க‌ளும் அவ‌ற்றின் பாதிப்புக‌ளும் தெரிய‌வில்லை. அங்கிருக்கும் ம‌க்க‌ளில் சில‌ருக்கு கான்ச‌ர் இருந்தும்; அவ‌ர்க‌ளுக்கு அது தெரியாது.

ப‌ல‌ நோய்க‌ளால் ம‌க்க‌ள் மாண்டாலும் அது ஏதோ சாப‌த்தால் தான் ந‌ட‌க்கிற‌து என்று ந‌ம்பிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகை ம‌ருத்துவ‌ம் ம‌ட்டுமே. தாவ‌ர‌விய‌லார் அவ‌ர்க‌ள‌து மூலிகை ம‌ருத்துவ‌ம் ப‌ற்றி விசாரிக்க‌; அவ‌ர்க‌ள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவ‌ர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த‌ இலைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ச் சொல்லும் ம‌ருத்துவ‌குண‌ம் ஏதும் இல்லை என்று இவ‌ர் சொன்னாலும் அவ‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை.

அங்கிருக்கும் நான்கு மாத‌ குழந்தை ஒன்றுக்கு க‌ழுத்தில் ஒரு வ‌கையான‌ வீக்க‌ம் இருக்கிற‌து. அது ஒரு கிரிக்கெட் பால் அள‌வுக்கு பெரிதாக‌வும் இருக்கிற‌து; கெட்டியாக‌வும் இருக்கிற‌து. இது ஒரு வ‌கையான‌ நோய்; இந்த‌க் குழ‌ந்தையை குண‌ப்ப‌டுத்த‌ ந‌க‌ர‌த்துக்கு கூட்டி சென்று ம‌ருத்துவ‌ம் பார்க்க‌வேண்டும் என்றும் இந்த‌க் குழ‌ந்தையை ந‌க‌ர‌த்துக்கு அழைத்துச் செல்ல‌ என‌க்கு அனும‌தி தாருங்க‌ள் என்று அவ‌ர் கேட்கிறார். அத‌ற்கு அவ‌ர்க‌ள் ம‌றுத்துவிடுகின்ற‌ன‌ர்.

மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த‌ மாதிரியான‌ வீக்க‌ம் ஒரு வ‌கையான‌ எறும்புக‌ளின் சாப‌த்தால் வ‌ருகிற‌து என்றும் அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ எறும்புக‌ளை நோக்கி பிரார்த்த‌னை செய்து ஒரு வ‌கையான‌ இலையை அரைத்து சாறு எடுத்து வீக்க‌த்தின் மீது கொஞ்ச‌ கால‌ம் விட்டுக்கொண்டிருந்தால் ச‌ரியாகிவிடும் என்றும் சொல்கின்ற‌ன‌ர். ந‌ம‌து தாவ‌ர‌விய‌லாரின் பேச்சை யாரும் கேட்கிற‌மாதிரி தெரிய‌வில்லை.

தாவ‌ர‌விய‌லாரும் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அந்த‌ இலையைத் தேடி க‌ண்டுபிடிக்கிறார். இலையைக் க‌ண்டுபிடித்த‌ நொடியில் அந்த‌ இலைக்கு ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லையென்ப‌தை அறிகிறார். இதை நிரூபிக்க‌ அந்த‌ இலைக‌ளை சாறு எடுத்து அந்த‌க் குழ‌ந்தையின் க‌ழுத்திலிருக்கும் வீக்க‌த்தில் விடுகிறார். கொஞ்ச‌ நேர‌த்தில் வீக்க‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ற்றிப்போகிற‌து.

தாவ‌ர‌விய‌லாருக்குத் தெரியும் அந்த‌ இலையில் ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லை என்ப‌து; என‌வே வீக்க‌ம் குறைந்தது ஒரு த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியே என்ப‌தையும் அறிகிறார். வீக்க‌ம் ப‌ல‌ நாளாக‌ இருந்திருக்கிற‌து; ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பின் கொஞ்ச‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு வ‌ற்றிப்போகிற‌து. இலைக்கும் வீக்க‌ம் குறைந்த‌துக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.

ஆனால் இந்த‌ த‌ற்செய‌ல் ச‌ம்ப‌வ‌த்தால் அங்கிருக்கும் ம‌க்க‌ளுக்கு மூலிகை ம‌ருத்துவ‌ம் மேல், மேலும் தீவிர‌மான‌ ந‌ம்பிக்கை உருவாகிற‌து. இதைத் தொட‌ர்ந்து இன்னும் ப‌ல நோய்க‌ளை இதே போன்ற‌தொரு மூலிகை ம‌ருத்துவ‌ம் குண‌ப்ப‌டுத்தும் என்று அவ‌ர்க‌ள் உறுதியாக‌ ந‌ம்புவ‌த‌ற்கு இது போன்ற‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக‌ள் உத‌வுகின்ற‌ன‌.

