கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்

க.ம. தியாகராஜ்

மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு’ என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர்.

கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி

எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை வாசிக்கும்போது அவரது கண்கள் கலங்கிக் கன்னங்களில் நீர் வழிந்தோடியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

நீதிபதி யாருக்காக, எதற்காக அழுதார்? ஒரு நீதிபதி தான் விசாரித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கும் போது அழுத நிகழ்வு இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. இதைத் தவிர வேறு சில சிறப்புகளும் இத்தீர்ப்புக்கு உண்டு. குற்றம் நிகழ்ந்த இரண்டாண்டுகளுக்குள் தண்டனை வழங்கப்பட்டதும் தலித் மக்களைப் படுகொலை செய்ததற்காக ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுங்கூட இதுவே முதல்முறை. இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு யுவாட்மாலில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மராத்வாடா பல்கலைக்கழகப் பெயர் மாற்றம் குறித்த போராட்டத்தின்போது ஒரு தலித் பலர் முன்னிலையில் உயிருடன் கொளுத்தப்பட்டார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனைகள் மட்டும் பெயரளவில் வழங்கப்பட்டன. இவற்றை ஒப்பிடும்போது கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானதே எனக் கருதத் தோன்றும். உண்மை அதுவல்ல.

தீர்ப்பின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள் நமக்குச் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள சிறுகிராமம்தான் ‘கயர்லாஞ்சி’. இதில் மொத்தம் 181 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 700. புத்த மதத்தைச் சேர்ந்த மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் மூன்று . கோண்டு இனப் பழங்குடியினர் குடும்பங்கள் 14. குன்பி மற்றும் களர் ஆகிய இதர பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்கள் 164.

கயர்லாஞ்சியின் மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கேவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கிராமத்தின் ஒரு கோடியில் ஒதுக்குப்புறமாக மண் குடிசை அமைத்துத் தன் மனைவி சுரேகா (44 வயது), மகன்கள் சுதிர் (21), ரோஷன் (19), மகள் பிரியங்கா (17) ஆகியோருடன் வசித்துவந்தார். தமது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துவந்த இவரது நிலத்திற்கு அடுத்துள்ள நிலம் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத் தலைவருடையது. அந்நிலத்திற்கு டிராக்டர்கள், வண்டிகள் சென்றுவருவதற்கான பாதையாகக் கிராமத் தலைவருக்குப் பையாலாலின் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாகுபடிசெய்யப்பட்ட காலங்களில் வளர்ந்து நிற்கும் பயிர்களின் மேல் ஏறி நசுக்கிக்கொண்டு கிராமத் தலைவரின் டிராக்டரும் வண்டிகளும் சென்று வருவது வழக்கம். இதனால் பையாலாலின் இரண்டு ஏக்கர் நிலம் பறிபோனதாகவே கருதப்பட்டது. இது குறித்து நியாயம் வேண்டிப் பையாலாலின் மனைவி சுரேகா குரல் எழுப்பினார். அக்கிராமத்தின் மற்ற இரண்டு தலித் குடும்பங்கள் ஆதிக்கச் சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக இவர்களுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியிருந்தன.

பக்கத்துக் கிராமமாகிய ‘டுசாலா’வில் வசிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் சித்தார்த், ராஜேந்திரா ஆகியோரிடம் தங்களது நிலத்தை மீட்டுத்தர உதவும்படி வேண்டியுள்ளார் சுரேகா. சித்தார்த் ‘கயர்லாஞ்சி’ கிராம உயர் ஜாதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டார். கோபம்கொண்ட ஆதிக்கச் சாதியினர் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் தன் சொந்த நிலத்துக்கு ‘உரிமை’ கொண்டாடிய சுரேகாவுக்கும் அவளுக்காகப் பரிந்துபேசிய சித்தார்த்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் சுரேகா கள்ளச் சாராய வியாபாரம் செய்துவருகிறார் எனவும் கதைகட்டினர்.

03.09.2006அன்று நியாயம் கேட்டுவந்த சித்தார்த்தை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திவந்த கயர்லாஞ்சி கிராம ஆதிக்கச் சாதி இந்துக்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். சுரேகா, மகள் பிரியங்கா, மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோர் இதை நேரில் கண்ட சாட்சிகளாவர். அவர்கள் சித்தார்த் தாக்கப்பட்ட செய்தியை ராஜேந்திராவுக்குத் தெரிவித்தனர். அவர் சித்தார்த்தை ‘காம்ப்பீ’ நகர் ‘ராய் மருத்துவமனையில்’ சிகிச்சைக்காகச் சேர்த்தார். இது காவல் துறை தொடர்பான வழக்கு என்பதால் ராய் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரிடம் புகார்செய்யப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் கயர்லாஞ்சி என்பதால் வழக்கு அண்டால்கவான் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 29.09.2006இல் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் ‘டுசாலா’வுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்துகொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து ‘கயர்லாஞ்சி’ நோக்கிக் கடும் கோபத்துடன் சென்றது. அக்கூட்டத்துடன் உள்ளூர் உயர் ஜாதி இந்துக்களும் சேர்ந்துகொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.

குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து பையாலாலின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார். தன் குடும்பத்தினர்மீது தொடுக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற இத்தாக்குதல்களை ஒரு மறைவிடத்திலிருந்து ஆற்றாமையுடன் பார்க்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார் பையாலால்.

பாதுகாப்பற்ற அப்பாவித் தலித் மக்களின் மீது தம் மிருகவெறியைப் பிரயோகித்து அவர்களை முற்றாக அழித்த ஆதிக்கச் சாதியினர் பிறகு ஒன்றுகூடி அன்று கயர்லாஞ்சியில் நடந்தவற்றை யாரும் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவ்வாறு சொன்னால் சொன்னவர்களுக்கும் இதேவிதமான தண்டனைகள் காத்திருக்கின்றன எனவும் அச்சுறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர். சிதைக்கப்பட்ட அச்சடலங்கள் நாலாபுறங்களிலும் வீசி எறியப்பட்டன.

அன்று இரவு 7:45 மணிக்கு பையாலால் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார்செய்தார். காவலர்கள் இரவு 11:00 மணிக்கு ‘கயர்லாஞ்சி’ கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என விசாரிக்கப்பட்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். காவல் துறை பையாலாலின் குடிசைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் அண்டால்கவான் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் தன் புகாரைப் பதிவுசெய்தார். அதன்பின் ‘சிவ்லால் கராடே மஹராஜ்’ என்பவர் பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் ‘வடேகவான்’ கால்வாயில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் சொன்னார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மஹராஜ். பிறகு கயர்லாஞ்சியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடந்த நால்வரின் சடலங்களையும் கைப் பற்றியது காவல்துறை. அவசர அவசர மாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்த நான்கு சடலங்களும் புதைக்கப்பட்டன.

சடலங்கள் உருக்குலைந்துபோயிருந்தமையால் ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனைசெய்ய இயலவில்லை என மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.

பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் தன்னார்வக் குழுக்களும் கயர்லாஞ்சிக்கு வந்து முகாமிட்டன. நடந்தவற்றை அறிய அப்படுகொலைகளை நேரில் பார்த்த மக்களுடன் பேசினர். கடும் முயற்சிக்குப் பின்னர் உண்மை கண்டறியப்பட்டது. பையாலால் குடும்பத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறித்த உண்மையைப் பகிர்ந்துகொள்ள மிகப் பயந்துபோயிருந்த கிராம மக்கள் முதலில் தயங்கினர். பிறகு பெயர்களை வெளியிடக் கூடாது என்னும் நிபந்தனையுடன் பேசத்தொடங்கினர்.

தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக நான்கு பிணங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால் ‘காலம் கடந்துவிட்ட’தால் அந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது.

காவல் துறையினர் தம் ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இதனை “ஓர் இரக்கமற்ற வெறிபிடித்த அதிகபட்ச மிருகச் செயல்” எனக் கண்டித்துள்ளார். இதற்குப் பொறுப்பான காவல் துறை அலுவலர்களும் மருத்துவ அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளின்படி இந்தப் படுகொலைகள் வெறும் நிலத்துக்காக நடத்தப்பட்டவையல்ல என்பது தெளிவாகிறது. தம் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ள மறுத்துத் தம் நிலத்துக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் சட்டத்தின் வழியில் போராடிய, தலித் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் இது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. இந்தக் கோணத்தில் இந்த வழக்கை ஆராய நீதிபதிக்கு எது தடையாக இருந்தது? காவல் துறை தொடக்க நிலையிலிருந்தே ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமாக மிகக் கவனமுடன் இந்த வழக்கைக் கையாண்டு வந்துள்ளது என்பது தெளிவு.

பையாலால் ஒரு தலித் என்பதாலேயே அவரது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த அவருடைய நிலம் அவருடைய விருப்பத்திற்கு மாறாக உயர் ஜாதியினரால் பறிக்கப்பட்டு அவர்களது டிராக்டர்களும் கால்நடைகளும் செல்வதற்கான பாதையாக மாற்றப்பட்டது. அது குறித்து நியாயம் கேட்கவந்த சித்தார்த்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமும் அவர் ஒரு தலித் என்பதுதான்.