*

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் என‌க்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ என்னுட‌ன் சேர்ந்து இன்னும் ப‌ல‌ருக்கும் அந்த‌ மெயில் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து. அது சூரிய‌கிர‌க‌ண‌த்தின் பொழுது பூக்க‌ளைக் கொண்டு சிவ‌னுக்கு பூஜை செய்த‌ பாம்பைப் ப‌ற்றிய‌து. அதாரம் இருக்கிற‌து. பட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. சாம்பிளுக்கு அவ‌ர் அனுப்பிய‌ ஒரு ப‌ட‌ம் இங்கே:

அவ‌ரைச் ச‌ந்தித்த‌ பொழுது ஏன் இவ்வாறான‌ மெயில்க‌ளை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; என‌க்கு வ‌ந்த‌து உங்க‌ளுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிற‌கு ஏன் இதையெல்லாம் ந‌ம்புகிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; கொஞ்சநேர‌ம் ம‌ழுப்பிய‌வ‌ர் பிற‌கு ச‌ட்டென்று, உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுட‌ன் என்று கோப‌மாக‌ச் சொன்னார்.

*

ச‌ரி தான்; அதையே நானும் திரும்ப‌க் கேப்பேன்ல‌?

ஐந்து குர‌ங்குக‌ளும் சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தாவும்

ஒரு கூண்டில் ஐந்து குர‌ங்குக‌ள் இருப்பதாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள். அந்த‌க் கூண்டிற்குள் ஒரு வாழைப்ப‌ழ‌ம் தொங்க‌விட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ஏதுவாக‌ சில‌ ப‌டிக்க‌ட்டுக‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

குண்டில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ கொஞ்ச‌ நேரத்துக்குள் ஏதாவ‌து ஒரு குர‌ங்கு அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்காக‌ ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது முத‌ல் ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம்; நீங்க‌ள் எல்லாக் குர‌ங்குக‌ளின் மீதும் குளிர்ந்த‌ ஐஸ் போல‌ இருக்கும் நீரை பீய்ச்சி அடியுங்க‌ள்.

கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் வேறு ஏதாவ‌து ஒரு குர‌ங்கு வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம் உட‌னே ஏற்க‌ன‌வே செய்த‌து போல‌ எல்லாக் குர‌ங்குளின் மீதும் ஐஸ் போல‌ குளிரான‌ த‌ண்ணீரைப் பீய்ச்சி அடிக்க‌வேண்டும்.

இப்ப‌டி செய்ய‌ச் செய்ய‌ கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வாழைப்ப‌ழ‌த்தை எடுக்க‌ ஏதாவ‌து ஒரு குர‌ங்கு ப‌டியைத் தொட‌ப்போனால் ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் அதைத் த‌டுக்கும்.

இப்பொழுது குளிர்ந்த‌ நீரை நிறுத்திவிடுங்க‌ள். ஒரு குர‌ங்கை வெளியே எடுத்துவிட்டு ஒரு புதுக்குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். புது குர‌ங்கு கூண்டிற்குள் சென்ற‌ உட‌னேயே வாழைப்ப‌ழ‌த்தைப் பார்க்கும்; பார்த்த‌ உட‌ன் அதை எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும். ஆனால் ம‌ற்ற‌ ப‌ழைய‌ குரங்குக‌ள் எல்லாம் சேர்ந்து இந்த‌ப் புதுக்குர‌ங்கை எடுக்க‌விடாம‌ல் த‌டுத்து அடிக்கும். ஏன் அடிக்கிறார்க‌ள் என்று புரியாத‌ புதுக் குர‌ங்கு; கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் அந்த‌ப் ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும். மீண்டும் அடி விழும். இப்பொழுது அந்த‌க் குர‌ங்குக்கு ஒன்று ம‌ட்டும் புரிந்து விடும்; ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போனால் அடி விழுவ‌து நிச்ச‌ய‌ம். எனவே எடுக்க‌ப் போகாது.

இப்பொழுது மீண்டும் ஒரு ப‌ழைய‌ குர‌ங்கை கூண்டிலிருந்து அக‌ற்றி விட்டு மேலும் ஒரு புதிய‌ குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். இந்த‌ப் புதிய‌ குர‌ங்கு ப‌ழ‌த்தைப் பார்த்த‌தும் எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும்; அப்பொழுது ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் எல்லாம் சேர்ந்து புதுக்குர‌ங்கை அடித்து உதைக்கும். ஆச்ச‌ரிய‌ம் என்ன‌வென்றால் போன‌ த‌ட‌வை உள்ள‌ வ‌ந்த‌ புதுக்குர‌ங்கும் சேர்ந்து கொண்டும் இந்த‌முறை உள்ள‌ வ‌ந்த‌ குர‌ங்கை அடிக்கும்; ஏன் அடிக்கிறோம் என்று தெரியாம‌லே!

மூன்றாவ‌து புதுக் குர‌ங்கை மாற்றிய‌ உட‌ன்; வ‌ழ‌க்க‌ம் போல‌ அது ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும் பொழுது ம‌ற்ற‌ எல்லா குர‌ங்குக‌ளும் அதை அடிக்கும். அடிக்கிற‌ நான்கு குர‌ங்குக‌ளில் இர‌ண்டு குர‌ங்குக‌ளுக்கு நாம் ஏன் ப‌டிக‌ளில் ஏற‌க்கூடாது என்றோ; நாம் ஏன் அப்ப‌டி ஏறுகிற‌ குர‌ங்கை அடிக்கிறோம் என்றோ தெரியாது!

இப்ப‌டியாக‌ நான்காவ‌து ஐந்தாவ‌து குர‌ங்குக‌ளை புதுக்குர‌ங்குக‌ளால் மாற்றிய‌பின் முத‌லில் ஐஸ் த‌ண்ணீர் தெளிக்க‌ப்ப‌ட்ட‌ எந்த‌க் குர‌ங்குக‌ளும் இப்பொழுது இல்லை; ஆனால் புதிதாக‌ வ‌ந்த‌ எந்த‌க் குர‌ங்கும் ப‌டிக‌ளுக்குப் ப‌க்க‌த்தில் கூட‌ப் போகாது. ஏன்? அவைக‌ளைப் பொறுத்த‌வ‌ரை அது அப்ப‌டித்தான் ரொம்ப‌ நாளாக‌வே இருக்கிற‌து!

*

இன்று ம‌திய‌ சாப்பாட்டின் போது என் ச‌க‌ அலுவ‌ல‌ர் ஒருவ‌ர் “இன்று சூரிய‌ கிர‌க‌ண‌ம் என‌வே மூன்று ம‌ணிக்குள் சாப்பிட்டு விடுங்க‌ள். அத‌ற்குப் பிற‌கு ஐந்த‌ரை ம‌ணி வ‌ரையில் சாப்பிட‌க்கூடாது” என்று சொன்னார். ஏன் என்று கேட்டால், ப‌திலில்லை! ஆனால் சாப்பிட‌க்கூடாது என்று ம‌ட்டும் தெரியும்!! கார‌ண‌ம் தெரியாவிட்டாலும் சாப்பிட‌க்கூடாது என்ப‌தில் ம‌ட்டும் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.

*

இது ந‌ம்பிக்கை சார்ந்த‌ விச‌ய‌ம் அல்ல‌; அறிவிய‌ல் பூர்வ‌மான‌ விச‌ய‌ம். நீங்க‌ள் கெடுவ‌து ம‌ட்டுமில்லாம‌ல் அடுத்த‌வ‌ரையும் கெடுக்காதீர்க‌ள்.

*
இந்த‌க்  கொழுவியில் இதைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து:
Science Popularisation Association of Communicators and Educators (SPACE), a Delhi-based organisation working to make science and astronomy popular among youngsters, is taking people to Varkala in Kerala to watch the eclipse.

“We have a team of 70 people both from scientific and non-scientific community including some children. We will be doing several experiments like recording temperature, humidity, wind speed and ambient light during the eclipse. We are carrying several telescopes, solar filters and high resolution camera to catch the eclipse,” said Sachin Bhamba, astronomer with SPACE.

SPACE has also initiated a study about impact of solar eclipse on people.

“There are all kind of superstitions around a solar eclipse — like you should not eat or drink during an eclipse. We are taking 35 people to Varkala and will make them do every routine thing during the eclipse. They will be later asked to share the changes they felt during the celestial activity. We will publish a study based on the data so that people cast away all false beliefs related to eclipse,” said Bhamba.

சூரிய‌ கிர‌க‌ண‌த்தைப் ப‌ற்றித்தெரிந்து கொள்ள‌ இந்த‌ கொழுவியைப் பாருங்க‌ள்.

*

சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தா யார் என்று இன்ன‌மும் நீங்க‌ள் என்னிட‌ம் கேட்க‌மாட்டீர்க‌ள் என்றே நினைக்கிறேன்.