அவரால் கொடுக்கப்பட்ட புகார் 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (ஷிசி & ஷிஜி றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ கிtக்ஷீஷீநீவீtவீமீs கிநீt 1989) பதிவுசெய்யப்படாமல் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147, 148, 149 & 324 ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு எனப் புகழ்ந்து கூறி வரவேற்கப்படும் இத்தீர்ப்பு உண்மையில் ‘ஜாதிய ஒடுக்குமுறைக்கு’ எதிரானதா? இப்படியரு தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் ‘சமூக நீதி’ நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாட முடியுமா? தனிப்பட்ட இரண்டு விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட கொலைகள் எனப் பதிவுசெய்ததற்கும் அந்த நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டதற்கும் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனைகள் வழங்கப்பட்டதற்கும் பின்னால் இயங்குவது உயர் சாதி மனோபாவத்தைத் தவிர வேறென்ன? அதிகபட்சத் தண்டனை என்பது இந்த மனோபாவத்தை மறைக்கும் ஒரு முகமூடியாகவே இந்தத் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது உண்மைக்கு எதிரான ஒரு தீர்ப்பு.

2008 செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ். எஸ். தாஸ் அவர்களால் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட எட்டு நபர்களைத் தவிர மற்ற அனைவரும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர். தன் தீர்ப்பில் இந்தக் கொலைகளுக்கு முன்விரோதமும் பழிவாங்கும் உணர்வுமே காரணம். வேறு எந்தக் கோணத்திலும் இந்த வழக்கை அணுகுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் ‘தெளிவு’படுத்தியுள்ளார். தலித்துகளுக்கெதிரான வன்முறையின் இருப்பை ஒப்புக்கொள்வதிலும் தலித்துகளுக்கெதிராக நடைபெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் நமது காவல் துறையும் நீதித் துறையும் கொண்டுள்ள அக்கறையின்மையின் வெளிப்படையான நிரூபணமாக விளங்குவது இத்தீர்ப்பு.

பையாலாலின் புகார் பெறப்பட்டவுடன் கயர்லாஞ்சிக்குச் சென்று விசாரித்த போலீசார் அது போன்ற சம்பவம் ஏதும் இந்த ஊரில் நடக்கவில்லை எனக் கிராமத்து ஆதிக்கச் சாதியினர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் பையாலாலின் குடிசையைக்கூட எட்டிப்பார்க்காமல் திரும்பிச் செல்லுமளவுக்கு ‘அப்பாவி’களாய் இருந்துள்ளனர். மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் எழுத்து மூலம் தமது புகாரைப் பதிவுசெய்த பின்னர், சிவலால் கராடே மஹராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடலம் கைப்பற்றப்பட்ட பிறகுதான், காவல் துறைக்கு பையாலால் தன் புகாரில் சொன்னதுபோல் ஏதாவது நடந்திருக்குமோ என்னும் சந்தேகம் வருகிறது.

17 வயதுள்ள ஒரு இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாகவும் பெண் குறியில் கூரிய மரக்கட்டை அடித்துச் சொருகப்பட்ட நிலையிலும் கைப்பற்றப்பட்டுள்ளபோது அவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாமோ என்னும் மிக எளிமையான சந்தேகம்கூடக் காவல் துறையினருக்கு எழவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களுக்கும்கூட அப்படி யரு கேள்வி எழவில்லை. விசாரணை செய்த நீதிபதிக்கும் அந்தச் சந்தேகம் எழவில்லை. எல்லோரும் அவ்வளவு அப்பாவிகளாய் இருந்திருக்கிறார்கள். ஆக, திட்டமிட்டுத் திசைதிருப்பப்பட்டுள்ள ஒரு வழக்கு இது என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

2006 அக்டோபர் முதல் நவம்பர்வரை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் முகாமிட்டு நேரில் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளை நீதிமன்றம் பொருட்படுத்தாததற்குக் காரணம் என்ன?

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காணப்படும் தவறான தகவல்களுக்காகவும் வழக்கைச் சரியாகப் பதிவுசெய்யாமல் கடமை தவறிய குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் காவல் துறை அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்தத் தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கடமை தவறிய காவல் துறை அதிகாரிகளால் தவறாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும்தான் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றினடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி கண்ணீருடன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். யாருக்காக, எதற்காக வடிக்கப்பட்ட கண்ணீர் அது?

மரண தண்டனைக்கெதிரான குரல்கள் வலுப்பெற்றுவரும் ஒரு தருணத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் போராட்டம் என்பது அடிப்படையில் தலித் விடுதலைக்கான போராட்டம்தான் என்னும் அடிப்படையில் தலித் அமைப்புகள் கயர்லாஞ்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்த வேண்டும்.

இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு தலித்தும் ‘மனித உரிமையைக் காக்கப் போராடும், ஒரு போராளியே’ என்பதை நிரூபிக்கும் வகையில் வருணாசிரம தர்மத்தாலும் சாதியமைப்பாலும் மன நோயாளிகளாக மாற்றப்பட்ட கயர்லாஞ்சிக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவதை தலித்துகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

நன்றி காலச்சுவடு