*

சூப்பர்நோவா : நம் கொல்லைப்புற‌த்தில் வெடிக்கப்போகும் ஒரு நட்சத்திரம்

சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?  அணையப்போற விளக்கு பிரகாசமா எரியுதுன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி மிகவும் பிரகாசமாகத் தான் இருக்கும். நமக்கு கண்ணுக்கு எட்டியவரையிலும் (நமக்கு தெரிந்த; தெரிகின்ற அண்டம் முழுவதிலும்) பிரகாசமாக ஒரு வெளிச்சம் தெரிகிறதென்றால் அது சூப்பர் நோவாவாகத்தான் (Supernova) இருக்கவேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் European Southern Observatoryயின் மிகப்பெரிய டெலஸ்கோப்பால் எடுக்கப்பட்டது.

மேலே சொன்னது போல சூப்பர்நோவா தான் அண்டத்தில் மிகவும் பிரகாசமானது. சூரியன் ஆயிரம் வருடங்களில் வெளியேற்றும் சக்தியை இது ஒரே ஒரு நொடியில் வெளியேற்றிவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சூப்பர் நோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்கள் சிலர் சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் வெடிக்கும் பொழுது மட்டும் தான் சூப்பர்நோவா உருவாகின்றது என்று நினைக்கின்றனர். ஆனால் இன்னொரு வகையான சூப்பர் நோவா இருக்கின்றது. இன்னும் சில பில்லியன் வருடங்களில் சூரியன் சாகும் பொழுது அது தனது வெளிப்புறத்தை உதிர்த்துவிடும். அதன் பிறகு மிகுந்த வெப்பமான அதன் உட்பகுதி (core) மட்டுமே இருக்கும். இப்பொழுது சூரியனின் செறிவு (density) மிக மிக அதிகமாக இருக்கும். முன்பிருந்த சூரியனை விட இப்பொழுது உட்பகுதி மட்டும் கொண்ட சூரியனின் எடை பாதி இருக்கும். ஆனால் அது பூமியைப் போன்று அளவில் சிறியதாக இருக்கும்.

இயற்கையில் சூரியன் பூமியை விட பல மடங்கு பெரியது. சூரியனை நிறப்ப ஒரு மில்லியன் பூமி வேண்டும். so think of the density now! அவ்வளவு பெரிய சூரியன் பூமியைப் போலாகிவிட்டது ஆனால் அதனுடைய எடை பாதி இருக்கிறது. இதைத் தான் white dwarf என்று சொல்லுவார்கள். (தரிந்தவர்கள் கோபப்படவேண்டாம்!) dwarf என்றால் அளவில் சிறியது என்று அர்த்தம். Lord of the rings படத்தில் வரும் hobbitsஐ dwarf என்று தான் சொல்லுவார்கள்.

இது மாதிரியான white dwarf நட்சத்திரங்கள் சூரியனைப் போன்ற சாதாரண நட்சத்திரங்களைச் சுற்றும் பொழுது அவை அந்த நட்சத்திரங்களிலிருந்து மூலப்பொருட்களை இழுக்கும். இவ்வாறு white dwarfக்கு வந்து சேரும் பொருட்கள் (mass) அதன் மேல் படியத்துடங்கும் நாளடைவில் white dwarf ஒரு thermonuclear பாம் போல வெடித்துசிதறும். இந்த வகைக்குப் பெயர் la supernovae.

மிகப்பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாக இருப்பதால் அவைகளை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். நம் பால்வெளியில் (miky way galaxy) இது போல பல நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அதிகமான தூரத்தில் இருப்பதால் நமக்கு அவைகளால் ஆபத்து இல்லை. ஆனால் மேலே சொன்ன சிறிய அளவிலான dwarfகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவை வெடிக்கும் பொழுது தான் நமக்கு தெரியவரும்; வெடித்த பிறகு தீடிரென்று தூரத்தில் வெளிச்சம் அதிகமாவதைப் பார்க்கலாம்.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் நமது பால்வெளியிலே ஒரு la supernovaeவை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் டைம்பாம், நமது கொள்ளைப்புறத்தில்! இதனால் 4014இல் உலகம் அழியப்போகிறது என்று அந்தக் காலத்தில் வாழ்ந்த “காயன்” இன மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு துண்டுச்சீட்டில் எழுதி அதை எகிப்த்தில் இருக்கும் பிரமிட்டின் நான்காவது அடுக்கில் இருக்கும் மூன்றாவது செங்கலில் செருகி வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை!(அடப்போப்பா!)

இந்த புதிய சூப்பர்நோவாவால் நமக்கு எந்த ஆபத்தும் வராது. அது பூமியிலிருந்து 25,000 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. (ஒளி ஆண்டு: ஒளி ஒரு ஆண்டுக்கு பயணம் செய்யும் தூரம். அது தெரியுது எவ்வளவுன்னு சொல்லு! 9,460,730,472,580.8 km!) இதை விஞ்ஞானிகள் V445 Puppis என்று அழைக்கின்றனர். (Astronomyஇல் இது ஒரு வசதி. பயாலாஜி மாதிரி streptococcus thermophilus என்று வாயில் நுழையாதா பெயர்களை வைக்கமாட்டார்கள். ஒரு எண் கண்டிப்பாக இருக்கும் பிறகு அது எந்த நட்சத்திரக் குடும்பத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து அதன் பெயர் அமையும். இதனால் நட்சத்திரங்களின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்!). V445 Puppis, puppis நட்சத்திரக்குடும்பத்தில் (constellation) இருக்கிறது. V445 யில் இருக்கும் V? Vampire! நான் முன்னாடியே சொன்னேன்ல, இந்த மாதிரியான நட்சத்திரங்கள் பிற நட்சத்திரங்களிடமிருந்து எடையை ஈர்த்துக்கொள்ளும் என்று! அதனால் தான் அந்தப் பெயர்.

நவம்பர் 2000த்தில் V445 Puppis ஒரு முறை வெடித்தது. சூப்பர் நோவா இல்லை சாதாரணமாக வெடிப்பது தான். மிகச்சிறிய அளவிலான எடையை மட்டுமே அது வெளியேற்றியது. சிறியது என்றால் அண்டத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சிறியது! நம் பூமியின் எடையை விட பல மடங்கு அதிகமான எடையை இந்த சிறிய வெடிப்பு வெளியேற்றியது. கிட்டத்தட்ட மணிக்கு 24 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில். இந்த வேகத்தில் போனால் பூமியிலிருந்து நிலவுக்கு ஒரு நிமிடத்தில் சென்று விடலாம்.

அதற்கப்புறம் வருடக்கணக்கில் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் தான் நீங்கள் மேலே பார்ப்பவை. அழகாக இருக்கின்றன, ஆச்சரியமாக இருக்கின்றன, அச்சுறுத்துவதாக இருக்கின்றன.

படத்தில் நீங்கள் பார்க்கும் இரண்டு நட்சத்திரங்களும் அதி வேகமாக ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன. White dwarfஇல் Helium மட்டுமே இருக்கிறது; அதைச் சுற்றி வரும் பெரிய நட்சத்திரமும் அதன் மீது heliumமைத்தான் போடுகிறது.

சூப்பர்நோவா எப்பொழுது ஏற்படும் என்றால் எப்பொழுது அதனுடைய (white dwarf) எடை நமது சூரியனை விட 1.5 மடங்கு அதிகரிக்கிறதோ அப்பொழுது தான் வெடிக்கும். சூரியனுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.சும்மா ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மட்டுமே! இப்பொழுது அந்த white dwarfஇன் எடை எவ்வளவு தெரியுமா? சூரியனை விட ஜஸ்ட் 1.35 மட்டும் அதிகமாம்.

சரி எப்பொழுது வெடிக்கும்? தெரியாது! ஆயிரம் ஆண்டுகள் ஆகலாமாம். வெடிக்கும் பொழுது வானத்தில் வீனஸை விட பிரகாசமாகத் தெரியுமாம். (இப்பொழுது -டிசம்பர் வரை- மெர்க்குரி அழகாக வானத்தில் தெரிகிறது. ஜனவரியில் வீனஸ் தெரியும்.) இதனால் நமக்கும் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டாலும்,இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கப் போகிறது.

இந்த வகையான சூப்பர்நோவாக்களை வைத்தே அண்டம் எவ்வளவு வேகமாக விரிவடைந்து கொண்டு வருகிறது என்பதைக் கணக்கிட முடியும்! (என்னது அண்டம் விரிவடைகிறதா?! ஆமா விரிவடைகிறது! இந்த constantஐத் தான் Hubble’s Constant (H Constant) என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதைப் பற்றி இன்னொருமுறை பார்ப்போம்.

கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சோம்ன்னா எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம் நமக்கு உதவி செய்யப் போகிறதா என்று ஆச்சரியமாக இருக்கும்! ஆனால் நம் எழும்புகளில் இருக்கும் கால்ஷியமும் இரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்துமும் நட்சத்திரங்களில் இருந்து தான் வந்தது என்பதை நினைவில் கொள்க! இதைத் தான் Carl Sagan சொல்லுவார்: we are made of star stuff!